07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 31, 2007

ரசிகனின் சரம்

அனைவருக்கும் வணக்கம்.

நீ எல்லாம் மாடு மேய்க்கத்தாண்டா லாயக்கு!

நீ எல்லாம் எதுக்கு படிக்க வந்து எங்க உயிரை வாங்குற!

உருப்படவே மாட்டே!

பயந்துடாதிங்க மக்களே.. இதெல்லாம் நான் படிக்கும்போது அடிக்கடி கேட்ட பொன் மொழிகள். எல்லாம் நம்ம வாத்தியாருங்க நம்ம படிப்பு திறமையை பார்த்து சொன்னது. ஆனா காலத்தின் கொடுமையை பாருங்களேன். இன்னிக்கு என்னையே ஒரு வாத்தியாராக ஆக்கியிருக்காங்க வலைச்சர குழு.

இந்த வாரத்தின் வலைச்சர ஆசிரியர் நான் தான்

இதை எல்லாம் காலத்தின் கொடுமைடான்னு நீங்க சொன்னிங்கன்னா அந்த கொடுமை இன்னும் ஒரு வாரம் தொடரும். எவ்வளவோ கொடுமைகளை தாங்கிட்ட தமிழ் உள்ளங்களின் மேல் பாரத்தை போட்டு இந்த வாரத்தை தொடர்க்கிறேன்.

இன்னிக்கு வருடத்தோட கடைசி நாள்...நல்ல‌நாளில் தான் நம்மளை போட்டுருக்காங்க. சரி சுருக்கமாக என்னோட கதையை முடிச்சிடுறேன். நான் படித்த முதல் வலைப்பதிவர்
லிவிங் ஸ்மைல் வித்யா . அவர்களோட பேட்டி ஒண்ணு ஜீனியர் விகடனில் பார்த்து உள்ள‌ வந்தேன். பிறகு அப்படியே ஒவ்வொரு பதிவர்களாக படிச்சி நமக்கும் ஆசை வந்து, மா.சிவக்குமார் அவர்களின் மூலம் கலப்பையை பிடிக்க கத்துக்கிட்டு இன்னிக்கு வரைக்கும் தவறாமல் கலை பை பிடிக்கும் கடமை வீரனாக வந்துக்கிட்டு இருக்கேன்.

அறிமுகப்பதிவுல என்னோட பதிவுகளின் சில பதிவுகளை கொடுக்க வேண்டும் என்று சொன்னாங்க. நானே என்னை ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அடைச்சிக்க விரும்பவில்லை. அதனால இது தான் என்னோட பதிவு கோபிநாத். போயி பாருங்க எப்படியும் ஒன்னு ரெண்டு தேறும்.

வருஷ‌த்தோட கடைசி நாளுக்கும், அடுத்த வருஷ‌த்தோட முதல் நாளுக்கும் சேர்த்து அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள்.

புதிய வருடத்தில் உங்கள் அனைவரின் முயற்சிகளும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்....
மேலும் வாசிக்க...

மழைவரவைக்கும் சரம்

போனவாரம் முத்துசரம்ன்னு வலைப்பதிவில் அனுபவம் நிறைந்த பதிவர்களில் ஆரம்பித்து அழகாக தொடுக்க ஆரம்பித்தார் தம்பி ஆனா பாவம் நினைத்தபடி பதிவுகள் இட முடியாமல் வேலைவந்துவிட்டது அவருக்கு..இலக்கியசரமும் அருமை... அவருடைய விரிவான விமர்சனத்தையும் நமக்கு தந்திருந்தார். இன்னும் நேரம் இருந்தால் சிறப்பாக இன்னும் சில சரம் தொடுத்திருப்பார் என நினைக்கிரேன்.. நன்றி தம்பி.

**************---------------------*************

இந்தவாரம் பாருங்க மழை கொட்டப்போகுது ஏன்னா பதிவு எழுதனும்ன்னா ஒரேடியா பதுங்குற நம்ம கோபிநாத் எழுதப்போறார். ஆனா நல்ல ரசிகர் மற்றும் மற்ற பதிவர்களை ஊக்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே என்கிற அளவுக்கு அடிக்கடி பதிவுகளுக்கு இரண்டு இரண்டு பின்னூட்டங்களும் பதிவு எழுதுவதற்கு யோசனைகளும் தருபவர்.. தான் ரசித்த பதிவுகளை நமக்களிக்க வருகிறார்..
மேலும் வாசிக்க...

Wednesday, December 26, 2007

இலக்கியச்சரம்

நாமல்லாம் ஏதோவொரு வகையில் நேரத்தை வீணாக்கிட்டு
இருக்கோம் எழுதுவதை கொஞ்சம் சிரத்தை எடுத்து இன்னும்
மெருகேற்றினால் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் திறமை
போல் நமக்கும் வரும். தேவை நல்ல நூல்களின் வாசிப்புதான்.
எழுத்து அவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல விரிவான
வாசிப்புதளம் உள்ள எவரும் எழுதலாம். அந்த வகையில்
வலையில் இலக்கியத்தரத்துக்கு சற்றும் குறையாமல் எழுதி
வருபவர்களும் அப்படி எழுத முயற்சிப்பவர்களையும் இரண்டு
சரமாக தொகுக்கலாம்.

ஹரன்பிரசன்னா

புத்தக விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள், சிறுகதைகள்,
கவிதைகள் என்ற பிரிவில் வலைப்பதிவுலகில் தனி ஆளுமை
கொண்டவர் ஹரன் பிரசன்னா. இவரின் எந்த பிரிவுகளின் கீழ் பதிவு
எழுதினாலும் அதன் தீவிரத்தை வாசகருக்கு உணர வைப்பார்.
வெறுமனே சுவாரசியம் கொண்டு எழுதப்படும் பதிவுகள் வெகு
சீக்கிரம் மறந்துவிடக்கூடும் ஆனால் இவரின் சில சிறுகதைகள்
வலைப்பதிவர்ளின் படைப்புக்களுக்கு மத்தியில் சிறந்தது என
தைரியமாக கூறுவேன். இவர் எழுதிய மொத்த சிறுகதைகளையும்
படிக்கலாம் இங்கு. எனக்கு மிகவும் பிடித்த என் அனுபவத்தை
படம்பிடித்தது போல அமைந்த சொக்கலிங்கத்தின் மரணம்.
சிறுகதை என்ற வடிவத்திற்கு மிகவும் அவசியமானது என்று
இரண்டு விஷயங்களை கூறலாம் ஒன்று மொழிநடை இரண்டு
பேச்சு வழக்கு இவை இரண்டும் தெளிவாக பயணம் செய்தால்
வாசகனும் எழுத்தின் பின் செல்வான். இவை எல்லாமும்
ஒருங்கே பெற்றவர் ஹரன் ப்ரசன்னா. மேலும் இவர் எழுதி
புகழடைவார் என்பது உண்மை.

சன்னாசி

சன்னாசியின் எழுத்து நுட்பமானது மீள் வாசிப்புகளின் மூலம்
மட்டுமே புரிந்து கொள்ள முடியும் தன்மை உடையது. இதை
நம் பலவீனம் என்றுதான் நினைக்க இயலும். நம்போன்ற சக
மனிதனின் கற்பனைகளை புரிந்துகொள்ளா மனம் பின் எப்படி
சொல்லமுடியும். எனக்கும் இன்னும் பல கவிதைகளும், பலப்பல
புனைவுகளும் புரியவில்லை. இதைத்தான் தனித்துவம் என்று
சொல்லலாம். நான் வாசித்து தெரிந்து கொண்ட வகையில்
தமிழ்மண வாசகர்களுக்கு புனைவு என்ற வடிவத்தை அறிமுக
படுத்தியவர் இவர்தான் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு
மனிதனுக்கும் குரல், முகம் போன்றவை எப்படி தனித்துவமான
அடையாளத்தை தருகிறதோ அதேபோல் ஒவ்வொரு
எழுத்துக்கும் தனித்துவமான அடையாளம் உள்ளது, யாரும்
யாருக்கும் சளைத்தவர் அல்லர். நாம்தான் முகத்தையும்
குரலையும் கவனிப்பது போல அவற்றை கவனிப்பதில்லை.
கவிதைகள் என்று பரவலாக வாசிக்கப்படும் உரைநடைகளுக்கு
மத்தியில் இவரின் பல நுட்பமான கவிதைகள் கவனிக்கப்படாமலே
போயிருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு சுட்டி இங்கே கொடுக்கலாம்
என்றாலும் அந்த சுட்டி கூட உங்களால் சொடுக்கப்படாமல்
போகும் அபாயம் இருக்கிறது அதனால் கவிதையையே இங்கு
பகிர்கிறேன்.

கடிகாரங்களைத் திருடுதல்
-சன்னாசி

தூங்கும் சிறுவனின் வலப்பக்கம் தொங்குகிறது
கடிகாரம்
தூக்கம் கலையாமல் கடிகாரத்தைத் திருடித்
தலையணையடியில் ஒளிக்கிறது சிறுவனின் வலக்கை
விழித்தபின் அதிர்கிறது இடக்கை திருடப்பட்ட
கடிகாரத்தைச் சுவரில் கண்டு

சிமிட்டும் கண்களில் சூழ்கிறது புதிர்
தாவரப் புதர்களை விலக்கிச் செல்கிறான் சிறுவன்
தன் தோட்டத்து மரங்களிலொன்றின்
காலடியில் அமர்கிறான் ஒரு செடியைப் பிடுங்கி
தண்டைக் கடிக்கிறான்; நெறிந்து உடைபடுகிறதொரு
நொடி
சோகையாய் அசைகின்றன செம்பருத்திப் பூக்கள்
இலைமேல் ஊரும் கரும்புழுவொன்று சுருள்கிறது

சாலையில் நடக்கும் சிறுவனைச் சுற்றிலும்
மோதிக்கொள்கின்றன பேருந்துகள்
கனரக வாகனங்கள் பாதசாரிகள் பெயரற்ற
நிர்ணய வகுபாட்டில் சிக்கிய துகள்கள்
முடிவற்ற பெயரின்மைகளின் எடை
பாய்ந்துகொண்டேயிருக்கும் ஆபரணம்பூண்ட கல் யாளிகள்
அவைமேல் உறைந்திருக்கும் வெயிலின் சாயைகள்
தாவரப் புதர்களை விலக்கிச் செல்கிறான் சிறுவன்
மணிக்கட்டில் நொண்டிச்செல்கிறது திருடப்பட்ட கடிகாரம்
ஒரு கல்லிடறலில் மோதிக் கீறல்விடுகிறது
காலில் கட்டிய கடிகாரச் சலங்கை

தான் நுழையவிரும்பா இக்கவிதையுள்
எவரோ தன் கணத்தை எறிகிறார்கள்.

அற்புதமான கவிதை என்று சொல்லமுடியாவிட்டாலும், மிக
அற்புதமான கற்பனை.

அய்யனார்

பெயரைப் போல அல்ல இவர். சன்னாசியை போலவே இவரும்
தனித்துவம் நிறைந்த எழுத்துக்கு சொந்தக்காரர். கவிதைகள்
பெண் கவிஞர்களுடன் போட்டி போடா முயல்வதாக இவரிடம்
ஒரு குற்றச்சாட்டு வைத்தவன் நான். பின் தவறு என் பக்கம்
என்றுணர்ந்தேன். படைப்பாளி தன் கற்பனையை பதிவிக்க தமிழில்
உள்ள வார்த்தைகளைக்கூட தேர்ந்தெடுக்கவியலா சூழல்
தமிழில் மட்டுமே உள்ளது. இதைப்பற்றி நாஞ்சில் எழுதிய
மங்கலம் குழூஉக்குறி இடக்கரடக்கல் கட்டுரையை படித்தால்
வெகுசன பத்திரிக்கைகள் கவிதைக்கு கட்டியிருந்த வேலியை
புரிந்து கொள்ளலாம். இவரின் மொழி மிக கடினமான ஒன்றுதான்
ஒப்புக்கொள்ளலாம் ஆனால் ஒதுக்கக்கூடிய ஒன்றல்ல. இவரின்
தலைப்புக்கள் ஒன்றே போதும் திறமையை சொல்ல. எனக்கு
பிடித்த பதிவாக
அடர் கானகப் புலிகளின் குகை திரும்பல்கள்
புனைவுகளில் கவர்ந்ததாக உண்மை சிதைவுகளாலானது அது
எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்க
முடியும். என்ற புனைவை சொல்லலாம். பொதுவாக
புனைவுகளின் சுயத்தன்மை நிறைந்திருப்பதாக இருந்தாலும்
எவரும் பொருத்திப் பார்க்க முடிவதுதான் சிறப்பான
அனுபவத்தை தரவியலும். மொழி, வார்த்தைக் கட்டுப்பாடுகளை
களைந்து வாசித்தால் சிறப்பான எதிர்காலம் உள்ளது. இவர்
நாவல் எழுதினால் சிறப்பாக வரும் என்பது என் எண்ணம்.
சினிமா விமர்சனங்கள் குறிப்பிடக்கூடிய ஒன்று சமீபத்தில
எழுதிய பூமியிலிருக்கும் குட்டி நட்சத்திரங்கள் அனைவரது
பாராட்டையும் பெற்றது.

டிசே தமிழன்.

இவரும் புனைவின் வழி நடப்பவர்தான் ஆனால் மற்ற
இருவர்களை போல அத்தனை கடினமாக இருக்காது.
அத்தனை சுலபமாகவும் இருக்காது. இயல்பாக இருக்கும்
என்று கூட சொல்ல முடியாது. பன்முகத்தன்மை கொண்டவர்.
இவரின் இந்த பதிவை பார்த்தவை/வாசித்தவை பற்றிய சில
பகிர்தல்கள் படித்தால் புரியும். அதிகம் விளக்க வேண்டிய
அவசியமில்லாமல் நகரம், உலகசினிமா, உள்ளூர் சினிமா
நகைச்சுவை, இலக்கியம்னு எல்லாமும் கலந்து கட்டி
அடிச்சிருப்பார். பதிவு பெருசா போகுதே என்ற கவலை
அவருக்கு ஒருபோதும் இருந்திருக்காது. விருப்பமுள்ளவன்
வாசித்தே தீருவான். நனவுகளின் பலிக்காலம் என்ற பதிவை
படித்தவுடன் யாருடனும் பேசவே முடியாத பாரம் நெஞ்சை
அழுத்தியது நிறைய அலைகளை உருவாக்கிய கவிதை.

இப்பதிவில் உள்ள எழுத்துக்கள் யாவும் முழுக்க என் புரிதல்
சார்ந்தது. பல பதிவர்கள் பெயர் கண்ணுக்கு தெரிந்தே விட்டுப்
போயிருக்கிறது. அடுத்த பதிவில் தொடர்வேன்.
மேலும் வாசிக்க...

Tuesday, December 25, 2007

முத்துச்சரம்

எப்பவும் எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி
பெரியவங்களுக்கு மரியாதை செலுத்தணும்னு சொல்வாங்க.
நானும் ரொம்ம்ப மரியாதையான பையன் அதனால வலைப்பூ
உலகத்துலயும் நிஜ உலகத்துலயும் கலந்து இங்கே இயங்கிக்
கொண்டிருக்கும் எழுத்தாளர்களை பார்க்கலாம்.


துளசிதளம் துளசிகோபால்


இவங்ககிட்ட இருக்கும் முக்கியமான விஷயமே உற்சாகம் என்ற
ஒரு வார்த்தைதான். இவர் பதிவை வாசிக்கும்போது அவங்க
நேர்லயே பேசற மாதிரி இருக்கும். எனக்கு தெரிஞ்சி வலைப்பதிவுல
இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும் பூ இவருடையது.
நான் வலைப்பூ எழுத வந்த புதிதில் பின்னூட்டமிட்டு
ஊக்கப்படுத்தியவர் எனக்கு மட்டுமல்ல இன்றுவரை புதிதாக வந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் பின்னூட்டமிட்டு
உற்சாகப்படுத்துவார். வருங்காலத்துல குழந்தைகளுக்கு
பாட்டிகள் கதை சொல்லி சந்தோஷப்படுத்த மாட்டாங்க அந்த
குறையை துளசிதளம் தீர்க்கும். முயற்சி செய்தால் நியூசிலாந்து
பகுதி மற்றும் வீடு "வா வா"ங்குது தொடர்களை புத்தகமாக
வெளியிடலாம். பேதம் பார்க்காமல் அன்பு பாராட்டும்
இவரைப்போல இன்னொருத்தர் இருக்கார். அவரைத்தான் அடுத்து
நாம பாக்கபோறோம். I am very happy to welcome Mrs.வல்லிசிம்ஹன்.
(நேத்து காபி வித் அனுவ பத்தேன் அந்த எபெக்ட்)

வல்லிசிம்ஹன்

இவங்க பதிவை அதிகமா வாசிச்சது கிடையாது ஆனா என்னை
மாதிரியே எழுத்துலயும் வளர்ந்த குழந்தை. எப்படி தேடினாலும்
எழுத்தில் அன்பை மட்டுமே காணமுடியும். இவரை நேரில்
சந்தித்தபோது குழந்தையிடம் பேசியது போல அனைவரிடமும்
பேசியது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. பெரும்பாலும்
ஆன்மீக பதிவுகள் மட்டுமே எழுதுவார். நன்றாக புகைப்படம்
எடுப்பவர். எந்த பதிவுக்கு சுட்டி கொடுக்கறதுன்னு தெரில.
முழுவதும் அப்படியே படிக்கலாம் எல்லாமே சின்ன சின்ன
பதிவுகள்தான்.

கீதா சாம்பசிவம்

மற்ற இரு பதிவர்கள் மாதிரி இவங்க கிடையாது. கொஞ்சம்
இல்ல நிறையவே லூட்டி அடிப்பாங்க. எல்லாமே ரசிக்கிற
மாதிரி இருக்கும். திரும்பி பார்க்கிறேன் (கழுத்து வலியோடு)
இந்த தலைப்பை ரொம்பவே ரசித்தேன். தலைவின்னு சொல்லி
இவங்க படுத்துன பாடு மறக்கவே முடியாது. இவங்களுடைய
பதிவையும் நெடுநாளா வாசிக்கல. அதனால எந்த பதிவை
சிலாகிச்சு எழுதறதுன்னு குழப்பமா இருக்கு அதனால பூவின்
சுட்டிய சொடுக்கி பாருங்க பயங்கரமான சுவாரசியம் உள்ள
பதிவர். ஆன்மீக பதிவுகள் அதிகமா இவரும் எழுதுவார்.
ஏன் இந்த மாதிரி பெரியவங்க எல்லாம் ஆன்மீக பதிவுகள்
மட்டும் நிறைய எழுதறாங்கன்னு தெரில. :)

டோண்டு ராகவன்

வலைப்பூக்களில் மிகவும் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் இவர்
என்றாலும் மிகவும் பழுத்த அனுபவசாலி. இவரிடமிருந்து
கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. முதலில்
சொல்ல வேண்டியது மொழிப்புலமை இரண்டாவது அத்தொழிலில்
கொண்டிருக்கும் நேர்த்தி. CPWD அனுபவங்கள் மற்றும் IDPL
நினைவுகள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. மத்திய
அரசு ஊழியர், அரசியல் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்,
மூத்த வலைப்பதிவர் இப்படி பன்முக புலமை பெற்றவர்
இவரின் பிடிவாதகுணம் வியப்பான விஷயங்களில் ஒன்று.

டாக்டர் டெல்பின்

முதலில் இவங்கள பத்தின பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை
ஆனால் எதேச்சையாக இவரின் அபாயத்து பாட்டி என்ற பதிவுதான்
என்னை மிகவும் கவர்ந்தது. வலைப்பூக்களில் மருத்துவ
விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியாக பதிவுகள் எழுதுவதை அனைவரும்
வரவேற்க வேண்டும். அடுத்ததாக இவர் வலைப்பூவின் தலைப்பு
"இலையிதிர்காலம்" கேட்கவே அழகான பல வடிவங்களை
மனதுக்குள் ஏற்படுத்தும் வார்த்தை.

தருமி

பேராசிரியர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், அனுபவசாலி,
அரசியல் விமர்சகர், மிகுந்த சமூக அக்கறை கொண்டவர்,
நல்லவர், வல்லவர், மதுரைக்காரர், கேள்வி கேட்பதில் வல்லவர்
(பதிலும் தெரிந்தே இருக்கும்) இப்படி நிறைய சொல்லலாம்.
புதிதாக வலைப்பதிய வருபவர்கள் காமா சோமா என்று பதிவு
எழுதாமல் மூத்த வலைப்பதிவர்களை பார்த்து உபயோகபூர்வமாக
எழுத வேண்டும். ஏன் சொல்றேன்னா இவருடை வலைப்பூ
பார்த்த பிறகுதான் பதிவு எழுதுனோம்னா அதுல பிரயோஜனமா
எழுதனும் அட்லீஸ்ட் சுவாரசியமாவாச்சும் எழுதனும். ரெண்டும்
இல்லாம நாலு பேர் மட்டும் ரசிக்கற மாதிரி கும்மிகள் அடிக்கறது
அந்த நேரத்துக்கு வேண்டுமானால் சுவாரசியமா இருக்கலாம்.
பின்னால நாம் என்ன எழுதிருக்கோம்னு பாக்கும்போது
"ஒண்ணுமில்லன்னு" தோணிட கூடாது. இந்த அனுபவம் இவர்ட்ட
கத்துகிட்டதுதான்.

இன்னும் அபிஅப்பா, கண்மணி டீச்சர், இலவசகொத்தனார்,
பெனாத்தல் மற்றும் அண்ணாச்சி அவர்கள் விடுபட்டுள்ளார்கள் அவர்களுக்கும் என் முதற்கண் மரியாதைகள். பதிவு ரொம்ப
பெருசா போச்சு அதனால அடுத்த பதிவுல எழுதறேன். :))
மேலும் வாசிக்க...

Monday, December 24, 2007

பேரன்போடு ஒரு சரம்

தனக்கான வலைப்பதிவில் அதிகம் எழுதாவிட்டாலும் பாலராஜன்கீதா அவர்கள் தன் வலைச்சரப்பதிவுகளில் விரிவாகவே அறிமுகங்களை வழங்கினார். எதை எழுதுவது எதை விடுவது என்று இணைப்புகளை அள்ளித்தந்தார். மேலும் பதிவுகளை இடுவதில் மழை காரணமாக இணையத்தொடர்பு பிரச்சனை அவருக்கு இருப்பதால் இதுவரை நமக்களித்த சரத்திற்கு பாலராஜன்கீதா அவர்களுக்கு நன்றி .

--------*******-------

அடுத்ததாக எழுத வரப்போறவர் பற்றி என்ன சொல்றது தலைப்பை வைத்தே பாதி பேரு கண்டு கொண்டிருப்பாங்க.. இந்த இந்த மாதிரி தம்பிகதிர்ன்னு ஒருத்தர் இருக்காருங்க (இவ்வளவு சொன்னாப்போதுங்காறார் ஆனா விடலாமா ) எந்த எந்த மாதிரி பதிவுகள் அவரைக்கவர்ந்ததுன்னு சொல்லபோறார் அன்போடும் பேரன்போடும் மட்டுமே இருப்பவராச்சே வாங்க படிக்கலாம்.... :) பொதுவா பார்க்கறவங்க பேசறவங்க எல்லா விசயத்தையும் அவர் பார்வையில் விமர்ச்சிக்கிறவர் எனவே பதிவுகளைப்பற்றிய விமர்சனங்களை விரிவாகத் தருவார் என நினைக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Sunday, December 23, 2007

பேரன்புடன் ஒரு சரம்

வலைச்சரம் இந்த வாரம் யாராக இருக்கும் என்று ஆவலாக
எட்டிப் பார்க்கும் வாசகர்களுக்கு எனது வணக்கம்.
விதிமுறைகளின்படி என் முதல் சரம் சுயபுராணமா இருக்க
வேண்டும் என்பதால் இங்கே எனது சுயபீத்தல்கள் மட்டுமே
இருக்கும். ஏற்கனவே பலர் வாசித்திருப்பீர்கள்
மீண்டும் அதை நினைவு படுத்தி உங்களை காயப்படுத்த
விரும்பவில்லை. இதுவரை என் பூவை வாசித்திராதவர்கள்
இச்சரத்தின் முதல் பூவின் மூலம் என்னை தெரிந்து கொள்ளலாம்.

ஏனைய நண்பர்களை போலவே எந்த நோக்கமும் இன்றி எழுத
ஆரம்பித்தவன் இன்றுவரை அதையே தொடர்கிறேன். என்
வலைப்பூவை ஆரம்பகாலத்தில் இருந்து வாசித்தவர்கள் இப்போதுள்ள மாற்றத்தை எளிதாக காணலாம். ஆரம்பத்தில் நகைச்சுவையாக
எழுதினேன். அப்போதுதான் நிறைய பேர் என்னை கவனித்தார்கள்
எனக்கு நிறைய நண்பர்கள் தந்த தண்டவாளத்துல ஒண்ணுக்கு
போனா தப்பா? பதிவுதான் என் முகவரி. இதை எழுதும்போது
பயங்கர காமெடின்னு நினைச்சேன், ஆனா இப்ப வாசிச்சா எனக்கே
சிரிப்பு வரமாட்டேங்குது.

வாலிப வயசு1 2 3 4 என்ற நகைச்சுவையும் வெகுவாக எல்லோராலும வாசிக்கப்பட்டது. தெருக்கூத்து பற்றி எழுதியது கிராமத்தையும்
மண்வாசனையும் பிரிந்து நகரத்து புழுதியில் கரைந்துவிட்ட
உள்ளங்களை என் பக்கம் சேர்த்தது. எப்படி என்ற வரிசையில்
அனைவரும் பதிவு எழுதிக் கொண்டிருந்த நேரம் வித்யாசமாக
வறட்டி தட்டுவது எப்படி? என்று நகைச்சுவையாக பதிவு போட
கிராமத்து நினைவுகளை கிண்டி கிளறி நோண்டி விட்டதாக பலர்
குற்றம் சாட்டினார்கள். மேலதிகமா ஒரு அம்மணி மாட்டு
சாணியவே பாத்ததில்லன்னு பின்னூட்டத்துல சொன்னாங்க.

இப்படி நகைச்சுவையா எழுதிட்டு இருந்தப்பதான் கொஞ்ச நாள்ல
போர் அடிச்சது(மேட்டர் இல்லன்றத இப்படியும் சொல்லலாம்)
ஆங்கிலப் படங்கள் பாத்துட்டு உதார் விடறது. சிறுகதை எழுதறதுன்னு
வேற பக்கம் போனேன். பள்ளில படிக்கும்போதே ஆங்கிலப்படங்கள்
அதிகமா பார்ப்பேன் அதுல்லாம் காட்சில்லா, ஜுராசிக் பார்க் மாதிரி
இங்க ரசனை வேற மாதிரி போய் நிஜங்களின் நிழல்களை உணர்த்தும்
படங்களை பார்க்க ஆரம்பிச்சேன். அப்படி பார்த்த படம் த்ரீ பரியல்ஸ்
(three Burials) நட்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து
எடுத்திருக்கும் படம் உலகத்துலயே இது ஒண்ணுதான்.

படைப்புகள்ல எனக்கு மிகவும் பிடித்தமானது சிறுகதைகள்தான்
சொல்ல வரும் கருத்தை, உணர்வை காட்சிப்பூர்வமா பதிவிக்க
சிறுகதையால் மட்டுமே முடியும்னு நம்பறேன். அந்த வகைல
என்னோட சிறுகதைகளுக்கு ஓரளவு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்
வாசகர்கள். எழுதின சிறுகதைகள் எல்லாமே சொந்த வாழ்விலும்
நேரிலும் பார்த்த அனுபவங்களே, ஒன்று கூட கற்பனை அல்ல.
எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி இருந்தாலும் எனக்கு
பிடிச்சதா மாணிக்கம் பொண்டாட்டி, பூனைகளுடன் உறங்கும்
கோபால் மற்றும் அன்பின் நிராகரிப்புகள் என்ற மூன்று கதைகள்.
சமீபத்தில் எழுதிய ரகசிய தடங்களில் படிந்திருக்கும் மவுனங்கள்
கூட புதிய முயற்சியாக trans gender சப்ஜெக்டை எடுத்திருந்தேன்.
இவை எல்லாம் சிறந்த கதைகள் என்று சொல்ல முடியாது
ஆனால் நல்ல துவக்கம் என்று சொல்லலாம்.

எனக்கு எல்லா விஷயத்திலும் சீக்கிரமே சலிப்பு வந்துவிடும்
ஆனால் சலிப்பு வராத விஷயம் இசை, சினிமா, புத்தகங்கள். இங்க
புத்தகங்கள் அதிகமா கிடைக்காட்டியும் நண்பர்கள் மூலமா
புத்தகங்கள் கிடைச்சது. புயலிலே ஒரு தோணி படிச்சதுக்கு
அப்புறம்தான் என்னோட வாசிப்பும் சரி எழுத்தும் சரி வேறு
தளத்துக்கு மாறுச்சு. அற்புதமான நாவல் பிறகு அய்யனாரிடம்,
ஆசிப்பிடமும் ஆட்டையை போட்டு படித்த நூல்களை வலைப்பூவில்
நூல்நயம் என்ற பிரிவின் கீழ் பீற்றிக்கொண்டதை பார்த்து
எலக்கியவாதி என்று ஊர் தூற்றியது உலகறிந்த கதை. அந்த
நூல் அறிமுக பதிவுகளில் எனக்கு பிடித்தது சதுரங்க குதிரை

கவிதை முயற்சி எல்லாமே சொதப்பலாதான் முடிஞ்சிருக்கு
ஆனால் அக்கா பிறந்தநாளுக்காக எழுதின கவிதையான
பேரன்பு கொண்டவள் என்ற கவிதைதான் எழுதியதிலேயே
சிறந்ததுன்னு சொல்வேன். தயவு செய்து கவிதை லேபிள் க்ளிக்கி
வேறெந்த கவிதையும் படிச்சிங்கன்னாஎன்னோட
இமேஜே காலியாகிடும்.

பத்து சுட்டிகளுக்கு மேல கொடுக்க கூடாதுன்னு பாத்தேன்.
பில்டிங்காச்சும்ஸ்ட்ராங்கா குடுப்பமேன்னு ஆர்வத்துல
அதிகாயிடுச்சு.
மேலும் வாசிக்க...

Friday, December 21, 2007

படித்ததில் பிடித்த இடுகைகள்

படித்ததில் பிடித்த இடுகைகள்

தமிழ்ப் பதிவுகளில் படித்த இடுகைகளில் பிடித்தவை அதிகம் இருப்பினும் அவற்றில் சிலவற்றை இங்கே அளிக்கிறேன்.

உங்களைப்போலவே தனித்துவமான இளவஞ்சியை வலையுலக வாசகர்கள் பலரும் அறிந்திருப்பர்.

காவல்துறையிலிருந்த தன் அப்பாவின் என்ஃபீல்ட் புல்லட் குறித்த இடுகையைச் சாதாரணமாக ஆரம்பித்து இறுதியில் வாசிப்பவரின் மனதைக் கவர்ந்திருப்பார்.

வென்று வாடி என் மகளே என்று தன் மகளிடம் சொல்லி அவளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைக்கும் இனிய முதல் நாளில் அவளுடன் இல்லாமல் இப்படி அயல்நாட்டில் இருக்கிறோமே என்ற ஆதங்கத்தில் எழுதிய இடுகை இங்கே.

திருமணம் செய்துகொள்ளப்போகும் ரங்கமணி தங்கமணிகளுக்காகக் கல்யாணமாம் கல்யாணம் என்ற சிறு தொடர் பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6 வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது எனலாம்.

எமிலி என்றொரு தோழி என்ற இடுகையில் தோழி அப்படின்னு ஒருத்தி இல்லாத வாழ்க்கைய ஆம்பளைங்க எல்லாம் கொஞ்சம் கண்ணை மூடிக்கிட்டு மனசுக்குள்ள கற்பனை செஞ்சு பாருங்க அது மிக வறட்சியாக இருக்கும் என்று தன் கட்சிக்கு ஆள் சேர்க்கிறார்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

நாராயண் வாசகர்களைக் கவருவதற்காகவே உருப்படாதது என்பதைப் பதிவின் தலைப்பாக வைத்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.

கணினி க்ராஷ் ஆனால் வரக்கூடிய பெரும் பிரச்சனை எதுவும் வராமல் காத்துக்கொள்ளும் சர்வம் செர்வர் மயம் விவரத்தைத் தருகிறார்.

இந்த இடுகையில் இந்தியாவின் சமச்சீரின்மைக்குக் காரணமாக பல கேள்விகளை எழுப்புகிறார்.

இறை நம்பிக்கையற்ற தன்னைப் போன்றவர்களுக்குக் கூட கடவுள் எனக் கருதப்படும் ஒரு உருவத்தினை இப்படிப் போட்டிருப்பது சங்கடத்தினை உண்டாக்குகிறது என்கிறார்.

எங்கோ போகிறோம் ஆனால் எங்கு போகிறோம் என்று தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார் இந்த இடுகையில்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

நகைச்சுவைக் கலக்கல் பதிவர்கள் என்றால் எனக்கு முதலில் நினைவிற்கு வருபவர் டுபுக்கு அவர் எழுதியுள்ள ஜொள்ளித்திரிந்ததொரு காலம் தொடர் பதிவுகள் நகைச்சுவையின் உச்ச கட்டம்.

தனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றி தனக்கே உரிய நையாண்டியுடன் படிச்சவன் பதிவக் கெடுத்தான் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

தங்கமணிக்காக டிஷ்வாஷர் வாங்கியதன் பின்புலத்தினை இங்கே வாசிக்கலாம்.

இந்த இடுகையைப் படித்தவுடனே நமக்கு எழும் எண்ணம் நாமும்தான் பல திருமணங்களுக்குச் சென்றிருக்கிறோமே இதுபோல நாம் ஏன் முன்னமே எழுதவில்லை என்பதாக இருக்கக்கூடும்.

பெரியவனா(ளா)னதும் என்னவா ஆகப் போற? என்பதற்குக்கூட இவ்வளவு நகைச்சுவையாக எழுத இயலுமா ?

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

அடுத்ததாக என்னைக்கவர்ந்த பதிவு மடத்துவாசல் பிள்ளையாரடி (பதிவர் கானா பிரபா)

கடந்த இரு வருடங்களாக வலை பதிந்து வரும் இவர், வருட இறுதியில், தான் அந்த வருடத்தில் எழுதிய இடுகைகளைத் தொகுத்து ஒரு இடுகையாகத் தருகிறார். மற்ற பதிவர்களும் இந்த உத்தியைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 2007ஆம் ஆண்டிற்கான தொகுப்பினுள் 2006ஆம் ஆண்டிற்கான தொகுப்பின் சுட்டியையும் அளித்திருக்கிறார்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

மனதைக் கவர்ந்த பல பதிவுகளில் ஒன்று வே.சபாநாயகம் அவர்களின் நினைவுத் தடங்கள்

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
மேலும் வாசிக்க...

Wednesday, December 19, 2007

எதை விடுவது ? எதைத் தொகுப்பது ?

எதை விடுவது ? எதைத் தொகுப்பது ?

படித்த பதிவுகளில் பிடித்த இடுகைகளைத் தொகுப்பது எளிதான செயல் என்று நினைத்திருந்தேன். ஆனால் செயலாக்க முயன்றபோதுதான் ஒவ்வொரு பதிவரும் எழுதிய இடுகைகளில் சிறப்பான இடுகைகளைத் தொகுக்க ஆரம்பித்தால் அதுவே ஒரு தனி இடுகையாகும்போல் உள்ளது. முதல் தவணையாக பின்வருவனவற்றை இங்கே இடுகிறேன்.

தமிழ்ச்சொல் ஆராய்ச்சியாளர் இராம.கி. அய்யா அவர்களின் வளவு பதிவினைப் பலர் அறிந்திருக்கக்கூடும். அதில் வந்த இடுகைகளில் சில :

வலைச் சொற்களுக்கு (webterms) இணையான தமிழ்ச்சொற்களையும் விளக்கங்களையும் இங்கே காணலாம்.

"இனி" பின்னொட்டாக வரும் கணினி, கவிதாயினி, தொகுப்பாளினி சொற்கள் சரியா தவறா என்ற ஐயத்திற்கு விளக்கத்தை தருகிறார் இங்கே.

சந்த வசந்தம் மடற்குழுவின் "கையிற் கிடைத்த கனி" என்னும் பாட்டரங்கத்தில் பங்கேற்று மரபு வெண்பா வடித்து மகிழ்விக்கிறார்.

திரு நாகூர் ரூமி எழுதி திண்ணையில் வெளிவந்த "தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும்" என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக சற்றே அறச்சீற்றத்துடன் இட்ட இடுகை இதோ.

தேன்கூடு திரட்டி நடத்திய சுடர்வழிச்செய்தி தொடர் ஓட்டத்தில் அய்யா அவர்களின் இடுகை மூலம் காளையார்கோவில் பற்றிய பல புது செய்திகளையும் தமிழர்களின் தாழ்வு மனப்பாங்கினையும் அறிவியல் தமிழ் வளரவேண்டிய நிலைமையையும் அறிந்துகொள்ளலாம்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
அடுத்ததாக விரிவெளித்தடங்கள் செல்வராஜ் அவர்களின் பதிவில் பிடித்த இடுகைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவும் அவற்றைத் தேர்ந்தெடுக்கச் சற்றே கடினமாக இருந்தது.

இந்தப் பதிவில் வருமுன் காப்போம் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.

கணினியில் பயன்படுத்தப்படும் ஐப்பீ முகவரி குறித்து எளிதில் விளங்கிக் கொள்ளும் விதத்தில் இங்கே அளித்திருக்கிறார்.

தேன்கூடு சாகரன் அவர்களுக்கு இதன்மூலம் நினைவஞ்சலி செலுத்துகிறார்.

இந்த இடுகையை வாசித்ததும் காரணமறியாச் சில மகிழ்தருணங்கள் உங்களுக்கும் நிகழ வாய்ப்புள்ளது.

குடும்பத்தினர் அடிக்கடி கலந்து பேசி மகிழ்வதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த இடுகையை ஏற்றுக் கொள்ளலாம்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
வலை உலகிற்கு வந்த தாய்க்குலத்தில் ஒருவரான அப்டிப்போடு அவர்களின் அரசியல் அறிவு அபாரமானது எனலாம். சென்ற மாநிலத் தேர்தலில் அவரின் கணிப்புகள் ஏறக்குறைய சரியாகவே இருந்தன என்பதை அவரின் இடுகைகளை வாசித்தவர்கள் அறிவர். நல்ல வாய்ப்புகள் இருந்தும் தான் தமிழக அரசியலில் புக விரும்பவில்லை என்றுகூட அவர் ஒரு இடுகையில் எழுதியிருந்தார்.

அவர் தன் அன்பிற்குரிய பாட்டியை நினைத்து எழுதிய இடுகை இங்கே.

இந்த இடுகையில் அவரின் மஞ்சள் பை மகிமையைக் காணலாம்.

பினாத்தலாரின் வைஃபாலஜி தொடங்குவதற்குப் பல மாதங்கள் முன்பே கணவர்களை எரிச்சல்பட வைத்தார் :-)

இங்கே அவருடைய வாசிப்பு அனுபவத்தை அறிந்துகொள்ளலாம்.

அவர் எழுதிய தொடர் இடுகைகள் அரசு ஊழியர்கள் பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4 வாசித்த அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
தமிழ் வலை உலகத்தின் முன்னோடிகளுள் ஒருவர் கவினுலகம் நா.கண்ணன்.

அவர் தமிழ்த்திரைப்படங்களைப்பற்றி எழுதிய தொடர் இடுகைகளை இங்கே காணலாம்.

சரஸ்வதி பூஜை குறித்துத் தான் வாசித்த கட்டுரை ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

இந்த இடுகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் புத்தம் புது பத்து கட்டளைகளை வாசிக்கலாம்.

பெரியார் திரைப்படம் குறித்து இப்படி எழுதியுள்ளார்.

தமிழ் உரைநடைப் பேச்சில் பிறமொழிக் கலக்கலை இங்கே சாடியுள்ளார்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
தமிழ் வலைஉலக ஜிரா அவர்களின் இனிய(து கேட்கின்) இடுகைகளைச் சுட்டிக் காட்டுவது மிக எளிது. அது பதிவின் சுட்டிதான் - எல்லா இடுகைகளும் இனியவைதாம். சிரமம் பார்க்காமல் எல்லா இடுகைகளையும் வாசித்து இன்புற வேண்டுகின்றேன்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
சுட்டிகளில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும். பின்னூட்டத்தில் தெரிவித்தால் சரி செய்துவிடுகிறேன்.
அடுத்த இடுகையில் மீண்டும் சந்திப்போம்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
மேலும் வாசிக்க...

Monday, December 17, 2007

வந்தேனே சபைக்கு முன்னின்று வந்தனம் தந்தேனே

வந்தேனே சபைக்கு முன்னின்று வந்தனம் தந்தேனே

மங்கலம் பொங்கும் மார்கழி முதல் திருநாளில் வலைச்சரம் வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு என் வணக்கம்.

இணையத்தமிழை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் அலுவலகத் தோழர் J கல்யாண் ( தேன்கூடு திரட்டியை அவர் பல மாதங்களுக்குப் பிறகுதான் தொடங்கினார்) முதலில் அவரை நன்றியுடன் நினைவுகூர்ந்து இந்த வார வலைச்சரம் தொடுக்கத் தொடங்குகிறேன்.

தேன்கூடு கல்யாண் இடுகைகள்
இந்த இடுகையை இன்னும் மேம்படுத்த எண்ணியிருக்கிறேன்.

அலுவலகத்தில் கல்யாண் என்ற பெயரில் இன்னொருவரும் இருந்ததால் நாங்கள் அவரை ஜாவா கல்யாண் என்றுதான் அழைப்போம். தமிழில் அதிகம் ஆர்வம் உடையவர் என்று பேச்சுவாக்கில் தெரிந்துகொண்ட பிறகு எங்கள் நட்பு இன்னும் அதிகமாகியது. பிறகு “தினம் ஒரு கவிதை” தொடர் மடல்கள், உயிரெழுத்து, மரத்தடி, ராகாகி குழும மடல்கள் முகமறியா பல இனிய உலகளாவிய இணைய நட்புகளை ஏற்படுத்தின. வலைப்பதிவுகள் வந்தபிறகு பின்னூட்டங்கள் அளித்து ஊக்குவிப்பது வழக்கமாயிற்று. அதற்காகவே பிளாக்கர் மற்றும் வேர்ட்ப்ரஸ் தளங்களில் இணைந்தேன்.

சில மாதங்களுக்கு முன் பொன்ஸ் ~ பூர்ணா அவர்கள் வலைச்சரம் தொடுக்க இயலுமா என்று வேண்டுகோள் விடுத்தார். நான் இடுகைகள் எதுவும் எழுதுவதில்லையே; பின்னூட்டம் மட்டுமே அளித்துக்கொண்டிருக்கிறேன் எனினும் வலைச்சரம் தொடுக்க வாசிக்கும் அனுபவம் போதும் என்ற எண்ணத்தில் இசைகிறேன் என்றேன்.

வலைச்சரத்தில் வந்த இடுகைகளை வாசித்தால் பல பதிவர்கள் பெயர் திரும்பத் திரும்ப வந்திருப்பதைக் காணலாம். என் இடுகைகளிலும் அதனைத் தடுக்க இயலாது என்றே எண்ணுகிறேன். நனவிடைத் தோய்தல் எல்லோருக்கும் வழக்கமான ஒன்றுதானே ? எனினும் என்னால் இயன்றவரை நல்மணம் வீசும் மாலையாகத் தொடுக்க முயற்சி செய்கிறேன். வாய்ப்பளித்த பொன்ஸ்~பூர்ணா அவர்களுக்கும் ஆலோசனைகள் அளித்த முத்துலெட்சுமி அவர்களுக்கும் இடுகைகளை வாசிக்க வருகை தரும் உங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த இடுகையில் மறுபடியும் சந்திப்போம். :-)
மேலும் வாசிக்க...

ஒருவகையில் இது வாசகர் சரம்

மிக ஆர்வமாய் தானே வலைச்சரம் தொடுப்பதாக சொன்ன முத்துக்குமரன் வேலை மிகுதியால் தன் மனதை கவர்ந்த பதிவுகளை முற்றிலுமாக நம்மிடம் பகிர்ந்து கொள்ள இயலாமைக்கு வருந்தினார் . கண்டிப்பாக பிறிதொரு சமயம் நமக்கு அவற்றையெல்லாம் மீண்டும் சரமாக தொடுக்கும் வாய்ப்பு வரும் என்றே நினைக்கிறேன்.நன்றி முத்துக்குமரன்.

---------*******---------

அடுத்ததாக இந்த வாரம் வரவிருக்கும் பதிவர் அதிகம் பதிவுகள் இடுவது இல்லை என்றாலும் நல்லதொரு வாசகர் நம்முடைய பதிவுகளுக்கெல்லாம் ... எனவே வாசகர் விருப்பம் அறிய வாய்ப்பு. தன் நகைச்சுவை திறனுடைய பின்னூட்டங்களின் மூலம் மற்றவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பதிவர். அவருடைய பெயரில் மனைவி பெயரை இணைத்து அன்பை வெளிப்படுத்துவது எனக்கு மிக அழகாக இருக்கிறது. பாலராஜன்கீதா தான் அவர்கள்.வாசகராக மட்டுமில்லாமல் எழுதிக்கொண்டிருங்கள் அவ்வப்போது :)
மேலும் வாசிக்க...

Friday, December 14, 2007

சரம் தொடுக்காது விடைபெறுகிறேன்.

மிகுந்த ஆவலோடு வலைச்சரம் தொடங்கினேன். நான் இதைத் தொடங்கிய நேரம் அலுவலகத்தில்
எதிர்பாராத பணிச்சுமை. ஆண்டு இறுதி என்பதாலும், நிண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்த ஒரு Project செவ்வாய் அன்று கிடைத்தது. அனைத்து நடைமுறைகளையும் இந்த வார இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் இணையப்பக்கமே வர முடியாது போயிற்று.

எனக்கே மிகுந்த ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. இந்த ஏமாற்றத்தை ஈடுகட்டும் வகையாக எனது பதிவில் வலைச்சரமாக தொடுக்க நினைத்தவைகள் என்று பதிவிட எண்ணி இருக்கிறேன். இராம.கி அய்யாவின்.தமிழ் பதிவுகள், பேராசிரியர் தருமியின் இட ஒதுக்கீடு, அப்சல் குரு தூக்கு தொடர்பான பதிவுகள், அசுரனின் பல்வேறு விவாதப் பதிவுகள், இன்னும் நான் ரசித்த சிறுகதைகள், புத்தக வாசிப்புகள், கவிதைகள், எனக்குள் புன்னைகைப் பூக்கச் செய்த சில வலைதளங்கள் என பலவற்றை தொகுக்க எண்ணியிருந்தேன்.

மறுபடியும் ஒருமுறை மன்னிப்பு கேட்டு விடைபெறுகிறேன்.



அன்புடன்
முத்துகுமரன்
மேலும் வாசிக்க...

Tuesday, December 11, 2007

புதுமைப் பெண்கள் - வலைச்சரத்தில்

மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கும் எந்த சமுகம் வளர்ச்சி என்னும் நிலையை அடையாது. அன்பிற்கு அடையாளமாகயும், தெய்வங்களாகவும், தெய்வ தன்மை சூட்டப்பட்டாலும்,பெண்சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்திய சமூகம் வைத்திருத்திந்தது என்பது வரலாற்று உண்மை. பெண்களின் பேச்சு சுதந்திரம் என்பது கூட சமூக அமைப்பை பாதிக்காத வரையிலும் அனுமதிக்கப்பட்டது. பெண்ணின் சிந்தனைகளை தீர்மானிக்கும் உரிமையை நீண்ட நாட்களுக்கு இந்த சமூகமே வைத்திருந்தது. அடிமைப்படுத்தப்பட்ட நிலையை பெருமைமிகுந்ததாக பெண்களை நம்ப வைத்ததும் இதன் அடிப்படையிலே. கடந்த நூற்றாண்டு பல மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தியது. கல்வி வாய்ப்புகளும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திய பொருளாதார சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வலைப்பதிவுகளில் பல்வேறு துறைகளில், தளங்களில் தங்கள் ஆளுமையையும், சிந்தனைத் தெளிவையும் கொண்டிருக்கும் பெண் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்வளிக்க கூடிய ஒன்றாகும். அத்தைகைய சில பதிவர்களையும், அவர்களின் பதிவுகளையும் இந்த சரத்தில் தொடுக்கிறேன். என் பார்வையில் வராமல் சிறப்பாக இயங்குபவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் இங்கு தெளிவு படுத்திவிடுகிறேன். என் வாசிப்பின் எல்கைக்குள் இப்பதிவுகளை தேர்ந்தெடுத்திருக்கிறேன் சரம் தொடுக்க,


சமூகத்தின் போலித்தனங்களை தனது சாட்டையடி அணுகுமுறையால் அம்பலப்படுத்தியதில் தோழி லிவிங் ஸ்மைல் வித்யாவின் எழுத்துக்கள் மிக முக்கியமானவை. சமூகத்தால் ஒடுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு என பல்முனை தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்ட வரும் திருநங்கைகளின் பிரதிநிதியாக, அவர்களின் உணர்வுநிலையை பொதுச்சமூகத்தின் அறிவுக்கு கொண்டுவருவதில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர். மரணம் என்றால் என்ன அதன் வலியையும் ஆழமாக பதிவு செய்திருந்தார். திருநங்கைகளை கேலிப்பொருட்களாகவே பாவிக்கப்பழகிவிட்ட மனங்களுக்கு அதன் பிண்ணனியில் இருக்கும் உறைய வைக்கும் பால்மாற்று அறுவை சிகிச்சையினைப்பற்றி தெரிவிக்கும் பதிவு பால்மாற்று அறுவை சிகிச்சை - ஒரு வீடியோ பதிவு, பரவலாக ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்று தந்த இந்த பதிவு,
எயிட்ஸ் விழிப்புணர்வு என்ற பெயரில் நடக்கும் அவலத்தினை அற்புதமாக அலசும் பதிவு உலக எயிட்ஸ் தினம்.


அழகியலும், சமுகப் பொறுப்பும் ஒருங்கே காணப்படுவது மிக அரிதான ஒன்றாகும். ஆனால் இவரின் எழுத்துகளில் இவை இரண்டும் காண கிடைக்கும். மிக நுட்பமான எழுத்துக்கு சொந்தகாரர். தன் எழுத்தின் உலகத்திற்குள் வாசகனை பங்கேற்க்க செய்யும் அசாத்திய திறமை உடையவர். மனித நேயமும், ஆழமான அரசியல் பார்வையை உடைய இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்தது, அறிவுஜீவிகளின் முகத்திரையை அம்பலப்படுத்தும் அழுத்தமான பதிவு
அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் , சமீபத்தில் பரவலாக சர்ச்சையை கிளப்பிய ஞாநி விவாகாரம் தொடர்பாக இவர் இட்ட பதிவு, எந்த வளையத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் தான் நினைப்பதை தெளிவாக எடுத்துரைக்கும் திறமையை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள் , நான் குறிப்பிட நினைத்த இவரின் மற்றொரு பதிவான ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை பதிவினை தமிழ்நதி குறிப்பிட்டு விட்டார். நான் குறிப்பிட நினைத்த பலபதிவுகளை தன் கடைசிப்பதிவில் தமிழ்நதி குறிப்பிட்டு விட்டார். :-)

சமூகப்பொறுப்புடன் எழுதும் மற்றொரு பதிவர் மங்கை. பெண்கள் நலன், பெண்களுக்கெதிரான வன்முறைகள், சிறு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், எயிட்ஸ் விழிப்புணர்வு, மனநலன் மருத்துவம் சார்ந்த பதிவுகள் என சமூக அக்கறையுடன் எழுதப்படும் இவரது எழுத்து. சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்த Sr. லயோலா அவர்களை நமக்கு அறிமுகம் செய்த பதிவு, நாட்டையை உறைய வைத்தை நிதாரி படுகொலைகள் தொடர்பான பதிவு நெஞ்சு பொறுக்குதில்லையே-நிதாரியின் நிஜங்கள், இவரது எழுத்தினால் அடையாளம் காணப்பட்ட இன்னொரு சாதனைப்பெண்மணியான மீனாட்சி பற்றி பதிவு செய்ததும் அதற்கு நான் தாங்க மீனாட்சி பேசறேன்... என்று நம்மிடையே பகிர்ந்து கொண்ட மனிதநேய பதிவர்.

மலர்வனம் லஷ்மி, பொதுவாக பெண்கள் விவாதிக்க தயங்கும் தலைப்புகளில் எந்தவித தயக்கமும் இன்றி மனதில் பட்டதை தெளிவாக எடுத்துவைக்கும் பதிவர். பெண் அடிமைத்தனத்தை கேள்விக்குட்படுத்துபவர், பெண்ணியம் சார்ந்த சர்ச்சைகளில் இவரது பதிவுகள் இடம் பிடித்திருக்கின்றன. எதையும் கேள்விக்குட்படுத்தபடும் இவரது சிந்தனை தளம் சிறப்பானது. தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒரு பெண், அடங்கமறு! ஐ.ஐ.டியில் பணிபுரிந்துகொண்டே அங்கு நிலவும் சமூக நீதிக்கெதிராக போராடிவரும் பேராசிரியர் அவர்களின் மகள் கவிஞர், பத்திரிக்கையாளர் மீனா கந்தசாமி அவர்களின் அவள் விகடன் நேர்காணல் அடங்கமறு அவசியம் வாசிக்க வேண்டிய நேர்காணல்

பொன்ஸ், சிறந்த வலைப்பதிவு தொழில்நுட்பவியலார். உற்சாகத்தோடு எழுத வரும் பதிவர் பலருக்கு தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை செய்துவருபவர். எனக்கும் பலமுறை உதவி செய்தவர். அதற்கு சிறப்பு நன்றி. நல்ல சிந்தனையாளர். கவிதை, சிறுகதை என்று பரவலாக தனது முத்திரையை பதிந்திருப்பவர். இவரது சந்திரா அத்தை சிறுகதை பலரது பாராட்டைப் பெற்றது. தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டிருப்பவர் என்றாலும் பரவலான வாசிப்பு அனுபவம் உடையவர். பெரியாரை பற்றி தவறாக திரிக்கும் பலருக்கு மத்தியில் இவரது நட்சத்திர வாரத்தில் வந்த பெண் ஏன் அடிமையானாள் ஆழமான அற்புதமான பதிவு.புரிதலுடன் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தை விமர்சிக்கும்.

அப்படிப்போடு! மதுரை வீரம் ஈரமும் எழுத்தில் தெறிக்கும் எழுத்துக்கு சொந்தகாரர். பதிவுலகில் நான் அக்கா என்று அழைக்கும் ஒரே பதிவர். இவரது அரசியல் அறிவு ஆச்சிரியமளிக்ககூடிய ஒன்று. சென்ற சட்டமன்ற தேர்தல் பற்றிய அவரது கருத்துகணிப்புகளை வாசிப்பவர்களுக்கு இது எளிதாக புரியும். அதிகமான பதிவுகள் இருப்பதால் இணைப்பு கொடுக்கவில்லை. மண்வாசனை மணக்கும் இந்த பதிவு அவரது நட்சத்திர வாரத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
உள்ளடங்கும் ஆமைகள்.




இன்னும் சிலர் விட்டுபோயிருப்பதை உணர்கிறேன். வாசித்து விட்டு உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்


















.
மேலும் வாசிக்க...

Monday, December 10, 2007

மல்லிகைச் சரம்

கை தட்ட வந்தவன் கைகளுக்கு சரம் தொடுக்க வாய்ப்பு. எந்த வித முன் தயாரிப்புகளுமின்றி இந்த வார வலைசரத்தை தொடுக்க இருக்கிறேன். எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பு இன்னுமொரு எதிர்பாரத மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. வலைச்சரத்தின் 250வது சரமிது. இதுவரை இந்த வலைச்சரத்தை சிறப்பாக செய்து வந்த அனைவருக்கும் என் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். சிந்தாநதி,பொன்ஸ் மற்றும் அழைப்பு அனுப்பிய முத்துலட்சுமி அவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. சில தகவல் பரிமாற்ற குளறுபடிகளில் நண்பனுக்கு பதிலாக நான் வலைச்சரம் தொடுக்கிறேன்

அவரவர் நிலத்தில்
உதிரிப்பூக்களாய் மணம் வீசும்
வலைப்பூக்களை
தமிழ் கொண்டு
தொடுக்கிறேன்
சரமாய் வலைச்சரமாய்.


வலைச்சரத்தின் விதிகளின் படி என்னைப்பற்றியும் என் பழைய பதிவுகளைப் பற்றியும் விளம்பரபடுத்திக்கொள்ள வாய்ப்பிருந்தாலும் அதிலேதும் எனக்கு நாட்டமில்லை. நான் படித்தவற்றை, படித்தவற்றுள் ரசித்தவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.


இந்த வார வலைச்சரத்தை புற்றுநோயால் போராடிக் கொண்டிருப்பினும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து வலை பதிந்துவரும் அனுராதா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்ற வேண்டிக்கொள்கிறேன்
மேலும் வாசிக்க...

கூடல்நகர் கவிஞரின் சரம்

வலைச்சரத்திற்கு யார் வாசகர்கள் என்று யோசித்தேன் என்று குறிப்பிட்டார் தமிழ்நதி ... அப்படி ஒரு குறிப்பிட்ட வாசகர்களால் படிக்கப்படாமல் எல்லாராலும் இன்றுமட்டுமில்லாமல் என்றாவது பதிவு படிக்க வருபவர்களுக்கும் ஒரு நல்ல தொகுப்பாய் கையில் கிடைக்க இங்கே எழுதும் ஒவ்வொருவரின் ரசனையும் எல்லாருக்கும் போய் சேரவேண்டும் என்று தான் இது தொடங்கப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்..
நதியின் கவனம் கவர்ந்த பதிவுகளின் சரம் ஒரு நதியைப்போலவே (அவரே சொல்லிக்கொண்டார் நீளம் நீளம் என்றாலும்) அவருடைய வர்ணனைகளோடான பதிவுகளின் அறிமுகம் அருமையாக அழகாக சலசலத்து ஓடியது . சிரத்தையான தொரு தொகுப்பிற்கு நன்றி தமிழ்நதி .
----------------------******************----------------
அடுத்த இன்றிலிருந்து கூடல் நகரைச்சேர்ந்த கவிஞரும் என்றும் எங்கும் நட்பை விரும்பும் எளியன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் முத்துக்குமரன் குடில் வசிக்கும் முத்துக்குமரன் வருகிறார்.விருந்து போல ரசனையா சமைத்திடலாம் சரத்தை என்று எண்ணமாம் அவருக்கு... அனைவரும் வருக!
மேலும் வாசிக்க...

Thursday, December 6, 2007

மேலும் சிலர் மற்றும் விடைபெறுதல்

'மறதி மறதி' என்பார்களே.... என்றாலும் இந்த அளவு மறதி இருக்கக்கூடாது என்று இன்று நினைத்துக்கொள்ளும்படியாக ஆகிவிட்டது. வேறொரு வேலையில் மூழ்கிக்கிடந்ததில் வலைச்சரத்தை மறந்துபோனேன். நல்லவேளையாக 'தயார்'ப்படுத்தி வைத்திருந்ததால் தப்பித்தேன்.

தமிழ்மணத்தில் எழுத வந்த ஆரம்ப நாட்களில் தமிழில் தட்டச்ச மட்டுமே தெரிந்திருந்தது. அதுவும் பத்திரிகை வேலை வலிந்து திணித்த 'அறிவு'. கணனி தொழில்நுட்பத்தில் நானறியாத சித்துவிளையாட்டுக்களை நிகழ்த்திக் காட்டிய பொன்சை வியப்போடு தொடர்ந்ததில் வாசிக்கக் கிடைத்தது நிறைய. ஆனால், புரிந்தது கொஞ்சம். இருந்தாலும், விட்டேனா பார் என்று இங்கே எல்லாம் போய் வாசித்துப் பார்ப்பேன். என் பெயரில் யாரோ பின்னூட்டமிட பொன்சிடம்தான் போய் ஒப்பாரி வைத்தேன். பொன்சின் சிறப்பம்சம் என்னவென்றால், நாம் பேயைப் பார்ப்பதுபோல (ஒருபோதும் பார்த்ததில்லை, கண்ணாடியில் தவிர) கண்முழி தள்ளிப் பார்க்கும் கடினமான விடயங்களைக் கூட, 'இதுக்குப் போயி அல்ட்டிக்கிறியே'என்பதாக தன் எழுத்து வழியாக எளிதாக்கிவிடுவார்.

நான் கவனித்த ஆட்கள் அதிகமென்றால், ஆரம்ப நாட்களில் என்னைக் 'கவனித்த' ஆட்களும் உண்டு. முன்னரெல்லாம் முத்துலட்சுமியின் பின்னூட்டம் இல்லாத எனது பதிவைக் காண்பது அரிதாக இருந்தது. என்னிடம் யாராவது வந்துபோனால் அவர்களைத் தொடர்ந்துசென்று 'யார்... என்ன..'என்று பார்த்துவிட்டு வரும் வழக்கத்தினால்
சிறு முயற்சி க்குச் சென்று பார்த்தேன். . எல்லோரோடும் தோழமை பாராட்டும் பண்பு அவர் இட்ட பதிவுகளிலும் இருக்கக் கண்டேன். மனிதநேயம் என்ற உயர்ந்த பண்பினால் ஈர்த்த பதிவுகள் சிறுமுயற்சியில் நிறையவே உண்டு.
பெண்களைப் பற்றி, பாரபட்சமுடைய இந்தச் சமுதாய அமைப்பில் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைப் பற்றி தமிழ்மணத்தில் எழுதுகிறவர்களில் பத்மா அர்விந்த் குறிப்பிடத்தக்கவர்.
சக்தி என்ற பெயரிலான வலைப்பூவில் மதி கந்தசாமி, செல்வநாயகி, பத்மா அர்விந்த் ஆகிய மூவரும் இணைந்து எழுதுகிறார்கள். பத்மா அர்விந்த்தின் கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும் என்ற பதிவை உதாரணத்திற்குச் சொல்லிச் செல்கிறேன்.
'மலர்வனம்' லஷ்மியின் பதிவுகளில் உள்ள தார்மீக கோபம் எனக்கு மிகப்பிடித்தது. 'என்னங்க நீங்க இப்படிப் பண்றீங்க'என்று கேட்பது வேறு. 'நீ எப்பிடி இப்பிடில்லாம் பண்ணலாம்... இதுக்கெல்லாம் யார் உனக்கு உரிமை கொடுத்தது?'என்று நியாயமான காரணங்களை முன்வைத்து தர்க்கிப்பது வேறு. நியாயமற்றவர்களால் பதிலளிக்க முடியாத ஆணித்தரமான கேள்விகளைக் கொண்ட நீ எல்லாம் ஒரு பொம்பளையா? என்ற பதிவை வாசித்துப் பாருங்கள். நான் மேற்சொன்னதன் காரணம் புரியும்.
எனக்கென்னவோ பழைய பதிவுகளைப் போய் வாசிக்க வாசிக்க தமிழ்மணத்தில் பெண்கள்தான் அதிக சமூக அக்கறையோடு எழுதிக்கொண்டிருக்கிற மாதிரித் தோன்றுகிறது:) (யாராவது சண்டைக்கு வந்துவிடாதீர்கள். தெம்பிருந்தாலும் எனக்கு நேரமில்லை சாமீ) மங்கையின் வலைப்பூ பக்கம் சென்றதும் அந்த எண்ணம் உறுதிப்பட்டது. ஒரு சமூக ஆர்வலரின், சக மனிதரை நேசிக்கும் கண்ணோட்டமாகவே அனைத்துப் பதிவுகளையும் பார்க்க முடிந்தது. முதுமையில் நீளும் நாட்கள், தில்லி crime capital , தேவைகள் ஆசைகள் போன்ற பதிவுகளை உதாரணத்திற்குச் சொல்லிச் செல்கிறேன்.

மங்கை சொன்ன 'அல்சைமர்ஸ்'எனக்கும் வந்துவிட்டதோ என்னவோ.... நிறையப் பேருடைய பெயர்களின் பின்னால் 'பிஸ்கெட்'டின் பின்னால் வாலாட்டிப் போகும் நாய்க்குட்டியாக தொடர்ந்து போய் வாசிப்பேன். எழுதவென்று அமர்ந்தால் நினைவில் வராதாம். என்ன செய்ய...? 'சொன்னவரைக்கும் போதும் போங்க'என்று யாரோ சொல்வது கேட்கிறது:)


எழுத்தறியாதபோதிலும் எழுதிக்கொண்டிருப்பதுபோல, இசையறியாதபோதிலும் அதில் இழைந்து தொலைந்துபோவது எனது வழக்கம். அவ்வாறான பக்கங்களில் தமிழ்மணத்தின் 'பாட்டுக்காரரான' கானாபிரபாவின் இந்தப் பக்கம் போய்ப் பார்ப்பேன்... மன்னிக்கவும் கேட்பேன். அந்தக் காலத்து பி.யு.சின்னப்பாவிலிருந்து இந்தக் காலத்து பரத் வரைக்கும் 'படங்காட்டும்'பணியைச் சிறப்புறச் செய்துகொண்டிருப்பவர் சின்னக்குட்டி. இவருடைய இந்தப் பக்கத்திற்குப் போனால் திரைப்படங்களைப் பற்றி ஒரு ஆய்வுரை செய்து சமர்ப்பிக்கக்கூடிய அளவு விபரங்களுடன் வெளிவருவீர்கள் என்பது எனது கருத்து.

வலைச்சரத்தைப் பற்றி லக்கிலுக் ஒரு கருத்துச் சொல்லியிருந்தார். அதிலுள்ள உண்மையைப் பற்றி என்னை யோசிக்க வைத்திருக்கிறது இவ்வார வலைச்சரம். யோசித்துத் தெளிந்ததைச் சொன்னால் விவகாரமாகிவிடும் என்பதால் தவிர்க்கிறேன்.

வேறென்ன மக்களே! இதுவரை உங்களுக்கு நான் அளித்துவந்த 'வதை வாரம்' மன்னிக்கவும் 'வலை வாரம்'நிறைவுறுகிறது. சொல்லித் தேய்ந்த சொற்களைச் சொல்லி விடைபெறுகிறேன். ஒருவார காலம் வலைச்சர ஆசிரியராக இருக்கும்படி கேட்டுக்கொண்ட பொன்ஸ் மற்றும் சிந்தாநதிக்கும், வழிகாட்டி அறிவுறுத்தல் வழங்கிய முத்துலட்சுமிக்கும், வாசித்துப் பின்னூட்டமிட்ட - பின்னூட்டமிடாத நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.




மேலும் வாசிக்க...

எழுத்தென்னும் இசைமடியில்...



வலைச்சரத்தின் வாசகர்கள் யார் என்ற சிந்தனை இன்று எழுந்தது. கொஞ்சம் குழப்பமாக இருந்தது. குறிப்பிட்ட சிலர்தானா... அல்லது.... ? ஒன்றும் புரியவில்லை. என்றாலும், தோளில் ஏற்றிய காவடியை ஆடித்தானே இறக்கவேண்டும். இந்தப் பதிவினைத் தவிர்த்து இன்னுமோர் பதிவு இருக்கிறது. அதன்பிறகு 'போய்ட்டு வரேங்க'என்று வேறு வேலை பார்க்கக் கிளம்பிவிடுவேன்.

முன்னரே கூறியிருந்ததுபோல 'இவுங்கள்ளாம் இவுங்க'என்று தனித்தனியாகச் சுட்டிச்செல்வது சிரமமாக இருக்கிறது. எப்படி வகைப்படுத்தலாம் என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருப்பதை விட, ஏதோ எனக்குத் தோன்றுகிற விதத்தில் கதம்பமாகச் சொல்லிச் செல்லலாம் எனத் துணிந்துவிட்டேன். வலைச்சரத்தில் சொற்களின் சித்துவிளையாட்டுகளுக்கு இடமில்லை. கவித்துவ நடையெனப்படுவதெல்லாம் புனைவுகளுக்கே.

தமிழ்மணத்திற்கு வந்த புதிதில், புதிதாகக் கிடைத்த பொம்மையின் தலையில் பற்றி தான் போகுமிடமெல்லாம் இழுத்துச்செல்லும் குழந்தையைப்போல ஒருவருடைய பக்கத்தை ஓடியோடிப் போய் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்நாட்களில் அது பெரிய ஆதர்சமாயும் ஆசுவாசமளிப்பதாயும் இருந்தது. பழைய பதிவுகளைக் கூட கிண்டிக் கிளறி பல மணித்தியாலங்களாக அவர் பக்கங்களில் உலவிக்கொண்டிருந்தேன். இதெல்லாம் யார் அவர் என்று அறியாத காலங்களில். அதனால் முதுகு சொறிகிறேன், மூக்குச் சொறிகிறேன் என்று யாரும் கிளம்பிவிடாதீர்கள். வர வர யாரையும் ஒரு வார்த்தை நல்லதாகச் சொல்லும் முன் பல தடவைகள் யோசிக்கும்படியான நிலைமையாகிப்போனதே என்று வருத்தமாக இருக்கிறது.

அலைஞனின் அலைகள் என்ற பெயரில் வலைப்பூ அமைத்து எழுதிவரும் பெயரிலியின் பக்கங்களில்தான் பகலிரவாகத் திரிந்துகொண்டிருந்தேன். அழுமூஞ்சிப் பதிவுகளாக எழுதிக்கொண்டிருக்கும் என்போன்றவர்களை அங்கதம் தெறிக்கும் அந்த நடை ஈர்த்ததில் வியப்பில்லை. புத்திசாலித்தனமாக மற்றவர்களைக் கலாய்ப்பதென்பதற்கு இயல்பிலேயே நகைச்சுவையுணர்வு அதிகமாக இருக்கவேண்டும். அவருடைய எழுத்துக்கள் புரியமாட்டேனென்கின்றன என்றொரு குற்றச்சாட்டு உண்டு. அந்த மண்ணிலிருந்து வந்ததனாலோ என்னவோ ஒரு அட்சரமும் பிசகாமல் எனக்குப் புரிந்துவிடும். அந்த மண்வாசனைக்காகவும் அவரது பதிவுகளுக்குப் போவதுண்டு. ஒவ்வொரு பதிவுகளாகக் குறிப்பிட்டுச் சொன்னால் தனிப்பதிவாகிவிடும் என்பதனால் இந்தக் கவிதை மற்றும் சிகை சிரைப்பு என்ற இந்தக் கதையை (ஒரு சோறு பதமாக என்பது தவறு-சிலது அவியாமலும் இருக்கும்) சொல்லிச்செல்கிறேன். அலைஞனின் அலைகளுள் பல வலைப்பூக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதனால், சின்னச் சின்ன குச்சொழுங்கைகளுக்குள்ளால் போய்த் திரியத் தெரிந்திருக்கவேண்டும்.


நிறங்கள் என்ற பெயரிலான வலைப்பூவில் செல்வநாயகியின் பதிவுகளைப் படித்துவிட்டு எனது நண்பர்களில் சிலர் 'உங்கள் எழுத்தை வாசிப்பது மாதிரியான உணர்வு வருகிறது'என்று ஆரம்பத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், என் மீதான மிகுதியான அபிமானத்தினால்தான் அவர்கள் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நாட்கள் செல்ல அறிந்துகொண்டேன். சமூக அக்கறையும் தார்மீக கோபமும் செல்வநாயகியின் எழுத்தின் அடிநாதமாக இருக்கின்றன. சிந்தனையைத் தூண்டும் அதேவேளை கவித்துவமும் பொதிந்த எழுத்துக்களுக்கு உதாரணங்களாக நீ நிரப்பிய இடங்கள் மற்றும் ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை ஆகிய பதிவுகளைக் கூறலாம். செல்வநாயகியின் பெயரைக் கண்டதும் அதைப் பின்தொடர்ந்து போவதை என்றைக்குமே என்னால் ஒத்திப்போட முடிந்ததில்லை.

வாசிக்கச் சுவாரசியமற்ற கசப்பான, வரண்ட விடயங்களைக் கூட தனது நடை என்ற தேன்கலந்து அலுப்புத்தட்டாமல் தருவதில் ஆழியூரானை விஞ்ச ஆளில்லை.

நடைவண்டி என்று, தமிழ்மணத்தில் தற்போது நிலவிவரும் சிறப்புப்பண்பான தன்னடக்கப்பாணியில் வலைப்பூவிற்குத் தலைப்பூ வைத்திருக்கும் இவரது எழுத்துக்கள் தலைப்பிற்கியைபுற தத்தி நடக்கவில்லை; தாவியோடுகின்றன. சாதி சூழ் உலகு...! என்ற பதிவும் பெண்ணுரிமை - நாம் அனைவரும் குற்றவாளிகளே என்ற பதிவும் இவர் அண்மையில் எழுதியவற்றில் என்னை மிகவும் பாதித்தவை. எப்போதும் ஏதாவதொரு சமூகப்பிரச்சனை குறித்துப் பேசும் இவர் மொக்கை போடுவது அரிதிலும் அரிது. ஆழியூரானால் 100%மொக்கையென முன்மொழிந்து போடப்பட்ட கேத்தரீன் குண்டலகேசி+ சில்வியா பழனியம்மாள் என்பதே என்வரையில் தரம் வாய்ந்ததாகத்தான் இருந்ததென்பதை எந்தவொரு பதில் மொய்யையும் எதிர்பார்க்காமல் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.(மேடைப்பேச்சு வாடையடிக்கிறது)


தமிழ்மணத்தில் அண்மையில் காணக்கிடைத்த
ஜமாலன் என்ற பெயரை எங்கோ சிற்றிதழ்களில் கண்ட ஞாபகத்தில் அதனைத் தொடர்ந்துபோய்ச் சேர்ந்த இடம் தீவிர வாசிப்பை வேண்டிநின்றது. அவரது ஒரு கட்டுரைக்குள் நுழைந்தால், நிச்சயமாக புதிதாக ஏதாவதொன்றைக் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்று திருப்தியோடுதான் வெளிவருவோம். சில நீண்ட பதிவுகளை பிறகு வாசிக்கலாம் என 'ஆறப்போட்டு'விட்டாலும் கீழ்க்காணும் பதிவுகள் வாசிப்பு அளித்த தாக்கத்தினால் பரிந்துரைக்கத் தூண்டுகின்றன. பெண்களைப் பற்றிய இந்தப் பதிவு , பிறந்தமண்ணை விட்டுப் பிரிந்து சென்று, வரண்ட வளைகுடா நாடுகளில், சிறகு தழைத்தமர்ந்து ஆற மரங்களற்றுப் போன பறவைகளைப்போல கடின உழைப்பினால் தங்களை வருத்திக்கொண்டிருக்கும் இந்தியர்களைக் குறித்த வசந்தம் பாலையாகும் வளைகுடா இந்தியர்கள் ஆகியவை கட்டாயம் வாசிக்கப்படவேண்டியவை.


பெயரிலேயே முரணைக் கொண்டிருக்கும்
இந்த இணையத்தளத்திற்கும் பெண்களின் படைப்புகளை வலையேற்றும் ஊடறுவிற்கும் இடையில் ஆரம்பித்த, ஆண்கள் பெண்களின் பெயரில் எழுதுவது குறித்த சர்ச்சை - பலருடைய கவனத்தையும் ஈர்த்தது நினைவிருக்கலாம். தீவிர இலக்கிய வாசகர்கள் தவறவிட விரும்பாத பதிவுகளைக் கொண்டமைந்த வலைப்பூ முரண்வெளி. அதிகம் பதிவுகள் இடப்படுவதில்லையெனினும் 'நாங்களும் எழுதுறோமாக்கும்' என்றில்லாமல் ஆற அமர ஆக்கபூர்வமான பதிவுகள் போடப்படுகின்றன. 'பெயல் மணக்கும் பொழுது' என்ற பெயரில் அ.மங்கையால் தொகுக்கப்பட்ட ஈழப் பெண் கவிஞர்களுடைய தொகுப்பு பற்றி பெண்கள், அடையாள அரசியல், பிரதியாக்கம் மற்றும் பெண் எழுத்து என்ற தலைப்பில் நிகிதா இம்மானுவல்பிள்ளையால் எழுதப்பட்ட கட்டுரை அவசியம் படிக்கப்பட வேண்டியதொன்று. ஈழத்துப் பெண் எழுத்துக் குறித்த ஒரு சித்திரம் இந்தக் கட்டுரையை வாசித்து முடித்ததும் பதிவாகும். http://muranveli.net/category/jaffna/ என்ற பக்கத்திலுள்ள 'யாழ்ப்பாண நாட்குறிப்புகள்' ஒரு காலம் எழுதிய குறிப்பாயிருக்கிறது. நிம்மதியாகச் சாப்பிடுவதும் உறங்கக் கிடைப்பதும்கூட தமிழராகப் பிறந்தவர்களுக்கு அதிகாரங்களால் வழங்கப்படுகிற அதிகபட்ச சலுகைதான் என்ற எண்ணத்தை அப்பதிவு நினைவூட்டியது.(மறந்தால்தானே நினைப்பதற்கு - பழசுதான்)

வலைச்சரம் என்றால் சும்மா வேலையில்லை. படிப்பை நிறுத்தியபிறகு 'பள்ளிக்கூடம் போ' என்பது மாதிரி கொஞ்சம் பழைய பதிவுகளுக்குள் சுற்றியலைந்து திரும்பவேண்டியிருக்கும். இருந்தாலும், அரைகுறையாகச் செய்யவும் மனசில்லை. அடுத்த பதிவை மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!
மேலும் வாசிக்க...

Wednesday, December 5, 2007

கடந்து செல்லவியலாத பெயர்கள்

வாழ்வின் மீதான அயர்ச்சி பெருகுமொரு நாளில் இந்தப் பதிவினைத் தொடுகிறேன். மூளை செயலற்றுக் கிடக்கவே விளைகிறது. ஆனால், செயலற்றவர்களை உலகம் மறந்துவிடுமென்ற குரூர உண்மை சாட்டையெறிந்து இயங்கவைக்கிறது.

கடந்த பதிவில், கவிதைகளையே பிரதானமாக எழுதிக்கொண்டிருப்பவர்களின் பக்கங்களைப் பட்டியலிட்டிருந்தேன். கவிதையும் உரைநடையும் கலந்து எழுதுபவர்களைப் பற்றி இந்த இடுகையில் எழுதலாமென்றிருக்கிறேன். 'இவர்கள் இன்னார்'என்ற வகைசெய்துகொள்வது ஒரு வசதிக்காகவேயன்றி, உண்மையில் பார்க்கப்போனால் எழுதுபவர்களை அவ்விதம் வரையறைக்குட்படுத்துவது கடினமே. உதாரணமாக கவிதை குறித்த உரைநடையை எதற்குள் அடக்குவது?

'குற்றவுணர்வின் மொழி'என்ற பெயரில், மொழிவசீகரம் மிக்க கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்றை அண்மையில் வெளியிட்ட பாம்பாட்டிச்சித்தன், தமிழ்மணத்தில் குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர். நடைவழிக் குறிப்புகள் என்று பெயரிடப்பட்டிருக்கும் இவரது வலைப்பூவிலிருந்து பிறமொழிக் கவிஞர்களான இர்விங் லேட்டன், ராபர்ட் ஃபிராஸ்ட், ஓர்ஹான் பாமுக், ழாக் ப்ரெவர், விஸ்லவா சிம்ப்போர்க்ஸ்கா (கேள்விப்பட்டதேயில்லை இல்ல? நானுந்தான்:)) ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் மற்றும் அவர்களால் எழுதப்பட்ட சில கவிதைகளின் தமிழாக்கம் என நாமறியாத புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. 'புதுக்கவிதை-2 'எழுத்து'ம் அதன் நீட்சியும், புதுக்கவிதை-3 நவீன விருட்சம் ஆகிய இரு கட்டுரைகளும் தமிழ்க்கவிதை வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு வழிகாட்டத்தக்க தகவல்களைக் கொண்டமைந்த ஆழமான கட்டுரைகளாகும். இவ்விரண்டு கட்டுரைகளுக்கும் முன்னதான பதிவைத் தேடினேன். கிடைக்கவில்லை. தீவிர வாசிப்பு மற்றும் மிகுந்த உழைப்பினால் மட்டுமே இத்தகைய கட்டுரைகள் சாத்தியமாகின்றன. வில்லியம் ஃபாக்னர் நோபல் பரிசு பெற்றபோது அவரால் வழங்கப்பட்ட உரையின் தமிழாக்கமானது(தி.க.சி) நவீனத்துவம் - எழுத்தின் இறைத்துவம் என்ற தலைப்பில் அண்மையில் இடப்பட்டுள்ளது. அவரது உரை, எக்காலத்து எழுத்தாளர்களுக்கும் பொருத்தமாயிருப்பதை வாசித்து வியந்தேன்.

ரேகுப்தி என்ற பெயரில் வலைப்பூவமைத்து எழுதிவரும் 'நிவேதா'வின் பதிவுகள் தீவிர இலக்கிய வாசகர்களுக்குரிய கட்டிறுக்கமான மொழியைக் கொண்டமைந்திருக்கின்றன. இவரது பத்திகள் பொதுவாக ஒரு கவிதையுடன் ஆரம்பிப்பதைக் காணலாம். மொக்கைப் பதிவுகளை எதிர்பார்த்து நீங்கள் இங்கு போனால் நிச்சயம் ஏமாற்றமடைவீர்கள். கவிதைகள், பத்திகள், நூல்நயம் எனப் பன்முகத்தன்மையான பதிவுகளை வழங்கிவரும் நிவேதாவின் கட்டங்கள் மற்றும் வட்டங்களுக்குள் வாழ்தல் என்ற பத்தியும் அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள் என்ற கவிதையும் எனக்குப் பிடித்தவை. சமரசங்களற்ற உன்னதத்தை நோக்கிய பயணமாக இவருடைய நடையைக் கூறலாம்.

தமிழ்மணத்தின் தலையாய கலகக்காரர் யாரென்று கேட்டால் அஞ்சலிப் பாப்பாகூட சரியான பதிலைச் சொல்லிவிடுவாள். சுகுணா திவாகர் என்ற பெயருக்கு 'சீரியஸாக'எழுதும் அனைவரும் தொடுப்புக் கொடுத்து வைத்திருப்பதொன்றே அவரது எழுத்தாளுமையை எடுத்துரைக்கப் போதுமானது. பதிலுக்கு முதுகு சொறிதல், பதில் மொய் என்ற விதத்தில் உங்களில் எவரும் இதை எடுத்துக்கொள்வதைப் பற்றி நான் கவலையுறவில்லை. அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்கும் (அவரால் முதுகு சொறியப்படாத) எவருக்கும் இதே விமர்சனங்களே இருக்கும். மிதக்கும் வெளியை வாசித்து வெளியில் வந்ததும் புதிதாக ஏதாவது கெட்டவார்த்தைகளை நீங்கள் கற்றுக்கொண்டிருப்பீர்கள். (அவரிடம் கேட்டால்... அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு 'கெட்டவார்த்தை'என்றால் என்ன என்பார்) இவரால் எழுதப்பட்ட 'தேவதைகளும் குசு விடும் என்பது உங்களுக்குத் தெரியாதா...?'என்ற கவிதை வரிகளை இன்னமும் எங்கள் வீட்டில் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். புனிதமென சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் எதிர்த்துக் கேள்வி எழுப்பும் இவரது துணிச்சலுக்காகவே இவரை வாசிப்பதுண்டு. பெரியாரியம், சிற்றிதழ் அரசியல் எனப் பரவலான விடயங்கள் குறித்து எழுதிவரும் சுகுணா திவாகரை நீங்கள் http://sugunadiwakar.blogspot.com/, http://suguna2896.blogspot.com/, http://thuroki.blogspot.com/, http://midakkumveli.blogspot.com/ என நான்கு தளங்களில் வாசிக்கலாம். இவருடைய கட்டுரைகள், வாசி்த்தபிற்பாடும் உள்நின்று பேசிக்கொண்டிருப்பவை.

பின்நவீனத்துவகாரர், கவிதைப் புலி என்றெல்லாம் அழைக்கப்படும் அய்யனார் தமிழ்மணத்திற்குள் உறுமிவந்தது... மன்னிக்கவும் உள்நுழைந்தது சற்று பிந்தித்தான். ஆனால் தன் பதிவுகள் வழியாக முந்திச்செல்கிறார். பின்நவீனத்துவம் என்றால், ஒரு மாதிரி குழப்பிக் குழப்பி எழுதி வாசிப்பவர்களை மண்டைகாய வைத்துவிடுவது என்பதே எனது புரிதல். அய்யனாரின் எழுத்துக்கள் எனக்குப் புரிவதால் அவை பின்நவீனத்துவம்தானா என சந்தேகமாக இருக்கிறது. போர்ஹேயின் எழுத்துக்களில் மஞ்சள் நிற புலி உலவுமாம். இவரின் எழுத்துக்களில் பெரும்பாலும் பெண்கள் உலவுகிறார்கள். 'ஏண்டீ! அவனைக் கைவிட்டே....?'என்ற ரீதியில் நிறைய எழுதுவார். இவரும் கெட்டவார்த்தைகளை அநாயாசமாகக் கையாள்வதில் வல்லவர். ஒருவித மாய உலகத்திற்குள் இவருடைய எழுத்துக்கள் எடுத்துப்போய்விடும். உலக சினிமா மற்றும் புத்தகங்களுக்கு எழுதும் மதிப்புரைகள் எனக்குப் பிடிக்கும். நீ என்னைவிட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா என்று என்னை நெகிழ்த்திய இந்தப் பதிவையும், இந்தக் கவிதையில் பேசப்பட்டிருக்கும் உண்மைக்காக அதனையும் சொல்லிச் செல்கிறேன். மிகுதியை நீங்களே வாசித்துக்கொள்ளுங்கள்.

மலின சமரசங்களுக்குட்படாத எழுத்துக்களைக் கொண்ட இன்னொருவர் அதிகம் எழுதுவதில்லை. http://peddai.net/ என்ற இணையப்பக்கத்தில் 'பெட்டை'என்ற பெயரில் பதிவுகளை இடும் இவர், எழுந்தமானத்திற்கு எழுதாமல் எப்போதாவதுதான் எழுதுவார். வாழ்வழிதலின் வலி என்ற பதிவானது எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட கவிஞர் எஸ்போஸின் மரணத்திலிருந்து தொடங்கி இன்றைய அரசியல் நோக்கி விரிந்து செல்கிறது. பாப்லோ நெரூதாவை மகத்தான கவிஞன் என்போர் அவசியம் வாசிக்கவேண்டிய பதிவு இந்தப் பக்கத்தில் இருக்கிறது. வாசித்த பிறகு உங்கள் முகம் மாறுவதைப் பார்க்க எதற்கும் பக்கத்தில் ஒரு கண்ணாடி வைத்துக்கொள்வது நல்லது. http://peddai.blogspot.com/ என்ற வலைப்பூவிலும் நீங்கள் இவரின் படைப்புகளைக் காணலாம்.

பழந்தமிழிலக்கியங்களைப் படிக்கவேண்டும் படிக்க வேண்டும் என்று நினைத்து (யாராச்சும் கேள்வி கேட்டுட்டா என்னா பண்றது..?) அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிற சோம்பேறிகளுக்கென்றே இணையத்தில் சில 'எளிய இலக்கியப்' (பொருட்பிழையோ... நல்ல இலக்கியம் எளிமையாக இருக்காதோ...) பக்கங்கள் இருக்கின்றன. அவ்வாறு தான் வாசித்தவற்றை 'இது நல்லாருக்குங்க'என்று தமிழ்மணத்தில் தருபவராக சித்தார்த் இருக்கிறார். http://angumingum.wordpress.com/ என்ற பக்கத்தில் இவருடைய ஆக்கங்களைக் காணலாம். சங்கத்தமிழின் துளி காண இந்தப் பக்கத்தைப் பாருங்கள்.

சித்தார்த்தைப் போலவே இலக்கிய ஆர்வம் மிக்கவர் மஞ்சூர் ராசா. http://manjoorraja.blogspot.com/ என்ற பக்கத்தில் தனது பதிவுகளை இட்டுவருகிறார். "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." - என்ற பாவேந்தரின் வரிகளை முன்னிறுத்தி, பல வலைப்பதிவாளர்களை இணைத்து நடத்தப்பட்டுவரும் முத்தமிழ் குழுமத்தில் தீவிரமாக இயங்கிவருகிறார். இங்கும் இவரை வாசிக்கலாம்.

தமிழ்மணத்தில் நல்ல சிறுகதைகள் வாசிக்கக் கிடைப்பதில்லை என்று எனக்கொரு குறையுண்டு. அல்லது சில குறிப்பிட்ட பெயர்களையே தொடர்ந்து செல்லும் எனது கண்களுக்கு அவை தட்டுப்படாமலும் இருந்திருக்கலாம். மறுகரையில் யாழ்ப்பாணம் என்ற இந்தக் கதையை வாசித்ததும் மனசிற்குள் என்னவோ கரைபுரண்டது. பழைய காயமொன்றில் ஏதோவொரு திடப்பொருள் இடித்துவிட்டதைப் போல வலியுணர்ந்தேன். அ.இரவியின் கதைகளில் இதே நனவிடை தோயும் பாணி இருக்கும். அதேபோலவே இழந்துபோன நண்பனுக்காக எழுதிய தவறவிடப்பட்ட கையசைப்பு என்ற கவிதையும் வாசித்துமுடித்ததும் வலிதந்தது. சருகு என்ற பெயரில் வலைப்பூவமைத்து எழுதும் நிலவனின் ஞாபக நிழல்கள், வாசிக்கும் எல்லோரையும் பற்றிப் படர்ந்து நீள்வதாக ஒரு பிரமை.
இன்னும் 'சுட்ட' உண்டு. ஆனால், நீ..... ள..... மா.... ன... பதிவுகளிலிருந்து தப்பியோடிவிடுபவர்களில் நானுமொருத்தி என்பதனால் இப்போதைக்கு நிறுத்திக்கொண்டு அடுத்த பதிவில் சந்திக்கிறேன். 'அப்பாடா...!'என்று யாராவது சொன்னீர்களா என்ன...? செவிகளில் விழுந்தமாதிரி இருந்தது.
மேலும் வாசிக்க...

Monday, December 3, 2007

வலைச்சரம்-கவிதைகளால் கவர்ந்தவர்கள்


சொந்தமாய் கொஞ்சம் புலம்பிவிட்டுப் பதிவுக்குள் செல்லலாம் என எண்ணுகிறேன். புதிய வீட்டிற்கு இன்னமும் இணையத்தொடர்பு வரவில்லை. மழைபெய்த நரகத்தின் - மன்னிக்கவும்- நகரத்தின் வீதி வழியாக இணையத்தொடர்பகம் ஒன்றினை வந்தடைந்தே பதிவுகளை வலையேற்ற வேண்டியுள்ளது. அதனால், வலைச்சரம் கொஞ்சம் இழுத்துப் பறித்துக்கொண்டுதான் போகும். (நீங்களும் 'எப்படா போடுவான்னு எதிர்பார்த்துக்கொண்டிருக்கவில்லைத்தான்:) வேற வேலை இல்லையாக்கும்.) வாடிக்கையாளர் சேவை என்பது குறித்த சிறிய விரிவுரையின் பின் நாளை வந்து தொடர்பு கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எருமை மாட்டில் மழை பெய்திருக்கிறது பார்க்கலாம்.

கவிதை என்பதோர் மாயமான். விழியுயர்த்தி அழைக்கும். பின்தொடர்ந்தால் விழிமறைந்து தொலைக்கும். கவிதையோர் கனவின் வடிவம். உறக்கத்தில் உண்மை போலிருக்கும். விழித்தெழுந்தால் நழுவிவிட்டிருக்கும். எஞ்சிய ஞாபகத்துளிகளிலிருந்து திரட்டித் திரட்டி, கொஞ்சம் ஒப்பனை செய்து முழுமை வடிவமாக்கி கனவை ஒரு கதையைப் போல நாங்கள் விபரிப்பதையொத்ததே கவிதையும். அந்தக் கனவை முழுமையாகக் கண்வசமாக்கி கையகப்படுத்தியோர் அரிதிலும் அரிது. தமிழ்மணத்தில், அவ்விதம் கவிதையைக் கையகப்படுத்த விளையும் சிலரை, எனது ஞாபகத்திற்கு எட்டியவரை, இங்கு குறிப்பிட்டுச் சொல்ல முயற்சிக்கிறேன்.



கவிதைக்கேயுரிய கட்டிறுக்க மொழியைக் கொண்டமைந்தவை தூரன் குணாவின் கவிதைகள். அவரது கவிதைகள் காட்சிப்படிமங்களோடமைவது சிறப்பு. கொரங்காடு என்ற பெயரில் வலைப்பூவமைத்து எழுதிவரும் அவருடைய கவிதைகள் எல்லாமே அவற்றின் செறிவினாற் சிறப்புறுகின்றன. உதாரணத்திற்கு ஒன்று: பூத்திருந்த காலம்

மற்றவர்கள் என்ற பக்கத்தில் யசோதர என்ற பெயரில் எழுதப்படுகிற கவிதைகளை கொஞ்சம் மனம்பதைக்க வாசித்திருக்கிறேன். போர் விட்டுச் செல்லும் வடுக்கள், அதிகாரத்திற்கெதிரான குரல்... என பேசுபொருளால் மற்றவர்களின் பார்வையிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கின்றன இந்தப் பக்கத்திலுள்ள கவிதைகள். நீத்தார் பாடல் என்ற இந்த நெடுங்கவிதை வாசிக்குந்தோறும் மனதில் வலிதருவது.

தமிழ்மணத்தைப் பார்க்காவிட்டால் தலைவெடித்துவிடுமளவிற்கு அதனோடு ஊறித்திளைத்திருக்கிறவர்கள் எவரெனினும் காயத்ரியை அறியாதிருக்க முடியாது. பாலைத்திணை என்ற பெயருக்கேற்றபடி பிரிவும் பிரிவின் நிமித்தமுமான கவிதைகளை நிறைய எழுதியிருக்கிறார். (சுமார் 72 கவிதைகள்) காதலின் வலி மற்றும் தனிமை, சுயத்தேடல் என எழுதிவரும் காயத்ரியின் கவிதைகளைப் படிக்கும்போதிருக்கும் கனம், அவருக்கு வரும் 'மியூஜிக் ஸ்ராட்' போன்ற பின்னூட்டங்களினால் குறைந்துவிடுவதாக எனக்கொரு எண்ணம். அவர் சொல்லவரும் உணர்வு கடைசிவரிகளில் உச்சம் பெற்று வலியென நெஞ்சில் தங்கிவிடுவதை இவருடைய சிறப்பம்சம் எனலாம். மல்லிகை வாசம் எல்லோரும் அறிந்ததே... எனினும், தெருவில் ஒரு பெண் சூடிக்கொண்டு நடந்துபோகிறபோது மல்லிகை மேலும் அழகாகிவிடுவதாக ஒரு பிரமை. காதல் அற்புத அனுபவம். அது கவிதையாகிறபோது பேரற்புதமாகிவிடுகிறது. காயத்ரியை இதுவரை வாசிக்கத் தவறியவர்களின் (இருந்தால்) விரல்பிடித்து இக்கவிதைகளைச் சென்றடைய வழிகாட்டலாம்.

கூடு மறந்த பறவையொன்றின் ஒற்றைக் கேவலை ஞாபகப்படுத்துவன தேவ அபிராவின் பிரபஞ்சநதி பக்கத்திலுள்ள கவிதைகள். தோழியொருவரால் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் பக்கத்திலுள்ள கவிதைகளின் அழகியலே முதலில் ஈர்த்தது. பின்னரோவெனில் அதன் உள்ளார்ந்த துயரம் தேடித் தேடிச் சென்று வாசிக்கத் தூண்டியது. இந்த அனுபவத்தை நீங்களும் உணரும் வழி இது. மாயச்சுனையிலிருந்து பீறிடும் காதலின் கையறு நிலைக்காக இந்தக் கவிதையும், தேவ அபிராவின் பக்கத்தில் முதல் வாசிப்பிலேயே ஈர்த்த அரளிப் பூவும் தரங்காவும் எனக்கு மிகப் பிடித்த கவிதைகள்.

எனது எழுத்துக்களில் எப்போதும் எதையாவது 'கண்டுபிடித்து'க் கேள்வி எழுப்பும் வியாபகனின் கவிதைமொழி சிறப்பாக இருக்கும். (உ+ம்:"'எண்ணுவான்' என்று போட்டிருக்கிறீர்கள்.... 'எண்ணுவாள்'என்று ஏன் போடவில்லை...")தேவஅபிராவைப் பரிந்துரைத்த தோழியே இவரது பக்கத்தையும் சுட்டியதாக நினைவு. தனியொருவனின் கலகக்குரலை எப்போதும் அவரது படைப்புகளினூடு கேட்க முடிகிறது. தமிழ்மண முகப்பில் வியாபகனின் பெயரைக் கண்டதும் ஒத்திப்போடமுடியாதவாறு பெயரைத் தொடர்ந்து ஓடிவிடுவதொன்றே அவரது தரமான எழுத்துக்குச் சாட்சியம். ஒப்புதல் என்னும் கவிதையையும் தோற்றம் மற்றும் நிறம் குறித்துப் பேசிய ஒரு கிராதகக் கவியின் கதை என்ற கவிதையையும் இந்தப் பக்கம் பிரவேசிக்கும் வாயிலாக விட்டுச் செல்கிறேன். (ஒரு பானை சோற்றுக்கு... என்று எழுதலாம்தான். பானையில் அவியாததும் பார்த்திருப்பதால் தவிர்க்கிறேன்)

அண்மையில் வலைபதிய வந்து தன் கவிதைகளால் கவனத்தை ஈர்ப்பவர்களில் லஷ்மணராஜா முக்கியமானவர். 'என் கவிதைகள் ரசிப்பு தன்மையை விட உணர்வு தன்மை அதிகம் உள்ளவை' எனக் கூறும் இவரது தொழில் தர்மங்கள் என்ற கவிதையில் வேலை இன்னோரன்ன புற காரணிகளோடு சமரசம் செய்துகொண்டு உயிர்த்திருக்க வேண்டிய வாழ்வின் நிர்ப்பந்தம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. நகைப்புக்குறியையே தலைப்பாகக் கொண்ட இந்தக் கவிதையும் குறிப்பிடத்தக்கது.

கனவுகளின் தொலைவு என்று தனது வலைப்பூவிற்குப் பெயர்சூட்டியுள்ள த.அகிலன் சொற்செறிவான கவிதைகளை வழங்குகிறார். அவரைப் போலவே சின்னச் சின்னச் சொற்களில் பெரிய பெரிய விடயங்களை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லிச்செல்பவர். ஈழத்து மொழிவழக்கு, வாழ்வியல் போன்றவற்றையும் இவரது எழுத்துக்களில் காணலாம். அண்மையில் வாசித்தவற்றில் கையகப்படாத கவிதையைக் குறித்த நிகழாக் கவிதை பிடித்தது. கவிதைகள் மட்டுமென்றில்லாது கட்டுரைகள், சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

அந்தாராவின் அத்துவான வெளி யை நான் பார்க்க ஆரம்பித்தது இந்தக் கவிதை யிலிருந்துதான். யார்க்கும் அஞ்சாத அந்த மொழிப்பிரயோகத்தில் மயங்கி அந்தப் பெயரைக் கண்டாலே பின்னால் போகவாரம்பித்தேன். நீங்களும் போய்ப்பாருங்கள். நீங்கள் மொழி ஆச்சாரப் பூனை இல்லையெனில் உங்களுக்கும் அந்த எழுத்துக்கள் பிடிக்கும்.

'நாடற்றவனின் குறிப்புகள்'என்ற கவிதைத்தொகுப்பை அண்மையில் வெளியிட்டிருக்கும் டி.சே.(இளங்கோ) தமிழ்மணத்தில் கடந்துசெல்ல முடியாத பதிவுகளுக்குரியவர். கவிதைகள், திரைப்பட அலசல், பிறமொழி இலக்கியம், கட்டுரைகள் என பன்முக ஆளுமையுடைய இவருடைய படைப்புகளை இங்கே சென்று வாசிக்கலாம். எதையும் மேலோட்டமாகப் பார்க்காது ஆழ்ந்து ஆராய்வது இவரது சிறப்புப்பண்பெனலாம்.

என்றால் என்ன? என்ற கேள்வியுடன் கார்த்திக் வேலு என்றொருவர் தரமான கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்தார். வேலைப்பளுவோ என்னவோ அண்மைய நாட்களில் அவரைக் காணமுடிவதில்லை.

மேலும் அபிமன்யு... அபிமன்யு (ஒரு அபிமன்யுதான்) என்றொருவர் மிக நன்றாக எழுதிக்கொண்டிருந்தார். சில நாட்களாக அந்தக் கவிஞரைக் காணோம். தொடுப்புக் கொடுக்க முடியவில்லை.

உண்மையில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னும் பல கவிஞர்கள் தமிழ்மணத்தில் நிச்சயமாக எழுதிக்கொண்டிருப்பார்கள். பிரச்சனைகளின் முகம் மறதியாக உருமாறியிருக்கிறது. நிறையப் பேரை நினைவுகூர இயலவில்லை. நான் குறிப்பிடத் தவறியதால் அவர்கள் குறைந்தவர்கள் என்று பொருளல்ல.

இந்த நீளமான பதிவை இட்டு உங்களையெல்லாம் வருத்தியது திட்டமிட்டு நிகழ்ந்ததொன்றல்ல. நான்கைந்து பெயர்களுடன் முடித்துக்கொள்ளவே நானும் நினைத்திருந்தேன். ஆனால், நன்றாக எழுதுபவர்களை எழுதாமல் விடுவது தவறென்று 'யாரோ' சொல்லியிருக்கிறார்கள். (இந்த யாரோவை வைத்து நிறையச் சொல்லலாம் போலிருக்கிறது.) அடுத்த பதிவும் குழந்தைகளுக்கானதல்ல. கொஞ்சம் 'சீரியஸாக'எழுதுகிறவர்கள் பற்றியதுதான். 'இந்தப் பதிவிற்கே முதுகு வலிக்கிறது... இன்னமுமா'என்று நீங்கள் சொல்வது காதில் விழுந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை. எல்லாப் பழியும் சிந்தாநதிக்கே:)
வலைச்சரத்தில் பதிவைப் போட முயல, இளவேனிலுக்குள் போய் விழுந்து 'ஆத்தா ஆள விடு'என்பதாகிவிட்டது என் நிலை. என்னமோ போங்க.
மேலும் வாசிக்க...

வணக்கம் - இது வலைச்சரம்

வணக்கம் நண்பர்களே!

வலைச்சரத்திலிருந்து நீண்டநாட்களாக வழுகி வழுகிச் சென்றுகொண்டிருந்தேன். சிந்தாநதியிடமும் பொன்சிடமும் வழக்கிற்கு ‘வாய்தா’கேட்பதுபோல தவணைகள் கேட்டுத் தப்பித்துக்கொண்டிருந்தேன். மறந்துவிடுவார்கள் என்று கொஞ்சம் ஒளிந்திருந்து பார்த்தால், முத்துலட்சுமி வலைச்சர வழிகாட்டற் குறிப்பு அனுப்பி நினைவூட்டிவிட்டார். வலைச்சரம் தொடுக்க வராமலிருந்தமைக்கு நேரமின்மை மட்டுமல்லாது வேறொரு உள்ளுறைந்த காரணமும் இருந்தது. அதாவது, ‘இவருடைய படைப்பு எனக்குப் பிடித்திருந்தது’எனச் சுட்டும்போது, ‘மற்றவர்களுடையது பிடிக்கவில்லை’ என்பதும் அதில் ஒளிந்திருக்கிறதல்லவா? மற்றவர்களுடையது தரமாக இருந்தும் நான் வாசிக்காதிருந்திருக்கலாம். ‘இன்றைய நாள் இடுகை’களில் தோன்றுவதை மட்டும் வாசிக்கிறவளாயிருக்கலாம்… ஒரே சுவடுகளைத் தொடர்கிறவளைப்போல, ஒரே பெயர்களைப் பின்தொடர்ந்து செல்கிற பழக்கம் எனக்கிருக்கலாம். இன்னோரன்ன காரணங்களால் விடுபடும் பெயருக்குரியவர்களை மறைமுகமாகப் புண்படுத்துவதாகவே எனக்குத் தோன்றியிருந்தது.

இருப்பினும் உங்களுக்கே தெரியும்… தலைமறைவாக இருப்பது, குறிப்பாக தமிழ்மணத்தில் - அதிக நாட்களுக்குச் சாத்தியப்படாதென்று. ஈற்றில் மாட்டிக்கொண்டது நானா அல்லது வாசிக்கப்போகும் நீங்களா என்பது இவ்வார இறுதியில் தெரிந்துவிடும்.

என்றாலும், விதி வலியது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இல்லையெனில், வலைச்சரம் தொடுக்கவிருக்கும் இந்நேரம் பார்த்து பூனை குட்டியைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோல நான் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, எனது உறவுக் 'கிராமத்தை'அழைத்துக்கொண்டு வேறிடம் பெயரவேண்டியேற்பட்டிருக்காது. வந்து சேர்ந்த இடம் வசதிதான் என்றாலும், இணையத் தொடர்பு இன்னமும் வராதது 'கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல'என்று சொல்வார்களே... அப்படித்தானிருக்கிறது. 'நாளை இணைப்புக் கொடுக்கிறோம்'என்ற வாக்குறுதியில் எந்த 'நாளை'க் குறித்தார்களென நான் குழம்பிக்கொண்டிருக்கிறேன். இணையத் தொடர்பகம் ஒன்றில் காற்றையல்லாது வெப்பத்தை விசிறியடிக்கும் மின்விசிறியின் கீழமர்ந்து இதைத் தட்டச்சிக்கொண்டிருக்கிறேன்.

வலைச்சரத்தில் எங்கள் பக்கத்தையும் அறி(அறு)முகப்படுத்தலாம் என்று முத்துலட்சுமியால் அனுப்பப்பட்ட வலைச்சர வழிகாட்டியில் சொல்லப்பட்டிருந்தது. நான் தமிழ்நதி. இளவேனில் என்ற பக்கத்தில் கொஞ்சக் காலம் தொடர்ச்சியாக கிறுக்கிக்கொண்டிருந்தேன். இப்போது எப்போதாவதுதான் எழுதப் பொழுது வாய்ப்பதால் நீங்கள் தப்பித்தீர்கள்.

வாசிக்கக் கிடைத்ததில் பிடித்தமான இடுகைகளை கவிதை, கதை, கட்டுரை, நூல்நயம் என்றவாறு சுட்டலாம் என நினைத்திருக்கிறேன். குழம்பு வைக்கப்போய் சாம்பாராக முடிந்த கதையும் உண்டு. தனித்தனியாக வருமோ அல்லது ‘கும்பலாக’கூடிவருமோ என்பது எனது நேரத்தையும் எழுதும் நாளின் தன்மையையும் பொறுத்தது.

வலைச்சரம் தொடுக்க வாய்ப்பளித்த சிந்தாநதிக்கும் வழிகாட்டிய முத்துலட்சுமிக்கும் வாசித்து என்னை தூஷிக்க - மன்னிக்கவும் - விமர்சிக்கவிருக்கும் என் நண்பர்களுக்கும் நன்றி.

சுட்டப்படாதனவெல்லாம் கெட்டனவல்ல; சுட்டியும்
சுவையாயிராவிடில் என்னில் பிழை
மேலும் வாசிக்க...

புயலுக்குப் பின் நதி

சற்று வித்தியாசமாக 2006 ல் வந்த பதிவுகளைச் சரமாக தொடுத்து தந்த நாகை சிவா நினைவில் நிற்கும் பழைய பதிவுகளில் ஓர் இணைய உலா வரச்செய்து விட்டார்... இந்த ஆண்டில் வலைப்பதிக்க வந்துள்ள புதியவர்களுக்கு இந்த தொகுப்புகள் நல்ல அனுபவத்தைத் தந்திருக்கும்.... தொடர்கள், ஆன்மீகம், நகைச்சுவையோடு எப்போதாவது வலைப்பதியும் பதிவர்களையும் அறிமுகம் செய்திருந்தார்...நன்றி சிவா

இந்த வாரம் வருபவர் தமிழ்ப்பதிவுலகின் குறிப்படத் தகுந்த படைப்பாளிகளில் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது. சிறுகதைகளானாலும் கவிதைகளானாலும் தனி முத்திரை பதிக்கும் உணர்வுப் பூர்வமான படைப்புகளைத் தரும் கவிதாயினி தமிழ்நதியை வலைச்சரம் தொடுக்க அழைக்கிறோம்...

தமிழ்நதியில் வரும் தமிழ்த் தென்றலைச் சுவைக்கத் தயாராக இருங்கள்.
மேலும் வாசிக்க...

Sunday, December 2, 2007

அசை போட்டேன்!

நம் தமிழ்மணத்தை பொறுத்த வரை மிக பெரிய ப்ளஸ் ஏதுனா உலகத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அதை குறித்த பதிவு கண்டிப்பாக இருக்கும். அதை பற்றிய புரிதல் நமக்கு இல்லாத போதிலும் அந்த தலைப்பைக் கொண்டு வரும் பதிவுகளை படித்தாலே போதும். எதிர்வினை பதிவுகளும் வரும். நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது உங்களை பொறுத்தது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய தலைப்புகள் என்று பார்த்தால் இட ஒதுக்கீடு, சேது கால்வாய் திட்டம், தமிழ் வழிக் கல்வி, பொருளாதாரா ஏற்றத் தாழ்வுகள் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

- என்பது என்னவென்று உங்களுக்கே தெரியும். அதுனால அது வேண்டாம்.

இது போன்று மிக பரந்து விரிந்த இந்த தமிழ் பதிவுலகில் நானும் இருப்பது என்றுமே ஆனந்தம் தரும் விசயம் தான். அந்த ஆனந்ததுக்கு மேலும் இன்பம் சேர்க்கும் விதமாக அமைந்தது இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. இடம் அளித்த வலைச்சரம் குழுவினருக்கு என் நன்றிகள்.

இந்த வாரத்தில் 2006ம் ஆண்டில் இருந்து வெளி வந்த பதிவுகளாக தர வேண்டும் என்று எண்ணியப்படியே (பத்ரியின் ஒரு பதிவை தவிர்த்து - 2005) அந்த வருடத்தில் இருந்தே பதிவுகள் எடுத்து சரம் தொடுத்தேன். கூடவே நான் தொடுத்த பதிவுகள் எல்லாம் அந்த நேரத்தில் நான் யோசித்த போது என் நினைவுக்கு வந்த பதிவுகள். அவற்றை விட குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பதிவுகள் கண்டிப்பாக விட்டு போய் இருக்கும். குறுகிய கால அவகாசம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் விடு பட்டு போனதற்கு என் வருத்தங்கள்.

இந்த வாரத்தில் நான் கொடுத்த வலைச்சுட்டிகள் சிலருக்கு முதுகை தட்டிக் கொடுத்தது போலவும், சிலருக்கு முதுகை சொறிந்து விட்டது போலவும் இருந்து இருக்கலாம். என்னை பொறுத்த வரையில் இரண்டிலும் உண்மை இல்லை. தட்டிக் கொடுக்கும் அளவுக்கு நான் உயர்ந்தவனும் இல்லை, சொறிந்து விட வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு தோன்றியவற்றை வகை பிரித்து பதிவாக்கினேன். ரசித்து இருந்தால் நன்றிகள். ரசிக்கும்படி இல்லையென்றாலும் நன்றிகள் + வருத்தங்கள்.

எனக்கு பிடித்த பதிவுகளை மறுபடியும் படித்து அசை போட வைத்தற்க்கு வலைச்சரத்துக்கு மீண்டும் நன்றிகள் பல!

ஆசிரியரா இருந்துட்டு புத்திமதி சொல்லாமல் போன எப்படி? அப்படிங்குற கேள்வியை தவிர்க்க - வருகின்ற எல்லா பதிவுகளையும் முடிந்த அளவு தவறாமல் படியுங்கள், படித்தவுடன் என்ன தோணுகிறதோ அதை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள்.
மேலும் வாசிக்க...

தொடர்ந்து தொடர்ந்தவர்கள்

தொடர் என்று சொன்னாலே முதலில் நம் நினைவுக்கு வருவது நம்ம டீச்சர் துளசி கோபால் தான். தொடர்ந்து தொடர் எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே! அவரின் நியூஸிலாந்து பற்றிய தொடர் அந்த நாட்டை பற்றி தெரிந்துக் கொள்ள படிக்க வேண்டியது. அதே போல் அவரின் இந்த தொடரையும் படிச்சு பாருங்களேன். லேபிள் கொடுக்காதா காரணத்தால் ஒவ்வொரு பதிவாக போய் தான் படிக்க வேண்டியது இருக்கும்.

துளசி கோபால் - எவ்ரிடே மனிதர்கள்

ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவலுக்கு இணையாக விறுவிறுப்பாக செல்வன் எழுதிய இந்த தொடர் எனக்கு பிடிச்ச தொடர் கதையில் ஒன்று.

செல்வன் - அஞ்சேல் எனாத ஆண்மை

துறை சம்பந்தப்பட்ட தொடர்களில் வடவூர் குமார் தன் கட்டுமானத்துறையை குறிந்து எழுதிய தொடர்.

வடவூர் குமார் - மின் தூக்கி மேம்பாடு

தேவ் வின் அனைத்து கதைகளுமே நம் வாழ்வோடு பொருத்தி பார்க்கும்படி அமைவது மிகவும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அவரின் இந்த நண்பனின் காதலி தொடரை படித்து பாருங்களேன்.

தேவ் - நண்பனின் காதலி

பங்கு துறை பற்றி நம்ம செல்லமுத்து குப்புசாமி எழுதிய தொடர் பதிவுகள் எல்லாம் ரொம்ப எளிமையாக இருக்கும். சாமானியரும் புரிந்துக் கொள்ள கூடிய வகையில் உதாரணம் கூறுவது அவரின் தனித்திறமை. இப்பொழுது நம்ம மங்களுர் சிவாவும் பங்கு துறை பற்றி பதிவு எழுதி வருகின்றார்.

செல்லமுத்து குப்புசாமி - ராகுல் திராவிட் - பங்கு முதலீட்டுத் தத்துவம்

வெட்டிப்பயலில் இந்த தொடர் கண்டிப்பாக சாப்ட்வேர் துறையில் நுழைய உள்ளவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

வெட்டிப்பயல் - சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க


ஒரு தொடர் எழுதுவது என்பது எவ்வளவு கஷ்டமான விசயம் என்பது எனக்கு தெரியும். அதையும் மீறி ஆர்வக் கோளாறுல ஆரம்பிச்சு இன்னமும் தொடர முடியுமா நிக்குது என் கன்னி வெடி தொடர். அதை முடிச்சுட்டு ஹைத்தி, சூடான் பற்றிய தொடர்கள் எழுதலாம் என்று எண்ணம், பாக்கலாம்.

நாகை சிவா - கண்ணி வெடி
மேலும் வாசிக்க...

Saturday, December 1, 2007

ஜாலியோ ஜிம்கானா!

எஸ்.கே. வின் ஆன்மிகம், மருத்துவ பதிவுகள் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரின் இந்த பதிவு செம ஜாலியா எழுதப்பட்டது. அவரு ஒரு மருத்துவர் அவரே அனுபவி ராசா அனுபவினு சொல்லுவதை படியுங்கள்

வி.எஸ்.கே. வின் - அனுபவி ராசா அனுபவி

ஏது ஏதுக்கோ டம்மிஸ் போடுறாங்க, ஆனா நம்மள மாதிரி இளசுகளுக்கு ஜொள்ளு பாண்டி போடும் டம்மிஸ்ச பாருங்க

ஜொள்ளு பாண்டியின் - ஜொள்ளு பார் டம்மிஸ்

நம்மை எல்லாம் ஆபிஸ் ல வேலைக்கு சேர்த்ததே பெரிய விசயம். இதுல தமிழ் பதிவுகள் போக மீதி நேரம் இருக்கும் போது பொழுதை எப்படி கழிக்கலாம் என்று நம்ம சந்தோஷ் சொல்லுறாரு.

சந்தோஷ் - வெட்டியாய் பொழுதை கழிப்பது எப்படி?

வெட்டியின் கோழி அட்டகாசங்கள் படித்தால் நம் கல்லூரியிலோ, பள்ளியிலோ இது போல் ஒருவன் நம்மோடு இருந்தது நினைவுக்கு வரும்.

வெட்டிப்பயல் - கோழியின் அட்டகாசங்கள்

டி.ஆரை எப்படி எல்லாருமே ஜாலியா கலாய்ப்பாங்களோ அதே போல் ஒரு நிலையை நோக்கி நம்ம சொம்பும் சீ சிம்புவும் போறது எல்லாருக்கு தெரிஞ்ச செய்தி தான். நம்ம ஜி எப்படி அவரை ஜாலியா கலாய்க்குறாருனு பாருங்க

ஜி - லொள்ளு சபா "பல்லவன்"

சொந்தங்களில் நமக்கு ஒரு நண்பர் எப்படியாச்சும் ஒருத்தர் இருப்பார். அது போல் நம்ம சவுண்ட் பார்ட்டிக்கு அமைந்த சொந்தத்தில் நண்பரின் ஜாலியான கலாட்டா

உதய் - வாசுவும் வெடைக்கோழியும்

நாம் கல்லூரியில் படிக்கும் போது ஒரு கல்லூரி பாடல் எல்லா கல்லூரிக்கும் இருக்கும். ஒரே பாட்டா இருக்கும் ஆனால் அந்த அந்த கல்லூரிக்கு ஏற்ப வார்த்தைகளை போட்டு மாற்றி இருப்பார்கள். அது போல நம் கப்பி இங்கு பாம்ம்ம்ம்... பீம்ம்ம்ம்ம்ம்... மற்றும் சல புல சல புல ராகங்களை எடுத்து வைக்கிறார்.

கப்பிபய - கல்லூரி பாடல்
மேலும் வாசிக்க...

Friday, November 30, 2007

எட்டி பாக்கிறேன்

தமிழ்மணத்தை விட்டு சற்று விலகி இருக்கும் ஆனால் அடிக்கடி தமிழ்மணத்துக்கு வந்து போகும் சிலரை பாக்கலாம்.

விக்கியின் தண்டரோ, இது கண்டதையும் சொல்லும், ஆனால் உருப்படியாக சொல்லும். இவரை பத்தி சொல்லனும் என்றால் ஒரே வரியில் புதுமை விரும்பி. எல்லாத்தையும் எழுதுவார், கவிதையை தவிர :) நான் விரும்பி படிக்கும் பதிவர்களில் ஒருவர். இவர் பதிவுகளில் குறிப்பிட்டு ஒரு பதிவு சொல்வது கடினம். இவர் தொடர்ந்து தலைப்பிட்டு எழுதும் "நினைத்தேன் எழுதுகிறேன்" தான் என் முதல் விருப்பம். நீங்களும் அதை பாருங்களேன்.

விக்கி யின் - நினைத்தேன் எழுதுகிறேன்

உமாநாத்(விழியன்)- இவர் கதைகள், கவிதைகள், சிறுவர் கதைகள், புகைப்படங்கள், புத்தக விமர்சனம், இலக்கியம் என எல்லாத்திலும் கலக்கும் பதிவர். இவரை நேரில் சந்தித்த பிறகு தான் இவரின் வலைப்பூ அறிமுகம். பகத்சிங் அள்ளிய ஒரு பிடி மண் பகத்சிங் க்கு கடிதம் எழுதுவது போல் இவர் இட்ட பதிவு உங்கள் பார்வைக்கு.

விழியனின் - மண்ணின் மைந்தனுக்கு ஒரு பிடி மண்ணின் கடிதம்

வேதா - இவர் கதைகள், கவிதைகள், நாட்டு நடப்பு, ஆன்மிகம் என பல வித முகங்களை காட்டுபவர். சொல்ல வருவதை சில சம்பவங்களுடன் கோர்த்து விவரிப்பதில் வல்லவர். மார்கழி மாதம் நெருக்கும் இந்த நேரத்தில் மார்கழி மாத கோலங்களையும், திருபாவையை(பாடல் + பொருள்) பற்றியும் பேசுகிறார் இந்த பதிவில்

வேதா - மாதங்களில் நான் மார்கழி(பாடல் 1-5)

ட்ரீம்ஸ் - இவர் கன்னாபின்னானு கவிதை எழுதுவார். அதுக்கு மிக அழகாக படம் எடுத்து போடுவார், அதை காணவே இவர் பதிவுக்கு முன் அடிக்கடி போவது உண்டு. இப்பொழுது ப்ளாக் யூனியன் மூலம் பழக்கமும் கூட. நம்மள போலவே மல்லாக்க படுத்து விட்டத்தை வெறித்து பார்த்து ரொம்ப யோசிப்பவர் என்று நினைக்குறேன். இவரின் தீபா என்ற பதிவு, என்ன அழகு னு நீங்களே போய் பாருங்க.

ட்ரீம்ஸ் - தீபா

ஷாம் - நாட்டமை என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர். இவரின் TBI & R கலாட்டாஸ் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கும்.

ஷாம் - TBI

பி.குறிப்பு :
இதை தவிர தமிழ்மணத்தில் சேராத பல பதிவர்கள் உள்ளார்கள். சிலர் தங்கிலிஷ், சிலர் முன்பு அவ்வாறு எழுதி பின் தமிழுக்கு மாறியவர்கள். 2006 யில் வெளிவந்த பதிவுகளாக கொடுக்க விழைந்த காரணத்தால் அவர்கள் பதிவுகளை குறிப்பிட முடியவில்லை.
மேலும் வாசிக்க...

Thursday, November 29, 2007

அசத்தல்ஸ் ஆப் சிங்கம்ஸ்

எங்க தல கைப்புள்ள இப்ப தான் புதுசா ஆப்பு வாங்குறார் என்று யாரும் தப்பா நினைச்சுக் கூடாது. அனைத்து ஆப்புகளையும் தனக்கே என வாங்க பிறந்த தியாக செம்மல். அந்த தியாக செம்மல் தன் இள வயதில் பெற்ற ஆப்பை காண... நல்ல ஒரு ஒளிமயமனா ஆப்பு இது.

கைப்புள்ள யின் - வச்சான்ய்யா ஆப்பு

சென்னையில் மழைக்காலம் எப்படி இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை தன் வழக்கமான நகைச்சுவையில் சொல்கிறார் நம்ம தேவ், கிண்டாலாக சொன்னாலும் அதில் ஒரு சமூக கருத்தையும் வச்சு இருக்கார் நம்ம போர்வாள்.

தேவ் வின் - மனதோடு மழைக்காலம்

நம்ம தளபதியின் யின் டிபிக்கல் கைப்புள்ளையின் சங்கம் பிராண்ட் காமெடி

நாமக்கல் சிபி யின் - காமெடி வியாழன்

கல்யாணத்துக்கு தாலி எம்புட்டு முக்கியமோ அம்புட்டு முக்கியம் கல்யாண வீட்டில் சீட்டாட்டம் ஆடுவது. அதை நம்ம விவசாயி எப்படி சொல்லி இருக்காருனு பாருங்க. தலைப்புக்கு ஒரு தனி விளக்கமே கொடுத்து இருப்பார்.

இளா வின் - 3*(13*4)+6=0

நம்ம தம்பி கதிரு ஒரு நியாயமான கேள்வி கேட்குறான். ஆனா தலைப்பை பாத்துட்டு இது அவன் பண்ணிய கூத்து தானானு என்னையவே கேட்க கூடாது சொல்லிட்டேன்

தம்பி - தண்டவாளத்தில் ஒன்னுக்கு போனா தப்பா?

நாம் இலவசமாக பயன்படுத்திக் கொண்டு ப்ளாக்கருக்கு கட்டணம் வசூலிச்சா என்ன ஆகும். இப்படி தான் ஆகும் னு நம்ம வெட்டிக்காரு சொல்லுறாரு.

வெட்டிப்பயல் - என்னது இலவசம் இல்லையா?

நம்ம ராயல் மதுரக்கார பய னு நமக்கு எல்லாம் தெரியும். மதுரக்கார பசங்க வீரத்துக்கு சொல்லவா வேணும், அப்படி ஒரு வீர தீர சாகசம் தான் இந்த பதிவு

இராமின் - பேய், பிசாசு, ஆவீ

இன்றைய இளைஞர்களின் சார்பாக யுவதிகளிடம் ஜில்லுனு 5 சந்தேகங்களை முன் வைக்குறார் நம்ம ஜொள்ளின் ஜொள்ளன். எல்லாமே நியாயமான சந்தேகமாக தான் இருக்கு.

ஜொள்ளுப்பாண்டி யின் - ஜில்னு 5 டவுட்ஸ்

பள்ளி, கல்லூரியில் பசங்களை அப்பன், ஆத்தா வச்சு பெயரை வச்சு கூப்பிடுவதை விட பட்ட பெயர்களால் அழைக்கப்படுவர்கள் தான் அதிகம். அது போல சில பட்ட பெயர்களுக்கு விளக்கம் கூறும் நம் கயவன் கப்பியின் பதிவு.

கப்பிபய - பேர் சொல்லும் பிள்ளைகள்

பாக் நம்மை விட்டு பிரிந்ததால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பை விவரிக்கும் பதிவு. கொஞ்சம் பொறுமை தேவை. அப்புறம் என்ன திட்டக் கூடாது சொல்லிட்டேன்

நாகை சிவா வின் - பாக். பிரிந்ததால்
மேலும் வாசிக்க...

சிந்தனை செய் மனமே!

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். அந்த தானத்தை விட பல படிகள் உயர்ந்தது உறுப்புகள் மற்றும் ரத்த தானம். ரத்த தானம் & கண் தானத்தை தவிர்த்து வேறு உறுப்பு தானத்தை நாம் சிந்தித்து உள்ளோமா? சிந்திக்க

இராமநாதனின் - ஆதலால் தானம் செய்வோம்

சாதிகளை ஒழிப்போம் என்று பேசிக்கொண்டே நமக்கும் நம் பிள்ளைகளும் இன்னும் சாதி சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறோம், கிடைக்கும் ஒதுக்கீடுகளை அனுபவித்துக் கொள்ளவும் சில முயல்கிறார்கள்(அவர்களுக்கு அது தேவைப்படாத போதும்). எங்கிருந்து சாதி ஒழிப்பை ஆரம்பிக்க போகிறோம் என்று சிந்திக்க

முகமூடி யின் - சமூகநிதி

நாடு எனக்கு என்ன செய்தது, நான் ஏன் நாட்டுக்கு செய்ய வேண்டும் என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு சில சமயத்தில் ஏற்பட்டு இருக்கலாம். அதைக் குறித்த சிந்தனை

செல்வனின் - நான் என்ன செய்தேன் நாட்டுக்கு

நம் இந்தியாவில் ஏதுவுமே மாறவில்லை. பணக்காரன் பணக்காரனாகவே இருக்கான், ஏழை ஏழைகளாகவே இருக்கான். வாய்ப்புகள் அனுபவித்தவனுக்கே மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கிறது. வாய்ப்புகள் மறுக்கப்பட்டவனுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது என்ற அவலநிலை இன்றும் உள்ளது. இதை மாற்ற இளைஞர்களின் பங்கு என்ன? இந்த இடைவேளியை குறைக்க அவர்களின் பங்கை குறித்து சிந்திக்க

குமரனின் - இரண்டு வித இந்தியா

பெரிய பதவியில் இருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சட்டத்தை மீறினால் எவ்வளவு கூப்பாடு போடுகிறோம், ஆனால் நம் அருகிலே சட்டத்துக்கு புறமாக ஏரிகள், நிலங்களை அபகரிப்பவர்களை, விதிமுறைக்கு மீறி பல அடுக்கு மாடிகளை கட்டுவர்களை கண்டு நான் என்றாவது சிந்தித்தது உண்டா?

பத்ரி யின் - சட்டம் ஒழுங்கும் இந்தியர்களும்

செய்த தவறுக்கு தண்டனையாகவோ, செய்தா தவறுக்கு தண்டனையாகவோ நாட்களை எண்ணிக் கொண்டே வாழ்ந்து வரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதே செய்து வந்த நாம் அவர்களையும் இருக்கும் வரை ஒரு மனிதராக மதிக்க சிந்தித்து உள்ளோமா?

மங்கையின் - Stop Aids, Keep the promise

மேல் சொன்னது எல்லாம் சிந்தித்து நம் சமூகத்தை சீர்படுத்து. நம்மை நாமே சீர்படுத்து

நாகை சிவா - சிந்தனைத் துளிகள்
மேலும் வாசிக்க...

Wednesday, November 28, 2007

சாமி சரணம்!

ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதம் இருந்து மலைக்கு செல்லும் இந்த நேரத்தில் அந்த ஐயப்பனுக்கு சரணம் சொல்லி நம்மை ரட்சிக்கவும், மன்னிக்கவும் வேண்டுவோம்.

குமரனின் - சுவாமியே சரணம் ஐயப்பா

கோபுர தரிசனம் கோடி தரிசனம், தரிசனம் பண்ண தயாரா?

இராமநாதனின் - கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு

சினிமாவின் வாயிலாக பலரையும் சென்று அடைந்த பாடல் - முத்தைத்தரு பக்தித் திருநகை. அந்த பாடலுக்கு விளக்கம் அறிய

வி.எஸ்.கே. வின் - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 3

தீபத்திருநாளை பற்றிய சிறு வீடியோவுடன், சைவம் & வைணவம் ஒற்றுமையையும் பேசுகிறார் இந்த பதிவில்.

கண்ணபிரான் ரவிசங்கரின் - கார்த்திகை தீபம் மின்னுதே

கழுகு மலையை பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா? தெரிந்துக் கொள்ள நம்ம முருகனடியார் சொல்வதை கேளுங்க. அந்த தொடர் முழுவதையும் நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.

ஜி.ரா. வின் - கழுகுமலை

தன் ஆன்மிக பயணத்தில் தன் குலதெய்வமான பரவாக்கரை மாரியம்மனை பற்றி கூறுகிறார்

கீதா சாம்பசிவம் வின்- புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி

எங்கள் ஊரில்(நாகப்பட்டினம்) உள்ள ஸ்ரீ நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலின் மிகவும் விசேஷமான செடில் உற்சவத்தை பற்றிய பதிவு. என் இஷ்ட தெய்வம் என்பது ஒரு உபரி தகவல்.

பத்ரி யின் - மாரியம்மன் செடில்

எங்கள் ஊரில்(நாகப்பட்டினம்) உள்ள 108 திருப்பதில் ஒன்றான ஸ்ரீ செள்ந்தராஜ பெருமாள் ஆலயத்தை பற்றிய என் பதிவு.

நாகை சிவாவின் - திருநாகை அழகியார்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது