07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வே.நடனசபாபதி. Show all posts
Showing posts with label வே.நடனசபாபதி. Show all posts

Sunday, March 10, 2013

சிரித்து வாழவேண்டும்! – ஏழாம் நாள் – விடை பெறும் நாள்

சிரிப்பு என்பது மனித குலத்துக்கே கிடைத்த ஒரு பெருங்கொடை.இது மற்ற எந்த உயிரினங்களுக்கும் கிடைக்காத ஒரு பெரும்பேறு.

சிரிப்பதால் பல நன்மைகள் உண்டு என சொல்லக் கேட்டிருக்கிறோம். சிரிப்பதால் உடல் வலி மற்றும்  மன அழுத்தம் குறைகிறதாம். மேலும் சிரிப்பு, மன அழுத்தம் தரும் ஹார்மோன்களைக் குறைக்கிறதென்றும், தடுப்பாற்றல் உள்ள திசுக்களை அதிகரிக்கிறதென்றும், இரத்த நாளங்களின் செயலாற்றல்களை செம்மைபடுத்தி, இரத்த ஓட்டம் சீராக வழி செய்வதால் இதய வலி வருவதையும் தடுக்கிறது  என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

எனவே நாள்தோறும் சிரிப்போம் நலமுடன் வாழ!

சிரித்து வாழவேண்டியதுதான் ஆனால் அந்த சிரிப்பை பிறர் மனத்தை நோகடித்து அல்ல. நம்மில் பலர் மாற்றுத்திறனாளிகளை நையாண்டி செய்தும், பிற மொழியை, பிற மதத்தை,பிற சாதியை  அல்லது அவர்களது நம்பிக்கையை கிண்டல் செய்தும் நகைச்சுவை என்ற பெயரில் சொல்லியும் எழுதியும் வருகிறோம்.

சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலில் வந்த ஒரு நிகழ்வு பற்றிய தகவலை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ( அநேகம் பேருக்கு இது தெரிந்திருக்கலாம். இருப்பினும் நல்லதை திரும்பவும் சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.)

“தென்னிந்தியாவிலிருந்து விடுமுறையை கழிக்க தில்லிக்கு சென்ற கல்லூரி மாணவர்கள் சிலர் தில்லியை சுற்றிப்பார்க்க ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த டாக்ஸின்  ஓட்டுனர் ஒரு வயதான சீக்கியராக இருந்ததால் அவரை கிண்டல் செய்யும் நோக்கில் அன்று முழுதும் சர்தார்ஜி நகைச்சுவையை சொல்லி அவரை வெறுப்பேற்ற நினைத்திருக்கிறார்கள். 
  
ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லையாம்..அவர்களது சுற்றிப்பார்க்கும் வேலை முடிந்தவுடன் அவர்கள் அவரிடம் வாடகைப் பணத்தை தந்திருக்கிறார்கள். 

அவர் பாக்கியை திருப்பித்தரும்போது, ஒவ்வொருவருக்கும் பத்து ரூபாய் தாட்களை கொடுத்துவிட்டு சொன்னாராம்.தம்பிகளா! இன்று முழுதும் நீங்கள் சர்தார்ஜி நகைச்சுவை என்ற பெயரில் சொன்ன ஜோக்குகளில் சில அசிங்கமானவை. இருப்பினும், எனக்கு கோபம் வரவில்லை. காரணம் நீங்கள் இளைஞர்கள். இன்னும் வெளி உலகை அறியாதவர்கள் என்பதால் தான். ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் உங்களிடம் வைக்கிறேன். நான் கொடுத்த இந்த பத்து ரூபாய் தாளை இந்த  ஊரிலோ அல்லது வேறு எந்த ஊரிலோ நீங்கள் சந்திக்கும் ஒரு பிச்சைக்கார சர்தாரிடம் கொடுங்கள் அது போதும். என்றாராம்.

பிச்சையெடுக்கும் சர்தார் எவரையும் இதுவரை காணமுடியாததால் அவர்களிடமே அந்த பணம் இருக்கிறதாம்!”

எனது நண்பர்  ஒருவர் சொன்னார். இலண்டனில் வேலை தேடி அலையும் இந்தியர்கள் (சொன்னால் நம்பமாட்டீர்கள். இதில் டாக்டர்களும் அடக்கம்) வேலை கிடைக்கும் வரை அங்குள்ள குருத்துவாராவில் தான் இலவச உணவை சாப்பிடுகிறார்களாம்!

இதோ ஒரு புள்ளி விவரம். இந்தியாவில் கட்டப்படும் வருமான வரியில் 33 சதம் கட்டுவோரும், அறக்கட்டளைக்கு செலவிடுவோரில் 67 சதம் செலவிடுவோரும் இராணுவ சேவையில் இருப்போரில் 45 சதமும்  தினம் 60 இலட்சம் மக்களுக்கு 59,000 க்கு மேற்பட்ட குருத்துவாராக்கள்  மூலம் இலவச உணவு தருவோரும் இந்திய மக்கட் தொகையில் 1.4 சதம் உள்ள சீக்கியர்களே என்பதை அறியும்போது இவர்களையா நாம் கேலி செய்கிறோம் என வெட்கப்படத்தான் வேண்டும்.

சக மனிதனுக்கு உதவிடும் சர்தார்ஜிக்களைப் பற்றி மனம் போன போக்கில் நகைச்சுவை என்ற பெயரில் நையாண்டி செய்து சிரிப்பது சரியா என சிந்திக்க வேண்டும்.  இந்த இழி செயலை யார் எப்போது ஆரம்பித்தார்கள் என்பது  தெரியவில்லை. இனி பதிவுலகத்தில் நாமாவது அதை எழுதாமல்  விடுவதன் மூலம்  அவர்களுக்கு  மரியாதை தருவோம்.
                              --------
இனி சில நகைச்சுவை மற்றும் பல்சுவைப் பதிவர்கள் பற்றி இன்று பார்ப்போம். 


1.வாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் மின்னல் வரிகள் வலைப்பதிவின் பால கணேஷ் அவர்கள் அசாதாரணமானவர். இவர் சினிமாவில் தொடங்கி கதை, சிறுகதை, நகைச்சுவை,நூல் மதிப்பீடு, ஆன்மீகம், எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதைகள் வரை அலசாத விஷயங்களே இல்லை.இருந்தாலும் இவரது நகைச்சுவை பதிவுகள்தான் எல்லாவற்றையும் விட பிரபலமானவை மொறு மொறு மிக்ஸர் என்ற தலைப்பில் இவர் எழுதும் பதிவும். சரிதாவும் நானும், நடைவண்டிகள் என்ற தொடர்களும் எல்லோராலும் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டவை.  பதிவுலகில் உள்ள மிகச் சில நகைச்சுவை பதிவர்களில் இவரும் ஒருவர். இவரது நகைச்சுவைக்கு சாம்பிள் கேட்டால் பல்லவனோடுஒரு யுத்தம் என்ற இந்த பதிவை சொல்லுவேன். இவரின் இன்னொரு வலைப்பதிவு மேய்ச்சல்மைதானம் ஆகும் 

2. தினம் ஒரு தகவல் தந்த திரு  தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்  போல், தினம் ஒரு சுவாரஸ்யமான தகவல்களைத் தருவதில் இவர் மன்னர். தனது இருப்பிடமான அரசர்குளம் பெயரிலேயே அரசர்குளத்தான் என்ற வலைப்பதிவில் பதிவிட்டு வரும் ரஹீம் கசாலி அவர்கள் 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 500க்கு மேற்பட்ட பதிவுகளைத் தந்திருக்கிறார்.  என்னைப்பற்றி என்ன சொல்ல என்று அவர் சொன்னாலும், வேறொரு இடத்தில் பதிவில் வெளியாகும் கருத்துக்கள் அவருடைய சொந்த கருத்துக்கள்  என்றும், தன் மனதில் தோன்றியதை எழுதியிருப்பதாகவும் , தவிர யார் மீதும் திணிக்க அல்ல என்று கூறி தான் யார் என்பதை சொல்லிவிட்டார். இவரது பதிவில் அரசியலும் உண்டு. சினிமாவும் உண்டு. ஆனால் இவருக்கு விளையாட்டு பிடிக்காததால், விளையாட்டு சம்பந்தப்பட்ட செய்திகள் மட்டும் இருக்காது. மின்வெட்டை சமாளிக்க சுலபமான வழிகளும் ஜெயலலிதாவின் அறிக்கையும் என்ற பதிவு போதும், நையாண்டி செய்து பதிவிடுவதில் இவருக்கு நிகர் இவர் தான் என்பதை நிரூபிக்க. 

3. படிக்க ... ரசிக்க ... சிரிக்க ... சிந்திக்க கடைசியாக தலையில் அடித்துக்கொள்ள வாருங்கள் என அவர்கள் உண்மைகள் என்ற வலைப்பதிவுக்கு நம்மை அழைக்கும் மதுரை தமிழன்( Madurai Tamil Guy ) இருப்பது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில். இலவசமாக பல்சுவை தகவல்களைத் தந்து  இதயங்களை கொள்ளை அடிக்கும் இணையதளம் என தனது வலைப்பதிவு பற்றி இவர் சொல்வது உண்மைதான். பல் வேறு தலைப்புகளில் 600 க்குமேல் பதிவிட்டிருக்கும் இவர் நகைச்சுவை என்ற தலைப்பில் இட்ட  பதிவு மட்டும்  178. இவரது நகைச்சுவை பதிவுகள் பெரும்பாலும் அங்கதம்(Satire) வகையை சேர்ந்தவை. உலகம் ஏண்டா அழியலை..... என்ற இந்த பதிவும் அந்த வகைதான்.

4. ஜோக்காளி என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருக்கும் திரு K.A.பகவான்ஜி அவர்கள் 2012 ஆம் ஆண்டிலிருந்து சிரிங்க ... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க என்று பதிவிட்டுக்கொண்டு இருக்கிறார்.. இந்த பதிவில் வெவ்வேறு தலைப்புகளில் எழுதினாலும் தின சிரி ஜோக் என்ற தலைப்பில்தான் அதிகமாக பதிவிடுகிறார். இனி சர்தார்ஜி ஜோக்குகளை பதிவிடாதீர்கள் என்பதுதான் இவரிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள்.

5. படைப்பாளி  என்பதை புனைபெயராகவும் வலைப்பதின் பெயராகவும் வைத்திருக்கும் பாலாஜி அவர்கள் ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவர். கதை, கவிதை என்ற பெயரில் சில கிறுக்கல்களை (இது உண்மை அல்ல!) படைப்பதாக சொல்லும் இவர் முதலில் ஒரு ஓவியன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறார். வண்ணங்கள் என்ற தலைப்பின் கீழ் இவர் வெளியிட்டுள்ள வெண்தாடிவேந்தர் என் கை வண்ணத்தில் என்ற படமும், மொபைல் போன்இலவசம் என்ற இந்த கேலிச்சித்திரமும் இவர் ஓவியன் என்று பெருமைப்படுவது சரிதான் என்று சொல்லாமல் சொல்கின்றன.  

6. மைத்துளிகள் என்ற வலைப்பதிவில் 2010 ஆம் ஆண்டிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் இளைய பதிவர் மாதங்கி மௌலி  அவர்கள் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிகிறார். Music method and madness மற்றும் LIGHTER SIDE என்ற இரண்டு வலைப்பதிவுகளிலும் எழுதிக்கொண்டு இருக்கிறார். இது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்... என அழுத்தம் திருத்தமாக சொல்லும் இவரது மைத்துளிகள் என்ற முதல் பதிவே இவர் ஒரு வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர் என எண்ணத்தோன்றுகிறது.  

7. இந்த பதிவுலகில் காலடி எடுத்து வைக்க உதவியவர் மதிப்பிற்குரிய அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்கள் என்றால், தமிழில் தட்டச்சு செய்ய உதவியவர் சூர்யா கண்ணன் அவர்கள். அவர் பெயரிலேயே உள்ள வலைப்பதிவில் கணினிசார்ந்த தொழில்நுட்ப பதிவுகளை இட்டு வந்தார். 2௦09 ஆம் ஆண்டிலிருந்து பதிவிட்டு வந்தவர் ஏனோ தெரியவில்லை 2012 ஆம் ஆண்டுக்குப்பிறகு எதுவும் பதிவிடவில்லை. "லதா" எழுத்துருவை பயன்படுத்தி நமக்கு தேவையான தமிழ் கோப்புகளை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கிய இலவச  Microsoft Indic Language Input Tool பற்றிய Microsoft: பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி! என்ற பயனுள்ள பதிவால் என்னால் சுலபமாக தமிழில் நினைத்ததை எழுத முடிகிறது. உங்களில் சிலருக்கும் அது உபயோகமாக இருக்கலாம். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
                                 -----------
நண்பர்களே! விடை பெறும் நேரம் வந்துவிட்டது. விளையாட்டாக ஒரு வாரம் ஓடிவிட்டது. நண்பர் திரு சீனா அவர்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்தேனா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் நான் அதை சிரத்தையாய் செய்தேன் என்பது மட்டும் உறுதி.

இந்த பொறுப்பை தந்த நண்பர் திரு சீனா அவர்கட்கும், இந்த வாரம் முழுதும் பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப் படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நாளை வலைச்சரம் ஆசிரியராக பணியேற்கும் நண்பரை வரவேற்று, உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்.

வணக்கம்!

மேலும் வாசிக்க...

Saturday, March 9, 2013

அனைவர்க்கும் கல்வி – ஆறாம் நாள்

அனைவருக்கும் கல்வி தரவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதைத் தர அரசு மட்டுமே முயற்சி எடுக்கவேண்டும் என நினைத்தால், அந்த இலக்கை நாடு அடைய பல ஆண்டுகள் ஆகலாம். நாமும் அரசோடு கை கோர்த்து உதவினால் மட்டுமே  நமது கனவு மெய்ப்பட வாய்ப்புண்டு.

நமது நாட்டில் படிப்பறிவோர் பற்றிய புள்ளி விவரத்தை நோக்கும்போது, ஆங்கிலேயர் காலத்தில் 12 சதமாக இருந்த படிப்பறிவு உள்ளோரின் விகிதம் 2011 மக்கள் கணக்கெடுப்புப்படி 74.04 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியைத் தந்தாலும் இது உலக சராசரியான 84 விழுக்காடை விட குறைவு என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

சரியான உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகளும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் இல்லாததே இந்த சுணக்கத்திற்கு காரணங்கள் என சொல்லப்படுகிறது.

மய்ய அரசு, எல்லோருக்கும் கல்வியைத் தரவேண்டும் என்பதற்காக ஆகஸ்ட் 2009 இல் இந்திய பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியது இலவச மற்றும் கட்டாய கல்வி என்று பெயரிடப்பட்ட  இந்த சட்டத்தின்படி, 6 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வியைத் தருவது என்பது அடிப்படை உரிமை  ஆகியது.


இந்த கல்வி உரிமை சட்டம் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி அமலுக்கு வந்த போது, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக உள்ள 135 உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக ஆனது.

ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வந்து ஓராண்டுக்குப் பிறகு இது எந்த அளவில் இருக்கிறது என  அரசு  ஆய்வு செய்தபோது  6 லிருந்து 14 வயதிற்கு உட்பட்ட 8.1 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கே  வருவதில்லை என்றும் நாடு தழுவிய அளவில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை ஐந்து இலட்சத்திற்கு மேல் உள்ளதாக தெரிந்தது.

மேலும் கிடைத்த புள்ளி விவரங்கள் நகர்ப்புற குழந்தைகளில்  54 விழுக்காடு பிள்ளைகள்  தனியார் பள்ளிகளில் பயில்கின்றன என்றும், இந்த விகிதம் ஆண்டுக்கு 3 விழுக்காடு வீதம்  வளர்ந்து வருவதாகவும் ஏழை குழந்தைகள் கூட ஆசிரியர்கள் வராததால் அரசு பள்ளிகளுக்கு வருவதில்லை என்ற அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்தது.

2015 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கு கல்வி தரவேண்டும் என்ற  அரசின் இலக்கு நிறைவேறுவது அரசின் கையில் மட்டுமல்ல நம் அனைவரின் கையிலும் உள்ளது என்பதுதான் உண்மை.  

நாடு விடுதலை அடைந்தபோது கல்விச்செலவு இப்போது போல் இல்லை. ஏன் குறிப்பிட்ட வகுப்புகள் வரை கட்டணமில்லாமலேயே பாடங்கள் சொல்லிக்கொடுக்கப்பட்டன. அதற்கு காரணம் அரசே கல்விக்கூடங்களை நடத்தி வந்ததால்.

அரசால் அனைவருக்கும் கல்வி தர இயலாத நிலையில், புற்றீசல் போல் முளைத்த கல்விக்கூடங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கல்வியை வணிகமாக்கி காசு பார்க்க தொடங்கிவிட்டனர். மேலும் ஆங்கிலமொழி வழி கல்வி முறையை தங்கள் பிள்ளைகளுக்கு தர பெற்றோர்கள் விரும்பி தனியார் பள்ளிகளை நாடும்போது அங்கே அவர்கள் வைத்ததே சட்டமாகிவிட்டது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், நாட்டில் உள்ள சில பள்ளிகளில் சிறுவர்கள் தங்கிப் படிப்பதற்கு ஆண்டுக்கு 3.3 இலட்ச ரூபாய்கள் முதல் 9 இலட்ச ரூபாய்கள் வரை வசூலிப்பதாக செய்தி வந்திருப்பதை பார்த்தபோதும், சென்னையில் சில பள்ளிகளில் LKG எனப்படும் மழலையர் வகுப்புக்கு மட்டுமே ஓராண்டு கட்டணம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல்  என கேள்விப்படும்போதும் ஏழைகள் எங்கே  இங்கு எழுத்தறிவு பெறமுடியும் என்ற கேள்வி எழுவது இயற்கை.

அரசு நீதிஅரசர்கள் தலைமையில் குழு அமைத்து தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் உறுதி செய்யப்பட்ட பிறகும், பெற்றோர்களிடமிருந்து பணத்தை வேறு வகையில் வசூலித்துக்கொண்டு இருக்கின்ற காட்சியை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

எல்லோருக்கும் கல்வியைத் தர அரசால் மட்டும் முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த சமயத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் தங்களுடைய இலாபத்தில் ஒருபகுதியை இந்த மாபெரும் முயற்சி வெற்றிபெற ஒதுக்கி தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நல்ல தரமான கல்வியை குறைந்த செலவில் தந்தால் தான் எல்லோருக்கும் கல்வி என்ற இலக்கை எட்டமுடியும்.


"அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"


என்ற தேசியக்கவி பாரதியாரின் விருப்பம் அதுவரை நிறைவேறாத கனவாகவே இருக்கும்.

இந்த பேராசை நடக்கும் என நம்புவோம்.  

                              ----------------


இன்று நாம் பார்க்க இருக்கும் வலைப்பதிவுகள்

1. தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல் போன்ற தலைப்புகளில் பதிவிடும் World is not Enough என்ற வலைப்பதிவில் நம்புங்கள்..! இது ஒரு அரசு ஆரம்ப பள்ளி என்ற பதிவைப் படித்தபோது  ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் இவ்வளவு வசதிகள் உள்ளனவா என்று  என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட ஐயம் உங்களுக்கும் வரும் இந்த பதிவைப்படித்தபின். இந்த பதிவுக்கு சொந்தக்காரர் யாரெனத் தெரியவில்லை. அவருக்கு நன்றி இந்த  தகவலை தந்தமைக்கு.  

2. மணிராஜ் என்ற பெயரில் உள்ள  வலைப்பதிவில் தினம் தெய்வங்களின் அழகான திருவுருவப் படங்களை வெளியிட்டு, அதோடு பொருத்தமான பாசுரங்களையும் ஸ்லோகங்களையும் விளக்கத்தோடு தருவதில் வல்லவர் இராஜராஜேஸ்வரி அவர்கள். அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவி என்ற தலைப்பில் வந்த பதிவே அதற்கு சான்று.

3. 2010 ஆம் ஆண்டிலிருந்து வரிக்குதிரை என்ற பெயர் கொண்ட வலைப்பதிவில எழுதிவரும் அருண்குமார் அவர்கள் எழுதியவைகளில் எனக்குப் பிடித்தது தமிழர் எண் முறை பற்றிய பதிவு. தமிழில் எண்களை எப்படி எழுதுவது எனத் தெரியாதவர்களுக்கு இது ஒரு பால பாடம்.  

4. நியூசிலாந்தில் வசிக்கும் துளசி கோபால் அவர்கள்  பதிவுலகத்தினருக்கு புதியவரல்லர்.இவரது துளசிதளம் வலைப்பதிவில் இவர் பதிவிடும் பயணக் கட்டுரையைப் படித்தால் வேறு வழிகாட்டியே தேவையில்லை.செல்லும் ஒவ்வொரு இடத்தையும் அழகாய் படம் பிடித்து அருமையாய் விளக்கம் தருவது இவரது சிறப்பு. சமீபத்தில் புள்ளிருக்கு வேளூர் போகலாமா? என்று நவக்கிரகத் தலமான  வைத்தீஸ்வரன் கோயில் பற்றி எழுதியிருந்ததை படித்ததும் பலமுறை சென்ற எனக்கே இவைகளையெல்லாம் நாம் பார்த்தோமா என ஐயம் ஏற்பட்டது.அந்த அளவுக்கு துல்லியமாக ஒவ்வொன்றையும் விடாமல் குறிப்பெடுத்து தருபவர்.

5. வரலாறு,அறிவியல், மருத்துவம் ஆகிய மூன்று தலைப்புகளிலும் இவர் 38 பதிவுகள் எழுதியிருக்கிறார்.ஆனால் ஒவ்வொன்றும் தகவல் சுரங்கம். ஒவ்வொரு பதிவை எழுதுவதற்கு இவர் எவ்வளவு மெனக்கிட்டிருக்கிறார் என்பதை பதிவை படிக்கும்போதே தெரிந்துகொள்ளலாம். படங்களையும் வரைப்படங்களையும் புள்ளி விவரங்களையும் தந்து எல்லோரும் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையாக பதிவைத் தருவது இவரது பாணி. புவி வெப்பமடைதலால்ஏற்படும் விளைவுகள் என்ன?  என்று கடைசியாய் டிசம்பரில் எழுதிய வரலாற்று சுவடுகள் பதிவின் நண்பர்  பிறகு ஏனோ தொடர்ந்து பதிடவில்லை. இந்த ஆண்டு இனி தொடருவார் என நம்புகிறேன்.


6. 2011 ஆம் ஆண்டிலிருந்து பதிவுலகில் எழுதிக்கொண்டு இருக்கும் ரெவரி  அவர்கள் தன்னை யாரென்று வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும், அவரது எழுத்துக்கள் அவர் யாரென்று காட்டிவிடுகின்றன. சமூக அக்கறையுடன் எழுதும்  இவரது சில பதிவுகள் நம்மை சிந்திக்க வைப்பது நிஜம். தமிழகத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் யாரென  சொல்லும் இந்த பதிவே அனைத்திலும் சிறந்தது.

7. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து இளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ!  என்ற வித்தியாசமான சொற்றொடருடன் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் என்ற வலைப்பதிவில் எழுதிவரும் குட்டன் அவர்கள்,  இதுவரை  167 பதிவுகள் தான் எழுதியுள்ளார். ஆனாலும் தமிழ்மணம் வரிசைப் பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருப்பதிலிருந்தே இவரது வலைப்பதிவு எந்த அளவுக்கு பிரபலம் என்று தெரிந்துகொள்ளலாம். குட்டன் என்றால் சிறு பிள்ளை என்று பொருள். ஆனால் இவர் எழுதும் விஷயங்கள், தரும் செய்திகள் சிறுபிள்ளைத்தனமானது அல்ல  பாம்பும் மேலாண்மையும்  என்ற பதிவே இதை உறுதி செய்யும்.மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது அல்லவா?

8. விருதுநகரிலிருந்து சிட்டுக்குருவி  என்ற வலைப்பதிவில் இதுவரை 400 பதிவுகளுக்கு மேல் பல தலைப்புகளில் பதிவிட்டிருக்கிறார் விமலன் அவர்கள். இருந்தாலும் சமூகம் என்ற பிரிவின் கீழ் பதிவிட்டுள்ள  50 இடுகைகளில், ஏழையிடம் கூட பணம் பிடுங்கும் பணந்தின்னிகள் பற்றிய நடப்பு என்ற பதிவு ஆதங்கத்தையும் இயலாமையையும் வெளிபடுத்துகிறது என்பதால் இதை தேர்வு செய்துள்ளேன்.  

9. ரம்யம்’, சின்னு ரேஸ்ரி  என்ற இரு வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரரான மாதவி அவர்கள் 2008 லிருந்து பதிவிட்டு வருகிறார். ரம்யம் வலைப்பதிவில் எல்லா தலைப்புகளிலும் பதிவிடும் இவர், சின்னு ரேஸ்ரியில் சமையல் குறிப்புகள் பற்றி மட்டுமே எழுதுகிறார். இவரது பதிவுகளின் சிறப்பு, அழகான புகைப் படங்களும் அவைகளோடு இவர் தரும் விளக்கங்களுமே. இவருக்கு பூக்கள் என்றால் கொள்ளைப் பிரியம் போலும். பூப்பூக்கும்ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்ற பதிவை பாடலோடு ஆரம்பித்து பல்வேறு பூக்களின் படங்களைத் தந்து இறுதியில் பூக்களின் சமையலுக்கு பூக்களைப் பறியுங்கள் என்ற சமையல் குறிப்புப் பதிவை திறக்க சொல்லும் திறமையே திறமை.
 

இனி விடைபெறும் நாளான நாளை, மற்ற பதிவர்களைப் பார்ப்போம்.


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது