07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 3, 2007

வலைச்சரம்-கவிதைகளால் கவர்ந்தவர்கள்


சொந்தமாய் கொஞ்சம் புலம்பிவிட்டுப் பதிவுக்குள் செல்லலாம் என எண்ணுகிறேன். புதிய வீட்டிற்கு இன்னமும் இணையத்தொடர்பு வரவில்லை. மழைபெய்த நரகத்தின் - மன்னிக்கவும்- நகரத்தின் வீதி வழியாக இணையத்தொடர்பகம் ஒன்றினை வந்தடைந்தே பதிவுகளை வலையேற்ற வேண்டியுள்ளது. அதனால், வலைச்சரம் கொஞ்சம் இழுத்துப் பறித்துக்கொண்டுதான் போகும். (நீங்களும் 'எப்படா போடுவான்னு எதிர்பார்த்துக்கொண்டிருக்கவில்லைத்தான்:) வேற வேலை இல்லையாக்கும்.) வாடிக்கையாளர் சேவை என்பது குறித்த சிறிய விரிவுரையின் பின் நாளை வந்து தொடர்பு கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எருமை மாட்டில் மழை பெய்திருக்கிறது பார்க்கலாம்.

கவிதை என்பதோர் மாயமான். விழியுயர்த்தி அழைக்கும். பின்தொடர்ந்தால் விழிமறைந்து தொலைக்கும். கவிதையோர் கனவின் வடிவம். உறக்கத்தில் உண்மை போலிருக்கும். விழித்தெழுந்தால் நழுவிவிட்டிருக்கும். எஞ்சிய ஞாபகத்துளிகளிலிருந்து திரட்டித் திரட்டி, கொஞ்சம் ஒப்பனை செய்து முழுமை வடிவமாக்கி கனவை ஒரு கதையைப் போல நாங்கள் விபரிப்பதையொத்ததே கவிதையும். அந்தக் கனவை முழுமையாகக் கண்வசமாக்கி கையகப்படுத்தியோர் அரிதிலும் அரிது. தமிழ்மணத்தில், அவ்விதம் கவிதையைக் கையகப்படுத்த விளையும் சிலரை, எனது ஞாபகத்திற்கு எட்டியவரை, இங்கு குறிப்பிட்டுச் சொல்ல முயற்சிக்கிறேன்.



கவிதைக்கேயுரிய கட்டிறுக்க மொழியைக் கொண்டமைந்தவை தூரன் குணாவின் கவிதைகள். அவரது கவிதைகள் காட்சிப்படிமங்களோடமைவது சிறப்பு. கொரங்காடு என்ற பெயரில் வலைப்பூவமைத்து எழுதிவரும் அவருடைய கவிதைகள் எல்லாமே அவற்றின் செறிவினாற் சிறப்புறுகின்றன. உதாரணத்திற்கு ஒன்று: பூத்திருந்த காலம்

மற்றவர்கள் என்ற பக்கத்தில் யசோதர என்ற பெயரில் எழுதப்படுகிற கவிதைகளை கொஞ்சம் மனம்பதைக்க வாசித்திருக்கிறேன். போர் விட்டுச் செல்லும் வடுக்கள், அதிகாரத்திற்கெதிரான குரல்... என பேசுபொருளால் மற்றவர்களின் பார்வையிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கின்றன இந்தப் பக்கத்திலுள்ள கவிதைகள். நீத்தார் பாடல் என்ற இந்த நெடுங்கவிதை வாசிக்குந்தோறும் மனதில் வலிதருவது.

தமிழ்மணத்தைப் பார்க்காவிட்டால் தலைவெடித்துவிடுமளவிற்கு அதனோடு ஊறித்திளைத்திருக்கிறவர்கள் எவரெனினும் காயத்ரியை அறியாதிருக்க முடியாது. பாலைத்திணை என்ற பெயருக்கேற்றபடி பிரிவும் பிரிவின் நிமித்தமுமான கவிதைகளை நிறைய எழுதியிருக்கிறார். (சுமார் 72 கவிதைகள்) காதலின் வலி மற்றும் தனிமை, சுயத்தேடல் என எழுதிவரும் காயத்ரியின் கவிதைகளைப் படிக்கும்போதிருக்கும் கனம், அவருக்கு வரும் 'மியூஜிக் ஸ்ராட்' போன்ற பின்னூட்டங்களினால் குறைந்துவிடுவதாக எனக்கொரு எண்ணம். அவர் சொல்லவரும் உணர்வு கடைசிவரிகளில் உச்சம் பெற்று வலியென நெஞ்சில் தங்கிவிடுவதை இவருடைய சிறப்பம்சம் எனலாம். மல்லிகை வாசம் எல்லோரும் அறிந்ததே... எனினும், தெருவில் ஒரு பெண் சூடிக்கொண்டு நடந்துபோகிறபோது மல்லிகை மேலும் அழகாகிவிடுவதாக ஒரு பிரமை. காதல் அற்புத அனுபவம். அது கவிதையாகிறபோது பேரற்புதமாகிவிடுகிறது. காயத்ரியை இதுவரை வாசிக்கத் தவறியவர்களின் (இருந்தால்) விரல்பிடித்து இக்கவிதைகளைச் சென்றடைய வழிகாட்டலாம்.

கூடு மறந்த பறவையொன்றின் ஒற்றைக் கேவலை ஞாபகப்படுத்துவன தேவ அபிராவின் பிரபஞ்சநதி பக்கத்திலுள்ள கவிதைகள். தோழியொருவரால் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் பக்கத்திலுள்ள கவிதைகளின் அழகியலே முதலில் ஈர்த்தது. பின்னரோவெனில் அதன் உள்ளார்ந்த துயரம் தேடித் தேடிச் சென்று வாசிக்கத் தூண்டியது. இந்த அனுபவத்தை நீங்களும் உணரும் வழி இது. மாயச்சுனையிலிருந்து பீறிடும் காதலின் கையறு நிலைக்காக இந்தக் கவிதையும், தேவ அபிராவின் பக்கத்தில் முதல் வாசிப்பிலேயே ஈர்த்த அரளிப் பூவும் தரங்காவும் எனக்கு மிகப் பிடித்த கவிதைகள்.

எனது எழுத்துக்களில் எப்போதும் எதையாவது 'கண்டுபிடித்து'க் கேள்வி எழுப்பும் வியாபகனின் கவிதைமொழி சிறப்பாக இருக்கும். (உ+ம்:"'எண்ணுவான்' என்று போட்டிருக்கிறீர்கள்.... 'எண்ணுவாள்'என்று ஏன் போடவில்லை...")தேவஅபிராவைப் பரிந்துரைத்த தோழியே இவரது பக்கத்தையும் சுட்டியதாக நினைவு. தனியொருவனின் கலகக்குரலை எப்போதும் அவரது படைப்புகளினூடு கேட்க முடிகிறது. தமிழ்மண முகப்பில் வியாபகனின் பெயரைக் கண்டதும் ஒத்திப்போடமுடியாதவாறு பெயரைத் தொடர்ந்து ஓடிவிடுவதொன்றே அவரது தரமான எழுத்துக்குச் சாட்சியம். ஒப்புதல் என்னும் கவிதையையும் தோற்றம் மற்றும் நிறம் குறித்துப் பேசிய ஒரு கிராதகக் கவியின் கதை என்ற கவிதையையும் இந்தப் பக்கம் பிரவேசிக்கும் வாயிலாக விட்டுச் செல்கிறேன். (ஒரு பானை சோற்றுக்கு... என்று எழுதலாம்தான். பானையில் அவியாததும் பார்த்திருப்பதால் தவிர்க்கிறேன்)

அண்மையில் வலைபதிய வந்து தன் கவிதைகளால் கவனத்தை ஈர்ப்பவர்களில் லஷ்மணராஜா முக்கியமானவர். 'என் கவிதைகள் ரசிப்பு தன்மையை விட உணர்வு தன்மை அதிகம் உள்ளவை' எனக் கூறும் இவரது தொழில் தர்மங்கள் என்ற கவிதையில் வேலை இன்னோரன்ன புற காரணிகளோடு சமரசம் செய்துகொண்டு உயிர்த்திருக்க வேண்டிய வாழ்வின் நிர்ப்பந்தம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. நகைப்புக்குறியையே தலைப்பாகக் கொண்ட இந்தக் கவிதையும் குறிப்பிடத்தக்கது.

கனவுகளின் தொலைவு என்று தனது வலைப்பூவிற்குப் பெயர்சூட்டியுள்ள த.அகிலன் சொற்செறிவான கவிதைகளை வழங்குகிறார். அவரைப் போலவே சின்னச் சின்னச் சொற்களில் பெரிய பெரிய விடயங்களை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லிச்செல்பவர். ஈழத்து மொழிவழக்கு, வாழ்வியல் போன்றவற்றையும் இவரது எழுத்துக்களில் காணலாம். அண்மையில் வாசித்தவற்றில் கையகப்படாத கவிதையைக் குறித்த நிகழாக் கவிதை பிடித்தது. கவிதைகள் மட்டுமென்றில்லாது கட்டுரைகள், சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

அந்தாராவின் அத்துவான வெளி யை நான் பார்க்க ஆரம்பித்தது இந்தக் கவிதை யிலிருந்துதான். யார்க்கும் அஞ்சாத அந்த மொழிப்பிரயோகத்தில் மயங்கி அந்தப் பெயரைக் கண்டாலே பின்னால் போகவாரம்பித்தேன். நீங்களும் போய்ப்பாருங்கள். நீங்கள் மொழி ஆச்சாரப் பூனை இல்லையெனில் உங்களுக்கும் அந்த எழுத்துக்கள் பிடிக்கும்.

'நாடற்றவனின் குறிப்புகள்'என்ற கவிதைத்தொகுப்பை அண்மையில் வெளியிட்டிருக்கும் டி.சே.(இளங்கோ) தமிழ்மணத்தில் கடந்துசெல்ல முடியாத பதிவுகளுக்குரியவர். கவிதைகள், திரைப்பட அலசல், பிறமொழி இலக்கியம், கட்டுரைகள் என பன்முக ஆளுமையுடைய இவருடைய படைப்புகளை இங்கே சென்று வாசிக்கலாம். எதையும் மேலோட்டமாகப் பார்க்காது ஆழ்ந்து ஆராய்வது இவரது சிறப்புப்பண்பெனலாம்.

என்றால் என்ன? என்ற கேள்வியுடன் கார்த்திக் வேலு என்றொருவர் தரமான கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்தார். வேலைப்பளுவோ என்னவோ அண்மைய நாட்களில் அவரைக் காணமுடிவதில்லை.

மேலும் அபிமன்யு... அபிமன்யு (ஒரு அபிமன்யுதான்) என்றொருவர் மிக நன்றாக எழுதிக்கொண்டிருந்தார். சில நாட்களாக அந்தக் கவிஞரைக் காணோம். தொடுப்புக் கொடுக்க முடியவில்லை.

உண்மையில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னும் பல கவிஞர்கள் தமிழ்மணத்தில் நிச்சயமாக எழுதிக்கொண்டிருப்பார்கள். பிரச்சனைகளின் முகம் மறதியாக உருமாறியிருக்கிறது. நிறையப் பேரை நினைவுகூர இயலவில்லை. நான் குறிப்பிடத் தவறியதால் அவர்கள் குறைந்தவர்கள் என்று பொருளல்ல.

இந்த நீளமான பதிவை இட்டு உங்களையெல்லாம் வருத்தியது திட்டமிட்டு நிகழ்ந்ததொன்றல்ல. நான்கைந்து பெயர்களுடன் முடித்துக்கொள்ளவே நானும் நினைத்திருந்தேன். ஆனால், நன்றாக எழுதுபவர்களை எழுதாமல் விடுவது தவறென்று 'யாரோ' சொல்லியிருக்கிறார்கள். (இந்த யாரோவை வைத்து நிறையச் சொல்லலாம் போலிருக்கிறது.) அடுத்த பதிவும் குழந்தைகளுக்கானதல்ல. கொஞ்சம் 'சீரியஸாக'எழுதுகிறவர்கள் பற்றியதுதான். 'இந்தப் பதிவிற்கே முதுகு வலிக்கிறது... இன்னமுமா'என்று நீங்கள் சொல்வது காதில் விழுந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை. எல்லாப் பழியும் சிந்தாநதிக்கே:)
வலைச்சரத்தில் பதிவைப் போட முயல, இளவேனிலுக்குள் போய் விழுந்து 'ஆத்தா ஆள விடு'என்பதாகிவிட்டது என் நிலை. என்னமோ போங்க.

4 comments:

  1. போச்சுடா யக்கா நான் எழுதுறதெல்லாம் கவிஜயா :)

    ReplyDelete
  2. போச்சுடா யக்கா நான் எழுதுறதெல்லாம் கவிஜயா :)

    ReplyDelete
  3. நாங்களும் ஒரு காலத்துல கவிதை எளுதுனவய்ங்கதான்....

    புதியவர்களுக்கு வழிவிட வேணுமென ஹி..ஹி...கவிதை எளுதறதை நிறுத்தி வச்சிருக்கமாக்கும்...

    ஹி..ஹி...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது