07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பிரபாகர்.... Show all posts
Showing posts with label பிரபாகர்.... Show all posts

Sunday, January 31, 2010

வலைச்சரத்தில் இறுதிநாள் : நன்றியும் வணக்கமும்.

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

சுவாமி விவேகானந்தர்:

நிறைய இடுகையாளர்களை குறிப்பிடவேண்டும் என எண்ணியிருந்தாலும், அதற்கெல்லாம் நமக்கு தகுதி இருக்கிறதா எனும் கேள்வி ஒருபுறம், அறிமுகப்படுத்தாதவர்களை, புதியவர்களை நிறைய சொல்லவேண்டும் எனும் எண்ணம் மறுபுறம் என இருந்ததால் நிறைய பேரை சொல்ல இயலவில்லை.

அடுத்து வானம்பாடிகள் அய்யா குறிப்பிட்ட நூற்றுக் கணக்கானோரை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தினால் கொஞ்சமல்ல நிறைய கூடுதல் சுமையாகவே இருந்தது. இருப்பினும் எனது முந்தைய இடுகையான எனக்கு பிடித்த இடுகையாளர்களை படித்தீர்களானால் மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு பிடித்தவர்களைப் பட்டியலிட்டிருந்தேன்.

இன்று வலைச்சரத்தின் வாயிலாக இன்னும் பலரை சொல்லவும், நிறைய இடுகையாளர்களை புதிதாய் படிக்கவும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. எழுதிய இந்த ஒரு வாரத்தினை எனது வாழ்வின் சந்தோஷ தருணங்களாய் எண்ணி இயன்ற அளவு அனுபவித்து எழுதி வந்திருக்கிறேன்.

இந்த இடத்தில் என்னை வலைப்பூவை ஆரம்பிக்க ஊக்குவித்து எனது நண்பராக, முன்னோடியாக இருக்கும் லக்கி எனும் என் குருஜி கிருஷ்ணாவுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆரூரன், கேபிள் அண்ணா, பட்டர்ஃப்ளை சூர்யா, தண்டோரா, நர்சிம், அப்துல்லா அண்ணன், ஆதி, சகா கார்க்கி, நண்பர் ஜோதிஜி, இளவல் பாலாசிகோவி அண்ணாஞானசேகரன் அண்ணா, தம்பிகள் நாஞ்சில் பிரதாப், புலிகேசி, ஜெட்லி அன் கோரோஸ்விக் மற்றும் அறிமுகப்படுத்தியுள்ள எல்லா நண்பர்கள், மற்றும் எழுத மறந்த எல்லோருக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

பெண்பதிவர்கள் இன்று வலையுலகில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். நிறைய பேரை படித்து வருகிறேன், அவர்களின் எழுத்துக்களின் வாசகனாயும் இருக்கிறேன். துளசி கோபால்,சின்ன அம்மணி, நிலாமதி, மாதேவி, ஜெஸ்வந்தி, Mrs.Menagasathia,கண்ணகி, அன்புடன் அருணா என இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த வலைச்சரத்தின் வாயிலாய் எனக்கு பல புதிய உறவுகளை கிடைக்கப் பெற்றிருக்கிறேன். அதற்கெல்லாம் முக்கிய காரணமாய் இருக்கும், நம்பி எழுத ஊக்குவித்த சீனா அய்யா மற்றும் வலைச்சர குழுவினருக்கும், வலைச்சரத்தில் பங் கேற்ற, பங்கேற்கப்போகும் அனைத்து வலையுலக அன்பர்களுக்கும், என்னைக் குட்டி தவறுகளை சரிசெய்து என்னை செம்மைப்படுத்தும் என் ஆசான் வானம்பாடிகள் அய்யாவிற்கும், உரிமையாய் என்னை தோள்கொடுத்து தாங்கும் அன்பு கதிருக்கும், ’சேம் ப்ளட்’ என ஊக்குவிக்கும் அன்பு நண்பர் சங்கருக்கும், ஏனைய வலையுலக நண்பர்களுக்கும், பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்திய அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றியினை காணிக்கையாக்கி, பணித்த கண்களுடன் விடைபெறுகிறேன். மற்றுமொரு தருணத்தில் சந்திப்போம், நன்றி, வணக்கம், வாழ்க்கை வாழ்வதற்கே...
மேலும் வாசிக்க...

Saturday, January 30, 2010

வலைச்சரத்தின் ஆறாம் நாள் : கதம்பம்..

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை. 

-விட்மன்

வலைச்சரத்தில் இன்று ஆறாம் நாள், விடைபெறுவதற்கு முந்தைய நாள். அதேபோல் நேற்று கலகலவென காமெடி வலைப்பூக்களைப் பார்த்த நாம் இன்று இலக்கியம், தொழில்நுட்பம், சமையல் குறிப்புகள், நினைவோடைகள், நடப்பு நிகழ்வுகள் என கதம்பமாக பார்க்கலாமே?

அறிவியல் சார்ந்த பதிவுகளை எழுதுவதற்கு தனியான திறமை வேண்டும். சாதாரணமாய் ஒரு விஷயத்தை சொல்லிவிட முடியாது. அதனைப்பற்றி ஆழ்ந்த அறிவு, அதனை படிக்கும் சாதாரண நபருக்கும் புரியும்படியான விளக்கம் என நிறைய விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழ்நுட்பம் எனும் வலைப்பூவில் நமக்கு தேவையான தகவல்கள் யாவும் நிறைய கொட்டிக்கிடக்கிறது, உபயோகப்படுத்துவது எப்படி என்ற எளிய விளக்கங்களுடன். பயர்பாக்ஸ் கூகிள் குரோம் உபயோகித்தாலும் இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரை எப்படி அதனுள்ளே உபயோகிப்பது என்பதற்கு இந்த இடுகையை பாருங்களேன்...

ஜெய் எனும் பெயர் கொண்ட தம்பி தனது ஸ்ரீ.கிருஷ்ணா வலைத்தலத்தில் நிறைய தொழில்நுட்பத்தகவல்களை தந்த வண்ணம் இருக்கிறார். கிரிக்கெட்டிலும் அலாதி பிரியம் என்பதால் எந்த ஒரு மேட்சுக்கும் இணையத்தில் நேரடியாய் பார்க்கும் வலை முகவரியை கொடுத்துக் கொண்டிருப்பார். இவரின் இடுகையில் இவர் தந்திருந்த கணிணியை புதிதாக வாங்கிய போது இருந்த வேகத்தில் இயங்கவைப்பது எப்படி? யை படித்து அதனை உபயோகித்து அசந்து போனேன்.

இவர் குறிப்பிட்ட அந்த Free Registry Cleaner எவ்வளவு உபயோகமாய் இருக்கிறது தெரியுமா? இதன் மூலம் தேவையில்லாத ரெஜிஸ்ட்ரிகளை அழித்துவிடலாம்; கணனியின் நினைவகத்தை சுத்தப்படுத்திவிடலாம், Startup Manager, Uninstall Manager, Process Manager, Video Converter என எல்லாம் இதில். இதையெல்லாம் அவரது இடுகையில் குறிப்பிட்டிருந்தால் இன்னும் அருமையாய் இருந்திருக்கும். இறுதியாண்டு, நேரமின்மையால் விட்டிருக்கிறார்.

ஏற்கனவே சொன்னதுபோல் தமிழின் பால் ஆர்வந்தானே தவிர அவ்வளவாய் இலக்கணத் தமிழறிவு கிடையாது. இதனை நிவர்த்தி செய்ய நிறைய தமிழ்சார்ந்த விடயங்களை படித்து நிவர்த்தி செய்துகொள்வதோடு சரி. முனைவர் குணசீலன் அய்யாவில் ஆரம்பித்து இன்னும் பலரை தொடர்கிறேன். இவரைப்பற்றி வானம்பாடிகள் அய்யா ஏற்கனவே சொல்லிவிட்டதால் மற்றும் சிலரைப்பற்றி பார்ப்போம்.

முனைவர் அய்யா நா. இளங்கோ அவர்களின் காதலியின் பேச்சு போல் ஹைக்கூ எனும் இந்த இடுகையைப் பாருங்கள், என்ன அழகான ஒரு விளக்கம். படித்து எழுதினால் நம் எழுதும் ஹைக்கூ இன்னும் சிறப்புறும்.

முனைவர் கல்பனாசேக்கிழார் அவர்களின் இடுகையை பார்க்க நேர்கையில் கலித்தொகை - பதிப்புகள் எனும் இடுகை என்னை வெகுவாக கவர்ந்தது. கலித்தொகை எவ்வாறெல்லாம் பதிப்புகளை கண்டது என்பதை தெளிவாய் விளக்கியிருக்கிறார். படித்துப்பாருங்களேன்... (துளசி மேடம், வரலாற்றைப்பற்றி எழுதுபவர்களைப் பற்றி தேர்ந்தெடுத்து எழுத பணிச்சுமையால் இயலவில்லை, இதனை வரலாற்றோடு சம்மந்தப் படுத்திக்கொண்டு என்னை மன்னிக்க)

சமையல் குறிப்புக்களை கீதா ஆச்சல் அவர்கள் என் சமயல் அறையில் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார். முன்னதாக செய்யப்போகும் பதார்த்தத்தில் என்னென சத்துக்கள் இருக்கின்றன, அது நமது உடல் நலத்துக்கு எவ்வாறு உகந்தது என்றெல்லாம் எழுதி அருமையாக விளக்குவார். சமையலில் ஆர்வமுள்ள என்போன்றோருக்கு இவ் வலைப்பூ ஒரு அருமையான வழிகாட்டி. உதாரணத்திற்கு இவர் எழுதிய புடலங்காய் புட்டு பற்றிய ஒரு இடுகையைப் பாருங்களேன்....

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காய்கறியை பிடிக்கும், அதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். சொர்ணம் அவர்கள் தன் என் மன வானில் எனும் வலைப்பூவில் அப்பாவுக்கு பிடித்த பாகற்காயும்... நார்த்தங்காயும் !!! என ஒரு இடுகையை எழுதியிருக்கிறார். படித்துப்பாருங்கள், பாகலும் இனிக்கும்.

கிராமங்களில் இருப்பவர்கள் கண்டிப்பாய் சுமைதாங்கிகளையும் சில வருடங்களுக்கு முன் பெரும்பாலான வீடுகளில் இருந்த திண்ணைகளையும் மறக்க இயலுமா? மீன் துள்ளியான், இவரது சுமை தாங்கி கற்களும் திண்ணைகளும் எனும் இடுகையை படித்துப்பாருங்கள், தெரிந்த விஷயம்தான், அழகாய் பதித்திருக்கிறார். இவரின் எல்லா இடுகையிலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது, படித்துப்பாருங்கள்.

விதூஷ் என்னும் வலைப்பூவில் வித்யா என்பவர் பெண்ணே நீயும் பெண்ணா என ஒரு தொடர் இடுகையினை நண்பர் பலா பட்டறை சங்கர் படிக்கச் சொல்ல, சென்று படித்து வியந்தேன்... பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவற்றை எப்படி சமாளிப்பது என மிகத் தெளிவாய் சொல்லியிருக்கிறார். நிறைய விஷய ஞானம் உள்ளவர், அருமையாய் எழுதி வருகிறார், படித்துப் பாருங்களேன்....

அய்யா இட்ட பணியினை மன நிறைவுடன் உங்களின் ஆதரவோடு ஆறு நாட்களுக்கு முடித்திருக்கிறேன். இறுதி நாளான நாளை சந்திப்போமா?
மேலும் வாசிக்க...

Friday, January 29, 2010

வலைச்சரத்தின் ஐந்தாம் நாள் : நகைச்சுவை

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல

-வின்ஸ்ட்டன் சர்ச்சில்

வாரத்துல அஞ்சி நாள உங்க ஆதரவில ஓட்டியாச்சு. எழுதுற நடையில ஒரே மாதிரி பண்ணினா போரடிக்குமில்ல! இன்னிக்கு நடய மாத்தி கொஞ்சம் காமெடிய பத்தி பாப்போமா?

சிறுகதைன்னா அதுல ஒரு விஷயம் சொல்லப் போறோங்கறதுல தெளிவா இருப்போம், பெரும்பாலானவங்க ஏத்துக்கிற மாதிரி இருக்கும்.

ஆனா, காமெடி எழுதறது அவ்வளவு ஒன்னும் சாதாரண விஷயமில்லைங்கோ... ரொம்ப கஷ்டம். நாம சரியான காமெடின்னு நினைச்சிக்கிட்டு ரொம்ப ரசிச்சி உசிர கொடுத்து எழுதுவோம், ஆனா படிச்சிட்டு நல்லா இருக்கிற மொகத்த இன்னும் சோகமா வெச்சிகிட்டு ஆமா என்னா சொல்ல வர்றேம்பாங்க. அதுக்கெல்லாம் அசந்துடுவோமா நாம? முயற்சி பண்ணி நிறையா எழுதுவோம்ல...

சில பேருக்கிட்ட ஒரு காமெடின்னு சொன்னதுமே பயங்கரமா சிரிச்சி வெறுப்பேத்தி, ஆமா இப்ப சொல்லுன்னு நம்மளயே காமெடி பீஸ் ஆக்கிடுவாங்க.

நம்மள பொறுத்தவரைக்கும் காமெடிங்கறது மத்தவங்கள புண்படுத்தாம, படிக்கிறவங்க நராசமா உணராம, ரசிச்சி சிரிக்கிற மாதிரி இருக்கனும், அம்புடுத்தேன்.

அதுக்குன்னு இடுகை மொத்தமா எல்லாரும் சிரிக்கனும்னு மூச்சக் கட்டி எழுதத் தேவையில்ல. சொல்ல வர விஷயத்த நாசூக்கா காமெடி தூவி கொடுத்தோம்னா அதுவே பெரிய சக்சஸா ஆயிடும்.

அப்படி நாம கஷ்டப்பட்டு தேடிப்புடிச்சதில கிடைச்ச சில காமெடி பீஸ கீழ குடித்திருக்கேன், படிச்சிட்டு சிரிப்பு வரலன்னா, என்ன கன்னா பின்னன்னு திட்டிட்டு கடைசியா கொஞ்சம் சிரிச்சிடுங்க... சரியா?

 உக்காந்து யோசிப்போமில்லே... அட இடுகை எழுதறதுக்காக செய்யறதப் பத்தி இல்லங்க, ஒரு வலைப்பூவோட பேரே அதுதான். அங்கதான் நமக்கு இந்த சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.01 சிக்கினாரு. படிச்சிப்பாருங்க, சிரிப்புக்கு நான் உத்திரவாதம். சேட்டைக்காரன் நாலு பாகம் வரைக்கும் எழுதிட்டாரு. உங்களுக்கும் பிடிச்சிருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க.

பட்டாபட்டின்னு ஒருத்தரு ப.மு,கழகம்னு ஆரம்பிச்சி ரவுசு வுட்டுட்டிருக்காரு. அவரோட இடுகை கணிதம் பழகலாம் வாங்க படிச்சிட்டு எனக்கு கணக்கே மறந்துடிச்சின்னா பாருங்களேன். அவிங்க கட்சி ஆபீஸ் போட்டோ பாத்துட்டு ஒரே சிரிப்புத்தான் போங்க. கீழ ஒருத்தர் செய்யறத பாத்து இன்னும்...

உங்களுக்கு கவிதை எழுதனும்னு ஆசையா? கவலையே உடுங்க, டக்ளசாயிருந்து இப்ப ராஜுவா இருக்கிற தம்பி எழுதின 30 நாட்களில் கவிதை எழுதுவது எப்படி..?. படிச்சி பாருங்க, உடனே பேனாவ எடுத்து எதாச்சும் எழுத ஆரம்பிச்சிடுவீங்க.

பார்த்ததும் படித்ததும்-ல நம்ம சங்கரு அமி கொல்கொத்தா ஜாக்ச்சி னு கல்கத்தா போன கதைய எழுதிருப்பாரு பாருங்க, ரொம்ப ஆர்வமா படிச்சி.... வேணாம், நீங்களே படிச்சிப்பாருங்க...

டுபுக்குன்னு ஒரு வலைப்ப்பூவ பாக்குறப்போ வயலின்னு ஒரு இடுகை. வயலின் கத்துக்கறதப்பத்தி எப்புடி சொல்லியிருக்காப்ல.... படிச்சி டரியலாயிட்டேன், காமடிய லேசா தூவி கலக்கியிருக்காப்ல... நீங்களும் படிச்சி பாருங்க....

சாமின் வலையுலகம்....னு ஒரு ஒரு வலைப்பூ கண்ணுல மாட்ட சும்மா லுக்கு உட்டா உள்ள ஒரு சூப்பர் இடுகை சிக்குச்சி. குருவி படத்தில் Mr.Bean னு தலைவரு சும்மா கலக்கலா ஒரு யூ டியூப் விடியோவ போட்டிருந்தாரு. பாத்துட்டு டரியலாயிட்டேன். நீங்களும் பாருங்க, ஆபீஸ்ல வேணாம், சவுண்டோட வீட்ல பாருங்க.

அகசியம்ங்ற வலைப்பூவ நேத்துத்தான் பாத்தேன், அதுல எழுதற வரோதயன் கனகநாயகம் கற்பித்த ஆசிரியருக்கு கல்லால் எறி! ன்னு ஒரு இடுகை. சும்மா கூலா கலக்கியிருக்காரு. ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்க, செம கூலாகலாம் வாங்க...ன்னு கூப்பிடறாரு.

சிரிச்சது போதுங்களா? நாளைக்கு கொஞ்சம் சீரியஸா பார்க்கலாம். இப்போ நான் ஜூட்!
மேலும் வாசிக்க...

Thursday, January 28, 2010

வலைச்சரத்தின் நான்காம் நாள் : சிறுகதைகள்...

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும்இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.

(மு.வ.)

வலைச்சரத்தில் இன்று நான்காம் நாள். எழுதுவதில் மிகவும் சவாலானது சிறுகதை எழுவதுதான் என்பது எனது பணிவான எண்ணம். முதல் பத்தியிலேயே படிப்பவர்களை கவர வேண்டும். இறுதிவரை அவரை நம்மோடு வைத்திருந்து படித்து முடித்தவுடன் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

தொடர்ந்து எழுதிவரும் எந்த ஒரு இடுகையாளரும் கண்டிப்பாய் ஒரு சிறுகதையாய் எழுதியிருப்பார். சிறுகதைகளில் நன்றாய் பரிமளிப்பவர்கள் தான் பின்னாளில் மிகச்சிறந்த எழுத்தாளராய் ஆக இயலும். அவ்வாறு சிறுகதைகளை எழுதும் பதிவர்களின் எனக்கு பிடித்தவைகள் இன்று.

முதலாவதாய் கு.ஜ.மு.க. என வலைப்பூவிலேயே ஒரு கட்சியை வைத்திருக்கும் இவரின் அழகான ஒரு சிறுகதையான முருங்கை மரமும் பசுமாடும் நொண்டியும் படித்துப்பாருங்கள். என்ன அழகாய் ஒரு முருங்கை மரத்தை பின்னணியாய் வைத்து எழுதியிருக்கிறார். குடுகுடுப்பை, இது போன்ற சிறுகதைகளை நிறைய தாருங்கள்.

தீராத பக்கங்கள் மூலம் எழுதிவரும் மாதவராஜின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவரின் “ம்மா.... ம்மா” எனும் இச் சிறுகதையினைப் படித்தோமென்றால் அப்படியே மனதை இறுக்கி இதுதான் உலகம் எனும் ஒரு வேதனையை வெளிப்படுத்தச் செய்யும். மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இதுதானே உண்மை?

விசா பக்கங்களின் சிறுகதைகளை தொடர்ந்து ரசித்து வருகிறேன். நான் படித்து ரசித்த இந்த உதடுகள் சுடும் !!!! எனும் திருப்பங்களுடன் கூடிய ஒரு சிறுகதையினை படித்துப்பாருங்கள். கொஞ்சம் நீளமாய் இருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

குழந்தைகளின் தொந்தரவுகள் இனிமையான அவஸ்தைதான். ஆயிரம்தான் அவர்கள் நம்மை படுத்தினாலும் அவர்கள் இல்லாமல்.... நினைத்துப் பார்க்கவே மனம் கஷ்டப்படுகிறது. இது மாதிரியான ஒரு நிகழ்வை மிகச் சாதாரணமாய் எப்படி சொல்லியிருக்கிறார் இரவி சுகா தனது நான்...நானாக வலைப்பூவில், தொல்லை - ஒரு நிமிட சிறுகதை யில்.

ஒரு சிறுகதையினை படித்து முடிவில் பெரிய திருப்பம் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. இடையிலேயே நமக்கு முடிவு தெரிந்தாலும் சுகம் தான். கோமதி அரசு அவர்கள் தனது வலைப்பூவான திருமதி பக்கங்களில் எழுதிய இந்த திருப்பம் எனும் சிறுகதையினை படித்துப் பாருங்கள், குழப்பமில்லாமல் தெளிவாய் நடக்கும் ஒரு சாதாரண விஷயத்தை அழகாய் சொல்லியிருக்கிறார்.

ஒவ்வொரு பாத்திரமாய் உருவெடுத்து போர்ட்ரெய்ட் கதைகள் என தனது என்னுள்ளே எனும் வலைப்பூவில் எழுதும் ஷங்கியின் இடுகைகள் கொஞ்சம் புதுமையாகவும் வித்தியாசமாயும் இருக்கும். இவரின் சமீபத்திய ஒன்றான உத்தமன் - போர்ட்ரெய்ட் படித்துப் பாருங்களேன், ஏன் சொல்கிறேன் எனபுரியும்...

கிராமச்சாவடி மூலம் அழகாய் அப்பா சைக்கிள் எனும் இடுகையில் கா.பழனியப்பன் எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்! அருமையான நடை, இன்னும் நிறைய இவர் எழுத வேண்டும். கவனிக்கத்தக்க ஒருவர்.

சைவகொத்துப்பரோட்டா எனும் வலைப்பூவில் கலக்கி வரும் அன்பரின் இடுகையில் இந்த முதல் கொலை எனும் இந்த சிறுகதையை படிக்க நேர்ந்தது. கொலை செய்வதைப்பற்றித்தான், எப்படி எழுதியிருக்கிறார் என பாருங்கள். படித்து தொடரப்பட வேண்டியவர்.

"ஆரண்யநிவாஸ்" ஆர் ராமமூர்த்தி, இதுதான் வலைப்பூவின் பெயர். இதில் கருப்புநிறத்தில் ஒரு பலூன் எனும் ஒரு சிறுகதையை படிக்க நேர்ந்தது. மனிதநேயத்துடன் மிக அழகாய் இருந்தது. நீங்களும் படித்துப் பாருங்களேன்! கவனிக்கப்பட வேண்டிய ஒருவர்.

நான்கு நாட்கள் வெகு விரைவாய் கடந்து விட்டது. ஐந்தாம் நாளான நாளை இன்னுமொரு வித்தியாசமான வலைப்பூ அணிவகுப்பில் ஒரு வித்தியாசமான தொகுப்பில் சந்திப்போமா?
மேலும் வாசிக்க...

Wednesday, January 27, 2010

வலைச்சரத்தின் மூன்றாம் நாள் - கவிதைகள்.

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம். 

-மகாத்மா காந்தி

அனைவருக்கும் எனது வணக்கம். இரு நாட்களை கடந்து இன்று இந்த இனிமையான மூன்றாவது நாளிற்கு வந்திருக்கிறோம்.

எனக்கு தமிழின் மேல் தணியாத ஆர்வம், கவிதைகள் என்றால் ரொம்ப பிரியம் என சொன்னால் அது முழுதும் உண்மையல்ல. இலக்கணத்தில் அவ்வளவாய் புரிதல் இல்லை. நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா என இதைத்தாண்டி தெரியாது. இருப்பினும் நல்ல விசயங்களை தாங்கி வரும் எந்த ஒரு கவிதையையும் ரசிக்கத் தவறுவதில்லை...

வானம்பாடிகள் அய்யாவின் கவிதைகளின் வர்ணனைகளும்,  கதிரின் கவிதைகளின் வார்த்தை ஜாலங்களும், கலகலப்ரியாவின் கவிதைகளின் பொருள் பொதிந்த தாக்கங்களும், பா.ரா. வின் எதார்த்தம் நிறைந்த அழகிய வார்த்தைகளிலான எளிய கவிதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்களெல்லாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால் புதிதாய் சிலரை இதோ வரிசையாய் பார்க்கலாம். இவர்களில் சிலர் கவிதைகள் மட்டுமே எழுதி வருபவர்கள், சிலர் கவிதையும் அவ்வப்போது எழுதுபவர்கள்.

பனித்துளியாய் எனும் ஒரு வலைப்பூவில் மோகன் ராஜேந்திரனின் ஒரு காலையில் நீ இல்லை எனும் இக்கவிதையைப் பாருங்கள். அழகாயும் யதார்த்தமாயும் நன்றாக இருக்கிறது.


நேசமித்திரன் கவிதைகள் எனும் வலைப்பூவை சமீப காலமாக தொடர்ந்து வருகிறேன். கவிதைப்பிரியர்களுக்கு இது ஒரு அருமையான இடம். எல்லாம் புரிவதற்கு திரும்ப திரும்ப படித்து தெளிகிறேன் (நம் தமிழறிவு அவ்வளவே). அற்புதமான எழுத்து, அழகான கவிதைகள். உதாரணத்திற்கு நேசமித்திரனின் யாருமற்ற கருவறை, இவரது கவிதையின் சிறப்பை சொல்லும்...

நள்ளெண் யாமம் என்னும் வலைப்பூவில் க.சீ. சிவக்குமார் எழுதி வருகிறார். இவரின் குளிர் எனும் கவிதையை படித்துப்பாருங்கள், குளிர்தலாய் உணர்வீர்கள். தொடர்ந்து படிக்கப்படவேண்டியவர்.

பயணங்கள் எனும் வலைப்பூவின் வாயிலாய் எழுதிவரும் மா.குருபரனின் புன்னகை எனும் இக்கவிதையை படித்துப் பார்த்தீர்களென்றால், உங்களின் புன்னகைக்கும் முகம் கூட வாடிப்போகும் படித்த பாதிப்பில்.

தமிழ்க்கவிதைகள் எனும் வலைப்பூவில் எழுதி வரும் உத்தமபுத்ராவின் கவிதைகளை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறார்.  இவரின் ‘எச்சங்கள்’ எனும் இக் கவிதை ஒரு உதாரணத்திற்கு. படித்துத் தொடர ஒரு அருமையான வலைப்பூ... இன்னும் இவர் நிறைய எழுத மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

ராகவனின் வலைப்பூவில் கவிதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதோ அவரின் நம்பிக்கை... எனும் இக் கவிதையை படித்துப் பாருங்கள். எவ்வளவு எளிமையாய் அழகாய் இருக்கிறது!

தொடர்பவன் எனும் வலைப்பூவை எதேச்சையாய் பார்த்து நானும் ஆனேன் தொடர்பவனாய். நண்பர் கவிதைகள் நிறைய எழுதிக்கொண்டிருக்கிறார். இதோ அவரது தொடர்பவனாய் எனும் இக்கவிதையினை பாருங்களேன்.

வானம் வெளித்தபின்னும் எனும் வலைப்பூவில் எழுதிவரும் சகோதரி ஹேமா என்னமாய் கவிதை எழுதுகிறார் தெரியுமா? உதாரணத்திற்கு அவரின் சமீபத்திய இருகையான பெண்ணை படித்துப்பாருங்கள்...

முனியப்பன் பக்கங்களின் வாயிலாக டாக்டர் மிகவும் அருமையாய் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இதோ அவரின் என்னை ஏன் மீண்டும் சந்தித்தாய் ? எனும் இந்த இடுகையை படியுங்கள், கவிதையின் வாயிலாய் நம்ம கலங்க வைத்திருப்பார்.

இவ்வளவு போதும் என நினைக்கிறேன். நாளை சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

Tuesday, January 26, 2010

வலைச்சரத்தின் இரண்டாம் நாள்... சம கால நிகழ்வுகள்...

வாழ்நாளில் ஒரு பிழையையும் செய்ததில்லை என ஒருவர் நினைத்தால், அவர் புதிய முயற்சிகள் எதுவும் செய்தில்லை என்று அர்த்தம்.

-ஐன்ஸ்டின்.

வணக்கம், வலைச்சரத்தில் இன்று இரண்டாம் நாள். நேற்று சுய அறிமுகத்திலேயே முடித்துக்கொண்டதால் இன்று மனம் கவர்ந்த இடுகையாளர்களை பார்த்துவிடலாம்.

சிலருடைய இடுகைகளை படித்தால் நமது உள்ளக்கிடக்கையை அப்படியே அவரில் காண இயலும். சமகால நிகழ்வுகளை அவர்கள் விவரிக்கும் விதத்தில், நமக்கு நிறைய படிப்பினைகளோடு, அப்படியே பின்பற்றுவதற்கும் ஏதுவாய் இருக்கும். அந்த வகையில் எழுதுபவர்களில் முதன்மையானவர் செந்தில்வேலன்... இன்றுவரை இவரது இடுகைகளில் ஒன்றை கூட தவற விட்டதில்லை, ஒவ்வொன்றும் ஒரு முத்தாய் இடுக்கும்.

அயல் நாடுகளின் வசிப்பவர்கள் தனது அப்பா அம்மாவினை பிறவிப் பெருங்கடன் செலுத்துவதாய் அழைத்துச் செல்வதையும், அவர்கள் அங்கு வந்து எப்படி உணர்கிறார்கள் என்பதையும், அழைத்துச் செல்வதற்கு முன் செய்யவேண்டியன என்ன என்பதையும் எவ்வளவு அழகாய் தனது இடுகையான அயல்நாடுகளில் அம்மா அப்பா... வில் எப்படி சொல்லியிருக்கிறார் என பாருங்கள்! 

அடுத்து நாகா. ஒரு ஊர்ல என ஆரம்பித்து நமது தாத்தா பாட்டியிடம் கதை  கேட்டு வளர்ந்து வந்திருக்கிறோம். இவரும் ஒரு ஊரில் எனும் வலைப்பூவில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். மிகவும் அருமையாய் எழுதும் இவர், பணிச்சுமையினால் பகிர்வது கொள்வதை குறைத்திருக்கிறார்.

தனது ஒரு இடுகையான பா(வே)லைத் திணை யில் ஒரு நிகழ்வினை எப்படி சொல்லியிருக்கிறார் என்பதைப் படித்துப்பாருங்களேன். நண்பா, ஒரு வேண்டுகோள், வாரத்திற்கு இரண்டாவது எழுதுங்கள்.

பறவைகள் வானில் பறப்பதை பார்த்திருக்கிறோம், ஆனால் அவை V வடிவில் பறப்பதை பார்த்திருக்கிறீர்களா? அது ஏன் தெரியுமா? இதோ சிறிய பறவை எனும் வலைப்பூவின் மூலம் எழுதிவரும் ஜோதியின் பறவைகள் V வடிவத்தில் பறப்பது ஏன்? எனும் இடுகையை பாருங்கள், தெளிவாய் விளங்கும்...

வானவில் எனும் வலைப்பூவில் யோகேஸ்~பொன்வண்டு எனும் பெயரில் எழுதி வருபவர் உலக வெப்பமயமாதலைப்பற்றி அருமையாய் பசுமை இல்ல வாயுக்கள் - நம் பங்களிப்பு என்ன? என ஒரு இடுகையை தந்திருக்கிறார், படித்துப்பாருங்கள். எத்தனை தகவல்கள், என்ன அருமையான விளக்கங்கள்?

செ.சரவணக்குமார் பக்கங்கள் வலைப்பூவை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அவரின் ‘ஏமாற்றமும் வேதனையும்’ எனும் இடுகையை படித்து அவரது பாதிப்பால் நானும் பாதிப்படைந்தேன். உடன் இருக்கும் சக மனிதர்களுல் இப்படியும் இருப்பார்களோ? எனும் ஒரு பெரும் ஐயத்தை ஏற்படுத்தியது. இது போன்ற ஏமாற்றங்களை பகிரும் போது நமது மனச்சுமை கொஞ்சமாவது குறையுமல்லவா?

மழைமேகம் என்னும் வலைப்பூவில் கலிகாலப் புகையும், கம்பராமாயணத்தில் புகையும்! என்னும் இடுகையில் புகை பற்றி மிக அழகாய் ஒரு சம்பவத்தோடு சொல்லியிருக்கிறார். படித்துப்பாருங்களேன், நடப்பு நிகழ்வோடு புராணத்தை தொடர்புபடுத்துதல் அழகுதானே?

காந்திய கிராமங்களில் அந்தமானிலிருந்து எழுதிவரும் க.நா.சாந்தி லெட்சுமணன்அவர்களின் வீட்டு மனைகளாகும் விளைநிலங்கள் என்னும் இந்த இடுகையைப் பாருங்கள், நமது எண்ணத்தை பிரதிபலிப்பதாய் இருக்கும். செட்டி நாட்டு பலகாரங்கள்செய்து பார்க்க சமையல் குறிப்புகளையும், கவிதைகளையும் எழுதி வருகிறார். படித்து பின்தொடர ஒரு அருமையான வலைப்பூ.

அன்பு நண்பர் சங்கவியை  ஏற்கனவே வலைச்சரத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவரது வலைப்பூவான உங்களில் ஒருவனில் நேற்று இட்டிருக்கும் நோயின்றி வாழ நடைப்பயிற்சி இடுகையைப் படித்துப் பாருங்களேன், கண்டிப்பாய் நடக்க ஆரம்பித்துவிடுவீர்கள், அல்லது தோன்றும். மிக அருமையான எழுத்து, கவனிக்கப்பட வேண்டியவர்.

சொல்லத்துடிக்குது மனசு எனும் வலைப்பூவில் நேற்று வந்திருக்கும் இடுகையில்மொபைல் போன் பேச்சு - போது இடங்களில் தவிர்க்க வேண்டியவை என்பது பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என படித்துப் பாருங்களேன், பயனுள்ளதாய் இருக்கிறது. படித்துத் தொடர ஒரு நல்ல வலைப்பூ...

இவையெல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என எண்ணுகிறேன். உங்களின் கருத்துக்களால் என்னை செம்மைப்படுத்துங்கள்.


இன்றைக்கு இது போதும், நாளை இன்னும் பல புதியவர்களோடு சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

Monday, January 25, 2010

வலைச்சரத்தின் ஒரு பூவாய் நானும்...

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

-லியோ டால்ஸ்டாய்

அனைவருக்கும் என் பணிவான வணக்கம். வலைச்சரத்தில் இன்று முதல் ஒருவாரத்துக்கு நானும் ஒரு பூவாய் இணைந்திருக்கிறேன். முதலாய் நிகழும் எந்த ஒரு விஷயமும் நம் நெஞ்சைவிட்டு அகலாமல் பசுமையாய் இறுதிவரை இருந்தினிக்கும். முதல் பயணம், முதல் நட்பு, முதல் காதல், முதல் முத்தம், முதல் சினிமா, முதல் வேலை, முதல் ஆசிரியர்... என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வகையில் இன்று என் ஆசான் வானம்பாடிகள் அய்யாவின் ஆசிகளை மானசீகமாய் பெற்றுக்கொண்டு, சீனா அய்யாவின் அன்புக்கட்டளைக்கு இணங்கி, இதோ இன்று 'முதல்' ஆசிரியராய் ஒரு வாரத்திற்கு என்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொண்டு உங்களோடு எழுத்தாட இருக்கிறேன். உங்களின் அன்பான ஆதரவினையும், என்னை செம்மைப்படுத்தும் கருத்துக்களையும் எதிர்நோக்கி இதோ ஆரம்பிக்கிறேன்.

எனக்கு எழுதுவதை விட படிக்கத்தான் நிறைய பிடிக்கும், மிக எளிதான ஒன்று என்பதால். வாழ்விலேயே எளிதான விஷயங்களை சொல் என எவரேனும் என்னைக்கேட்டால் சட்டென இரண்டை சொல்லுவேன். முதலாவதாய் அறிவுறை சொல்லுவது அடுத்ததாய் விமர்சிப்பது. கடினமான விஷயங்கள் எனக்கேட்டால் அறிவுரை கேட்பது, விமர்சனங்களை தாங்கிக்கொள்வது. எனக்கு இந்த கடினமான இரண்டும் மிகப் பிடிக்கும் என்பதால் தயக்கமின்றி அறுவுறுத்துங்கள், விமர்சியுங்கள்.

எழுத வந்து எட்டு மாதங்களை முடித்திருக்கிறேன், உங்களின் மேலான அன்போடும் ஆதரவோடும். இந்த வலையுலகில் எனக்கு கிடைத்த உறவுகள்தான் இடுகையெழுத வந்ததில் கிடைத்திட்ட பொக்கிஷங்கள் என்பேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே வலைப்பூவில் நினைவுகளின் குறிப்பேடாய் எண்ணத்தை கிளர்ந்து எழுதியும், எண்ணத்தை எழுதுகிறேன் வலைப்பூவில் சம நிகழ்வுகளைப் பற்றியும் எழுதி வருகிறேன். சினிமா விமர்சனங்கள் மற்றும் மற்றவர்களை புண்படுத்தும் எதையும் எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன்.

எனது இடுகைகளில் பிடித்ததாய் சொல்லவேண்டுமென்றால் மூன்று இடுகைகளை சொல்லுவேன். முதலாவதாய் எனது முதல் ஆசிரியருக்கு குரு வணக்கமாய் 'நின்னு போச்சு ரயில் வண்டி' என் முதல் ஆசானை நினைவு கூறுவதாயும், எங்களுக்குள் இருந்த பரஸ்பர அன்பையும் சொல்லுவதாய் இருக்கும்.

அடுத்ததாய் என்னை சுதந்திரமாய் வளர்த்து இன்றும் எனது முதல் நண்பனாய் இருக்கும் எனது தந்தைக்காக எழுதிய அப்பாவுக்கு பிறந்த நாள் இடுகை, எனக்கும் அவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை சொல்வதாய் இருக்கும்.

மூன்றாவதாய் எனக்கு நிகழ்ந்த ஒரு பேயோடு சம்மந்தமான பேயைப்பார்த்த கதை எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவச்சிதறலாயும் இருக்கும், இதில் வரும் கோவிந்து உங்களை நிறைய கவர்வார்.

என்னைக் கவர்ந்தவர்களை வகைப்படுத்தி சொல்ல ஆசைப்படுகிறேன். முடிந்த வரையில் கடந்த மூன்று மாதங்களில் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியவர்களை தவிர்க்க முயல்கிறேன். நிறைய பிடித்த சிலரை குறிப்பிட இதனை மீறவும் வாய்ப்பிருக்கிறது, அதற்காக ஆரம்பத்திலேயே என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வரிசையில் எழுதுபவர்களை குறிப்பிட்டு எழுத எண்ணம்...
  • சமுதாய சிந்தனையோடு எழுதுபவர்கள்
  • நகைச்சுவையாய் எழுதுபவர்கள்
  • கவிதையால் நம்மை களிப்புறச்செய்பவர்கள்
  • சிறுகதைகள் பற்றிய ஒரு தொகுப்பு
  • தகவல் தொழில்நுட்பம், இலக்கியம், சமையல் குறிப்புகள்

மேலும் இந்த எழுதும் வாரத்தில் இதையெல்லாம் செயல்படுத்தவும் எண்ணம்.
  • ஒவ்வொரு நாளும் ஒரு தகவல்.
  • நாளுக்கு குறைந்தது ஐவராய், ஒரு முப்பது பேரை அறிமுகப்படுத்துதல்.
  • ஒவ்வொருவரை அறிமுகப்படுத்தி அவரைப்பற்றி சொல்லி அதே சமயம் அவர்களிடம் எனது எதிர்ப்பார்ப்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் சொல்லல்...
வலைச்சரத்தின் பூவாகி
வாசம் வீசும் ஏழுநாட்கள்
வாழ்நாளின் வசந்தமான
ஒளிநிறை இன்பப்பூக்கள்.

அறிமுகம் போதும், நாளை சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது