'எக்ஸ்போ-11' என்று சீரியல் பல்புகளாலேயே வடிவமைக்கப்பட்டிருந்த வளைவு நுழைவாயிலின் அருகே, நடந்துபோய்க்கொண்டிருக்கும் அந்த தம்பதியையும், கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்களே,.. அந்தக்குழந்தையையும் நல்லா பார்த்துவெச்சுக்கோங்க. பொருட்காட்சியில் ஒவ்வொரு இடங்களாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டமா இருக்கிற இடங்கள்ல குழந்தைகளை பத்திரமா கையில் பிடிச்சுக்கவேண்டாமோ!!.. இவங்க கையிலிருந்து நழுவி அவன் ஓடறதும், துரத்திப்பிடிக்கிறதுமா இருக்குது.
"அப்பா... எனக்கு பட்டம் வேணும்,.. வாங்கித்தாங்க"
"நீ சின்னக்குழந்தைடா.. உனக்கு பட்டமெல்லாம் விடவருமா.. சும்மா பிச்சுப்போட்டுடுவே.. என்னங்க,.. அதெல்லாம் வாங்கவேணாம்"
"பரவாயில்லைம்மா, குழந்தை ஆசைப்படுறானில்ல.. இருக்கட்டும். சின்ன வயசுல பட்டம்ன்னா எனக்கு உசிரு. அந்த ஜாலியே தனி.
வெங்கட் நாகராஜ்ங்கிறவர் அதப்பத்தி என்னமா எழுதியிருக்காரு தெரியுமா"
வாமன் ஹரி பேட்டே ஜூவல்லர்சின் ஸ்டாலை கடந்துபோகும்போது, வெளியே ஃப்ளக்ஸ் பேனரில் வரையப்பட்டிருக்கும் ஜிமிக்கிகள், ஒரு நிமிஷம் கடைக்குள்ள வந்துதான் பாரேன்னு கூப்பிடுது. ஆபத்தை உணர்ந்த கணவன், 'என்னத்த பெரிய ஜிமிக்கி!!!.. உன்னோட முகத்துக்கு ஜிமிக்கியைவிட தோடுதான் நல்லாருக்குது. அப்படியே அம்மன் சிலை மாதிரி இருக்கே தெரியுமா?..' என்றான் அவசரமாக.
"எந்த முகத்துக்கு எந்த ஜிமிக்கி பொருந்தும்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்??.. ம்..
தக்குடுமாதிரி நீங்களும் ரொம்பவே ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க போலிருக்கு...." ஒரு நிமிஷம் நின்று, இடுப்பில் கைவைத்துக்கொண்டு முறைத்துவிட்டு நகர்கிறாள்.
பேசிக்கொண்டே, புடவைகள் இருக்கும் ஸ்டால்பக்கம் வருகிறார்கள்.
"என்னங்க.. வந்தது வந்தோம். அப்படியே பொங்கலுக்கு நல்லதா ஒரு புடவை எடுத்துட்டுப்போயிடலாம். செலக்ட் பண்றதுல ஹெல்ப் பண்ணுங்களேன்"
"ஆத்தா.. இந்த விளையாட்டுக்கு நா வரலை. உங்ககூட கடைக்கு வந்தா என்னாகும்ன்னு
ஆர்.வி. எஸ் அண்ணன் அப்பவே எச்சரிச்சுட்டாரு. நா இப்படியே வெளியில தந்தைக்குலங்களோட ஐக்கியமாயிடுறேன். எத்தனை நாளானாலும் பரவாயில்லை. உனக்கு பிடிச்சதா எடுத்துட்டு வா.."
"ம்க்கூம்... ஒரு ஹெல்ப் கேட்டா செய்யத்தோணுதா??.. எந்தகலர் எனக்கு நல்லாருக்கும்ன்னு என்னைவிடஉங்களுக்குத்தானே தெரியும்.."
"உனக்கென்ன செல்லம்... எந்தப்புடவை கட்டினாலும் அழகாத்தானிருப்பே.."
"வர்றப்ப உங்களுக்கு ஒரு கர்ச்சீப் வாங்கிட்டு வரேன். அசடை துடைச்சுக்கோங்க.. குழந்தையை பார்த்துக்கோங்க. சேர்ல உக்காந்ததும், ஆபீஸ் ஞாபகத்துல தூங்கிடாதீங்க.."
"இல்லைம்மா,.. இதோ டி.வி இருக்கே. பொழுது போகும். நீ போயிட்டுவா"
ஜவுளிக்கடலில் நீந்தி முத்தெடுத்து வந்தவள், கணவனை மட்டும் பார்த்து துணுக்குறுகிறாள்.
"என்னங்க... குழந்தை எங்கே?.."
"இங்கேதானே இருந்தான்.. 'தோசை சுடுறது எப்படி'ன்னு ஒரு நிகழ்ச்சி.
ராமசாமி கண்ணன் அழகா நகைச்சுவையோட விவரிச்சுக்கிட்டிருந்தார். அதப்பாத்துட்டு, தோசை வேணும்ன்னு நை..நைன்னுட்டுருந்தான். வீட்டுக்குப்போகையில ரெஸ்டாரண்டுல சாப்பிடலாம்ன்னு உக்கார வெச்சுருந்தேனே.."
"அய்யய்யோ... குழந்தையை தொலைச்சிட்டீங்களா... நீங்க அந்தப்பக்கம் தேடுங்க.. நான் இந்தப்பக்கம் தேடுறேன். குழந்தை கிடைச்சதும், மொபைல்ல தகவல் கொடுத்துப்போம்... ஓடுங்க"
ஆளுக்கொரு பக்கமாக ஒருமணி நேரம் தேடியபின்னும் கிடைக்காமல், மனைவியிடம் கேட்பதற்காக மொபைலை எடுத்தபோதுதான், கிளம்பும் அவசரத்தில், சார்ஜ் இருக்கிறதா என்பதை கவனிக்கமறந்தது உறைத்தது. 'இப்ப என்ன செய்ய...' ஒரு ரூபாய் நாணயம் போட்டு வேலைசெய்யும் போன்கள் எங்கிருக்குன்னும் தெரியலை. சட்டுன்னு,.. கூடவேலைபார்க்கும் ஹரி ஒருதடவை, பத்துரூபாய் நோட்டைவெச்சு மொபைலை சார்ஜ் செஞ்சது ஞாபகம் வந்தது.
ம.தி. சுதா சொல்லிக்கொடுத்தாராம். சந்தேகத்துடனேயே செஞ்சு பார்த்தான். ஹைய்யா..!!! ஒர்க்அவுட் ஆகிடுச்சு. உடனே மனைவிக்கு போன்செய்தான்.
"அதிகம் பேச நேரமில்லை.. நீ முகப்புல இருக்கிற தற்காலிக காவல் நிலையத்துக்கு வந்துடு..."
பொறுப்பிலிருந்தவர் பையனின் அங்க அடையாளங்களை கேட்டுத்தெரிந்துகொண்டு மைக்கில் அறிவிக்க ஆரம்பித்தார். பையனின் உயரம், நிறம், உத்தேசமா என்னவயதிருக்கும், போட்டிருந்த சட்டையின் நிறம்ன்னு பயோடேட்டாவை ஒவ்வொண்ணா சொல்லச்சொல்ல, ஜெயலலிதாவின் பயோடேட்டாவை
கே.ஆர்.பி சொல்றமாதிரியே இருந்தது.
அவர்களைப்போலவே அங்கே இன்னும் இரண்டொரு நபர்கள் கவலையுடன் காத்திருந்தார்கள். அவர்களைப்பார்த்துக்கொண்டே, "ஏம்மா,.. மியூசிக் சீசன் மாதிரி இது என்ன!!..குழந்தைகள் காணாம போகும் சீசனா.. ஆனா ஒண்ணு. எனக்கு
மஹேஷ் மாதிரியெல்லாம் வர்ணனை செய்யவராது.." என்றவனை முறைத்தாள்.
அப்போது ஒரு காவலர், ஒரு சிறுவனை கையில் பிடித்துக்கொண்டு வந்தார். பையனைப்பார்த்ததும், 'இதுதான் எங்க குழந்தை..' என்றபடி பாய்ந்து கட்டிக்கொண்டனர். சம்பிரதாயமெல்லாம் முடித்து வெளியே வந்ததும், 'அப்பாகிட்டேதானே இருந்தே.. எங்கேடா போயிட்டே..' என்று கேட்டபடி வாரியணைத்துக்கொண்டாள்.
"ஸ்டால் பக்கத்துல ரெண்டு பாப்கார்ன் கடை இருந்திச்சும்மா.. கிட்ட போய் வேடிக்கைபார்த்துட்டு திரும்பறப்ப, எந்தக்கடைக்கு பக்கத்துல அப்பா இருந்தாருன்னு குழப்பத்துல வழி தவறிட்டேன்.."
ஆஹா!!... இது
உழவனோட அனுபவம் மாதிரியே இருக்கே. மாதிரியென்ன!! அதேதான்.
"இப்படியெல்லாம் தனியா போகப்படாது. உன்னைக்காணோம்ன்னதும் எப்படி தவிச்சுப்போயிட்டோம் தெரியுமா?.."
"இதுக்குத்தான் குடும்பப்பாட்டுன்னு ஒண்ணு வேணும்கிறது. தொலைஞ்சுபோனா கண்டுபிடிக்க வசதியா இருக்குமில்லே.. அட்லீஸ்ட்
துளசியக்கா அவங்களோட மீனைக்காணோம்ன்னதும் பாடுனாங்களே, 'கண்ணாமூச்சி ஏனடா?..'ன்னு... அதுமாதிரியாவது பாடியிருக்கலாம்". கிண்டல் செய்த கணவனை முறைத்தாள் மனைவி.