07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 4, 2015

என் பாட்டுப் பரம்பரை



என் பாட்டுப் பரம்பரை

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்!

வலைச்சரத்தைக் கவிச்சரமாய் மின்னும் வண்ணம்
     வளர்கவிகள் வடித்திட்ட சோசப் வாழ்க!
கலைச்சரத்தை விஞ்சுகின்ற கருத்தை ஈந்து
     கனிச்சரமாய்ச் சுவைதந்த நண்பர் வாழ்க!
அலைச்சரத்தைப் போலிங்கே ஆசை பொங்கி
     அணிச்சரமாய் அந்தமிழை அணிந்தார் தம்மின்
மலைவளத்தை இன்றுரைப்பேன்! மரபைக் காக்கும்
     மனவளத்தை நன்றுரைப்பேன்! சுவைப்பீர் நன்றே!

என்னினிய மாணவர்கள் ஐவர் சீரை
     இங்கெழுதி மகிழ்கின்றேன்! வாழ்வில் என்றும்
பொன்னரிய பூந்தமிழை உயிராய்க் கொண்டு
     புனைகின்ற இவர்பாக்கள் புவியை வெல்லும்!
உன்னரிய பெயர்சொல்லும் பிள்ளை போன்றே
     என்புகழை உரைத்திடுமே இவர்தம் ஆக்கம்!
இன்னரிய அமுதத்தைக் குழைத்து நாளும்
     இடுகின்ற பதிவெல்லாம் தமிழைக் காக்கும்!

யாப்பென்னும் பூப்பறிக்க இவர்கள் வந்தார்!
     இன்றமிழின் நெறிசொன்னேன்! மரபே வாழ்வின்
காப்பென்னும் உண்மையினை உணரச் செய்தேன்!
     கருத்தெல்லாம் தமிழொளிரத் தீட்டும் செய்யுள்
தோப்பென்னும் வண்ணத்தில் தழைக்க வேண்டும்!
     தொன்மொழியைச் செம்மொழியைப் பரப்ப வேண்டும்!
பாப்பின்னும் பாசறையைக் காக்கும் வீரர்!
     பாரதியென் பரம்பரையாய் வாழ்வார் நன்றே!

-----------------------------------------------------------------------------------------------------

கவிஞர் அருணாசெல்வம்

வலைப்பூ: அருணாசெல்வம் கதம்ப வலை 

என்பாட்டுப் பரம்பரையில் முதன்மை பெற்றார்!
     இனப்பற்றும் மொழிப்பற்றும் இவர்தம் கண்கள்!
இன்பூட்டும் கதையழகும், கற்போர் நெஞ்சுள்
     இசையூட்டும் கவியழகும் நல்கும் நங்கை!
அன்பூட்டும் தாய்நிகர்த்த அருணா செல்வம்
     அறமூட்டும் அறிவூட்டும் நூல்கள் தந்தார்!
வென்றீட்டும் புகழ்மாலை மலைபோல் ஓங்கும்!
     வியப்பூட்டும் வலைப்பதிவைப் படித்துப் பாரீர்!


-----------------------------------------------------------------------------------------------------

கவிஞர் சீராளன்

வலைப்பூ: என்னுயிரே

நேராளும் நன்னெஞ்சன்! அன்பின் ஊற்று!
     நிறையாளும் பொன்மதியன்! என்றன் தம்பி!
தாராளும் தண்டமிழில் மொய்க்கும் தும்பி!
     தமிழாளும் மாட்சியினை நன்றே கற்றுச்
சீராளன் வாழ்கின்றான்! சந்தம் வண்ணம்
     சிறந்தாளும் திறனுற்றான்! வாழ்த்து கின்றேன்!
பாராளும் வண்ணத்தில் பாக்கள் செய்வான்!
     பண்ணாளும் என்னுயிரே பக்கம் பாரீர்!


----------------------------------------------------------------------------------------------------- 

கவிஞர் இளமதி

வலைப்பூ: இளையநிலா  

பொற்புடைய கவிச்செல்வி! பூவின் உள்ளம்!
     பொங்கிவரும் தமிழாற்றில் நீந்தும் செம்மீன்!
கற்புடைய பெருவாழ்வு! பகையைச் சாய்க்கும்
     கனலுடைய சொல்லாற்றல்! யாப்பின் மீது
பற்றுடைய இளமதியார் பாடும் பாக்கள்
     படைப்புலகில் புதுமையினைப் பொலியச் செய்யும்!
ஒற்றுடைய சந்தமுடன் வண்ணம் சிந்தும்
     ஒளிர்கின்ற இவர்வலையை ஓதிப் பாரீர்!


----------------------------------------------------------------------------------------------------- 

கவிஞர் அம்பாளடியாள்

வலைப்பூ: அம்பாளடியாள்

புலம்பெயர்ந்த வாழ்வினிலும் தமிழைக் காக்கப்
     புறப்பட்ட தமிழச்சி! மறத்தி! கொண்ட
நலம்பெயர்ந்த ஈழத்தை எண்ணி எண்ணி
     நாட்டுகின்ற பாட்டெல்லாம் வீரம் மூட்டும்!
கலம்நிறைந்த அமுதத்தைப் பதிவாய் இட்டுக்
     கமழ்அம்மாள் கவித்திறனை வாழ்த்து கின்றேன்!
குலம்நிறைந்த புகழ்வாழ்வும்! கொள்கைப் பற்றும்
     கொடுக்கின்ற வலைப்பூவைப் படித்துப் பாரீர்!


----------------------------------------------------------------------------------------------------- 

கவிஞர் சசிகலா

வலைப்பூ: தென்றல்

நான்கட்டும் கவிதைகளை நன்றே கற்று
     நலங்கொட்டும் கவியரசி! சொற்கள் யாவும்
தேன்சொட்டும்! நம்நாட்டுப் புறத்தில் பூத்த
     சீர்கொட்டும்! செந்தமிழை அள்ளி உண்டு
வான்கொட்டும் மழையாக வடிக்கும் பாட்டில்
     வளங்கொட்டும் சசிகலா வாழ்க! நம்மின்
ஊன்முட்டும் வண்ணத்தில் உணர்ச்சி பொங்க
     உரமூட்டும் தமிழ்த்தென்றல் வலையைப் பாரீர்!

                        http://veesuthendral.blogspot.in/2013/01/blog-post_5.html

75 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    அறிமுகங்கள் கண்டு மகிழ்ந்தேன்... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies


    1. வணக்கம்!

      முன்வரும் தோழா! மொழிந்தேன் முதல்வணக்கம்!
      பின்வரும் அன்பர்க்கும் பொன்வணக்கம்! - என்பெரும்
      பாட்டுப் படையைப் படைத்துள்ளேன்! மண்ணேங்க
      ஊட்டும் தமிழை உவந்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  2. அற்புதம் ஐயா , இதுவரையில் கவிதையிலேயே வலைச்சரம் தொடுப்பது புதுமை
    கவி மழையில்நனைந்தோம். பேர் சொல்லும் சீடர்கள் அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      நற்றுணை செய்தாள் நறுந்தமிழாள்! என்மனத்துள்
      கற்பனை பொங்கிக் கடலாகும்! - அற்புதமாய்ப்
      பாட்டுப் படகேறி நற்பயணம் செய்கின்றேன்!
      கூட்டும் அமுதைக் குழைத்து!

      Delete
  3. அருமை அய்யா! அருமை!!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      அருமை எனும்சொல் அமுதையெனக் கூட்டும்!
      பெருமை உறும்பிறவி பெற்றேன்! - அருந்தமிழை
      எங்கும் எதிலும் எழிலுறச் செய்திடுவோம்!
      தங்கும் நலங்கள தழைத்து!

      Delete
  4. தங்கள் நடையில், கவிதை வடிவில், அழகான அறிமுகங்கள். வித்தியாசமாக உள்ளது. அறிமுகங்களுக்கு நன்றி. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      கம்பன் கவிகளைக் கற்றுக் களித்ததனால்
      எம்மின் எழுத்தில் எழிலொளிரும்! - செம்மொழியை
      நம்மின் தலைகளில் நன்றே தரித்திடுவோம்
      இம்மண் அடையும் இனிப்பு!

      Delete
  5. வித்தியாசமான முறையில் வலைச்சர அறிமுகம்....

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      திங்கள் ஒளியாகும் வெங்கட் தருஞ்சொற்கள்!
      எங்கள் அரும்பேறாய் எண்ணுகிறோம்! - தங்குநலம்
      மின்வலை கண்டிடவே மேலும் கவிதருவேன்!
      இன்கலை நெஞ்சின் இயல்பு!

      Delete
  6. அறிமுகம் செய்த விதம் சிறப்பு ஐயா... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      வளரும் கவிஞர்களை வாழ்த்தல் கடமை!
      மலரும் மரபுமலர்! மாட்சி - குலவுகின்ற
      பண்டைத் தமிழழகைப் பாரோர் உணர்ந்திடவே
      தொண்டைப் புரிவோம் தொடர்ந்து!

      Delete
  7. ஐயா வணக்கம்.

    மலைமோதும் சிறுகுருவி மடமை போலும்
       மான்குறிச்சி புக்கபடு மயக்கம் போலும்
    சிலைவடித்த சிற்பியிடம் அம்மிக் கல்லைச்
       செதுக்குதற்காய்ச் சிற்றுளியைக் கொடுத்தல் போலும்
    நிலைகுலைந்து வீழ்த்துகின்ற குடியைப் போலும்
       நேற்றிட்ட வெண்பாக்கள் நினைக்கத் தோன்றும்
    வலைபிடித்துத் தருகின்ற விருத்த மீன்கள்
       வற்றாமல் அளிக்கவரு வலைஞ வாழ்க!


    நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தென்றல் சசிகலா அம்பா ளடியாரும்
      வென்ற தமிழார் இளமதியும் – பொன்னுரைகல்
      சீராளர் நல்லருணா செல்வ ரெனுமைவர்
      பாராளு முங்கள் படை


      படைபெருக வாழ்த்துகள்!

      நன்றி.

      Delete
    2. வணக்கம் ஐயா!

      எங்கள் குருவின் இணையில்லா நண்பரே!
      தங்களின் வாழ்த்தும் தரும்உரமே! - பொங்கிடுதே
      ஆனந்தம்! அத்தனையும் அற்புதமே! நன்றி!.நன்றி!
      வானகமே வந்துதந்த வாழ்வு!

      அருமையான வெண்பா வாழ்த்திற்கு
      என் உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete
    3. வணக்கம் ஆசிரியரே!
      நேற்றயை வெண்பா மழை மிகவும் இனிப்பாக இருந்தது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete

    4. வணக்கம்!

      கவிமலையாய் மின்னும் கலைமலையாய் உள்ளீர்
      புவிவலையில் மின்னும் புகழீர்! - செவிவலையில்
      உம்மின் மொழிபிடித்தேன்!! ஓங்கிவரும் உம்மெழுத்தை
      எம்மின் விழிபிடித்தேன் இங்கு!

      Delete

    5. வணக்கம்!

      பாராளும் என்றன் படையுரைத்து நெஞ்சத்துள்
      சீராளச் செய்தீர்! செழுந்தமிழை - நீராளும்
      விந்தை நடைகண்டு சிந்தை குளிர்கின்றேன்!
      மொந்தை மதுவும் மொழி!

      Delete

    6. வணக்கம்!

      தென்றல், இளமதி, செந்தேன் சுரக்கின்ற
      உன்றன் கவியின் உயர்வுரைத்தார்! - என்னென்போன்?
      மின்வலை மின்ன விளைந்துள்ள வெண்பாக்கள்
      நன்னிலை நல்கும் நமக்கு!

      Delete
    7. வானிளிள மதிநிற்பார்! வண்ணப் பாடல்
         வார்க்கின்ற கரங்களிடை மின்னல் தோற்கும்!
      கானிலுள சொல்வண்டு பொருளில் தேனைக்
         கற்பனையின் சிறகடித்துக் கவியில் சேர்க்கும்!
      தேனினருஞ் சுவையுண்டு தேடிக் காணத்
         தெய்வதமிழ் திருநிறையத் தோன்றுகின்றாள்!
      ஊனுருக்கும் உணர்வுதமிழ் பாடல் பாடல்
         உற்றறியக் கற்பவர்க்கோ உணர்வுக் கூடல்!  

      வாழ்த்துகளும் நன்றியும் அம்மா!

      Delete
    8. கடல்தோன்றும் மழைக்குள்ளே கடலின் உப்புக்
         கடுகளவும் இருப்பதில்லை! காய்த்தல் இல்லை!
      படர்கின்ற இடமெல்லாம் பயனைத் தந்து
         பெய்மழையும் போவதில்லை! புன்மைச் சிப்பி
      உடல்சேர நல்முத்தாய் உருவா தல்போல்
         உயர்கவிஞ ரிடம்கற்ற உவகை கொள்வீர்!
      கடன்தீர நல்மரபைக் காத்தீர் தென்றல்
         குருவருளத் திருவருளும் கொண்டீர் வாழி!

      நன்றி

      Delete
    9. வணக்கம்!

      வாயார வாழ்த்தி மகிழ்ந்தீர்! வளர்தமிழ்த்
      தாயாக வந்து தகையளித்தீர்! - ஈயாக
      உம்மின் கவித்தேனை நன்றே உாிஞ்சுகிறோம்!
      எம்மின் திறனோங்கும் இங்கு!

      Delete
  8. வளமாக வலைச்சரத்தில் பூமழை..
    பசுந்தமிழில் அறிமுகங்கள் தேன்மழை!..

    நலங்கொண்டு தமிழுக்கு அணிகள் செய்தார்
    தளங்கண்டு பூந்தேனின் துளிகள் பெய்தார்!..

    நாளும் நலம் பெருக நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      வளமாய் வலைச்சரத்தில் வண்டமிழ் மின்ன
      உளமாய் உயிராய் உவப்பீர்! - களம்பல
      கண்ட தமிழன்னை! கன்னல் கவிமலர்கள்
      கொண்ட வனமென்று கூறு!

      Delete
  9. வணக்கம் ஐயா !
    கவிமழையே பொழிகிறது வலைமுழுதும் அதில் ஆனந்தமாய் நனைகிறோம் நாமும். புதுமை படைக்கிறீர்கள் ஐயா கவியால். மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      புவிமழை போன்று புலவர் மனத்துள்
      கவிமழை கொட்டிக் களிக்கும்! - சுவைமழை
      கண்டு கருத்திட்டீர்! கன்னல் மதுவடை
      கொண்டு கருத்திட்டீர் கூர்ந்து!

      Delete
  10. என் அன்புக்குரியவர்கள் அறிமுகங்களும் கண்டு மகிழ்ச்சியே .அனைவரும் ஆற்றல் மிகுந்தவர்கள். கற்கண்டு கவியினால் எனை மயக்குபவர்கள். அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டக் கவிமழையால் இனியா எங்களை மயக்கிவிடுவார்..ஹஹ நன்றிங்க தோழி.

      Delete

    2. வணக்கம்!

      அன்புக் குரியார் அடையும் புகழ்எண்ணி
      என்புருகும் வண்ணம் இனிப்பூறும்! - என்..நன்றி!
      வாழ்த்தி வரவேற்றால் வண்ணத் தம்ழோங்கும்!
      சூழ்ந்து புரிந்திடுவோம் தொண்டு!

      Delete
  11. பாட்டு பரம்பரை அறிமுகங்கள் அருமை. இதில் அம்பாலடியாள், சசிகலா இருவரும் நான் தொடரும் பதிவர்கள். மற்றவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. தென்றலை தொடர்கின்றமைக்கு நன்றிங்க.

      Delete

    2. வணக்கம்!

      பாட்டுப் பரம்பரை பார்த்துக் கருத்தளித்தீர்!
      கூட்டும் மனத்துள் குளிர்நலத்தை! - நாட்டில்
      மொழிப்போர் மறவனென முன்னிற்பார்! நன்றே
      விழிப்பார் தமிழை விளைத்து!

      Delete
  12. வணக்கம் அய்யா,
    தங்கள் கவியிலும் என் ஆசான் கவியிலும் நனைந்தோம் நேற்று,,,,,
    இன்றைய தங்கள் சீடர்கள் தளம் அனைத்தும் தொடர்வதே,,, அனைவருக்கும் வாழ்த்துக்கள் அய்யா,
    தொடரட்டும் தங்கள் கவிமழை,,,,,
    பருகமுடியாதெனினும் ,,,,,,,,,,
    நன்றி.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      அள்ளிப் பருகு அருந்தமிழை! ஆரமுதைத்
      துள்ளிப் பருகு! துயர்நீங்கும்! - உள்ளத்துள்
      அன்னைத் தமிழேந்தி ஆனந்தக் கூத்தாடும்!
      உன்னைத் தொழுமே உலகு!

      Delete
  13. வணக்கம் ஐயா !

    நாடிக் கொடுத்திடும் நன்மையை எண்ணியே
    தேடிநாம் வந்தோம் செளுங்கவிகள் !-பாடிப்
    பரவசம் ஊட்டிடும் பாட்டரசே !என்றும்
    உரம்நீயே எங்கள் உயிர்க்கு!

    இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
    என்னையும் இங்கு அறிமுகப் படுத்திய
    என் குருவுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்
    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      கற்ற செழுங்கவி நற்கலையை, கண்களாய்
      உற்ற உயர்அம்பாள் ஓங்குக! - பெற்றதிரு
      யாப்பு மலர்வனத்தைக் காப்புறுக! உன்னெழுத்துள்
      தோப்புக் கனிகள் தொகுத்து!

      Delete
  14. வணக்கம் ஐயா!..

    நீராடும் விழிகொண்ட நேரம் இங்கே!
      நெஞ்சத்தின் மகிழ்சியினை எங்கே சொல்வேன்!
    வேராகத் தமிழ்ப்பற்றைக் கொண்ட ஐயா!
      விளைத்திட்ட அறிமுகமோ அருமை என்பேன்!
    சீராகக் கற்றிடவே ஆவல் கொண்ட
      சீடரெமை அன்பாக வளர்த்தீர் நன்றே!
    பார்புகழும் எம்குருவே! பாதம் தொட்டுப்
      பணிகின்றோம்! வாழ்த்துகிறோம்! வாழ்க! வாழ்க!

    தங்களின் பதிவர் அறிமுக விருத்தம் கண்டு விக்கித்து நிற்கின்றேன்!

    என்ன சொல்வது எப்படி எழுதுவது என்று தெரியாமல்
    கண்களைக் கரைக்கும் நீர்மறைக்க இவ்வளவு நேரமும்
    அசைவற்று நின்றேன்..!

    தாங்கள் எனக்கும் குருவாகக் கிடைத்தது
    நான் செய்த புண்ணிய பலனே!
    எங்கள் ஐவரையும் இத்தனை அருமையாகக் கவியுலகில்
    வலம்வரச் செய்தது நீங்களே ஐயா!
    என்றன் நன்றியை எழுத்தில் வடிப்பதைவிடச்
    செயலிற் காட்டி ”என் பாட்டுப் பரம்பரை” என்ற கூற்றுக்கு
    உரம் சேர்ப்பேன்!

    இந்தக் நொடிதான் என்னிடத்தில்
      இருப்பு என்றே எண்ணுகிறேன்!
    வந்து தந்த வரமிதனால்
      வாழ்க்கைப் பயனைப் பெற்றுவிட்டேன்!
    எந்தக் கணமும் தமிழின்றி
      எய்தேன் நிறைவு எங்கணுமே!
    சிந்தை தெளிவாய்ச் சொல்கின்றேன்!
      செய்வேன் தொண்டு தமிழிற்கே!

    கோடானு கோடி நன்றிகள் ஐயா!

    என்னுடன் இங்கு அறிமுகமான சகோதரர்களுக்கும்
    இனிய வாழ்த்துக்கள்!

    ஐயா ஊமைக்கனவுகள் அவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இங்கு எனையும் வாழ்த்திய - வாழ்த்திக் கொண்டிருக்கிற
      அன்பு நெஞ்சங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

      Delete

    2. வணக்கம்!

      பொங்கும் உணர்வால் பொழிந்த விருத்தங்கள்
      தங்கும் எனக்குள் தமிழேந்தி! - திங்களே!
      முன்னை மரபுகளை முன்னின்று காத்திடுக!
      உன்னை வணங்கும் உலகு!

      Delete
    3. நான் எழுதிய அறுசீர் விருத்தத்தில்

      இந்த நொடிதான் என்னுயிரின்
        இருப்பாம் என்றே எண்ணுகிறேன்!
      .......
      என்ற திருத்தத்தை ஏற்றுத் தொடர்ந்து
      படிக்குமாறு வேண்டுகிறேன்! நன்றி!

      பின்னூட்ட வெண்பாவுக்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  15. வலைச் சர வரலாறு காணாத கவிதைத் தொகுப்பு. இன்றைய அறிமுகங்கள் அனைவரும் அறிந்தவரே. அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      பாராட்டி எம்மைப் பயனுற வைத்திட்டார்!
      சீராட்டும் செம்மணியர்! வாழ்த்துகிறேன்! - தேரோட்டும்
      நல்லழகாய் நல்கிய நன்னெறிகள், வாழ்வோங்கும்
      வெல்லழகாய் மின்னும் விரிந்து!

      Delete
  16. தாங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா கவிஞர் களின் பாடல்களையும் ரசித்திருக்கிறேன். பாடியும் இருக்கிறேன்.

    இருந்தாலும் ஒன்று சொல்ல வேண்டும்.
    அவர்கள் எல்லோருமே பல காலமாக எழுதிக்கொண்டு இருப்பவர்கள். கவிதை புனைவதிலே அதுவும் புதுக்கவிதை எழுதுவதிலே வல்லவர்கள்.

    இருப்பினும், அவர்கள் எல்லோருமே
    தங்களைக் கண்டபின்,
    தங்களைத் தமது ஆசிரியராகக் கொண்டபின்,
    தங்களது இலக்கணப் பாடங்களை உண்டபின், (கற்றபின்)
    அவர்களது படைப்புகள்
    முழு நிலவாகத் திகழ்கின்றன.

    இலக்கிய வானில் ஒளி பரப்புகின்றன.
    இதயத்திற்கு இனிமை சேர்க்கின்றன.

    வாழ்க நும் பணி.

    தங்களது முதல் நாள் பாடலை நான் பாடி இருக்கிறேன்.

    இங்கு வாருங்கள். கேளுங்கள்.
    தங்கள் சிஷ்யர்களுடன்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies

    1. வலைஞர்களின் வாய்பாட்டாளர்
      அருமை சுப்புத் தாத்தா அவர்கள்
      கவிஞர் அய்யாவின் முதல் நாள் பாடலை....
      பாடி சிறப்பு செய்தமைக்கு "வலைச் சரம் குழு" நன்றி பாராட்டுகிறது!
      சிறக்கட்டும் அய்யா உமது சேவை! நாள்
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete

    2. வணக்கம்!

      நல்ல கவிகளை நாளும் வரவேற்று
      வல்ல இசையை வழங்கிடுவார்! - தொல்லுலகில்
      எப்பொழுதும் பாடி இனித்திடுவார்! மின்னிசைக்குச்
      சுப்பெனும் தாத்தா சுடர்!

      Delete
  17. கலைமகளின் விலையில்லா பெட்டகத்தில்
    கவிமகனார் நிலையான எழுத்துண்டு
    காவியமும் ஓவியமும் கண்டதுண்டு
    காணாத கவிவலைச்சரமே உனதுநிகண்டு!

    மாணாக்கர் யாவரும் மாண்பினை பெற்றே வாழ்க!
    மங்காத உமது தமிழை......
    உரக்கச் சொல்லி! உயர்வை பெறுக!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      நம்புதுவை வேலு நவின்ற கருத்தேற்றே
      எம்புலமை ஓங்கி எழிலுறுமே! - செம்பசுமைக்
      காட்சியைக் காணும் வலைச்சரம்! செந்தமிழின்
      மாட்சியைக் காணும் மகிழ்ந்து!

      Delete
  18. இன்றைய அறிமுகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள். கவிஞர் சசிகலா அவர்களின் கவிதைகள் எனக்கு பரிச்சயமுண்டு. மற்றவர்களின் வலைப் பக்கத்திற்கு சென்று கவிதைகளை இரசிக்க உள்ளேன். இந்தவாரம் வலைச்சரம் கவிதை மழை பொழியும் வாரமாய் இருக்கும் என்பதில் மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா! பரிச்சயமுண்டு என்றதில் மிகுந்த மகிழ்ச்சிங்க ஐயா.

      Delete

    2. வணக்கம்!

      தேவாரம் தந்த செழுந்தமிழை நானுண்டு
      பாவாரம் இங்குப் படைத்துள்ளேன்! - நாவார
      ஓதி மகிழ்ந்துள்ளீர்! உம்மை வணங்குகிறேன்
      ஆதித் தமிழை அளித்து!

      Delete
  19. வணக்கம் ஐயா!

    என்னென்று நானெழுத! இன்பம் பொங்கும்
    என்னெஞ்ச மகிழ்விற்கோ எல்லை இல்லை!
    நின்பாதம் பணிகின்றேன்! தமிழாய் வாழ
    நெகிழ்வான இத்தருணம் என்றும் நிற்கும்!
    உன்புகழை எந்நாளும் உலகம் பேச
    ஒப்பில்லாப் பாட்டரசாய் உயர்ந்து வாழ்க!
    இன்னமுதத் தமிழுக்கே இனிமை சேர்க்கும்
    ஈடில்லா உன்சேவை என்றும் வேண்டும்!

    ஐயா இன்று வலைச்சரத்தில் தங்களின் கவிமாலை காணவே வந்தேன். ஆனால் தங்கள் மாணவர்களின் அணிவகுப்பில் தென்றலின் அறிமுகம் கண்டதும் வியந்து ஆனந்தக் களிப்பில் கண்ணீர் மல்க எதுவும் எழுதமுடியாமல் நிற்கின்றேன். தங்களின் ஆசியுடன் தொடர்கிறேன். தங்கள் வலைச்சரப்பணி இனிதே தொடர வாழ்த்த வயதின்றி வணங்கித் தொடர்கிறேன். நன்றிங்க ஐயா.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      வீசுகின்ற தென்றலே! விந்தைக் கவிதைகளைப்
      பேசுகின்ற தென்றலே! பேறுற்றாய் - ஈசனவன்
      காத்த தமிழ்மொழியைக் காலம் பலவென்று
      பூத்த தமிழ்மொழியைப் போற்று!

      Delete
    2. வணக்கம்.

      போற்றும் புகழ்முழக்கம்! பாரதி தாசனவர்
      ஏற்ற வலைப்பணியில் இற்றைநாள் - சாற்றுகவி
      கண்டுமகிழ் பண்டைதமிழ் கொண்டுசுவை யண்டிவர
      உண்டிடுகற் கெண்டெனவே நின்று.

      நன்றி

      Delete
    3. உணடிடுகற் கண்டெனவே நின்று

      எனத் திருத்திப்படிக்க வேண்டுகிறேன்.

      நன்றி.

      Delete
  20. சிறப்பான கவிஞர்களை அவர்தம் சிறப்புக்களை சிறப்பாயிரம் பாடி அறிமுகம் செய்வித்தவை சிறப்பு ஐயா. வாழ்த்துக்களும் நன்றியும்!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      சிறந்த கவிஞர்கள் சீர்கள் உணர்ந்து
      நிறைந்த மனத்துடன் நெய்தேன்! - பிறந்த..பால்
      சேயுக் குரம்ஊட்டும்! செப்பிய ஐவர்..பாச்
      தாயுக் குரம்ஊட்டும்! சாற்று!

      Delete
  21. கவிதை மழையில் பாட்டின் பரம்பரை அருமையான
    கவி முழக்கம் கண்டேன் கவிவேந்தே!
    கலகலப்பு காணட்டும் வலைச்சரம்!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      தனிமரம் வந்து தழைத்ததமிழ் தந்தார்!
      கனிமரம் என்பேன் கருத்தை! - இனிவரும்
      காலம் தமிழாளும்! கோலக் குறனேந்தி
      ஞாலம் தமிழாளும் நன்கு!

      Delete
  22. வலைச்சரத்தில் ஓர் புதுமை! தேமதுரத் தமிழ் கவிதைகளால், வலைப்பதிவர்களின் அறிமுகம் நல்ல இனிமை. கம்பன் புகழ் பாடும் உமக்கு எளிமை.
    சகோதரிகள் அருணா செல்வம், இளமதி, அம்பாளடியாள், சசிகலா ஆகியோரது படைப்புகளை தமிழ்மணத்தில் படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். சீராளன் வலைப்பக்கம் சென்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      அன்பால் அளித்த அருமை கருத்துகள்
      என்பால் இணைந்தே இருந்திடுமே! - இன்..பால்
      சுவையே பெருகிடுமே! துாயபணி யோங்க
      அவையே எனக்கிங் கரண்!

      Delete
  23. அருவி போலக் கொட்டும் கவிதைச்சாரலில் நனைந்து திக்கு முக்காடிப்போனேன். வலைச்சர வரலாற்றில் இது ஒரு புதுமை. அறிமுகமாகும் கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      அருவிபோல் கொட்டும் அருந்தமிழில் சின்னக்
      குருவிபோல் ஆடிக் குதித்தேன்! - பெருகிவரும்
      இன்பத்துக் கேதெல்லை? ஈடில் கலையரசி
      அன்பு கருத்தும் அழகு!

      Delete
  24. அனைவருமே நான் அறிந்தவர்கள் ..வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கவியரசிகளுக்கும் கவிஞருக்கும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      உள்ளம் உவந்தே உரைத்த கருத்துக்கு
      வெல்லம் அளிப்பேன்! விருந்தளிப்பேன்! - இல்லத்துள்
      இன்பம் நிறையட்டும்! இன்னல் மறையட்டும்!
      அன்பு மணக்கட்டும் ஆழ்ந்து!

      Delete
  25. இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்.

    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      முறுக்கியுள மீசை முகங்கண்டேன்! சொல்லை
      நறுங்கித் தரும்நலங் கண்டேன்! - செறிவுடனே
      பாடும் கவிஞர்களை இன்று படைத்துள்ளேன்!
      கூடும் இனிமை கொழித்து!

      Delete
  26. வணக்கம் கவிஞர் அண்ணா !

    பொன்பாட்டுப் பரம்பரையின் புகழே ! மென்மண்
    புதுவையிலே பூத்திட்ட தமிழே ! செந்தேன்
    இன்பூட்டும் விருத்தத்தின் எழிலே ! பாக்கள்
    எந்நாளும் படைக்கின்ற குருவே ! அண்ணா
    என்பாட்டுப் பரம்பரையென்(று) எங்கள் ஐவர்
    இன்வலையை அறிமுகத்தில் தந்தீர் ! நாங்கள்
    என்செய்வோம் உமதன்பின் கடனைத் தீர்க்க
    எம்தமிழை வளர்த்துங்கள் பெயரைக் காப்போம் !

    அன்னையவள் கைப்பிடித்து அகரம் காட்டும்
    அன்பதுவாய் எனக்குள்ளும் அறிவை நாளும்
    கன்னலுடன் கனிச்சாற்றைக் கலந்தார்ப் போலே
    கவிச்சோலை இனித்திடவே கற்றுத் தந்தீர் !
    என்னுயிரின் ஓசையிலும் என்றும் வீசும்
    இலக்கியத்தின் வாசனைகள் எல்லாம் உங்கள்
    அன்புருகி எனக்களித்த அமிர்தம் என்றே
    அகிலத்தின் திசையாவும் அறியச் செய்வேன் !

    வலைப்பூக்கள் வருதலுக்கும் நேரம் இன்றி
    வகைவகையாய்க் கடமைகளும் என்னுள் தேங்கும் !
    கலைகளையும் வெளிக்காட்டும் காலம் உண்டே
    கைகட்டிப் போனகதை காற்றும் சொல்லும்
    நிலையான தமிழுணர்வை நெஞ்சில் தாங்கும்
    நிகரில்லாக் கவிச்சுடரே ! என்னை என்றும்
    தலைவாரிப் பூச்சூடும் தாயைப் போலே
    தயைகொண்டு மன்னிப்பாய் வணங்கு கின்றேன் !

    முதல் நாள் அறிமுகத்தில் என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கவிஞர் அண்ணா என்றும் உங்கள் மாணவனாய்த் தம்பியாய் நானிருக்க என்ன தவம் செய்தேன் இவ்வையகத்தில் !

    இன்று தொடராகக் குறுஞ் செய்திகள் அனுப்பி எனக்கும் தெரியப் படுத்திய என் அன்பு உறவுகள் இனியா இளமதி ஆகியோருக்கும்
    என் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !




    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      அன்புருக அளித்திட்ட எண்சீர் பாக்கள்
      அந்தமிழில் மலர்ந்திட்ட அமுதப் பூக்கள்!
      என்புருக எழுதுகிறாய்! இன்பின் எல்லை
      எடுத்தெழுதச் சொல்லில்லை! என்றன் நெஞ்சை
      இன்றுறுகச் செய்தனையே! பாடும் யாப்பால்
      இவ்வுலகை வென்றனையே! சந்தம் சிந்து
      நன்றுறுகும் வண்ணத்தில் நாளை ஈவேன்!
      நாள்தோறும் நீவந்து கருத்தை நல்கு!

      Delete
  27. முடிமுதல் அடிவரை
    பின்னூட்டமும் தங்கள் கவிதையில்
    பதிலுரையும் பிரமிப்பூட்டுகிறது
    அறிமுகத்துடன் பாடல்பெற்றவர்களுக்கு
    என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      பின்னோட்டம் கண்டு பெருமை உரைத்துள்ளீர்!
      என்னோட்டம் யாவும் எழிற்றமிழே! - பொன்னாட்டாம்
      மின்னும் கவிதைகளை மீட்டி விளைத்துள்ளேன்!!
      இன்னும் எழுதுவேன் இங்கு!

      Delete
  28. Replies
    1. வணக்கம்!

      ஈற்றுக் கருத்தாகப் போற்றி எழுதுகிறேன்!
      ஆற்றும் கடமை அழகேந்த! - காற்றில்
      தமிழ்ச்சோலை இங்குத் தழைத்தாடும்! பாடி
      அமுதாலை யாகும் அகம்!

      Delete
  29. கவிச்சாரல் அல்ல கவி மழை! பொழிகின்றது......

    அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவரும் மிகவும் பரிச்சயமானவர்களே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      கவிச்சாரல் அன்று! கவிமழை என்றீர்!
      புவிப்பாரம் போன்று புகழ்ந்தீர்! - குவித்தேன்..கை!
      நல்ல தமிழ்மொழியை நாடெங்கும் ஓதிடுவோம்!
      வல்ல கவிமொழியை வார்த்து!

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது