07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 13, 2013

அறிமுகம் - சாய் ராம்

சென்னை டி.நகரில் பண்டிகை கால கூட்ட நெருக்கடியில் திணறும் ரங்கநாதன் தெருவினைக் கற்பனை செய்து பாருங்கள். வாகனங்களுக்கு அங்கு அனுமதியில்லை. கடைகளுக்குப் படையெடுத்து வரும் மக்கள் மட்டுமே வெள்ளமாய் நிரம்பி அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருப்பார்கள். அப்படியான கூட்டத்தில் நானும் ஒருவன். தெருவின் ஒரு மூலையில் நின்று மக்களின் முகங்களை எந்தச் சிந்தனையும் இல்லாமல் வெறித்து பார்த்தபடி நிற்கும் வழிபோக்கன். சந்தோஷமான சிரிப்போடு செல்லும் குடும்பங்கள், நேற்று நடந்த சண்டையின் நினைவுகளை இன்னும் முகத்தில் தாங்கி வெறுமையாய் நகரும் கணவன் மனைவி, உடல் உபாதைகளை சுமந்து செல்லும் வயோதிகர், தன்னை சுற்றி இந்த உலகம் இயங்குவதாய் கற்பனை செய்தபடி செல்லும் சிறுமி, பருவத்தினைப் போர்த்தி இளைஞர்களைத் திரும்பி பார்க்க வைக்கும் யுவதி, கூட்டத்தில் தனக்கான வாடிக்கையாளர் யார் என கண்களால் வேடிக்கையாடும் தெருவோர வியாபாரி இப்படி ஒவ்வொருவரும் அவர்களுடைய உணர்வுகளை என் மீதும் பூசி செல்வதுண்டு. அதை எங்காவது பதிவு செய்ய வேண்டுமே. அதற்குத் தான் என்னுடைய வலைப்பதிவு.
 
விஜய் டிவியில் 'என் தேசம் என் மக்கள்' நிகழ்ச்சியின் இயக்குனர். இதற்கு முன் 'நடந்தது என்ன' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பணிபுரிந்து இருக்கிறேன். சென்னையில் வாசம்.
 
2008-ம் வருடம் ஜனவரி மாதம் பிளாக்கரில் செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்கிற பெயரில் ஆரம்பித்த வலைப்பதிவு ஓரளவு தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் நீடிக்கிறது. நடுவில் தனியாக சாய்ராம்ஸ் என்று அந்த வலைப்பதிவிற்குத் தனிக்குடித்தனம் நடத்தியாயிற்று.
 
என் வலைப்பதிவில் நூற்றிற்கு மேற்பட்ட கவிதைகள் எழுதி விட்டேன். எல்லாமே வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஒரு கவிதை பதிக்க வேண்டும் என்கிற சுயமாய் விதித்து கொண்ட விதிமுறைக்காக நெருக்கடியில் எழுதப்பட்டவை.

நாம் அவசர கதியில் நடந்து கடக்கும் தினசரி வாழ்க்கையில் எதோ ஒரு மின்னல் போல சில உண்மை கதாபாத்திரங்களைச் சந்திக்க நேர்கிறது. அவர்களைப் பற்றிய எதோ ஒரு விஷயம் நம்மை ஈர்க்கிறது. அவர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடிவதில்லை. அப்படி உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி எழுதிய தொடர் தான் மனிதர்கள் தொடர்.

சிறுகதைகள் எழுத வேண்டுமென ஆர்வமிருந்தும் அதிகம் எழுத முடியவில்லை. ஒரு சிறுகதை வலைப்பதிவர் பாலபாரதியின் கதையினை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து சற்று எனது நடையில் மாற்றி எழுதியது. அதன் பெயர் பேய் வீடு. பேய் கதைகளுக்கு அப்படி என்ன இணையத்தில் டிமாண்ட் அதிகம் என புரியவில்லை, இணையத்தில் 'பேய் கதைகள்' 'திகில் கதைகள்' என தேடி தேடி இந்தக் கதையை வாசித்து இது ஒன்றும் திரில்லர் கதையாக இல்லையே என்று திட்டி விட்டு போகிறார்கள் பல பேர். இதற்காகவே அந்தப் பதிவின் தொடக்கத்தில் இது திரில்லர் கதையல்ல என்று குறிப்பு எழுதி வைத்திருக்கிறேன்.

கட்டுரைகள் சில எழுதியிருக்கிறேன். அவை பெரும்பாலும் அந்தந்த காலத்தில் நிகழ்ந்தவைக்கு எதிர்வினையாக அமைந்தவை. வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல & உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை ஆகியவை மட்டும் தொடராக எழதினேன்.

நம்மை பற்றி எழுதும் போது ஏனோ அது நீண்டு கொண்டே போகிறது. இத்தனைக்கும் எழுத தொடங்கும் போது அறிமுகத்தினை சின்னதாக எழுதினால் போதும் என்று நினைத்து தான் எழுதினேன். ஸாரி.

இங்கே இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்த சீனாவிற்கும் இப்படியான தளத்தினை உருவாக்கி தந்த வலைச்சரத்திற்கும் நன்றி. இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் சந்திப்போம்.

12 comments:

  1. 'என் தேசம் என் மக்கள்' நிகழ்ச்சியின் இயக்குனர் உட்பட பல தகவல்கள் இன்று தான் தெரியும்...சுய அறிமுகம் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. வை.கோபாலகிருஷ்ணன் said...
    தங்களின் சுய அறிமுகமே மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. மிகவும் ரஸித்துப்படித்து வியந்தேன்.

    பாராட்டுக்கள்.

    இந்த வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளதற்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு இனிய வாழ்த்துகள் ...

    ReplyDelete
  4. எங்கெங்கும் தொடர்ந்து ஊக்கமளித்திட விழையும் திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி. கோபாலகிருஷ்ணன் மற்றும் ராஜராஜேஸ்வரி உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் சாய்ராம்! எனக்கு உங்கள் தளம் இன்றுதான் அறிமுகம்.
    வலைச்சர பணியை சிறப்பாகச் செய்திட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வாழ்த்துகிறேன் சாய்! :)))

    ReplyDelete
  7. அன்பின் சாய்ராம் - அருமையான அறிமுகம். நல்லதொரு துவக்கம் - தொடர்க பணியினை - பதிவுகளைச் சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  8. வாழ்த்திய நண்பர்கள் ரஞ்சனி நாராயணன், குரு பாலபாரதி மற்றும் சீனா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  9. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு இனிய வாழ்த்துகள் ...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  10. அறிமுகத்தின் முதல் பத்தி அவ்வளவு எதார்த்தம் ....!

    ReplyDelete
  11. வேதா மற்றும் ஜீவன்சுப்பு நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது