07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கைப்புள்ள. Show all posts
Showing posts with label கைப்புள்ள. Show all posts

Sunday, March 29, 2009

இசையமைப்பாளர் வி.குமாருக்கும் இந்த பதிவுக்கும் தொடர்பென்ன?

1960களில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தவர் வி.குமார். கே.பாலச்சந்தர் அவர்களின் பல படங்களுக்கு அவரது ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கியவர் இவர். மேஜர் சந்திரகாந்த், அரங்கேற்றம், எதிர்நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள் முதலிய பேர் பெற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இவர். கேபி- வி.குமார் கூட்டணியில் வெளிவந்த ஒரு திரைப்படம் "வெள்ளி விழா". இத்திரைப்படத்தில் "காதோடு தான் நான் பாடுவேன்" என்று மெல்லிய husky குரலில் திரையில் ஜெயந்திக்காகப் பாடியிருப்பார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஆனால் எல்.ஆர்.ஈஸ்வரி திரையில் பாடியுள்ள பெரும்பாலான பாடல்கள் அனைத்தும் துள்ளலான பாடல்கள் தான் என அனைவரும் அறிவார்கள். அதே படத்தில் பி.சுசீலா அவர்கள் வாணிஸ்ரீக்காகப் பாடிய ஒரு பாடல் "நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன்". எப்போதும் இனிமையான மெலடி பாடல்களே பாடும் பி.சுசீலா அவர்கள் வித்தியாசமாக சத்தம் போட்டு பாடியிருப்பார். மேற்கண்ட தகவல்களைப் பல வருடங்களுக்கு முன் வி.குமார் அவர்களே ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் பாடிக் கொண்டிருக்கும் ஒரு திறம் வாய்ந்த பாடகர், இன்னுமொரு விதத்தில் பாட வேண்டும் என்றால் அவரால் பாட முடியாது என்பதில்லை. அவர்கள் விருப்பப்பட்டு அவர்களுடைய ஸ்டைலத் தேர்வு செய்து கொள்கிறார்கள்.

நம் தமிழ் வலையுலகத்திலும் அத்தகைய ஒரு சூழல் நிலவுகிறது. சிரிப்பு பதிவர்கள், கும்மி பதிவர்கள், ஆன்மீகப் பதிவர்கள், பொதுவான பதிவர்கள் என்று ஏதாவது ஒரு வகைக்குள் ஒரு குறிப்பிட்ட பதிவரை வகைப்படுத்தலாம். ஆனால் அவர் வகைப்படுத்தப்பட்டுள்ள பிரிவைத் தாண்டியும் அவர் சில பதிவுகளை எழுதியிருப்பார். அதை படிக்கும் போது மிகவும் காண்ட்ராஸ்டிங்காக இருக்கும்.

புகைப்படக்கலை, வெண்பா எழுதுவது இவற்றிற்காகப் பேசப் பெறும் நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சியின் பின்நவீனத்துவ புனைவு பதிவு காமெடி ஒன்னு.
பாவமன்னிப்பு - கடைசி பாகம்

இலக்கியம், கவிதைகள், துபாய் அனுபவங்கள் பற்றிய பதிவுகளுக்காக அறியப் பெறும் தம்பி கதிரின் ஒரு மெகா காமெடி பதிவு.
தண்டவாளத்தில ஒண்ணுக்கு போனா தப்பா?

கலில் ஜிப்ரன், இளையராஜா பாடல்கள், கவிதைகள் என்று பல பிரிவுகளில் எழுதும் கொங்கு ராசாவுக்கு இயற்கையிலேயே ஒரு subtle ஹியுமர் சென்ஸ் அதிகம். கோயில் உற்சவத்தைப் பற்றிய செய்தி படிச்சதும் இவருக்கு என்ன தோணிருக்குன்னு பாருங்க.
காரமடை ரங்கநாதன்

காமெடின்னா டுபுக்கு, டுபுக்குன்னா காமெடிங்கிற அளவுக்கு காமெடியில பின்னி பெடலெடுக்குற டுபுக்கு அண்ணாத்தையின் படு சீரியஸான முகத்தைப் பாருங்கள் இந்த சிறுகதையில். தேன்கூடு சிறுகதை போட்டியில் 'மரணம்' என்ற தலைப்பில் இவர் எழுதியது.
சாமியாண்டி

பதிவுகளுக்கு நடுவுல காண்ட்ராஸ்ட் காட்டும் பதிவர்களுக்கு இடையில் ஒவ்வொரு பதிவுலயும் காண்ட்ராஸ்ட் காட்டுறவங்க கவிதா. "அவர்கள்" படத்துல கமல் கதாபாத்திரம் ஒரு பொம்மையை வைத்து கொண்டு பேசுவார். அக்கலையின் பெயர் Ventriloquism. வலையுலகில் அத்தகைய வெண்ட்ரிலாகுவிஸம் முயற்சி தான் இவங்களோட வலைப்பதிவு. படிக்கிறவங்களை "அவர்கள்" படத்து ஹீரோயின் சுஜாதா மாதிரி ஆக்கிவச்சிடுவாங்க. இவங்க படு சீரியஸா எழுத, இவங்களோட இன்னொரு பாதியான அணில்குட்டி அனிதா காமெடியா கலாய்ச்சி எழுதும்.
மார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல்...

வெண்பா எழுதுதல், மாதாந்திர குறுக்கெழுத்து புதிர் என்று பட்டையைக் கிளப்பி வரும் இலவசக் கொத்தனார் சரக்கு மேட்டர் பத்தி ரெசிப்பியோட சொல்லிருக்காரு பாருங்க.
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி

நாட்குறிப்புகள், பாடல்கள் பற்றிய கருத்துகள், ஆன்மீகக் கருத்துகள் எனப் பல பிரிவுகளில் எழுதும் மகரந்தம் ராகவன் அண்ணாச்சி எழுதுன முழுக்க முழுக்க கிராமிய வழக்கில் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவை கதை. இப்பதிவில் நாமக்கல் சிபி சொல்லியிருப்பது போல "இத எழுதினது சாப்ட்வேர் இஞ்சினயர்னா யாரும் நம்ப மாட்டாங்க..."
சீனியம்மா - வடக்க சூலம்

இது தான் வலைச்சரம் ஆசிரியராக நான் எழுதும் கடைசிப் பதிவு. நான் வலைச்சர ஆசிரியராக இருந்த இந்த ஒரு வாரத்தில் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய சில பதிவுகளை அவர்கள் வலைச்சர ஆசிரியர்களாக இருந்த போது இணைத்து அறிமுகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொடுத்த வேலையை ஒழுங்காக செய்தேனா இல்லையா என தெரியவில்லை. இவ்வாய்ப்பை எனக்கு வழங்கிய சீனா ஐயாவுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.
மேலும் வாசிக்க...

Friday, March 27, 2009

உள்ளமுள்ள ஜனங்க இந்த ப்ளாக்கைப் படிச்சு நெகிழும்

"முந்தி முந்தி விநாயகரே
முப்பத்து முக்கோடி தேவர்களே
வந்து வந்தெம்மை பாருமையா
வந்தனம் வந்தனம் தந்தோமையா
வந்தனம் வந்தனம் தந்தோமையா

வானத்துல சுத்துதடி ஒன்பது நவக்கெரகம்
பூமியில எடுத்துவந்தேன் தலையில நான் கரகம்
ஊருலகம் சுத்தி வரும் உத்தமபாளையம் சரகம்
உள்ளமுள்ள ஜனங்க இந்த பாட்டைக் கேட்டு கலங்கும்"

எதுக்கிப்போ கரகாட்டக்காரன் படப் பாட்டு? விநாயகருக்கு வணக்கம்னு வெச்சிப்போமே. இந்தப் பாட்டுக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்புன்னு கண்டுபிடிச்சி சொல்றவங்களுக்கு புள்ளையார் சார்புல அருள் பாலிக்கப்படும்.

தமிழ் வலையுலகில் ஏகப்பட்ட பதிவுகள் இருக்குது. ஆனா சில பதிவுகளைப் படிச்சிங்கன்னா உங்க மனசு நெகிழ்ந்து போகும், கண்ணு கலங்குனாலும் கலங்கலாம். மனசு நெகிழலன்னாலும், கண்ணு கலங்கலன்னாலும் குறைந்த பட்சம் நம்மை யோசிக்கவாச்சும் வைக்கும் இப்பதிவுகள். அப்படி பட்ட சில பதிவுகளைப் பாப்போம். இதுல கவிதை, உரைநடை ரெண்டும் அடக்கம்.

கவிதைகள்

துபாயில் தன்னுடைய நண்பரைப் பார்க்க சென்ற இடத்தில் தான் கண்டவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் தம்பி. வாழ்க்கை ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
என் நண்பனுடன் ஒரு நாள்

கணவனுக்காக மனைவி காத்திருத்தலைப் பற்றிய தீக்ஷண்யாவுடைய ஒரு வித்தியாசமான பார்வை.
மனையாள் அன்பு

ஆண் பெண் நட்பு பற்றிய வேதாவினுடைய அழகான கவிதை ஒன்று.
நீ ஆணென்றும்! நான் பெண்ணென்றும்!

நாம் தெருவில் பார்க்கும் மனிதர்கள் சிலரின் வாழ்வை நாம் ஒரு நாள் வாழ்ந்து பார்த்தால் எப்படியிருக்கும் என ஏங்குகிறார் கீதா.
அவரவர் உலகம்

"No one has ever won a War" அப்படீங்கற ஆங்கில சொல்லாடலை நினைவுபடுத்தற மாதிரி, போரில் யார் வென்றாலும் தோற்றாலும், தோற்பது மனித இனம் தான் என்று அழகாக இக்கவிதையின் மூலம் சொல்கிறார் நாமக்கல் சிபி.
மரித்துக்கொண்டிருப்பது மனித இனம்தானே....!

ஒரு பெண் தாயாகும் தருணங்கள் அவள் கணவனின் பார்வையில். நெகிழவைக்கும் விவசாயியின் கவிதை.
ஜனனம்

கவிதை அல்லாதவை

ஒரு கரகாட்டம் ஆடும் பெண் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ராமின் இந்த பதிவில்.
டங்கா.. துங்கா..மவுசுகாரி!!!!

நெருங்கியவர்களின் மரணம் நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களை எழுதியிருக்கிறார் யாத்ரீகன்.
நெருங்கியவர்களின் மரணம்

2006இல் தேன்கூடு திரட்டி நடத்திய சிறுகதை போட்டியில் "வளர்சிதை மாற்றம்" என்ற தலைப்பில் முதல் பரிசு வென்ற இளவஞ்சியின் சிறுகதை. வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு இளைஞனின் கதை.
விட்டில் பூச்சிகள்

நான் படித்த முதல் பத்து பதிவுகளுள் ஒன்று இது. புக் கிரிக்கெட், FLAMES விளையாட்டு என ஒரு நகரத்து சிறுவனின் சின்னஞ்சிறு உலகத்தைப் பிரதிபலிப்பது போல இருந்தாலும் இறுதியில் ஒரு கணமான இதயத்துடன் உங்களை விட்டுச் செல்லும் தேவின் இக்கதை. கதை என்பதை விட இதை அனுபவம் என்றே சொல்லலாம்.
பழைய பனையோலைகள்

நெல்லிக்கா, கொல்ட்டி என நிறைய பிரபலமான கதைகளை இவர் எழுதியிருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. வயதான பின் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் துணை எவ்வளவு அவசியமானது என்று உணர்த்தும் ஒரு நல்ல கதை.
பயணம்...

அழிக்கப்பட்ட ஒரு பெண் சிசுவிற்கு தன் உணர்வுகளை எடுத்துரைக்கும் ஆற்றல் வந்தால்...படித்து பாருங்கள் ஜீவ்ஸின் இப்புனைவை.
ஒரு மெளனத்தின் அலறல்
மேலும் வாசிக்க...

Thursday, March 26, 2009

பசுமை நிறைந்த நினைவுகளே!

ஒத்துக்கறேங்க...வலைச்சரம் தொடுக்கறது ஒன்னும் சுலபமான காரியம் இல்லைங்க. ஏற்கனவே படிச்ச பதிவுகள் தானே...சுலபமாத் தேடி எடுத்துடலாம்னு நெனச்சேன். ஆனா படிச்சப்போவே பிட் எடுத்து வச்சிருக்கனும் போலிருக்கு. அடிமனசுல தங்கியிருந்த அந்த பதிவுகளைத் தோண்டி எடுக்கறதுக்குள்ள பெரும்பாடா போயிடுச்சு. பழைய நினைவுகளை எல்லாம் அசைபோடுறதுன்னா ஒரு சுகம் தானே. அந்த சுகத்தை நமக்கு அள்ளிக் கொடுத்த சில பதிவுகளை வரிசை படுத்தறேன்.

கடந்த கால நினைவுகள்ல, அதிகப் பட்ச மக்களால ரசிக்கப்பட்டது எதுன்னு இணையத்துல தேடிப் பாத்தீங்கன்னா அது தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றிய நினைவுகள் தாங்க. நம்ம தமிழ் வலையுலகிலும் தூர்தர்ஷனைப் பற்றிய சில அருமையான நினைவுபடுத்தல் (கொசுவத்தி) பதிவுகள் வந்துள்ளன.

முதலில் கொசுவத்தி சுத்துவதில் மாஸ்டரான கப்பிபயலின் தூர்தர்ஷன் பத்திய பதிவைப் படிச்சுப் பாருங்க. டிடி யில் வந்த பழைய சில பாடல்கள், நிகழ்ச்சிகள், அவங்க வீட்டுல டிவி பார்த்த அனுபவங்கள் இப்படின்னு ரொம்ப சுவாரசியமா எழுதிருக்காரு.

"ஆணா பொண்ணா பொறந்தது
அது தான் இங்க முதல் சேதி
ஆணா பொறந்தா சிரிப்பு என்ன - அட
பெண்ணா பொறந்தா வெறுப்பு என்ன"


ஸ்ரீவித்யா அந்த காலத்துல தூர்தர்ஷன்ல பாடுவாங்களே பார்த்திருக்கீங்களா? இந்த பாட்டு மெட்டு நல்லா ஞாபகம் இருக்கு."

டிடி - 1 & டிடி - 2(மெட்ரோ)


தூர்தர்ஷன் நாடகங்கள், நிகழ்ச்சிகள் அப்படின்னு கார்த்திகேயனும்(Sukas) தன் நினைவுகளைக் கலந்து கட்டி வழங்கியிருக்கிறார். இவர் ஒரு தேர்ந்த பென்சில் ஓவியக் கலைஞர் என்பது கூடுதல் தகவல். அவருடைய பென்சில் ஓவியங்களையும் அவருடைய தளத்தில் காணலாம்.

"வயலும் வாழ்வும், மனைமாட்சி, கொஞ்சம் நில்லுங்கள் ..உழைப்பவர் உலகம் ..இதில் முன்னோட்டத்தில் அடுத்தவார திரைப்படப் பேரைச் சொல்லுவார்களெனப் பார்த்தால் ..அதற்கு முந்தைய வாரம் எதோ "ஹாலிவுட் படம்" போட்டது போல "அடுத்த வாரம் ஞாயிறு 5 மணிக்கு தமிழ் திரைப்படம்" என்று முடிப்பர்.. வெட்டியாக போய்விடும்.."
சென்னைத் தொலைக்காட்சி நிலையம்


தசாவதாரம் படத்துல வர்ற கமலின் ஓப்பனிங் உரையின் பாணியில் ஆரம்பிச்சிருக்கும் அம்பியின் பதிவும் டிடி நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒரு அழகான மலரும் நினைவு.
"சன் டிவியும் விஜய் டிவியும் தமிழனின் வரவேற்பறையில் நுழையாத என்பதுகளில் தூர்தர்ஷன்காரர்கள் டில்லியிலிருந்து, போனா போகட்டும் என அவ்வப்போது தமிழ் நிகழ்ச்சிகளையும் நடத்தி கொள்ள அனுமதித்து இருந்த காலம்."
எதிரொலி

எல்லாரும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் பத்தி எழுதிருக்கும் போது, சந்தன முல்லை கொஞ்சம் வித்தியாசமா கேபிள் டிவியோட ஆரம்ப நாட்களையும் படம்பிடிச்சி காட்டிருக்காங்க. கேபிளுக்கும் டிடிக்கும் ஒரு சின்ன ஒப்புமையும் பண்ணிருக்காங்க.

"கேபிள் கொஞ்சம் கொஞ்சமா பரிணாம வளர்ச்சி அடைஞ்சிக்கிட்டிருந்தப்போதான், திடீர்னு ஒரு சேனல்..சன் ன்னு!!ஆரம்பத்தில இ.மாலா-ன்னு ஒரு ஆண்ட்டி வருவாங்க!! அழகா இருப்பாங்க அந்த ஆண்ட்டி. இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியல!அப்புறம் வார்த்தை விளையாட்டு..கேம்ஸ் ஷோ, சினிமா குவிஸ், ரபி பெர்னார்டின் நேருக்கு நேர், பிரபலங்களின் பேட்டி என்று புதுப் புது நிகழ்ச்சிகள்!! ஆனா அப்ப பார்த்து நான் பப்ளிக் எக்ஸாம்..நிறைய மிஸ் பண்ணிட்டேன்!

இப்போ எத்தனையோ சேனல்கள்..நிறைய நிகழ்ச்சிகள்..
பார்க்க நேரமுமில்லை...பார்க்கும்படியாய் எந்த நிகழ்ச்சியுமில்லை!
விளம்பரங்கள் மட்டுமே ரசிக்கும்படியாயிருக்கிறது இப்பொழுதும் அப்போழுதும்!!"

தூர்தர்ஷனும் கேபிள் டீவியும்!!


எல்லாரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பத்தி கொசுவத்தி சுத்துனா KRS வித்தியாசமா தொலைக்காட்சி விளம்பரங்களைப் பத்தி எழுதிருக்காரு. சுவாரசியமா இருக்கு பாருங்க.

"பென்சில்களுக்கு இடையே ஒட்டப் பந்தயம்...நட்ராஜ் பென்சில் தவிர எல்லாப் பென்சிலுக்கும் பாதியிலேயே மூக்கு ஒடைஞ்சிரும்! கடைசீல நட்ராஜ் இஸ் த வின்னர்!
(நட்ராஜ் ஜியாமெட்ரி பாக்சும் அப்போ ரொம்ப ஃபேமஸ்! கேமலின் பாக்ஸ் விலை அதிகம்! நட்ராஜ் தான் ஏழைக்கேத்த எள்ளுருண்டை! நீங்க எந்த ஜியாமெட்ரி பாக்ஸ் வச்சிருந்தீங்க மக்கா?)"

***குழந்தைப்பருவ விளம்பரங்கள்! போட்டுடைத்த டாக்டர் கலைஞர்!


டிவி நினைவுகள் போலவே வானொலி கேட்ட மலரும் நினைவுகளையும் எழுதி வச்சிருக்காரு கப்பி பய.

"ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி" இது தான் அந்த நாட்களில் படுக்கையிலிருந்து எழ அலாரம். அதிகாலையில் எழுந்ததுமே அப்பா வானொலியை உயிர்ப்பித்துவிடுவார். சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், "ஏசு அழைக்கிறார்", நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் பாடல்கள் என்று ஆரம்பிக்கும். அப்போது விழிப்பு வந்தாலும் போர்வையை இழுத்துப் போர்த்தி அரைத்தூக்கத்தில் படுத்திருப்பது பரமசுகம். பக்திப் பாடல்கள் முடிந்ததும் வேளாண் செய்திகள். "
நினைத்தாலே இனிக்கும்


பள்ளி நினைவுகளினூடே மறந்து போன சில சின்னப்பசங்க பாட்டையும் நினைவு படுத்துகிறார் கப்பி.

"பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பன்ருட்டி"

பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்


என்பதுகளின் இறுதியில் சிறுவர்களாக இருந்த போது ரசித்த மிட்டாய்களை நினைவு படுத்துறாங்க சந்தனமுல்லை.

"Naturo இது கெட்டிப்படுத்தப் பட்ட பழச்சாறு. ஆரம்பத்தில் மாம்பழச் சுவையில் மட்டுமே கிடைத்தது. பின் கொய்யா மற்றும் மற்றொரு
சுவையில் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போதும் மாம்பழச் சுவையில் கடைகளில் பார்க்கிறேன்!"

சாக்லேட் கதைகள்..


பேருந்தில் பயணம் செய்த நினைவுகளை நீங்களும் அவர் கூட பயணம் செய்யுற மாதிரி அசைபோடுறாரு கப்பி.

"கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறும் இளம்பெண்ணைப் பார்த்து "எவனும் இடம் கொடுக்க மாட்டான். தூங்கற மாதிரி நடிப்பானுங்க" என்று கமெண்ட் அடித்த நாற்பது வயது மனிதர் அவருக்கு இடம் கிடைத்ததும் ஜன்னலை இறக்கி விட்டு கண்கள் மூடிக்கொள்வதையும், அந்தப் பெண் உறங்கும் குழந்தையை தோளில் போட்டு நின்று கொண்டிருப்பதையும் காண முடிவது இத்தகைய பேருந்துப் பயணங்களில் தான்."
பேருந்து பயணங்களில்...



குழந்தை பருவத்தில் படித்த சில அருமையான தமிழ் பாடல்களை நினைவு கூறுகிறார் Sukas. கூடவே கவிஞர் அழ.வள்ளியப்பா பற்றிய நினைவுகளையும்.

"வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா

இடியிடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்

மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்"

குழந்தைக் கவிஞர்...??
மேலும் வாசிக்க...

Tuesday, March 24, 2009

ராபர்ட் ஸ்காட் கற்றுத் தரும் பாடம்

கேப்டன் ராபர்ட் ஃபால்கன் ஸ்காட்(Capt. Robert Falcon Scott) என்பவர் ஒரு ஆங்கிலேய மாலுமி. உலகிலேயே தென் துருவத்தில்(South Pole) முதன்முதலில் காலடி பதித்தவர்கள் எனும் பெருமையை பெறுவதற்காக இவரும் இவருடன் மேலும் ஐந்து வீரர்களும் கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்டிக் கண்டத்தில் 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். பலவிதமான தடைகளையும், கடினங்களையும் சந்தித்த பின்னர் 1912 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் தென்துருவத்தைச் சென்றடைகிறார்கள் ஸ்காட்டும் அவர் குழுவினரும். அங்கு சென்று சேர்ந்ததும் அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. ராபர்ட் ஸ்காட் தென் துருவத்தில் கால்பதிக்க எண்ணி பயணத்தைத் துவங்கிய கிட்டத்தட்ட அதே நேரத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ரோஆல்ட் அமண்ட்சென்(Roald Amundsen) என்ற தேடலாய்வாளரும் அவர் குழுவினரும் தென் துருவத்தை அடையும் தங்களுடைய பயணத்தையும் துவக்கினர். பூகோள தென் துருவத்தை(Geographic South Pole) சென்றடைய இவ்விருவரும் மேற்கொண்ட ஆயத்தங்கள் வெவ்வேறானவை. இவர்கள் பின்பற்றிய பாதைகளும் வெவ்வேறானவை. ஸ்காட்டின் குழுவினர் தென் துருவத்தைச் சென்றடைவதற்கு நான்கு வாரங்களுக்கு முன்னரே அதாவது 1911ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதியே அங்கு வந்தடைந்து திரும்பிச் சென்று விட்டதை ராபர்ட் ஸ்காட்டும் அவர் குழுவினரும் அறிந்து கொள்கின்றனர்.

தென் துருவத்தில் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, இங்கிலாந்து நாட்டின் கொடியான யூனியன் ஜாக்கைப் பறக்க விட்டு விட்டு தாங்கள் அங்கு வந்திருந்தமைக்குச் சில ஆதாரங்களையும் விட்டு விட்டு ராபர்ட் ஸ்காட்டும் அவர் குழுவினரும் தாங்கள் தோற்கடிக்கப் பட்டுவிட்டோம் என்ற சோர்வுடனும் திரும்புகின்றனர். திரும்பும் வேளையில் வானிலை மேலும் சீர்கெடுகின்றது. மைனஸ் 25 டிகிரி ஃபாரண்ஹீட்டுக்கும் குறைவான கடும் குளிரும் பனிக் காற்றும் தென் துருவத்திலிருந்து திரும்பும் ஸ்காட்டின் குழுவினரைத் தாக்குகிறது. 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி, பயணத்தின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இவான்ஸ்(Evans) என்ற வீரர் தங்கள் கண் முன்னர் உயிர் விடுவதை ஸ்காட்டும் அவர் குழுவினரும் பார்க்கின்றனர். தென் துருவத்திலிருந்து அவர்களுடைய பேஸ் கேம்ப் அமைந்துள்ள இடத்திற்குமிடையேயான ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்களைக் கடக்க முற்படும் போது பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். கடும் குளிரின் காரணமாக அவர்களால் ஒரு நாளுக்கு 6 அல்லது 7 மைல்களுக்கு மேல் கடக்க முடிவதில்லை. இந்நிலையில் நாட்களின் கணக்கு மறந்த நிலையில் கேப்டன் ஓட்ஸ்(Capt. Oates) என்ற வீரர் நோய்வாய்ப் படுகிறார். இதற்கு மேல் என்னால் வர முடியாது, என்னை விட்டு விட்டு நீங்கள் சென்று விடுங்கள் என்று கூறுகிறார். இதற்கு அவர்கள் உடன்பட மறுக்கின்றனர். அதற்கு மறுநாள் கடும் 1912 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி, உறைபனியுடன் கூடிய சூறாவளிக் காற்று வீசுகிறது. தன்னுடைய நண்பர்களுக்குத் தான் ஒரு பாரமாக இருக்கக் கூடாது என்று நினைத்த ஓட்ஸ் "நான் சற்று வெளியே செல்கிறேன். முடிந்தால் மற்றொரு முறை சந்திப்போம்"("I am just going outside and may be some time.") என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். அதன் பின்னர் ஓட்ஸை ஸ்காட்டின் குழுவினர் பார்க்கவில்லை.

இதற்கிடையில் கேப்டன் ராபர்ட் ஸ்காட்டும், அவருடன் எஞ்சியிருக்கும் லெப்டினண்ட் போவர்ஸ்(Lt.Bowers) மற்றும் டாக்டர்.வில்சன்(Dr.Wilson) ஆகிய மூவரும் கடும் குளிரின் காரணத்தினாலும் உணவு பற்றாக்குறையின் காரணமாகத் தங்கள் உடல் பலத்தை எல்லாம் இழந்து கடுமையான சோர்வுக்கும் அசதிக்கும் உள்ளாகின்றனர். 1912 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தென் துருவத்திலிருந்து திரும்ப முடியாத நிலையில் தங்கள் இறுதி மூச்சை விடுகின்றனர். "நாங்கள் இறுதி வரை போராடிப் பார்ப்போம், ஆனால் நாங்கள் எங்கள் சக்தி அனைத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம், எங்கள் முடிவு வெகுதூரத்தில் இல்லை. இதற்கு மேலும் என்னால் எழுத முடியும் என்று தோன்றவில்லை, அந்தோ பரிதாபம் தான். கடவுளின் பேரால் எம் மக்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" இது தான் ராபர்ட் ஸ்காட் சொல்லிய கடைசி வார்த்தைகள்.

"I do not think we can hope for any better things now. We shall stick it out to the end, but we are getting weaker, of course, and the end cannot be far. It seems a pity, but I do not think I can write more.

R. Scott

Last entry

For God's sake look after our people."




அம்மூவரின் சடலங்களும் 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி பனியில் புதைந்த நிலையில் ஒரு மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப் படுகின்றன. அதன் பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கும் ராபர்ட் ஸ்காட் என்பார் ஒரு மிகப் பெரிய தன்னம்பிக்கைச் சின்னமாகத் திகழ்ந்து வந்திருக்கிறார். இதையெல்லாம் இப்ப எதுக்குச் சொல்றேன்னு புரியுதுங்களா? செல்ஃபோன், சாட்டிலைட் ஃபோன், இண்டர்நெட், இமெயில் ஏதுமில்லா அக்காலத்தில் யாருமில்லாத ஒரு அத்துவானப் பனிக்காட்டில் இயற்கையுடன் போராடி உயிர்விட்ட ஐந்து மனிதர்கள் பற்றிய கதையை நாமறிந்து கொள்ள காரணமாக இருப்பது கேப்டன்.ராபர்ட் ஸ்காட் நாள் தவறாமல் எழுதிய அவருடைய நாட்குறிப்பு...அதாவது ராபர்ட் ஸ்காட்டின் டைரி. இப்பவாச்சும் என்ன சொல்றேன்னு புரியுதுங்களா? என்னது? இன்னும் புரியலியா? அறிவுரை சொல்றேன்யா அறிவுரை. பழங்காலத்தில் நம் அரசர்கள் எவ்வாறு அறநெறி வழுவாமல் ஆட்சி புரிந்தார்கள் என்பதையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். அதெல்லாம் பழங்காலம். ஆனா இப்போ இருக்குற டென்சன்ல, ஒவ்வொருத்தருக்கும் தன்னோட வேலையைத் தக்க வச்சிக்கிறதும், தன் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறதுக்குமே சரியாயிருக்குது. இதுலே எங்கே அடுத்தவனைப் பத்தி கல்வெட்டு எழுதறது?

அதுனால? அதுனால...நான் என்ன சொல்றேன்னா... அடுத்தவன் நம்மைப் பத்தியும் நம்முடைய வாழ்க்கையைப் பத்தியும் கல்வெட்டு எழுதலைன்னா பரவால்லை. நம்மளைப் பத்தி நாமளே கல்வெட்டு எழுதிக்கிறதுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சி வழிவகை ஏற்படுத்தி கொடுக்குது. அந்த வழி தான் ப்ளாக் அல்லது வலைப்பதிவு. வலைப்பதிவு ஏன் எழுதனும்? ஒன்னுமில்லீங்க...நம்ம வாழ்க்கையைப் பத்தி நாமே எப்பவோ எழுதி வச்சதை ஒரு சில வருஷங்கள் கழிச்சு நாமே எடுத்துப் பாத்தோம்னா கூட "ஆஹா! அந்த காலத்துல நம்மளோட சிந்தனைகளும், கருத்துகளும், ரசனைகளும் இப்படி இருந்துச்சா?" எனத் தோனும். மனிதனுக்குக் கண்டிப்பா வளர்ச்சி தேவை. உடல் வளர்ச்சியைச் சொல்லவில்லை. மனவளர்ச்சியைப் பற்றி சொல்லுகிறேன். நம்முடைய ரசனைகளும், கருத்துகளும், எண்ணங்களும் பரந்து விரிவடைவதைப் படம் பிடித்துக் காட்டுவன வலைப்பதிவுகள். அதற்கு முன்னர் ராபர்ட் ஸ்காட்டின் டைரி குறிப்புகளையே எடுத்துக் கொள்வோமே...தங்கள் வாழ்நாளின் கடைசி சில நாட்களைப் பற்றி அவர் எழுதியிரா விட்டால் அவர்கள் பயணம் தோல்வியடைந்ததற்கான காரணங்களையும், அதை நாமறிந்து கொண்டு பின்னாளில் அத்தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பினையும் இழந்திருப்போம். மேலும் ராபர்ட் ஸ்காட் தன் மனைவி கேத்லினுக்காகவும் ஒரு குறிப்பினை விட்டுச் சென்றார் "என் விதவை மனைவிக்கு" என்று தொடங்கும் ஒரு கடிதத்தில். உயிரோடு திரும்ப வரவில்லை என்ற காரணத்தினால், நான் ஒவ்வொரு நாளும் நரக வேதனையை அனுபவித்தேன் என்று எண்ணிவிட வேண்டாம். தென் துருவம் சென்றடைந்து அங்கிருந்து திரும்பி வரும் வரை நாங்களனைவரும் நல்ல நிலையில் தான் இருந்தோம்" என்று குறிப்பிடுகிறார். அத்துடன் "மறுமணத்தைப் பற்றி உன் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒதுக்கி விட வேண்டாம். உனக்கேற்றவன் கிடைத்தால் மறுமணம் செய்து கொள்" என்றும் கூறிச் சென்றிருக்கிறார்.

நான் இப்பதிவின் வாயிலாகச் சொல்ல வந்தது வலைப்பதிவுகளை ஒரு நாட்குறிப்பாக அதாவது டைரியாகப் பயன்படுத்துபவர்களைப் பற்றி. அதாவது தங்கள் வாழ்வில் நடந்த/நடக்கின்ற நிகழ்ச்சிகளை அவை நடந்த வண்ணம் பதிவு செய்து வைத்திருப்பவர்களை. அதில் தலை சிறந்தவர் என நான் கருதுவது...துளசி அம்மா. இதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்றே எண்ணுகிறேன். உங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி உங்க கூட உக்காந்து சிநேகமா கதை சொல்ற மாதிரி இருக்கும் இவங்களோட பதிவுகள். கதை மட்டும் இல்லாம, பலதரப்பட்ட விஷயங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துப்பாங்க. இவ்ளோ ஏங்க...ராபர்ட் ஸ்காட் பத்தி கூட எழுதி வச்சிருக்காங்க அவங்க பதிவுல. அவங்க எழுதுன எட்டு நூத்தி சொச்சப் பதிவுகள்ல பெரும்பாலானவற்றை நான் படிச்சதில்லை...ஆனா படிச்ச வரைக்குமே அவங்க ஒரு தலைசிறந்த டைரி எழுத்தாளர் என்று எனக்கு கண்டிப்பா தெரியும். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில், தன் வாழ்க்கையில் அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றிய எவ்ரிடே மனிதர்கள் என்ற பதிவுகளைப் படிச்சிப் பாருங்க.

அடுத்து என் நினைவுக்கு வருபவர் மா.சிவக்குமார். நானெல்லாம் பதிவெழுத வந்ததுக்குக் காரணம் அதன் மூலம் கிடைக்கும் கமெண்டுக்காக. நான் எழுதிய பதிவுக்குப் பின்னூட்டம் வரவில்லை என்றால் துவண்டு விடுவேன். "ஆனால் கமெண்டு வரலைன்னாலும் நான் ஒரு நாட்குறிப்பு போல எழுதிட்டுத் தான் இருப்பேன்னும் அதே காரணத்துக்காகத் தான் என் பதிவுல பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்தவில்லை" என மூனு வருடத்துக்கு முன் இவரை நான் சந்திச்சப்போ என்கிட்ட சொன்னாரு. அன்றாட நிகழ்வுகளையும், பொருளாதாரம், வணிகம் பற்றிய தன்னுடைய கருத்துகளையும் பதிந்து வைத்திருக்கிறார் இவர்.

அடுத்து துளசியம்மாவைப் போலவே வெகு சுறுசுறுப்பாக எழுதிக் கொண்டே இருக்கும் எங்கள் தலைவி கீதா சாம்பசிவம் மேடம். இண்டர்நெட்டைக் கனெக்ட் செய்வதற்கு டாட்டா இண்டிகாமுடன் மல்லுக்கட்டியதையும், அவர்கள் வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்கியிருப்பதையும், வீட்டிற்குள் வந்து நாய் குட்டி போட்டதையும் அதற்கு இவர் செவிலித் தாயாக இருந்ததையும் நகைச்சுவை பொங்க விவரித்திருப்பார். அத்துடன் முருகர், விநாயகர், கிருஷ்ணர் என அனைத்து கடவுளர்களும் இவர் வலைப்பதிவில் குடிக் கொண்டிருப்பார்கள்.

வலைப்பதிவுகளை ஒரு நாட்குறிப்பு போல எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவர்களுடைய பதிவுகளைக் கொஞ்சம் தோண்டிப் பாருங்களேன்.
மேலும் வாசிக்க...

Monday, March 23, 2009

வலைச்சரத்தில் கைப்புள்ள - அறிமுகப் பதிவு

வணக்கம். மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் வாரத்துக்கு என்னை வலைச்சர ஆசிரியராக இருக்குமாறு சீனா ஐயா அழைப்பு விடுத்திருந்தார். முதலில் அவருக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

கைப்புள்ள எனும் புனைபெயரில் எழுதிவரும் என்னுடைய பூர்வாசிரமப் பெயர் மோகன்ராஜ் என்பது. Kaipullai Calling...எனும் என்னுடைய சொந்த வலைப்பதிவிலும், வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் என்ற குழு வலைப்பதிவிலும் எழுதி வருகிறேன். 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் கடைசி சில நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில் என் தமிழ் வலைப்பூவைத் தொடங்கினேன். அது முதல் இன்று வரை கிட்டத்தட்ட, சற்றேறக் குறைய, அநேகமாக, சுமாராக, தோராயமாக 184 பதிவுகளைப் பதிப்பித்திருக்கிறேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தான் எழுத வேண்டும் என்று எண்ணி கைப்புள்ள காலிங் என்ற என் வலைப்பூவைத் தொடங்கவில்லை. என்ன தான் இருக்குன்னு பாப்போமே அப்படின்னு பாக்க ஆரம்பிச்சப்போ வலைப்பூக்களில் தமிழ் எனக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டியது. சிலரைப் போல நெடுங்காலம் அடுத்தவரின் பதிவுகளைப் படித்திருந்து விட்டு என் வலைப்பூவைத் தொடங்கவில்லை...அப்போ தான் பாத்தேன்...அப்போவே ஆரம்பிச்சிட்டேன். தமிழ் வலைப்பூன்னு சொன்னாலும் என்னோட முதல் சில பதிவுகள் தங்கிலிஷ்ல தான் இருக்கும்...அதுக்குக் காரணம் மூனு பதிவு இருந்தா தான் தமிழ்மணத்துல இணைப்பாங்க அப்படீங்கறதுனால தான்.

சரி...ரொம்பவும் ரம்பம் போடாம என் வலைப்பூவில் நான் எழுதியதில் படித்தவர்களுக்குப் பிடித்ததையும் எனக்கு பிடித்ததையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

மனதுக்கு நெருக்கமான பதிவு
நியூ படத்து ட்ரெயிலரைப் பாத்துட்டு நான் எழுதுன இந்த பதிவு என் மனதுக்கு நெருக்கமான ஒரு பதிவு. அப்போது பிரபலமாக இருந்த தேன்கூடு திரட்டியில் "அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள்" தொகுப்பில் இப்பதிவு இடம் பிடித்தது. ஆபாசமான படம் என்று முத்திரை குத்தப்பட்ட நியூ படத்தில் அப்படி என்ன தான் பிடித்த விஷயம் இருக்குன்னு படிச்சித் தான் பாருங்களேன்.

நியூ படத்தில் பிடித்தது

காமெடி மாதிரி

"Tinkle"னு சிறுவர்களுக்கான ஆங்கில சஞ்சிகை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதில் "ஷிகாரி ஷம்பு" என்று ஒரு கார்டூன் தொடர் வரும். இது தமிழில் எதோ ஒரு சஞ்சிகையில் "வேட்டைக்கார வேம்பு" என்ற பெயரில் வெளி வரும். தினமலர் சிறுவர் மலரில் வரும் 'சொரிமுத்துஜி' கூட இந்த மாதிரி ஒரு புல்தடுக்கி பைல்வான் தான். துப்பாக்கியே பிடிக்கத் தெரியாத ஒரு தொடை நடுங்கி வேட்டைக்காரரான ஷம்பு, ஏனோ தானோ என்று செய்யும் செயல்கள் எல்லாம் பெரிதாகப் பேசப் படும். சிங்கத்தை வேட்டையாட அவர் துப்பாக்கியால் சுடும் போது குறி தவறி அது ஒரு புலியை வீழ்த்தும். "ஆஹா! சிங்கத்தோடு ஒரு புலியும் அட்டகாசம் செஞ்சிருக்கு போலிருக்கே. ஷம்பு யூ ஆர் ரியல் கிரேட்" அப்படின்னு அவரை ஊரார் எல்லாம் அசகாய சூரர், வீரர் என்றெல்லாம் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். உண்மையில் அவர் "வீக்னெஸ்"ஆக இருக்கும் விஷயம் யாருக்கும் வெளியில் தெரியாது. அது போல எங்கள் வீட்டில் நடந்த நானும் என் தம்பியும் சிறுவர்களாக இருந்த போது நடந்த சம்பவங்களைத் தொகுத்து "தடிப்பசங்க" என்ற பெயரில் ஒன்னு, ரெண்டு என்று நம்பர் போட்டு எழுதிய பதிவுகள், பதிவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று உண்மையில் மகா கடியனான என்னை ஒரு காமெடி பதிவனாக ஏற்றுக் கொள்ளும் நிலைமை உருவாகி விட்டது.

பரிட்சை பேப்பரை வீட்டில் காட்டும் போது என் தம்பியும் நானும் செய்த தில்லாலங்கடி வேலைகளைப் படிச்சிப் பாருங்க.
தடிப்பசங்க # 3

வீட்டுல ஒரு "பெட் அனிமல்ஸ்" வளர்க்கனும்ங்கிற எங்களோட ஆசை நிறைவேறாம போனதுக்கான காரணங்களைப் பாருங்க.

தடிப்பசங்க # 7


இந்த பதிவைப் பத்தி நான் சொல்லக் கூடாதுன்னு தான் நெனச்சேன். ஆனா சொல்லாட்டிப் போனாலும் யாராச்சும் கமெண்ட்ல கொண்டாந்து போட்டுருவாங்க. அதனால நானே போட்டுடறேன். உள்ளே என்ன இருக்குன்னு நீங்களே பாத்துக்கங்க :)

வச்சான்யா ஆப்பு


நெஞ்சை நக்குனது

என் உண்மையான கேரக்டரோடு ஒத்துப் போகற பதிவுகளை வெகுநாள் கழித்து தான் என் வலைப்பதிவில் இட்டேன். "கைப்புள்ள உனக்கு இப்படியொரு முகம் இருக்கா?"அப்படின்னு பல பேரு அந்தப் பதிவுகளைப் படித்துவிட்டு ஆச்சரியப் பட்டுப் போனார்கள்.

எனக்கு வயசாகிடுச்சான்னு நான் கேட்ட கேள்விக்கு எத்தனை பேரு ஆர்வமா வந்து பதில் சொல்லிருக்காங்க பாருங்க. நெஞ்சை நக்கியிருந்தாலும் நூறுக்கு மேல அடிக்க முடிஞ்சுதேன்னு எனக்கும் ஒரு ஆச்சரியம் தந்த பதிவு இது.
வயசாயிடுச்சாங்க?

நிஜ வாழ்க்கையில் நான் கண்ட ஒரு சம்பவமும், தற்கொலை செய்து கொள்ளுதல் குறித்த என் எண்ணங்களும்.
தசரதர்கள் வாழ்வதில்லை

பெற்றவர்களைப் பார்வையில் பிள்ளைகளும், பிள்ளைகளின் பார்வையில் பெற்றவர்களும்.
தசரதர்கள் வாழ்வதில்லை...தொடர்ச்சி

கொசுவத்தி சுத்துனது

படிக்கும் வயதில் மிகவும் ரசித்த பேருந்து பயணங்களைக் குறித்த சில மலரும் நினைவுகள், மூன்று பகுதி கொண்ட இத்தொடரில்.
பஸ் பயணங்களில் #1

பஸ் பயணங்களில் #2

பஸ் பயணங்களில் #3

ஊர்சுத்திட்டு சுத்துனது

ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கட் என்னும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊரில் வேலை நிமித்தமாகத் தங்கியிருந்த போது ஊர்சுத்திப் பார்த்துவிட்டு ஒரு தொடராக எழுதியது கீழே உள்ள இம்மூன்று பதிவுகளும். இதில் மூன்றாவதாக உள்ள பதிவு, அப்போது தமிழ்மணம் நடத்திக் கொண்டிருந்த பூங்கா இணைய இதழில் இடம்பிடித்தது.

எனது சித்தூர்கட் செலவு

தொண்டையில் தண்ணி பார்க்கலாம்

நாகா சாதுக்களும் ஒரு அறிவாளியும்

சில காலத்துக்கு முன்னாடி ஆங்கிலத்தில் எதிர்பாராத சமயத்தில் நடப்பவற்றைப் பற்றி ஒரு 10 ரூல்கள் என்று ஒரு ஃபார்வர்டு மெயில் வந்தது ஞாபகமிருக்கா? அதன் சரியான பெயர் நினைவிலில்லை. அதில் ஒன்று "கையில் க்ரீஸ் ஒட்டி கையெல்லாம் அழுக்காக இருக்கும் போது தான் மூக்கு அரிக்கும்" என்பது. அது போல ஓரளவுக்கு ஆணிகள் அற்று இருந்த வேளையில் வலைச்சர ஆசிரியராக இருக்க ஒப்புக்கொண்டதும் திடீரென சில ஆணிகளும், இரு டிரெயினிங் செஷன்களும் திடீரென எங்கிருந்து தான் முளைத்தனவோ என ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும், என் பதிவுகளைத் தேர்ந்தெடுத்து பிரிவுகளாய்ப் பிரித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எந்தளவு ஆர்வத்தைக் காட்டினேனோ, அதே அளவு ஆர்வத்தை நான் ரசித்த மற்ற பதிவுகளைப் பற்றி எழுதும் போது வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். நாளை சந்திப்போம். நன்றி.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது