தந்தைமை (FATHERHOOD)
நமது தற்போதைய வாழ்க்கை முறை பெருமளவில் மாறி விட்டது. அதிக நேரத்தை தொழிலிலும், வேலையிலும் செலவிட வேண்டிய தேவை பல ஆண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிள்ளைகளுடன் நாம் தொடர்பு கொள்வதற்கான நேரம் மிகவும் குறைந்துள்ளது. எனவே பிள்ளைகள் வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பின் அவசியம் பற்றி எழும் கேள்விகள் நமக்கும் உரிய கேள்விகளாகின்றன.
தாய்மை என்ற சொல்லை நாம் அடிக்கடி கேட்கின்றோம். அது மிகவும் பெருமைப்படுத்தப்படுவதும் நாம் அறிந்த ஒன்று. ஆனால் தந்தைமை என்ற சொல்லை நாம் கேள்விப்பட்டிகுக்கிறோமா என்றால் அதிகம் இல்லை என்றே பதில் கூற வேண்டும். குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ப்பில் தந்தைக்குரிய பங்கு பற்றி நாம் ஏன் அதிகம் சிறப்பித்துப் பேசுவதில்லை ? பிள்ளை வளர்ப்பில் தந்தைக்கு பெரிய பங்கு எதுவும் இல்லையா?
உலகின் பெரும்பான்மையான நாடுகளில் பிள்ளைகளைப் பொறுத்தவரையில் தந்தையின் பங்களிப்பு குறைந்ததாகவே உள்ளது. இதற்கு தந்தை குடும்பத்திற்காக உழைக்கும் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதே காரணமாக இருக்கலாம். முந்தைய காலத்தில் பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதால் அவர்களே பிள்ளைகளுக்கு பாலூட்டி, தாலாட்டி, அரவணைத்து வளர்ப்பதுடன் வளர வளர அவர்களது சக தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றும் பொறுப்பையும் செய்து வந்தனர். இதனால் பிள்ளைகளுக்கு தந்தையைவிட தாயிடம் அதிக நெருக்கம் ஏற்பட்டது.
பிள்ளைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கைக் கூற தமிழில் இரண்டு பழமொழிகள் உள்ளன. "தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை" என்பது ஒன்று. பிள்ளைகள் தந்தை கூறுவதைக் கேட்டு நடந்தாலே நல்ல முறையில் வளர்வார்கள் என்ற கருத்து முன்னர் இருந்தது. பிள்ளைகள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகளை தீர்த்து வழிகாட்டுபவர் தந்தையே. எனவே அவரின் வார்த்தைகள் பிள்ளைகளுக்கு மந்திரம் போன்றவை என்ற கருத்தினாலேயே இந்த பழமொழி தோன்றியிருக்க வேண்டும்.
"தந்தையுடன் கல்வி போகும்" என்பது மற்றொரு பழமொழி. அதாவது தந்தையின் மறைவுடன் பிள்ளைகளின் கல்விக்கு வழிகாட்டுதல் போய்விடும் என்பதே இதன் அடிப்படைக் கருத்து. பண்டைய நாட்களில் பெண் கல்வி என்பது அதிகம் இல்லாத காரணத்தால் இந்தப் பழமொழி தோன்றியுள்ளது. இன்று நிலைமை பெருமளவில் மாறி பெண்கள் பல துறைகளில் கல்வி கற்றிருந்த போதும் குடும்பத்தை நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு இருப்பதால், தந்தையிடமே கல்விக்கு வழிகாட்டல் என்ற பொறுப்பு இன்றும் உள்ளது. பிள்ளைகளின் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப உரிய முறையில் வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தந்தைக்கு உள்ளது.
கல்வியில் மட்டுமல்ல, தந்தை என்ற முறையில் பிள்ளைகளின் வாழ்வில் பல வழிகளில் பங்கு கொள்ள வேண்டிய தேவை தந்தைக்கு உள்ளது. வேலையில் அதிக நேரத்தைக் கழிப்பதால் பிள்ளைகளின் வாழ்வில் தந்தை அதிகம் பங்களிப்பதில்லை. அதனால் சரியான உதாரணப்புருஷன் (Role Model ) இல்லாததால் பிள்ளைகள் பாதை மாறிப் போகிறார்கள். பிள்ளைகள் தந்தையிடமிருந்து புரிந்துணர்வை அன்பை எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் செய்ய வேண்டிய வேளைகளில் தந்தைமை (FATHERWOOD) நிலையே முக்கியமானது. தாய் பிள்ளை உறவு நீண்ட காலமாக கூறப்பட்டு வந்துள்ளது. தந்தையாக இருக்கும் நிலை கூறப்படுவது சமீபகாலத்திற்குரியது.
வளரிளமைப் பருவ (Adolescent) பிரச்சனைகளான பள்ளிப் படிப்பில் பின் தங்குதல், மன ஆரோக்கியம் குன்றுதல், தாழ்வுணர்ச்சி ஏற்படுதல், பிறருடன் பழகுவதில் தயக்கம், குற்றம் புரிதல் போன்றவற்றிற்கு தந்தை அருகில் இருந்தும் பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுவதில்லை என்பதையே காட்டுகிறது. பிள்ளைகளுடனான உறவின் இயல்பைப் புரிந்து அவர்களின் பிரச்சனையை உணர்வு பூர்வமாக அணுகுவதே இதற்குத் தீர்வாகும் பொதுவாக தந்தை பிள்ளைகளோடு தினசரி மிகக்குறைந்த அளவு நேரத்தையே செலவழிக்கின்றனர். இது அதிகரிக்கப்பட வேண்டும். பிள்ளைகளுடன் நேரத்தை கழிப்பதற்கு நிறைய திட்டமிடல் அவசியமாகிறது. வாரத்தில் ஓரிரு நாட்கள் பிள்ளைகளுடன் கழிக்க சில மணி நேரம் ஒதுக்க நாம் பழக வேண்டும்.
ஒருவர் எவ்வாறு சிறந்த தந்தையாக இருக்க முயற்சிக்கலாம்? தொழில் சார்ந்த விஷயங்களுக்கு நெரம் ஒதுக்குவது போல பிள்ளைகளுடன் கழிக்கும் நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஏதாவது தவறு செய்தால் தவற்றை ஒத்துக் கொள்வதுடன் அதற்காக மனம் வருந்துவதாக கூறத் தயங்கக் கூடாது. பிள்ளைகளின் பாடப்புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதன் மூலம் பிள்ளைகளுடன் பேசுவதற்கு விஷயம் இல்லாமல் தடுமாற வேண்டிய அவசியம் இருக்காது. பிள்ளைகளுக்கு கதை சொல்வது தந்தையின் முக்கிய கடமைகளில் ஒன்று.
பிள்ளைகளுக்கு கதை கூறும் நேரத்தில் நமது சிறிய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கூற வேண்டும். அவ்வாறு கூறுவதன் மூலம் தமது குடும்ப வரலாறு, பெருமைகள் வாழ்க்கைச் சூழல், பண்பாடு ஆகியன பற்றிய விஷயங்களை பிள்ளைகள் அறியும் படி செய்யலாம். இது பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை அளிப்பதுடன் தாங்கள் எதிர் காலத்தில் செய்ய வேண்டிய முடிவுகள் அவற்றின் விளைவுகள் பற்றி சிந்தித்து உணர்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.
சிறு வயதில் அளிக்கப்படும் தந்தையின் அணைப்பும் ஆதரவான வார்த்தைகளும் ஏற்படுத்தும் தாக்கம் பிள்ளைகளின் வாழ்நாள் வரை நினைவு கூறத்தக்கது. சிறுவயதில் இவ்வாறான அன்பான வளர்ப்பையும் உணர்வு பூர்வமான ஆதரவையும் பெறாவிட்டால் பிற்காலத்தில் பிள்ளைகளிடமிருந்து தந்தையும் அதை எதிர்பார்க்க முடியாது. பிள்ளைகள் உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படும் போது வெளிப்படையாக அழவும், அதனை நம்மிடம் சொல்லவும் தைரியம் கொண்டவர்களாக வளர்வதில் தந்தையின் அன்பான வளர்ப்பு முறை முக்கியப் பங்கு வகிக்கிறது.
தந்தை பிள்ளைகளுடன் திறந்த மனத்துடனும், அன்புடனும், மென்மையுடனும் பழக வேண்டும். மகன், மகள் இருவரையும் ஒரேமாதிரியான பிரியத்துடன் நடத்துவதும் பிள்ளைகளின் சந்தேகங்களை, துயரங்களை எப்போதும் கேட்கத் தயாராகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்ச்சி மாற்றங்களைப் புரிந்து கொண்டு தந்தை தனது அனுபவங்களை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தையும், சுயமாக முடிவெடுக்கும் திறனையும் ஏற்படுத்த இயலும், நட்பும், ஆதரவும் சரியான வழிகாட்டுதலும் அளிக்கும் தந்தையாக இருக்க முயற்சிக்க வேண்டும்.
ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நடந்து கொண்டார் என்பது, அப்பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்கள் எவ்வாறு தனது தந்தையிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே உணர இயலும்.
நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்.
20 ஜுன் தந்தையர் தினம்
- ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்
|
|
தாய்மை பற்றி எல்லோரும் எழுதி இருக்காங்க. "தந்தைமை" தலைப்பே சுவாரசியமா இருக்கு. படிச்சிட்டு வர்றேன்
ReplyDeleteஎனவே பிள்ளைகள் வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பின் அவசியம் பற்றி எழும் கேள்விகள் நமக்கும் உரிய கேள்விகளாகின்றன.
ReplyDeleteபெரும்பாலும் தந்தையின் பங்கு "Financial Supporter or Bread Winner" என்ற அளவுக்குத்தான் இன்றைய சூழ்நிலை இருக்கிறது
தந்தை பிள்ளைக்காக படும் கஷ்டத்தை தாய் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போது "Financial Supporter or Bread Winner" என்ற நிலை மாறும். புரிதல் ஏற்படும். அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete"தந்தைமை" தலைப்பே சுவாரசியமா இருக்கு. \
ReplyDeleteநானும் சொல்லிகிறேன்.
\\நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள். \\
நல்ல சொல்.
\\வேலையில் அதிக நேரத்தைக் கழிப்பதால் பிள்ளைகளின் வாழ்வில் தந்தை அதிகம் பங்களிப்பதில்லை. அதனால் சரியான உதாரணப்புருஷன் (Role Model ) இல்லாததால் பிள்ளைகள் பாதை மாறிப் போகிறார்கள். பிள்ளைகள் தந்தையிடமிருந்து புரிந்துணர்வை அன்பை எதிர்பார்க்கிறார்கள்\\
கவணமாக கவணிக்க வேண்டிய விடயம்.
விரிவான அலசல். நீங்கள் ஒரு சிறந்த தந்தை என்பதயும் நிரூபிக்கிறது.
ReplyDeleteபொருளாதார ஏற்றத்தாழ்வு நிறைந்த இவ்வுலகில் எல்லோரையும் பிரிந்து பொருள் தேட நாடு கடத்தப்பட்டவர்கள் இவையனைத்துக்கும் விதிவிலக்கு எனபதும் உண்மை.
உன் தந்தை சொன்னது சரி என்று நீ உணரும்போது...நீ சொல்வது தவறு என்று கூறும் மகன் வருவான்..........
ReplyDeleteயாரோ சொன்னது....
//நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்.//
ReplyDeleteரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க வாசுதேவன்...
This comment has been removed by the author.
ReplyDeleteவாசு சார் உங்கள் தளத்திலும் படித்தேன். இக்கட்டுரை நிரைய பேரிடம் சென்றடையுனும். உயிர்மைக்கு அனுப்புங்கள்.
ReplyDeleteகட்சீ பாரால அட்சீ தூள் கெளப்பீட்டீங்க. சூப்பர் :)))
ReplyDeleteநல்ல கட்டுரை... தந்தை ஒரு நல்ல கதை சொல்லியாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பேசுவதற்கு விஷயம் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
ReplyDeleteமுன்பாவது பெண்கள் வீட்டிலிருந்தார்கள். குழந்தைகளை கவனித்துக் கொண்டார்கள். சமீப காலங்களில் கணவன் மனைவி இருவரும் பொருளீட்ட வேலைக்கு சென்று வாரிசுகளை தான்போக்கில் விடுவது அதிகம் நடக்கிறது.
நேர்த்தியான கட்டுரை அகநாழிகை. தொடருங்கள்.
நல்ல கருத்துகள் நிறைந்த அருமையான பதிவு!
ReplyDeleteஅப்படியே இன்னொரு விஷயத்தையும் சேர்த்துக்கோங்களேன் :)என் வேண்டுகோள்!
தந்தை, தாயுடன் சேர்ந்துகு ழந்தை வெளியில் செல்லும் போது இன்னும் நிறைய கற்றுக்கொள்ளலாம்... அதோடு தன் பெற்றோருடன் வெளியில் செல்வது என்பது குழந்தைக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும்!
பல கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் என அவர்களின் உலகம் வெளியில் செல்லும் போது தான் விரிவாகிறது!
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான கருத்துப் பரிமாற்றங்கள். தந்தைகளின் பங்கை இங்கே நல்ல முறையிலும் அருமையாகவும் விளக்கிச் சொல்லி இருக்கீங்க.
தேவையான நேரத்தில் தேவையான உங்கள் இந்த இடுகை எல்லாருக்கும் மனதில் ஒரு நிறைவைத் தரும் என்று நினைக்கின்றேன்.
//
ReplyDeleteவேலையில் அதிக நேரத்தைக் கழிப்பதால் பிள்ளைகளின் வாழ்வில் தந்தை அதிகம் பங்களிப்பதில்லை. அதனால் சரியான உதாரணப்புருஷன் (Role Model ) இல்லாததால் பிள்ளைகள் பாதை மாறிப் போகிறார்கள். பிள்ளைகள் தந்தையிடமிருந்து புரிந்துணர்வை அன்பை எதிர்பார்க்கிறார்கள்
//
வேலைபளுக்கள் இருந்த போதிலும் தந்தைமார்கள் தனது முக்கிய கடமையான பெற்றோர்களை கவனித்தல், மனைவியை கவனித்தல் எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின் படிப்பிலும் அன்றாட நடை முறைகளிலும் தனது கவனத்தை செலுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாக என் மனதிற்கு படுகின்றது.
அப்போதுதான் குழந்தைகளை சரியான பாதைகளில் கொண்டு செல்ல முடியும்.
அருமையான சபாஷ் போட வைக்கும் பதிவு என்றால் அது மிகையாகாது!
ReplyDelete