நேற்றைய என் பதிவினை வாசித்த நண்பர்களுக்கும் வாசித்ததோடு நில்லாமல் என்னை நேசித்து பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
மகிழ்ச்சி என்பது என்ன? நல்ல குடும்பம், நல்ல படிப்பு நல்ல வருமானம் இவை மட்டும்தானா? நல்லா படிச்சு நிறைய சப்பாதித்து கார் வாங்கி, பங்களா வாங்கி அப்புறம்? அப்புறன் என்ன காரையும் பங்களாவையும் மொறச்சி பாத்துகிட்டிருப்போமா? இதுதான் மகிழ்ச்சியா? இல்லை, இது அத்தனையையும் பகிர்ந்துகொள்ள ஒரு நண்பன் வேண்டும். "மச்சி கார் வாங்கிருக்கிறேன் சொன்னதும் சூப்பர்டா" என கார்வாங்கியதால் நாம் அடைந்த அதே மகிழ்ச்சியை அதே மனநிறைவோடு அனுகும் ஒரு ஆத்மா வேண்டும்.
வாழ்க்கைப்பாதையின் வளைவு நெளிவுகளை கற்று அறிந்து பட்டு தெளிந்து, சின்னச்சின்ன வெற்றிதோல்விகளை எதிர்கொண்டு முன்னேறிச்செல்கையில் அவற்றின் அனுபவங்களை ஆராயவும் அசைபோடவுமாய் உடன் பயனிக்க ஒரு நட்பு அவசியம் தேவை.
சகலதையும் பகிர்ந்துகொள்ளும் நட்பு ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்யும். நண்பன் இல்லாத வாழ்க்கை நரகம். முட்டி மோதி,தட்டுத்தடுமாறி வாழ்க்கை சூராவளியால் திசைகள் தெரியாமல் அலைகழிக்கப்பட்டு சோர்வும் விரக்தியும் வாட்டும் வேளையில் சொந்தங்கள் நம்மை சீண்டித்தான் பார்க்குமே தவிர அரவணைக்காது. ஆனால் வாஞ்சையாய் தோள்மீது கைபோட்டு "விட்ரா பாத்துக்கலாம்" என்ற ஒற்றைச் சொல்லில் நம் அத்தனை துயரங்களையும் நண்பன் துடைத்தெரிவான் . அப்படியான நட்பை பெறுவதுதான் வாழ்வின் உண்ணதமான மகிழ்ச்சி அதுதான் சாதனையும் கூட.
ஆனால் இன்றைய FM ரேடியோ விளம்பரங்களைப்போல் வேகமாய் பயணித்துக்கொண்டிருக்கும் நம் அன்றாட வாழ்க்கை சூழல் நம் நண்பர்களுடன்கூட மனம்விட்டு பேசக்கூடிய வாய்ப்புக்களை பிடுங்கிக்கொண்டிருக்கிறது. எங்கோ எப்போதோ எதிர்படும் எவர் முகமோ நண்பனைப்போல் இருக்க நண்பனுடன் கழிந்த தருணங்களையும் அதன் உன்னதங்களையும் அசைபோட்டவாறே கழிகிறது அன்று முழுவதும்.
தனிமையின் நடத்தல்களில்
எதிர்வருவோர் முகச்சாயல்
உன் நினைவை அதிகரிக்க
உன்னுடன் பேசுவதற்கும்
வெற்றிடத்தில் கிறுக்குவதற்குமாய்
எத்தனையோ விஷயங்கள்.
கேட்ட பாடல்களின்
இசையையும்
பார்த்த படங்களின்
பலவீனங்களையும்
படித்தபுத்தகத்தின் சில
பக்கங்களையும்
சமநிலையில் அசைபோட
உன் துணை வேண்டும்.
அரசியலோ? ஆன்மீகமோ?
எவர் கருத்து கணிப்பினும்
உன் கருத்தே என் ஏற்புடையதாய்.
பள்ளி நாட்களின்
மழைக்காலங்களில்
ஓர் குடையின்கீழ் உனை
பின்தொடர்ந்தது வெறும்
நனையாமைக்காய்மட்டுமல்ல
நட்பிற்காகவும்தான்.
என ஒரு நண்பணின் நினைவாய் நீண்ட ஒரு கவிதையின் சிலவரிகள். சரி நம்ம வேலையைப்பார்ப்போம்.
சென்ற ஆட்சியில் இலவசமாய் TV வழங்கப்பட்டபோது வேண்டாம் என சொல்லாமல் ஒன்றுக்கு இரண்டாய் வாங்கி வைத்துக்கொண்டவர்களும் இலவசங்களுக்கு எதிராய் கடுமையான விமர்சனங்களை வைக்க தவறியதில்லை. ஆனால் இந்த ஆட்சியில் 10 ரூபாய்க்கு பாட்டிலில் தண்ணிர் அரசு கொடுக்கும் என அறிவித்தத்தும் இது ஏதோ தேவலோகத்திலிருந்து கோண்டுவரப்பட்ட திட்டம் என்பதுபோல் பெரும்பாலானவர்களும் இத்திட்டத்திற்கு வக்காளத்து வாங்க துவங்கிவிட்டனர்.
20 வருடங்களுக்குமுன் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காலங்களிலும் தெருமுனைகளில் இரும்பு தொட்டி வைத்து நள்ளிரவானாலும் அதை லாரிதண்ணீரை கொண்டு நிரப்பி ஆளுக்கு 3 குடம் 6 குடம் என வினியோகித்த வரலாறு உண்டு. அன்றைய ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களுக்கு மக்களாட்சி தத்துவத்தில் மக்களுக்கு அடிப்படை வசதியான தண்ணீரை விநியோகிக்கவேண்டியது அரசின் கடமை என்ற தார்மீகம் தெரிந்திருந்தது.
இப்போதெல்லாம் காசுக்கு ஓட்டும், காழ்ப்புணர்ச்சி அரசியலும் என பழகிவிட்டதால் தண்ணீர் விநியோகம் தங்கள் கடமை என்பதை அரசும், அது தங்கள் உரிமை எனபதை மக்களும் மறந்துவிட்டனர்.
கடந்த 24 ஆண்டுகளாக என் அன்றாட வாழ்வின் அனைத்து வெற்றி தோல்விகளையும் தன்னுடையதாகவே கருதும் நண்பன் வால்மீகி யைப்போல். என் வலை உலக பயணத்தில் என கிறுக்கல்களுக்கும் அங்கிகாரம் வழங்கி அதை மெருகேற்றவேண்டி தொடர்ந்து ஊக்கப்படுத்தும் ஒரு நண்பர் திரு ஜோதிஜி தண்ணீர் படும்பாட்டை பற்றிய ஒரு முழுமையான பார்வையை தண்ணீரில் விளையாடிய நாடுடா இது? பதிவில் மிக தெளிவாக முன்வைக்கிறார்.
மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் பற்றிய தொடர் பதிவுகள் பசுமை புரட்சி என்ற பெயரில் நம் விவசாயமுறைகள் காயடிக்கப்பட்ட கதையை விளக்குகிறது.
காடுகள் அழிக்கப்படுவதின் அவலம் என எத்தனை சிக்கலான விஷயங்களையும் சிக்கலில்லாமல் எழுதுவது தண்ணி பட்ட பாடு .
------------------------------------------------------------------------------------------------------------
வெ. இறையன்பு ,1990 களில் இந்தபெயர் தமிழர்களை தலை நிமிரச்செய்தது. இளமையாய் இருந்தார் , அழகாய் இருந்தார் அரசு பணிகளில் உயர் தகுதியாய் கருதும் IAS தேற்சிபெற்றிருந்தார்.எல்லாவற்றிற்க்கும் மேலாய் வெகுஜன பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் தோன்றி IAS படிப்பு பற்றிய நம்பிக்கைவிதைகளை இளைஞர்கள் மத்தியில் விதைத்துக்கொண்டிருந்தார்.
தன் பரபரப்பான பணிச்சுழலுக்கு மத்தியிலும் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என தன் இலக்கிய பணியை தொடர்ந்து மேற்கொண்டிருந்தவர். அவர் தளத்தில் கிடைத்த ஒரு முத்து
திட்டம்
இங்கே புல்லுக்குப்
போய்ச் சேர
வேண்டுமென்பதற்காகவே
நெல்லுக்கு
நீர் திறந்துவிடப்படுகிறது.
நலத்திட்டங்கள் என்ற பெயரில் இரைக்கப்படும் மக்களின் வரிப்பணம் உண்மையில் யாருக்கான பைகளை நிரப்ப உதவும் திட்டம் என்பதை உணர்த்துகிறது. இத்தளத்தில் இவரைப்பற்றியும் இவர் எழுதிய புத்தகங்கள் பற்றியும் விளக்கங்கள் காணக்கிடைக்கின்றன.
------------------------------------------------------------------------------------------------------------
சுயநலவாதிகளின் கேவலபட்டுப்போன அரசியல், சினிமா, ஊடகம் என பலவும் அவர்களின் ரசனை, தேவை,எதிர்பார்ப்பு என எதையும் கருத்தில் கொள்ளாமல் தங்கள் லாபம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு மக்களுக்கு எதிராய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் இவற்றிற்கெல்லாம் மாற்று ஒன்று தேவை என்பதை ஆணி அடித்தாற்போல் சொல்லும் தளம். அதே சமயம் பழக்கப்பட்டுப்போன பாதையிலிருந்து நம் பாதங்களை மாற்று என கோருவதாகவும் எனக்கு தோன்றுகிறது.