07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 10, 2010

வந்திட்டானய்யா...வந்திட்டானய்யா!

"வலைச்சரத்தில் கலக்க‌ முடியுமா..?"- மதிப்புக்குரிய சீனா ஐயா அவர்களிடமிருந்து வந்த அழைப்பைப் பார்த்ததும் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை.

இது கனவா? நனவா? எதற்கும் கிள்ளிப் பார்த்து விடலாம் என்று மணிக்கட்டைக் கிள்ளினேன்; என்ன ஆச்சரியம்! மணிக்கட்டு வலிக்கவேயில்லை!! ஆனால், அடுத்த நொடியே என் கன்னம் வலித்தது. அப்போது தான் புரிந்தது, என் மணிக்கட்டுக்குப் பதிலாக பக்கத்திலிருந்தவரின் மணிக்கட்டைக் கிள்ளியதால் அவர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார் என்று! எவ்வளவு மெய்மறந்து போயிருக்கிறேன் பாருங்களேன்!

2010-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் ஏழாம் நாள்!-வலையுலகில் ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வு நடந்தது. வேறொன்றுமில்லை; ஓய்வு நேரமும், ஓசிக்கணினியும், ஓயாத சிந்தனையும் (?!) இருக்கிற தைரியத்தில் நானும் வலைப்பதிவாளராகி விட்டேன். ஆத்துலே போற தண்ணியை அய்யாகுடி அம்மாகுடி என்பது போல பிளாகரில் நானும் ஒரு கணக்கை ஆரம்பித்து "சேட்டைக்காரன்" என்ற பெயரில் பதிவு செய்து விட்டு, சாவகாசமாக என்ன எழுதுவது என்று உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தது இன்றுவரையிலும் தொடருகிறது. இது தான் என் கதைச்சுருக்கம்! (கொசுவத்தியை அணைச்சாச்சு!)

இப்போது, இன்னும் ஒரு வாரத்துக்கு நான் இங்கு ஆசிரியராகப் பணியாற்றுகிற அரிய பெரிய வாய்ப்பை ஆண்டவன் அருளால், அன்புள்ளங்களின் ஆதரவால், சீனா ஐயாவின் பெருந்தன்மையால், வாசகர்களின் கருணையால் பெற்றிருக்கிறேன். (இது வெயில் காலம், எவ்வளவு ஐஸ் வைத்தாலும் தாங்கும்!)

'முதல்வன்’ படத்தில் கூட அர்ஜுன் தானே ஒருநாள் முதல்வராக இருந்தார்? வடிவேலு இல்லையே! ஒரு வேளை வலைச்சரத்தில் நான் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி’யானாலும் ஆகி விடுவேனோ? வலையுலகில் ஐந்து மாதங்களாக விரல்சூப்பிக் கொண்டிருக்கிற இந்தக் குழந்தையை (இப்படியெல்லாம் சொல்லி வயசைக் குறைச்சுக் காட்டிக்கிட்டாத் தான் உண்டு!) ஐந்து ஆண்டுகளாக தமிழ் வலைப்பதிவர்களின் அரங்கேற்றமேடையாக இருந்து வருகிற வலைச்சரத்திற்கு ஆசிரியராக்கினால் நம்பவா முடியும்? இருந்தாலும் சரியென்று நம்பிவிட்டேன்!

பிறகு, இந்த ஐந்து மாதங்களில் எனக்குப் பரிச்சயமான சகவலைப்பதிவர்கள் எத்தனை பேர் இங்கு இப்பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்தியிருக்கிறார்கள் என்று ஒரு நாள் லீவு போடாமல் கடமையுணர்ச்சியோடு ஆபீஸுக்குப் போய் கண்ணும் கருத்துமாய்க் கணக்கெடுத்தேன். அப்பப்பா!

வலைப்பதிவு தொடங்கிய புதிதில், 'இந்த பதிவைப்படி,’ ’அந்த வலைத்தளத்திற்குப் போ,’ ’இந்தப் புத்தகத்தை வாசி,’ ’இது பற்றி எழுது,’ என்று என்னைத் தொடர்ந்து ஊக்குவித்த மஞ்சூர் ராசா அவர்கள்! கூகிள் குழுமங்களில் 'அண்ணல்’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர் எனக்கு அளித்த உற்சாகத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. இன்றளவிலும் என்னைத் தொடர்ந்து ஊக்குவித்து, தொடர்ந்து எழுத ஒரு உந்துசக்தியாய் இருக்கிறார் என்றால் மிகையாகாது.

2010-ம் ஆண்டின் துவக்கத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய வானம்பாடிகள் ஐயா! பல்சுவை வேந்தராகிய பாலா ஐயா அவர்களின் தொகுப்பைப் பார்வையிட்டபோது, நான் எடுத்துக்கொண்டுள்ள பொறுப்பைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டுமே என்ற அக்கறையும், கொஞ்சம் அச்சமும் என்னை வந்து ஆட்கொண்டது. சிம்மாசனத்தை 'சும்மா’சனமாக்கி விடக்கூடாதே என்று அடிவயிற்றில் ஒரு கிலி வந்து எலி போல கிறீச்சிட்டது!

வாழ்க்கை இட்டிலி மாதிரி’ போன்று எதையெதையோ எழுதிக்கொண்டிருந்த என்னை அவ்வப்போது கவனித்து, ஆலோசனைகள் வழங்கி எனது வலைப்பதிவை மெருகேற்ற மெனக்கிட வைத்தவர் 'வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற அருமையான வலைப்பதிவை நடத்தி வரும் சிங்கைப்பதிவர், எனதருமை நண்பர் பிரபாகர் அவர்கள். அவர் வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, ந்கைச்சுவைப் பதிவாளர்களைப் பற்றிய பதிவில் என்னையும் குறிப்பிட்டு எழுதியது, மோதிரக்கையால் குட்டுப்பட்டது போல இன்னும் வீக்கம் குறையாமல் இருக்கிறது.

என் சேட்டை தொடங்கியது முதல் அவ்வப்போது வருகை புரிந்து பின்னூட்டங்களோ, நகைப்பான்களோ அல்லது இரண்டையுமோ போட்டு என்னை உற்சாகப்படுத்திய 'சிறுமுயற்சி' முத்துலெட்சுமி வலைச்சரக்குழுவில் இருப்பதைப் பார்த்ததும், இந்த ஒரு வாரத்தில் நான் ஏதோ சுமாராகவேனும் பணியாற்ற "பெருமுயற்சி" மேற்கொள்ள வேண்டும் என்பதும் உறைத்தது. மருந்துக்குக் கூட நகைச்சுவை இல்லாமல் நான் சில பதிவுகளை எழுத முனைந்ததற்கு இவர் போன்றவர்களின் ஊக்குவித்தலும் ஒரு காரணம்.

கராத்தேக்கு புரூஸ் லீ; காலைச்சிற்றுண்டிக்கு இட்லீ; பந்துவீச்சுக்குப் பிரட் லீ; பதிவுக்கு ஜெட்லி!(பார்த்ததும் படித்ததும்) அந்த ஜெட்லியும் வலைச்சரத்தில் இதற்கு முன்னர் ஒரு வாரம் பணியாற்றியிருக்கிறார். உசைன் போல்ட்டு ஓடின தளத்துலே உசிலைமணி ஓடுறா மாதிரி நானும் வந்திருக்கிறதை நினைச்சா, ஐ.பி.எல்.டீமை வாங்கின அநாமதேயம் மாதிரி அடிவயித்துலே ஒரு கலக்கம் வரத்தான் செய்யுது.

அருமை நண்பர் ஸ்டார்ஜன், வலைச்சரத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை ஆசிரியர் பொறுப்பேற்று சிறப்பாய் தொகுத்தளித்திருந்தார். புதியவர்களைப் பாராட்டுவதில் முன் வந்து நிற்பவர். 'நிலா அது வானத்து மேலே’ பாட்டு மட்டுமில்லை; அந்தப் பெயரில் இருக்கிற அவரது வலைப்பதிவும் (குயிலி இல்லாவிட்டாலும்) எனக்குப் பிடித்தமான ஒன்று!

'பிடித்த பத்துப்பெண்கள்' என்று ஒரு தொடர்பதிவு கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வலைப்பதிவுகளில் ஒரு பெரிய ரவுண்டு வந்தபோது, வீட்டுவேலை செய்கிற பெண், தயிர் விற்கிற பெண்மணி என்று அன்றாடம் நம் கண்களுக்குத் தென்படுகிற வீராங்கனைகளைப் பற்றி எழுதி வியப்பில் மூக்கின் மீது விரலை வைக்கச் செய்த (அதாவது, அவரவர் மூக்கின் மீது-அவரவர் விரல்களை) சினேகிதன் அக்பர் என்ற அருமையான பதிவரும் இங்கு ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார்.

சமீபத்தில் 'ஒரு சுறா-வலி கிளம்பியதே..!!!" என்ற இடுகையைப் படித்து, அலுவலகத்தில் இருந்தவர்கள் எனக்கு 'முற்றி விட்டதோ?’ என்று (பெரும்பாலானோர் போலவே) சந்தேகப்படுகிற அளவுக்கு சிரிக்க வைத்த கார்த்திகைப் பாண்டியன் இங்கு அண்மையில் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.

எனக்கு முன்பு ஆசிரியராக இருந்தவர் மட்டும் என்ன? "பதிவுலகின் குழந்தை" என்று சொல்லிக்கொண்டாலும், தன் வலைப்பதிவை புஷ்டியானதோர் ஞானக்குழந்தையைப் போல கொழுகொழுவென்று ஆரோக்கியமாக வைத்திருக்கும் 'சைவகொத்துப்பரோட்டா’ ஒருவாரத்தில் அருமையாகப் பணியாற்றியிருந்தாரே? அவரைத் தொடர்ந்து நானா என்ற கேள்வியே என் அடிவயிற்றில் யாரோ பரோட்டாவுக்கு மாவு பிசைவது போலிருக்கிறது.

கூகிள் குழுமங்களிலும் வலைப்பதிவுகளிலும், அவ்வப்போது கவிதைகளையும் புனைவுகளையும் எழுதுகிற தணிகை (எ) தணிகாசலம் பல மாதங்களுக்கு முன்னரே வலைச்சரத்தில் பணியாற்றியிருக்கிறார். அவரது சில கவிதைகளைக் கூர்ந்து வாசித்தால், வலிகள் மிகுந்த வார்த்தைகள் அழுகையைத் துடைத்துக்கொண்டு அலங்கரித்து நிற்பதை அடையாளம் காண முடியும். அவரும் எனக்கு முன்னோடியே!

(எனக்கும் கவுஜ-க்கும் எட்டாம் பொருத்தம்! அதனால், நோட்-பேடில் எழுதி எழுதி சேமித்து வைத்திருந்தாலும், ’பொதுநலத்தைக்’ கருத்தில் கொண்டு அவற்றைப் பதிவாக இடுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். ஏதோ, கவிதைக்கு என்னாலான தொண்டு என்று வைத்துக்கொள்ளுங்களேன்!)

நேரமின்மை மற்றும் அனுபவமின்மை காரணமாய் நான் குறிப்பிட இயலாமல் போன முந்தைய வாரங்களின் ஆசிரியர்கள் எத்தனை பேர்! அவர்களின் முத்திரைகள் அழுந்தியிருக்கிற வலைச்சரத்தில், நானும் இருக்கிறேன் என்பதே எனக்குக் கிடைத்த பெருமை. அதற்காக சீனா ஐயாவுக்கு மட்டுமின்றி வலைச்சரத்தோடு தொடர்புடையவர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பணியைத் தொடங்கும் முன்னர், நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் இன்னும் சிலர் இருக்கின்றனர். அவர்கள்.....

வாரத்துக்கு பத்து பதிவு போட்டாலும், 'ஏன் பதிவே போட மாட்டேங்குறே?’ என்று அமெரிக்காவின் அட்லாண்டாவிலிருந்து கேட்கிற சீதாம்மா. இந்த ஐந்து மாத வலையனுபவத்தில் எனக்குக் கிடைத்த பெரிய ரசிகை மற்றும் விமர்சகர் - உலகெங்கும் சுற்றுகிற இந்த எட்டயாபுரத்துக்காரி தான்! எழுபத்தி ஐந்து வயது நிறைவுற்ற நிலையிலும் தான் வாழ்ந்த காலத்தை வரலாற்றின் அங்கமாய்ப் பதிவு செய்துவரும் சீதாம்மாவின் நல்வாழ்த்துக்கள் என்னுடன் இருப்பதே யானைபலம்.

கனவு மெய்ப்பட வேண்டும் என்ற பாரதியின் வரிகளை வலைப்பதிவின் பெயராக வைத்ததோடு நின்று விடாமல், பிறர் கனவு மெய்ப்பட அவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கிற பெருந்தகையாளர் தூத்துக்குடி துரை.ந.உ அவர்கள்! மிகச் சாதாரணமான சம்பவங்களை சொற்களால் செதுக்கிக் கவிதையாக்கி விடும் வல்லமை படைத்த வித்தியாசமான சிந்தனைக்கு சொந்தக்காரர்! படத்தைப் பார்த்துக் கவிதை எழுதுகிறாரா அல்லது கவிதைக்கு ஏற்ற படத்தைத் தேடிப்போடுகிறாரா என்று பட்டிமண்டபமே வைக்கலாம்.(துரை ஐயாவுக்கு மீசை மாதிரியே மனசும் ரொம்பப் பெரிசு!)

பிரபாகர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, அருள்வாக்கு போல, 'விரைவில் வலைச்சரத்தில் பணியாற்றுகிற வாய்ப்பு அமையட்டும்,’ என்று மூன்று மாதங்களுக்கு முன்னர் தீர்க்கதரிசனத்தோடு என்னை மனமாற வாழ்த்திய கீதா சாம்பசிவம் அவர்களுக்கு எனது விசேஷ நன்றிகள்! (மேடம் நல்லா ஜோசியம் பார்ப்பாங்க போலிருக்கு! ஜாதகத்தை அனுப்பி வைக்கணும்.)

முதல் முதலாக எனது வலைப்பதிவைப் பின்தொடரத்தொடங்கியதோடு, தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் ஆங்கில அறிவியல் பதிவர் நண்பர்.கந்தவேல் ராஜன்! அவரது கைராசி; இன்று என்னை வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்களின் ஆதரவு கைகூடியிருக்கிறது.

பின்னூட்டங்கள் மட்டுமின்றி, எனது வலைப்பதிவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து எனக்கு அறிவுரை வழங்கி, உற்சாகப்படுத்திய அபுதாபி பதிவர் சகோதரி அநன்யா மஹாதேவன்! நான் நாராசமாகப் பாடியிருந்த கானாப்பாடல்களின் ஒலிக்கோப்புகளை தயவுதாட்சண்யமின்றி என் வலைப்பூவிலிருந்து அகற்றச் சொன்னவர். இல்லாவிட்டால் என் வலைப்பூவுக்கு வந்தவர்களில் பலரின் காதுகளில் அல்சர் ஏற்பட்டிருக்கும். எனவே, இன்றைக்குக் காது நன்றாகக் கேட்கிற பதிவர்கள் இவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பட்டியல் நீளமானது; ஆயினும் இவர்கள் முதன்மையானவர்கள். இவர்களுக்கு நன்றி தெரிவிப்பதே எனது அறிமுகத்தைக் காட்டிலும் அத்தியாவசியமானது.

அன்புடையீர்!

எல்லாரும் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள்! ஒருவர் மரணக்கிணற்றில் தலைகீழாக இருசக்கர வாகனத்தை ஓட்டுவார்; இன்னொருவர் அந்தரத்தில் பல்டியடிப்பார்; ஒருவர் கம்பியின் மீது நடப்பார்; இன்னொருவர் நெருப்பு வளையத்தைத் தாண்டுவார்! இவர்களெல்லாம் உயிரைப் பணயம் வைத்து, மிகவும் முயற்சியெடுத்து வீர விளையாட்டுக்களை நிகழ்த்தி பார்வையாளர்களை மகிழ்விப்பார்கள். ஆனால்...

அதே சர்க்கஸில், ஒன்றிரெண்டு கோமாளிகளும் ஏதேனும் சேட்டை செய்து தங்கள் பங்குக்கு பார்வையாளர்களை சிரிக்க வைத்து மகிழ்விப்பார்கள்.

அதே போல, பல்வேறு அனுபவமிக்க, திறமையான சிந்தனையாளர்கள் பணியாற்றிய வலைச்சரத்தில் அடுத்த ஒரு வாரத்தில் கோமாளியாகிய நானும், என்னால் இயன்ற அளவு இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்ய முயலுவேன் என்று உறுதி கூறுகிறேன். இதற்கு, உங்களது அன்பையும் ஆதரவையும் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.

வாய்ப்பளித்த வலைச்சரம் ஆசிரியர் குழுவினருக்கும், மதிப்புக்குரிய சீனா ஐயாவுக்கும் நன்றி தெரிவித்து விட்டு, எனது பணியைத் தொடங்குகிறேன்.

உலக வலை வரலாற்றில் முதல் முறையாக, இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்காத 'சேட்டையின் திருவிளையாடல்’ நாளை வலைச்சரம் வாசகர்களுக்காக உங்கள் கணினித்திரையில் காண்பிக்கப்படவிருக்கிறது. :-)

அதுவரையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!!

சேட்டைக்காரன்

45 comments:

  1. கலக்கலாக ஆரம்பித்து விட்டீர்கள் சேட்டை. இந்த வாரம் முழுவதும் கலக்கல் வாரம்ம்ம்ம்ம்ம்... ஆக அமைய வாழ்த்துக்கள்.

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  2. உங்களைப்பற்றிய அறிமுகத்தை எதிர்பார்க்கும்போது உங்களுக்கு முதலில் அறிமுகமானவர்களை அறிமுகப்படுத்தி இதிலும் வித்தியாசமாய் இருக்கிறீர்கள்... ஒரு வாரம் இனி நோ டென்ஷன்! டபுள் சேட்டையப்பார்க்கலாம். சும்மா புகுந்து விளையாடுங்க! வாழ்த்துக்களும் அன்பான ஆதரவும்.

    பிரபாகர்.

    ReplyDelete
  3. ஆஹா.....

    வலைச்சரத்தில் சேட்டையின் சேட்டைகள்....

    கலங்குங்க சேட்டை.....

    ReplyDelete
  4. செம இண்ட்ரோப்பா.. நல்லாயிருக்கு.. கலக்குங்க..:-)))

    ReplyDelete
  5. ஆரம்பமே அதகளம் சேட்டை...

    வாரம் முழுதும் கலக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. ஒரு வாரத்திற்கு ஒரே குஷிதான் போங்க..சாட்டை..ச்சி.ச்சி..சேட்டை..

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. கமான் ஸ்டார்ட் மியூஸிக்...

    ReplyDelete
  9. அட்டகாசாமான ஆரம்பம் சேட்டை!!
    தொடர்ந்து கலக்குங்க.

    ReplyDelete
  10. அறிமுகமே இம்புட்டு கலக்கலா இருக்கே..... ம்ம் இந்த வாரம் ஒரு மகிழ்ச்சியான வாரமாக வலைச்சர வாசகர்களுக்கு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. பல்வேறு அனுபவமிக்க, திறமையான சிந்தனையாளர்கள் பணியாற்றிய வலைச்சரத்தில் அடுத்த ஒரு வாரத்தில் கோமாளியாகிய நானும், என்னால் இயன்ற அளவு இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்ய முயலுவேன் என்று உறுதி கூறுகிறேன். இதற்கு, உங்களது அன்பையும் ஆதரவையும் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.


    ......... பம்பர பம்பர பம்பர ....பப்பர .....ப்பர....... பப்பர...பம்...பம்....பம்...... அட்டகாச ஆரம்பம். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. / கோமாளியாகிய நானும்/

    நிஜம்மா சேட்டை கடவுளுக்கு அடுத்த படி மனுஷனுக்கு ஆறுதல் கோமாளிதான். ஒரு நல்ல கோமாளி மனுஷன படிச்சிருக்கணும். மனசப் படிச்சிருக்கணும். அதுல நீங்க தேர்ந்தவங்க என்பதற்கு உங்க எழுத்தே அத்தாட்சி. அப்புறமென்ன! அசத்துங்க ராசா:)). பல்சுவை வேந்தரா..அவ்வ்வ். விழா இல்லாம பட்டமா? நன்றி.:))

    ReplyDelete
  13. ஆரம்பமே அசத்தல் சேட்டை. புகுந்து வி்ளையாடூங்க.

    ReplyDelete
  14. அன்பு சேட்டை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாழ்த்துகள்..

    கலக்குங்க

    ReplyDelete
  16. சேட்டை ஆரம்பமாயிருசில்லே...? கலக்குங்க! காத்திட்டிருக்கோம்!! :-)

    ReplyDelete
  17. அட புதுப்படமா போடுங்க போடுங்க.

    ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.

    இதுல என்னையும் சேர்த்துகிட்டிங்க பாருங்க. ரொம்ப நன்றி.

    கலக்குங்க சேட்டை.

    ReplyDelete
  18. அடஅடாடா என்ன ஒரு அசத்தலான அறிமுகம்; ஆரம்பமே தூள்கிளப்புது., இனி சரவெடிதான்.

    ReplyDelete
  19. சேட்டை ரொம்ப சூப்பரா அறிமுகம்., இதுல என்னையும் குறிப்பிட்டுவிட்டீங்க.
    ரொம்ப நன்றி நன்றி.. தொடர்ந்து கலக்குங்கள்.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. அசத்து சேட்ட , அசத்து
    சூ , சூ ,,.... வர வர காக்கா தொல்ல அதிகமாகிபோச்சு
    சும்மா தமாசு

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  22. முன்னுரையே இவ்வளவு பெரிசா! அப்பாடா! (படிச்சி முடிச்சதைத்தான் 'அப்பாடா' என்றேன்.)
    எனினும் அனைவரையும் நன்றி சொல்லி, வாழ்த்தி, வணங்கிவிட்டு, சீக்கிரமே ஆரம்பியுங்க,
    உங்க 'சேட்டை கட்சேரி'யை!

    ReplyDelete
  23. வாவ்...சேட்டையின் சேட்டைகள்..முதல் பஞ்சே நாக் அவுட் ஆ இருக்கு. அடிச்சு தூள் கிளப்புங்க.

    ReplyDelete
  24. சேட்டை மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது. இன்று போல் என்றென்றும் உங்கள் பதிவுகள் கலக்க வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  25. சேட்டை மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது. இன்று போல் என்றென்றும் உங்கள் பதிவுகள் கலக்க வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  26. சேட்டை ஆரம்பமாகட்டும்...

    ReplyDelete
  27. அனன்யாவா காரணம் ? இருக்கட்டும் இருக்கட்டும்.. :)

    ReplyDelete
  28. ஆரம்பமே அசத்தலா இருக்கு. ஆரம்பமாகட்டும் சேட்டை:-))

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் நண்பரே !
    உங்களின் இந்த நகைச்சுவை சாம்ராஜ்யம் தொடங்கியதைக் கூட ரசனையுடன் நகைச்சுவை ததும்ப அதிசயம் என்று வர்ணித்து இருக்கும் விதம் மிகவும் ரசிக்கும் வகையில்தான் இருக்கிறது .

    உங்களின் முதல் பதிவில் அறிமுகம் செய்திருக்கும் ஜாம்பவான்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்களின் திருவிளையாடல் என்றென்றும் அனைவரையும் மகிழ்விக்க !

    ReplyDelete
  30. வந்திட்டானய்யா! வந்திட்டானய்யா! :-)

    அடிச்சு ஆடுங்க நண்பா... எனக்குத் தெரியும் எல்லாம் சிக்சர் தான்.

    வானம்பாடி பாலா அண்ணே சொன்னதை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  31. அறிமுகமே கலக்கல்.

    கொசுவத்தியை கொஞ்சநேரம் எரிய விட்டுருக்கலாம்:)

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. ஆஹா.....

    வலைச்சரத்தில் சேட்டையின் சேட்டைகள்....

    கலங்குங்க சேட்டை.....

    ReplyDelete
  33. வலைச்சரத்தில் எனது முதல்நாளில் வருகை தந்து, கருத்திட்டு வாழ்த்திய:

    @வெங்கட் நாகராஜ்
    @பிரபாகர்
    @Sangkavi
    @கார்த்திகைப் பாண்டியன்
    @அகல்விளக்கு
    @தாராபுரத்தான்
    @Mrs.Menagasathia
    @அஹமது இர்ஷாத்
    @சைவகொத்துப்பரோட்டா
    @மஞ்சூர் ராசா
    @Chitra
    @வானம்பாடிகள்
    @இராமசாமி கண்ணன்
    @சீதாம்மா
    @ஈரோடு கதிர்
    @நஜீபா
    @அக்பர்
    @மின்மினி
    @Starjan( ஸ்டார்ஜன் )
    @மங்குனி அமைச்சர்
    @விஜய்
    @NIZAMUDEEN
    @ஜெய்லானி
    @அஷீதா
    @முகிலன்
    @முத்துலெட்சுமி/muthuletchumi
    @அமைதிச்சாரல்
    @பனித்துளி சங்கர்
    @ரோஸ்விக்
    @நிஜமா நல்லவன்
    @சே.குமார்

    ஆகிய அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

    சேட்டைக்காரன்

    ReplyDelete
  34. வாழ்த்துகள் சேட்டை கலங்குங்க..

    ReplyDelete
  35. அசத்தல் சேட்டைக்காரன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  36. //முத்துலெட்சுமி/muthuletchumi said...
    அனன்யாவா காரணம் ? இருக்கட்டும் இருக்கட்டும்..//
    அதானே முத்துலெட்சுமி அக்கா.. முதல் முறையா நான் அந்த பாட்டை எல்லாம் கேட்டப்போ பயங்கர டென்ஷன் ஆயிட்டேன். பார்த்தா, நீங்க ரொம்ப பவ்யமா ”இதெல்லாம் நீங்களே பாடி ரிக்காட் பண்ணினீங்களா”ன்னு ஒரே ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டு இருந்தீங்க. அது சேட்டைக்கி புரியலை. ரெம்ம்ப பெருமையா ”ஆமாம்”ன்னு பதில் போட்டுட்டு விட்டுட்டார். ஞாபகம் இருக்கா சேட்டை? :))
    வாழ்த்துக்கள் சேட்டை. ஆரம்பமே அசத்தலா இருக்கே!

    ReplyDelete
  37. வாழ்த்துகள்!

    இவ்வாரம் முழுக்க சி...ரி..ப்..பு...

    ReplyDelete
  38. ஆரம்பமே அசத்தல்...லேட்டா வந்ததால கையோட அடுத்த பக்கத்துக்குப் போறேன்...

    ReplyDelete
  39. @T.V.ராதாகிருஷ்ணன்
    @அச்சு
    @க.பாலாசி
    @அநன்யா மஹாதேவன்
    @மாதேவி

    ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றிகள்!

    சேட்டைக்காரன்

    ReplyDelete
  40. நன்றாகச் செல்லுகிறது உங்கள் வாரம்.
    வாழ்த்துக்கள் சேட்டைக்காரன்:)!

    ReplyDelete
  41. சர்க்கஸ் கோமாளிக்கு எல்லா விஷய்ங்களும் தெரிந்து இருக்கும்.


    திறமைசாலிதான் சர்க்கஸ் கோமாளி.

    நீங்களும் எல்லாம் தெரிந்தவர்தான்.

    ReplyDelete
  42. என் மணிக்கட்டுக்குப் பதிலாக பக்கத்திலிருந்தவரின் மணிக்கட்டைக் கிள்ளியதால் அவர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார் என்று! எவ்வளவு மெய்மறந்து போயிருக்கிறேன் பாருங்களேன்!

    ஹா ....ஹா .....

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. வாழ்த்துகள் சே’ரன்

    ReplyDelete
  44. சேட்டைக்காரருடைய வேட்டை தொடங்குதையா ....உஜாரு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது