07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வலைச்சரம். Show all posts
Showing posts with label வலைச்சரம். Show all posts

Wednesday, January 14, 2015

பொங்கல் பண்டிகையும் கிராமத்து வாழ்க்கையும்

பொங்கல் பண்டிகையை கிராமத்தில் கொண்டாடி சுமார் இருபது வருடங்களாகிறது. சென்னை வாழ்க்கையில் பொங்கல் அத்தனை சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. கடந்த இரண்டு வருடங்களாக ஒடிஸாவில்தான் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினோம். தமிழர்கள் யாருமே இல்லாத அந்த இடத்தில் நாங்கள் மட்டும் மொட்டை மாடியில் பொங்கல் வைத்து, சூரியனுக்குப் படைத்து எங்கள் ஆத்ம திருப்தியைத் தீர்த்துக் கொண்டோம்.

ஒரு காலத்தில் கிராமத்தில் பொங்கல் பண்டிகை என்றால் ஊரே குதூகலமாக இருக்கும். வீட்டு வாசலில் சாணத்தால் மெழுகி, செம்மண் பூசி மாவிலைத்தோரணங்களுடன் எல்லா வீடுகளும், ஊர்க்கோவிலும் அட்டகாசமாக இருக்கும். புதுப்பாணைகள் எடுத்து வந்து புதுத்துணி  அணிந்து மாமன் மகள்களும் வீட்டுப்பெண்களும், அக்கம் பக்கதினரும் பொங்கல் வைக்கும் காட்சியே அழகுதான்.

ஒலி பெருக்கியின் ஓயாத அலறலும், உறியடித்தலும், சறுக்கு மரம் ஏறுதல், மாடு விடும் திருவிழா என இளைஞர்களாகிய எங்கள் பங்கு கணிசமாக இருக்கும். உள்ளூரிலேயே இருந்தாலும் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்வதும், யாரெல்லாம் நமக்கு வாழ்த்து அனுப்பியிருக்கிறார்கள் என்று தபால்காரரை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலங்கள் உண்மையிலேயே மறக்கக்கூடியவை அல்ல.


இப்போது இந்தக் காட்சிகள் எதுவுமே இல்லை. ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆண்கள் இல்லாத கிராமமாக இருக்கிறது. எல்லோருமே பிழைப்புக்காக வெளியூரில் இருக்க புதிதாய் வந்த நாகரிக மருமகள்கள் மட்டும் நைட்டி எனும் தேசிய உடையில்...

ஏண்டா கண்ணு துரும்பா இளைச்சிட்ட.. என்று குசலம் விசாரிக்கும் பெருசுகள் எதுவும் உசிரோட இல்லை. நில புலன்கள் எல்லாம் காய்ந்து போய்க்கிடக்கிறது. காளை மாடோ இல்லை பசுமாடோ சுவடே தெரியாமல் காணாமல் போயிருக்கிறது. துக்கம் தொண்டையை அடைக்கிறது. இதற்கு சென்னையோ அல்லது ஓடிஸாவோ மேல் என்றுதான் தோன்றியது. என் மகள்களுக்கு சொந்த ஊரின் பெருமையைப் பேச எதுவுமே இல்லை என்ற ஏக்கம் எழுகிறது.

இருந்தும்  வாழ்த்து சொல்ல மனம் ஏங்குகிறது.

அடித்தள மக்களிடமோ
அறியாமை இருட்டு
போதை மயக்கத்திலோ
இளைய தலைமுறை
எங்கும் எதிலும்
இலஞ்சமும் ஊழலும்
மனக்குமுறலை உரமாக்கி
வீரத்தை நீராக்குவோம்
சுயமரியாதை உணர்த்திய
பெரியாரின் கொள்கையால்
மேதைகள் போற்றிய
பொதுவுடைமைச் சிந்தனையால்
சமுதாய சீர்திருத்த
அறுவடை செய்வோம்
இதயம் நிறைந்த
பொங்கல் வாழ்த்துக்கள்!

இன்றைய அறிமுகங்கள்


காவிரிப்படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தின் விளைவாய் ஏற்படும் அபாயங்களை விளக்கும் அருமையான பதிவை நயனம் என்ற தளத்தில் நாக.இளங்கோவன் அவர்கள் எழுதிய 'தஞ்சை நெற்களஞ்சியம் கரிக்களஞ்சியமாகலாமா?' என்ற பதிவில் பாருங்கள்.


'பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்' என்ற தளத்தில் பி.கே.சிவகுமார் என்பவர் 'ஜெயமோகனின்' வெண்முரசு - உவமைகள் வர்ணணைகள்' என்ற பதிவில் வெண்முரசின் பிடித்த வர்ணணைகள் உவமைகளை முன் வைக்கிறார். ஜெயமோகனின் எந்த நூலையும் இதுவரை வாசித்ததில்லை. இந்தக்கட்டுரையை வாசித்த பிறகு படிக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்படுகிறது. உங்களுக்கும் ஏற்படலாம்....

ஒரு மனிதனின் மரணம் அன்பையும், நட்பையும், பாசத்தையும் உணர்ந்தபடி நிகழவேண்டும். யாருமற்ற அனாதையாக, யாருக்கும் தேவையற்று மிருகத்தைப்போல செத்துப்போவது எத்தனை கொடுமை! சித்தரக்கூடத்தின் சந்தனமுல்லை அவர்கள் 'தேவதாஸ்-சரத் சந்திர சட்டோபாத்யாய' என்ற தன் பதிவில் கல்கத்தா பயணத்தின் வழியே வரலாற்றையும் வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

சின்னு டேஸ்டி வலைத்தளத்தில் மாதேவி வாய்க்கு ருசியான விதவிதமான சமையல் குறிப்புகளை எழுதி வருகிறார். என்னைப் போன்ற தனிக்கட்டையாக வெளியூர்களில் வசிப்பவர்களுக்கு இது போன்ற தளங்கள்தான் சமயத்தில் உதவுகின்றன


நீங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவராக இருப்பின் பனைமரத்தின் பலன்களான நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு ஆகியவற்றைச் சுவைத்திருப்பீர்கள். எனது மறக்க முடியாத நிகழ்வுகளில் எனது கிராமத்து நினைவுகளை இன்னும் அசைபோடவே இல்லை. கிராமத்து வாழ்க்கையில் பனம்பழத்தை சேகரித்து பூமியில் புதைத்து கிழங்காகும் வரை காத்திருந்து, பின் அதை எடுத்து வேகவைத்து சாப்பிட்ட அந்த நினைவுகளை மிக அருமையாக 'தலைநகர் பார்க்கவந்த தங்க விக்கிரகங்கள்' என்ற இந்தப் பதிவில் நினைவு கூறுகிறார்.


நமக்குத் தெரியாத வரலாற்று நிகழ்வை சொல்வதோடு மூன்றாவது உலகப் போருக்கு காரணமாகவிருக்கும் ஒரு சமாதி குறித்த ஒரு புதிய தகவலைக் கொடுக்கிறார் உலகின் புதிய கடவுள் தளத்தின் கே.செல்வன்.

மின்வெட்டில்லாத மிகை மின் மாநிலமான நம் தமிழ்நாட்டில் காலையிலிருந்தே 'கரண்ட்' இல்லை. அதான் கொஞ்சம் காலதாமதம்.

அன்புடன்,
கவிப்ரியன்.
மேலும் வாசிக்க...

Tuesday, January 13, 2015

காதலிக்கும் பெண்ணுக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்களா?



நாம் மற்றவர்களுக்கு எழுதுகின்ற கடிதங்கள் கூட இலக்கியம் ஆகுமா என்ன? பள்ளிப் பருவத்தில் நூலகத்திலிருந்து நான் எடுத்துப்படித்த முனைவர் மு. வரதராசனார் அவர்களின் ‘நண்பர்க்கு’ என்ற நூல்தான் நான் முதலில் படித்த கடித இலக்கியம். அதன் பிறகு அன்புள்ள தம்பி… என்று தொடங்கும் அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் பிரசித்தி பெற்றவை. இன்றும் தன் கழக உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதும் கலைஞரின் கடிதங்களும், எழுத்தாளர் ஞானி, திரு. மாலன், திரு. பாமரன் ஆகியோர்களின் கடிதங்களும் நாம் அறிந்தவையே! 

ஒத்த கருத்துடைய நண்பர்களுக்கும், பேனா நண்பர்களுக்கு அரசியல், சமூகம், மனித உறவுகள் குறித்து நான் எழுதிய கடிதங்கள் ஏராளம். இப்போது அவைகள் மண்ணோடு மண்ணாகியிருக்கும். ஆனால் அந்த நண்பர்கள் எனக்கு எழுதிய கடிதங்களை நான் இன்றுவரையிலும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். கடிதம் எழுதும் கலையே மறக்கப்பட்டுவிட்ட நிலையில் எனக்கு வந்த அந்தப் பழைய கடிதங்களை எப்படியும் பாதுகாக்க எண்ணி வலைப்பக்கத்தில் பதிவேற்றத் தொடங்கினேன்.

ஆனால் காதலிக்கும் பெண்ணுக்கு கடிதம் எழுதியதே இல்லை. தைரியமில்லாமல் இல்லை. வீணாக எதற்கு அவளுக்கு தர்ம சங்கடத்தைக் கொடுக்க வேண்டும் என்றுதான்! இப்படி பழைய கடிதங்களை வெளியிடும்போது அதில் ஒரு சங்கடம் இருந்தது. என்னை நம்பி எனக்காக எழுதப்பட்ட அந்தக் கடிதங்களை அவர்களின் அனுமதியின்றி, அவர்களின் அல்லது என் நிஜப்பெயரில் வெளியிடுவது சில சங்கடங்களைத் தரும் என்பதால் பெயர்களை மாற்றி அந்தக்கால கடிதப் போக்குவரத்தை அப்படியே பதிவாக்க முடிவு செய்தேன்.

அப்போது கடிதங்களைப் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு... அன்புள்ள மன்னவனேஆசையில் ஓர் கடிதம்.

அந்தக் கடிதப்பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது எனது சகோதரி செல்வி எனக்கெழுதிய கடிதங்கள்,

மயிலாடுதுறையிலிருந்து எனது தோழி மாலா எழுதிய கடிதம்.

எனக்கு மிகவும் பிடித்த மறைந்த குமுதம் ஆசிரியர் ஏ.எஸ்.பி. அவர்கள் தன் மகளுக்கு எழுதிய கடிதம் சந்தோஷமா அப்பா! எக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. அதை அவர் மகள் நினைவுகூர்ந்த விதமும் வியக்க வைக்கிறது.

அன்பில்லாதகணவனுக்கு எனக்கு மிகவும் பிடித்த, பாதித்த கடிதம் என்பதால் வாசகர்களிடம் மீண்டும் இதை பகிர்ந்து கொள்கிறேன். (வினவு தளத்திற்கு நன்றி) ஆண் என்ற அதிகாரத்தில் வாழும் ஆண்டைகளும், பெண் என்ற அடிமை நிலையை ஏற்றுக்கொண்ட பெண்களும் அவசியம் படிக்கவேண்டிய அற்புதமான கடிதம்.

என்னுடைய ஒரு பதிவின் பின்னூட்டத்தில் திருமதி சாகம்பரி அவர்கள் பின்வருமாறு பின்னூட்டமிட்டிருந்தார். //ஒருவரிடம் நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்துவது உறவுகளை மேன்மையடையச் செய்யும். எந்தவித தடையுமின்றி தயக்கமுமின்றி நம்முடைய மென்மையான எதிர்ப்புக்களை வெளிப்படுத்த கடிதங்கள் உதவுகின்றன. தொலைபேசியில் பேசுவது உணர்வுகளை காற்றில் கலந்துவிடச் செய்யும். ஆனால் கடிதத்தின் உணர்வுகள் ஒவ்வொரு முறையும் அதை படிக்கும்போது உணர்வுகளை மீட்டெடுக்கும்\\ எழுதியிருந்தார். 

இப்போது பாருங்கள் எல்லா கோபதாபங்களையும் நொடியில் கைப்பேசி வழியே கொட்டித் தீர்த்து உறவுகளை சிக்கலாக்கிக் கொள்கிறோம். என்னதான் மின்னஞ்சல், முகநூல் என மாற்றுருவம் கொண்டாலும் கடிதங்கள் காலத்தினால் மறக்க முடியாதது இல்லையா?

கவிஞர் மீரா பழனி அவர்களின் கடிதத்தினூடே காதலைப் பரிமாறிய கவிதையைப் பாருங்கள்
நீண்ட இடைவெளிக்குப் பின்
நிகழும் சந்திப்பு...
பகிர்ந்து கொள்ள
பல நினைவுகள் இருந்தும்
மௌனம் என்ற
நாகரிகப் பார்வையில்
நகர்ந்து கொண்டிருந்தது நேரம்!
பிரிகையில்...
உன் குடும்பம் பற்றி நீயும்
என் குடும்பம் பற்றி நானும்
உப்புச்சப்புமில்லாமல்
பேசி முடிக்கையில...
தப்பித்தவறிக்கூட அந்த
பழைய பார்வையை
பார்க்கவே இல்லை
உன் கண்களில்.

எல்லாவற்றையும்
மறந்தது போல்
யதார்த்தமாய் பேசும் நீ!
பழகிய நாட்களில்
எனக்கு எழுதிய
பெயரற்ற கடிதங்களை
இனியும் நான்
பாதுகாத்து வைப்பதில்
பயனில்லை!
குப்பைக் கூடையில்
போடவேண்டும்!
சரி....
நீங்காமல் நெஞ்சில் கிடக்கும்
பழைய நினைவுகளை
என்ன செய்வது?

இன்றைய அறிமுகங்கள் (மகளிர் மட்டும்);

தன் காதலனுக்கு ஒரு பெண் இப்படி எல்லாம் கடிதம் எழுத முடியுமா என்ன? ஒரு போட்டிக்காக எழுதப்பட்டது என்றாலும் இது நிஜமா, கற்பனையா என்று ஆராயாதீர்கள் என்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறார் சுபத்ரா, சுபத்ரா பேசுறேன் என்ற தன் வலைப்பக்கத்தில், வார்த்தைகள் தேவையா? என்ற கடிதத்தில். இன்னும் சுவாரஸ்யமான பதிவுகள் கொட்டிக் கிடக்கின்றன இவரது பக்கத்தில்.

கடல் நுரைகளும் என் கவிதையும் என்ற பெயரில் வலைப்பூவை வைத்திருக்கும் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி பெண் பதிவர்களில் ஒரே நேரத்தில் முகநூலிலும் பதிவுலகிலும் தொடர்ந்து இயங்குபவர். இவரது படைப்புக்களின் பட்டியலைப் பார்த்தாலே மயக்கம் வந்து விடும். சுமங்கலி என்ற பதிவில் ‘’சுமங்கலி''யாகச் செல்வது ரொம்ப முக்கியம் நம்மவர்களுக்கு! இதுபோன்ற சிந்தனையில் இருந்து என்றுதான் விடுதலையோ.?’’ என்று ஆதங்கப்படுகிறார்.
ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து ஆண்கள் விடுபடாத மாதிரியே, பெண்களும் அடிமைச் சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும். சுமங்கலி, விதவை, மலடி போன்ற வார்த்தைகள் அகராதியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

நினைத்தேன் எழுதுகிறேன் (MY DIARY) தளத்தில் தனது அன்றாட நிகழ்வுகளை எளிமையாக பாசாங்கில்லாமல் பகிர்கிறார் மாலா வாசுதேவன் அவர்கள். இவரது அப்பாக்களின்செல்ல மகள்கள் என்ற சுவாரஸ்யமான பதிவைப் படித்துப் பாருங்கள். என்னால் இப்படி எழுத முடியவில்லையே என்ற ஏக்கத்தைத் தரும் எழுத்துக்கள்.

தி.பரமேஸ்வரி என்ற தன் பெயரிலேயே வலைப்பதிவை வைத்திருக்கும் இவர் ஏனோ எழுதுவதை நிறுத்தி நாளாகிறது. தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சமூக அக்கறை சார்ந்த இவரது படைப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியவை. தீவிர இலக்கியத்தில் ஈடுபாடுடைய அல்லது தொடர்ந்து எழுதக்கூடிய பெண்கள் மிகக்குறைவு. தடம் பதிக்கும் பெண்ணெழுத்து என்ற பதிவில் தனது பார்வையை விரிவாக பகிர்ந்திருக்கிறார். தேர்வு எனும் அகழி, கழிப்பறை காணாத கல்விக்கூடங்கள் போன்ற பதிவுகளினூடாக நமது கல்வி அமைப்பையும் தேர்வு முறைகளையும் மாற்றியமைக்க வேண்டியதின் தேவையை வலியுறுத்துகிறார்.
 

தற்கால நிகழ்வுகளை சுவாரஸ்யமாக பேச்சு வழக்கில் சரளமாகச் சொல்லிச் செல்கிறார் காயத்ரிதேவி. தன்னுடைய 'எண்ணில் உணர்ந்தவை'யில் தற்கொலைக் கதைகள் என்ற பதிவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.

பொங்கல் விடுமுறையில் கொஞ்சம் பொறுமையாக எழுதலாம் என்றுதான் இந்த தேதிகளில் வலைச்சரத்தில் பொறுப்பேற்க திட்டமிட்டேன். ஆனால் பாருங்கள் எல்லோருமே விடுமுறைக் கொண்டாட்டங்களில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. நம்ம பக்கத்துக்கு யாரையுமே காணோம். மீண்டும் சில பதிவர்களின் அறிமுகத்தோடு நாளை சந்திப்போம்.

அன்புடன்,
கவிப்ரியன்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது