07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 2, 2010

வலைச்சரம் - ஆறாம் நாள் - சனி

செல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அமிர்தவர்ஷிணி அம்மா, தீபா

1. செல்வநாயகி

அவன் சென்றபின் பெய்த மழை

தலைவன்களும் பல்லக்கத்தூக்கிகளுமாய்
ஊர்வலங்களால் அலங்கரிக்கப்பட்ட ஊரிலிருந்து

இவ்வனத்திற்குள் வந்து நாட்கள் பலவாகியிருந்தன

வனம் நிறையப்புற்களோடும் கொஞ்சம் மான்களோடும்
அழகாயிருந்தது.
தேன்சொரிந்தாலும் காய்கனிந்தாலும் வந்துபோக
பட்டாம்பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும்
அங்கே சுதந்திரம் இருந்தது.

இயற்கையின்மொழி இதயமெங்கும்
கவிதைகளை நிறைத்துக்கொண்டிருந்தபொழுதில்
அவன் தயங்கித் தயங்கி வந்து நின்று
தானுமொரு வனம்விரும்பி என்றான்
வனம்விரும்பிகளின் ரட்சகன் என்றான்
மொழிக்காதலனுமென்றான்
நான் வனம் நிறைத்திருந்த கவிதைகளை
அவனுக்குச் சொல்லலானேன்
பூக்களில் தேன் சொரிந்திருந்தும்
அன்று பட்டாம்பூச்சிகள் வருகையை நிறுத்திக்கொண்டன

தன்பரப்பில் வாழும் உயிர்களுக்கான
வனச்சுனையின் பேதமற்ற நீரளிப்பை
நெக்குருகிச் சொல்லிக்கொண்டிருந்தபோது
தலையைச் சிலுப்பிக்கொண்டே
"இப்படித்தான் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்
அல்லது பேசிக்கொண்டிருப்பதே நம் பண்பாடு"
தன் அபிமான நடிகன்கூட
ஒருபடத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறான் என்றான்
பறவைகள் அக்கணம்
வனத்திற்கெதிரான திசையில் பயணிக்கக் கண்டேன்

தானென்பதழிந்து தன்னை உலகினுக்கு வழங்கும்
கனியீன்ற வனமரங்கள் காட்டினேன்
நேற்றைய மயில்களின் நடனத்தைச்சொல்லும்
உதிர்ந்த தோகைகளின் குறிப்புகளையும்கூட
பைகளில் பழங்களை நிரப்பிக்கொண்டவன்
கக்கத்தில் சொருகிய மயில்தோகைகளுடன்
சந்தையில் நல்ல விலைபோகுமென்றான்
முகில்களோ, மான்களோ எதுவும்
தட்டுப்படாத வெறுமை சூழந்தது

அவனுடனான உரையாடலில்
என் சொற்கள் தீர்ந்துபோன சமயத்திலும்
அவன் பேசிக்கொண்டிருந்தான்
தான் இச்சமூகத்துக்கு
ஏதேனும் செய்தே தீருவேன் என்றான்
கலைரசிகர்கள்
வனம்வாழ்வது தகாதென்றான்
இலக்கியம், கலை, மொழிபரப்புதலில்
தானொரு தலைவனாவதற்கு
ஆட்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்
தன்பின்னே வந்தால் எதிர்காலம் சிறக்குமென்றும்
தன்னைச் சுமப்பவர்களுக்கு மிகவும் விசுவாசமானவனென்றும்
இடைவெளிகளற்றுப் பேசிக்கொண்டேயிருந்தான்

மௌனத்தை மொழிபெயர்க்கத் தெரியாதவன்
பதிலுக்கு நச்சரித்தபோது நான்
நோய்க்கூறுகள் உருவானது இப்படித்தானென்றேன்
அவன் கோபம் கொப்பளிக்க என்னை
ஒரு சமூகத்துரோகியென முடிவுசொல்லி விடைபெற்றிருந்தான்
ஒரு நீள இரவு கடந்து
விழித்துக்கொள்கையில்
மழைபெய்திருந்தது
மான்கள், பறவைகள் எல்லாம் இருந்தன
என் வனம் என்னிடம் திரும்ப வந்திருந்தது.


***

(வணக்கம் டீச்சர்!) :-)

***

2. வித்யா(விதூஷ்)

மனக்கரை

வானைக் கிழித்த விமானக் கோடு
முயலாகும் மேகங்கள் - கருநீல அடிவானம்
திரும்பி வரும் தூரத்துப் படகுகள்
கை கோர்த்து கால் நனைக்கும்
காதல் மறக்காத மூத்தோர்
அவள் காலடி துரத்தும் காதலன்
கால் துடைத்த அலை நீர்
வாவென்றது மேகம் - கடல்
மூழ்கியது வெப்ப நிலா
அலை பேசியபடி காலணிக்குக்
காவலாய் மணலில்தான் அமர்ந்திருந்தேன்!

***

(காவலில் இருக்கும் போது போனில் என்ன பேச்சு சகோ?) :-)

***

3. தமயந்தி

தேர்

வெற்றிட‌த்தின் ஒலியை
இன்னும் யாரும் கேட்ட‌தாயில்லை.

ரெட்டை விநாய‌க‌ர் கோவில்தெருவில்
மின் க‌ம்ப‌ம் ச‌ரிந்து இர‌ண்டு நாளாகி விட்ட‌து.

ச‌ந்திபிள்ளையார் கோவில் ஸ்டாப்பில்
காந்தி சிலை உள்த‌ள்ளி நிற்கிற‌து.

க‌ட‌னில் ஊர் விட்டு ஓடிய‌ ப‌ர‌ணி
க‌டை முன் ஆடு ப‌டுத்திருக்கிற‌து.

என்றாலும்
நெல்லைய‌ப்ப‌ர் கோவில் தேர் ந‌க‌ர்கிறது
வ‌ருடாவ‌ருட‌ம்.

***

(வசூலிக்க வந்த ஆடு போல, தமயந்தி! ரொம்ப பிடிச்ச தேர்/ஆடு/ ச்சே..கவிதை/ பாஸ்!

***

4. கௌரி ப்ரியா

மார்கழி முன்னிரவில்
பனியொழுகும் தலைகளுடன்
படர்ந்திருக்கின்றனர் மக்கள்
கண்காட்சி யொன்றில்..
ஏந்தியவன் கழுத்தின்
இருமருங்கிலும் கால்களிட்டு
தோளமர்ந்திருக்கிறது குழந்தை.....
தந்தையின் கற்றைமுடியை
இறுகப் பிடித்திருக்கும் உள்ளங்கை
காற்றிலாடும் செடியொன்றின்
கிளை பற்றிய அணில்குஞ்சென
மிருதுவாய் இருக்கக்கூடும்...

கவியொழுகும் தலையுடன்
கடந்து செல்கிறான்
கூட்டத்தில் அத்தகப்பன் மட்டும்

***

(இப்படி, நிறைய தடவை அப்பா தலையை பற்றியிருக்கிறேன் கௌரிப் ப்ரியா. அப்பாவும் இல்லை. அவ்விரல்களும் இல்லை) :-(

***

5. அமிர்தவர்ஷிணி அம்மா

ஒப்புக்கு அழு

தூக்கு போட்டு செத்த
நாகராஜன் அண்ணா
சாவுக்கு அழவேயில்லை
ஜானகி அக்கா
மனைவியாக இருந்தபோதும்

தம் அப்பா செத்ததற்கு
அழவேயில்லை
ராணியும், ராஜேஸ்வரி அக்காவும்

எதிர்வீட்டு பெண்ணின்
அம்மா மஞ்சள் காமலையில்
செத்த போது
அந்தச் சின்னப்பெண்ணின்
அழுகையே அன்று முழுவதும்
பேச்சாக இருந்தது.
பிணத்துடன் மாலை மாற்றிக்கொண்ட
போதுமட்டும் கடைவிழி நீர் உகுத்த
கணவனை
வசைபாடித் தீர்த்தனர் பெண்கள்

அத்தை சொன்னாள்
செத்துப்போனது
அம்மா, அப்பாவாக
இருந்தால்
இடுகாடு எடுத்துபோகும்போது
தரையில் உருண்டு
அழவேண்டுமாம்
பொறந்த பெண்கள்
அந்தக் கஷ்டத்தை கூட
எனக்கு கொடுக்கவில்லை
என் அப்பா

செத்தபின் அழவும்
அளவுகோல் உண்டு

யார் எப்படி அழுகிறார்கள்
என்ன சொல்லி அழுகிறார்கள்
என்ற ஒப்பீடு
சாவு வீட்டில் பின்னர் பேசப்படும்

வந்தா, ஒக்காந்தா
ஒப்புக்கு அழுதா
அப்படின்னு

இத்தனையும் கேட்ட, பார்த்த
பிறகு வந்த
சாவுத்தகவலுக்கு
பஸ்ஸுல போகும்போதே
ஒத்திகை பாத்தாச்சு
அங்க போய்
என்ன சொல்லி
அழணுமுன்னு.
எப்படி கதறுனுமுன்னு.

ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்.

***

(ரிகர்சல் சக்சஸா அமித்தம்மா?) :-)

***

6. அனிதா

உருமாற்றம்

பனி படர்ந்த படித்துறையில்
என்னுடன் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தவன்
எதிர்பாராததொரு கணத்தில்
பாசி வழுக்கி குளத்தில் விழுந்தான்

மூழ்கி அமிழ்ந்து திணறி தத்தளித்து
அலை வட்டங்களும் இல்லாது மறைந்தவன்
கரையோரம் என் கால் நிமிண்டி
தான் மீனாக மாறிவிட்டதாய் சொன்னான்

உடலெங்கும் படர்ந்த செதில்களையும்
திணராமல் நீந்தும் லாவகத்தையும் பார்த்து
சற்றே ஆசுவாசமானேன்

பறவைகள் கூடு திரும்பும் மங்கலில்
எனக்கு சொல்ல ஆயிரம் கதைகள் வைத்திருந்தான்
விருப்பம்போல சுற்றுகிறானென்றும்
பசி என்பதே இல்லையென்றும்
சலிக்காத அழகுகள் நிறைந்த குளமென்றும்
குளிர் கூட சுகமாயிருப்பதாயும்
நிறைய சொல்வான்
கேட்டுக்கொண்டிருப்பேன்

உச்சி சூரியன் காயும் மதியமொன்றில்
சுத்தமான கண்ணாடி ஜாடியில் வளர்க்க‌
எடுத்துச் செல்லப்பட்டானென்று
தெப்பமோடிய நாளின் முடிவில்
மற்ற மீன்கள்
கிசுகிசுத்துக்கொண்டன‌.

போய் பார்க்கதான் நேரம் ஒழியவில்லை.

***

(மிரட்டல் பாஸ்! fantastic!)

***

7. தீபா

தளும்பித் தளும்பி
வழிந்த பாத்திரம் அது...
மூட முடியாமல்,
தீரவே தீராதோ எனும்படியாக.

என்றோ ஒரு நாள்
தடாலென்று கவிழ்ந்தது...

மிச்சம் மீதி இருந்ததும்
இன்னொரு பொழுதில் காய்ந்து போனது

வாசமாவது மிஞ்சட்டும்
என்று மூடி மூடி வைக்கிறேன்

***

(format சற்று மாற்றினேன் தீபா, மன்னியுங்கள். அருமையான கவிதை!)

***

அற்புதமான பெண் பதிவர்கள் நிரம்பிய உலகு இது. தேடுங்க மக்களே...

***


சரி, இன்னும் ஒரு எழுவர் பாக்கி. கூடவே விடை பெறலும்.

தூக்கத்தில் இருக்கும் போது, சீனா சார் கட்டை விரலை பத்திரத்தில் உருட்டி இவ்வீட்டை எழுதி வாங்கிரலாம்ன்னுதான் வருது. அவ்வளவு காற்றோட்டம், கிளி சத்தம், திறந்த ஜன்னலில் கசியும் பிச்சிப்பூ வாசனை.

ஆனாலும், அப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா fool என எம்.ஜி. ஆர். சொல்லி தந்திருப்பதால், வரும் கருணாநிதிக்கோ/ ஜெ-விற்கோ விட்டுத்தந்திரலாம்.

***

நாளை சந்திக்கலாம் மக்களே..

***

41 comments:

  1. அனைத்தும் அருமை பா ரா சார்

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை மாம்ஸ்.

    ReplyDelete
  3. கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் ..

    ReplyDelete
  4. கவிதைகள் அனைத்து அற்புதம் . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நான் இன்னும் வெள்ளிக் கிழமை யிலே தான் இருக்கேன்

    ReplyDelete
  6. //தூக்கத்தில் இருக்கும் போது, சீனா சார் கட்டை விரலை பத்திரத்தில் உருட்டி இவ்வீட்டை எழுதி வாங்கிரலாம்ன்னுதான் வருது. அவ்வளவு காற்றோட்டம், கிளி சத்தம், திறந்த ஜன்னலில் கசியும் பிச்சிப்பூ வாசனை.//

