சீனியர் பதிவர்கள்
➦➠ by:
மூத்த பதிவர்கள்
இந்தப் பதிவு நேற்றே வெளிவந்திருக்கவேண்டியது. காலத்தின் அருமையைப் போற்றுபவர்களும் செயல்களை தள்ளிப்போடக்கூடாதென்று சொல்பவர்களும் அடிக்கடி சொல்லும் வசனம் "இன்று செய்ய வேண்டிய வேலையை நாளைக்கென்று தள்ளிப்போடாதே" என்பதாகும். ஆனால் நம் வழிதான் தனி வழியாயிற்றே. அதனால் என் கொள்கை என்னவென்றால் நேற்றைய வேலையை இன்று செய்தால் போதும் என்பதாகும். இதில் என்ன சௌகரியம் என்றால் அநேக சந்தர்ப்பங்களில் அடுத்த நாள் அந்த வேலையைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் போகும். எப்படி என் லாஜிக்.
ஆனால் இந்த வலைச்சர ஆசிரியர் வேலை அப்படி மறைந்து போவதாகக் காணோம். அது என் காலைச் சுற்றியே நிற்கிறது. வேறு வழியில்லை. ஆகவே நேற்றைய பதிவை இன்று போடுகிறேன்.
இந்தப் பதிவில் பல சீனியர் பதிவர்களை அறிமுகப்படுத்தப் போகிறேன். இனம் இனத்தோடு கலக்கிறது. அதில் என் இனத்தைச் சேந்தவர்கள் சிலரை முதலில் அறிமுகப்
படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
1.கடுகு அகஸ்தியன்
அவர்கள்.
இவருடைய பிளாக்க்கின் முகப்பு
பிளாக்கின் பெயர் “கடுகு தாளிப்பு” லிங்க்: http://kadugu-agasthian.blogspot.in/+
இவருடைய பிளாக்க்கின் முகப்பு
இவர் தனக்காக தேர்ந்தெடுத்திருக்கும் படம்.
இவரைப் பற்றி கூறவேண்டுமானால் ஒரு பதிவு போறாது. இன்றைய பதிவர்களில்
இவர்தான் மூத்தவர் என்று நம்புகிறேன். இவரது வயது என்னவென்று சரியாகத் தெரியவில்லை.
இவர் மிக இளம் வயதிலேயே சென்னையில் தபால் இலாக்காவில் சேர்ந்து
பிறகு டில்லிக்குப் போய் பணி ஓய்வு பெறும் வரையில் அங்கே இருந்து விட்டுப் பிறகு சென்னையில்
இருக்கிறார்.
நான் 8 வயது முதல் வாரப் பத்திரிக்கைகளான ஆனந்தவிகடன் கல்கி
ஆகியவைகளைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதைய வாரப் பத்திரிக்கைகளில் சிறுகதை, தொடர்கதை,
கட்டுரைகள், செய்தித் துணுக்குகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவை வெளியாகும். சினிமா
செய்திகள் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் இருக்கும்.
அப்போது இருந்த கதாசிரியர்களில் கடுகு அவர்கள் நகைச்சவையாக
எழுதுவதில் தலை சிறந்தவராக இருந்தார். நான் இவர் கதைகளை மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன்.
புத்தக்ப பிரியர். இவரைப்பற்றிய பல தகவல்களை இவரே தன்னுடைய பதிவில் வெளியிட்டிருக்கிறார்.
இவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.
பழைய நினைவுகளை தற்போது தன்னுடைய பதிவில் பகிர்ந்து கொண்டு
வருகிறார். பழமை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும் தளம்.
2.புலவர் ராமானுஜம் அவர்கள்.
இவருடைய பிளாக்கின் பெயர்:
இவர் தமிழாசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஆசிரியராக
பணி புரிந்த காலத்தில் தமிழாசிரியர்களுக்காக தனி சங்கம் அமைத்து அவர்களுக்காக பல சலுகைகளைப்
பெற்றுத் தந்திருக்கிறார். மற்ற பாட ஆசிரியர்களுக்குச் சமமான நிலையை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறார்.
முதல் இரண்டு பதிவர் சந்திப்புகளை திட்டமிட்டு சென்னையில்
வெற்றிகரமாக நடத்தியவர். மதுரை மூன்றாம் சந்திப்பிற்கு உடல் நிலை காரணமாக கலந்து கொள்ள
முடியவில்லை.
இந்த வயதிலும் ஐரோப்பா மற்றும் கிழக்கு நாடுகள் பலவற்றிற்கும்
சுற்றுலா போய் வந்திருக்கிறார். பெரும்பாலும் கருத்தாழம் மிக்க கவிதைப் பதிவுகள் போட்டுக்கொண்டு
இருக்கிறார். இவர்தான் பதிவுலகில் எனக்குத் தெரிந்து இரண்டாவது சீனியர் பதிவர்
3.திரு. தருமி அவர்கள்.
தருமி
கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே!
கம்பீரமாகக் காட்சியளிக்கும் இவர் மதுரைக்காரர். மதுரை அமெரிக்கன்
கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். போட்டோ எடுப்பதில் ஆர்வம்
மிக்கவர்.
கருத்தாழமும் சிந்தனைத் துணிவும் கொண்டவர். பதிவுலகத் தவறுகளை
தைரியமாகச் சாடுபவர். எனக்கு ஒரு இனிய நண்பர்.
இவரின் பதிவுகள் மிகவும் சுவையாக இருக்கும். அதே சமயம் வாழ்க்கைக்கு
பயனுள்ளதாகவும் இருக்கும். புதிய பதிவர்கள் இவருடைய பதிவுகளைக் கட்டாயம் படிக்கவேண்டும்.
4.திரு.ஜி.எம்.பாலசுப்பிரமணியன் அவர்கள்.
அவருடைய பிளாக்கின்
பெயர் :
gmb writes
பிளாக்கின் லிங்க்: http://gmbat1649.blogspot.in/
இவர் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள பதிவர் இவரது பதிவுகள் உங்கள்
சிந்தனையைத் தூண்டும்.
இவர் மத்திய அரசின் பல நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று
தற்சமயம் பெங்களூருவில் வசிக்கிறார். அவர் வீட்டிற்கு நான் ஒரு முறை சென்றிருக்கிறேன்.
தம்பதிகள் இருவரும் விருந்தோம்பலில் இணையற்றவர்கள். பாசத்துடன் பழகக் கூடியவர்கள்.
இவருடைய பதிவுகள் அனைத்துத் தரப்பினரும் வாசிக்கவேண்டியவை.
5.திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.
பதிவின் தலைப்பு : VAI. GOPALAKRISHNAN
லிஙுக்: http://gopu1949.blogspot.in/
இவர் பதிவையும்
இவர் நடத்திய சிறுகதை விமரிசனப்போட்டியைப் பற்றியும் தெரியாதவர்கள் யாரும் இருக்க
மாட்டார்கள். இவருடைய சிறுகதைகள் கலை நயம் மிக்கவை. வாழ்க்கையின் பரிமாணங்களைப்
படம் பிடித்துக் காட்டுபவை. இவரின் கதை எழுதும் திறன் அபூர்வமானது.
பழகுவதற்கு
அன்பான மனிதர். gனக்கு இனிய நண்பர். இவர் பதிவுலகில் ஒரு மைல் கல்லாக
விளங்குகிறார் என்று சொன்னால் மிகையாகாது. இவரின் உழைப்பைக் கண்டு நான்
வியப்படைகிறேன்.
பதிவுலகில்
யாரும் செய்யாத ஒரு போட்டியை உருவாக்கி, தன் சொந்தப் பணத்தை கணிசமாகச் செலவழித்து,
பல பரிசுகள் பல பதிவர்களுக்கு கொடுத்திருப்பது ஒரு இமாலய சாதனை என்றுதான்
சொல்லவேண்டும். சிறுகதைகளை யாரும் ஆழ்ந்து படிப்பதில்லை என்பது ஒரு உலகியல் உண்மை.
ஆனால் சிறுகதைகளை ஆழ்ந்து படிக்கவைக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இந்த
விமரிசனப் போட்டியை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கறார்.
இப்படி
ஒரு போட்டி நடத்தும் அளவிற்கு இவர் அவ்வளவு சிறுகதைகள் எழுதியிருப்பது ஒரு
வியப்பு. அந்தக் கதைகளுக்கு விமர்சனம் எழுத ஒரு போட்டி வைக்கலாம் என்பது இவர்
மனதில் உதித்த ஒரு அபூர்வ எண்ணம். இதை ஒரு ஒழுங்கு முறையாக நடத்தி, அதை பரிசீலனை
செய்ய ஒருவரைக் கண்டுபிடித்து அந்த விமரிசனங்களில் பல பரிசுக்குரியவைகளைத்
தேர்ந்தெடுத்து, பரிசுகளை திட்டமிட்டபடி விநியோகித்த திறமை அவருடைய மேலாண்மைத்
திறனுக்கு ஒரு சாட்சி.
இவரை அறிமுகப்படுத்திப் பாராட்டுவதில் பெருமை கொள்கிறேன்.
6.திரு.சுப்புத் தாத்தா அவர்கள்
இவரின் தளம்: இவரின் பெயரேதான்
தன்னை தாத்தா என்று அழைத்துக் கொள்ளும் தைரியமும் மனநிலையும்
எல்லோருக்கும் சீக்கிரம் வந்து விடாது. அதற்கு ஒரு மனமுதிர்ச்சி தேவை. இவருக்கு அது
இருக்கிறது. போன சென்னை பதிவர் சந்திப்பில் இவரை சந்தித்தேன்.
இவருடைய பதிவுகள் புது மாதிரியானவை. என்னை மாதிரி பெரிசுகளுக்கு
மிகவும் பிடித்தமானவை. பழங்காலத்து சினிமா பாடல்கள், அந்தக் காலத்து செய்திகள் ஆகியவை
இவருடைய பதிவுகளில் காணலாம்.
7.திரு சீனா ஐயா அவர்கள்
இவரைப்பற்றி
முன்பே கூறியிருந்தாலும் இவரும் ஒரு சீனியர் பதிவர் ஆதலால் இங்கும்
குறிப்பிடுகிறேன். அமைதியும் ஆழமும் கொண்டவர். இவரைப்பற்றி அறியாத பதிவர்
எவருமிலர். ஆகவே அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
8.அமரரான இரு பதிவர்கள்
பல பிரபல பதிவர்கள் அமரராகி விட்டார்கள். அவர்களை எனக்குப்
பரிச்சயமான இருவர் பற்றி இங்கு நினைவு கூர்கிறேன்.
i) டோண்டு
ராகவன்.
நான் பதிவுலகத்திற்குள் பிரவேசித்த காலத்தில் மிகவும் பிரபலமாக
இருந்தவர் இவர். வேறு யாரோ ஒருவர் இவர் பெயரை உபயோகித்து இவர் பதிவில் சில விஷமங்கள்
செய்து வந்தார். அந்த நபர் சிங்கப்பூரில் இருந்து கொண்டு இந்த சில்மிஷம் செய்து வந்தார்.
டோண்டு ராகவன் பல முயற்சிகள் செய்து அவரை கண்ணி வைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
இவர் ஒரு மொழி பெயர்ப்பாளர். அதை முழுநேரத் தொழிலாகச் செய்து
வந்தார்.
இவருடைய பதிவுகளில் நாட்டு நடப்புகளை கடுமையாக சாடுவார்.இவர்
மறைவு பதிவுலகத்திற்கு பேரிழப்பாகும்.
ii) பட்டாபட்டி
வெங்கிடபதி
இவர் கோவைக்காரர். சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
பட்டாபட்டி என்ற பெயரில் பதிவு இட்டு வந்தார். பழகுவதற்கு இனிமையானவர். மலேசியா போயிருந்தபோது
மாரடைப்பால் மறைந்தார்.
இந்த இரண்டு பேருக்கும் என் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
அடுத்த பதிவில் சில பிரபல பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன்..