07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 21, 2008

பெண் வலைப்பதிவர்களின் பார்வையில்.... பெண்மொழி.


பெண்மொழி – பெண் வலைப்பதிவர்களின் பார்வையில்….


கடந்து மறைந்து போன முற்காலங்களை விட, இன்றைய நாட்களில் பெண்ணியம் அதிகம் பேசப்படுவதாக உணர்கிறேன். அல்லது, முன் சென்ற காலங்களில், எவற்றிலும் ஈடுபடுத்திக் கொள்ளாத தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்ததால், பெண்ணியம் என்ற தனித்த வடிவம் குறித்து கவனம் கொள்ளாதிருந்திருக்கலாம். எப்பொழுதுமே, ஆண், பெண் என்ற தனிப்பிரிவாக எந்த ஒரு படைப்பையும் அணுகாமல், ஒட்டுமொத்தமாக நல்லதா, கெட்டதா என்ற வகைப்படுத்தலின் உள்ளே அனைவரையும் அடக்க முயற்சித்ததனால் இருக்கலாம். எப்பொழுதுமே, எல்லா தளங்களிலுமே, சிலர் மற்றவர்களை விட கூடுதலான சமன்பாட்டைக் கேட்கின்றனர். பெண்களின் கோரிக்கைகளும் இப்பொழுது அவ்வாறு தான் எனக்குத் தோன்றுகிறது. சமம் என்ற வார்த்தை தரும் பொருளை விட அதிகமாகவே கோருகிறார்கள் என நினைக்கிறேன். இன்னமும், ஒன்றின் சரி, தவறுகளை மட்டுமே நான் கணக்கிடுகிறேன் – செயலின் கர்த்தா ஆணா, பெண்ணா என பார்ப்பதில்லை. பெண்ணியம் கோருவதை முழுவதுமாக ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல், ஒரு வினையின் தாக்கத்தைப் பற்றி மட்டுமே எனது கருத்துகளை உருவாக்கிக் கொள்கிறேன். Rather, I see the value of an action and its implication, not the actors enacting the act.

லீனா மணிமேகலையின் ‘ஒற்றையிலையென’ என்ற கவிதைப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய சுகுமாரன், இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘பத்தாண்டுகளுக்கு முன் எழுதி வெளியான கட்டுரையொன்றில் (பெண் கவிதை மொழி – கணையாழி, ஏப்ரல் 1994) புதிய தமிழ்க்கவிதையில் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாகவோ தீவிரமானதாகவோ இல்லை என்ற தொனியில் எழுதியிருந்தேன். பெண் அனுபவங்களில் அர்த்தம் கொண்டதும் அவளது உணர்வுகளில் ஒலி பெற்றதுமான ஒரு கவிதைமொழி உருவாகவில்லை என்ற புகாரையும், உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கட்டுரை வெளிப்படுத்தியது. அந்தக் கருத்தை முன்னிறுத்திய தருணத்தில் ‘பெண்ணெழுத்து’ என்ற கருத்துருவம் தமிழில் வலுப் பெற்றிருக்கவில்லை. வெளியாகியிருந்த ஓரிரு பெண் கவிஞர்களின் தொகுப்புகளும் ஒற்றையான உதாரணங்களாக இருந்தனவே தவிர பொதுக் கருத்தாடலுக்கான விரிவு கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளதை இன்று மகிழ்ச்சியோடு உணர முடிகிறது. தமிழ்க் கவிதையில் இப்ப்போது கேட்கும் அசலானதும் தீவிரமானதுமான குரல்களில் சில பெண்களுடையவை. அவற்றுள் பொருட்படுத்தக் கூடிய ஒன்றாக லீனா மணிமேகலையின் கவிக்குரலையும் காண்கிறேன். படைப்பெழுத்தில் பால் வேற்றுமைக்கு இடமில்லை என்று விசாலமான அர்த்தத்தில் நம்புகிறேன். எனினும் காலமும் சூழலும் பெண்ணெழுத்து என்ற பிரிவினையை யதார்த்தமாக்கியிருக்கிறது. ஆணாதிக்க சிந்தனையே கலாச்சார மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் அமைப்பில் இந்தப் பாகுபாடு இயல்பானதும் கூட.’

இரண்டு முக்கியமான செய்திகளை இங்கு காணலாம். ஆணாதிக்க சிந்தனைகள் கட்டியெழுப்பும் கலாச்சார மதிப்பீடுகளுக்கு மாற்றான பெண்சிந்தனைகள் எழுந்து கொண்டிருக்கின்றன பெண்களிடமிருந்தே என்பதுவும், அத்தகைய சிந்தனைகளை முன் வைக்கும் ‘பெண் கவிதை மொழி’ அதற்கான அத்தியாவசிய தேவையினால் உருவாகி இருக்கிறதும் என்பது தான். பத்திரிக்கை ஊடகங்களில், இத்தகைய மாற்றங்களைத் தேடி அலையும் ‘பெண் கவிதை மொழியையும்’, ‘சிந்தனையையும்’ தேடாமல், வலைப்பதிவில் மட்டுமே இயங்கும் நமது சகபெண்வலைப்பதிவர்களின் ‘பெண் கவிதை மொழியையும், சிந்தனைகளையையும்’ பார்க்கலாமா?

நிவேதாவின் ரேகுப்தி வலைத் தளத்தில், புகையெனப் படரும் பிணங்களின் வாசம் என்ற இந்த கவிதையை வாசித்து விடுங்கள். பின்னர் கீழே படியுங்கள்.




‘அடக்கியொடுக்கப்பட்டு மரித்துப் போன (பெண்ணின்) தாபங்கள் பிறக்கலாம் மழலையென’ இது தான் பெண்மொழியாக இருக்கின்றது. பெண் தன் தாபங்களை மூன்றாமவர் அறியும் படியாக பேசக் கூடாது என்ற ஆண்சிந்தனை தான் இதுநாள் வரையிலும் பெண்களுக்கான மொழியையும் படைத்து வந்தது. ஆனால், இன்றைய பெண்கள் தங்களின் உணர்வுகளைப் படைப்பதற்கு ஆண்கள் தேவையை நிராகரித்து விட்டு, தங்களின் மொழியைத் தாங்களே பேசத் தொடங்கிவிட்டனர். ‘மூன்றாமவர் என்ன, அனைவரும் அறிந்து கொள்ளுங்கள் எங்களுக்குள்ளும் தாபங்களிருக்கின்றன. காமம் இருக்கின்றன. அவற்றை நெரித்து பிணமாக எங்கள் கருவறைக்குள் தள்ளினீர்களென்றால், அந்தப் பிணங்களே மழலையாக பிறக்கும்’ தங்கள் உணர்வுகளை ஒதுக்கித் தள்ளும் ஆண்கள் பிணங்களைப் பிறப்பிப்பவர்களாக மாறிவிடுகின்றனர் என்பது எத்தனை வலிமையான சாடல்!

சமூக கட்டமைப்புகளைத் தோற்றுவிக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிராக எழும் பெண்மொழி, ஆணின் வன்மத்தை மறுக்க, தன்னை முன்னிலையில் வைத்து அடையாளப்படுத்துவதற்கு தனது பெண் பாலியியல் அடையாள உறுப்புகளை முன்வைத்து பேசுகையில், ஆணின் வன்மத்தை மறுப்பதற்கு மற்றொரு தளத்திலும் ஒரு மொழி கிளம்பியெழுகிறது. விளிம்பு நிலை மனித குரலாய் ஒலிக்கும் அந்த பெண் மொழியின் கவிதை அடையாளப்படுத்தும் உறுப்பு இருபாலாருக்கும் பொதுவானது என்றாலும், அதன் மீதும் ஆண் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வக்கிரத்தைச் சாடும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் - மகளிர் தின சிறப்பு கவிதை என்ற இந்தக் கவிதையைப் படித்து விடுங்கள்.



இவ்வுலக வாழ்க்கையின் தங்கள் மீதுள்ள விசுவாசத்திற்கு பரிசாக மதங்களால் நிர்மாணம் செய்யப்பட்ட மறு உலக சொர்க்கம் கூட ஒரு துர்சொப்பனமாக மாறிவிடுகிறது – மதங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு, அதை தங்கள் விருப்பம் போல வளைத்து ஒரு சாரரை அடக்கியொடுக்கும் விதிகள் புகுத்தி பீடத்தில் ஏறி அமர்ந்து கொள்ளும் வர்க்கத்தினால்…

பெண்மொழிகளின் தன்மைகளை உள்ளடக்கிய பெண்ணை அடையாளப்படுத்தி பெரும்பாலும் பரபரப்பூட்டும் தலைப்புகளுடன் எழுதும் மற்றொரு எழுத்து மொழி. தமிழச்சியினுடையது கடைசியாக எழுதிய பத்து பதிவுகள் மட்டுமே இருக்கின்றன. சேமித்து வைக்கப்படும் archieves இல்லாததினால், எதுவும் சுட்டிக்காட்டி எழுத இயலவில்லை. ஆனால், தமிழச்சியின் எழுத்துகள் சுயத்தை அடையாளப்படுத்துவதை விட, சமூக கோபத்தை ஆங்காரத்துடன் இடித்துக் காட்டும் வகையிலே தான் அமைந்திருக்கின்றன. என்றாலும் பெண் மொழியைக் கையாளுகிறார் – அதுவும் பெண்ணின் பிரத்யேக சிந்தனைகளை அல்லது உணர்வுகளை வைக்கவில்லையென்றாலும், சமூக கோபம் அல்லது அதன் போலித் தனங்களை அடையாளப்படுத்தும் ஒரு எழுத்தாக அமைவதால் மட்டுமே அதை இங்கே சுட்டிக் காட்டி இருக்கின்றேன்.

ஆனால், ஆண்களை சாடுவது எப்பொழுதும், எல்லாவிடத்திலும் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? இல்லையென்றே சொல்வேன். தன்னை அடையாளாப்படுத்தும் பொழுது, அதற்கு எதிர்ப்பதமான ஆண்களைத் திட்டித் தீர்த்தே ஆக வேண்டும் என்ற அவசியம் தேவையற்றது. ஆனால் அவ்வாறு நிகழ்ந்து கொண்டும் இருக்கத் தான் செய்கின்றது. தாங்கள் பேச விரும்பும் ஒரு மொழியை ஒரு ஆணும் பேசினால், அதற்காக கோபம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தானே? அவ்வாறு கோபம் கொண்டால், வெற்று ஜம்பத்திற்காக பெண்ணியம் பேசுவது ஆகிவிடாதா?

ஆண் என்ற பொதுவை விட, ஒரு ஆண்கவிஞரின் பெயர் குறிப்பிட்டு வக்கிரம் என எழுதப்பட்ட ஒரு சாடலை கீழே உள்ள ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்தது. தான்யா எழுதியது. அது, பெண்மொழி மற்றும் சிந்தனையை முன்வைத்து அலசப்பட்ட ஒரு அருமையான கட்டுரை. பல பெண் கவிஞர்களின் கவிதைகளைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு ஆவேசப்பாய்ச்சலை உள்ளடக்கிய இந்தக் கட்டுரையை வாசித்த பொழுது, இவர் மகுடேஸ்வரனைக் குறிப்பிட்டு எழுதியவை சரிதானா என கேள்விகள் எழுகின்றன. தான்யா குறிப்பிடும் அந்த மகுடேஸ்வரனின் கவிதை - 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நு¡லை முன் வைத்து...
"

அவலட்சணமான
அந்த அறிவுஜீவிப் பெண்ணைப்
புணர்ந்தேன்.
தணிந்தது
அறிவைப் புணரும் வேட்கை

(மகுடேஸ்வரன, யாரோ ஒருத்தியின் நடனம்)

ஒரு ஆண் கவிஞரின் தொகுப்பில், இப்படி ஒரு கவிதை வெளிவந்திருந்தது. இப்படியான வன்முறையான வக்கிரமான ஆணாதிக்க சிந்தனையுள்ள இந்தக் கவிதைகளை எதிர்க்காத இந்தப் படைப்பாளிகள், பெண்கள் தங்கள் உறுப்புக்களைப் பற்றி தாங்களே எழுதும் போது வந்து விடுகிறார்கள். " இது அந்தக் கட்டுரையில் எழுதப்பட்ட விமர்சனம்.


பெண்கள் தங்கள் மனதில் நிகழும் காமத்தை, தங்கள் உறுப்புகளின் மேலேற்றிக் கூறுவதை ஒரு உரிமையாக வைக்கும் பொழுது, ஒரு ஆண், தன் மனதில் நிகழும் கிளர்ச்சியூட்டும் ஒரு உணர்வை கவிதையாக வெளிப்படுத்தியது வக்கிரமா? நிச்சயமாக இல்லை. ‘Intellectual Compatibility ’ is the highesr order of ‘turn on’ for anyone, irrespective of the gender. அறிவுஜீவித்தனம் மற்றெந்த அக, புறப்பண்புகளையும் விட, காமத்தை அதிக கிளர்ச்சியூட்டி உத்வேகம் கொள்ளச் செய்யும். அதைத் தான் மகுடேஸ்வரன் தன் கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அந்தக் கவிதையை ‘தன்மை’ மொழியில் எழுதி விட்டதனால், அது ஆணின் மொழியாக ஆண் மனநிலை வெளிப்பாடாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பெண் கவிஞர் ஒருவர் இதையே

அவலட்சணமான
அந்த அறிவுஜீவி ஆணைப்
புணர்ந்தேன்.
தணிந்தது
அறிவைப் புணரும் வேட்கை

என்று எழுதி இருந்தால், அதை ஒரு மகா பெரிய கொண்டாட்டமாக ஆக்கி இருக்க மாட்டார்களா, என்ன? ஆனால், ஒரு ஆண் எழுதி விட்டதால் இது வக்கிரமாகிவிட்டதா, என்ன? இன்னும் சொல்லப் போனால், இது ஆணின் மொழி கூட அல்ல. இந்த கவிதை பெண்களுக்கும் கூடப் பொருந்தும்.

நான் குறிப்பிட்டேன், சமம் என்பது அது தரும் பொருளைவிட, அதிக சமம் என்ற அர்த்தத்திலே தான் எல்லோராலும் கையாளப்படுகிறது. பெண்கள் கூட இப்பொழுது, தன் பெண்மொழியின் வாயிலாக, அந்த அதிக சமன்பாட்டைக் கோருகிறார்களோ என்று? இது சரியா, தவறா என மேலும் விவாதிப்பதை விட, மகிழ்வூட்டுவது என்னவென்றால், ஒதுங்கிப் போகாமல், ஆண்களின் எழுத்துகளையும் எடுத்து விவாதிக்கும் சிந்தனை வலுவைப் பெற்றுவிட்டார்கள் பெண்கள் என்பது தான்.

சரி, இறுதியாக பெண்களைப் பற்றி, நான் எழுதிய நிறையவற்றில் ஒன்றை இங்கே வாசியுங்கள். பின் அதுபற்றி, நீங்கள் தான் கருத்து சொல்ல வேண்டும். சுட்டி 'கனியின் பழங்கதை...'

15 comments:

  1. நன்றி சூர்யாள் -

    நான் கிட்டத்தட்ட அனைத்து பெண் வலைப்பதிவர்களின் தளங்களையும் தேடிப் பார்த்து விட்டேன். பேட்டியாக இல்லாமல், படைப்பில் அல்லது தனது விமர்சனத்தில் மொழியாக கையாளப்படும் எழுத்துகளைத் தான் தேடினேன்.

    நீங்கள் எழுதிய அனைத்து கவிதைப் புத்தகங்களும் என்னிடம் இருக்கின்றன. பாதி நான் வாங்கியது. மீதி நண்பர் முத்துகுமரன் உங்களை சந்தித்த பொழுது நீங்கள் கொடுத்து அனுப்பியது.

    அவ்வப்பொழுது வாசிப்பதுவும், மூடி வைப்பதுவுமாக போய்க் கொண்டிருக்கிறது. ஒரு மாதத்திற்குள், உங்கள் கவிதை தொகுதி அனைத்தையும் வாசித்து விரிவான விமர்சனத்தை அனுப்பி வைக்கிறேன்.

    (நீங்கள் - திலகபாமா என்று நினைத்துக் கொண்டு தான் எழுதுகிறேன். இல்லையென்றால் மன்னித்து விடுங்கள்)

    நன்றி

    நண்பன்

    ReplyDelete
  2. நான் திலகபாமாதான். எனதுவலைத்தளத்தில் பெண்மொழி சம்பந்த்மாக்க வெளீவந்த காட்டூரைகளும் வாசிக்கக் கிடைக்கும்..அதனாலேயே வலைப்பூ முகவரி அனுப்பினேன்.
    அன்பூடன்
    திலகபாமா

    ReplyDelete
  3. வணக்கம் தோழர் என்னை பற்றிய குறிப்புகள் உங்கள் பதிவில் கண்டேன். நீங்கள் சொல்வது உண்மை தான் என்னுடைய சுயத்தை விட சமூதாயக் கோபங்கள் அதிகம் உண்டு. தமிழ் பெண்கள் யாரும் பேசாததை பேசி வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறேன். எனக்கு காதல் கவிதை மற்றும் சாதரணமாக கவிதைகள் எழுதுவதில் விருமப்பமில்லாமலிருந்தாலும் எப்போதாவது கிறுக்குவேன். அதில் ஓன்று.....

    யோனிகள் இங்கே வாடகைக்கு கிடைக்கும்!

    வந்தவன்
    விலை
    கேட்டான்
    சிறிதும்
    பெரிதுமாக
    சுருங்கி
    விரிந்த
    யோனிகளுக்கு
    ஓவ்வொரு
    ரேட்டாம்.
    வந்தவன்
    சொன்னான்.
    மலஜலக்கழிப்பிடங்களை
    விட
    காமக்கழிவுகளை
    கொட்டும்
    இந்த
    யோனிகளுக்கு
    கிராக்கி
    அதிகம்
    தான்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி, தமிழச்சி.

    மிக விரிவாக விவாதிக்க வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இதில் விவாதிக்க என்ன இருக்கிறதென்ற அலட்சியம் தான் பெண்களிடத்திலே அதிகமிருப்பதாகத் தோன்றுகிறது. பிறகு எப்படி இவர்கள், பெண் விடுதலையைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று தோன்றவில்லை.

    ஒன்றைப் பற்றிய ஆழமான புரிதல் இல்லாமலே, அதைப் பற்றி மேலோட்டமாக பேசிக் கொண்டிருப்பதினால் எந்த பயனும் இல்லை.

    யாரும் பேசாததை பேசுவதில் தவறில்லை. அவ்வாறு செய்யக் கூடிய மனத் துணிவு அனைவருக்கும் அமைவதில்லை.

    தொடரட்டும், உங்கள் எழுத்துப் பணி.

    நன்றி,

    நண்பன்

    ReplyDelete
  5. பெண்கள் விவாதிக்க வருவார்கள் என்று எதிர்பார்த்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள். பெண்களிடம் விவாதிக்கும் திறம் குறைவு அப்படியே விவாதிக்க ஆரம்பித்தாலும் பெண்ணியம் சார்ந்தே பேசுவார்கள். அனேக பெண் இலக்கியவாதிகிடம் நடுநிலைமை இருப்பதில்லையென்று நினைக்கிறேன். எனக்கு அதிகம்
    தமிழ் பெண் எழுத்தாளர்கள் தெரியாது. உங்களிடம் ஒரு கேள்வி? கவிதை எழுதும் பெண்களோ ஆண்களோ ஒருவித கனவுப் போதை உடையவர்கள். கவிதை என்பது அந்த நேரத்தில் மட்டும் ரசிக்கும் உணர்வாக இருக்கிறது. (எழுச்சிக் கவிதைகள் தவிர) ஆனாலும் சமூக நிகழ்வுகளை குறித்து எழுதும் பெண் எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?

    ReplyDelete
  6. Kavidhai Ezhudhum penn kavithayineekalidam Pidivadham irukkiradhu.Thaan ezhudhiyadhu sari enra enname vivadhadhukku vara thayangugiradhu

    ReplyDelete
  7. // உங்களிடம் ஒரு கேள்வி? கவிதை எழுதும் பெண்களோ ஆண்களோ ஒருவித கனவுப் போதை உடையவர்கள். கவிதை என்பது அந்த நேரத்தில் மட்டும் ரசிக்கும் உணர்வாக இருக்கிறது. (எழுச்சிக் கவிதைகள் தவிர) //

    தமிழச்சி,


    எழுச்சிக் கவிதைகள் என்று அதை மட்டும் ஒதுக்கி வைப்பது எதனால்? 'எழுச்சி' என்ற வார்த்தையிலும் ஒரு போதை உண்டு. செ குவாரே, க்யூபாவின் மீட்பிற்குப் பின் எந்தப் பதவியிலும் அமர்ந்து செயல்பட முடியவில்லை. புரட்சி நடக்கும் இடத்தில் மட்டும் தான் என்னால் இயல்பாக இயங்க முடிகிறது - வருகிறேன் என்று கிளம்பி விட்டார். எதனால்? எதற்காக முடிவற்ற விடுதலைப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்? அதுவும் ஒரு போதை தான். ஈடுபாடு என்பதே ஒரு போதை தான்.

    அவ்வாறு இருக்க, எந்த இலக்கிய வடிவமும், ஓவியமும், திரைப்படங்களும் அந்தத் துறையில் வெற்றி பெற போராடுபவர்களுக்கு ஒரு போதை. அதை ஒரு கனவு, ஒரு இலட்சிய வெறி என்று விதவிதமான பெயர்களில் அழைத்துக் கொள்ளலாம்.

    வாழ்வின் எந்த ஒரு போராட்டத்திலும் ஒரு போதை ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றது. அதனால் தான், வாழ்க்கை எந்தத் தரத்தில் இருந்தாலும், அதிலும் ரசித்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மனிதனால் முடிகிறது. அந்த எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்குப் போக வேண்டும் என்றும் தொடர் முயற்சிகளில் ஈடுபட மனிதனால் முடிகிறது. போதையற்ற வாழ்க்கை என்று ஒன்றில்லை. முற்றும் துறந்த சாமியார்களின் நிலைமையைத் தான் தினமும் செய்தித் தாள்களில் காண முடிகிறதே!

    இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால், கவிதை என்பதும் ஒரு போதை தான் - அது எந்த வகையைச் சார்ந்ததாக இருந்தாலும். அந்தப் போதையை ஒருவன் எவ்வாறு கையாளுகிறான் என்பதே விவாதிக்கப்பட வேண்டியது.

    பெரும்பாலான கவிதைகள் காதலோடு நின்று போகின்றது. ஆனால், அந்தக் காதலைக் காணும் விதத்திலும், சொல்லும் விதத்திலும் கூட வித்தியாசங்கள் காட்ட முடியும்.
    இந்த வித்தியாசப்படுத்துதலில் தான் ஒரு கவிதை எழுதுபவன் போதை அடைகிறான். தான் சிறப்பாகச் செய்து விட்டதாக இறுமாந்து போகிறான். அது அவனது விருப்பம். உரிமை. ஆனால் அதையே பிறரிடத்தும் எதிர்பார்த்து, தன்னைப் பெருங்கவிஞனாகப் பாவித்து தன்னிடம் மற்றவர்கள் உரையாட வேண்டும் என்ற வெளிப்பாடுகள் தான் தன் போதையை தன் கட்டுக்குள் வைத்திருக்க தெரியாத தன்மையைப் போட்டுக் கொடுத்து விடுகிறது.

    எத்தனை தான் போதை என்றாலும், தன் சுயத்தைத் தொலைத்து விடாத பொழுது, அந்தப் போதை குறித்து எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. அப்படி ஒரு போதையை - தன் கட்டுப்பாட்டை மீறாத ஒரு போதையை - ஒருவன் - கவிஞன், ஓவியன், இசைக்கலைஞன், அல்லது வேறு எந்தவகைப் படைப்பாளியாகவும் இருந்தாலும் - அனுபவித்து விட்டுப் போகட்டுமே - அது அவனை மேலும் வளர்த்தெடுக்குமென்றால்.

    (இந்தப் பதிலை ஒரு உத்தேசமாகத் தான் எழுதினேன். இது குறித்த மாற்றுக் கருத்துகளும் இருக்கலாம். ஏனென்றால், இன்று இலக்கிய உலகில் நடக்கும் சில்லறைச் சண்டைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டால், ஒவ்வொருவரும் தன் போதை தனக்கு என எளிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றே தோன்றுகிறது. )

    ReplyDelete
  8. // நான் திலகபாமாதான். எனதுவலைத்தளத்தில் பெண்மொழி சம்பந்த்மாக்க வெளீவந்த காட்டூரைகளும் வாசிக்கக் கிடைக்கும்..அதனாலேயே வலைப்பூ முகவரி அனுப்பினேன்.
    அன்பூடன்
    திலகபாமா //

    திலகபாமா,

    மிக்க நன்றி - உங்கள் வலைப்பூவை முழுவதுமாக வாசித்து விட்டு, என்னுடைய கருத்தை கண்டிப்பாக ஒரு தனிப்பதிவாகச் சொல்வேன்.


    நன்றி.

    ReplyDelete
  9. //எழுச்சிக் கவிதைகள் என்று அதை மட்டும் ஒதுக்கி வைப்பது எதனால்?//

    சோகமும் காதலும் சந்தோஷமும் உள்ள கவிதைகளின் தன்மைகள்
    நம் முனோபாவங்களை மாற்றிவிடும் தன்மையுடையது அல்லவா? எழுச்சி கவிதைகள் நமக்குள் எருவித எழுச்சி உணர்வை கொடுக்கிறது.

    எழுச்சியில் மனித உணர்வுகள் வீணடிக்கப்படுவதில்லை. அவை ஆக்க சிந்தனையை நோக்கியே செல்கிறது.

    //செ குவாரே, க்யூபாவின் மீட்பிற்குப் பின் எந்தப் பதவியிலும் அமர்ந்து செயல்பட முடியவில்லை. புரட்சி நடக்கும் இடத்தில் மட்டும் தான் என்னால் இயல்பாக இயங்க முடிகிறது - வருகிறேன் என்று கிளம்பி விட்டார். எதனால்? எதற்காக முடிவற்ற விடுதலைப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்? அதுவும் ஒரு போதை தான். ஈடுபாடு என்பதே ஒரு போதை தான். ///

    உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை தோழர். லட்சியத்திற்காக போராடுபவன் பொருநலத்திற்காக போராடுபன் தன்னிலை மறந்தவனாக வைராக்கியம் உள்ளவனாக எதற்கும் அஞ்சாதவனாக இருப்பான்.போதை என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் நம் அறிவு மயங்கியத் தன்மையில் இருப்பதை போதைத் தன்மை என்று குறிப்பிடலாம். காமத்திலும் கவிதையிலும் போதை வரலாம். களத்தில் இருப்பவனிடம் எச்சரிக்கை உணர்வு தான் இருக்கும்.

    ReplyDelete
  10. // Kavidhai Ezhudhum penn kavithayineekalidam Pidivadham irukkiradhu.Thaan ezhudhiyadhu sari enra enname vivadhadhukku vara thayangugiradhu //

    t.v.radhakrishnan,

    தான் எழுதியவை சரி என எண்ணுவது அனைத்துப் படைப்பாளிகளிடத்திலுமுள்ள பிடிவாதக்குணம் தான். அதை பெண் படைப்பாளிகளுக்கு மட்டுமே குறித்தான குணமாக கருதிவிட முடியாது.

    பெண்கள் இங்கு விவாதிக்க வரத் தயங்குவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒரு காரணம் தனிப்பட்ட முறையில் எனக்குச் சொல்லப்பட்டது. அது தனிப்பட்ட கருத்து என்பதால், அதை விவாதத்திற்கு வைக்கவில்லை.

    தயக்கத்தின் மற்றொரு காரணம் - எதற்கு அநாவசிய வம்பு என்பது கூடவாக இருக்கலாம். மற்றபடிக்கு பெண்களுக்கென தனித்த கருத்துகள் இல்லாமலிருக்காது.

    யாருமே எப்பொழுதுமே தன்னை எந்த ஒரு அடையாளத்திற்குள்ளும் பொருத்திக் கொள்ள மாட்டார்கள். 'எல்லோருக்கும் நல்ல பிள்ளை' என்ற பொது அடையாளத்தை மட்டுமே அனைவரும் விரும்புபவர்கள். ஒரு உறுதியான நிலைபாடு எடுத்துவிட்டால், தங்கள் கருத்திற்கு மாறானவர்கள் தங்கள் பதிவுகளை வாசிக்க வராமல் போய்விட்டால் என்ற அச்சமும் ஒரு காரணமே.

    வலைப்பூக்களில் எத்தனை பின்னூட்டம் பெறுகிறோம் என்பதை ஒரு பெரிய அடையாளமாக கருதும் பண்பினால், தங்களுக்கென வரையறுக்கப்பட்ட பாதைகளை விட்டு விலகி, தங்கள் எழுத்தின் வீச்சை அறியாமலே இருக்க விரும்புகின்றனர்.

    இருக்கட்டும்.

    பின்னூட்டங்களைப் புறக்கணித்து தன் கருத்தை வலிமையாக எடுத்துச் சொல்லும் துணிவு அனைவரிடத்திலும் அமையாது.

    நன்றி, ராதாகிருஷ்ணன்.

    ReplyDelete
  11. // உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை தோழர். லட்சியத்திற்காக போராடுபவன் பொருநலத்திற்காக போராடுபன் தன்னிலை மறந்தவனாக வைராக்கியம் உள்ளவனாக எதற்கும் அஞ்சாதவனாக இருப்பான்.போதை என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் நம் அறிவு மயங்கியத் தன்மையில் இருப்பதை போதைத் தன்மை என்று குறிப்பிடலாம். காமத்திலும் கவிதையிலும் போதை வரலாம். களத்தில் இருப்பவனிடம் எச்சரிக்கை உணர்வு தான் இருக்கும். //

    கேள்வியும் பதிலுமாக எழுதி இருக்கிறீர்கள்.

    /தன்னிலை மறந்தவனாக / என்று ஒருபுறமும்,

    /போதை என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் நம் அறிவு மயங்கியத் தன்மையில் இருப்பதை போதைத் தன்மை என்று குறிப்பிடலாம். / என்றும் எழுதி இருக்கிறீர்கள். போதை என்பதே நமது அறிவை மங்கச் செய்வதிலும், தன்னிலை மறக்கச் செய்வதிலும் தான் இருக்கிறது. நான் எழுதிய பின்னூட்டத்தில், இந்தப் போதையை ஒருவன் எவ்வாறு கையாள்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். செ குவேரா அதை சரியாகக் கையாண்டார் என்பதை மட்டும் குறிப்பிட்டு விடுகிறேன். அவர் போதையில் மூழ்கியவராக இருந்திருந்தால், ஒரு போதையிலிருந்து இன்னொரு போதைக்கு தன்னை மாற்றிக் கொண்டிருப்பார். அமைச்சர் பதவியுடன், ஒரு வாழ்க்கை வந்த பொழுது, போராளி என்ற போதை தளத்திலிருந்து அதிகாரம் என்ற போதைக்கு மாறிக் கொண்டிருந்திருப்பார். ஆனால், அவர் அவ்வாறு செய்யாதிருந்ததினால், அந்த போதையிலிருந்து மீண்டதனால், மீண்டும் தனக்கு விருப்பமான போராளி வாழ்க்கையையே தேர்ந்தெடுத்துக் கொண்டார். போதையைப் பற்றி ஒன்று சொல்வார்கள் – Learn to use, not abuse என்று. போதை தரும் எதையும் கையாளப் பழகிக் கொள்ளுங்கள், அடிமைப்பட்டு விடாதீர்கள் என்று.

    நான் செ குவேராவைப் புரிந்திருப்பது இவ்வாறு தான். மற்ற மனிதர்களிடமிருந்து அவர் தன்னை வித்தியாசப்படுத்திக் கொண்டது போதை தரும் சூழ்நிலைகளில் இழந்து போகாமல் தன்னைக் காத்துக் கொண்டே மீண்டும், தன்னை எப்படி ஒரு போராட்டக் களத்தில் இயக்கிக்கொள்வது என்பது தான் அவரது சிறப்பு. இந்த வகையில் தான் எனது புரிதல். இல்லை – அவர் போதை வசப்படவே இல்லை என்பதுவும், அவரைப் போலவே நானும் ஒரு போராளி என்று முழக்கமிடுவதும் – யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதை தவிர்க்கும் புரிதலற்ற அணுகுமுறை என்பது எனது கருத்து. இதில் உடன்படுவதுவும், வேறுபடுவதுவும் மனிதனின் புரிதலையொட்டி நிகழும் முரண்கள். அவ்வாறு முரண்களுடன் இருப்பவர்களையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும் – வேறுபாடுகளற்ற கருத்தொற்றுமை என்பது எங்கும் நிகழ இயலாது.

    அது போகட்டும் – காமம், காதல் வசப்பட்டவர்களுக்கும் நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் பொருந்தும்.

    அவர்களுக்கும் ஒரு தீவிர லட்சியம் இருக்கிறது.
    அவர்களும் ஒரு தீவிர லட்சியமுடையவர்களாகத் தான் இருக்கின்றனர்.
    அவர்களும் பல சமய சந்தர்ப்பங்களில் தன்னை மறந்த முனைப்புடன் செயல்படுகின்றனர். வைராக்கியமும், அஞ்சாமையும் அவர்களிடத்திலும் உண்டு. ‘கன்னியர் கடைக்கண் பட்டால், மாந்தர்க்கு மலையெல்லாம் கடுகாம்’ என்று எழுதியதெல்லாம், சும்மா, உணராமலா?

    காமம், காதல், இதற்கும் செ குவேரா வாழ்ந்த போராட்ட வாழ்க்கைக்கும் ஒரு தளத்தில் வித்தியாசமிருக்கிறது. காதல், காமம் ஒரு தனிமனித வேள்வி. செ குவேராவின் போராட்ட வாழ்க்கை – தான் பிறந்த நாடில்லையென்ற போதிலும், ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை என்ற பெருங்கருத்தை முன்வைத்து, சுய நலமின்றிப் போராடினார் என்பதே. அந்த வகையில் உங்கள் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது தான். இத்தகைய போராட்டத்திற்குள் ஒரு மனிதன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஒன்றைத் தீவிரமாக நம்பும் ஒரு மனநிலை – ஈடுபாடு – புத்தி சொல்லும் எச்சரிக்கையும் மீறும் தீரம் – அந்தப் போதை – தேவையானது. போதை என்றதும் – அதை மதுவினால் உண்டாகும் போதையாக – தீண்டத்தகாததாக நினைத்துக் கொள்ள வேண்டாம். வேட்கையை உண்டாக்கும் போதை நம்முள் நிறைய இருக்கிறது. அதைக் கையாள கற்றுக் கொள்பவன் வெற்றி பெறுகிறான். வெற்றி பெறுவான்.

    ReplyDelete
  12. // க்யூபாவின் மீட்பிற்குப் பின் எந்தப் பதவியிலும் அமர்ந்து செயல்பட முடியவில்லை. புரட்சி நடக்கும் இடத்தில் மட்டும் தான் என்னால் இயல்பாக இயங்க முடிகிறது - வருகிறேன் என்று கிளம்பி விட்டார். எதனால்? எதற்காக முடிவற்ற விடுதலைப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்? அதுவும் ஒரு போதை தான். ஈடுபாடு என்பதே ஒரு போதை தான். //

    ஆம் போதைதான்.
    ஆனால் எதை நோக்கிய போதை என்பதில்தான் வேறுபாடு இருக்கிறது.

    கதை/கவிதை/கருமங்கள்...எழுதுவனுக்கு அது போதையாகவும் , அதை வாசிப்பவனுக்கு அது பொழுது போக்காகவும்(சில சமயம் போதயாகக்கூட ) இருக்கலாம். அதைத்தாண்டி மற்றவர்களுக்கு ஒன்றும், இல்லை.

    சே வின் போராட்டம் அவனுக்கு போதை..
    அவனோடு பங்கு கொண்டவர்களுக்கும் போதை...
    போராட்டம் களத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் பரிசு அளிக்காமல்,ஏதும் செய்யாமல் "செவனே" என்று இருந்த மற்றவர்களுக்கும் பரிச வழங்கிச் சென்றது.

    **

    கதை எழுதினேன்,கவிதை எழுதினேன்,வாசித்தேன்,விமர்சித்தேன்,பேசினேன்,புரட்சி செய்தேன்....

    எல்லாம் ..சரி, வேறு என்ன உருப்படியாய் செய்தாய்?

    **

    எது உருப்படி என்பதை வரையறுப்பது அவரவர் விருப்பம் :-))

    ReplyDelete
  13. கல்வெட்டு,

    மிக்க நன்றி.

    எதை நோக்கிய போதை....!

    ஆம் - காதலும், காமமும் தனி மனித விருப்ப போதையாக இருக்கும் பொழுது, சில மனிதர்களின் போதை பொது நலம் நோக்கி எந்த பிரதிபலனும் இல்லாது இயங்குகிறது...!

    எந்த ஒரு இலக்கியமும், சமூக அக்கறை கொள்ளாது இருக்கும் பொழுது, வெற்றுத் தாள்களை நிறைக்கும் வெறும் குப்பையாகப் போய்விடும்.

    இந்த குப்பைகளின் மீதும் அனைவருக்கும் போதையாக இருக்கிறது.

    யாருக்கு எந்த மாதிரி போதை வேண்டுமென்பதை தீர்மானிப்பதுவும், அவரவர் விருப்பமாகத் தான் இருக்க முடியும்.

    ReplyDelete
  14. நண்பன்,
    //யாருக்கு எந்த மாதிரி போதை வேண்டுமென்பதை தீர்மானிப்பதுவும், அவரவர் விருப்பமாகத் தான் இருக்க முடியும்.//

    ஆமென் ! :-))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது