நம்மை, நம் ஆன்மாவை அறிந்து கொள்ள
விழையும் பயணம்தான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பதும், மதம் என்பதும் இரு வேறு விஷயங்கள்.
நம் ஆன்மாவை நமக்குக் காட்டும் வழியைக் காண்பிப்பதுன்னு வேணும்னா மதத்தைச் சொல்லலாம்.
வழிகள் வேற வேறன்னாலும் எல்லாரும் போய்ச் சேருகிற இடம் ஒண்ணுதான்.
இப்பேற்பட்ட உயர்ந்த விஷயத்தைப்
பற்றி, அதன் தொடர்பான அனுபவங்கள் பற்றி, எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. அதில் சிலரைப்
பார்க்கலாம்…
முதலில் கைலாஷி அவர்கள். இவர் சேகரித்துப் பகிர்ந்து
கொள்ளும், பலப்பல திருத்தலங்களின், பல்வேறு அலங்காரங்களுடனான பலப் பல உற்சவ மூர்த்திகளின்,
படங்களுக்கு அளவே இல்லை. நாம ஒரு தரம் போறதுக்கே அவனருள் வேணும் என்கிற திருக்கயிலாயத்துக்கு
இவர் சில முறைகள் போயிருக்கார். அற்புதமான திருக்கயிலாய புகைப்படங்களோடான பதிவை நீங்களும் பாருங்களேன்!
‘ஆலோசனை’ அப்படிங்கிற பெயரில்
பார்வதி
ராமச்சந்திரன்
பல பயனுள்ள ஆன்மீகப் பதிவுகளை தந்துக்கிட்டிருக்காங்க. கொலு வெக்கிறது எப்படி, இன்னின்ன
விரதங்களை எப்படி யெப்படி இருக்கணும், ஒவ்வொரு பண்டிகையும் குறித்துத் தெரிஞ்சுக்க
வேண்டிய விஷயங்கள், இப்படி எக்கச்சக்கமான உபயோகமான செய்திகளை அழகா தொகுத்து தர்றாங்க.
அவங்க வலைப்பூ 100-வது பதிவை எட்டியிருக்கும் இந்த
சமயத்தில் நீங்களும் போய் வாழ்த்தினால் சந்தோஷப்படுவாங்க! ஆன்மீகம் மட்டுமின்றி இவங்க
கதை, கவிதைகளிலும் கலக்கறாங்க.
மிக அழகான ரசனையுடன் இறைப் பாடல்களைத்
ரசித்துப் பகிர்பவர் ஜீவா. பாடல்கள் மட்டுமில்லாம, மிகுந்த
மனப் பக்குவத்துடன், தெளிவுடன் இவர் எழுதுகிற ஆன்மீகப் பதிவுகள் மனதைக் கவர்ந்து இழுக்கும்.
கவிதைகளும் நிறைய எழுதியிருக்கிறார். சுவாமி விவேகானந்தர் எழுதிய ஒரு கவிதையை இவர் மொழியாக்கம்
செய்திருக்கும் அழகை நீங்களும் ரசியுங்களேன்!
‘உம்மாச்சி காப்பாத்து’ அப்படிங்கிற
பெயரில் பல நல்ல தகவல்ளோடு, கதைகளோடு, சின்னச் சின்ன அழகான ஸ்லோகங்களை அமிர்தமான தமிழில்
விளக்கிச் சொல்லித் தர்றவர், தக்குடு. இவர் சொல்லித் தந்த குருவின் மீதான ஸ்லோகம் இங்கே. இப்ப கொஞ்ச நாளா ரொம்ப
பிசியாயிட்டார் போல. ஆளைக் காணும்!
நடராஜ
தீக்ஷிதர் அவர்கள் முக்கியமான பண்டிகைகள், விரதங்கள், இவைகளைப்
பற்றி, எப்போது, எப்படி, போன்ற பல விவரங்களைத் தருகிறார். அதோடு மட்டுமின்றி, விபூதியின் பெருமை போன்ற அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்களையும் பதிவாக்கித் தருகிறார்.
சித்தர்களைப் பற்றிச் சொல்லி,
சித்தர் பாடல்களையும் அழகாகத் தொகுத்துத் தந்துகிட்டிருந்த தேவன் அவர்களை ரொம்ப நாளா காணும்.
மஹா அவதார் பாபாஜி அவர்களைப் பற்றியும் இவர் எழுதி
இருக்கார்.
ஆன்மீகம்னா என்ன அப்படின்னு இந்தக்
கால இளைஞர்களுக்குப் புரியும்படி எளிமையான ஆங்கிலத்தில் இங்கே சொல்பவர், திவாஜி அவர்கள். ஏனோ இப்ப ரொம்ப நாளாத்
தொடரக் காணும். தொடருங்களேன், திவாஜி!
கூடல் குமரனைப் பற்றித் தெரியாதவங்க குறைவு.
சமஸ்கிருத அறிவும், தமிழறிவும் நிறைந்த சௌராஷ்டிரர்! ஸ்தோத்திரமாலா அப்படிங்கிற வலைப்
பூவில், சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு தனக்கே உரிய எளிமையான நடையில் எல்லோருக்கும் புரியும்படி
பொருள் தருகிறார். இவரின் பஜகோவிந்தம் பொருள் விளக்கம் இதற்கு நல்ல
உதாரணம்.
பல ஆலய வரலாறுகளையும், தல புராணங்களையும்,
புராணக் கதைகளையும், மனதைச் சுண்டி இழுக்கும் அற்புதமான வண்ணப் படங்களோடு பகிர்பவர்,
இராஜராஜேஸ்வரி அம்மா. இவருடைய ஸ்ரீ அபய ஆஞ்சநேயரைக்
கண்டு நீங்களும் அருள் பெறுங்கள்.
பக்தி ரசம் சொட்டச் சொட்ட இனிய
தமிழில் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல் புனைகின்ற ஆற்றல் பெற்றவர், லலிதாம்மா. சாயி இருக்க பயமேன்? என்னும் பாடலை நீங்களும் பாடி
மகிழுங்கள்.
கவிதைப் பக்கத்தில் குறிப்பிட்ட
சிவகுமாரன் அவர்கள்தான், அருட்கவி. பெயருக்குத் தகுந்தாற் போல்
இவருக்கு பக்திப் பாடல்கள் அருவியெனக் கொட்டுவது இறையருளால்தான் என்பதில் சந்தேகமில்லை.
உதாரணம், இவர் சிவபெருமானைப் போற்றிப் பாடியிருக்கும், தாயுமானவா. எழுதுவது மட்டுமின்றி பல சமயங்களில்
ஒலி வடிவையும் சேர்த்துத் தருவது சிறப்பு.
என்னைப் பிரமிக்க வைக்கிற இன்னொரு
எழுத்தாளர், சுந்தர்ஜி பிரகாஷ். இவரோட வாசிப்பனுபவத்தின், எழுத்தனுபவத்தின்
நீள அகலம், மற்றும் ஆழத்தை, சிந்தனையின் தெளிவை, கற்பனை செய்து பார்க்கும் திறன் கூட
எனக்கு இல்லை. எந்த விஷயத்தை அவர் எடுத்தாண்டாலும், கதையோ, கவிதையோ, கட்டுரையோ, ஆன்மீகமோ, இலக்கியமோ, இசையோ, இதனை உள்ளங்கை
நெல்லி போல உணரலாம்.
ரொம்ப நாளா எழுதாம இருக்கிற பதிவர்களில் அம்பாள் உபாசகரான மதுரையம்பதி என்கிற மௌலியும் ஒருத்தர். சௌந்தர்ய லஹரி இவருடைய மிகச் சிறந்த (நிறைவடைந்த) வலைப்பூக்களில் ஒண்ணு. பக்தி என்றால் எப்படி இருக்கணும் அப்படின்னு அவர் சொல்ற இந்தப் பதிவு எனக்குப் பிடித்த பதிவு!
கீதாம்மான்னா ஆன்மீகம், ஆன்மீகம்னா கீதாம்மா என்பது எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்ததால் குறிப்பிடலை! ஆனா இப்ப அப்பாதுரையின் பின்னூட்டம் பார்த்ததும் எதுக்கு அந்தக் குறையும், அப்படின்னு... :) ஆன்மீக பயணம் அப்படிங்கிற வலைப்பூவில் நம்ம கீதம்மா கோவில்கள் பற்றியும் அவற்றின் தல வரலாறு, தொடர்புடைய புராணக் கதைகள் பற்றியும் விவரமா பகிர்ந்துக்கறாங்க!
மாதவி பந்தல் போட்டிருக்கும் கேயாரெஸ்ஸையும் எல்லோருக்கும் தெரியும். அப்படின்னு நினைச்சு முதலில் சேர்க்காம இருந்த அவரையும் இப்போ சேர்த்துடறேன் :) கலகலப்பா அட்டகாசமா மருந்தை தேனில் குழைச்சு தராப்ல ஆன்மீகத்தை எல்லோருமே ஆனந்தமா வாசிக்கிற அளவிற்கு தர்றவர். இவர் நாத்திகராய் இருந்து ஆத்திகராய் மாறினது பற்றி இங்கே சொல்றார், கேளுங்க! இவரும் பரம முருக பக்தர். ரொம்ப நாளா எழுதாம இருந்துட்டு இப்போதான் மறுபடி வந்திருக்கார். அவரைத் தொடர்ந்து எழுதச் சொல்லி அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு 'ஓ' போடுங்க பார்க்கலாம்!
சித்தர்கள் பற்றி எழுதுகிற தோழி பற்றி கீதாம்மா சொன்னாங்க. அவங்களை ஏற்கனவே 5500-க்கு மேலான நண்பர்கள் பின் தொடர்றாங்க. அதனாலதான் முதலில் குறிப்பிடலை! :) அவங்க சித்தர்கள், சித்தர்களின் மருத்துவம், இப்படி சித்தர்கள் தொடர்பான பலவற்றையும் எழுதிக்கிட்டு வர்றாங்க. எடுத்துக்காட்டா, புலிப்பாணி சித்தர் அருளிய விஷக்கடி வைத்தியம்...
இங்கே சொல்லியிருக்கிற பலரும்
ஆன்மீகம் மட்டுமே எழுதறதில்லை. எல்லாமே எழுதறாங்க. இருந்தாலும் அவர்களோட ஆன்மீகப் பதிவுகளை
வெச்சு இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
என்னங்க, இது வரை சொன்ன பதிவுகள்ல,
ஒரே ஒருத்தரையாச்சும் உங்களுக்குத் தெரியாதவங்களைச் சொல்லி இருக்கேனா? :) கீதாம்மா, தனபாலன், இந்தக் கேள்வி
உங்களுக்கில்லை! :P
அன்புடன்
கவிநயா
மேலும் வாசிக்க...
சமையல்னாலே எல்லோருக்குமே பிடிக்கும்!
அதாவது சிலருக்கு சமையல் செய்யப்
பிடிக்கும்; சிலருக்கு செய்த சமையலைச் சாப்பிடப் பிடிக்கும்! ஆக மொத்தம் சமையல்னா எல்லாருக்குமே
பிடிக்குது தானே?
என்னைப் பொறுத்த வரை சமையல் செய்யறதை
விட, “இன்னிக்கு என்ன சமைக்கிறது?” என்கிற கேள்விக்குப் பதில் சொல்லி, அதைத் திட்டமிடறதுதான்
ரொம்பவே கஷ்டமான வேலைங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யறதுக்குன்னே நிறைய சமையல்
அரசிகளும், அரசர்களும், வலையுலகில் ஆட்சி செய்துக்கிட்டிருக்காங்க! அவங்களுடைய பணிக்கு
என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!
கீதா
ஆச்சல் அவர்களின்
சமையல் அறையில சமைக்கப் படாத உணவே இல்லைன்னு சொல்லலாம். ஒவ்வொரு படிக்குமான படங்களோட,
அளவுகளோட, இவர் சமையல் முறைகளைச் சொல்ற விதமே என்னை ‘சமைச்சுப் பாரேன்’னு சொல்லும்!
நீங்களும் இவரோட திராமிசுவைச் செய்து பாருங்க.
சின்னு
ரேஸ்ரி, இவருடைய
ஒவ்வொரு சமையல் குறிப்பும் வெறுமன வெட்டி, அடுப்பில் ஏற்றி, இறக்குகிற பதிவா இருக்காது!
இவர் சொல்ல வந்ததைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், ஆரோக்கியத் தகவல்கள், ஆதார பூர்வத்
தகவல்கள், அழகிய படங்கள், எல்லாம் தந்து, அதுக்கப்புறம் தான் சமையல் குறிப்பே சொல்லி
இருப்பார். உதாரணத்துக்கு, இவரோட வெங்காயத் தாள் பற்றிய சமையல் குறிப்பு.
விவரமான குறிப்புகளோடு, தெளிவான
படங்களோடு, இன்னும் கொஞ்சம் என்று சாப்பிடத் தூண்டற வகையில் நிறைய சமையல் குறிப்புகளை
தர்றவங்க, ஜலீலா கமால். இவங்களோட மாங்காய் ராஜ்மா சாலடைப் பார்த்தாலே சாப்பிட ஆசையா இருக்கில்ல?
தேனம்மை
இலக்ஷ்மணன்,
இவங்களைத் தெரியாதவங்க குறைவாதான் இருப்பாங்க. எழுத்துலகில் அசத்தற இவங்க, சமையல் குறிப்புகளும்
எழுதறாங்க. இவங்க, சமையல் குறிப்புகளை ஆங்கிலம், தமிழ், இரண்டிலும் தர்ற விதம் நல்லாருக்கு!
இவங்களோட சிக்கன் துக்கடாவை நீங்களும் உங்க குழந்தைங்களுக்குச்
செய்து கொடுங்களேன்…
கீதாம்மா ஆன்மீகம் எழுதுவாங்க, நகைச்சுவையான
நிகழ்வுகளும், பயனுள்ள சமூகச் சிந்தனையுடனான பதிவுகளும் எழுதுவாங்க, ஆனா அவங்க சமையல்
குறிப்பும் எழுதறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? பல பாரம்பரிய சமையல் குறிப்புகளை, பண்டிகைகளுக்கு என்னென்ன செய்யணும்,
அப்படிங்கிற குறிப்புகளை எல்லாம் இளைய தலைமுறைக்கு இனிமையா சொல்லித் தருவாங்க, நம்ம
‘பாப்பா’வாகிய கீதாம்மா :)
இப்போதான் அடுப்படிக்கு அறிமுகமானவர்களுக்காக,
ஜி.எம்.பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள், தன் மனைவியின் துணையோட ‘பூவையின் எண்ணங்கள்’ அப்படிங்கிற வலைப்பூ
ஆரம்பிச்சிருக்கார். இவர் சொல்லித் தர்ற படி
சன்னா பட்டூரா செய்து பாருங்களேன்…
சமையல்னாலே செட்டி நாடு சமையல்தாங்க.
அவங்க சமையல்ல பல வித்தியாசமான பண்டங்கள் இருக்கும்; தனி ருசியோட இருக்கும். இதெல்லாம்
பற்றி நமக்குச் சொல்லித் தர்றவர் (தந்தவர்? – ரொம்ப நாளா சமைக்கலை போல இவரு!), சதங்கா. செட்டி நாட்டுக்கே உரிய வாழைப்பூ வடையை இவர் சொல்ற மாதிரி செய்து பாருங்க!
சமையல் செய்ய ஆரம்பிச்சு ரெண்டு
வருஷம்தான் ஆகுதுன்னு இவர் சொன்னாலும் (2010-க்குப் பிறகு இவரும் சமைக்கலை போல…), அம்முவோட பதிவுகள்லாம் பழுத்த அனுபவஸ்தரோட
குறிப்புகள் மாதிரிதான் இருக்கு. அம்முவோட அமுங்காத பூரியை நீங்களும் செய்து பாருங்க!
அன்புடன்
கவிநயா
மேலும் வாசிக்க...
கதை எழுதறது சுலபமில்லைன்னு நேத்து
சொன்னேன்… கவிதை எழுதறது மட்டும் சுலபமா என்ன? கவிதையில் பலப் பல வகைகள் உண்டு. மரபுக்
கவிதைகள் உண்டு; புதுக் கவிதையிலேயே புதுப் புதுக் கவிதைகள் உண்டு; பாடல்கள் உண்டு…
கவிதைன்னா என்னன்னு பேச ஆரம்பிச்சா அதுவே பெரிய விவாதச் சரமாயிடும்!
கதை, கட்டுரை, இப்படி எது நல்லா
எழுதறவங்களைப் பார்த்தாலும் எனக்கு பொறாமையெல்லாம் வர்றதில்லை. ஆனா கவிதை நல்லா எழுதறவங்களைப்
பார்த்தா கொஞ்சூண்டு பொறாமை வந்துடும்! அது ஏன்னே தெரியலைங்க!
சரி… சுயபுராணத்தை நிறுத்திட்டு,
நான் ரசிச்ச கவிதைகளை, கவிஞர்களைப் பற்றி பார்ப்போம் :)
தமிழின் அழகு மரபுக் கவிதைகளில்
இருக்கு. இலக்கணப்படி ஒரு கவிதை அல்லது பாடலாவது எழுதிப் பாருங்க, எதுகையும் மோனையும்
சந்தமும் பொருளும் தானா வந்து அழகா உக்காந்துக்கும். இந்த மாதிரி பாடல்களை பாடணும்
கூட அவசியம் இல்லை. வாசிக்கவே சுகமா இருக்கும். எதனால இப்படியெல்லாம் இலக்கணம் வகுத்து
வெச்சிருக்காங்கன்னு அப்பதான் புரியும். வெண்பா எழுதறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா எதுவுமே
பயிற்சியில் வந்துடும். ஆசிரியப்பா மாதிரியான சுலபமான பா வகைகளையாவது கவிஞர்கள் தயவு
செய்து முயற்சி செய்து பார்க்கணும்.
இப்பவும் இப்படித் தமிழ் மரபைக்
காப்பாத்திக்கிட்டிருக்க பதிவர்களில் ஒருவர், தங்கமணி
அம்மா. சிவன் மீதான பக்திப் பாடல்கள் நிறைய எழுதியிருக்கார்.
ஒவ்வொன்றும் தனிச் சுவை. வாசிக்க தனிச் சுகம். ‘என் பணி அரன் துதி’ என்ற புத்தகத்தையும்
வெளியிட்டுள்ளார். (நன்றி: கீதாம்மா)
இலக்கணத்தோடு கவிதை எழுதுகிற
இன்னொருத்தரும் இருக்கார். தமிழுக்கே உரித்தான வெண்பாக்களை எழுதுகிற திகழ், தமிழை, கவிதைகளை, மிகவும் காதலிக்கும்
ஒருவர். இவரோட வெண்பா வனத்தில் தமிழோட பக்தியும் மிளிரும்.
பூச்சரம் என்கிற வலைப்பூவுக்குச்
சொந்தக் காரரான பூங்குழலி, ஒரு மருத்துவர். இவரோட மருத்துவ
அனுபவங்களையும், மெல்லிய உணர்வுகளை இதமான கவிதைகளாக்கியும் வலைப்பூவில் பகிர்ந்துக்கிறார்.
மழையும் இவரும் நல்ல தோழிகள் என்பது
இந்தக் கவிதையின் மூலம் விளங்கும்…
திரு.ரமணி அவர்களின் தெளிவான சிந்தனையும்,
மனிதாபமானம் மிக்க உணர்வுகளும், நேர்மையும், இவர் படைப்புகளில் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
பழநிமுருகனும் நானும் என்கிற கவிதையில் தெரிஞ்சிடும்,
இவரின் இருப்பு.
எளிமையான கவிதைகளாலும், கட்டுரைகளாலும்
வருடுகிறாற் போல் நம் மனதை உழுது விடும் உழவன், ஆனந்த விகடனிலும் தன் கவிதைகளை பிரசுரிச்சிருக்கார்.
‘அன்புடன்’ குழுமத்தில் சேர்ந்த
பிறகுதான் கவிதைகள் நிறைய எழுதினேன். அப்படி ஒரு அருமையான குழுமத்தை ஆரம்பிச்சு என்னைப்
போல பலரையும் ஊக்குவிச்ச ‘அன்புடன் புகாரி’
அவர்கள் மிகச் சிறந்த கவிஞர். பல சமயங்கள்ல அவர் ஒரு காதல் கவிதை ஸ்பெஷலிஸ்ட்னு தோணும்.
நான் பொறாமைப் படுகிற கவிஞர்களில்
ஒருவர், சிவகுமாரன் . அவர் ஒரு காய்ச்சியெடுத்த கவி! வேற பொருளில் அவர் எழுதியிருந்தாலும்,
அவர் ஒரு பண்பட்ட கவி அப்படிங்கிற பொருளில்தான்
நான் சொன்னேன் :)
இவரோட ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு முத்து.
இந்தக் காலத் தலைமுறையினர் வேகமா
மறந்துகிட்டு வர்ற வழி வழியா வந்த நம்ம பொக்கிஷமான தாலாட்டுகளை அழகா பதிஞ்சு, பகிர்ந்துக்கறாங்க,
மீனா
முத்து அவர்கள்.
சரளமாகக் கவிதை எழுதற கவிஞர்களில்
ஒருத்தர், அம்பாளடியாள். சமீபத்தில் மறைந்த திரு.டி.எம்.எஸ். பற்றி இவங்க எழுதியிருக்கிற
கவிதையைப் படிச்சா உங்களுக்கே தெரியும்.
விண்முகில் என்ற அழகான பெயரோடு எழுதற இவங்க
வலைப்பூவில் நிறைய (சோக) காதல் கவிதைகளே தென்படுது. படங்கள் எல்லாம்
எங்கேருந்து கிடைக்குதோ தெரியல. வெகு அழகு.
ரேவாவின் கவிதைகளில் சொல்லாடலே வித்தியாசமான
சுவையோடு இருக்கு… சொல்லைப் பற்றி இவர் சொல்வதைப் படிச்சா
நீங்களும் சொல்வீங்க!
அழகான படங்களுடன், அதை விட அழகான கவிதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்,
வார்த்தைகளின் வசந்த ஊஞ்சலுக்குச் சொந்தக் காரரான சே.குமார். கவிதை மட்டுமின்றி பலப்பல விஷயங்களும்
எழுதுகிறார். அதீதம் இணைய இதழில் இவரைப் பார்த்திருக்கிறேன்.
இவர் எழுத்தில் தென்றல் மாதிரி,
மனதிற்கு இதமாக எழுதுவார். பெயரிலேயே சாரலை வெச்சிருக்கார். வல்லமை ஆசிரியர்களில்
ஒருத்தர். இவரோட காகிதக்குறிப்புகள் என்கிற கவிதையே இவர் எழுத்தின்
ஆளுமை பற்றிச் சொல்லி விடும்.
Last but not least, பள்ளி மாணவ மாணவியரின் கவிதைகளை இங்கே பார்க்கலாம்... இந்த இளம் பிள்ளைகளின் சிந்தனைகள் வியக்க வைக்கின்றன. எடுத்துக்காட்டாக, 'சுமைகள்'
என்ற கவிதையில்....'மனிதா, உழைக்காத வரை நீ இவ்வுலகிற்குச் சுமை!'
என்கிறது ஒரு பிள்ளை. எத்தனை உண்மை! (நன்றி: திண்டுக்கல் தனபாலன்)
மீண்டும் நாளை பார்க்கலாம்…
அன்புடன்
கவிநயா
மேலும் வாசிக்க...
யாராவது கற்பனையா ஒரு செய்தி
சொன்னா, நல்லா கதை கட்டுறியேன்னு சொல்லுவோம். அந்த மாதிரி அரட்டைக்காக அல்லது வம்புக்காக
கதை கட்டுறது வேற, உண்மையாவே கதை எழுதறது வேற… கதை எழுதறது அப்படி ஒண்ணும் சுலபமே இல்லீங்க!
அதுவும் சுவாரஸ்யமா, வாசகர்களைக் கட்டிப் போடற மாதிரி எழுதறதுங்கிறது எல்லாருக்கும்
வராது. பொதுவாகவே எந்தக் காரியத்தையும் விமர்சிக்கிறது சுலபம், செய்யறதுதான் கஷ்டம்.
என் அனுபவத்தில் நான் தெரிஞ்சிக்கிட்டது
என்னன்னா, கதை எழுதறதுக்கு சுற்றி நடப்பவைகளைக் கவனிச்சு மனசில் வாங்கிக்கிற திறன்
வேணும். மனுஷங்களையும் வாழ்க்கையையும் வேடிக்கை பார்க்கத் தெரிஞ்சிருக்கணும். பல சமயங்களில்
சுலபமா சூப்பரா ஒரு கதையை ஆரம்பிச்சிடலாம், ஆனா அதை அதே அளவு அழகோட முடிக்கிறது கஷ்டம்.
அதை அழகா வடிவமைச்சு செதுக்கறதுக்கு நிச்சயமா நேரமும், நிறைய பொறுமையும், சிரத்தையும்
வேணும்.
சரி இப்ப நான் கதை விடறதை நிறுத்திட்டு,
நெஜமாவே கதை எழுதறதவங்களைப் பற்றிச் சொல்றேன்! :)
ஒரு சீரியஸான விஷயத்தை எடுத்துக்கிட்டு
அதை நகைச்சுவையாகவும் அதே சமயம் மனசைத் தொடும் வகையிலும் அழகா சொல்றவங்க, அப்பாவி
தங்கமணி. அவங்களோட
உனக்கும் எனக்கும் என்கிற கதை ஒரு நல்ல உதாரணம்.
தொடர்கதைகளும் நிறைய எழுதறாங்க.
இவங்க சீரியஸாகவும், நகைச்சுவையாகவும்,
ஆன்மீகமாகவும், கவிதையாகவும், நிறைய எழுதற, ஓவியம், பாட்டு, போன்ற மற்ற கலைகளிலும்
அசத்தற சகலகலகலாவல்லி. ஷைலஜா அக்கா. சமீபத்தில் ஆராதனா அப்படின்னு ஒரு கதை எழுதினாங்க
பாருங்க… யாருமே தொடத் தயங்கற ஒரு விஷயத்தை ரொம்ப அழகா, சொல்லியிருக்காங்க.
ஜீவி
ஐயா ஒரு மூத்த
எழுத்தாளர். ரொம்ப அனுபவமுள்ளவர். இவருடைய பின்னூட்டங்களே விவரமாகவும், வித்தியாசமாகவும்,
சுவாரஸ்யமாகவும் இருக்கும். என்னை மாதிரி கத்துக் குட்டி எழுத்தாளர்களையும் பாராட்டற
அளவு பெருந்தன்மையானவர். இவரோட இயல்பான கதை சொல்லும் திறமைக்கு ஒரு சின்ன உதாரணம்,
கனவும் காட்சியும் என்கிற இவரோட சிறுகதை. இப்போ
இவரோட வலைப்பூவில் ‘கனவில் நனைந்த நினைவுகள்’ அப்படின்னு ஒரு தொடர்கதை எழுதிக்கிட்டிருக்கார். பேரே அழகா இருக்குல்ல!
என்னை மிகவும் பிரமிக்க வைக்கிற
எழுத்தாளர், அப்பாதுரை. அவருடைய அனுபவங்களின் ஆழம்
அவருடைய எழுத்தில் பளீரிடும். அவருடைய சிந்தனைகளும் சரி, நடையும் சரி, கற்பனையும் சரி,
வித்தியாசமா இருக்கும், தெளிந்த நீரோடை போல இருக்கும். நிஜம் போலவே, நம் பக்கத்தில் இருந்துகிட்டு அவர் கதை
சொல்ற மாதிரியே இருக்கும். அவர் எழுத்தை வாசிப்பதே தனி அனுபவம். மிகச் சுலபமா வேற ஒரு
உலகத்துக்கு கையைப் பிடிச்சு கூட்டிக்கிட்டு போயிடுவார்… தேனில் ஒரு துளி போல அவரோட
ரங்க தோஷத்தைப் படிச்சா உங்களுக்கே தெரியும்….
அமெரிக்காவில் வாசம்னாலும், கிராமத்தானாகவே
மண்வாசனையோடு அறியப்பட விரும்புகிறவர், பழமைபேசி. பெரும்பாலும் தினசரி வாழ்வை
வைத்து எழுதப்படுகிற இவருடைய எழுத்தும், நடையும் வாசிக்கவே ரொம்ப சுகமாக இருக்கும்.
நிஜ சம்பவத்தை நம்மோடு அவர் பகிர்ந்துக்கறாப் போலவே இருக்கிற இவருடைய சமீபத்திய சிறுகதைகளில்
ஒண்ணு, நகைச்சுவைத் திருவிழா. கவிதைகளும் நிறைய எழுதறார்.
மாணிக்க
மாதுளை முத்துகள்
என்கிற அழகான இவரோட வலைப்பூவின் பெயரே இவருக்குத் தமிழில் இருக்கிற ஆர்வத்தைச் சொல்லும்.
நண்பர்கள் இவரை உரிமையுடன் அழைப்பது ஜிரா என்று. புராண நிகழ்வுகளை சுவாரஸ்யமான கதைகளாக்கித் தரும்
திறமை இவரிடம் இருக்கு. அதைத் தவிர கட்டுரைகளும், மாயாஜாலக் கதைகளும், விமர்சனங்களும்
எழுதற இவர், ஒரு முருக பக்தர், மற்றும் சமையல் கலைஞர்!
நிறைய சிறுகதைகளும் கவிதைகளும்
எழுதிக்கிட்டிருந்த சதங்கா, இப்போ நிறைய ஆன்மீகமும் யோகமும்
பொது நலக் கட்டுரைகளும் எழுத ஆரம்பிச்சிருக்கார். இளமை விகடனில் இவருடைய படைப்புகள்
வராத இதழே இல்லைங்கிற அளவு அங்கே பயங்கரமா ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இன்னும் அங்கே
எழுதறாரான்னு தெரியல. நான் ரொம்ப நாளா அந்தப் பக்கம் போகலை! இவரோட வட்டக் கரிய விழி என்கிற அழகான காதல் கதை அங்கே
வெளியானதுதான்!
மிக எளிமையாகவும், இனிமையாகவும்,
சுலபமாக மனதைக் கவரும் விதத்தில் எழுதறவர், ரிஷபன். கவிதைகள், கதைகள் அப்படின்னு
எல்லாத்திலயும் கலக்கறார். இவருடைய நிறத்திற்கு ஒரே நிறம் என்கிற கதையைப் படிச்சாலே போதும்,
இவர் எழுத்தின் அருமை பளிச்சுன்னு தெரிஞ்சிடும்.
பூ சலம்பு என்கிற வித்தியாசமான வலைப் பூவுக்கு சொந்தக் காரர்,
சுவர்ணரேக்கா. சிறுகதைகளும் கட்டுரைகளும் நிறைய எழுதிக்கிட்டிருந்தார். இப்ப கொஞ்ச
நாளா காணும். இவருடைய வித்தியாசம் என்கிற கதையை படிச்சா சுருக்கமா
சொன்னாலும் சொல்ற விஷயத்தை சுருக்குன்னு சொல்ற இவரோட திறமை தெரியும்.
கதைச்சரத்தை அனுபவிச்சுக்கிட்டே….
இருங்க… நாளைக்கு இன்னொரு சரத்தோட சந்திக்கலாம்!
டிஸ்கி: நான் சொன்ன, சொல்ல இருக்கும்
பதிவுகளைப் பற்றிப் பொதுவா ஒரு வார்த்தை. பதிவுகளில் நான் குறிப்பிடறவங்களுக்கெல்லாம்
அறிமுகம் தேவையில்லாட்டாலும், இதை ஒரு நன்றி சொல்கிற வாய்ப்பா கருதி, அவங்களை இங்கே
குறிப்பிடறேன்… இவங்க எல்லாம் பெரும்பாலும் நான் வாசிக்கிறவங்க. நிறைய புதிய பதிவர்களை
அறிமுகப்படுத்தலையே அப்படின்னு தோணுச்சுன்னா, புதிய பதிவுகளை explore செய்ய இயலாத என்னோட
நேரமின்மையே காரணம். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கறேன்.
அன்புடன்
கவிநயா
மேலும் வாசிக்க...