07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 4, 2012

உடல் நலம் ,உள நலம், காப்போம்


அன்பு உள்ளங்களுக்கு

முதல் நாள் என் கதையைக் கேட்க வந்தீர்கள், மறுநாள் நான் கொடுத்த விருந்தை ரசித்தீர்களா?இன்று உடல் நலம் எப்படி இருக்கிறது? (அந்த காலத்தில் )கடிதம் எழுதும் போது நலம் நலம்றிய ஆவல். என்று தான் எழுதுவோம். இப்போது ஒவ்வொருவர் சந்திக்கும் போது, தொலைபேசி, அலைபேசியில் எல்லாம் நல்ம் விசாரிப்பு நடக்கிறது. உடலில் ஏதாவது தொந்திரவு செய்வதைச் சொன்னால் கிடைக்கும், நிறைய அறிவுரைகள். ஆரோக்கியம்
என்பது நம் கையில் தான் இருக்கிறது. நாள் தோறும் உடற்பயிற்சிகள், உள் உணர்வுகளை ஒழுங்கு படுத்தச் சிறிது நேரம் தியானம், அளவான உணவு, உறக்கம்,இருந்தால் நல்லது. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் . அப்படியே நோய் வந்தாலும் அதை மனவலிமையோடு எதிர் கொண்டால் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். முதுமையில் கவலை, இயலாமை தரும் சினம் எலலாம் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நம் உடல் நலத்துக்காக ஒரு மணி நேரத்தை ஒதுக்கி பயிற்சிகளை செய்யலாம். மனம் வைத்து இந்த தளங்களுக்கு சென்று படித்துப் பார்த்தால் கண்டிப்பாய் நேரம் ஒதுக்க முடியும். உடல் நலத்தைக் காத்துக் கொள்ளலாம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பார்கள் !


//நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.//

என்ன நோய் வந்து இருக்கிறது, நோய் வந்ததின் காரணம் என்ன, அதைக் குறைப்பதற்கு என்ன வழி, என்று ஆராய்ந்து நோயைப் போக்க வேண்டும்.


முதலில் எளிதாக செய்யும் முத்திரைகள்: நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரை ஆகும். நரம்புகளுடன் சம்மந்தமுள்ள உடல் உறுப்புகளை முத்திரை ஆள்கிறது. 1.கட்டைவிரல்- அக்னி, 2.ஆள்காட்டிவிரல் -காற்று, 3. நடுவிரல்- விண், 4. மோதிரவிரல் - நிலம், 5 .சிறுவிரல் - நீர். இந்த ஐந்தும் சமநிலையில்
இருக்கும் போது உடல் ஆரோக்கியமானதாக இருக்கும்.இம் முத்திரைகளை நிற்கும் போதோ,நடக்கும் போதோ ,அமரும் போதோ செய்யலாம்,

கைகளின் அற்புத சக்தி:

முத்திரைகளை உங்களுக்கு தரப் போவது திரு என்.கணேசன் அவர்கள். முத்திரைகளால் என்ன நன்மைகள் என்று அவர் கூறுகிறார்:
/// இந்த விரல் முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விரல் முத்திரைகளை யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன்படுத்தும்போது கிடைக்கும் பலன்கள் பல மடங்காக இருப்பதாகப் பயன்படுத்தி பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து

பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பல நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில முக்கிய எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் சற்றுப் பார்ப்போம். இந்த முத்திரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகள் இன்றி பக்க விளைவுகள் இன்றி இயல்பான வழியில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா?//
********

டாக்டர் முருகானந்தம் M.K அவர்கள் மருத்துவ பதிவுகளின் பட்டியல் வைத்து இருக்கிறார். அத்தனையும் நமக்கு பலன் தரக் கூடியது. அனுபவ பதிவுகளும் இருக்கிறது. சிரிக்க ,சிந்திக்க நலமுடன் வாழ அனைத்தும் உள்ளது இவரது வலைத்தளத்தில்.

’ஹாய் நலமா?’ என்னும் பகுதியில் எவ்வளவு உடற்பயிற்சி என்ற தலைப்பில் நாம் காண்பது:
//உடற்பயிற்சி அவசியம் என்பதை வைத்தியர்களும் சரி நோயாளிகளும் சரி ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், வைத்தியர்கள் சொல்லும் அளவிலான பயிற்சியைச் செய்ய பலருக்கும் முடிவதில்லை. உடலால் முடிவதில்லை என்பது ஒரு காரணம், நேரம் கிடைப்பதில்லை என்பது இரண்டாவது காரணமாகும்.

எனவே, சோம்பிக் கிடக்காதீர்கள். சிறிய அளவிலான உடற் பயிற்சியையாவது ஆரம்பியுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள். உடல் நலம் நாடி வரும், பிரஷர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் யாவும் விலகி ஓடும்.//

** சுவாச நோய்க்கு ஒரு பயிற்சி.:

நெஞ்சு நிறையப் பாடுங்கள் சுவாச நோய்கள் பறந்தோடும்.’

//பாடுவதானது, மூச்செடுப்பதில் சிரமப்படும் நோயாளிகளது துன்பத்தைக் குறைத்து சுவாசத்தை இலகுவாக்கும் என

அண்மையில் ஒரு ஆய்வு கூறுகிறது. பாடுவதானது ஒரு நுணுக்கமான கலையாகும். இதனைச் செய்வதற்கு எமது சுவாசத் தொகுதியில் உள்ள தசைகளின் இயக்கத்தை, துல்லியமாக நாம் எமது கட்டுப்பாடிற்குள் கொண்டு வருகிறோம். எம்மையறியாமலே இது நிகழ்கிறது. தன்னிச்சையாக இயங்கும் எமது சுவாசத் தொகுதியானது இதன் மூலம் எமது மனதின் கட்டுப்பாற்றிற்குள் வருகிறது. இயங்க மறுக்கும் அல்லது இறுகிப் போயிருக்கும் எமது சுவாசத் தொகுதித் தசை நார்கள் இப்பொழுது இசைவாக இயங்குகின்றன.

பிறகென்ன பாடுங்கள். தினசரி பாடுங்கள். இறைவனைத் துதிக்கையில் பாடுங்கள். குளிக்கும்போது குளியலறையிலும் பாடுங்கள். வானொலியில் தொலைக்காட்சியில் பாட்டுகள் வரும்போது சேர்ந்து பாடுங்கள்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாடிக்கொண்டே இருங்கள்.//


** மூட்டு வலிக்குப் பயிற்சி:


மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்.

//பயிற்சி செய்வது மூட்டு வலியை அதிகரித்து, மூட்டுகளை மேலும் இறுக்கமடையச் செய்து இயங்கவிடாமல் தடுக்கும்

எனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பயிற்சிகள் செய்யாது மூட்டுகளை ஆட அசையாது வைத்திருப்பதுதான் உண்மையில் மூட்டுகளின் வலியை அதிகரித்து இறுக்கமடைய வைக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவென்றால் மூட்டுகளும் எலும்புகளும் திடமாக இருப்பதற்கு சுற்றியுள்ள தசைகள் பலமாக இருப்பது அவசியம். அவை திடமாக இருந்து போதிய ஆதரவையும் பக்கபலத்தையும் கொடுக்கவில்லை எனில் மூட்டுகள் சிதைவடைவதற்கும் எலும்புகள் உடைவதற்குமான சாத்தியம் அதிகமாகும். //

***

** சிரிப்பு நல்ல மருந்து:



’.
வாழ்வில் நகைச்சுவை மிக மிக அவசியம் அது நம்மை எப்போதும் இளமை யாக வைக்க உதவும் என்பார்கள் அது திருமதி கோமா அவர்களிடம் நிறையவே இருக்கிறது. நகைச்சுவைக்கு என்றே தனித் தளமே வைத்து இருக்கிறார்.

’ஹா ஹா ஹாஸ்யம்’என்ற தளத்தில் எழுதும் திருமதி. கோமா அவர்கள் ’இடுக்கண் வருங்கால் நகுக ஹ ஹ ’ என்ற தலைப்பில் அவர் அளித்த நகைச்சுவை. கண்,காது, மூக்கு, தொண்டை ,பல், இருதயம் எல்லாவற்றுக்கும் சிறந்த டாகடரை சிபாரிசு செய்கிறார் நகைச்சுவையாக .
எல்லா டாக்டருகளுக்கு மேலாய் அவர் சொல்வது:

// எல்லாத்துக்கும் மேலே நம்ம வைத்தீஸ்வரர் இருக்கார் .அவர்தான் நல்ல டாக்டர், அவர் பார்த்துப்பார் . அவர் கையிலே நம்ம டாக்டர்ஸ் எல்லாருமே டூல்ஸ்தான் //

உண்மைதானே!
***

** உணவு உண்ணும் முறை:



உடல் ஆரோக்கிய டிப்ஸ் தருகிறார் திரு. M.R அவர்கள்.

இவர் வலைத்தளத்தில் உடல் நலக் குறிப்புகள் எல்லாம் கிடைக்கும். எப்படி உணவு உண்பது, எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்று எல்லாம் சொல்கிறார் . பயனுள்ள பதிவு.

***

மனவலிமை:


பிசையோ வலியோ தெரபி :) ’-இது தலைப்பு.

உடல் துன்பத்தையே நினைத்துக் கொண்டு இருக்காமல், தான் ஃபிசியோதெரபி எடுத்துக் கொள்ள வைத்திய சாலைக்குப் போன அனுபவங்களை நகைச்சுவையாக நம்முடன்பகிர்ந்து கொள்கிறார், திருமதி. வல்லிசிம்ஹன் அவர்கள்.

இப்படி மனதைரியத்துடன் எதிர் கொண்டால் நோய் வந்த இடம் தெரியாமல் ஒடிவிடாதா!

***
சினம் தவிர்த்தல்:



’கோபத்திற்கு குட்பை ’ என்ற பதிவில் , ’ஆறுவது சினம் என்றார் அவ்வைப்பாட்டி. மனித வாழ்க்கை சீராக சுபமாக செல்லவேண்டுமாயின் கோபத்தைக்குறைப்பதுதான் கைகண்ட மருந்து’ என்கிறார் திருமதி ஸாதிகா அவர்கள்.
***

உடலைக் காப்பது நம் கடமை:


மகரிஷியின் சிந்தனைகளை அழகாக் பகிர்ந்து இருக்கிறார், திரு. குமாரன் அவர்கள்.

’உடல் என்ற நற்கருவியை நன்றாகப் போற்றிக் காத்துப் பயன்படுத்த வேண்டும். எனவே மனிதன் தனது நோக்கத்தை

ஒட்டி இயல்பாக வாழ்ந்து, அமைதியும், மகிழ்ச்சியும் பெற வேண்டுமெனில் அறிவில் முழுமை பெறுவது, உடலைப்

பொறுப்போடு காப்பது என்ற இரண்டு வகையிலும் உணர்ந்தாற்ற வேண்டும்.’
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
***

முதுமை என்பது நோயல்ல.:



திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் ’வயோதிகம்! 500 வார்த்தைகளில், சாத்தியமா!’
என்ற பதிவில் முதுமைக் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று அழகாய் சொல்கிறார் நமக்கு.

// என்னைப் பொறுத்த அளவில் வயோதிகம் என்பது மனதிலும் ஏற்பட்டாலே வயோதிகர் ஆகலாம். வெறும்

உடல்மாற்றம் அல்ல. வயோதிகத்திலும் அழகாய் இருந்த எம்.எஸ். அம்மா, சந்திரலேகா, கம்பீரம் குறையாத இந்திரா

காந்தி, அன்னை தெரசா, போன்ற எத்தனையோ பேர் உதாரணம் காட்டலாம்.//

வயோதிகம் என்பது உடலுக்குத் தான்.மனதுக்கு இல்லை என்கிறார்.

வயோதிகத்தை எப்படி கழிக்கலாம் என்கிறார் . ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருத்தல் நலம் பயக்கும். இது ஓரளவு மன வலிமையைக் கொடுக்கும். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல நல்ல நிகழ்ச்சிகள் இருக்கின்றன.//

நோயின்றி வாழ இந்தக்கருத்துக்கள் நன்கு பயன்படும்.

வாழ்க நலமுடன்!


மேலும் வாசிக்க...

மார்கழிக் கலைகள்









இது மார்கழி மாதம் அல்லவா? மார்கழி என்றாலே நினைவுக்கு வருவது கோலம், இசை , கோயில், அங்கு தரப்படும் பிரசாதங்கள். தெருவை அடைத்து கோலம் போடும் பழக்கம் எல்லாம் இன்னும் கிராமங்களில் இருக்கிறது. நகரங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் வாழும் மக்களாகவே இருக்கிறார்கள். கொஞ்ச இடம் தான் இருக்கும். அதற்குள் சிறு கோலங்களை மனது இருந்தால் போடலாம்.

மார்கழி மாதத்தில் கண்களுக்கு விருந்து - கோலம், நாவுக்கு விருந்து - இறைவனின் பிரசாதங்கள், செவிக்கு விருந்து - இறைவனின் புகழ் பாடும் கீதங்கள்.

நம் வலைப் பதிவர்களில் நான் படித்த பதிவுகளிலிருந்து, கோலங்கள், சமையல்கள், இறைவனின் புகழ்பாடும் இசை ஆகியவை பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.

கண்களுக்கு விருந்து:

கோலப்போட்டி எல்லாம் இந்த மாதம் நடைபெறும். நல்ல செய்திகளைச் சொல்லும் கோலங்கள் பெரும்பாலும் பரிசினைத் தட்டி செல்லும். அப்படி, தன் அலுவலகத்தில் நடந்த ரங்கோலிப் போட்டியைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சந்தனமுல்லை.

கோலங்கள் எத்தனை வகை உண்டோ அவை எல்லாவற்றையும் அழகாய்க் கண்களுக்கு விருந்து அளித்து மார்கழிக் கோலங்களின் நன்மைகளைச் சொல்கிறார்,அமைதி சாரல்.
’கோலங்கள் நம்ம மக்களோட வாழ்க்கையில் பிரிக்க முடியாதபடிக்கு இழையோடுது.’ என்கிறார். காண்க: அமைதிச்சாரல்

கமலாவின் ’கோலங்கள்’ரசிப்பதற்கு உரியன. கோலங்களைப் பற்றிய அவரது தளம்

இது கோலம் போட ஆசை இருப்பவர்களுக்கு ஏற்ற தளம். பண்டிகைக்கோலங்கள், சிக்குக் கோலம், புள்ளிக் கோலம், ரங்கோலி., நவக்கிரக கோலங்கள், பூக் கோலம் ,
சின்னக் கோலங்கள் பெரிய கோலங்கள் என்று கோலம் போடவும் சொல்லித் தருகிறார்.

***

’சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்’ என்று பழைய பாடல் ஒன்று உண்டு. சமையல் செய்வது அவ்வளவு கடினம் , சங்கீதம் எளிது என்பது போல். முன்காலத்தில் கடினம் தான். விறகு அடுப்பு, கரி அடுப்பு, என்று கஷ்டப்பட்டார்கள். இப்போது நவீன மின் அடுப்புகள், கேஸ் அடுப்புகள் என்று சமையல் செய்வது எளிதாகி விட்டது. மனம் தான் வேண்டும் சமைக்க.(பட்டனைத் தட்டிவிட்டால் இரண்டு தட்டிலே இட்லியும் காப்பியும் நம் பக்கத்திலே வெண்டும் என்றால்)

சமையல் செய்வது ஒரு பெரிய கலை. செய்த சமையலை நன்கு அழகாய்ப் பாத்திரங்களில் அழகு படுத்தி பரிமாற ஆயத்தமாக வைத்தால் கண்களுக்கு முதலில் விருந்து, பின் வயிற்றுக்கு விருந்து. அது நான் பகிர்ந்து கொண்ட எல்லோருக்கும் இருக்கிறது. ’ஏங்க இன்று சமையல் எப்படி இருக்கு?’ என்று கேள்வி கேட்டால் சிலர் ’வீட்டில் இன்று சமையல் அசத்திவிட்டாய், சிலர் வீட்டில் அட்டகாசம் போ’ என்பார்கள்.
வெளி நாட்டில் உள்ள நம் மக்கள் விழாக்கள் , பண்டிகைகளை ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடுவார்கள். அப்போது ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒவ்வொரு விதமான உணவுகளைக் கொண்டுவந்து எல்லோரும் உண்டு மகிழ்வார்கள். அது போல் நானும் நம் வலைத்தளத்தில் உள்ள சமையல் கலை அரசிகளின் குறிப்பில் இருந்து மார்கழி பிரசாதங்களை உங்களுக்கு வழங்குகிறேன். நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.

எளிதாக, புளியோதரை.(பெருமாள் கோவில் புளியோதரை நன்றாக இருக்கும் என்பார்கள்.) ஆசியா சுலப புளியோதரை செய்து நமக்கு விருந்து அளிக்கிறார்.


 ஜலீலா ’முந்திரி ,ரவைகீர்’ தருகிறார்.


மிராவின் தளத்தில் ’நவராத்திரி’ என்ற பதிவில் ’நவதானிய சுண்டல்கள்’,’கோலத்தில் நவராத்திரி கொலுவின் படம்’ என்று அசத்துகிறார். உணவே மருந்து என்று உணவுப் பொருளில் சமைத்து தருகிறார்.

 மிராவின் கிச்சனில், அவர் ’பொங்கலோ பொங்கல்’ பதிவில், பால் பொங்கல், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் தருகிறார்.

 மாதேவி பழச்சாறு பொங்கல் செய்து தருகிறார்.

//வயலில் விளைந்த அரிசி எடுத்து, சுவைக்கு பால், வெல்லம், பருப்பு இட்டு சமைத்துப் படைத்து வருடம் பூராவும் இனிதே இருக்க வேண்டி உண்பர்.// - எவ்வளவு விஷயங்களை இதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்!

ஆதி வெங்கல உருளியில் அரிசிப்பாயாசம் தருகிறார்

***




மனித வாழ்வில் இசை விருந்தாக மட்டும் அல்ல மருந்தாகவும் இருக்கிறது.உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகம் அளிக்கிறது.இசை என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல.
இசைக்கு மயங்காதவர் உண்டோ! இசைக்கு இறைவனும் வசப்படுவான்.

/பொய்யான தேவைகளை உருவாக்கிக் கொண்டு அதை நிறைவேற்ற போராட்ட வாழ்க்கையை நடத்துவதும், இயற்கையிலிருந்து விலகிக் கொண்டே செல்வதும், அவசர ஓட்டமும் இக்கால மனிதர்களின் நிம்மதியின்மைக்கு முக்கிய காரணங்களாக சொல்கிறார்.* குமரன்//
அதற்கு மாற்றாக அமையும் இசை.

இசை விருந்து:

இசை இன்பம் தளத்தில் தமிழிசை வரலாறு -5,- சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை என்ற தலைப்பில் மார்கழி மஹா உற்சவத்தில் திருமதி செளம்யா பாடிய பாடல்களைக் கேட்கலாம். பகிர்ந்து கொள்பவர் ஜீவா.

* தி. ரா. ச.(T.R.C.)
* மலைநாடான்
* ஷைலஜா
* கவிநயா
* மடல்காரன்
* ராதா
* ராகவ்
* இரா. வசந்த குமார்
* சங்கர்
* ச்சின்னப் பையன்
* லலிதா மிட்டல்
இவர்கள் எல்லாம் கண்ணனின் புகழபரப்புவர்கள்.
பாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி!
முத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழந்து
நம்மையும் மகிழ்விக்கிறார்கள்.

கண்ணம்மா எனது குலதெய்வம்’ என்ற பதிவில் காருகுறிச்சி பி.அருணாசலம் அவர்களின் கம்பீரம் நாதஸ்வர இசையில்,

’நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !’

கேட்க கேட்க இன்பம். பகிர்ந்து கொள்பவர் ராதா. இது பின்னால் வரும் ஆண்டாள் ரங்கன் திருமணத்திற்கு மங்கள இசை வாசிப்பது போல் இருக்கிறது.


 ’தோழி கோதை பிறந்தநாள்!’ என்ற பதிவில் ஆண்டாளின் பாடல்கள், திருமணம் எல்லாம் காணலாம். மார்கழி என்றாலே ஆண்டாள் தான். மாதங்களில் நான் மார்கழி என்கிறான் கண்ணன். அந்த கண்ணனின் புகழ்பாடும் தளம் இது. சினிமாவில் வரும் கண்ணன் பாட்டு, தனிப் பாடல்கள், பஜனைப் பாடல்கள் என்று நிறைய உள்ளன. கேட்டு மகிழுங்கள்.






மேலும் வாசிக்க...

Tuesday, January 3, 2012

கதை கதையாம் காரணமாம்

முன்பு எல்லாம் குழந்தைகளுக்கு நல்ல படிப்பினை ஊட்டும் கதைகளைச் சொல்லி வளர்க்க தாத்தா, பாட்டி இருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கதை சொல்லிகள் உண்டு. என் பேத்திக்கு தினம் கதை கேட்க வேண்டும் படுக்கப் போகும் முன். நல்ல கதை கேட்டு நல்லபடியாக வளர்வார்கள் குழந்தைகள். கதை கதையாம் காரணமாம் காரணத்தில் தோரணமாம் , என்பது போல் இன்று கதைத் தோரணம் கட்டப் போகிறேன். கதை கேட்க ரெடியா?

எந்த ஒரு செயலைச் செய்தாலும் இறைவன் அருள் இருந்தால் தான் முடியும் என்பார்கள்.அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பார்கள். எந்தச் செயலைச் செய்யும் போதும் முழுமுதற் கடவுளான விநாயகனை வணங்கிச் செய்தால் நல்லது என்பார்கள்.

வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் நல்ல கதை சொல்லி. நல்ல படிப்பினை ஊட்டும் கதைகள், சிரிக்க, சிந்திக்க வைக்கும் கதைகள் எல்லாம் எழுதுவார். நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வரேன் ’என்ற கதை படித்துத் தான் நான் அவருடைய வலைத்தளத்திற்குப் போக ஆரம்பித்தேன்.

உருக்கமான கதை.

ஏமாற்றாதே ! ... ஏமாறாதே’ கதை உச்சிப் பிள்ளையாருக்கு 12 தேங்காய்கள் உடைப்பதாய் வேண்டிக் கொண்டவரின் கதை. தெருவோரம் தேங்காய் விற்பவரிடம் எப்படி தேங்காய் வாங்குகிறார் பாருங்கள்.

//அவளுடன் ஏதேதோ பேசிக்கொண்டே ஒவ்வொரு தேங்காய்களையும் தன் காதருகே வைத்து ஆட்டிப்பார்த்தும், கட்டை விரலையும் ஆள்காட்டிவிரலையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு காய்களின் மீது தன் ஆள்காட்டி விரல் நகத்தினால் மிருதங்கம் வாசித்தும், பன்னிரெண்டுக்கு பதிமூன்றாகத் தன் பையில் போட்டுக்கொண்டு, நூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டியபடி, மீதிப்பணம் கொடு என்றார் அவசரமாக.//

வேண்டிக்கொண்டபடி 12 தேங்காய்களை உச்சி பிள்ளையாருக்கு உடைத்தபின் ஏமாற்றி வாங்கிய 13வது தேங்காயை தன் மனைவியின் சமையலுக்கு கொடுக்கிறார். அது எப்படி இருந்தது என்று சொல்கிறார் பாருங்கள்.

//பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றில் அவர்கள் சொல்லுவது தான் விலை. யாரும் பேரம் பேசுவது கிடையாது. பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்கும். மனைவி கையில் வைத்திருந்த அந்த அழுகல் தேங்காய் மூடிகளை உற்று நோக்கினார். அதில் அந்த ஏழைக் கிழவியின் தளர்வான முகம் அவருக்குக் காட்சியளித்தது.//

காசு கொடுத்து வாங்கிய தேங்காய்கள் பிள்ளையாருக்கு நல்ல வெள்ளையாக உடைந்தது. ஏமாற்றி வாங்கிய காய் என்ன ஆனது பாருங்கள். இறைவன் என்ன நினைக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கிறார் பாருங்கள்.

//அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார். //

கதை சொல்லும் நீதி- யாரையும் ஏமாற்றகூடாது. தெய்வம் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்பது தானே!

***

அடுத்த கதையும் வை.கோபாலகிருஷ்ணனின் கதைதான். கதையின் பெயர் உடம்பெல்லாம் உப்புச்சீடை உருவம் கண்டு எள்ளல் கூடாது என்பதை வலியுறுத்தும் கதை. பலாப்பழம் வெளித் தோற்றத்தில் முட்கள் நிறைந்ததாய்க் காணப்பட்டாலும் உள்ளே உள்ள சுளை மிகவும் இனிப்பானது.

காசி செல்லும் ரெயில் பயணத்தில் சக பயணியாய் வருபவரை எப்படி நினைக்கிறார்கள் என்று சொல்கிறார் பாருங்கள்:

//அவருக்கு சுமார் 75 முதல் 80 வயதுக்குள் இருக்கலாம். உயரமான ஒல்லியான தேகம். சற்று கருத்த உருவம். பின் கழுத்துக்கு மேல் கொஞ்சமாக தொங்கும் நரைத்த முடிக்கற்றைகள். அதன் மேற்புறம் சந்திர பிம்பம் போன்ற வளைவு. முகம், நெற்றி, தலை, கை, கால்கள், விரல்கள் என எல்லா இடங்களிலும் சிறியதும், பெரியதுமான கொப்புளங்கள். உப்புச்சீடை, வெல்லச்சீடை போல முண்டும் முடிச்சுமாக பார்க்கவே அருவருப்பான தோற்றம்.//

அழகற்ற அவரைப் பார்க்கவும் ,பேசவும், பிடிக்காமல் அவரை வார்த்தைகளால் சக பயணி சாடுகிறார்., பின் அந்த அழகற்ற அவர், அவர்களுக்கு உதவிய போது, அவர்களுடைய மனதில் அழகிய மனிதராய் உயர்ந்து நிற்கிறார்.

இந்தத் தொடர்கதையைப் படித்து முடிக்கும்போது கண்ணின் ஓரத்தில் கண்ணீர் வந்தது உண்மை.

அழகிய உடலோ
அருவருப்பான உடலோ

உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்
அழுகக்கூடிய,
நாறக்கூடிய
அப்புறப் படுத்த வேண்டிய
பொருளாகி விடுகிறது.

அதை எரிக்க வேண்டிய
அவசரமும், அவசியமும், நிர்பந்தமும்
ஏற்படுகிறது.

எரிந்த அதன் சாம்பலில்

அழகும் இல்லை
அருவருப்பும் இல்லை.சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!//

என்று பெரியவர் சொல்வதாய் தோன்றுகிறது சக பயணிக்கு. உயர்ந்த மனிதர் என்ன உதவிசெய்தார் என்பதைப்

படித்துப் பாருங்களேன்!

***

அடுத்த கதை-

கே.பி. ஜனா அவர்களின் சிறுகதைகள்

பக்கம் பக்கமாய்ச் சொல்லும் விஷயங்களை எளிமையாகத் தன் சிறுகதையில் சொல்லிவிடுகிறார். இவர் நாவல்களும் எழுதியிருக்கிறார். கவிதைகளும் எழுதி இருக்கிறார். இவரைப் பற்றி வசந்தபாரதி கூறியது மிகவும் சாலப் பொருத்தமே:

//வாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடிநாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி //
நலம் வாழ சிறுகதையில் மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக என்னக்கொடுத்து மகிழ்வித்தார் பாருங்கள். தன் மனைவியின் முன்னாள் தோழியின் முகவரியைக் கண்டுபிடித்துச் சந்திக்க வைக்கிறார், தன் மனைவிக்கு மறக்க முடியாத பரிசாக.
சிறந்த பரிசு தானே!

சந்தோஷ முகம் -சிறு கதையில் : // என்ன வாத்தியார் ஐயா? மெடிகல் செக் அப்புக்கு சென்னை போறீங்களாமே? கேள்விப்பட்டேன். கண்டிப்பா நம்ம பையன் வீட்டில தான் தங்கணும்.'' பரிவோடு சொன்னார் பொன்னையா. //

//சோமு , பரதன்,லோகநாதன் -- எல்லாருமே தற்போது சென்னையில் இருக்கும் அவரது பழைய மாணவர்கள் -- இவர்களின் பெற்றோரும் அவரை சந்தித்து, தங்கள் மகன் வீட்டில் தங்கிக் கொள்ளச்சொல்லி வற்புறுத்திவிட்டுப் போயிருந்தார்கள்.//

இத்தனை பேர் அழைத்தும் அவர் யார் வீட்டில் தங்கினார்? அவர் மனைவிக்கு எழுந்த ஆவல் போல் நமக்கும் ஏற்படுகிறது. மனைவியிடம் ,’வெங்கட் வீட்டில்’ என்கிறார். காரணம் கேட்கும் மனைவியிடம் அவர் சொல்வது :

// வெங்கட்டைத் தவிர மற்ற எல்லாரும் கல்யாணமானதும் பெற்றோரைத் தங்களோட அழைச்சிட்டுப் போகாம இங்கே கிராமத்திலேயே விட்டு வெச்சிருக்காங்க. பெத்தவங்களையே கவனிக்காதவங்க, என்னை எவ்வளவு தூரம் வரவேற்பாங்க? ஓர் ஆசிரியர் பார்க்க விரும்பறது தன் மாணவன் முன்னுக்கு வந்து நல்லா இருக்கிறதை மட்டுமில்லே, அவனைப் பெத்தவங்களோட சந்தோஷ முகத்தையும்தான். அதுக்கு நான் அங்கேதானே போகணும்?''//

வாழ்த்து - சிறுகதை, அடுத்தவர் மனது புண்படாமல் அவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது தான் மனிததன்மை. என்பதையும், தவறை மறந்து மன்னித்தலையும் வலியுறுத்துகிறது. அதைக் கதை நாயகனுடைய தாயின் மூலம் சொல்லவைக்கிறார். தன்னை அவமானப்படுத்திய மாமன் மகன் திருமணத்திற்கு வர மறுக்கும் மகனுக்குப் புத்தி சொல்லும் தாயைப் பாருங்கள்:

// ''இத பாரு ரகு, நீ சொல்றது சரிதான். உன் மனசில் விசனம் இருக்கும். வார்த்தைகள் வெளி உதட்டிலேயிருந்துதான் வரும். ஆனால் இது வெளியில் யாருக்காவது தெரியப்போகிறதா? இல்லையே? அவங்க கோணத்திலேயிருந்து பாரு. நீங்க சிரிச்சபடியே அங்கே வர்றீங்க. எல்லா நிகழ்ச்சியிலேயும் கலந்துக்கறீங்க. கைகுலுக்கி வாழ்த்தறீங்க. அதைக் கேட்டு அவங்க மனசு சந்தோஷம் அடையுது. பார்க்கிறவங்களும் சந்தோஷப்படறாங்க. அத்தனை பேரையுமே சந்தோஷப்படுத்த நம்மால முடியுதுன்னா அப்புறம் பிரயோசனமில்லைன்னு ஏன் நினைக்கிறே? யார் கண்டது? ஒரு வேளை அந்த சந்தோஷ சூழ்நிலையில் உன் மனசிலேயும் ஒரு மன்னிப்பு உண்டாகி மனசார அந்த வாழ்த்தை
வாழ்த்திடலாமில்லையா?''//

ரகு திருமணத்திற்கு போனாரா வாழ்த்தினாரா படித்துப் பாருங்களேன்.

***

அடுத்து ரிஷபன்.


இவர் , சிறுகதைகள், கவிதைகள் எல்லாம் எழுதுகிறார்.
அவர்களின் சூர்யா- சிறுகதை சமூக அவலங்களை கூறுகிறது.

இதில் குழந்தையை 10 மாதம் சுமந்து அதை இழக்கும் தாயின் சோகத்தைச் சொல்கிறார். ஆசையாய் தந்தி கிடைத்தவுடன் குழந்தையைப் பார்க்க ஆவலாய் வந்த தந்தையின் சோகத்தையும் கண்முன்னே கொண்டு வருகிறார்.

// "...ஹரீஷ்னு பேர் வச்சோம். பொண்ணா இருந்தா... சூர்யான்னு..."// என்று சொல்லி புலம்பும் தந்தை ராஜன் கதாபாத்திரம்

உண்மையான சோகத்தை சொல்கிறது.

இது ஒரு புறம் இருக்க, குழந்தை வேண்டாம் என்று குப்பைத் தொட்டியில் எறியும் ஒரு கல்மனதையும் சொல்கிறது.குழந்தையின் தந்தையின் நண்பர் பாலு குழந்தையை இழந்த தன் நண்பனுக்கு ஆறுதல் சொல்லி வெளியில் அழைத்து செல்வதும் தான் நடத்தும் இளைஞர் நற்பணி மன்றம் மூலம் குப்பைதொட்டிகளை துப்புரவு செய்வதும் அதில் குழந்தை கிடப்பதை பார்த்த சிறுவன் பாலுவிடம் வந்து சொல்லும் போது நம் மனதும் பதை பதைத்துப்
போகிறது.

//"...அண்ணே... ஒரு குழந்தையை யாரோ குப்பைத் தொட்டில போட்டுட்டுப் போயிட்டாங்க..."//

பாலு தன் நண்பனை அழைத்துக் கொண்டு அங்கு போனபோது அவர்கள் பார்க்கும் காட்சி நெஞ்சை உலக்குகிறது.

//பிறந்த சிசு. கண் மூடிப் படுத்திருந்தது. வாழை இலை ஒன்றின் மேல் விடப்பட்டிருந்தது. சுள்ளெறும்புகள் மெல்லப் பரவ ஆரம்பித்திருந்தன. அவசரமாய் வாரித் தூக்கினான். மேலே ஒட்டியிருந்த குப்பைகளைத் தட்டிவிட்டான். //

பாலு அங்கு வேடிக்கை பார்க்கும் பெண்ணைப் பார்த்துக் கேட்கும் கேள்வி:

//"...ஏம்மா... நீயும் புள்ளையப் பெத்தவதானே... அட... புள்ளை யாருதுன்னு தெரியாட்டியும் போவுது... எடுத்து நிழல்ல வச்சிருக்கலாமில்ல..." என்றான் பாலு ஆற்றாமையுடன்.//

நம்மையும் அப்படித்தான் கேட்கச் சொல்கிறது.பாலுவுக்கும் அந்த பெண்ணுக்கும் நடக்கும் உரையாடல் மிக யதார்த்தம். சிணுங்கும் குழந்தையின் பசியை எப்படிப் போக்குவது என்றவுடன் குழந்தையை இழந்த தந்தை தன் மனைவி கொடுப்பாள் என்று சொன்னதும் கதையின் முடிவு தெரிந்து விடுகிறது. கூட்டத்தில் இருந்த சிறுமி குழந்தையை ஏன் குப்பை தொட்டியில் போட்டார்கள் யார் போட்டார்கள் இவர்கள் ஏன் தூக்கி போகிறர்கள் என்ற
கேள்விக்கு கணேசன் சொல்லும் பதில் "...பாப்பா... இங்கே... வா..." "உனக்கு அம்மா... அப்பா இருக்காங்க... அவங்க உன்னைப் பார்த்துப்பாங்க... இல்லையா... பாவம்... அந்தக் குழந்தைக்கு யாரும் இல்லே... அதனால தான்... நாங்க எடுத்துக்கிட்டுப் போய்... வளர்க்கப் போறோம்..."புரிந்தவள் போல தலையாட்டியது.

//கூட்டத்தில் ஒரு குரல் என்ன குழந்தை என்று கேட்டது. சூர்யா என்றான் //
பெண் குழந்தை என்றால் கள்ளிப் பால கொடுத்து அழிப்பது, குப்பைத்தொட்டியில் போடுவது எல்லாம் என்று முடிவுக்கு வரும்?

***

வெங்கட் நாகாராஜ் நிறைய பயணக்கட்டுரைகளை சுவாரசியமாக எழுதி உள்ளார். அவருடைய பதிவிலிருந்து ஒரு அனுபவக்கதை..


தடுப்பது மேல்’
இந்தக் காலத்தில் ஆண் பெண் திருமண வயது தள்ளிப் போகிறது. அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆன பின் தான் குழந்தை என முடிவு எடுக்கிறார்கள் . அப்புறம் குழந்தைக்காக மருந்து மாத்திரைகள், புதிதாக வந்து இருக்கும் சிகிட்சை என்று நேரத்தையும், பணத்தையும் தண்ணீராய்ச் செலவு செய்கிறார்கள்.

முதல் குழந்தைக்கு 11 மாதம் தான் ஆகிறது அதற்குள் அடுத்த குழந்தை. அந்த குழந்தையை அழிக்க வந்த தாயைப் பற்றிய கதை.

டாக்டரைப் பார்க்க வந்த கணவன் மற்றும் மனைவியின் மன நிலையை அழகாகக் கூறுகிறார். கணவன் தன் குழந்தையை கண்ணே! மணியே என்று கொஞ்சுகிறான்.

தாயின் கவலை தோய்ந்த முகத்தைப் பற்றியும் சொல்கிறார். சூழ்நிலைக் கைதியாக சில நேரம் பெண்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். முதல் குழந்தை பெண் என்றால் அடுத்து பிறக்கப் போவதும் பெண் என்றால் புகுந்த வீட்டில் வேண்டாம் என்கிறார்கள். ஆண்பிள்ளை இலலை என்று மறு திருமணம் செய்வதும் நடக்கிறது. ஸ்கேன் செய்து பார்த்து அந்த குழந்தைக்கு நோய் இருந்தால் வேறு வழி இல்லாமல் அழிக்கலாம். மற்றபடி அழிப்பது பாவம் இல்லையா
டாகடருக்கும், அந்த குழந்தையின் தாயுக்கும் நிகழும் உரையாடல்கள் அருமை.

//டாக்டர்: சரி, வாம்மா, பார்க்கலாம் [சிறிது நேரத்திற்குப் பின்], "ம்ம்ம் கொஞ்சம் கஷ்டம் தான். உங்க பிரச்சனை ஒரு குழந்தை ஏற்கனவே இருக்கும்போது அதையும் பார்த்துக்கொண்டு இன்னுமொரு குழந்தையை வயிற்றுக்குள் வளர்த்து பெற முடியாது என்பதுதானே. வயிற்றுக் குழந்தையை இப்போது ஒன்றும் செய்ய முடியாது, அதாவது அதை அழிக்க முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம், ஏற்கனவே பிறந்த இந்த குழந்தையை வேண்டுமானால் அழித்து விடலாம். அது கொஞ்சம் சுலபம்... அப்புறம் நீங்கள் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையை பிறந்த பின் பொறுமையாக வளர்க்கலாம் இல்லையா! //

டாக்டரின் கேள்வியில் பதறி போகும் பெற்றோரிடம் டாகடர் கூறும் விளக்கமும் அவர் காட்டும் காணொளியும் பார்க்க வேண்டிய ஒன்று. முடிவில் என்ன ஆயிற்று என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.


மேலும் வாசிக்க...

Monday, January 2, 2012

வலைச்சரத்தில் நான்


வலைச்சர வாசகர்களுக்கு வணக்கம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த புது வருடம் எல்லோருக்கும், எல்லா வளங்களையும், எல்லா நலங்களையும் தரட்டும்.

என்னை வலைச்சர ஆசிரியராக இந்த வாரம் அழைத்து இருக்கும் திரு. சீனா அவர்களுக்கும், அவரிடம் என்னைப் பரிந்துரை செய்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகளும், வணக்கங்களும்.

என்னைப் பற்றி:

என் சொந்த ஊர் பாளையங்கோட்டை. நான் பிறந்தது திருவனந்தபுரம். என் அப்பாவுக்கு ஊர் ஊராக மாற்றல் ஆகும் உத்யோகம். செட்டில் ஆனது மதுரை. பள்ளிப் படிப்பு பல ஊர்களில். பாதியில் திருமணம். என் கணவர் கல்லூரிப் பேராசிரியாராக இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். இப்போது வேறு ஒரு கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளாராய் இருக்கிறார்கள். நான் திருமணத்திற்குப் பின் பள்ளிப் படிப்பை முடித்து, B.A பொருளாதாரம் படித்தேன், அதுவும் ஒரு வருடப்படிப்புடன் நின்று விட்டது. காலையில் பிள்ளைகள் பள்ளிக்கும், கணவர் கல்லூரிக்கும் சென்றவுடன் ஆங்கிலத் தட்டச்சு, தமிழ்த் தட்டச்சு, தையல், என்று போனேன். நான் போகும்போது பள்ளி பிள்ளைகள் ’குட் மார்னிங் டீச்சர்’ என்பார்கள் . என்னைப் பார்த்தால் டீச்சர் போல் தோன்றி இருக்கிறது. குழந்தைகள் மனதில் பட்டது பலித்து விட்டது. நான் ஆசிரியர் ஆகிவிட்டேன். எப்படி என்று கேட்கிறீர்களா? உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து யோகா , தியானம், முத்திரைகள் படித்து அதில் ஆசிரியர் பயிற்சி, பொறுப்பாசிரியர் பயிற்சி எல்லாம் எடுத்தேன்.

கடமைகள் முடிந்து விட்டன( இப்போது தான் பொறுப்புகள் அதிகமாகிறது) . சமுதாயத்திற்கு ஏதாவது பணி செய்யலாம் எனறு முடிந்த சர்வீஸ் செய்து கொண்டு இருக்கிறேன்.

விடுமுறைக்கு வந்த என் மகள் அம்மா நீங்களும் வலைத்தளத்தில் எழுதலாமே ஒன்றும் கஷ்டம் இல்லை என்று என்னை வலைத்தளம் ஆரம்பிக்க வைத்தாள்.
அவளும் வலையில் எழுதுபவள் தான் சிறுமுயற்சி வைத்து இருக்கும் முத்துலெட்சுமி.

என் மருமகள் ”திருமதி பக்கங்கள்” என வலைத்தளத்திற்குப் பெயர் சூட்டினாள், என் கணவரது பெயரையும் என் பெயரையும் சேர்த்து. எனக்கு வலைக் கல்வியை மகள், மகன், மருமகள், பேத்தி சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி. என்னை எழுத ஊக்கப் படுத்தும் என் கணவருக்கு நன்றி.

2009 மே மாதம் 31 ம் தேதி ’கிளிக்கோலம்’ என்று கிளிக்கோலம் போட்டு, மகரிஷியின் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து கவிதையுடன் என் வலைத் தளத்தை ஆரம்பித்தேன்.

//எண்ணமே இயற்கைதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கி போகும்.//


முதல் முதலில் வந்து வாழ்த்தியது தெகா.
’அம்மா, அழகான எண்ணங்கள்.
இந்த அடிப்படை உண்மையை ரொம்ப உறுதியா நம்புறேன்!
உங்க எண்ணங்களையும் எங்களோட பகிர்ந்துக்கோங்க..’
June 2, 2009 8:55 AM

என் பதிவுக்கு வந்த முதல் பின்னூட்டம். அவருக்கு நன்றி.
அடுத்து சென்ஷி -வலைப்பதிவுலத்திற்கு வணக்கத்துடன் வரவேற்றார்.
மங்கை  ஜோதியில் ஐக்கியமாக வாருங்கள் என்றார்கள்.
நானானி , சந்தனமுல்லை, கோபி நாத்  கோலத்தைப் பாராட்டி என்னை வரவேற்றார்கள்.
ராமலக்ஷ்மி
கிளிக் கோலம் உங்களை காட்டிக் கொடுத்து விட்டது. நீங்கள் யாரென்று என்று எழுதி இருந்தார்கள். அவர்களை பதிவர் சந்திப்பில் பெங்களூரில் சந்தித்த போது நானும் பதிவு எழுத ஆரம்பித்து விட்டேன் என்று சொன்னதை வைத்துக் கொண்டு அடையாளம் கண்டு கொண்டார்கள்.

தீபாவின் பின்னூட்டம்:
‘வணக்கம் அம்மா,
வலைப்பதிவுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
நீங்க ஸ்கூல்லே படிச்ச காலத்திலே நோட்டுபுத்தகத்திலே கிறுக்கினதை இனிமேல் வலைப்பதிவுகள் மூலமாக பதியுங்கள்.. இது கிழியாது,செதிலரிக்காது..எப்பவுமே பர்மனெண்ட்..

வாழ்த்துக்கள்
மேலும் மேலும் பதியுங்கள்
தீபா கோவிந்த்
July 14, 2009 9:07 PM’

தீபா சொன்னது போல் படித்ததை, நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கி வைத்ததை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

வலைஉலகம் பெரிய கடல் அதில் துளிதான் நான் கற்றுக் கொண்டது. தினம் அதில் கற்க வேண்டியது நிறைய உள்ளது.”கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” என்பது போல் நான் கற்றுக் கொண்ட வலைக் கல்வி ஒருகைப் பிடி அளவு கூட இல்லை. எத்தனை திறமைகள் ஒவ்வொருவரிடமும்! எல்லோரும் நன்கு எழுதுகிறார்கள்.

அந்த காலத்தில் தாங்கள் எழுதிய கதை, கட்டுரை கவிதைகளை பத்திரிக்கையில் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள் ! இப்போது அப்படியில்லை. நமக்கு என்று ஒரு தளம் நம் எண்ணங்களை ,அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. உடனுக்கு உடன் அதற்கு விமர்சனமும் கிடைக்கிறது. பத்திரிக்கையில் எழுதினால் அடுத்தவாரம் தான் வாசகர் கடித்தில் காணமுடியும். வாழ்க்கையில் நம்மாலும் எழுத முடியும் என்ற நினைப்பே மனதுக்கு உற்சாகத்தையும், தெம்பையும் தருகிறது. பத்திரிக்கைகளும் நம்மை வரவேற்கின்றன. என்னுடைய மார்கழிக் கோலங்கள் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்றது, போன மார்கழியில். தேவதையில் ’குருந்தமலை குமரன்’ என்ற என் ஆன்மிகப் பதிவும், ’தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்’ என்ற பதிவிலிருந்து ஒரு சிறு பகுதியும், ’எண்ணம் முழுதும் கண்ணன் தானே’ என்று என் பேரனைப் ப்ற்றி எழுதிய பதிவிலிருந்து ஒரு சிறு பகுதியும் வெளி வந்தன. நம் எழுத்தை பத்திரிக்கையில் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இதுவரை 82 போஸ்ட்கள் எழுதி இருக்கிறேன். அவற்றில் சில:

குழந்தைகள் உடல் நலத்திற்கு விளையாட்டு மிக அவசியம் என்று சொல்லும்” ஓடி விளையாடு பாப்பா

சாலை பாதுகாப்பு தொடர் பதிவில் ”வேகம் விவேகம் அல்ல” சாலை பாதுகாப்பு சட்டத்தை மதித்து நடக்க வலியுறுத்தும் பதிவு.

வாழ்க்கை வாழ்வதற்கே!’ காதல்,கடவுள்,அழகு பணம் ஒன்றோடு ஒன்று தொடர் உடையதைப் ப்ற்றி எழுதியது.

பேரக்குழந்தையின் குறும்புகள்

சர்வதேச முதியோர் நாளுக்காக ”முதியோர் நாள்

ஆன்மீகப் பயணத் தொடர்கட்டுரையில் திருக்கயிலைப் பயணக் கட்டுரை எழுதியது எல்லாம் மனதுக்கு நிறைவு தந்தது.

எனக்கு வாய்ப்பு அளித்த திரு. சீனா அவர்களுக்கும், என்னைப் பரிந்துரைத்த
திரு. வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களுக்கும், என் குடும்பத்தார்களுக்கும், என பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து பின்னூட்டங்களால் என்னை ஊக்கப்ப்டுத்தினவர்களுக்கும், வலைச்சரத்தில் படிக்க வரும் புதிய அன்பர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன்.

கடல் போன்ற பதிவுலகத்தில் கரையோரமாய்க் கால் நனைத்துப் படித்துச் சுவைத்த என் நினைவில் உள்ள பதிவுகளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

தொடர்ந்து வந்து ஆதரவு தருவீர்கள் தானே!
மேலும் வாசிக்க...

Sunday, January 1, 2012

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வைரை சதீஷ் தான் ஏற்ற பொறுப்பினை அதிக ஈடுபாட்டுடன் நிறைவேற்றி நான்கு பதிவுகள் இட்டு ஏறத்தாழ ஐம்பத்து ஐந்து மறுமொழிகள் பெற்று, முப்பத்து மூன்று பதிவர்களின், தன்னுடைய பத்து பதிவுகள் உள்ளிட்ட, ஐம்பத்து நான்கு பதிவுகளையும் அறிமுகப்படுத்தி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். இவர் தானே புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழையினால் உடல் நலமின்றி மூன்று நாட்கள் இணையத்தின் பக்கம் வர இயலாமையினால் குறைந்த பதிவுகளே இட முடிந்ததென வருத்தத்தோடு கூறினார். இவர் நம்மிடமிருந்து இன்று விடை பெறுகிறார்.

இவரைப்பாராட்டி, சென்று வருக ! என வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்க அன்புடன் இசைந்துள்ள திருமதி கோமதி அரசு அவர்கள் பாளையங்கோட்டையைச் சார்ந்தவர். சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து யோகா ஆசிரியையாகச் சேவை செய்கிறார். கணவர் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர்.

திருமதி கோமதி அரசு அவர்கள் திருமதி பக்கங்கள் என்ற வலைத் தளத்தில் எழுதி வருகிறார். இவரை வருக வருக ! என நல்வாழ்த்து கூறி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் வைரை சதீஷ்

நல்வாழ்த்துகள் திருமதி கோமதி அரசு

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது