இலக்கியச்சரம்
நாமல்லாம் ஏதோவொரு வகையில் நேரத்தை வீணாக்கிட்டு
இருக்கோம் எழுதுவதை கொஞ்சம் சிரத்தை எடுத்து இன்னும்
மெருகேற்றினால் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் திறமை
போல் நமக்கும் வரும். தேவை நல்ல நூல்களின் வாசிப்புதான்.
எழுத்து அவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல விரிவான
வாசிப்புதளம் உள்ள எவரும் எழுதலாம். அந்த வகையில்
வலையில் இலக்கியத்தரத்துக்கு சற்றும் குறையாமல் எழுதி
வருபவர்களும் அப்படி எழுத முயற்சிப்பவர்களையும் இரண்டு
சரமாக தொகுக்கலாம்.
ஹரன்பிரசன்னா
புத்தக விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள், சிறுகதைகள்,
கவிதைகள் என்ற பிரிவில் வலைப்பதிவுலகில் தனி ஆளுமை
கொண்டவர் ஹரன் பிரசன்னா. இவரின் எந்த பிரிவுகளின் கீழ் பதிவு
எழுதினாலும் அதன் தீவிரத்தை வாசகருக்கு உணர வைப்பார்.
வெறுமனே சுவாரசியம் கொண்டு எழுதப்படும் பதிவுகள் வெகு
சீக்கிரம் மறந்துவிடக்கூடும் ஆனால் இவரின் சில சிறுகதைகள்
வலைப்பதிவர்ளின் படைப்புக்களுக்கு மத்தியில் சிறந்தது என
தைரியமாக கூறுவேன். இவர் எழுதிய மொத்த சிறுகதைகளையும்
படிக்கலாம் இங்கு. எனக்கு மிகவும் பிடித்த என் அனுபவத்தை
படம்பிடித்தது போல அமைந்த சொக்கலிங்கத்தின் மரணம்.
சிறுகதை என்ற வடிவத்திற்கு மிகவும் அவசியமானது என்று
இரண்டு விஷயங்களை கூறலாம் ஒன்று மொழிநடை இரண்டு
பேச்சு வழக்கு இவை இரண்டும் தெளிவாக பயணம் செய்தால்
வாசகனும் எழுத்தின் பின் செல்வான். இவை எல்லாமும்
ஒருங்கே பெற்றவர் ஹரன் ப்ரசன்னா. மேலும் இவர் எழுதி
புகழடைவார் என்பது உண்மை.
சன்னாசி
சன்னாசியின் எழுத்து நுட்பமானது மீள் வாசிப்புகளின் மூலம்
மட்டுமே புரிந்து கொள்ள முடியும் தன்மை உடையது. இதை
நம் பலவீனம் என்றுதான் நினைக்க இயலும். நம்போன்ற சக
மனிதனின் கற்பனைகளை புரிந்துகொள்ளா மனம் பின் எப்படி
சொல்லமுடியும். எனக்கும் இன்னும் பல கவிதைகளும், பலப்பல
புனைவுகளும் புரியவில்லை. இதைத்தான் தனித்துவம் என்று
சொல்லலாம். நான் வாசித்து தெரிந்து கொண்ட வகையில்
தமிழ்மண வாசகர்களுக்கு புனைவு என்ற வடிவத்தை அறிமுக
படுத்தியவர் இவர்தான் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு
மனிதனுக்கும் குரல், முகம் போன்றவை எப்படி தனித்துவமான
அடையாளத்தை தருகிறதோ அதேபோல் ஒவ்வொரு
எழுத்துக்கும் தனித்துவமான அடையாளம் உள்ளது, யாரும்
யாருக்கும் சளைத்தவர் அல்லர். நாம்தான் முகத்தையும்
குரலையும் கவனிப்பது போல அவற்றை கவனிப்பதில்லை.
கவிதைகள் என்று பரவலாக வாசிக்கப்படும் உரைநடைகளுக்கு
மத்தியில் இவரின் பல நுட்பமான கவிதைகள் கவனிக்கப்படாமலே
போயிருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு சுட்டி இங்கே கொடுக்கலாம்
என்றாலும் அந்த சுட்டி கூட உங்களால் சொடுக்கப்படாமல்
போகும் அபாயம் இருக்கிறது அதனால் கவிதையையே இங்கு
பகிர்கிறேன்.
கடிகாரங்களைத் திருடுதல்
-சன்னாசி
தூங்கும் சிறுவனின் வலப்பக்கம் தொங்குகிறது
கடிகாரம்
தூக்கம் கலையாமல் கடிகாரத்தைத் திருடித்
தலையணையடியில் ஒளிக்கிறது சிறுவனின் வலக்கை
விழித்தபின் அதிர்கிறது இடக்கை திருடப்பட்ட
கடிகாரத்தைச் சுவரில் கண்டு
சிமிட்டும் கண்களில் சூழ்கிறது புதிர்
தாவரப் புதர்களை விலக்கிச் செல்கிறான் சிறுவன்
தன் தோட்டத்து மரங்களிலொன்றின்
காலடியில் அமர்கிறான் ஒரு செடியைப் பிடுங்கி
தண்டைக் கடிக்கிறான்; நெறிந்து உடைபடுகிறதொரு
நொடி
சோகையாய் அசைகின்றன செம்பருத்திப் பூக்கள்
இலைமேல் ஊரும் கரும்புழுவொன்று சுருள்கிறது
சாலையில் நடக்கும் சிறுவனைச் சுற்றிலும்
மோதிக்கொள்கின்றன பேருந்துகள்
கனரக வாகனங்கள் பாதசாரிகள் பெயரற்ற
நிர்ணய வகுபாட்டில் சிக்கிய துகள்கள்
முடிவற்ற பெயரின்மைகளின் எடை
பாய்ந்துகொண்டேயிருக்கும் ஆபரணம்பூண்ட கல் யாளிகள்
அவைமேல் உறைந்திருக்கும் வெயிலின் சாயைகள்
தாவரப் புதர்களை விலக்கிச் செல்கிறான் சிறுவன்
மணிக்கட்டில் நொண்டிச்செல்கிறது திருடப்பட்ட கடிகாரம்
ஒரு கல்லிடறலில் மோதிக் கீறல்விடுகிறது
காலில் கட்டிய கடிகாரச் சலங்கை
தான் நுழையவிரும்பா இக்கவிதையுள்
எவரோ தன் கணத்தை எறிகிறார்கள்.
அற்புதமான கற்பனை.
அய்யனார்
பெயரைப் போல அல்ல இவர். சன்னாசியை போலவே இவரும்
தனித்துவம் நிறைந்த எழுத்துக்கு சொந்தக்காரர். கவிதைகள்
பெண் கவிஞர்களுடன் போட்டி போடா முயல்வதாக இவரிடம்
ஒரு குற்றச்சாட்டு வைத்தவன் நான். பின் தவறு என் பக்கம்
என்றுணர்ந்தேன். படைப்பாளி தன் கற்பனையை பதிவிக்க தமிழில்
உள்ள வார்த்தைகளைக்கூட தேர்ந்தெடுக்கவியலா சூழல்
தமிழில் மட்டுமே உள்ளது. இதைப்பற்றி நாஞ்சில் எழுதிய
மங்கலம் குழூஉக்குறி இடக்கரடக்கல் கட்டுரையை படித்தால்
வெகுசன பத்திரிக்கைகள் கவிதைக்கு கட்டியிருந்த வேலியை
புரிந்து கொள்ளலாம். இவரின் மொழி மிக கடினமான ஒன்றுதான்
ஒப்புக்கொள்ளலாம் ஆனால் ஒதுக்கக்கூடிய ஒன்றல்ல. இவரின்
தலைப்புக்கள் ஒன்றே போதும் திறமையை சொல்ல. எனக்கு
பிடித்த பதிவாகஅடர் கானகப் புலிகளின் குகை திரும்பல்கள்
புனைவுகளில் கவர்ந்ததாக உண்மை சிதைவுகளாலானது அது
எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்க
முடியும். என்ற புனைவை சொல்லலாம். பொதுவாக
புனைவுகளின் சுயத்தன்மை நிறைந்திருப்பதாக இருந்தாலும்
எவரும் பொருத்திப் பார்க்க முடிவதுதான் சிறப்பான
அனுபவத்தை தரவியலும். மொழி, வார்த்தைக் கட்டுப்பாடுகளை
களைந்து வாசித்தால் சிறப்பான எதிர்காலம் உள்ளது. இவர்
நாவல் எழுதினால் சிறப்பாக வரும் என்பது என் எண்ணம்.
சினிமா விமர்சனங்கள் குறிப்பிடக்கூடிய ஒன்று சமீபத்தில
எழுதிய பூமியிலிருக்கும் குட்டி நட்சத்திரங்கள் அனைவரது
பாராட்டையும் பெற்றது.
டிசே தமிழன்.
இவரும் புனைவின் வழி நடப்பவர்தான் ஆனால் மற்ற
இருவர்களை போல அத்தனை கடினமாக இருக்காது.
அத்தனை சுலபமாகவும் இருக்காது. இயல்பாக இருக்கும்
என்று கூட சொல்ல முடியாது. பன்முகத்தன்மை கொண்டவர்.
இவரின் இந்த பதிவை பார்த்தவை/வாசித்தவை பற்றிய சில
பகிர்தல்கள் படித்தால் புரியும். அதிகம் விளக்க வேண்டிய
அவசியமில்லாமல் நகரம், உலகசினிமா, உள்ளூர் சினிமா
நகைச்சுவை, இலக்கியம்னு எல்லாமும் கலந்து கட்டி
அடிச்சிருப்பார். பதிவு பெருசா போகுதே என்ற கவலை
அவருக்கு ஒருபோதும் இருந்திருக்காது. விருப்பமுள்ளவன்
வாசித்தே தீருவான். நனவுகளின் பலிக்காலம் என்ற பதிவை
படித்தவுடன் யாருடனும் பேசவே முடியாத பாரம் நெஞ்சை
அழுத்தியது நிறைய அலைகளை உருவாக்கிய கவிதை.
இப்பதிவில் உள்ள எழுத்துக்கள் யாவும் முழுக்க என் புரிதல்
சார்ந்தது. பல பதிவர்கள் பெயர் கண்ணுக்கு தெரிந்தே விட்டுப்
போயிருக்கிறது. அடுத்த பதிவில் தொடர்வேன்.
|
|
தம்பி,
ReplyDeleteமிகச் சிறப்பான தேர்வு.
கூகுள் ரீடரில் இவர்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன். என்றாலும் வாசிப்பதைத் தான், ஒரு தொடக்கத்திற்காகத் தள்ளி வைத்திருக்கிறேன்.
இன்று வந்துவிட்டேனென்று சொல்லிக் கொண்டே நகர்ந்து கொண்டிருக்கும் அந்தத் தொடக்கம் ஒரு மெல்லிய நடுக்கத்தைக் கொண்டதாக இருக்கிறது - நீ என்றுமே வாசிக்கப் போவதில்லையென்று.
அந்த மெல்லிய நடுக்கத்தையும், அச்சத்தையும் துரிதப் படுத்துகின்றது - உங்களுடைய இந்தக் கட்டுரை..
நன்றி நண்பன்
ReplyDeleteஇந்த வலைப்பூக்களை எல்லாம் பொறுமையாக நேரம் கிடைக்கும்போது படித்தால் இன்னும் இனிமையாக இருக்கும்.
அவசரத்திலோ, அலுவலகத்திலோ படித்தால் குற்றுக்கீடுகள் வரலாம்.
நன்றி.
என்னைப் பற்றிய வார்த்தைகளுக்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteநல்ல தொகுப்பு. நன்றி
ReplyDelete