    ஒரு செயலை செய்யும் போது நம் மனது நிறைவாக இருக்கவேண்டும்

    மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  7. பார்க்கலாம் பார்க்கலாம் மறு உலை இல்லாம போகாது:))

    ReplyDelete
  8. பா.ரா,

    பாலையில் நெடுந்தூரம் நடந்துவிட்ட பின்பு நீர்ச்சுனைக்கனவுகள், எதிர்பார்ப்புகள் வருவதில்லை. ஆனால் இதுதான் எம் இயல்பென்று பாலையிலும் நீர்ச்சுனைகள் தோண்டும் தீரா அன்போடு மனிதர்களைச் சுற்றிவருகிற நீங்கள், நேசமித்திரனெல்லாம் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்:))
    நான் மறந்துபோன என் பக்கமொன்றைத் திரும்ப என்னை வாசிக்க வைக்கிறீர்கள்:)) இதைக் கவிதைக்கு மட்டும் சொல்லவில்லை.

    ReplyDelete
  9. மன நிறைவான வாரம் இது அண்ணே.

    ReplyDelete
  10. செல்வநாயகி அவர்களின் பக்கம் எனக்குப் புதிது.நேற்றுத்தான் தமிழ்மணத்தில் கண்டு போய்ப் பார்த்தேன்.நன்றி அண்ணா
    நீங்களும் தந்த அறிமுகங்களுக்கு.

    ReplyDelete
  11. அருமையான கவிதைகள். செல்வநாயகியோடது ஒருதளம்னா அமித்து அம்மாவுது இன்னொரு தளம். ரொம்ப பிடிச்சிருக்கு

    ReplyDelete
  12. ஹை !!!!
    செல்வ நாயகி!, விதூஷ்!, தமயந்தி!, கௌரிப்ரியா! ,அனிதா! ,அமிர்தவர்ஷிணி அம்மா!, தீபா!

    பா.ரா நன்றி ! நன்றி ! நன்றி !

    அற்புதமான தேர்வுகள் மக்கா மிக மெல்லிய கவிதை மொழியில் துவங்கி அடர்வின் விகிதம் கூடிக்கொண்டே போகும் மொழிக்கு உரியவர்களின் வரிசை இது

    ஆனாலும் கவிதைகளின் தேர்வுகளில் பேதமிருக்கலாம் நமக்குள் :)

    பூந்தொட்டிக் கவிதை,பட்டாம்பூச்சி கவிதை,நட்பின் துரோக கவிதை,கதலின் வலி பேசும் கவிதை என்று இவகளின் கவிதைகளின் என்னுள் பதிந்தவை வேறு மக்கா ! :)


    இன்னும் இன்னும் எவ்வளவு பேர்?

    சகோ .செல்வ நாயகி வணக்கம்!

    நிமித்தங்களற்று நிரல்களற்று
    ஏதோ ஒரு கார்ட்டூன் பொம்மையின் பேர் சொல்லி பரஸ்பரம் அழைத்துக் கொண்டு விளையாடும் முற்றத்து குழந்தைகளுடன் குழந்தையாய்
    புழுதிப் படுகிறதே பள்ளிப்பையுடன் ஒரு மனசு

    அது தான் இந்தப் பிரியங்களை ,சிலிர்ப்புகளை, சிலாகிப்புகளை , தவிப்பை, வலியை கொண்டாடிக் கொண்டிருக்கிறது

    உங்கள் அய்யன் கதை வாசித்து கண் கசியவும் பா.ரா வின் தகப்பனாய் இருப்பதில் வெட்கவும் ராசு அண்ணனின் சிலாகிப்பில் சுட்டலில் புளகிக்கவும் அச்சச்சோ என நாவு கடிக்கவும் எல்லாம் எல்லாம்

    மனந்திறந்து பாராட்ட சொல்கிறது எந்த முகமூடியும் இல்லாமல் எல்லா
    முன்முடிபுகளையும்,அறியாமையை காழ்ப்பை தூர எறிந்து விட்டு ஊக்கம் தர/பெறச் சொல்கிறது

    நன்றி சகோ !

    ReplyDelete
  13. மறந்துட்டேன் !

    சீனா சார் ,

    விடாதீங்க இவரை !ஒன்ஸ் மோர் படிவம் எதாச்சும் இருந்தா குடுங்க பூர்த்தி பண்ணித்தாரோம் நானும் வானம்பாடிகள் சாரும்

    என்னது கையெழுத்து வேணுமா ?

    உலகம் பூரா வாங்கி அனுப்பிற மாட்டோம்

    ரிப்பீட்டச் சொல்லுங்க!

    :)

    ReplyDelete
  14. அன்பின் பா.ரா

    அருமை அருமை - வலைச்சரம் மணக்கும் பூக்களால் அழகாகத் தொடுக்கப்படுகிறது. அருமை அருமை. தூங்கும் போது ஏமாற்றி விட வேண்டாம். தேவைப்படும் போது வருக வருக - இயலும் வரை தங்குக. இணைந்து மகிழ்வோம். சரியா

    நல்வாழ்த்துகள் பா.ரா
    நட்புடன் சீனா

    ReplyDelete
  15. அன்பின் நேசமித்ரன் - வானம்பாடி

    தங்களின் விருப்பம் நிறைவேற்றப்படும். ஆனால் இப்பொழுது அல்ல. சிறிது ஓய்வெடுத்த பின் பா.ரா வருவார். சரியா

    நல்வாழ்த்துகள் அனைத்து ரசிகர்களுக்கும்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  16. அன்பின் வித்யா - விதூஷ்

    அருமை அருமை - கண்ணில் காணும் காட்சிகளை அப்படியே கவிதையாக்கியமை நன்று. ஓய்வாக கடற்கரையில் அமர்ந்து அலைபேசியில் அழைத்துக் கொண்டே, காலணிக்கும் காவலாய், கணகளைச் சுழல விட்டு, கவிதை படைக்கும் திறமை வாழ்க. பாராட்டுகள்.

    விமானம் போடும் கோடு - மேகன்கள் நிறைந்த அடி வானம் - திரும்பும் படகுகள் - காலடி துரதுவது - கால் துடைப்பது - அடடா என்ன கற்பனை - சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள் கவிதையில் சாகா வரம் பெறுகின்றன.

    ம்ம்ம்ம்ம்

    கை கோர்த்து கால் நனைக்கும்
    காதல் மறக்காத மூத்தோர்

    உண்மை உண்மை - மூத்தவர்கள் காதலை மறப்பதில்லை. மூத்தவர்கள் ஆன பின் தான் கையில் இறுக்கம் அதிகரிக்கிறது. கால் பாதம் மட்டும் நனைத்து - நெருங்கி - காதலித்து மூத்தோர் மகிழ்வது கண்டு கவிதையில் கொணர்ந்த வித்யா - அருமை அருமை

    நல்வாழ்த்துகள் வித்யா
    நட்புடன் சீனா

    ReplyDelete
  17. அன்பின் தமயந்தி

    அருமை அருமை - கற்ப்னைஅ அருமை. உலகில் என்ன நடந்தாலும் - நடக்காவிடாலும், நெல்லையப்பர் தேர் ஓடும். உண்மை- கற்பனை வளம் நன்று. நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  18. அன்பின் கௌரி ப்ரியா

    அருமை அருமை - கவிதை அருமை - திருவிழாவில் - கண்காட்சியில் - தகப்பனின் தோள் சிம்மாசனத்தில் அமர்ந்து, இரு கால்களையும் அவன் மார்பினில் தொங்க விட்டு, கைகளினால் அவன் தலையினை இறுகக் கவ்வி, அன்றலர்ந்த செந்தாமரை போல அழகான மழலைச் சிரிப்புடன் - கர்வத்துடன் செல்லும் குழந்தையினை விட - அத்தகப்பன் அடையும் மகிழ்ச்சி விவரிக்க இயலாது.

    நல்ல கற்ப்னையில் விளைந்த நற்கவிதை
    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  19. அன்பின் அமித்தம்மா
    அருமை அருமை - காலம் மாறி விட்டது - அழுகை இன்று இயல்பாக இல்லை - மனதில் இருந்து வரவில்லை. மற்றவர்களுக்க்காக வருகிறது. என்ன செய்வது ......

    சிந்தனை அருமை
    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  20. அன்பின் தீபா

    இதுதான் இயற்கையான் உலக நியதி. வாசம் எப்பொழுதும் மிஞ்சும். எளிதில் போகாது. நிலையாமைத் தத்துவம்.

    அருமை அருமை
    நல்வாழ்த்துகள் தீபா
    நட்புடன் சீனா

    ReplyDelete
  21. அருமையான அறிமுகங்கள்..தேர்வு செய்த கவிதைகளும் மனம் முழுவதும் நிரம்பி நிற்கிறது...
    உங்களின் பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  22. இங்குள்ள அத்தனை கவிதைகளும் சிறப்பு என்றாலும் அமிர்தவர்ஷிணி அம்மா அவர்கள் எழுதியுள்ளது கவிதை அல்ல. அதுவொரு வாழ்க்கை. கிராமப்பகுதிகளில் வாழ்ந்தவர்களை உலுக்குவது உறுதி. இதன் தாக்கம் மறைய நாளாகும். ஒரு கவிதையை படித்து முடித்து என்ன விமர்சனமாய் எழுதுவது என்று தடுமாறுவது இதுவே முதல் முறை.

    எத்தனை புயல் மழை காற்று அடித்தாலும் நான் பார்த்தவரைக்கும் கருவேல மரங்கள் அழிந்தது இல்லை. பாரா உங்கள் தேர்வுகளும் அதுபோலத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  23. \\கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் ..\\
    அமித்தம்மாவின் இந்த கவிதை படிக்காதது.
    அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete
  24. அனைத்தும் அருமை மாமா.

    ReplyDelete
  25. @நண்பர் நேசமித்ரன்.

    :-)

    ReplyDelete
  26. படிக்கப்படிக்க விட்டகலாத கவிதைகள், அனைவரும் அறிந்தவர்களாயினும், இந்த கவிதைகளை அவர்களிடம் வாசித்ததில்லை... மிக்க நன்றிங்க பா.ரா...

    ReplyDelete
  27. வலைச்சரத்தில் மட்டும் அல்ல எல்லோருடைய வாழ்க்கையுலும் ஏழாம் நாள்தானே சனி?!?!?!?!?

    ReplyDelete
  28. அட! இன்ப அதிர்ச்சி வாரம் தான் எனக்கு இது. மிக்க நன்றி பா.ரா. ஸார்!
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  29. அட! இன்ப அதிர்ச்சி வாரம் தான் எனக்கு இது. மிக்க நன்றி பா.ரா. ஸார்!
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  30. அருமை பா. ரா.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. //ஆனாலும், அப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா fool என எம்.ஜி. ஆர். சொல்லி தந்திருப்பதால், வரும் கருணாநிதிக்கோ/ ஜெ-விற்கோ விட்டுத்தந்திரலாம்.//
    வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு, வ‌ள‌ர‌வேண்டிய‌வ‌ர்க‌ளுக்கு, விட்டு விடுத‌ல்,
    விட்டுக்கொடுத்த‌ல் ச‌ரிதான். வருப‌வ‌ர்க‌ளுக்கு ரெம்ப‌ப் பொறுப்பிருக்கு.
    ஆனாலும், எம்ஜியார் உவ‌மைதான் உதைக்குது. அவர் க‌டைசிவ‌ரை
    விட‌வேயில்லையே ம‌க்கா!!

    ReplyDelete
  32. அருமையான அறிமுகம்

    ReplyDelete
  33. //தூக்கத்தில் இருக்கும் போது, சீனா சார் கட்டை விரலை பத்திரத்தில் உருட்டி இவ்வீட்டை எழுதி வாங்கிரலாம்ன்னுதான் வருது. அவ்வளவு காற்றோட்டம், கிளி சத்தம், திறந்த ஜன்னலில் கசியும் பிச்சிப்பூ வாசனை.//

    அது சரி

    ReplyDelete
  34. நேசமித்ரன் said...

    மறந்துட்டேன் !

    சீனா சார் ,

    விடாதீங்க இவரை !ஒன்ஸ் மோர் படிவம் எதாச்சும் இருந்தா குடுங்க பூர்த்தி பண்ணித்தாரோம் நானும் வானம்பாடிகள் சாரும்

    என்னது கையெழுத்து வேணுமா ?

    உலகம் பூரா வாங்கி அனுப்பிற மாட்டோம்

    ரிப்பீட்டச் சொல்லுங்க!

    :)

    ரீப்பீட்டிங்

    ReplyDelete
  35. அட்டகாசம் சித்தப்பா...!


    உருமாற்றம் படித்துவிட்டு உருமாறி போய்விட்டேன் சித்தப்பு!

    ReplyDelete
  36. அருமையான அறிமுகங்கள்..தேர்வு செய்த கவிதைகளும் அருமை.அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  37. நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்!

    ReplyDelete
  38. மிக்க நன்றி சார்..
    வழக்கம் போல நான் லேட் :(
    நன்றிகள் :)

    ReplyDelete
  39. சீனா அவர்களுக்கு நன்றிகள் :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது