07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஆடுமாடு. Show all posts
Showing posts with label ஆடுமாடு. Show all posts

Monday, February 11, 2008

ஆதலால் நண்பர்களே...

ஆதலால் நண்பர்களே...

தமிழாசிரியராக வேண்டும் என்கிற கனவில் (ஒரு காலத்தில்) இருந்தவனை, வலைச்சரத்துக்கு ஆசிரியராக்கியிருக்கிறது இந்த ஆசிரியக் குழு. அவர்களுக்கு நன்றி. நிறைய எழுத நினைத்து, ஆழியூரானின்
கரகாட்டம்: வயசுப் போனால் பவுசு போச்சு
என்கிற மனதை தொடும் கட்டுரை உட்பட பல நல்ல கட்டுரைகளை மற்றும் கவிதைகளைத் தேர்வு செய்து வைத்தும், இன்னும் சில பதிவுகளை சுட்ட விடாமல் சுரண்டிப் போனது என் வியாபார நெருக்கடி. இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாமோ என்கிற கேள்வி எப்போதும் போலவே இப்போதும் மனதுள்.

நொடிப்பொழுதும் எழுத்தும் வாசிப்புமாக இருந்த என் இயல்பு, கடந்த எட்டு ஆண்டுகளாக ஓய்ந்து போயிருந்தது. பெரிதாக காரணம் எதுவுமில்லை. எரிச்சல்தான். வலைப்பதிவுகள் அந்த ஓய்வுக்கு ஓய்வளித்து, அதிகமாக படிக்க வைத்திருக்கிறது.

வலைப்பதிவை தொடங்கிய தருணங்களில் தத்தக்கா பித்தகாவென தடுமாறிக்கொண்டிருந்த எனக்கு, பல தகவல்களை தந்த துளசி டீச்சர், வெயிலான் , நண்பர் பைத்தியக்காரன் உள்ளிட்ட வலைப்பதிவு நண்பர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

அனைவருக்கும் நன்றி. அடுத்து வரும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
மேலும் வாசிக்க...

Sunday, February 10, 2008

சிறுகதைகள்

நிற்கும் இடத்தில், நடைபயணத்தில், பஸ் ஸ்டாண்டில், தம்மடிக்கும் இடத்திலென எங்கும் கிடைக்கிறது ஏதாவதொரு கதைக்கான விஷயம். அதை கதையாக்கும் கலை கைவந்தால் போதும். ஒரு காட்சி ஏற்படுத்தி விடமுடியாத தாக்கத்தை, நல்ல சிறுகதை தந்துவிட முடியும். சொல்லப்படுகின்ற விஷயத்தை பொறுத்தது அது.

'ஒரு நல்ல கதை வாசகனிடம் சலனத்தை ஏற்படுத்த வேண்டும்' என்பார்கள். அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் மூலமாக, எழுதப்படுபவர்கள் அறியப்படும் நிலை வந்தால் அதுதான் சிறந்ததாகக் கொள்ளப்படும்.

வலைப்பதிவில் அதிகமாக கதைகளை வாசிக்கவில்லையென்றாலும் வாசித்த சில கதைகளை சொல்லிவிடுகிறேன். மரணம் ஏற்படுத்தும் அதிர்ச்சியை விட, அந்த மரணம் மற்றவர்களுக்கு தந்து போகிற அதிர்ச்சிகள் அபாயகரமானவை. மகனின் இறப்பு ஏற்படுத்திய தாக்கத்தில் பைத்தியமான அம்மாக்களின் நிஜ கதைகளை இங்கே பார்க்க நேரிடுகிறது.

அப்படி மரணம் ஏற்படுத்திய நினைவின் அசைவுகளை சொல்கிறது அருட்பெருங்கோவின் இந்தக் கதை .

தமிழ்மகனின் இந்த கதை அப்பாவின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தை பேசுகிறது. இவரின் மொழி நடையும் விவரிக்கின்ற காட்சிகளும் நமக்குள் அதிர்வை ஏற்படுத்திவிட்டு போகின்றன.

சுந்தரின் பூனைகள் பற்றி ஓர் ஆய்வு என்கிற கதை பன்முக வாசிப்பு தன்மையை கொடுக்கிறது.

லக்ஷ்மியின் இந்தக் கதை பெண்களின் பிரச்னையை பேசுகிறது. ஓடிப்போன ஒரு பெண்ணின் தங்கை, கணவ்னிடம் எதிர்கொள்ளும் பிரச்னையை சொல்லும் இந்தக் கதை, இன்னும் விரிவாக்கப் பட்டிருக்கலாமோ என்று தோன்றியது.
மேலும் வாசிக்க...

Saturday, February 9, 2008

குபுக் குபுக் பதிவுகள்

பணம் என்கிற விஷயம் ஆட்டிப்படைத்த பிறகு பொருளீட்டுவதற்கான காரணிகளைத் தேடி போய்விட்டது வாழ்க்கை. இந்த டென்ஷன் உலகில் சிரிப்பு என்பது, சேனல்களில் காண்பிக்கப்படும் காமெடிக்குள் அடங்கிவிட்டது. இதனால்தான் பார்த்த காமெடியையே தினமும் பார்த்தாலும் அலுப்புத்தட்டாமல் இருக்கிறது.
அந்த வகையில் வலைப்பதிவில் காமெடியும் நக்கலும் பஞ்சமில்லாமல் பரவிகிடக்கிறது. கடினமான வார்த்தைகளைக் கொண்டு எழுதப்படுகிற கட்டுரைகளும் கவிதைகளும் எழுதுபவனின் இறுக்கமான மன உணர்வுகளையே வெளிப்படுத்துகிறது. அப்படியான சூழலில் காமெடியை கையாளுவதும் எழுதுவதும் தனி கலைதான்.

டுபுக்குவின் பதிவில் கிடைக்கும் அனைத்துப் பதிவும் விழுந்து சிரிக்கவும், சிரித்து ரசிக்கவும் முற்படுகின்றன. நடந்த சம்பவங்களை கொஞ்சம் அதீத கற்பனை கொண்டு எழுதினாலும், அதில் யதார்த்தம் மீறாமல் அவரால் செய்யப்படுகின்ற கட்டுரைகள், அவரது நகைச்சுவை உணர்வை காட்டுகின்றன. உதாரணத்துக்கு இது.

அபி அப்பாவின் காமெடிக்குள் விழுந்து விழுந்து சிரித்த பதிவு இது. அவரின் சிதம்பரத்துக்குப் போன அப்பா(டா) சாமி காமெடிக்கு நூறு சதவிகித கியாரண்டி.

எந்த ஒரு விஷயத்தையும் கலாய்க்கவும் நக்கலடிக்கவும் தெரிந்த குசும்பன் பாராட்டுக்குரியவர். அவரது இந்த கலை எனக்கிருந்தால் நான் என்ன எழுதுவேன் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இவரது இந்த கார்ட்டூன் குசும்பு , வலைப்பதிவின் சுவாரஸ்யம். இதே போல இலவச கொத்தனாரின் இந்தப் பதிவும்.

லக்கி லுக்கின் இந்த பதிவு நக்கலோ நக்கல்.
மேலும் வாசிக்க...

Thursday, February 7, 2008

பெண்- சில புரிதல்கள்

மனித உடம்பின் உறுப்புகளின் அடிப்படையில் கற்பிக்கப்பட்டிருக்கிற அடையாளங்களின்
காரணமாகவே பெண் என்பவள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறாள். ஆண் என்பவன் தன்னிடமுள்ள ஆண் அடையாளம் பெண்ணிடம் இல்லை என்பதாலேயே அவளை முழுமையடைய வேண்டியவள் என்கிற ஆதிக்கக் கருத்துக்களைப் படைக்கிறான்.

உடல் உறுப்புகளை வைத்து கட்டப்பட்டிருக்கும் பால் வேறுபாடுகளை உடைக்கும் போது, அல்லது அது பற்றிய புரிதல் வரும்போது, ஒரு அடிப்படை தர்க்கமே உடைபடும் என நினைக்கிறேன். அதாவது ஆண்களை வானமாகவும் பெண்களை பூமியாகவும் உருவாக்கி வைத்திருக்கும் இந்து மதக் கோட்பாடுகளை உடைத்தெறிவதற்கான வழியாகக்கூட கொள்ளலாம்.

இந்தியாவின் சக்தியாக விளங்குகின்ற சாதி அமைப்பும் இந்து மதச் சிந்தனையும் மேல்நாட்டு பெண்ணியவாதிகளால் அறிய முடியாததாக இருக்கிறது. ஐரோப்பிய பெண்ணிய சிந்தனைக்கும் இந்திய பெண்ணிய சிந்தனைக்கும் எட்டமுடியாத வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த புரிதல் இன்றி , அங்கிருந்து இறக்குமதியாகின்ற பெண்ணிய சிந்தனைகள் இங்கே பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.

''பெண்ணியம் மேற்கத்திய சிந்தனைதான்; இதை ஆண் பெண் உடல்சார்ந்த பிரச்னையாக நான் பார்க்கவில்லை. அது கருத்தியல் சார்ந்த பிரச்னை. பெண் இல்லாமல் அலலது பெண்ணுடன் வித்தியாசப்படாமல் ஆணை எப்படி வரையறுப்பீர்கள்?" என்று கேள்வி கேட்கிற ஜமாலனின் இந்தக் கட்டுரை முக்கியமானப் பதிவு

பெண்களுக்கான அடக்குமுறையை, குடும்பம் சார்ந்திருக்கிற நமது சமூக அமைப்பு எவ்வாறு செய்கிறது என்கிற ஆதவன் தீட்சண்யாவின் கருத்தை பதிவிட்டிருக்கும் செல்வநாயகியின் இந்தக் கட்டுரை , பெண்களுக்கு, சாதி கட்டிப்போட்டிருக்கிற பெரும் சங்கிலி பற்றி பேசுகிறது.

பெண் என்பவள் யார் என்று கேட்கும் கிருத்திகா, இந்த கேள்விவிக்கு ஆணை அளவு கோலாக வைக்க முடியுமா? என்று கேட்கிறார் இந்தப் பதிவில் .

லஷ்மியின் மலர்வனத்தில் இடப்பட்டிருக்கும் கனிமொழியின் இந்தக் கட்டுரை பெண் உரிமை என்பது என்ன என்பததை விரிவாகப் பேசுகிறது.
மேலும் வாசிக்க...

கவிதை 2

கவிதைகளை அந்தரக்க கவிதை, சமூகக்கவிதை என்று பார்க்கிற தன்மை இங்கே இருக்கிறது.
பொதுவாக எல்லோருடனும் பகிர்வதற்கு கூச்சப்படும் கவிதைகள் அந்தரங்க கவிதைகளாகக் கொள்ளப்படுகின்றன. தனிமனிதனின் சொந்த ஆசாபாசங்களை வெளிப்படுத்தும் கவிதைகள் சமூக கவிதைகளைவிட அதிக அரவணைப்பை பெறுவதாகவே நினைக்கிறேன்.

மரணம் என்கிற உயிர்கொல்லி எல்லோருக்கும் பயத்தை தருவதாகவே இருக்கிறது. மரணத்துக்குப் பின் ஆன வாழ்க்கை இன்னும் புதிர்தான். 'மரணத்தின் அழைப்பைக் கேட்டவர்களுக்குத் தெரியும் வாழ்வின் வசீகரங்கள்' என்கிற இளையபாரதியின் கவிதை ஞாபகத்துக்கு வந்துபோகிறது. ஆனால் மணிகண்டனின் மரணம் பேசும் இந்தக் கவிதையும் அப்படியானவைதான். மரணத்தை எதிர்கொள்ள துணிகிறவனின் மனம் நம்மை அழைப்பது உயிர் பிரியும் ஓசையை ரசிக்க.

துப்பாக்கிகளும் போர்விமானங்களும் ஈழத்து மண்ணை ரத்தமாக்கிய பிறகு அந்நாட்டு கவிதைகள் அலங்காராங்களை அப்படியே போட்டுவிட்டு திட்டவட்டமான மொழியை கையாளத் தொடங்கிவிட்டன. வேறு நாட்டுக்கு குடிபெயர்ந்து அகதி என்கிற சொல்லை தாங்கும் போது ஏற்படுகின்ற வலி கொடூரமானது. அந்த வலியை, அனுபவிப்பவரால் மட்டுமே உணரமுடியும். ஆனால் மிதக்கும் வெளியில் சுகுணா , 'உன் வலியை என்னால் உணரமுடிகிறது' என்கிறார். அப்படி உணர்பவரால்தான் இப்படியும் சொல்லமுடியும்: 'உனது எதிர்பார்ப்பு உன் தேசத்திற்கான விடுதலை. எனக்கோ தேசத்திடமிருந்து விடுதலை" .அந்தக் கவிதை இங்கே.

ஆற்றுமணலை சோறாகவும் சோற்றை ஆற்றுமணலாகவும் ஆக்கும் சக்தி காதலுக்கு உண்டு. அது ஆழ்மனதை கிள்ளியெடுக்கும் நுண்ணுயிரி. காதலித்து பின்னர் வெவ்வேறு திசைகளில் பயணிக்கத் துவங்குகின்றவர்களின் எண்ணங்கள் தமிழ்நதியின் கூட வராதவன் போலத்தான். இப்படியானதொரு கவிதையை எழுதிவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்தாலும் அவரவர்களுக்கான நிகழ்வுகளும் அனுபவமும் வெவ்வேறானவை. அதனால்தான் அம்மாதிரியான கவிதைகள் இன்னும் அழுத்தமாய் மனதில் நிற்கின்றன.

நிவேதாவின் கவிதைகளில் வலி நிறைந்த வாழ்க்கையின் அனுபவங்கள் விரவி கிடக்கின்றன. அவரது காத்திருக்காத தேவதைகள் நினைவுகளைக் கனக்கச் செய்கிறார்கள்.
மேலும் வாசிக்க...

Tuesday, February 5, 2008

கவிதை - 1

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மாயவித்தைதான் கவிதை. நேரிடையாக ஒன்றையும், அதுகாட்டும் குறியீடு, படிமங்களின் வாயிலாக இன்னொன்றையும் வெளியிடுகிற சாத்தியம் கவிதைக்கு மாத்திரமே சாத்தியம். இது மொழியின் பலவீனமும் கூட. மொழியின் மூக்கணாங்கயிறை சுண்ட இழுத்து, சொற்களை பலவீனமாக்கியோ இல்லை பலமாக்கியோ புனையப்படும் எழுத்துக்கு கவர்ச்சியும் வெறுப்பும் அதிகம். அந்த வெற்றுப்பையும் கவர்ச்சியையும் கவிதை என்றும் சொல்லலாம்.

வாழ்வின் குத்தாட்ட குஸ்திகளில், சந்திக்க நேர்கிற அனுபவங்களை, அந்த நொடி ஏற்படுத்தும் சிலிர்ப்பையும் உணர்வையும் வார்த்தைக்குள், சிந்தனா பூர்வமாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் அடக்க முடிந்தால் அந்தக் கவிதைக்கு ஆயுள் ஜாஸ்தி.

இன்றைக்கு புதிதாக கவிதை எழுதிவருபவர்கள், அதன் வரலாறை, முன்னோடிகளை அறிந்துகொள்வது அவசியம். புதுகவிதையின் வரலாறை, ஏற்கனவே கவிஞர் பாலா, வல்லிக்கண்ணன், ராஜமார்த்தாண்டன் ஆகி்யோர் எழுதியிருந்தாலும், நடைவழிக் குறிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை அறியவேண்டியது.

சுந்தரின் மொழிவிளையாட்டில் காய்த்து தொங்குகிறது கவிதைகள். அவரது கவிதைகள் நகரம் சார்ந்தவை. நகரத்தின் சந்துபொந்துகள் பிதுக்கிப் போடும் வேதனைகளில்/சுகங்களில் அவர் வாழ்வி்ன் இயக்கம் துடிதுடிக்கிறது. அவ்வாறு துடிக்கின்ற ஒரு மெல்லிய உணர்வின் கனத்த காயத்தை தந்து போகிறார்கள் அவரி்ன்அக்காவும் நானும் . இவர் ஆரம்பித்திருக்கிற அ கவிதைகள் சுகமான மொழி விளையாட்டு.

எதையாவது வெளிப்படுத்தவே விரும்புகிறது எல்லா கவிதைகளும். அந்த வெளிப்படுத்தலுக்கு கவனிப்புகள் முக்கியம். எங்கோ ஒரு புள்ளியை பார்த்தால், அதை கோடாக்கலாம். கோலமாக்கலாம். ஆனால் கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் தனித்து இயங்கும் அல்லது தப்பி நிற்கும் புள்ளிகள் நம்மை ஏளனமாகப் பார்க்கின்றன. எதற்காகவோ சிரிக்கின்றன. பரபரத்து திரியும் வாழ்க்கையில் மனதுக்குள் முரண்டுபட்டு நிற்கும் அந்த புள்ளிகளின் எண்ணிக்கை ஏராளம். புள்ளி என்பது ஒரு நேர்க்கோட்டின் துண்டு. அதை நெற்றியில் வைத்தால் பொட்டு. வானில் வைத்தால் சூரியன். காயத்ரியின் பாலைத்திணைக்காட்டும் புள்ளியில், உறுத்திக்கொண்டிருக்கும் புள்ளியின் வீச்சில் நான் இதைத்தான் பார்க்கிறேன்.

கவிதை இதைத்தான் கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை கடந்தது. அது ஐந்து சொற்களில் அண்டத்தை அடைகாத்துவிடும் சகதி பெற்றது. அய்யனாரின் தனிமையின் இசையில், நிராகரிப்பின் வலிகள் நிறைந்த கவிதைகள் அதிகம். அவரது வார்த்தைகள் கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கின்ற வாசகத் தோழமை கொண்டவை. வார்த்தையாகக் கட்டப்பட்டிருக்கிற இவரது எழுத்தின் மேல் வாழ்க்கையின் சிக்கல் மிகுந்த நுட்பங்கள் சிதறிக்கிடக்கின்றன.
பாதுகாப்புகளற்ற வெளியில் இயங்குகிறது சகலமும்
என்கிற கவிதையில் வருகிற கருப்பு தேசத்து குழந்தை, அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானத்தை நினைவுபடுத்தி போகிறது.

ஒவ்வொரு நிமிடமும் யுத்தம்தான். பஸ் பயணத்தில், அலுவலக அரசியலில், ரேஷன் கடை கியூவில்... இன்னும் வாழ்க்கையின் ஒவ்வொரு துடிப்பிலும் சந்திக்கின்ற யுத்தங்கள், சங்ககால போருக்கு கொஞ்சமும் குறைவில்லாதது. முபாரக் எழுதியிருக்கும் இன்றிரவின் யுத்தம் பிழைப்புக்காக நகரம் சார்ந்து, அதன் கொடும் கரங்களில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்குமான யுத்தமாகிறது. மிகுந்த சொற்சிக்கனத்தோடும் செறிவோடும் எழுதப்பட்டிருக்கிற கவிதை இது.

'மொழிபெயர்க்க முடியாதது எதுவோ கவிதை' என்கிற மேற்கோளை எங்கோ படித்திருக்கிறேன். இப்படியான கவிதையை, மண் சார்ந்து அந்த மண்ணின் மொழியிலேயே எழுதினால் மட்டுமே சாத்தியம். 'ஏலே...' என்கிற பதம் இன்னொரு மொழியில் எப்படி மொழிபெயர்க்கப்படும் என்று தெரியவில்லை. இதே போன்ற மண்ணின் மொழி ஏராளமாக இருக்கிறது. அந்த வட்டார வழக்கு நடைகளுக்கு, வலைப்பதிவில் பஞ்சம் இருப்பதாகவே நினைக்கிறேன்.
மேலும் வாசிக்க...

சினிமா

பல நூற்றாண்டுகளாக நம் மண்ணில் வளர்ந்த, பழங்கலைகள் மீது சினிமா என்கிற அந்நிய தொழில்நுட்பம் கை வைத்து, இன்று பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறது. சினிமா என்கிற பேக்டரியிலிருந்துதான் நம் அரசியல் தலைவர்கள் வர வேண்டிய நிலையில் நாடு இருக்கிறது என்பதே அதன் தாக்கத்தை இன்னும் புரிந்துகொள்ள உதவும். எல்லா மக்களின் கனவுகளோடு உறவாடி சக்தி மிக்க கலையாகியிருக்கிறது சினிமா.

1913ம் ஆண்டு 'ராஜா அரிச்சந்திரா' என்கிற முதல் இந்திய சினிமாவைத் தயாரித்த தாதா சாகேப் பால்கே, '57000 புகைப்படங்களைக் கொண்ட நிகழ்ச்சி...ஒரு திரைப்படத்தின் நீளம், 2000 மைல்கள்...எல்லாம் 3 அணாவுக்கு' என்று விளம்பரப்படுத்தினார்.

இன்று?

''இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட, மக்களை கவரும் கருவிகளிலேயே மிக அதிக சக்தி வாய்ந்த கருவி சினிமாதான்" என்ற நிலையில் அது தன் வேரை விரித்திருக்கிறது.

வலைப்பதிவை தொடங்கி சில வாரங்கள் ஆன பிறகுதான், தமிழ்மணம் என்ற ஒன்று இருப்பது தெரிய வந்தது. புதிதாக ஒன்றை அறியும்போது/தெரியும் போது வருகின்ற ஆச்சர்யங்களும் மகிழ்ச்சியும் அதிகாலை அருந்தும் இளநீர் போல இனிமையானது. இதில் வரும் பதிவுகளைப் படித்துவிட்டு எப்படி இணைப்பது என்பதில் குழம்பிய நேரத்தில்தான், மதி கந்தசாமி தனது பதிவில் கிராமம் பற்றி சிலாகித்து எனது கட்டுரையை இட்டிருந்தார். இதை நண்பர் வெயிலான் மூலமாக தாமதமாக அறிந்து படித்தபோது உச்சிக்குள் வேர்த்திருந்தது.

யாராலும் அறியப்படாத ஒரு பதிவை ஒரு வலைப்பதிவில் பார்க்கும் சந்தர்ப்பம் கிளர்ச்சியை ஏற்படுத்துமென்றே நினைக்கிறேன். இவரின் பதிவை, தொடர்ந்து வாசித்ததில் சினிமா பற்றிய இவரது விமர்சனங்கள்/விளக்கங்கள் ஆச்சர்யத்தை அளித்தன. கடமைபட்ட ஒருவனின் மனநிலையில் இவர் எழுதிவரும் விமர்சனங்களை வாசிக்க, கடமை பட்டதாகவே இருக்கிறது மனசு. இந்த ஒரு விமர்சனம் உங்களுக்கு சாம்பிள்.

சினிமா என்கிற காட்சி ஊடகத்தை அதன் மொழியிலேயே எடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமா பகீரதப் பிரயத்தனங்கள் செய்துவருகின்றன. அவ்வாறு எடுக்கப்படாவிட்டாலும், சினிமா படங்களை அதன் கண்ணோட்டத்தில், செவ்வகத் திரையில் வைக்கப்படும் அந்த படத்தின் நீள அகலங்களை விலாவாரியாக பார்க்கின்ற ஆய்வுகள் முக்கியமானவை. படம் பேசும் அரசியலும், சொல்லப்படுகின்ற விஷயமும் காட்சி ஊடகத்தின் மூலமாக வெளிப்படும் போது, அது பரவலான ஆக்கிரமிப்பை பெறுகின்றன. அவ்வாறு பெறப்படும் படங்கள், மேலோட்டமாக பேசும் விஷயங்களை மட்டும்தான் சாதரண பார்வையாளனால் உணரப்படுகிறது. அதற்கு அவனது ரசனையும் தளமும்தான் காரணம். இப்படி அறியப்படாத பல விஷயங்களைப் பேசுகிறது ஜமாலனின் அந்நியன்.அவரது
கல்லூரி்யும் அப்படித்தான்.


வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட அல்லது படம் சொல்கின்ற பொருளின் பின்னணிகளை அறிந்துகொண்டால் மட்டுமே மூன்றாம் உலக நாடுகளின் சினிமாக்கள் புரியவரும். ஏனென்றால் அந்த சினிமாக்களின் முன்னால் வரலாற்றுக் கடமை இருப்பதாகச் சொல்கிறார்கள். வெளிநாட்டு ஆட்சியின் ஆதிக்கத்தால் தங்கள் கலாச்சாரம், பண்பாட்டை இழந்து நிற்கிற அந்த நாடுகளின் சினிமாக்கள், தங்கள் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இப்படியான படங்களின் விமர்சனங்களை நீர் தேடும் வேர் போல வலைப்பதிவில் தேடிக் கொண்டிருக்கிறேன். பார்த்தவர்கள், எழுதியவர்கள் தெரியப்படுத்தலாம்.

சமீபத்தில் வலைச்சரத்துக்காக சினிமா விமர்சங்களைத் தேடிய போது, டிஜே தமிழன் எழுதியிருக்கும் மைக் நெவல்லின் லவ் இன் தி டைம் ஆப் காலரா கண்ணின் பட்டது. நல்ல விமர்சனம். இந்தக் கதைதான் தமிழில் சமீபத்தில் வந்த, ஆக்ரா படத்தின் கதை. அழகாகத் திருடியிருக்கிறார்கள். ஆனால், அந்தப் படத்தில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள், ஆக்ராவில் காயப்படுத்தப்பட்டிருந்தது.

அய்யனாரின் மொழி நடையில் வோல்வர் படமும் தாரே ஜமின் பர் , தருமியின் இந்த விமர்சனமும் சன்னாசியின் டாக் டே ஆஃப்டர்னூன்' விமர்சனமும் அழகாக விமர்சிக்கப் பட்டிருப்பதாகக் கருதுகிறேன். தெகாவின் ஒன்பது ரூபாய் நோட்டு வேறொரு பார்வையை காட்டுகிறது.

உருப்படாததுவின் உருப்படியான பல பதிவுகளில் ஜாலியாகச் சொல்லிவிட்டுப் போகும் இந்தப் பதிவு சுவாரஸ்யமானது.


இன்னும் வாசிப்புகளும், அறியப்படாத வலைப்பதிவுகளும் இருக்கிறது.
மேலும் வாசிக்க...

Monday, February 4, 2008

பின் நவீனத்துவமும் சில கட்டுரைகளும்

பின் நவீனத்துவம் என்கிற பிரம்மாண்டம் ஆயுதம் வைத்திருக்கும் ஒரு கொடூரனைப் போல என்னை விரட்டி விரட்டி அடித்திருக்கிறது. 96ம் ஆண்டு வாக்கில் சில இலக்கிய கூட்டங்களில் எஸ். ராமகிருஷ்ணன், இது குறித்த பேச்சை ஆரம்பிக்க போதெல்லாம் ஒரு பூனை குட்டியாக நடுங்கியிருக்கிறேன். அந்த நடுக்கம்தான் தொடர்ந்து அது பற்றிய பயத்தைப் போக்கியது.

'உண்மையில் 'பின்நவீனத்துவம்' என்பது ஒரு செயல்பாட்டு வழிமுறை. ஒவ்வொரு காலமும் தனக்கென ஒரு தனிப் பாங்கினைக் கொண்டிருப்பதுப் போல, ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான பின் நவீனத்துவத்தை கொண்டிருக்கிறது எனக்கூறலாம்' என்கிறது நடை வழிக்குறிப்புகளில் இடம்பெற்றுள்ள பின்நவீனத்துவம் ஓர் அறிமுகம் என்கிற கட்டுரை.

பின் நவீனத்துவ நாவல் என்பது என்ன? நாவல் கொண்டிருக்கும் வடிவ அமைப்பை பின்நவீனத்துவம் எப்படி எதிர்கொள்கிறது. அல்லது பின்நவீனத்துவ நாவல் என்பது எது என்கிற கேள்விக்குவளர்மதியின் இந்தக் கட்டுரை பதிலாக இருக்கிறது.

பின் நவீனத்துவ வாசிப்பு என்பது என்ன? அதன் கதையாடல் எப்படியிருக்கும் என்பதை இன்னும் கொஞ்சம் எளிமையாக விளங்க வைக்கிறது பைத்தியக்காரனின் இந்த கொத்துப்புரோட்டா.

பின் நவீனத்துவ சினிமா எப்படி இருக்கும்? கமலஹாசனின், 'ஹே ராம்' பற்றி புரியவில்லை/குப்பை என்ற விமர்சனங்கள் ஓங்கி எழுந்தன. கோட்சேவின் தம்பி கூட இந்தப் படத்தின் சில விஷயயங்களில் ஒத்தும் சிலவற்றில் மாற்றுக்கருத்தும் கூறியிருந்தார். இதுதொடர்பாக படம் வெளியான காலத்தில் பெரும் சர்ச்சை கிளம்பி அடங்கியது. ஆனால், பின் நவீனத்துவ கதை கூறல் முறைகளில் ஒன்றான, வரலாற்றை அழித்தெழுதுதல் (palimpsest) என்கிற பிரதியாக்க யுத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இது என்கிறார் நண்பர் ஜமாலன். அதாவது இதை பின்நவீனத்துவப் படம் என்கிறார் அவர். அவரின் விரிவான விளக்கமும் வரலாற்று நிகழ்வுகளோடு ஒப்புமைப்படுத்தி பார்க்கும் பாங்கும் அருமையாக இருக்கிறது. அந்த கட்டுரை இங்கே

பின் நவீனத்துவம் விடுத்து ஏகப்பட்ட நல்ல விஷயங்களை கொண்டிருக்கும் கட்டுரைகள் பல பதிவுகளில் காணக் கிடைக்கிறது.

பாரதி பற்றிய மேன்மைதாங்கிய கருத்துருவாக்கங்கள் ஒரு புறமிருந்தாலும் அவரை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் மதிமாறன், ஏற்கனவே பாரதீய ஜனதா பார்ட்டியை எழுதியவர். பாரதி பற்றி தொடர்ந்து அவர் எழுதும் ஆய்வுகள் இன்னொரு கருத்துத் தளத்தைக் கொடுக்கிறது. பாரதியின்
நாலு வர்ண தேச பக்தியை பேசுகிறது இந்தக் கட்டுரை.

முரண்வெளி யில் பதிவு செய்யப்பட்டிருக்கிறலா.சா.ராமாமிர்தம்: இசையின் இன்மையை உணர்தலும் தளவாயின் நகுலன் பற்றிய கட்டுரையும் அவர்களுக்கான அஞ்சலியைத் தாண்டியும் நிற்கிறது.
மேலும் வாசிக்க...

ஆடுமாடாகிய நான்...

மொழிக்குள் விழுந்து, மொழிக்குள் புதைந்து, மொழிக்குள் தொலைந்து போவது பிடித்துப்போனதிலிருந்து எழுதுவது சுகமாகிப்போனது. மாடு மேய்க்கிற பள்ளி விடுமுறை நாட்களில், கம்யூனிச புத்தகங்களை அறிமுகப்படுத்திய சித்தப்பா என் தோழர். அவரின் தேடலில் என்னையும் இழுத்து, புத்தகங்களுக்குள் விழ வைக்க, அவர் பட்ட சிரமமும், இருக்கிற காசுக்கு புத்தகங்கள் வாங்கிவிட்டு திருநெல்வேலியிலிருந்து திருட்டுத்தனமாக, ரயிலில் ஊருக்கு வந்த காலங்கள் மறைந்து போகாமல் இன்னும் மனதுக்குள் இருக்கிறது.

அவரது தோழமையிலேயே சில எழுத்தாளர்களின் சந்திப்பும் அறிமுகமும் கிடைத்தது. அவர்களுக்காக வாங்கப்படுகிற சாராயத்திலும், விருந்தினர்களுக்காக உயிர்விடத் தயாராக இருக்கிற, வீட்டுக் கோழிகளின் பிரியாணியிலும் வளர்ந்தது என் வாசிப்பு ஆர்வமும் எழுத்தார்வமும்.
பதினாறு வயதில் திக்கி திக்கி தொடங்கிய எழுத்து இன்னும் போதை மாறாமல் இருக்கிறது. வாசிக்க கிடைக்கிற ஏதாவது ஒன்றைப் பொருத்து போதை மாறுகிறது அல்லது ஏறுகிறது.

தினமும் ஒரு ரகசியத்தைச் சொல்லிப்போகும் மொழியின் கைகளில் நான் ஒரு குழந்தை. அதன் விளையாட்டில் பயணிக்கும் இந்த வழித்தடத்தில், அறிந்தும் அறியாமலும் இருக்கிற கணினியின் நட்பு கிடைத்த பின், எழுத்துக்கு அடிமையாகிப் போன அவஸ்தை, உங்களைப் போலவே எனக்கும் ரசனையாகவே இருக்கிறது.

வலைப்பதிவு பற்றி பேசுகின்ற/ எழுதுகின்ற நண்பர்களின் அறிமுகத்துக்குப் பிறகு எனக்குள்ளும் விதையொன்று விழுந்து ஆக்கிரமிக்க, ஆரம்பமானது
ஆடுமாடும் கடனாநதியும்.

பிரியமான புத்தகத்தின் சில குறைகளை எழுதியதற்காகவே எனது புத்தகத்தை பிரித்து மேய்ந்த நண்பர்களிடம் கற்ற இலக்கிய அரசியலுக்குப் பிறகு, ஆடுமாடுக்குள் அடங்கிக்கொண்டு கிராமத்தையும் ஆடுமாடுகளைப் பற்றியும் அது தொடர்பானதையும்தான் எழுத வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட பதிவு இது. என் ஆரம்ப பதிவில் இதை கண்டிருக்க முடியும். ஆனால் இப்போது மனமும் எழுத்தும் அதை மாற்றிப்போட்டிருக்கிறது.

அரைமணி நேரமோ/ஒரு மணிநேரமோ ஓசியில் கிடைக்கின்ற இணையத்துக்குள் என்னால் முடிந்தளவுக்கு வாசித்திருக்கிறேன். சில சுவாரஸ்யங்களையும் சுகங்களையும் தந்த அந்த பதிவுகளை அறிமுகப்படுத்துவதில் கொஞ்சம் கர்வமும் இருக்கிறது.

வணக்கத்துடன் ஆடுமாடு.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது