நன்றி
நன்றி! வணக்கம்!!
அன்புடன்
ஜமாலன்.
image : Rajastan Painting
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
நன்றி! வணக்கம்!!
அன்புடன்
ஜமாலன்.
image : Rajastan Painting
Posted by
ஜமாலன்
at
7:58 PM
2
comments
அத்துவான வெளியில் பேசும் அந்தாரா என்கிற இப்பதிவர் குறைவாக எழுதியிருந்தாலும் இவரின் காமத்தைப் பேசுதல்... மற்றும் போனோகிராபி/Pornography பற்றிய இவ்விரு பதிவுகளும் பெண்ணிய நோக்கில் எழுதப்பட்டுள்ள பாலியல் பற்றிய பதிவுகள்.
“ம்“ என்று தனது பதிவின் தலைப்பைக் கொண்டுள்ள மயூரன் சமூக விமர்சனங்களுடன் பதிவெழுதுபவர் மற்றும் வலையுலக முன்னொடிகளுல் ஒருவர். விக்கிப்பீடியா போன்றவற்றில் பங்களிக்கும் இவரது காலத்தை வென்று நிற்கும் கீதை - காலைச்செய்தியாய் ஒரு கவிதை. கீதையின் தற்கால பரினாமத்தை விளக்குகிறது. ஹோகனேக்கல், நன்னீர் அரசியல், சில கேள்விகள். முக்கியமான சிலகேள்விகளையும் தொடர்புடைய சுட்டிகளையும் தருகிறார். ரிலையன்ஸ் சில்லறை வியாபாரம் - எதிர்ப்பதற்கான வடிவம் எதுவாக இருக்கும்? போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கட்டுரைகள் நிறைந்த ஒரு பதிவு இவருடையது. இதில் இவர் மக்கள் நிறுவனங்கள் என்ற மாற்றுத் திட்டம் பற்றி பேசுகிறார். படிக்கும் உரிமை - புனைகதை (மூலப்பிரதிக்கு நேர்மையாக அமையாத மொழியாக்கம்) என்ற மொழிபெயர்க்கப்பட்ட ”கணிப்பொறியின் கண்காணிப்பு வலைகள் இறுகும்” எதிர்காலம் பற்றிய ஒரு அறி-புனைக்கதை.
தோழர் அசுரன் பதிவுலகில் குறிப்பிடத்தக்க கட்டுரைகளை எழதும் ஒரு மார்க்சியர். உணர்ச்சிகரமான நடையில் இவை வெளிப்பட்டாலும் அதற்குள் உள்ள ஒரு தார்மீக கோபம் அக்கட்டுரைகளின் உணர்வுகளைச் சொல்லக் கூடியவை. தரவுகளின் அடிப்படையில் எழுதப்படும் இக்கட்டுரைகள் மைய நீரொட்ட அரசியலின் போலித்தனங்களை தோலுரிக்கக் கூடியவை.
தோழர் கார்க்கி தனது சரளமான எழுத்து நடையின் மூலம் நகைச்சுவை உணர்வுடன் அரசியல் முகத்திரைகளை கிழிக்கும் பதிவுகளை எழதுபவர். இவரது உணர்ச்சிகரமான மோடி பற்றிய பதிவை எனது தமிழ்மண நட்சத்திர வாரத்தில் மீள்பதிவு செய்துள்ளேன். சிறப்பாகவும் விவாதத் தன்மையுடனும் எழதக் கூடியவர்.
டி. அருள் எழிலன் பாலியல் என்கிற நளினி ஜமிலாவிற்கும் சாரு நிவேதாவிற்கும் நடந்த விவாதங்களை தொகுத்து நூலூக தந்துள்ளார். இவரது நக்சல்பாரிகளை ஒழிக்கமுடியுமா? என்கிற இக்கட்டுரையில் அரசின் வன்முறை குறித்த பல கேள்விகளை எழுப்புகிறார். அத்துடன் இத்தகைய இயக்கங்களின் இருத்தல் என்பது சமூக அவலத்தின் விளைவே. இந்த அவலங்களைப் போக்காமல் இயக்கங்களை என்ன செய்ய முடியும்? காரணங்களை ஒழிக்காமல் காரியங்களைப்பற்றி புலம்பியும் அடக்கியும் பயனில்லை என்பதை சொல்லும் கட்டுரை.
இங்கு தொகுக்கப்பட்ட பதிவுகள் மற்றும் கட்டுரைகள் வழக்கம்போல் பலவற்றையும் தொகுத்த ஒரு கதம்ப சரமாக உள்ளது. இது தவிர்க்க முடியாதது. இங்கு உள்ள அறிமுகங்கள் பலரும் பின்பற்றத்தக்க சுதந்திரத்தைக் கொண்டது. ஒற்றை கருத்திற்குள் அடக்கமுடியாத பதிவுகளின் தொகுப்பு இது.
நன்றி.
அன்புடன்
ஜமாலன்.
image curtsey: Jacques-Louis David's "The Death of Socrates" (1787)
Posted by
ஜமாலன்
at
2:10 PM
3
comments
நான் பதிவுலகிற்கு வந்தபின் செய்தி வாசிப்பது குறைந்துவிட்டது என்பதைவிட, முதலில் பதிவுகளில் வாசித்தப் பின்தான் செய்திகளையே வாசிக்கிறேன். காரணம் பதிவுகள் செய்தியை முந்தித் தருவது மட்டுமல்ல, அவற்றை பல கோணங்களில் நின்று ஆய்வு செய்தும் உணர்ச்சிகளின் உடனடி எதிர்வினைகளைக் கொண்டும் வெளிப்படுவதால் அச்செய்தியை பல கோணங்களில் புரிந்து கொள்ளமுடிகிறது. செய்திகள் என்பது உண்மைகளையோ, நிகழ்வுகளையோ அப்படியே நமக்குத் தருவதில்லை. அவையும் எழுதுபவனின் புனைவாகவும் வாசிப்பவனின் நினவாகவும் மாறிவிடுவதால்.. செய்திகள் என்பது ஊடகங்களின் உண்மை போன்று சொல்லப்படும் ஒருவகை புனைவுகள்தான். இதற்கு பதிவுகளில் பல பதிவுகள் குறிப்பாக பதிவர்களை சுட்டிக் காட்டலாம். அத்தகைய பதிவர்களின் தொகுப்புதான் இது. இப்பதிவர்கள் செய்திகளுடன் சில வரலாற்றுத் தகவல்களை அலசக் கூடிய மற்றும் பொதுபுத்தியில் பதிவுறத்தப்பட்ட உண்மைகளுக்கு எதிரான ஒரு கருத்தாடலை முன்வைப்பவர்கள்.
பைத்தியக்காரனின் இப்பதிவு காதல் புனிதமானதா? என்று காதல் குறித்து வரும் கற்பனைகளை உடைக்கிறது. காதல் என்பது குறித்து பொதுவான புனிதங்களை உடைக்கும் இப்பதிவின் விவாதம் சுவராஸ்யமானது. அத்துடன் பௌத்தம் குறித்த இவர் எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை, அதை ஒட்டிய விவாதமும்கூட. அமேரிக்க ஆவணங்களை அம்பலப்படுத்தும் இப்பதிவும் இவரது விரிவான வாசிப்பை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பரவலான வாசிப்பும் கூர்மையான பார்வையும் கொண்ட இவரது பதிவுகள் பின்நவீனததுவ சிந்தனையின் வீச்சுடன் எழுதப்படுபவை.
ஃபர்சானின் இப்பதிவு மதிப்பீடுகள் பற்றிய கோட்பாட்டுரீதியான கேள்விகளை முன்வைப்பவை. சுழிநிலையிலான மதிப்பீடுகள் சாத்தியமா? அவற்றின் அரசியல் என்ன? மதிப்பீடுகளால் கட்டமைக்கப்பட்ட இன்றைய உலகம் எத்தகையது? என்கிற கேள்விகளை எழுப்பும் பதிவு இது.
சுகுணாவின் பதிவுகளை அறிமுகப்படுத்த வேண்டியதே இல்லை. பார்ப்பனியம் பெரியாரியம் மார்கசியம் என பல தளங்களிலான அதிர்ச்சியூட்டக் கூடிய எழுத்துக்களைக் கொண்டவை. பெரியாரியப் பதிவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் வரவனையான் (இவரது பதவிற்கான சுட்டி protect செய்யப்பட்டிருப்பதால் தர இயலவில்லை.). இவரது பாசிசம் பற்றிய கட்டுரை குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும். இவரது கவிதைகளும் எழுத்தும் பெரியாரிய நோக்கில் எழுதப்பட்டு வருபவை. பதிவுகளில் பெரியாரியம் பற்றியும் பொதுவாகவும் எழுதும் முத்துக்குமரன், சமீபத்தில் துபாயில் இவரது கவிதைநூல் கவிஞர் இன்குலாப்பால் வெளியிடப்பட்டது. இவரது வைக்கம் வீரர் பெரியார் எனகிற கட்டுரை பெரியார் பற்றிய வைக்கம் பிரச்சனைகளை அலசும் ஒரு ஆவணமாகும். பெரியாரிய பதிவர்களில் நையாண்டிக்கு பெயர் பெற்ற நகைச்சுவைகளை தரும் பதிவர் லக்கிலுக், வலையுலக முன்னொடிகளில் ஒருவர் என்பதுடன், காத்திரமான விடயங்களைக்கூட கூர்மையான தனது நையாண்டியின் மூலம் எளிமையாக உடைத்துப் போடும் எழுத்தாற்றல் உள்ளவர். மேலோட்டமாக இவரது நையாண்டி எளிமையாக இருந்தாலும் அதற்குள் ஒரு சமூக விமர்சனமும் ஆழந்த கோபமும் இருப்பதைக் காணமுடியும்.
எந்த ஒரு பத்திரிக்கை செய்தியையும் வேறு ஒரு கோணத்தில் அலசக்கூடிய கோவி. கண்ணன் தனது வரலாறு மற்றும் ஆன்மீக வாசிப்புகளின் மூலம் பல குறிப்பிடத்தக்கப் பதிவுகளை தந்துள்ளார். சாதிய அரசியலை நுட்பமாக பிடிக்கும் பார்வையைக் கொண்டவை இவரது பதிவுகள். தமிழ் மொழி குறித்தும் இந்தி திணிப்பு குறித்தும் காத்திரமான பதிவுகளைத் தருபவர். பொதுப்புத்திக்கு எதிரான பல கருத்துக்களை தனது பதிவுகளில் பதிவித்துள்ளவர்.
ஆரிய, திராவிட பிரிவினைப் பற்றி பல கருத்துக்கள் நிலவி வந்தாலும் தனது பதிவுகளில் இந்த முரணை அதிகமாகக் கையாளும் ஒரு குறிப்பிடத்தக்க பதிவர் டிபிசிடி என்கிற Tamil Born Confused Dravidian. ஆரியர்களால் எழுதப்பட்ட சிந்துவெளியில் வாழ்ந்தது ஆரியர்களும்தான் என்கிற வேர்தேடி வரலாற்றை தொகுக்து தந்துள்ள பதிவு குறிப்பிடத்தக்கது. ஆரிய மேண்மை என்கிற கருத்தாக்கத்தை உடைப்பதும் மற்றும் தமிழ் மொழிக்காகவும் தனது பதிவெழுத்தை அர்ப்பணித்து எழுதிவருபவர். புரியல தயவுசெய்த விளக்கவும் (புதசெவி) என பலரை குழப்பிவிடும் பதிவர். :)
“செயல் அதுவே சிறந்த சொல்“ (நன்றி நிறப்பிரிகை) என்பதை முனைப்புடன் செயல்படுத்த முனையும் பாரி. அரசு பொதுப்புத்தி சார்ந்த பல கருத்தாகக்ங்களை எதிர்த்து இதுதான் சரியானது என சாதரண வாசகருக்கும் புரியும் வண்ணம் எழுதக் கூடியவர். இவரது மலேசியப் பற்றிய வரலாற்றுத் தொடர் முக்கியமான ஆவணமாகும். மரணம், பார்ப்பனிய-பணியா அரசியல் மற்றும் உடை கலாச்சாரம் என பலவற்றையும் பற்றிய பொதுப்புத்திக்கு எதிரான கருத்தக்களை முன்வைக்கும் இவர் ஜப்பான் மொழியை கற்று அதன் வரலாற்றை அறியும் ஆர்வம் கொண்டவர் என்பதுடன் இயற்கையை நேசிக்கும் ஒரு பதிவர்.
”தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே” என்று தனது பதிவின் அறிமுகக் குறிப்பைத் தந்திருக்கும் உறையூர்க்காரன் பல காத்திரமான மத-எதிர்ப்பு பதிவுகளையும் மதப் பாசிசத்திற்கு எதிரான கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மோடி என்கிற இந்திய பாசிசத்தின் முன்மாதிரி பற்றி ஊடகங்கள் உருவாக்கிய ”பொருளாதார வளம்” என்பதை பொருளியில் கண்ணோட்டத்தில் தோலுரிக்கும் பதிவு ஒன்று குறிப்பிடத்தக்கது. அரசின் சாதனை என்கிற சாகசங்கள் பற்றிய மற்றொரு பக்கத்தை முன்வைப்பவை இவரது பதிவுகள்.
சாதியன் கொடுமைகள் மற்றும் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களையும் ஒரு கிராமிய படைப்பு மனத்துடன் பதிவுகளை முன்வைக்கும் ஆழியுரான் தனது நடைவண்டியை பல திசைகளில் பயணப்பட வைக்கிறார். இவரது சாதிசூழ் உலகு துவங்கி அடையாள அரசியல் பற்றிய சமீபத்திய பதிவுகள்வரை சாதியத்தின் முகத்தை கிழிப்பன என்றால் மிகையாகாது. அறிவொளி இயக்கத்தில் பங்க பெற்ற பகுத்தறிவு மற்றும் சமூக உணர்வுள்ள பதிவர்.
அரசியலும் ஆழ்ந்த பார்வையும் பரவலான வாசிப்பும் கொண்டு, ஒரு பத்தி எழுத்தைக்கூட ஆழமான புரிதலுடன் முன்வைப்பவை ரத்ணேஷின் எழுத்துக்கள். இவரது பதிவுகளில் பழம் இலக்கியங்கள் துவங்கி செவ்வியல் இலக்கியங்கள், புராணங்கள், நாட்டார் கதைகள் என பலவற்றையும் பற்றிய பரவலான காத்திரமான அறிமுகத்தை எளிமையான மொழியல் தருவதுடன் அரசின் சாதனைக் கோமாளித் தனங்களை தோலூரிக்கும் பதிவு இவருடையது. அஸ்ஸாமிய பண்பாட்டையும் விளக்கும் இவரது பதிவு, பலபொருள் குறித்தும் பேசக்கூடியது.
பல நிறங்களைப் பேசும் செல்வநாயகியின் பதிவுகளில் மதம் தின்னும் மனிதன் என்கிற இப்பதிவு மதம் குறித்த கேள்விகளை எழுப்பும் ஒன்றாகும். படைப்புத் தன்மையுடன் எழுதப்படும் இவரது பதிவுகள் இலக்கியச் சுவையும் பிரச்சனைகளின் வலியையும் உணர்த்தக் கூடியவை. நகைச்சுவை உணர்வுடன் எழுதப்படும் ராமச்சந்திரன் உஷாவின் நுனிப்புல் சுவாராஸ்யமான பல கதைகளை சொல்லக்கூடியவை. தினவாழ்வின் அனுபவங்களை அதன் அபத்தங்களை கூறும் ஒரு மத்தியதர வர்க்கப் பார்வையில் அதன் போலிகளைச் சுட்டுபவை இவரது பதிவுகள். மெல்லிய நகைச்சுவைகளைக் கொண்டவை.
”தோன்றியவற்றைப் பதிய” என எழுதும் கையேடு விஞ்ஞானாரீதியான சிறந்த பதிவுகளை தருபவர். இவரது இறப்பு குறித்த ஒரு உரையாடல் மிக முக்கியமான ஒரு விஞ்ஞான ஆவணமாகும். நமக்கான அறிவியல் என்கிற மக்கள் அறிவியல் பற்றி சிந்திக்கவும் அதனை செயலுக்கு கொண்டுவரவும் முனையும் இப்பதிவர் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு தனித்தவமிக்கவர். இவரது இந்திய அனு ஒப்பந்தம் பற்றிய கட்டுரை தொழில்நுட்பத் தளத்தில் விவாதிக்கும் குறிப்பிடத்தக்க கட்டுரை ஆகும்.
இங்கு குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோரும் பல கோணங்களில் எழுதும் ஒரு கலவையான தொகுப்பாக இருப்பதை உணரலாம். இதில் சில பதிவுகள் குறிப்பிட்டு சொல்லும்படியான கட்டுரைகளைக் கொண்டுள்ளதை உணரலாம். சிலவற்றில் பதிவர் அறிமுகம் மட்டுமே உள்ளது. காரணம், அப்பதிவர்கள் எல்லோரது பதிவுகளிலும் பலவற்றையும் சுட்டிக் காட்டுவது சலிப்பு எற்படுத்தக் கூடும் என்பதால் சுருக்கமாக பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். இவர்கள் பலதள வாசிப்பின் அனுபவத்தை தரக்கூடியவர்கள். எழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட கணத்தில் வெளிப்படும் ஒருவகை தெறிப்பு என்று கொண்டால் இப்பதிவர்களின் எழுத்தில் அத்தகைய தெறிப்புகளைக் காணலாம்.
நன்றி
அன்புடன்
ஜமாலன்
image curtsey: Henri Rousseau (le Douanier) 's (1897) - "The Sleeping Gypsy"
Posted by
ஜமாலன்
at
1:19 PM
12
comments
தமிழ் வலைப்பதிவில் பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல் பின்நவினத்துவம் மற்றும் நுண்அரசியல். தமிழில் பின்நவீனத்துவத்திற்கான அடித்தளமாக அமைந்தது 80-களில் படிகள் வழியாக வெளிப்பட்ட தமிழவனின் அமைப்பியல் அறிமுகம்தான். அமைப்பியலை பின் அமைப்பியலுக்கு எடுத்துச் சென்றவர்களில் குறிப்பிடத் தக்கவர் நாகார்ஜீனன். இவரது கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் என்கிற நூல் தமிழில் ஒரு முக்கியமான அமைப்பியல்-பின்அமைப்பியல் மட்டுமின்றி எதிர்-கலாச்சாரம் பற்றிய ஒரு முக்கிய நூலாகும். இவரது ஃபூக்கோவும் சையதும் – சந்திப்பும் விவாதமும் என்ற கட்டுரையில் சில முக்கியமான புள்ளிகள் தொடப்படுகிறது. அது மேற்குலகின் பார்வை பற்றியது. தமிழில் ஃபூக்கோவை அறிமுகப்படுத்தி தொடர்ந்து அவரது மொழிபெயர்ப்புகளை கொண்டு வந்துகொண்டிருப்பவர். தற்சமயம் மிஷெல் ஸெர் பற்றிய தொடர் அறிமுகங்களையும் மொழிபெயர்ப்பகளையும் கொண்டுவரும் இவர் சீ-தியரி (ctheory) என்கிற ஆங்கில இணையு இதழிலும் எழுதி வருகிறார். இவரது மொழிபெயர்ப்புகள் மற்றும் கட்டுரைகள் பதிவுலகின் மிக முக்கியமான வரவாகும். பன்முகப் பார்வைக் கொண்ட பதிவு. இந்த அறிமுகம் என்பது பிரபலமான ஒருவரை பிரபலமாக்க அல்ல. எனது வாசிப்பினை பகிர்ந்து கொள்ளவே..
பாலுணர்வெழுத்தும் தமிழும் என்கிற ஜெயமோகனின் இக்கட்டுரை பாலணர்வு பற்றிய தமிழ் இலக்கிய எழுத்துக்கள் மற்றும் எழுத்தாளர்களின் புரிதலை விளக்குகிறது. எஸ். ராமகிருஷ்னணின் யாமம் நாவல் குறித்து ஜெயமோகன் யாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு என்கிற பதிவில் அந்நாவல் குறித்து விரிவான தனது கண்னோட்டங்களை பதிவித்துள்ளார். கிருத்திகாவும் இந்நாவல் பற்றிய தனது பாதிப்புகளை இங்கு தந்துளார். எழுத்தின் அடையாளம் பற்றிய எஸ்.ராமகிருஸணனின் இப்பதிவு கீ.ரா மற்றும் கு. அழகிரிசாமி பற்றியும் பொதுவாக எழுத்தாளனின் சமூக நிலமைகளையும் விளக்குகிறது.
பெண்ணிய விமர்சகர்களில் குறிப்பிடத்தக்கவரான பெருந்தேவி சமீபத்தில் பதிவுலகிற்கு வந்தவர். புதுமைபித்தனின் கல்யாணி பற்றிய கதையை கட்டுடைத்து இவர் எழுதிய கட்டுரை ஒன்றை காலக்குறியில் நாங்கள் வெளியிட்டிருந்தோம். அக்கட்டுரைக்குப்பின் அவரது கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவல் குறித்த விரிவான அசலை இங்கு படிக்க முடிந்தது. ”பால்விழைவின் த்வனி இந்நாவலின் சிறப்பு. அதுவே இங்கு என் எழுத்தின் பொருளாகவும் அமைகிறது.” என்பதாக பெண்ணிய தன்னிலை அடிப்படையில் விவரித்துச் செல்கிறது இவரது விமர்சனம்.
என்கிற இவ்வரிகள் பெண்ணிய வரலாற்று எழுதுதலின் தேவையை உணர்த்துகின்றன. பெண்ணிய வரலாறு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஆணிய சான்றுகள் அடிப்படையிலான வரலாற்றுக்கு ஒரு மாற்று மட்டுமல்ல அதனை கொட்டிக் கவிழ்ப்பதாகவும் இருக்கும்.
நிவேதா தனது பெண்ணும் பயணியுமாயிருத்தல் என்ற பதிவில் பெண்ணிய வரலாற்று எழுதுதலின் வேறுபாட்டு நுட்பத்தை முன்வைக்கிறார். இதில் வந்த உரையாடலின் பெண்ணிய வராறு குறித்த எனது கருத்துக்களை எழுதியுள்ளேன். அருந்ததிராயின் God of Small Things பற்றிப் பேசும் பிரதிகளை மீளப் பதிதல் - 1 மற்றும் உம்பர்த்தோ ஈக்கோ பற்றிப் பேசும் பிரதிகளை மீளப் பதிதல் - 2 என்கிற இப்பதிவுகள் நாவல்களை நமக்கு சிறப்பாக அறிமுகப்படுத்தக்கூடியவை. உம்பர்த்தோ ஈக்கோவின் புகழ்பெற்ற நாவலான Foucault's pendulam பற்றி ஒரு வாசிப்பு அனுபவத்தை பகிரும் பைத்தியக்காரன் உம்பர்த்தோ ஈக்கோ பற்றிய சுருக்கமான அறிமுகங்களை தருகிறார். பதிவில் இவரது எழுத்துக்கள் வித்தியாசமான வாசகர் வட்டததை கொண்டவை மட்டுமின்றி ஆழந்த தளத்திலானவையும்கூட.
பி்ன்நவீனத்தவம் பற்றி நிறப்பிரிகைத் துவங்கி இன்றுவரை எழுதிவரும் வளர்மதி குறிப்பிடத்தகுந்த கட்டுரைகளை எழுதிவருபவர். அவரது பின்நவீனத்துவம் உரையாடலுக்கான சில குறிப்புகள் ஒரு நல்ல அறிமுகத்தை தருகிறது. இசையின் அரசியல் என்ற நூல் ஒன்றை எழுதியுள்ள இவர் சமீபத்தில் யுனஸ்கோவிற்காக "சிவா தேர்ட் ஐ" என்கிற குறும்படம் ஒன்றை எடுத்துள்ளார். அப்படம் குறித்து சுந்தரின் இப்பதிவு அறிமுகம் செய்கிறது. வளர்மதியால் எது பின்நவீனத்தவ நாவல் என்று விரிவாக நாவல்கள அலசப்பட்டுள்ளது இப்பதிவில். டிசே. தமிழன் தனது பின்நவீனத்தவம் பற்றிய புரிதலை இங்கு பதிவாக்கியுள்ளார். பின்நவீனத்துவம குறித்து ஒரு விரிவான விவாதம் சரவணனின் இந்த பதிவில் துவங்கி டிசே. தமிழனின் இப்பதிவில் தொடர்ந்தது. இப்பின்னோட்டங்கள் சில காத்திரமான தளத்திலான உரையாடலை தொடர்ந்தன. இவை அறிமுகநிலையில் உங்கள் வாசிப்பை விரிவுப்படுத்தும் என்கிற நம்பிக்கையில் இங்கு பேசப்பட்டுள்ளது.
நன்றி
அன்புடன்
ஜமாலன்
image curtsey Card Player Pablo Picasso
Posted by
ஜமாலன்
at
6:25 PM
2
comments
பதிவுலகில் பாலைத் திணையைப் பேசும் காயத்ரி நுன்னுணர்வுகளை சிக்கனமாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகிறார் தனது கவிதைகளில். “பிரிதலும் பிரிதல் நிமித்தமுமாக“ உள்ளன பெரும்பாலான கவிதைகள் என்றாலும் காதலின் துயர் நிரம்பிய பொழுதுகளை நுன்னுணர்வுடன் சொல்கிறது இக்கவிதைகள். இழந்த மழை.. என்ற இக்கவிதையில்தான் எனக்கு இவர் பதிவில் அறிமுகமானார். அக்கவிதையின் எளிய நடையின் உள்ளார்ந்து ஆழமாக நான் உணர்ந்த பொருளை பின்னோட்டமாக இட்டேன். கவிதை எளிய நடையில் பாலியல் பற்றி பேசுவதாக எனது இடையீடு இருந்தது. அந்த இடையீட்டை அப்படியே தருகிறேன்.
இரவோடிரவாய்
வந்து போய் விட்டிருக்கிறது
மழை.
முன்வாசல் மரங்களின்
இலைகளிருந்து
துளித்துளியாய்ச் சிந்தும்
நீர்த்துளிகள்
நினைவூட்டியபடி விழுகின்றன
நான் தவறவிட்ட தருணங்களை!
இந்த கவிதையை நான் வேறுவிதமாக வாசிக்கிறேன்.
இரவு பேய்த மழையும்
இழந்துவிட்ட தருணங்களும்..
இந்த இரண்டுவரிகளை ரொமாண்டிசைஸ் பண்ணாமல் யதார்த்ததில் பொறுத்தினால்.. இதற்குள் ஒடுங்கி கிடக்கும் ஒரு அமைப்பு பாலியல் குறித்த அவதானிப்பைக் கோருகிறது. பெண்ணிய வாசிப்பில் பெண் இழந்த தருணங்களா? அல்லது அவளுக்கு மறுக்கப்பட்ட தருணங்களா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. கவிதை ஆசிரியை அல்லது கவிதைக்குள் பேசும் குரல் தன்னை பெண் அடையாளமாக உணராமல் சமூகம் கட்டமைத்துள்ள பெண்ணாக உணர்கிறது. மறுக்கப்பட்ட தருணங்களை இழந்த தருணங்களாக இக்கூற்ற இங்கு வடிவமைகிறது.
பொதுவாக புதுக்கவிதைகளில் மழை என்பது பாலியல் குறியீடாகத்தான் வருகிறது. கலாப்ரியாவின் கவிதைகளை வாசித்தால் மழையின் பண்முக அர்த்த சாத்தியங்களை புரிந்து கோள்ள முடியும். விமர்சனம் தலையைச் சுற்றினால்.. ஒரே ஒரு keyword மழை என்பதை பாலியில் கலவியுடன் பொறுத்திப் பாருங்கள். இது கவிதைக்குள் இயங்கும் அமைப்பு.. அல்லது கவிதையின் நினைவிலப் புலம் புலப்படும்
இதற்கு காயத்ரியின் பதில் ”ஜமாலன்.. எதுக்கு இப்பிடி என்னைத் திட்டிருக்கீங்க? ஒன்னுமே புரியல.. :(”” எனது வாசிப்பு எனக்கான பிரதியை உருவாக்கிவிட்டது போலும். :)
சிறகதைக்கான நுட்பம் இவரது கவிதைகளின் இறுதிவரிகளில் தெறிப்பதைக் காணமுடிகிறது. கோபித்த காதல்! இக்கவிதையில் காதலின் கோபம் அழகியது என்பதை ஊடல் குறித்த சங்கத் தமிழ் இவரிடம் சொல்லியுள்ளது. வனம் மனதின் ஒரு குறியீடாக மாறும் கவிதை இது. புள்ளிகளால் ஆன கோவமே மனதின் தத்துவச் சிக்கலாக மாறும் கவிதை இது. தப்பித்தலின் சாத்தியங்கள்... பெண்மீது நிர்பந்திக்கப்பட்ட துயர் நிரம்பிய வாழ்வை ஒரு தொட்டிச் செடியாக முன்வைக்கிறது இக்கவிதை. தனிமையை சொற்களால் நிரப்பமுடியாது என்கிறது இந்த தனித்திருத்தல். சொல் என்பது ஒரு சொல்தான் என்பதாக உள்ளது இக்கவிதை. காதலின் வாசத்தை மென்மையாக பரவவிடம் கவிதைகள் இவருடையவை.
முடிவற்ற அன்பைத் தேடிக்கொண்டிருக்கும் முபாரக் தனது பதிவை கவிதைக்கு மட்டுமே அர்ப்பணித்து விட்டார் என நினைக்கிறேன். கவிதைகளால் அவர்தேடிய அன்பில் மிஞ்சியிருப்பது பெருந்தனிமையே. தனிமையை கவிதையாக்கியிருப்பவர்களில் குறிபிடத்தக்க இடம் உண்டு இவருக்கு. அவரது கவிதைகளை நான் எனக்கு நெருக்கமாக உணரக் காரணம், நானும் அந்த கொடுந் தனிமையில் இருந்தவன்தான். ஒருவகையில் கவிஞர்கள் எல்லாம் நீர்த் தாவரங்களைப் போன்றவர்களே. ஈரம் இல்லாவிட்டால் உலர்ந்து போய்விடக் கூடியவர்களாக உள்ளனர். இந்த ஈரம் பெண் எனும் உடல்-வெளிச் சுரக்கும் ஈரம்தான். சொற்களோடுதான் வாழ்வென்றாகிவிட்ட பிறகு... என்ற இக்கவிதையின் வரிகள்..
தனிமை நிரம்பியிருக்கும்
அறைகளில்
சொற்களைத்தான்
புணர வேண்டியிருக்கிறது
இக்கவிதைதான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது. உண்மையில் எனது முதல்நூல் அந்த தனிமையில் எழுதப்பட்டதுதான். ஒருவேளை நானும் அந்த புணர்ச்சியில் ஈடுப்பட்டவனொ?
உனக்கென என்ற கவிதை வரிகள்....
எனக்கென நான்
என்ன வேண்டிக்கொள்ள முடியும்?
நான் தேடிவரும்
நீ எனக்கென மட்டும் இல்லை
மேலும்உனக்கெனவும் இருக்கிறது
சில துயரங்கள்
எனினும் அது
உனக்காக காத்திருத்தலைப் போல
கடினமானதல்ல
இக்கவிதைக்கான எனது பின்னோட்டம் ” பன்முக வாசிப்பைக்கொண்ட கவிதை இது. கவிதையின் மையம் அல்லது கவிதை 'நீ எனக்கென மட்டும் இல்லை' என்கிற வரியிலிருந்துதான் வளர்ந்து இந்த வடிவத்தை அடைந்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த வரிதான் கவிதையின் மையம் அல்லது உயிர் எனது வாசிப்பில். இதில் கேட்பவனாக உள்ளவன் அல்லது உள்ளவள்-களைப் பொறுத்தினால் பல அர்த்தங்கங்கள் வரும். 1. உள்ளவள் - ஒரு தாசி (பரத்தையோ அல்லது விபச்சாரி அல்லது பாலியல் தொழிலாளி). 2. காதலி 3. நண்பி 4. காதலன் 5. நண்பன். மேலும் காத்திருக்கும் எல்லா அனுக்கமான உறவுகளுக்கும் இது பொறுந்தும். தன்பால் புணர்ச்சிக்கூட. காதல் கவிதைகளை ஏன் பெண் ஆண் என்கிற எதிர்வுக்குள் வைத்து வாசிக்க வேண்டும். ஆண்-ஆண் பெண்-பெண் என்கிற இணைக்குள் வைத்து வாசித்துப் பார்க்கலாம். 'வேண்டிக்கொள்ள முடியும்" என்கிற வார்த்தையை பிரார்த்தனை என்கிற இறையியல் தளத்திலான ஒன்றாக வைத்தும் வாசிக்கலாம். அல்லது இறைவனிடம் ஒரு வேண்டுகோளாக கொண்டும் வாசிக்கலாம். இறைவனுக்கு ஏது துயரங்கள் என்கிற கேள்வி வரும். இதற்கு ஒரு உளவியல் விளக்கம் உள்ளது.
வேட்கை என்பது ஒரு குறை. அதாவது குறை இருந்தால்தான் அதை நிறைவு செய்ய வேண்டிய விருப்பம் ஏற்படும். அந்த விருப்பமே வேட்கையாக மாறுகிறது. இறைவன் மனித குலத்தை படைத்து தன்னை சரணடையவோ அல்லது தன்னை வணங்குவதையோ அடிப்படை நிலைப்பாடக வைப்பது என்பதே இறைனின் ஒரு வேட்கைதான். ஏனென்றால் அது அவனிடம் உள்ள குறை. இந்த குறை நிறைவேற்றத்திற்கு தடையானவனே சாத்தானாக கற்பிதம் செய்யப்படுகிறது. இந்த குறை குறித்த உரையாடல்களே திருமறைகள் மற்றும் தேவதூதர்களின் தூதுத்துவம் எல்லாம். குறை அல்லது வேட்கையே துயரத்திற்கான மூலகாரணம் என்கிறது பெளத்தம். ஆக, இறைவனின் துயரம் தனது படைப்புகள் தன்னை முழுமையாக சரணடைவதற்காக சாத்தானுக்கு எதிரான போராட்டமும். அதன் வெற்றியுமாகும். எதிர்மறையாகப் பார்த்தால் மற்றொருவருக்கு உரிமையான பொருளுடன் ஆன உறவு எனவும் விரிக்கலாம். அல்லது காதல் மட்டுமல்ல கள்ளக்காதல் பற்றியதும் இந்த கவிதை. மற்றொருவருக்கு உரிமையான பொருளுக்கு காத்திருத்தல் பற்றியதாக வாசிக்கலாம். கடவுள் துவங்கி கள்ளக் காதல்வரை இக்கவிதைக்கு பொறுந்தகிறது. 'குருவித் தலையில் பனங்காய்' என்று எண்ண வேண்டாம். குருவிக்கு அதை தாங்கும் சக்தியை கவிதை மொழி் தந்திருப்பதே இதன் சிறப்பு.
கிளிஜோசியம் என்கிற கவிதையில் வெளிப்படும் சமூகக் கோபமும், சலிப்புகளின் வனம் கவிதையில் காமம் ஒரு கார்டூன் படம்போல பல மிருகங்களாக வளர்ந்து நிற்பதும், வாழ்வின் சிக்கலான முரண்கள் முடிவற்ற கேள்விகளாக தொடருவதும், தனிமையின் சிலுவைப்பாடுகள் பற்றிய எண்ணற்ற கவிதைகள் எழுதப்பட்டுள்ளது இவரால். நான் மிகவும் அனுக்கமானது இவரது வெறுமையின் கண்கள், வேறொன்றும் இல்லை என்ற இந்த இரண்டு கவிதைகளில்தான். தனிமையின் விரகம்தாபம் எப்படி வலி நிறைந்த மௌனத்தின் எழுத்தியக்கமாக மாறுகிறது என்கிற வித்தையை படிக்க இவரது கவிதைப் பதிவுகள் சரியான ஒரு புகழிடம்தான். பிரச்சனை நுழைந்தவுடன் நமது விரகமும் காமமும் ஒரு படிகமாக நமக்குள் மாறி உருளத் துவங்குவதை தவிர்க்க முடியாது. கடவுள் குறித்த இவரது விசாரணை தனியாகப் பேசப்பட வேண்டிய பல கேள்விகளைக் கொண்டது.
எழுத்தை, கவிதையை ஒரு மொழிவிளையாட்டாக மாற்ற முனையும் பின்நவீனத்துவத்தின் பாதிப்புகளொடு ஒரு நவீனத் தன்மைக் கொண்ட கவிதைகளை எழுதிச் செல்பவர் ஜ்யோவ்ராம் சுந்தர். இவரது அ-கவிதைகள் பதிவுலகில் ஒரு புதிய வரவு. இவரது கவிதைகளில் சொல் அலங்காரங்கள் “ரொமாண்டிஸிஸம்“ எனப்படும் கற்பனை சார்ந்த கனவுகள் இல்லை. நேரடிச்சொல்லில் எழுதப்படும் கவிதைகள். ஆத்மநாம் கவிதைகளில் உள்ள இந்த தன்மை இவரின் முக்கிய போக்காகும். மழை பற்றிய இக்கவிதையில் மழைக்கான எந்த கற்பனையும், காதலும், புனைவும், குறியீடும் இல்லை. இங்கு உடல்களின் அரவையாக நிற்கும் மனிதர்களின் ஒதுங்கலும் அது தரும் உணர்வும்தான் இக்கவிதை. அப்பாவும் அம்மாவும் காணாமல் போக்கியவை என்ற இக்கவிதையில் நவீனக் கவிதையின் குணாம்சங்களில் ஒன்றான உயிர் உள்ள உயிரற்ற (சேதன அசேதன) பொருட்களை சமதளத்தில் வைப்பதன் மூலம் ஒரு மனித இழப்பை சொல்வது. மகனை ஒரு உயிரற்ற பொருளாக மாற்றும் அந்த இறுதி வரிகள் அருமை. மனிதன் தனது மையத்தை இழந்து ஒரு மறந்து வைத்தவிட்ட “பொருளாக“ மாறும் நவீன காலத்தின் அவலம்தான் இக்கவிதை.
சீறிச் சீறி
சுழன்றடிக்கிறது காற்று
நாற்புறமும்
விழுந்த ஒன்றிரண்டு மழைத்தூறல்கள்
மண் வாசனையைக் கூடக் கிளப்பவில்லை
மரங்கள் பேயாட்டம் போடுகின்றன
மனதின் விகார உருவங்களாய்
தனிமை பயமுறுத்த
காற்றைப் பார்த்தபடி
கழிகிறதென் பொழுது
தனிமை பற்றிய இக்கவிதையை முபாரக் மற்றும் காயத்ரி முன்வைக்கும் தனிமையுடன் ஒப்பிடும்போது இது மற்றொரு பரிமாணத்தை சொல்வதை உணரமுடியும். அக்கவிதைகள் விரகத்தின் வேட்கையையும், காதலின் வேட்கையுயும் அடிப்படையாகக் கொண்டவை என்றால் இத்தனிமை வேட்கையற்ற நிலையில் உருவாகம் ஒருவகை விட்டேத்தியான தனிமை. இது கிராம நகர உடல்பாடுகளின் உள்ளுணர்வின் வெளிப்பாட்டை நமக்குச் சொல்கிறது. நகர மனிதனுக்குள் அடர்ந்திருக்கும் வெறுமையைச் சொல்வது இவை. காண்கிரீட் வனத்திற்குள் தனிமையாக உணரும் நிலை இது.
வாழ்வை ஒத்திப் போடுதல் என்பது மதங்களின் சொர்க்க, நரக பெரும்பனைவுகளை கேள்விக்கு உட்படுத்துகிறது இக்கவிதை. விரும்பியதும் வாய்த்ததும் வாழ்வின் யதார்த்த முகத்தை சொல்லும் நமது பெரும்பான்மையினரின் அனுபவமே. சுந்தரின் மொழிநடை இயல்பானது. கவிதைக்காக தேர்ந்தெடுக்கும் சூழலும்கூட மிகவும் எளிமையான அன்றாட அனுபவங்களே. இது குறித்து எழுத நிறையவே உண்டு இவரது கவிதைகளில்.
தனிமையில் இருந்து தனிமையின் இசையை இசைக்கும் அய்யனார் தற்சமயம் கூட்டிசையில் ஈடுபட்டுள்ளார் என்றாலும், அவரது தனிமையின் வாசத்தை பேசும் நுட்பமான கவிதைகள் அவருடையவை. வளைகுடா நாடுகளின் தனிமையில் உள்ள பிரத்யேகக் குணம் அந்த தனிமைக்குள் பாலுணர்வம், விரகமும், காமமும் இருப்பது. காரணம் இங்கு தடை செய்ய்ப்பட்ட அந்த வெளிப்பாட்டு உணர்வுகளின் விளைவு அது. திரையிடப்பட்ட கண்களே ஒரு பெரும் திரைக்காட்சியின்பமாக மாறும் நிலை அது. திரவ போதையும், திடமான முலைகளும் (குறிப்பாக பெருமுலைகள். பெருமுலை வேட்கை என்பதை ஓடிபல் உணர்வு என்கிறது பிராய்டியம்) அடிப்படை உந்து சக்தியாக உள்ள கவிதைகள் இவருடையவை. உயிர்த்திருத்தல் என்பது என்ன? இயல்பாக இருத்தல் என்பதுதான். எதிர்மறையாக இன்றைய வாழ்வு இயல்பற்றதாக உள்ளதின் துயரத்தை சொல்கிறது இக்கவிதை. வனங்களில் அலையும் நீலி ஒரு புராதனத் தாயின் கானக அலைச்சலை சொல்வதாகிறது. ஆதியின் மூல வடிவத்தை மீட்டெடுத்தல் இங்கு புணிதமும் வன்மும் இணைந்தே செயல்படும் தன்மை கவிதையாகி உள்ளது. இருத்தலின் சுயவதையே இவரது கவிதைகள் என்றாலும்... சொற்சிக்கனமற்றவை என்பது சற்றே நிரடலாக உள்ளது.
பதிவுலகின் கலக எழுத்தாளராக அறியப்படும் சுகுணா திவாகர் நுட்பமான கவிதைகளையும் எழுதக் கூடியவர் என்பதை சொல்லுகிறது அவரது இப்பதிவு. தலையூழி என்கிற இகக்விதை ஏற்படுத்தும் படிமம் அதீதமானது. யோனியில் முளைத்த குறுவாள் புணர்ச்சியின் வன்முறை சார்ந்த நிகழ்வை சொல்லும் இக்கவிதை சிறுமிகளின் மீதான வன்புணர்ச்சியை சொல்வதாகிறது. ஆண்விடாய் இக்கவிதை முற்றிலும் புதிய தளத்தில் ஒரு ஆணின் தன்பால்-புணர்ச்சி வேட்கையை வெளிப்படுத்தும் கவிதை. பாலியல் அதீதங்கள் பற்றிய ஒரு கலகக்குரலாக உள்ளன இவரது பெரும்பாலான கவிதைகள். சற்று உரத்த குரலில் ஒழிக்கக் கூடியவை.
பேசலாம் என பதிவுலகை அழைக்கம் கவிஞர் வ. மணிகண்டன் தமிழ் சிறுபத்திரிக்கை உலகில் ஒரு குறிப்பிடத்தக்க கவிஞராக உள்ளார். பதிவுகளில் இவரது கவிதைகள் காணக்கிடைக்கவில்லை என்றாலும் இவரை அறிந்து கொள்ள இங்கு உள்ள கவிதைகள் உதவும். தனது பேச்சினை எதிர்கொள்ள முனையும் சூழலின் வலியை உணர்த்தும் உடைந்து நொறுங்கும் மீன் தொட்டிகள் பற்றிய கவிதை. காதுகளை மட்டும் விரும்பும் எதிராளிகளிடம், நமது மௌனத்தை கலைத்தால் நம்மையே உடைக்கிறார்கள். மொழி என்பது ஒரு போராட்டக் களம்தான் (battlefield). தனது “தானை“ நிறுவிக் கொள்வதற்கான போராட்டக்களம் என்பதை நுட்பமாக சொல்கிறது இக்கவிதை. உடல் வாசமே கதையாக மாறும் நினைவின்பத்தை சொல்லும் கவிதை ”கதை சுமந்து திரியும் வாசம்”.
தமிழின் தற்காலத்தில் சிறுபத்திரிக்கையில் எழுதிவரும் மற்றொரு குறிப்பிடத்தகுந்த கவிஞர் கடற்கரய். இவரும் பதிவுகளில் கவிதைகளை வெளியிடவில்லை என்றாலும் இவரது கருப்பு மனிதன் என்கிற இப்பதிவில் கவிதைகள் வெளியாகியள்ளன. இங்கும் இவரது சில கவிதைகளை படிக்க முடியும். அக்கவிதைகளில் ஒன்றான ”கடவுளின் தற்காலப் பிரச்னை” என்கிற இந்த நெடுங்கவிதை புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் கதையைப்போல தற்காலத்தில் சென்னைக்கு வரும் கடவுள் படும்பாடும் மாறும் விதமும் என ஒரு நவீன கதையாக விரிகிறது. கடவுளின் குழப்பநிலையை சொல்கிறது கவிதையின் இந்த இறுதி வரிகள்....
படைத்தல் ரட்சித்தல் காத்தல் அழித்தல் என்று பல வருடம்
ஊதாரிதனமாய் வாழ்க்கை நடத்திட்ட கடவுளுக்கு
சட்டம் ஒழுங்கு பாஷைகள் புரிபடாமல் போனதால் இப்போதெல்லாம்கையாலாகாதவனாய் காலத்தை கழித்து கொண்டே வருகிறார் கடவுள்.
இங்கு மாதிரியாகச் சொல்லப்பட்ட கவிதைகள் மட்டுமே இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்திவிடாது. இது ஒரு வழிதான். பயணம் உங்களிடம்தான் உள்ளது. கவிதை என்பது என்ன? என்ற கேள்வியுடன் இதனை முடிக்கலாம். கவிதை என்பது ஒரு உணர்வுநிலை. அதன் உடனடி விளைவு அது ஏற்படு்த்தும் ஆழ்ந்த மௌனமும் அது உருவாக்கும் மனப்படிமும். மௌனம் இரண்டுவகையானது. ஒன்று செயலூக்கமுள்ள மௌனம் (active silence) மற்றது செயலற்ற மௌனம் (passive silence). படைப்புகள் ஒருவருக்கு ஏற்படுத்தும் ஆழ்மன பாதிப்பு என்பது உருவாக்கும் மௌனம் செயலைத் தூண்டுவதாக சமூகக் கோபத்தை கொண்டதாக மாறினால் அந்த மௌனம் செயலூக்கமுள்ள மௌனம் எனலாம். அக்கவிதைகளையே சமூக மாற்றத்திற்கான ஆயதமாக ஆக்கிய கவிதைகள் எனலாம். பாலஸ்தீனக் கவிஞரான மகமுத் தார்வீஸ் துவங்கி வசந்தத்தின் இடிமுழக்கம் என நக்சல் எழச்சியை முழங்கிய செரபண்டராஜ் மற்றும் இன்குலாப் வரை அத்தகைய கவிஞர்களாக அடையாளம் காணலாம். சில பாதிப்புகள் ஏற்படுத்தும் மௌனம் செயலற்ற நிலையை உருவாக்கலாம். அந்நிலை அகநிலை பதிப்பாக மனதை மனிதாயப்படுத்துவதாக இருக்கிறதா? அல்லது மனதில் வக்ரத்தை, நோயுணர்வை உருவாக்குகிறதா? என்பதை பொறுத்து அம்மௌனத்தின் அரசியல் இயங்குகிறது. இங்கு காட்டிய கவிஞர்கள் அத்தகைய மனதின் அரசியலைப் பேசுபவர்கள். இவர்களது குரல் உரத்தக் குரல் அல்ல. மனதை மனிதாயப்படுத்தும் அகநிலை சார்ந்த கவிதைகள். இதைத்தவிர, எண்ணற்ற கவிஞர்களும், கவிதைகளும் நமது வாசிப்பின் பரப்பிற்கு வெளியே இயங்கிய படித்தான் இருக்கிறார்கள். அதைநோக்கி நகர இப்பதிவு உங்களுக்கு உதவக் கூடமெனில், அதுவே இந்த உழைப்பிற்கான பலனாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
ஜமாலன்.
image courtesy: Salvador Dali's Metamorphosis of Narcissus
Posted by
ஜமாலன்
at
1:23 PM
15
comments
எல்லோரையும்போல காதல் மற்றும் கவிதையுடன்தான் எனது காலமும் தொடங்கியது. காதலைப்போலவே கவிதையும் என்னிடம் இன்று காணாமல் போனது, என்றாலும், காதலின் நினைவு தரும் சுகந்தத்தைப்போல கவிதையும் ஒரு சுகந்தமாக என்னுடன் தொடர்கிறது. எனது வாசிப்பில் சிறந்த கவிதைகளை இங்க நான் தொகுக்கவில்லை. சிறந்தது போன்ற அடைச் சொற்களை, மதிப்பீட்டு குறியீடுகளை தவிர்க்கவே விரும்புகிறேன், என்பதால் என்னை பாதித்த கவிதைகளாக நான் கருதுபவற்றை இங்கு தொகுக்கிறேன்.
நிவேதாவின் கவிதைகள் எல்லாமே மிகச்சாதரண மொழிநடையில் அடர்த்தியான அர்த்தங்களைக் கொண்டவை. மழை என்பது ஓரு முக்கிய குறியீடாக, படிமமாக, உருவகமாக தமிழ் கவிதைகளில் வந்த வண்ணம் இருந்துகொண்டே இருக்கின்றன. மழையை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எதிர் கொண்டு அனுபவிப்பது கவிதையின் முக்கிய தளமாக இருப்பதை உணரமுடிகிறது. சாபக்கேடும், சவக்கிடங்கும், சாத்தானின் ஆயுதமுமானதைப் பற்றி..! என்கிற இக்கவிதையில் நிவேதா மழையை ஒரு காலத்தின் நினைவாக மாற்றுகிறார். சிந்திப்பதற்கு சாத்தியமற்ற ஒரு சமூகத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்ட ஈழச் சூழல் இங்கு கவிதையாகியிருக்கிறது. சிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள் இக்கவிதையில் ஒரு பிரதி எப்படி மற்றொரு பிரதியாக வேதி மாற்றம் அடைகிறது என்பதையும்.. அது ஏற்படுத்தும் உடல்சார்ந்த பாதிப்பையும் நுட்பமாக அதிசயதக்க மொழியில் வெளிப்படுத்துகிறார் நிவேதா.
பேருந்துகளின் நெரிசல்களினூடு / பிருஷ்டமுரசிய / விறைத்த வால்களை முறித்தெறிய / தீராத அவாக்கொண்டு இரட்டைப் பூட்டிட்டு / தன்னைத்தான் தாளிட்ட / என் யோனி / கவிதையின் ஸ்பரிசத்தில் / கிளர்ந்தெழுந்து கசியவாரம்பித்ததும்/ அதிசயம்தான்.
இந்த வரிகள் வெளிப்படுத்தும் அனுபவம் வாசிப்பின் இன்பம் என்பதை நுட்பமாகச் சொல்கிறது. கவிதை எழுதும் தன்னிலை பிரதியின் தன்னிலையாக மாறிவிடும் இந்து நுட்பம் அலாதியானது. உடலை தொடுவதால் அல்லது உரசுவதால் அல்ல இன்பம், அதற்கு தன்னிலையின் புரிதல் எத்தனை அவசியமானத என்பதைச் சொல்கிறது. வாசிப்பும் எழுத்தும் உடல்களுடன் உருவாகும் ஒருவகை பாலின்ப விளையாட்டைப் போன்றது என்று எனது உடலரசியல் என்ற கட்டுரையின் இறுதிவரிகளே நினைவிற்கு வருகிறது. தெலூஸ்-கத்தாரி கூறியது போல “words coming with them a story of sex and love” என்பது இதைதானோ?
வார்த்தையில் பதங்கமாகும்
எனது குரலை மட்டுமே / கேட்டுக் கேட்டுக் கொலைமூர்க்கம் கொண்டிருக்கும் நீ / அறிவதில்லை / வார்த்தைக்கென்று தனித்துப் பொருளில்லை என்பதை / காட்சிக்கென்று தனித்துக் குணமில்லை என்பதை / மேலும் / நான் என்றோ நீ என்றோ / எவரும் இல்லை என்பதை
இவரது அபத்தம் மிகச்சிறிய வரிகளில் ஆழ்ந்த பொருளைத்தரும் கவிதை.
வடியும் எனது ஒரு சொட்டுக் குருதியை /வாதையென்பாயா / கவிதையென்பாயா நீ?வலி நிரம்பி வழியும் - இந்தவரிகள் சொல்வதற்கும் வார்த்தையற்று வலியாகவே மிஞ்சக் கூடியவை. writerly text என்ற சொல்லக்கூடிய படைப்புகள் இவருடையவை.
பஹீமாஜஹான் கவிதைகள் ”ஒரு கடல நீரூற்றி” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளன. இழுக்கவிதைகளுக்குள் இருக்கும் எளிமையான வார்த்தை அதன் தனிச்சிறப்பாகும். எளிமையான அதே சமயம் பன்முக அர்த்தம்கொண்ட வார்ததைகளைக் கொண்டு எழுதப்பட்டள்ளன இவரது கவிதைகள். ஆதித்துயர் என்கிற இக்கவிதை எளிய வர்த்தைகளில் துயரைச் சொல்கிறது. நிழல் மற்றும் வெயில் என்கிற முரணை பின்னிச் செல்லும் இக்கவிதை ஆதித்துயர் என்பதை துரத்திச் செல்லும் நிழல் என்கிற வேட்டை நாயாக முன்வைக்கிறது. பெண்ணுக்கு கையளிக்கப்படுவது நிழல்கள்தான். அந்த நிழல் வெயில் என்கிற தண்டனையிலிருந்து தப்பிச் செல்ல முனையும்போது அவளை விட்டு விலகி போய்க்கொண்டே உள்ளது. ஆதித்துயர் ஒரு நுட்பமான கவிதை.
இளவேனில் தமிழ்நதி சற்று உக்ரமான உணர்வுகளைக் கொண்ட கவிதைகளை தருபவர். ”சூரியன் தனித்தலையும் பகல்” என்ற தலைப்பில் இவரது கவிதை நூலாக வளிவந்துள்ளது. ஈரமற்ற மழை என்கிற தலைப்பிலேயே கவிதையின் ஈரம் / ஈரமற்றது என்கிற முரண் அமைப்பு இயக்கமாகி இறுதிவரை வளர்ந்து செல்கிறது. மழை என்பது ஒரு குறியீடாக மாறி இருவேறபட்ட தளங்களின் குறிப்பீடாக மாறிவிடும்போது, கவிதை ஈரத்தை பெண்மீதான ஒரு துயரமிக்க அனுபவமாக மாற்றிவிடுகிறது. இதே மழையை, இதே அனுபவத்தை எம். ரிஷான் ஷரீப் தனது வெறுக்கப்படும் மழைப்பொழுதுகள்...! என்கிற கவிதையில் பேசுகிறார். இரண்டு கவிதைகளையும் நுட்பமாக நோக்கினால் மழை எதிரெதிரான குறியீடுகாளாக இதில் மாறி பெண்ணிய மற்றும் ஆணிய நோக்கிலான பிரதிகளாக இவை வெளிப்படுவதை உணரலாம்.
உயிர்கொண்டு திளைக்கும் நளாயினி தாமரைச் செல்வனின் இந்த ஓர் இன அழிப்பின் கதை. யை படங்களின் மூலம் கவிதையாகச் சொல்கிறது. படங்களின் தொடர்ச்சிக்கூட கவிதையாகும் வித்தைதான் இது. பிரபஞ்ச நதியில் திளைக்கத் தவிக்கும் தேவ அபிரா ஒரு வித்தியாசமான கவிஞனுடன் மதுவருந்தல் என்கிற அனுபவத்தை கவிதையாக்குகிறார். கவிதையைவிட இந்தநிகழ்வு தரும் பரிச்சயம் அலாதியானது.
டிசே தமிழனின் கவிதைகள் முற்றிலும் நவீன கவிதை உத்தியில் எழுதப்படும் தொல் மரபின் கதை சொல்லலைக் கொண்டவை. காலத்தை முன் பின்னாக நகர்த்தும் அக்கவிதைகள் துயரை தருவதில்லை, நம்மை அவை துயராகவே மாற்றிவிடுகின்றன. வண்ணத்துப்பூச்சியைப் புணர்ந்தவன் என்ற இக்கவிதைகளில் ”புத்தரின் ஒளிரும் குறியை அறுத்தெறிந்து” சிலிக்கனால் பெருக்கப்படாத முலைகளைக் கொண்ட யசோதரா என புத்தரின் கதை புதிய தளத்தில் எடுத்துரைக்கப்படும்போது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இவரது கவிதைகள் ”நாடற்றவனின் குறிப்பு” என்கிற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது,
இங்கு சொல்லப்பட்ட கவிதைகளில் ஒரு ஒற்றுமை உண்டு. இவை எல்லாம் ஈழத்தைச் சேர்ந்த கவிஞர்களால் எழுதப்பட்டவை. அவற்றின் அனுபவப் பரப்பு மிகவும் வித்தியாசமானது. அடுத்த சரத்தில் தொகுக்கும் தமிழக கவிதைகளுடன் இதனை ஒப்பிட்டால் இவற்றிற்குள் ஆழ ஓடும் அந்த துயரத்தை உணரலாம். இவற்றின் பேசுபொருளாகட்டும் வடிவமைக்கும் முறையாகட்டும் முற்றிலும் தமிழக கவிதைகளைவிட வித்தியாசமான குணத்தைக் கொண்டவை. இங்கு காட்டியிருப்பவை ஒன்றிரண்டு கவிதைகள்தான். இக்கவிஞர்களின் கவிதைகள் பலவும் நுட்பமான உணர்வுத் தளத்தில் நின்று பேசுபவை, முனுமுனுப்பவை, ஆர்ப்பரிப்பவை, அலைகளை உருவாக்குபவை.
அன்புடன்
ஜமாலன்.
இமேஜ்: Salvador Dali -The Persistence of Memory
Posted by
ஜமாலன்
at
10:53 PM
13
comments
ஆலிஸ் கால் இடறி விழும் அற்புத உலகைப்போல, விபத்துகள் மற்றும் தவறுதல்கள் சிலநேரம் நம்மை ஆச்சர்யமான உலகிற்குள் இட்டுச் சென்றுவிடக்கூடும். அப்படி தட்டச்சில் விரல் இடறி ஒரு விபத்தாக நான் வந்தடைந்த உலகம்தான் வலைப்பதிவுகள் அல்லது வலைப்பூக்கள் எனப்படும் பதிவுலகம். 1994-ல் விண்டோஸ் 3.0 காலத்திலிருந்தே தமிழில் டைமண்ட் மற்றும் ஜெம்ஸ் எனகிற TTF எழுத்துருக்களால் தட்டச்சு செய்து கொண்டிருந்தாலும், “வித்யா“ எனக்கு பரிச்சயமானது 2000-த்தில் பிரான்ஸில் இருந்து வெளிவந்த ”எக்ஸில்” நண்பர்களான ஞானம் மற்றும் விஜி ஆகியோர்களால். அந்த இதழில்தான் எனது உடலரசியல் என்கிற கட்டுரைத் தொடராக வெளிவந்ததது. அதன்பின் வந்த ”உயிர்நிழல்” இதழில் எழுதும்படியும் நண்பர்களான அசோக், லஷ்மி மற்றும் புஷ்பராஜன் போன்றவர்கள் கேட்டபோது அறிமுகமானதுதான் பாமிணி. எ-கலப்பையில் பாமிணி இல்லாததால் எனக்கு அதனை பயன்படுத்த வாய்க்கவில்லை. தவிரவும், அகலப்பட்டை இணைப்பை எனது நிறுவனம் 2007-ல்தான் துவக்கியது. 2007-ல் ஒருநாள் கூகுலில் அலைந்துக் கொண்டிருந்தபோதுதான் எ-கலப்பையை பாமிணியுடன் கண்டடைந்தேன். அதி்ல் எதையோ சோதனையாக தட்ட ஒரு விபத்தாக வந்து விழுந்த தமிழ சொற்களால் பதிவுலகம் அறிமுகமானது.
Posted by
ஜமாலன்
at
2:04 AM
12
comments