07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கோவி.கண்ணன். Show all posts
Showing posts with label கோவி.கண்ணன். Show all posts

Sunday, September 23, 2007

வண்ண மாலை 5 - கவி(தை) மாலை !

புரிதல்கள் அல்லது தகவல் பரிமாற்றம், அறிவு சார் பரிமாற்றம் என்பதை மக்கள் மன்றத்தின் முன்வைப்பதில் 'படம்' போட்டு விளக்குவது முதன்மையானது. கார்டூன்கள் எனப்படும் கேலிச்சித்திரங்கள் புகழ்பெற்றதற்குக் காரணம் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் உத்தி. அதற்கு அடுத்த நிலையில் இருப்பவை கவிதைகள் கவிதைகள் இயற்கையை, சமூக அவலங்களை, நடப்புகளை, உறவுகளை சிறிய வடிவத்திற்குள் பொருள்பட செதுக்கி வெளிக் கொணருபவை, அதன் பிறகு கட்டுரைகள், சொற்பொழிவுகள்.

மற்றவற்றைவிட நான் ரசிப்பது, நேசிப்பது கவிதைகளைத்தான். உணர்வுகளும், மொழியும் ஒரு சேர இருப்பதால் கவிதைகள் என்றுமே உணர்வு பூர்வமானவை, மொழிகளின் ஆதாரமானவை. உலக மொழிகள் தம்மை புதிப்பித்துக் கொள்ளும் போது புதினங்கள் தோன்றுகின்றன. அப்படி தோன்றிய புதினங்கள் மூலம் மொழி வளர்சிக்கு ஊற்றாக அமைந்துவிடுகின்றன. புதினங்களை தோற்றுவித்து வளரும் உலக மொழிகளுள் ஒன்றானதும், இந்திய மொழிகளுக்குள் முதன்மையானதும் நம் தமிழ் மொழிக்கு அதில் என்றுமே நிலையான இடம் உண்டு.

செய்யுள், மரபுகவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ எனப்படும் குறும்பா போன்றவை எண்ணில் அடங்காவண்ணம் தமிழ் அன்னையின் மலர்படுக்கையாகவே கிடக்கின்றன. நாள்தோறும் வண்ணப் பூக்கள் போல் கவிக் கொத்துகளாக அவை மலந்து கொண்டே இருக்கின்றன.

80 களில் புதுக்கவிதை புதிய வடிவம் பெற்றது அதற்கு முன்பும் இருந்தது ஆனால் கவனம் பெறவில்லை. புலவர்கள் நா.காமராசன், மு.மேத்தா, அப்துல்ரகுமான், முத்துலிங்கம், வைரமுத்து,வாலி மற்றும் பலருடைய கவிதைகள் தமிழர்களை கவிதையின் பக்கம் திரும்ப வைத்தது.

ந.காமராசன் எழுதிய விளைமகளிர் பற்றிய கவிதையின் சில வரிகள் என்றும் நினைவில் நிற்கிறது.

'நாங்கள் ஆடை வாங்குவதற்காக நிர்வாணத்தை விற்கிறோம் ! "
"நாங்கள் மன்மத அச்சகத்தின் மலிவு பதிப்புகள் ! "

என்பது போன்ற சுடும் வரிகளுக்குச் சொந்தக்காரர் அவர். மற்றவர்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போக முடியும்.

அது போல ஹைக்கூ கவிதைகள் ஊசி வெடிபோல சுருக்கென்று தைக்கும். நானும் சில ஹைக்கூ கவிதைகளை எழுதி இருக்கிறேன்.

"மார்கழி மாத கடுங்குளிரில், வெள்ளை மாவெடுத்து
புள்ளியும் பூவுமின்றி
தன் கோலத்தைப் போட்டுக் காட்டினால் விதவைத்தாய்"

பூவும் பொட்டுமின்றி இருக்கும் தன்னுடைய நிலையை கோலத்தின் மூலம் வரைந்து காட்டுகிறாள் என்ற மறைபொருளுடன் அது அமைந்தது. மற்றுமொரு கவிதை அதே போன்றுதான்

"அப்பாவுக்கு அருகில் படமாக சேர்ந்ததும்
இன்றுதான் என் அம்மா
மீண்டும் மங்களகரமாக மாறி இருக்கிறாள்"


நம் நாட்டில் விதவை என்பது சாபக்கேடான ஒன்றாக இருக்கிறது. கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்து வைப்பதில்லை என்ற சோகம் ஒருபக்கம் இருந்தாலும், அவளின் தோற்றத்தையே மாற்றி வைத்து முடக்கிப் போட்டு வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் கொடுமையாக இருக்கிறது. அதைத்தான் சொல்ல முயன்றேன். அப்பா இறந்த பிறகு பொட்டையும் பூவையும் இழந்தவள், உயிருடன் இருந்த போது கிடைக்காத ஒன்று அவள் இறந்த பிறகு மீண்டும் ஒட்டிக் கொள்கிறது. தற்பொழுது இந்நிலை அவ்வளவாக இல்லை என்பது, நம் வாழும் காலத்தில் உணர்ந்து கொள்ளும் வகையில் நடந்த நல்மாற்றம். விதவைகள் மறுவாழ்வும், பெண் கல்வியும் இந்திய சமூகத்திற்கு இன்றியமையாதவைகள்.

பதிவுலகில் என்னைக் கவர்ந்த கவிஞர் பலர், அவற்றில் பிச்சனிக்காடு இளங்கோ போன்ற சிலர் தமிழ்மணத்திற்கு வெளியிலும் இருக்கிறார்கள். அவர்களை தின்னை, பதிவுகள், தமிழோவியம் போன்ற இணைய இதழ்களில் வாசிக்கிறேன்.

தமிழ்மணப் பதிவர்களில் ப்ரியன், அருட்பெருங்கோ ஆகியவர்களில் எல்லா கவிதைகளுமே சிறப்பாக இருக்கும், எனவே குறிப்பிட்டு சொல்வதை தவிர்கிறேன். தமிழ்நிதி அவர்கள் எழுதிய கற்பின் இருப்பு, ஆண்மை மற்றும் அவருடைய பல கவிதைகள் கண்ணுள் புகுந்து மனதை எரிக்கும் ஆற்றல் பெற்ற தீப்பிழம்புகள். ஆண்களும் பிரசவிக்கிறார்கள் ... உண்மைதான்.... இளாவின் ஜனனம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். சுகுனா திவாகரின் ஆசிட் கவிதைகள் கண்ணையும் பொசுக்கும். கை கொடுக்கும் கை எது ? கொடுப்பவர் எவர் பெற்றவர் எவர் ? அசைப்போட்டு கொண்டு இருக்கிறார் விஎஸ்கே ஐயா. கொல்லிமலைச் சாரலில் என் எஸ் ஜெயகுமார் - புதிய பதிவர்களில் சிறப்பாக புதுக்கவிதை புனைபவரில் குறிப்பிடதக்கவர். இதைத்தவிர எனது மற்ற இரு நண்பர்களான பெண்ணிய கவிதைகள் எழுதும் / வெளியிடும், சுகிர்தராணி புகழ் மகி என்கிற பெ.மகேந்திரன், நாமக்கல் சிபியார் ஆகியோரும், ஆசிப் மீரான் அவர்களும் நல்ல கொலைவெறி கவிஜையாளர்கள்.



வலைச்சரத்தில் நான் தொகுத்தவை அனைத்தும் எனக்கு நினனவுக்கு வந்தவற்றில் சில வலைப்பூக்கள். இத்துடன் எனது வலைச்சர தொகுப்பு நிறைவுறுகிறது. இது சிறந்த வலைப்பதிவுகள் எது என்பதற்கான அளவுகோள் அல்ல மறாக சில பரிந்துரைகள் மட்டுமே. வாய்பளித்த பொன்ஸ் மற்றும் வலைச்சரம் குழுவினருக்கும், வலைச்சர வாசகர்களுக்கும், பின்னூட்டத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பாராட்டிய பதிவுலக அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. அடுத்து வரும் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்


மேலும் வாசிக்க...

Friday, September 21, 2007

வண்ண மாலை 4 - கதம்ப மாலை !

வலைச்சரத்திற்கு எழுதுவதற்காக முன்பே இடுகையை எழுதி வைக்காததால் எழுதி வெளியிடுவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. நிறங்கள் தனித்தனியே அழகு என்றாலும் வானவில் போல் சேர்ந்திருந்தால் அதுவும் தனித்துவமான அழகுதான். இவை எப்போதாவது (அபூர்வமாக ) இருந்தால் அவற்றை நுகர(ரசிக்க) முடியும். மலர்தோட்டம் என்றால் பல மலர்களும் இருந்தால் தான் அதற்கு சிறப்பு. இருந்தாலும் நமக்கு அவற்றில் ஒன்று அல்லது மேலும் சிலது பிடித்தமாக இருக்கும். நான் வாசித்த வலைப்பூக்களில் புதிய வரவாக வந்து மறைந்த வலைப்பூ சித்தூர் முருகேசனின் கவிதை07 என்ற வலைப்பூ வேறுபட்டி இருந்தது.

உள்ளே சென்று படித்தேன். இவர் இன்னொரு இராமர் பிள்ளையோ என்று வியப்படைய வைத்துவிட்டார். :) சித்தூர் முருகேசனா ? அல்லது பீட்டர் முருகேசனா ? என்று கூட நினைக்க வைத்துவிட்டார்.
இந்தியாவின் எல்ல பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை தீட்டினேன். என்று ஒரு கட்டுரையை எழுதி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார், சித்தூரை சேர்ந்த தமிழர் என்றே நினைக்கிறேன் அதனால் ஆந்திர அரசியலும், தமிழக அரசியலும் நன்கு தெரிந்திருக்கிறது. பெட்டிசன் போட்டு போட்டு பெயர் பெற்றவர்போல் அவர் இடுகைகளை படித்தும் தெரிந்தது. இவர் சொல்வதெல்லாம் உண்மையா ? என்று நம்புவதற்கு கடினாமாக இருந்தாலும் சிலரின் சித்தாந்தங்களை அலட்சியப்படுத்தாமல் பார்த்தால் அவை உண்மையாக கூட இருக்கலாம். சித்தூர் முருகேசனின் இடுகைகள் அப்படிதான் இருக்கிறது. சோதிடத்தில் வல்லவர் என்று சொல்கிறார் கூடவே பெரியாரையும் போற்றுகிறார். அரசியல் வாதிகளை வெளுத்து வாங்கி இருக்கிறார். நிறையதகவல் இருக்கிறது. நிலாச்சாரல் வாசகர்களால் அறியப் (பரிச்சிய) பட்டவராம். தமிழ்மணத்தில் இவர் பதிந்திருந்தாலும் கருவிபட்டையை இவர் பதிவு டெம்ளேட்டில் சேர்க்காததால் இவரது இடுகைகளை கண்ணுறும் நல்வாய்ப்பு (தரிசிக்கும் பாக்கியம்) உங்களுக்கெல்லாம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன் :)

மொழியும் நிலமும் - ஜமாலன் மற்றொரு புதிய பதிவர் முற்போக்கு சிந்தனையின் தாக்கம் கொண்டவர். அவற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அவர் எழுதுவது அனைத்தும் தரமான இடுகைகளாக உறுதியாக (நிச்சயம்) தெரியும்.

தமிழ்மணம் சாராத மற்றொருபதிவர்
பிரதாப் குமார் சி அவரது நாஞ்சில் மைந்தன் வலைப்பூ. தேன் கூடு வழியாக படித்த பதிவு அது. விலங்குகளை எப்படிப் படம் எடுக்கிறார்கள்? , 'கலைவாணர் என்னும் பகுத்தறிவாளன்' போன்ற பலவகை இடுகைகளை எழுதி இருக்கிறார்.

வானொலி அறிவிப்பாளர் யாழ் சுதாகர் இவர் தனித்தனியாக பல வலைப்பூக்களை வைத்திருக்கிறார். அத்தனையும் திரை இசை பாடல்கள், பழம்பெரும் நடிகர்கள், அறிவிப்பாளர்கள் பற்றியங்களை கொண்டுள்ளது. MP3 பாடல்கள் தொகுப்புகளாக ஆக்கி அதில் தனது எண்ணங்களையும் சேர்த்து சுவைபட ஆக்கி வைத்திருக்கிறார்.

மற்றும் புதிய பதிவர்களான ஜெகதீசனின் ஒரு தமிழனின் குரல்(றள்) , பாரி.அரசின் சிந்தனை பூக்கள் மற்றும் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் ரத்னேஷ் போன்றவர்களின் இடுகைகள் மாறுபட்ட எழுத்துக்களாக உள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்லிக் கொண்டே செல்ல முடியும் அடுத்து வலைச்சரம் எழுதுபவர்களுக்கும் விட்டுவைக்கனுமே :-)
மேலும் வாசிக்க...

Thursday, September 20, 2007

வண்ண மாலை 3 - சிறுகதை மாலை

சிறுகதைகள் என்றால் அதற்கு ஆரம்பமும், முடிவும் உண்டு என்பது தான் அதன் வடிவம் இல்லை என நான் சிறுகதைகள் படித்த அளவில் புரிந்து கொண்டிருக்கிறேன். சிறுகதைகள் நிகழ்வுகளை அதன் வரிசையில் எளிமையாக்கி தரும் கற்பனை அல்லது நடந்தவை என்ற அளவில் இருக்கின்றன என்பது அதன் இலக்கணம் என்று கொள்ளலாம். சிறுகதையின் சிற்பி புதுமை பித்தனை வாசிக்காத சிறுகதை அன்பர்கள் (பிரியர்கள்) இருக்க முடியாது. புதுமை பித்தன் சிறுகதைகளை, கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல்புறா, யவன ராணி வாசித்திருக்கிறேன் என்பதை வெளியில் சொல்வதும் கூட பெருமையாக சிலர் நினைக்கும் அளவுக்கு அதன் தாக்கம் இருக்கிறது மற்றும் அந்த அளவுக்கு அவை சுவைபட எழுதப்பட்டு பேசப்பட்டவைகள். தமிழிலக்கியத்தில் மொழிப்பெயர்க்கப்படாத பெரும் காதைகள் என்றால் அது சமண / பவுத்தர்கள் எழுதப்பட்ட ஐம்பெரும் காப்பியங்கள் மட்டுமே. குண்டலகேசி என்னும் பவுத்த காதையும், நீல கேசி என்னும் சமண காதையும் ஒன்றை ஒன்று சாடுவதற்காக ஏற்பட்டவை. அதாவது ஒரு தத்துவத்திலிருந்து வேறு ஒன்றை சாடுவதற்கு வெறும் தத்துவ கோட்பாடுகள் மட்டும் போதாது என்பதற்காக ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என்று காட்டவும் கதை பின்னனிகள் தேவைப்பட்டு இருக்கிறது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

இன்றைய சிறுகதைகள் எதோ ஒரு கருப்பொருளைத் தாங்கிவந்தாலும் வட்டார வழக்கு, அவ்வட்டார பண்பாடு ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக இழைக்கப்பட்டு இருந்தால் அவ்வகை எழுத்தர்கள் சிறுகதை எழுதுவதில் சாதனை படைப்பர். நமக்கு முந்திய தலைமுறைகளில் கு.ப.ரா, கி.ரா, பிரபஞ்சன், சு.சமுத்திரம் மற்றும் பலர் அவ்வகை ஆக்கங்களை படைத்து ஆவணமாக ஆக்கி வைத்திருக்கின்றனர். சிறுகதை எழுதுவது கடினமானதல்ல பாதிப்புகளையோ, தீர்வுகளையோ, நிகழ்வுகளையோ பாத்திரங்களை வைத்து படிப்பவர்களின் மனதில் அசைக்க விடுவதுதான் சிறுகதைகள். தூங்கிக் கொண்டிருக்கும் பாத்திரங்கள் நாம் படிக்க ஆரம்பிக்கும் போது எழுந்து படித்து முடிந்தவுடன் தூங்கிவிடும். அவை உணர்வுகளை தூண்டியிருந்தால் அவை நமது நினைவுகளில் அடிக்கடி வரும் கனாவாக மாறிப்போகும்.

கதை கேட்கும் அல்லது சொல்லும் ஆர்வம் நம் தமிழர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட குணம். பாட்டி சொன்ன கதைகள் முதல் வில்லிபாரதம் வரை எதோ ஒன்றை எல்லோருமே கேட்டு இருப்போம். நமது கதை கேட்கும் ஆர்வங்களை நம்பியே நெடும்தொடர்கள் ( மெகா சீரியலுக்கு புதிய சொல் நன்றி கலைஞர் டிவி) நமது வீட்டு கூடத்திற்கு வந்துவிட்டன. பொழுது போக்கு என்பதற்கு பதில் பொழுதே அதனாலேயே போகிறது என்ற அளவுக்கு கதை ஆர்வம் வந்துவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு சென்றுவிட்டது கவலைக்குறிய பற்றியம் தான். அக்கம் பக்கத்து கதைகளை கேட்டு குடும்பத்துக்குள் உரசல் வருவதைப்போல் நெடும்தொடரால் உடனடி பாதிப்பு வராது :). எல்லாமுமே ஒரு கட்டத்தில் திகட்டிவிடும் என்பதால் இது தற்காலிகம் என்றே கொள்வோம்.

எனது வலைப்பூவில் எழுதுவது போல் கட்டுரையாகி போய்விட்டது :). வலைச்சரத்தில் படித்ததில் பிடித்த இடுகைகளை வகைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தும்பிகையால் தூக்கி ஒருவர் மிதித்துவிடுவார். ஜூட்.

சிறுகதை பதிவு எழுத்தர்களில் வட்டார வழக்குடன் எழுதுபவர் பலர், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்
நிலா அக்கா, முட்டம் சின்னப்பதாஸ் சிறில் அலெக்ஸ், ஆழியூரான் போன்றோர் தான் நினைவுக்கு உடனே வருகின்றனர். குப்புசாமி செல்ல முத்துவின் அண்ணியின் அணைப்பில் அதே போன்று நான் எழுதிய பாண்டிபஜார் கடை போன்றவற்றை படித்து பலர் வியர்(ந்)த்திருக்கிறார்கள் :), வினையூக்கி, மெலட்டூர்.இரா.நடராஜன் ஆகியோர் சிறுகதைகளை எழுதி குவிக்கிறார்கள். விவசாயி இளா, நாமக்கல் சிபி, லக்கி லுக் மற்றும் செந்தழல் ரவியின் கதைகளை படிக்கும் போது சிறுகதைகளில் கூட மொக்கை உத்தி பயன்படுத்தப்பட்டுள்ள புதிய சாதனைகளை அறிந்து கொள்ளலாம். :) மற்ற சிறுகதை பதிவுகள் உடனடியாக நினைவு வரவில்லை. நண்பர்கள் பொருத்தருள்க.
மேலும் வாசிக்க...

Wednesday, September 19, 2007

வண்ண மாலை 2 - தமிழ் மாலை

எந்த இனத்தில் பிறந்தாலும் தாய் மொழிபற்று என்பது இல்லாதிருக்க முடியாது, எழுத்து இல்லாத பல மொழிகளும் தங்கள் மொழி பெருமையை இழக்கக் கூடாதென்று ஆங்கில எழுத்தைக் கொண்டு எழுத பழகி இலக்கியங்களுக்காகவும், தொடர்பு ஆவணங்களுக்காகவும் அவற்றை பயன்படுத்தி வருகின்றன. தோன்றிய காலம் அறிய முடியாத நமது தமிழ் மொழியின் பெருமையை வெளிநாட்டில் இருந்து கிருத்துவ மதம் பரப்ப வந்த பாதிரிமார்கள் ஆராய்ந்து சொல்லி இருக்காவிட்டால் நமது மொழி சென்ற நூற்றாண்டில் காணாது போயிருக்கும் அல்லது மலையாளம் போன்று உயிரை (சொற்களையும்) உடலையும் ( எழுத்துக்களையும்) இழந்திருக்கும். நல்ல வேலை காப்பாற்றப்பட்டு நம்கையில் இருக்கிறது. அதை பாதுகாப்புடன் மேலும் வளர்த்து, வளம் சேர்த்து அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது நம் கடமை.

பதிவுகள் எழுத ஆரம்பிக்கும் முன் எனக்கு தமிழ் மொழி பிடிக்கும், ஆனால் அதன் தொண்மையோ, பெருமையோ எதுவும் தெரியாது இருந்தது. 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்ற பொதுவான தமிழின உணர்வு மட்டும் இருந்தது. தேவநேய பாவாணர் மற்றும் பல தமிழறிஞர்களின் நூல்களை படிக்க ஆரம்பித்ததும் தான் தமிழின் பெருமையே தெரிய ஆரம்பித்தது. பலபற்றியங்களில் எழுதினாலும் தமிழ் குறித்து எழுதும் போது எனது கட்டுரைகள் எனக்கு உண்மையான மன நிறைவை தருகின்றன.

இறந்து போன மொழிகளை எந்த மொழியிலாவது ஒட்டவைத்து ஒட்டுண்ணியாக வளர்க்க முடியுமா ? நாள் தோறும் கடவுள் காதில் போட்டு வைத்தாலாவது சிதையாது இருக்குமோ என்று அவற்றின் பற்றாளர்கள் நினைக்கும் போது, உண்மையிலேயே தத்துவங்கள், இலக்கியங்கள், புதினங்கள் என அனைத்தையும் இளமை மாறாது வைத்திருக்கும் தமிழை பொறாமையால் அவர்கள் தூற்றத் துவங்கும் போது நாம் ஏன் சரியான பதிலடி கொடுக்கக் கூடாது என முற்படுவது தேவையற்றதுதான். தூற்றுபவர்களை புறம் தள்ளுவோம். நம்மொழியை வளர்த்து ஏற்றம் பெறுவோம். ஆங்கிலத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்வலைப் பக்கங்கள் இருப்பது நமக்கு பெருமைதருவதாகும். 'மெல்லத் தமிழினி சாகுமோ அச்சம்' இனி தேவை இல்லை 'தமிழ்தம் வளர்ச்சியில் அணை போட இனி எவருண்டு ?' என்று காட்டுவோம்.


தமிழாராய்ச்சிக் கட்டுரைகளை முதன் முதலில் வலைப்பதிவுகளில் படித்தேன் என்றால் அது நம் மதிப்பிற்குரிய வளவு இராமகி ஐயாவின் பதிவுகளைத்தான். முன்றாண்டுகளுக்கு மேலாக எழுதி குவித்திருக்கும் கட்டுரைகளைப் பார்க்கையில் வேற்று மொழிகளுக்கு வேராக போன தமிழ் சொல் திரும்பவும் உருமாறி திரும்பி இருக்கிறது என்று கண்டு கொண்டேன். தமிழ் கூட்டுச் சொற்களான அப்பும் இழிதலும் ஒற்றைச் சொல்லாக வடமொழியில் அபிஷேகமாகி மீண்டும் தமிழில் அபிடேகம் என்று திரிந்து போனதும், அபிடேகம் வடசொல் என கருதி அதற்கு முழுக்கு போட்டுவிட்டு 'குடமுழுக்கை' புதிய தனித் தமிழ் ஆக்கிக் கொண்டது போன்ற பல சுவையான தகவல்களையும், பாவாணருக்கு முற்றிலும் மாறுபட்டு புதிய சிந்தனைகளில் இராமகி ஐய பல வட சொல் மற்றும் ஆங்கில சொற்களுக்கு தமிழ் வேர்ச் சொல் கண்டுள்ளார் ( காட்டு : தமிழ்: காசு > ஆங்கிலம் : கேஷ் ). இராமகி ஐயாவின் இடுகைகள் அனைத்தும் தமிழார்வளர்களும், தமிழ் பற்றாளர்களும், தமிழன்பர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஆழ்ந்த பற்றியங்களை ( விசயம்) கொண்டது.

முனைவர் மு.இளங்கோவன் அவர்களுடைய வலைப்பூக்களில் தமிழ் குறித்த பல இடுகைகள் தகவல் களஞ்சியங்களாக இருக்கின்றன. மேலும் அவரது வலைப்பூவில் பல தமிழாய்வளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பற்றாளர்கள், சிந்தனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் பல இடம் பெற்று இருக்கின்றன. கால்டு வெல் ஐயா அவர்களைப் பற்றி மிக அழகான கட்டுரை வரைந்து தொகுத்துள்ளார். தமிழ் தேனிக்கள் மொய்யக் கூடிய வலைப்பூக்களில் தமக்கென தனி அடையாளத்தை வைத்திருக்கிறார் இளங்கோவன் ஐயா.

மற்றும் எனது நண்பர்களான 'சொல்லின்' செல்வர்கள் மகரந்தம் ஜி.ராகவன் மற்றும் கூடல் குமரன் ஆகியோரின் தமிழ் சொல் மீள் அறிமுக ஆக்கங்கள் சிறப்பானவை. நானும் அதே வலைப்பூவில் சில ஆக்கங்களை எழுதி இருக்கிறேன்.

மேலும் பதிவர் ஜெகத் மற்றும் குமரிமைந்தன் ஆகியோர் தமிழர் பண்பாடு குறித்து மிக்கவையாகவே ( அதிகமாகவே) எழுதி வருகின்றனர்.
மேலும் வாசிக்க...

வண்ண மாலை 1 - பக்தி மாலை

நம்பிக்கையா ? மூட நம்பிக்கையா ? என்ற ஆராயாமல் பார்த்தால் பக்தி கூட தன்னலமற்றது என்று சொல்ல முடியும். இறைவன் என்ற பெயருடன் தொடர்புபடுத்தி எல்லோரையுமே ஒரு குடும்பமாக அடக்கிவிட முடியும் என்று நினைப்பதால் பக்திக்கு மவுசு என்றுமே உண்டு. மதங்களை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால், மதத்தின் பின்னால் நிற்காவிட்டால் பக்தியை குறை சொல்ல எவருமே தேவைபட்டு இருக்க மாட்டார்கள். எனவே மதம் என்ற ஒற்றை சொல்லுக்குள் கட்டிவைத்து சுறுக்குவதை தவிர்த்துப் பார்த்தால் பக்தி உன்னதமான உணர்வுதான். எல்லா மதங்களும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது என்பதை நிராகரித்தாலும் எல்லா மதமும் இறைத்தத்துவம் ஒன்றை வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதால் மதங்களைச் சாடும் போது கூடவே இறைவுணர்வையும் சாட வேண்டிய கட்டாயத்திற்கு மதநம்பிக்கைக்கு எதிரானவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

நான் பக்திக்கு எதிரானவன் அல்ல. மூடநம்பிக்கைக்கும், மதவெறிகளுக்கும் எதிரானவன் என்று சொன்னால் 'ஆம்' என்று சொல்வதில் தயக்கம் இல்லை. மதங்கள் காட்டும் இறைவனைத் தானே துதிக்கிறார்கள் என்று நினைத்தாலும் சிலரின் இறைவுணர்வு என்பது மதங்களைக் கடந்தே இருக்கிறது என்பதையும் அறிந்து அவர்களை பாராட்டுகிறேன். அதற்காகவே அவர்களுடன் தனிப்பட்ட நட்பும் கொள்கிறேன். அவர்களது மெய்சிலிர்பை வியந்திருக்கிறேன். பக்தியை அறியாமை என்று சொல்லிவிடவும் முடியாது எதோ ஒன்றின் பால் பற்று கொண்டு சகோதரத்துவத்திற்கு பாடபட முயல்கிறார்கள் என்றும் பக்தியை விட்டுவிட முடியாது என்பதால் சில சமயங்களில் மதநம்பிக்கைக்கு முட்டுக் கொடுக்கிறார்கள் என்று கடிந்து கொள்வதும் உண்டு. பக்தி அவர்களை சூழ்நிலை கைதியாக்கி வைத்திருக்கிறது என்று ஆறுதல் பட்டுக் கொள்வேன். மூடநம்பிக்கை முட்டுக் கொடுப்பவர்களிடம் உண்மையான பக்தி என்பது இல்லை என்பதையும், சிலர் மாற்றுமதக் நம்பிக்கையை தூற்றுவதையே தொழிலாக கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் இருப்பது பக்தி என்ற பெயரில் பகல் வேசம் போட்ட மதவெறிதான். நமது பதிவர்கள் பக்தி ரசம் சொட்ட சொட்ட எழுதுபவர்கள் அனைவருமே மூடநம்பிக்கைக்கு முட்டுக் கொடுப்பது இல்லை. அப்படி சில பதிவர்களின் சில இடுகைகளை பக்தி மாலை ஆக்கித் தருகிறேன். முதலில் பக்தி என்றால் பக்திதானே என்று நினைத்திருக்கிறேன். பின்பு நிறைய இடுகைகளை படித்ததும் தெரிந்தது இங்கும் சைவம் / வைணவம் என்று எல்லைக்குள் நின்று எழுதுகிறார்கள் சில சமயங்களில் மாற்றாகவும் எழுதுகிறார்கள்.


பெருமாளுக்கே கொசுவர்த்தி கொளுத்தி வைத்த பிரகலாதன் : நம்ம கே.ஆர்.எஸ் தாங்க அவர். எனக்கு தெரிந்து இவர் எவரையும் ஒரு சொல் கூட கடிந்து கொண்டதை படித்தது இல்லை. 2005ல் வலைப்பதிவு ஆரம்பித்திருப்பதாக ப்ரொபைல் சொல்கிறது. இவர் கோகுலத்தில் நுழைந்தது 2006ல் நிறைய காலடி தடங்களை பதித்தது போல் இடுகைகளை பதித்து இருக்கிறார். கே ஆர் எஸ் நிறைய வைணவ சார்பு இடுகைகளை இட்டிருந்தாலும் முருகன் பாடல்களை அவ்வப்போது நிறைய தகவல்களை தருகிறார். இவர் எழுதிய அனைத்துமே சிறப்பானவை தான். குறிப்பாக புதிரா புனிதாமா என்ற தலைப்பில் சிந்தனை தூண்டும் கேள்விகளுடன் சிறப்பாக எழுதி இருப்பார். திராவிட வேதம்! தமிழ் மறை நாதம்! படித்துப் பாருங்கள் சுவையாக இருக்கும். இவரின் தமிழ் மற்றும் வடமொழி, தெலுங்கு புலமைகள் இவரின் தனித் திறமையாகவே இருக்கிறது. இவரும் வைணவம் சார்ந்த பக்தி இலக்கியங்களையே பெருவாரியாக எழுதிக் குவிக்கிறார்.


பதிவர் சங்கர் குமார் (அ) விஎஸ்கே ஐயா : இவரைப்பற்றி பலருக்கும் தெரியும், நான் பதிவுலகில் நுழைந்த போது இவர் பதிவில் வைத்திருந்த முருகன் படம் வெகுவாக என்னை ஈர்த்தது, அதன் பிறகு அவரது பதிவுகளை படிக்க ஆரம்பித்ததும் தமிழ் இவரிடம் துள்ளிவிளையாடுவதை அறிந்து கொண்டேன். இவரது இடுகைகள் பெரும்பகுதி சைவம் சார்ந்த பக்தி பாடல்களுக்கு பொருள் விளக்கம் தருகிறார். குறிப்பாக திருப்புகழ் மற்றும் முருகன் தொடர்புடைய பாடல்கள், மாரியம்மன் போன்ற நாட்டார் தெய்வங்களுக்கான பாடல்களை அந்தந்த திருநாளில் நினைவு வைத்து எழுதிப் போடுகிறார். பிராமணராக இருந்தாலும் பிராமண சங்கத்தில் சேராது , அமெரிக்க தமிழ்ச்சங்கத்தில் நான்கு ஆண்டுகள் தலைமை பொறுப்பேற்று இருக்கிறார்.இசைஞானியின் திருவாசகம் உருவாக முதன்மை பங்காற்றி பொருள் செலவில் கையை சுட்டுக் கொண்டு இருக்கிறார் :). எனது நண்பர் என்பதால் இதற்கு மேல் சொன்னால் புகழ்ச்சியாக போய்விடும் :)

பதிவர் குமரன் : வலைப்பூக்களை மலைப்பூக்கள் அளவுக்கு பூக்க வைத்து ஏறத்தாழ 25 க்கும் மேற்பட்ட தனித்தனி வலைப்பூக்களை வைத்திருந்து வகைப்படுத்தி இவர் எழுதுவதைப் படிக்கும் போது வியப்பு வருகிறது. இவர் ஒரு கதை சொல்லியும் கூட, சிறிய கதைகள் மூலம் பக்தி இலக்கியங்களை எளிதில் விளங்க வைப்பவர். இவர் 90 விழுக்காடு வைணவம் பற்றிய பாடல்களுக்கு விளக்கம் சொல்லி வருகிறார். தமிழ் ஆர்வலர் என்ற வரிசையில் இவருகென்று தனி இடம் உண்டு. பின்னூட்டங்களுக்கு மிக தெளிவாக இவர் மறுமொழி இடுவதை பலநேரங்களில் பார்த்து வியந்திருக்கிறேன்.

ஞான வெட்டியான் ஐயா : உடல்நிலையையும் பொருட்படுத்தாது,, சித்தர் பாடல்கள் பலவற்றை ஆவனப்படுத்தி அவற்றிற்கு எளிய விளக்கங்களை கொடுத்து இருக்கிறார்.

பதிவர் ஜிராகவன் : வலையுலக வாரியார் என்றே இவருக்கு மற்றொரு பெயர் இருக்கிறது, இளைஞர் முற்போக்கான கருத்துக்களை எவருக்கும் பயமின்றி எடுத்து சொல்லும் நக்கீரர். நாளும் திருநீறு அணிந்ததலும் 'மாட்டு சாணி என்றாலும் அதுவும் ஒரு மலம் தானே' என இவர் அண்மையில் விடுத்த அதிரடி பின்னூட்டம் வியப்பில் ஆழ்த்தியது. முருகன் பாடல்களை மிக அழகாக இலக்கிய கட்டுரையாக்குவதை படித்து மகிழ்ந்திருக்கிறேன். இவரின் தமிழ்பற்றும் என்னை நெகிழ்வுறச் செய்கிறது. வழிபாட்டு முறைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அளவுக்கு மாற்றம் ஏற்பட வேண்டும் வெளிப்படையாக கருத்து சொல்லுபவர் .

மற்ற பதிவர்களான வெட்டிப்பயல் பாலாஜி, பாதிவுலக பித்தாநன்ந்தா நாமக்கல் சிபி மற்றும் மதிப்பிற்குறிய சுப்பையா வாத்தியார் ஐயா போன்றோரும் பெண்களில் குறிப்பாக கீதா சாம்பசிவம் அம்மாவும், சித்திர ராமாயணம் வழங்கிய வல்லி சிம்ஹன் அம்மாவும் சிறப்பாக ஆன்மிக பதிவர்களாக உலா வருகிறார்கள்.


இந்து மதம் தவிர்த்து பிற பக்தி மாலைகள் கடந்த ஓராண்டில் குறிப்பிடதக்க அளவில் பதிவில் இடம் பெறவில்லை. மாற்று மதத்து சகோதரர்கள் அவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் வாசிக்க...

Monday, September 17, 2007

மாலை வண்ண மாலை...

ஒருவார கால வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைப்பு அனுப்பிய வலைச்சரம் குழுவினருக்கு நன்றி. வலைச்சரம் என்பது எனது பார்வையில் வலைச்சரத்தின் ஆசிரியராக இருக்கும் வலைப்பதிவாளர் ஒருவர் தமக்கு பிடித்த வலைப்பதிவுகளை தொகுத்து வழங்குவது என்பதாக இதுவரை கண்டு கொண்டதில் இருந்து தெரிகிறது. எனவே குறிபிட்ட இந்த மாலை தொடுப்பில் இருப்பதை தனிப்பட்ட பதிவரைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ற அளவில் மட்டுமே பார்க்கலாம் மற்றபடி சிலபதிவுகளுக்கு கொடுக்கும் சர்டிபிகேட் என்று கொள்ள முடியாத படித்ததில் பிடித்த ரகமான தொகுப்பு என்று கொள்ளலாம். அந்த வகையில் சிலர் பூக்களை சர(ள)மாக மிக அழகாக தொகுத்து வழங்கினார்கள். அந்த வகையில் நான் படித்து மகிழந்த வலைச்சர தொகுப்பில் ஆசிரியர் சுப்பையா அவர்களின் வலைச்சரம் மிக அழகாக தொகுக்கப்பட்டு இருந்தது. தமக்கு கொடுப்பட்ட பணியை மிக அழகாக செய்திருந்தார். அது போல் பல்வேறு ஆசிரியர்களின் தொகுப்புகள் தோரணமாக வலைச்சர மேடையை அலங்கரித்திருக்கிறது.

நான்கு வாரத்திற்கு முன்பு தமிழ் மணத்தில் நட்சத்திரமாக இருந்ததால் திரும்பவும் மற்றொரு ஒருவார கால தொகுப்பிற்கு பொறுப்பு ஏற்பது கொஞ்சம் அயர்சியாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் தமிழமண நட்சத்திரம் போல் வாரம் முழுவதும் புதிய இடுகைகளை எழுத வேண்டிய தேவை இங்கு இல்லை என்பதாலும், ஏற்கனவே எழுதிவைத்து ஒப்பிக்க வேண்டிய ஒரு நிலையும் தேவை இல்லை என்பதாலும், எப்படியும் வாரத்திற்கு ஏழுபதிவுகள் என எதையாவது எழுதி போட்டு 'நச்'சமுடிவதால் இந்த பணி கடினமாக இருக்காது என்றே நினைக்கிறேன். சித்தரமும் கைப்பழக்கம்.. பதிவு எழுதுவது ஒரு மயக்கம்...எழுதி பழகிவிட்டால் கை அரிப்பை நிறுத்த முடியாது என்ற உன்னத நிலையை பலரும் அடைந்திருப்பது போலவே நானும் அடைந்திருக்கிறேன் :))

இந்த ஒருவார ஆசிரியர் பணியில் 'வண்ண மாலை' என்ற தொகுப்பில் ஒவ்வொன்றாக தருகிறேன். உடன் பதிவர்கள் அனைவரும் அணிந்து மகிழ வேண்டும். வாய்பளித்த வலைச்சரம் குழுவினருக்கும், நம் பதிவுகலக கொள்கை சார் பதிவர், சாராத பதிவ நண்பர்கள் அனைவருக்கும் உடன் (சக) பதிவர் என்ற முறையில் முன்கூட்டிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வண்ண மாலை ... வானவில்லின் வர்ண ஜாலம் [வருண ஜாலம் அல்ல :)] ஆரம்பம்.





அன்புடன்,

கோவி.கண்ணன்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது