07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கோகுலன். Show all posts
Showing posts with label கோகுலன். Show all posts

Sunday, June 29, 2008

நன்றிகள்.



சென்றவார வலைச்சர ஆசிரியராக எனக்கு ஒரு வாய்ப்பளித்த நண்பர் சீனா அவர்களுக்கு என் அன்பான நன்றிகள். என் பதிவுகளுக்கு அதிகமாய் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இந்த தமிழ் வலைப்பதிவிடுதல் பற்றி நானே அறிந்துகொண்டு, எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு எழுதிக்கொண்டிருந்தேன். மற்ற பதிவர் நண்பர்களுடன் அதிகம் பரிச்சயமில்லை. இருந்தும், என்னை இங்கும் அழைத்து வந்து, என் எழுத்தையும் அனைவரும் வாசிக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திய நண்பர் சீனா அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். மீண்டும் நன்றிகள் சினா!!

இந்த வலைச்சர ஆசிரியர் வாய்ப்பு எனக்கு பல புதிய வலைப்பதிவுகளை வாசிக்கும் சந்தர்ப்பத்தை கொடுத்ததுடன், அதிகமான வலைப்பதிவ நண்பர்களையும் பெற்றுத்தந்தது. மிக்க மகிழ்ச்சி.

நான் தமிழ்மணம் மற்றுமான தமிழ் திரட்டிகள் பற்றியும் மிக அதிக அளவில் கற்றுக்கொண்டது சமீபமாய்த்தான். அதற்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது வலைச்சரம் தான்.

யான் வாசித்த இன்பம் பெறுக தமிழுலகம் என்னும் முயற்சியிலமைந்த இந்த வலைச்சரம் மிகவும் பாராட்டத்தக்கது. இந்த வலைச்சரம் மேலும் மேலும் சிறப்பாக நடைபோட என் வாழ்த்துக்கள்!

இன்னும் அனேக வலைப்பூக்கள் வாசித்தும், குறிப்பெடுத்து வைத்தும் நேரமின்மை காரணமாக அவற்றை அனைத்தும் இட முடியாமைக்கு வருந்துகிறேன்.

மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, நான் இனி உங்கள் அனைவருடனும் நட்பென்னும் ஒற்றையடிப்பாதையில் மிக நெருக்கமாக பயணிக்க விரும்பும் என் ஆசைகளையும் தெரிவித்துகொள்கிறேன்.

எல்லோரும் இன்புற்றிருக்க
நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே!

நன்றிகளுடன்,
என்றும் உங்கள் நண்பன்,
கோகுலன்
gokulankannan@gmail.com
மேலும் வாசிக்க...

இங்கேயும் போய் பாருங்க... வாசியுங்க..



சுவாரஸ்யமான மொக்கை மற்றும் நகைச்சுவை நையாண்டி பதிவுகள் நிறைந்த வலைப்பூ வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு சொந்தமானது. அதில் இந்த மாதம் தான் நண்பர் ரிஷான் என்னை அழைத்துசென்றார். அட, அட.. நான் மறுபடி என் கல்லூரி நாட்களுக்கு சென்றது போலிருந்தது. நானும் கூட என்னை சங்கத்துல சேத்துக்கச்சொல்லி கேட்டிருக்கேன். வலைப்பதிவ நண்பர்கள் அங்கே கூடிச்சேர்ந்து கும்மியடிக்கும் அழகே அழகு.

***oo$oo***

நான் தமிழ்திரைப்படப்பாடல் வரிகள் தேடித்தேடி இணையத்தில் சுற்றிக்கிடந்த காலமெல்லாம் உண்டு. அதன்பின்புதான் தெரிந்துகொண்டேன். பழைய பாடல், புதிய பாடல்கள் என அனைத்தையும் அழகாய் ஓரிடத்தில் தருகிறது தேன்கிண்ணம். மிகவும் பயனுள்ளதொரு வலைப்பூ!

***oo$oo***

செய்திகள், விமர்சனம், மொக்கை, அனுபவம் என இருக்கும் எல்லாத்தலைப்புகளின் கீழும் அழகாக பதிவுகள் இடும் நண்பர் ஆயில்யன் இவரது பதிவுகளில் குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி பெரும்பாலும் அனைத்து பதிவுகளும் என்னை அதிகம் கவர்ந்தவை. கலக்கல் ஆயில்யன்!!

***oo$oo***

வளர்ந்து வரும் வலைப்பூ என்றாலும் மிக நேர்த்தியான பதிவுகளுடன் அழகானது தோழி ராமலக்ஷ்மி அவர்களின் முத்துச்சரம். அவரது கதையின் ஜானி ஜானி நோ பாப்பா- வில் அந்த புகைப்படம் மிக அழகு! கிராமத்தில் எங்கள் வீட்டை சுற்றிக்கொண்டே இருக்கும் அந்த பெயரில்லாத ஒரு நாயை (மன்னிக்கனும்.. இந்த இடத்தில் நாய் என்று சொல்ல மனது கஷ்டமாக இருந்தது உண்மைதான்) ஞாபகபடுத்தியது.

***oo$oo***

சமீபகாலமாய் நான் வாசிக்க துவங்கியுள்ள ஒன்று நண்பர் ச்சின்னப்பையன் அவர்களின் வலைப்பூ. நன்று.

***oo$oo***

இன்னும் நிறைய வலைப்பூக்களைப்பற்றிய விமர்சனங்களும் சுட்டிகளும் நேரமின்மையால் இட முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.
மேலும் வாசிக்க...

Friday, June 27, 2008

தோழிக்காக ஒரு கவிதை



நிலவு தாழ்வாயிருந்த அப்பூங்காவில்
குழந்தையின் கண்கள் ஏந்தி
நீ நட்சத்திரங்கள் பொறுக்கச்சென்றாய்

பூக்களுடன் கதைகள் கதைத்தபடியே
நட்சத்திரங்கள் சிதறிவிழும் கைக்கூடையுடன்
நீ திரும்பும் தருணம்தான் அது நிகழ்ந்தது

தூரமாய் தலைவிரித்தாடிக்கொண்டிருந்த
சில தீ நாக்குகள் கக்கிய வெம்மையில்
பிரசவித்த சில பாம்புக்குட்டிகள்
உன் கால்களை சுற்றின

ஆவென அலறி நீ நிலைகுலைந்த தருணம்
தாங்கிப்பிடிக்க எத்தனிப்பின்றி
முகம் திருப்பிக்கொண்டனர்
அங்கு சுயம் விற்றுக்கொண்டிருந்த சிலர்

வழியோரத்தின் சகபயணியாய்
நலம்கேட்டு நட்புக்கரம் நீட்டினேன்
என் தோட்டத்து பூக்களுக்காய்
வர்ணம் சேகரித்துக்கொண்டிருந்த நான்.

உன் சிணுங்கல்களின் சாபத்தில்
பாம்புகள் அனைத்தும் சாம்பலாகிப்போக
உன்மேல் பூக்களாய் கொட்டின
நீ பொறுக்கிய விண்மீன்கள்

உதடுகளின் புன்னகையுடனும்
கண்களின் குவிந்த கள்ளமற்ற நட்புடனும்
மீண்டும் முட்டியிட்டு
நட்சத்திரம் பொறுக்குகினோம் இருவரும்!

-----------------------------

நிலவு : ஆதித்யன் அவர்களின் தேனிலவு பற்றியதொரு பதிவு
அப்பூங்காவில் : என்.சுரேஷ் அவர்களின் ஒரு கவிதை பதிவு
பிரசவித்த : தமிழ்சங்கமி அவ்ர்களின் ஒரு சுகமான வலி
முகம் : ஜெ ஜெ ரீகன் அவர்களின் ஒரு ஜீன்ஸ் கவிதை
சுயம் : என் சுரேஷ் அவர்களின் ஒரு சுயக்கவிதை
நட்புக்கரம் : நிஜமா நல்லவன் அவர்களின் ஒரு நட்புபதிவு
நட்சத்திரம் : தயாளன் அவர்களின் ஒரு நட்சத்திர பதிவு
மேலும் வாசிக்க...

Wednesday, June 25, 2008

சில வலைப்பூக்களின் வாசங்கள்..



என் முதல் கவிதைகளை தமிழில் தட்டச்சு செய்ய இணையத்தில் தட்டச்சுசெயலி தேடும்போது தான், இணையத்தில் சிதறிக்கிடக்கும், அல்ல அல்ல, குவிந்து கிடக்கும் தமிழ் வலைப்பூக்கள், குழுமங்கள் பற்றி அறிந்தேன். அப்படியொரு குழுமத்தில் முதலாய் இணைந்தேன், வலைப்பூக்கள் வாசித்தேன். அதிசயித்து போனேன் இணையத்தில் இவ்வளவு தமிழா என. தமிழின் காலத்திற்கேற்ற, நவீனத்திற்கேற்ற வளர்ச்சியில் மிகவும் மகிழ்ந்தேன்.

அவ்வாறு ஆரம்ப காலத்தில் நான் வாசித்த வலைப்பூக்களுள் மிக முக்கியமான ஒன்று நண்பர் ஹரண் பிரசன்னாவினுடையது. அவரது கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. திருநெல்வேலி பேச்சுவழக்கில் அமைந்த கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. வாசிக்கையில் இணையத்தில் தமிழ் வாசிக்கும் என் ஆர்வத்தை அதிகம் தூண்டின.

அவரது கதைகளின் மூலமே அறிந்து கொண்டேன், அவரும் எனது ஊர்க்காரர்தான் என்று. சொல்லப்போனால் என் பக்கத்து தெருக்காரர்.

----------ooooo000))$((000ooooo-----------

மேலும், அப்பொழுது எனக்கு வாசிக்க கிடைத்த ஒரு கவிதைகள் வலைப்பூ நிலவுநண்பனுடையது

புகைவண்டி பயணமொத்த இந்த வாழ்க்கையில் எதிர்ப்படும் ஒருவரை சிநேகத்துடன் புன்னகைக்கும் விதமாய் அமைந்த இக்கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. உலகின் வாழ்க்கையில் சக மனிதருடனான நட்பு நிறைந்த வாழ்க்கையை அழகாக சொல்லும் வரிகள் இவை.

............
என் பயணத்தின்
இறுதிவரையிலும் அப்படியே
இனிய துணையாக அமைந்துவிட்டால்

அழகாகவே இருக்கக்கூடும்
இரயில் பயணமும் வாழ்க்கையும்!!

----------ooooo000))$((000ooooo-----------

சமீபமாய் என்னை அதிகமாக பாதித்த ஒரு பதிவு நண்பர் அந்தோணிமுத்து அவர்களுடையது. கர்ணனை நண்பனாக பாவித்து அவர் எழுதியுள்ள அந்த பதிவில் வாங்குதலின் வலியை வலியுடன் சொல்லியிருக்கிறார். வாழ்க்கையின் சோதனைகளை முறியடித்து சாதனை படைக்கும் இந்த இளைஞர் மிகவும் பாராட்டுக்குரியவர்.

----------ooooo000))$((000ooooo-----------

காலமாற்றத்தில் இயல்பாய் மாறிப்போகின்ற சாதாரண நிகழ்வையும் அழகாக கவிதை வடிவில் சொல்லியிருக்கும் நண்பர் சேவியர் அவர்களின் குடுகுடுப்பைகாரன்.

----------ooooo000))$((000ooooo-----------

யதார்த்தக் கவிதைகளும் காதல் கவிதைகளும் நிறைந்த நண்பர் தணிகையின் வலைப்பதிவுகளும் நான் தவறாமல் வாசிக்கும் வலைப்பதிவுகள்.

----------ooooo000))$((000ooooo-----------

சதங்கா அவர்களின் ஓவியங்களுக்கான வலைப்பூ மிகவும் பாராட்டத்தக்கது. பென்சில், பேனா, ஆயில் பெயிண்டிங், கணிப்பொறியில் வரைந்த மின்னோவியம் என அனைத்து முறைகளையும் பயன்படுத்தி இவர் வரைந்த ஓவியங்கள் மிக மிக அழகானவை.

நானும் ஓவியம் வரைவதில் என் திறமை என்னவென்று அறிய பெயிண்டிங் சம்பந்தமான எக்கச்சக்க பொருட்களை வாங்கி என்னறையில் குவித்திருக்கிறேன். ஓரிரு முறை முயற்சிகளுக்கு பின்னால் அது அப்படியே இருக்கிறது. எப்பொழுது மீண்டும் ஆரம்பிப்பது என்றுதான் எனக்கு தெரியவில்லை.. :)

----------ooooo000))$((000ooooo-----------

அன்பு ஒரு அதிசயம்!
அது ஒரு அக்ஷய பாத்திரம்!

எடுக்க எடுக்க நிறையும்!
கொடுக்கக் கொடுக்கப் பெருகும்!

என அன்பை பற்றி அழகான சொல்லும் சகோதரி கவிநயா அவர்களும் தன் பதிவுகள் மூலம் என்னை மிகவும் கவர்ந்தவர்.

----------ooooo000))$((000ooooo-----------
மேலும் வாசிக்க...

Monday, June 23, 2008

காதலும் சில கவிதைகளும்



இயற்கை அல்லது இறைவன் என்றதான ஒன்று இந்த உலகை எப்படி செதுக்கியிருக்கிறது என்ற ஆச்சரியத்தில் நான் அடிக்கடி மூழ்கிப்போவேன். உலகின் எந்த ஒரு முகமும் மற்றொன்று போலில்லை. எத்தனை பூக்கள், எத்தனை உயிரினக்கள், மரங்கள், மலைகள் என அனைத்தும் ஒவ்வொரு தனித்துவமாய்...ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.. எத்தகைய அதிசயம்!

இந்த வன்படைப்புகள் மட்டுமின்றி மென் படைப்புகளான மனித மன உணர்வுகள் அதனினும் எத்தகைய வியப்பிற்குரியது!

அன்பென்ற ஒன்றும் அதன் பரிமாணங்களான காதல், தாய்மை, பாசம், விசுவாசம், பக்தி என அனைத்தும் என்னை அதிகமாக சிந்திக்க வைத்திருக்கின்றன.

காதலின் மகிழ்ச்சி மற்றும் வலி, தாய்மையின் நெகிழ்ச்சி, பாசத்தின் அரவணைப்பு மற்றும் பக்தியின் அன்பு நம்பிக்கை என இக்கூறுகள் இல்லாமல் போனால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடிவதில்லை.

இந்த பதிவில் நான் ரசித்த மிக காதல் கவிதைகள் பற்றிய பதிவுகள் சிலவற்றை சொல்ல முயல்கிறேன்.

உலகின் அதிகப்படியான மகிழ்ச்சியை மனதிற்கு தருவதும், அதிகப்படியான துக்கத்தை மனதிற்கு தருவதும் காதல் ஒன்றுதான். காதலின் அனுபவத்தை மிக அழகான வரிகளில் சொல்லும் ரிஷான்

நுனிவிரல் தீண்டி
உடல்முழுதும் பொசுங்கிக் கருகும்
வேதனையை சிரிப்பால் உதறுவீர்களாயின்...
.................

ஆனால், இவரது கவிதைகளில் பெரும்பாலும் தனிமையின் வலியும், இனம்புரியாத சோகமும் மெல்லியதாக இழையோடும்.. இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லையென ஆணித்தரமாக சொல்லுமிவரின் துயரங்களின் காரணமும் புரியாத புதிர்தான்.

எப்பொழுதும் இளமைக்கே உண்டான துடிப்புடனும் சிரிப்புடனும் இருக்கும் நம் பாசக்காரப்பய மீறான் மிகவும் சுவாரஸ்யமானவர். அவரது வலைப்பதிவில் அவர் இயற்கையை ரசிக்கும் அழகும், இயற்கையை காதலிக்கும் முறையும் என்னகு அடிக்கடி தாகூரின் கவிதைகளை ஞாபகப்படுத்தும்.

அவரது இளமைத்துள்ளல் மிகுந்த கவிதைகள் என்னை மிகவும் கவரும்..

I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டு
பெருமூச்சு விடுகிறேன்
காதலை பிரசவித்த சுகத்தில் !
#
இதயத்தில் நீ குடிவந்த பிறகு
நொடிக்கொருமுறை சரிபார்த்துக்கொள்கிறேன்
துடிப்பை. !

என இவை அவ்வலைப்பூவின் பதம்..

வண்ணத்துப்பூச்சிகளாலும் நட்சத்திரங்களாலும் வலைப்பக்கத்தை அழகாக நிரப்பி, அங்கங்கே அழகான குட்டிக்கவிதைகளாலும் அலங்கரித்துள்ளார் தோழி திகழ்மிளிர்

காதல் என்னும் ஒரு
கனி மட்டுமே, எல்லா
காலங்களிலும்
காய்க்கும்.

அவர் பயன்படுத்தியுள்ள புகைப்படங்கள் மிகவும் அருமை.

மனது சிரிக்கும் போதெல்லாம் கொஞ்சமாய் கவிதை வாசிப்பேன். வலிக்கும் போதோ கொஞ்சம் அதிகமாய் வாசிப்பேன். ஆனால் எப்பொழுதும் தோழி பஹிமாஜஹானின் வலைப்பக்கத்தில் நான் குழம்பிய கண்களுடன் வாசித்துக்கொண்டிருப்பேன்.

அதிகாலையில்
தூய அருவியொன்றிலிருந்து
அவளது எளிய குடிசை நோக்கிச்
சுமந்து வந்த தெள்ளிய நீர்க்குடத்தை -நீ
கல்லெறிந்து உடைத்த வேளை
தவத்தில் மூழ்கியிருந்த
அவள் கானகத்து மான்கள்
திகைத்தோடித் திசை மறந்தன................

என இவ்விதமாகவே இவரின் கவிதைகளில் எல்லாம் மெல்லியதொரு சோகம் இழையோடியிருக்கும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், இந்த வரிகளே அவரது கவிப்புலமைக்கு சான்றெனச் சொல்லலாம்.

காமம் இல்லாத காதல் சாத்தியமுண்டா என என்னை சிந்திக்கவைத்தது நண்பர் இலக்குவணின் இந்த கவிதை.

சில மதிப்பீடுகளோடு
உண்மைக்காதலைத்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்

அவர்களுக்கு
தெரியாமல் பார்த்துக்கொள்

எனக்கு
உன் முலை
பிடிக்கும் என்பதை

உனக்கு
என் உடல் வாசம்
பிடிக்கும் என்பதையும்

எந்த காதலிலும் காமம் கலந்திருப்பது உண்மைதான். அதன் அளவுவிகிதம் மாறலாமே ஒழிய, இல்லையென சொல்லுவதற்கில்லை.. காமம் காதலின் அங்கம்தான் என்பது உண்மையென்றாலும் அதை எத்தனை பேர் ஏற்றுகொள்வார்கள்? இதை எதிர்ப்பவர்கள் அதிகம் பேர் இருக்கலாம்.

மீண்டும் அடுத்தபதிவில் சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Sunday, June 22, 2008

நானும் என் வலைப்பூக்களும்

நன்றிகள் சீனா!

அன்பு நண்பர் சீனா அவர்கள் என்னைபற்றியதொரு நல்ல அறிமுகம் ஏற்கனவே தந்து விட்டார். இருந்த போதிலும் என்னை பற்றி மேலும் நீங்கள் அறிந்துகொள்ள விரும்புவீர்களாயின் இதோ என் அறிமுகம்

நான் ஒரு ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கூட நான் கவிதைகள், கதைகள் எழுதுவேன் என்று நினைத்தும் கூடப் பார்த்ததில்லை.

திடீரென என் தோழி ஒருவரின் திருமணநாளுக்காய் பரிசு வாங்கிவைக்க மறந்த சூழ்நிலையில் தான் அவசரமாய் ஒரு கவிதை எழுத தீர்மானித்தேன். அது தான் என் இரண்டாவது கவிதை. அப்படின்னா, முதல் கவிதை என்னவென்று கேட்கிறீர்களா?

அது நான் ஆறாம்வகுப்பில் படிக்கும் பொழுது எனது வகுப்பாசிரியர் மாணவர்கள் அனைவரையும் ஒரு கவிதை எழுதிவரச்சொன்னபோது நான் எழுதியது. அந்தக்கவிதை,

'நெற்கதிர்
ஏன் தலைசாய்ந்து நிற்கிறது,
அறுவடைக்கு செல்லும்
வெட்கமோ?'

அது நல்லாயிருக்குன்னு எனது ஆசிரியர் ஒரு வாரபத்திரிக்கைக்கு அனுப்பி அது பிரசுரமும் ஆனது. அதன்பின்பு இரண்டாவது கவிதைக்கு பதினைந்து வருடங்களாகி விட்டன.

ஆரம்பம் முதலே எனக்கு சித்தர் பாடல்களில் ஆர்வம் அதிகம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்த அந்த சீர்திருத்தவாதிகளின் கருத்துக்கள் என்னை எப்பொழுதுமே கவர்ந்தவை. அதன் சாரத்தில் ஆரம்பத்தில் கவிதைகள் எழுத முயன்றேன். அதில் ஒரு கவிதைதான் நான் ஆரம்பத்தில் எழுதிய ஞானம்.

என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமான கண்ணனை நினைத்து ராதையின் மனநிலையில் எழுதியது கடவுளர் காதல்.
ஐயப்ப அந்தாதியும், தாய்மடியும் என் நண்பர்கள் அதிகம் பாராட்டிய கவிதைகள்!

சமீக காலமாய் என் சகோதரர் மற்றும் நண்பர்களின் ஊக்கத்தால் சிறுகதைகளும் எழுத ஆரம்பித்துள்ளேன்.

மேலும் என் அலுவலக நண்பர்கள் அனைவரிடமும் என் தமிழ்கவிதைகளை மொழிபெயர்த்து சொல்லிசொல்லி சோர்ந்து போய், இறுதியில் ஆங்கிலத்திலும் எழுதவே ஆரம்பித்து விட்டேன். அதற்கான வலைப்பூவும் உண்டு.

என் சுயபுராணத்தை கொஞ்சம் அதிகமாகவே நீட்டி முழக்கிட்டேன்னு நினைக்கிறேன். இந்த வலைச்சரத்து மக்கள் என் வலைப்பூக்களின் பக்கம் அதிகம் வந்ததில்லை என்பதால் என்னைபற்றியும் என் வலைப்பூக்கள் பற்றியும் ஒரு தெளிவான அறிமுகம் தரலாம் என் நினைத்தேன்.

அடுத்த பதிவு முதல் என்னை கவர்ந்த பல வலைப்பூக்களை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.

மேலும் நானும் இந்த வலைச்சரம் குறித்து மிக சமீக காலமகத்தான் அறிந்தேன். எனக்கும் ஆசிரிய வாய்ப்பளித்த நண்பர் சீனா அவர்களுக்கும் வலைச்சர நண்பர்களுக்கும் மிக்க நன்றிகளுடன் அன்பான நண்பர்களுடன் கைகோர்த்தே பயணிக்கும் உங்கள் கோகுலன்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது