07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சாய் ராம். Show all posts
Showing posts with label சாய் ராம். Show all posts

Sunday, May 19, 2013

நிறைவு - சாய் ராம்

ஒரு வாரம் வலைச்சர ஆசிரியராக பணியாற்ற வேண்டுமென சீனா மின்னஞ்சலில் என்னிடம் கேட்ட போது உடனே சரியென சொன்னேன். என்னுடைய வலைப்பதிவுலகம் குறுகியது. அங்கு நண்பர்களின் எண்ணிக்கையும் குறைவு. வேறொரு விரிந்த உலகத்திற்கு எழுதுவது மீடியாகாரனான எனக்கு சந்தோஷமளிக்கும் விஷயமாக தோன்றியது.

இங்கே மற்றவர்களுக்கு நான் வலைப்பதிவுகளை பரிந்துரை எழுதியது போக இந்த ஒரு வாரக்காலத்தில் எனக்கும் பல புது அனுபவங்கள் கிட்டின. முதலாவது தினமும் பதிவு எழுத வேண்டும் என்கிற கமிட்மெண்ட். நேரத்தை மடித்து ஒடித்து ஆங்காங்கே எழுதி பதிவிட்டது இப்போது எனது சொந்த வலைப்பதிவிற்கு எழுதுவதற்கு பயிற்சியாக அமையுமென நம்புகிறேன். ஒவ்வொரு பதிவிற்கு வந்த மறுமொழிகள், அது பதிவான வேகம் இவை ஆச்சரியமேற்படுத்துகின்றன. வலைச்சரத்தினை தினமும் வாசிப்பவர்கள் என ஒரு பெரும் கூட்டம் இருப்பதை உணர முடிகிறது. மற்றொரு முக்கியமான அனுபவம் தமிழ் வலைப்பதிவுலகத்தை அதிகமாய் இந்த ஒரு வார காலம் அலைந்து மேய்ந்தேன். எண்ணிக்கையில் மலைக்க வைக்கிறது தமிழ் வலைப்பதிவுலகம். தொடர்ச்சியாக எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆங்காங்கே இதன்காரணமாக நட்பு வட்டமும் சில இடங்களில் அது எதோ ஒரு நோக்கத்திற்காக முன்னெழுவதும் காண கிடைக்கிறது. ஆங்கில வலைப்பதிவுலகம் காட்டும் வெரைட்டி விரைவில் தமிழ் வலைப்பதிவுலகத்திலும் தோன்றும் என நம்பிக்கை ஏற்படுகிறது.

வாய்ப்பளித்த சீனாவிற்கும் வலைச்சர நண்பர்களுக்கும் இந்த ஒரு வார காலம் எனது பதிவுகளை பார்வையிட்ட தோழர்களுக்கும் எனது நன்றி.
மேலும் வாசிக்க...

வலைப்பதிவு உலகம்

முன்பொரு காலத்தில் மனிதர்களுடன் உரையாடல் என்பது நேருக்கு நேர் என்பதாய் இருந்தது. மேடைகளில் பேசுவது என்பது உணர்ச்சிபூர்வமாய் இருந்தது. பிறகு கடிதங்கள் வந்த போது அதனுள் உணர்ச்சிகளை எழுத்தாய் வடிக்க கற்று கொண்டோம். சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் கூட போஸ்ட் கார்டு நிரம்பும் அளவு எழுதி தள்ளினோம். இன்று எதுவும் மாறி விடவில்லை. ஆனால் சுருங்க சொல்ல கற்று கொண்டு இருக்கிறோம். 140 எழுத்துகள் மட்டுமே அனுமதிக்கிற டிவிட்டர் போதும் நம்முடைய பரிமாற்றத்திற்கு. அது தான் மணிக்கணக்கில் செல்பேசியில் பேச முடிகிறதே, அப்புறமென்ன!

வலைப்பதிவுகள் தமிழில் பிரபலமாக இருந்த காலத்திற்கும் இப்போது பெரும்பாலான ஜனங்கள் ஃபேஸ்புக் போய் விட்ட காலத்திற்கும் நடுவே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. சின்ன சின்ன கதைத்தல்களுக்கு ஃபேஸ்புக் இப்போது தளமாகி விட்டது. எனினும் இப்போதும் வலைப்பதிவுகள் தங்களுக்கான இடஎம் என்ன என்பதை உணர்ந்து இதை நிறைவு செய்யும் பக்குவமடைந்து இருக்கின்றன. பெரிய கம்பெனிகள் தங்களுடைய மார்க்கெட்டிங் அம்சமாகவும் தங்கள் வாடிக்கையாளர்களுடனான பொது தொடர்பு சாதனமாகவும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்துகின்றன. எல்லாரும் எல்லாவற்றையும் பேசலாம் என்பது குறைந்து இந்தந்த விஷயங்களுக்கான வலைப்பதிவுகள் (niche blogs) அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. இன்னொருபுறம் தனிமனிதர்களுக்கான விசிட்டிங் கார்டுகளாகவும் வலைப்பதிவுகள் (ஆரோக்கியமாய்) மாறி கொண்டு இருக்கின்றன.

பத்ரி சேஷாத்ரி
வலைப்பதிவுலகில் பெரும்பாலனோருக்கு தெரிந்தவராக இருப்பார் என்றே நம்புகிறேன். வெளிநாட்டிற்குச் சென்று வந்த அனுபவம், இந்த வலைப்பதிவு காலம் தொடங்கிய போது இணையத்தில் புதுபுது முயற்சிகளை எடுக்க இணையம் பற்றிய தகவல்களிலே திளைத்திருந்த காரணத்தினால் தொடக்கம் முதலே வலைப்பதிவு எழுதுவது எப்படி என்று தெரிந்தே இருந்திருக்கிறார். அதோடு அளவில் சிறிதாகவும் அதிக தகவல்களோடும் எழுதும் அவருடைய ஸ்டைல் கச்சிதமாக இருக்கிறது. கிழக்கு பதிப்பகம், தமிழ் அறிவுச்சூழலில் உள்ள பலரோடு தொடர்பு என்கிற பின்புலம் காரணமாக அவருடைய இடம் கவனத்திற்கு உரியதாக இருக்கிறது. அடுத்து இவருடைய வலைப்பதிவில் தடங்கலின்றி பதிவுகள் அரங்கேறி கொண்டே இருக்கும் ஒழுக்கம். நான் இதை எழுதி கொண்டிருக்கும் போது அவருடைய தளத்தில் 2003-ம் ஆண்டு தொடங்கி இப்போது வரை 2562 பதிவுகளை எழுதி தள்ளியிருக்கிறார். அடிக்கடி காணாமல் போகும் வலைப்பதிவர்களிடையே இந்த மாதிரியான தொடர்ந்து பதிவு எழுதும் ஒழுக்கம் முக்கியமானதாக இருக்கிறது.

அபிலாஷ் சந்திரன்
இவரைப் பற்றி கிரிக்கெட் பதிவிலும் சொல்லியிருந்தேன். 2009-ம் ஆண்டு தொடங்கி எக்கசக்கமாய் எழுதுகிறார். இலக்கியம், இணையம், உளவியல், மொழிபெயர்ப்பு, கவிதை, கிரிக்கெட், சமூகம் , சினிமா, சிறுகதை, தத்துவம் என பல தளங்களில் விரிகின்றன இவரது வலைப்பதிவுலகம். கொஞ்சம் சீரியஸான வாசிப்பினை விரும்புபவர்கள் கட்டாயம் இவரது வலைப்பதிவினைத் தொடர்ந்து வாசிக்கலாம்.

பாலபாரதி
இவர் வலைப்பதிவுலகில் பிரபலம் என்பது மட்டும் அல்ல, நிறைய பேருக்கு வலைப்பதிவுலகை அறிமுகப்படுத்திய பெருமையும் உண்டு. எனக்கு அறிமுகத்தியது உட்பட. நிறைய எழுதி வந்திருக்கிறார். பெரியாரின் வரலாற்றையும் எண்ணங்களையும் தொகுப்பதற்கு முயற்சிகள் எடுத்து இருக்கிறார். ஆட்டிசம் சில புரிதல்கள் என்பது பற்றி தொடராக எழுதி பிறகு அதை புத்தகமாக்கி இப்போது அது விழிப்புணர்வு பிரச்சாரமாக இணையத்தில் பலருக்கு பலவழிகளில் பரிந்துரைக்கப்பட்டு பரவி கொண்டே இருக்கிறது. வலைப்பதிவுலகத்தின் வலிமையை அதன் சாத்தியத்தை உணர்த்தும் முயற்சி இது.

வலைப்பதிவுலகில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமா மற்றும் ஏனைய துறை பிரபலங்கள் இவர்களுக்கு இவர்களுடைய ரசிகர்கள்/வாசகர்கள் வலைப்பதிவு நடத்துவதும் அது பிரபலமாக இருப்பதும் நாம் அறிந்ததே. இதுவொரு வலைப்பதிவுலக சாத்தியம். இந்த வகையில் கவிஞர் தேவதேவனுக்கு அவரது வாசக நண்பர்கள் நடத்தும் வலைப்பதிவு கவனத்திற்குரியது.

வலைப்பதிவுலகில் ஆக்டிவ்வாக இருந்து விட்டு பிறகு பதிவிடாமல் இருந்த சிலர் இப்போது மீண்டும் வலைப்பதிவுலகிற்கு வர தொடங்கி இருக்கிறார்கள். ரவிசங்கர் தனது வலைப்பதிவில் மீண்டும் எழுத தொடங்கி இருக்கிறார்.
மேலும் வாசிக்க...

Saturday, May 18, 2013

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

கிட்டதட்ட எழுபது வருடங்களாக தமிழக வெகுஜன ஊடக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான பெரும்படைப்பாக திகழ்கிறது பொன்னியின் செல்வன். யாகூ குரூப்கள் இணையத்தில் பாப்புலராக இருந்த போது சில இளைஞர்கள் அதில் ஒரு குரூப்பாக கூடி பொன்னியின் செல்வன் பற்றி விவாதித்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள், கமலகண்ணன், ராமசந்திரன், லாவண்யா, கோகுல் மற்றும் க்ருபாசங்கர் பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள ஊர்களுக்குச் சுற்றுபயணம் மேற்கொள்வதென முடிவு செய்தார்கள். அப்படி தொடங்கிய பயணம் பிறகு சரித்திர ஆய்வாளர்களோடு தொடர்பு என நீண்டு வரலாறு என்றொரு இணையத்தளத்தினை உருவாக்கி அதில் சரித்திர ஆய்வு குறித்த தகவல்களை ஒன்றுதிரட்டும் முயற்சியில் ஈடுபட தூண்டியது. பலவிதமான வரலாற்று தகவல்கள் இங்கே திரட்டப்பட்டுள்ளன.

வரலாறு ஆய்வு தளத்தினைப் போலவே சென்னையில் உள்ள வரலாறு மற்றும் பண்பாடு குறித்த ஆர்வமுள்ளோர் தொடர்ந்து எழுதி நடத்தி வரும் வலைப்பதிவு 'தமிழ் பாரம்பரியம்'. ஆங்கிலத்தில் பல பதிவுகள் இருந்தாலும் தமிழிலும் நிறைய எழுதியிருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவுலகில் எந்த சார்பும் அல்லாத ஆய்வு கண்ணோட்டத்தில் வரலாற்றுக்காக நடத்தபடும் வலைப்பதிவு சொற்ப எண்ணிக்கையில் இருப்பதால் இந்த வலைப்பதிவு கவனிக்கதக்க வலைப்பதிவாக இருக்கிறது. பிரபல வலைப்பதிவர் பத்ரி சேஷாத்ரி இதை நடத்தி கொண்டிருக்கிறார்.
முனைவர் பா. ஜம்புலிங்கம் சோழ நாட்டில் பௌத்தம் என்றொரு வலைப்பதிவு எழுதி கொண்டிருக்கிறார். பல ஆய்வு கட்டுரைகள் இதில் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

...மேலும் பேசுவோம்...
மேலும் வாசிக்க...

கிரிக்கெட்டும் ஐபிஎல்லும் ஸ்ரீசாந்தும்

கொளுத்தும் இந்திய வெயிலில் இந்தியர்களுக்கு ஏனோ கிரிக்கெட் மீது தணியாத ஆர்வம். அந்தக் காலத்தில் (அதாகபட்டது இணையம் உருவாகாத காலத்தில்) பாலகுமாரன் நாவலில் கிரிக்கெட் காட்சி வந்தாலோ அல்லது கிரிக்கெட் பற்றிய கருத்துகள் வந்தாலோ ஆர்வத்துடன் அதை புரட்டுவதுண்டு. அப்படியாகபட்ட கிரிக்கெட் ஆர்வத்துடன் உள்ள வலைப்பதிவர்கள் தமிழில் இருக்கவே செய்கிறார்கள்.

அபிலாஷ்
இலக்கியம், மொழிபெயர்ப்பு, படைப்புகள், அரசியல், கருத்து என பல தளங்களில் இயங்கும் அபிலாஷின் வலைப்பதிவு கட்டாயம் தொடர்ந்து வாசிக்கப்பட வேண்டியது. கிரிக்கெட்டைப் பற்றி 73 பதிவுகள் எழுதியிருக்கிறார் அபிலாஷ். கிரிக்கெட்டை அலசுவதில் மிக்க கருத்து செறிவுடன் இருக்கின்றன இவரது கட்டுரைகள். சுவாரஸ்யமாய் எழுதும் வலைப்பதிவர்களிடம் இல்லாத அளவு ஆய்வுகளை நுணுக்கமாய் முன்வைப்பதாய் இருக்கின்றன இவருடைய எழுத்துகள். கிரிக்கெட் பற்றிய இவரது கட்டுரைகள் உயர்மை இதழிலும் வெளிவந்திருக்கின்றன. இப்போதைய கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை உருவாகுவதற்கு முன்பு மூன்று வருடங்களுக்கு முன்பு ஸ்ரீசாந்த் பற்றி அவர் எழுதிய பதிவை இப்போது படித்தால் ஸ்ரீசாந்த் பற்றிய அவர் சொன்ன பிம்பம் இன்றும் அப்படியே பொருந்துகிறது.

மோகன்குமார்
அ தொடங்கி ஃ வரை பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதும் வலைப்பதிவர் மோகன்குமார். கிரிக்கெட் பற்றி தொடர்ந்து வலைப்பதிவிடும் இவர் இந்த முறை ஐ.பி,எல்லுக்கு ஸ்பெசல் முயற்சி எடுத்திருக்கிறார். ஸ்ரீசாந்த் விவகாரம் வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் எழுதிய பதிவு சுவாரஸ்யமானது.

K.s.s.rajh
இவரது பெயர் ராஜ்? என்பதில் ஒரு குழப்பம். அதனால் ஆங்கிலத்திலே டைப் செய்து விட்டேன். ஜாலியாக கிரிக்கெட் பற்றி கதைக்கணுமா? இவருடைய கிரிக்கெட் பற்றிய பதிவுகள் 'ஜாலி மட்டுமே' ரகம். கங்குலியின் ரசிகர்.(?!) வரலாற்றை மாற்றிய தாதா என்று கங்குலியைப் பற்றி ஒரு தொடரே எழுதி இருக்கிறார். ஆனால் அதிலும் இவருக்கு தோனி மீது என்ன கோபமோ தெரியவில்லை, கிரிக்கெட் பற்றி எழுதும் போதெல்லாம் எங்காவது தோனியை மறைமுகமாக செம காச்சு காய்ச்சுகிறார்.

மோகன்தாஸ்
சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் பற்றி பேசுவது ஒரு ரகம் என்றால் நம்ம சொந்த வாழ்க்கை கிரிக்கெட் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுவது தனி சுகம். நிறைய ரசிகர்கள் கொண்டிருந்த மோகன்தாஸ் தன் கிரிக்கெட் அனுபவங்களைச் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.

கிரிக்கெட்டைப் பற்றி நிறைய பேர் எழுதுகிறார்கள். அதில் இந்த ஐ.பி.எல் சீசனில் சுறுசுறுப்பாய் இயங்குபவர்கள் சிலர். டினேஷ்சாந்த் குறிப்பிட்டு சொல்லலாம். 'அடியில்லடா இடி' என்று கிறிஸ் கெயில் ஆட்டத்தை சிலாகித்திருக்கிறார்  தன்னுடைய வலைப்பதிவில்.

...மேலும் பேசுவோம்...
மேலும் வாசிக்க...

குழந்தைகளும் பெற்றோர்களும்

வள்ளுவர் தொடங்கி மழலை மொழிக்கு மயங்காதார் யார்? எந்தவொரு வீட்டிற்குப் போனாலும் அங்கே மழலைகள் இருந்தால் அந்தப் பெற்றோர்கள் தங்களது மழலையின் சாகசங்களை வாய்வலிக்க விருந்தினர்களிடம் நிறுத்தாமல் சொல்லி கொண்டிருப்பதைக் கேட்க முடியும். வலைப்பதிவில் தங்களது சுட்டிகளைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதும் பெற்றோர் நிறைய உண்டு.

சந்தனமுல்லை
சித்திரக்கூடம் என்கிற வலைப்பதிவினை நடத்தும் சந்தனமுல்லை ஒரு பிரபல வலைப்பதிவர். பப்பு டைம்ஸ் என்று மழலை உலகோடு தனக்கான அனுபவத்தைப் பதிவிடுகிறார். பப்பு ஒவ்வொரு முறையும் தாயை outsmart செய்யும் போதும் 'ஓர் ஆம்மாவின் சின்னஞ்சிறு உலகமும் ஒரு குழந்தையின் விரியும் உலகமும்' என்கிற அவரது வலைப்பதிவு தலைமை வரி நியாயம் பெறுகிறது.

தியானா
பூந்தளிர் என்கிற வலைப்பதிவினை நடத்தும் தியானா, 'The mother's heart is the child's schoolroom,' என்று தனது வலைப்பதிவிற்குத் தலைமை வரி வைத்திருக்கிறார். எத்தனை உண்மை! குழந்தை வளர்ப்பினை பற்றி தன் அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ளுவதோடு குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள் செய்வது எப்படி, ஓவியம் தீட்ட சொல்லி தருவது எப்படி என்பது போன்ற விளக்கங்கள் விரிவாக இருக்கின்றன. முக்கியமாக விளையாட்டாய் அறிவியலைப் போதிப்பதற்கான வழிமுறைகளும் உள்ளன. உதாரணத்திற்கு மழை எப்படி பெய்யும் என்பதை விளக்குவதற்கு நாமே மழையை பெய்ய வைத்து காட்ட முடியும். (?!)

பேரன்ட்ஸ் கிளப் வலைப்பதிவு
குழந்தை வளர்ப்பிற்காக இயங்குகிறது பேரன்ட்ஸ் கிளப் வலைப்பதிவு. பத்து வலைப்பதிவர்கள் இங்கே எழுதியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கான கல்வி, அவர்களை அணுக வேண்டிய விதம், குழந்தைகளின் உளவியல், பதின்ம வயது என்று பல தலைப்புகளில் பதிவுகள் உள்ளன.

டாக்டர் ராஜ் மோகன்
குழந்தைநல மருத்துவரான ராஜ்மோகன் குழந்தைகளுக்கான மருத்துவத்தை மருத்துவ ஆலோசனைகளை சிறு சிறு பதிவுகளாக சுவாரஸ்யமாக எழுதுகிறார் பேபி கிளினிக் என்கிற தன் வலைப்பதிவில்.

இணையத்தில் சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான வலைத்தளங்கள், விளையாட்டுடன் ஆரோக்கியமான விஷயங்களைச் சொல்லி தரும் இணையத்தளங்கள் முகவரியினைத் தொகுத்து ஒரு பதிவாக எழுதியிருக்கிறார் ரஞ்சித். கட்டாயம் பெற்றோர்களுக்குப் பயன்படும்.

...மேலும் பேசுவோம்...
மேலும் வாசிக்க...

Thursday, May 16, 2013

வீடியோ கேம்ஸ் - புதையலைத் தேடி...

"ஓடியாடுற வயசுல சின்ன பசங்க வீட்டுக்குள்ளே முடங்கி டிவி, வீடியோ கேம்ஸ் இப்படி நேரத்தை வீணாக்கி உடம்பைக் கெடுத்துகிறாங்க."

"வீடியோ கேம்ஸ் விளையாடிட்டே இருந்தா மனசு கெட்டு போயிடும். உடம்பு தளர்ந்துடும்."

"சின்ன பசங்க மாதிரி பெரிய ஆளுங்களும் வீடியோ கேம்ஸ் விளையாடிட்டு இருக்காங்க."

"எங்க பத்து நிமிஷம் கிடைச்சாலும் மொபைல்ல வீடியோ கேம்ஸ் விளையாட ஆரம்பிச்சிடறாங்க."

வீடியோ கேம்ஸ் குறித்து நம் சமூகத்தில் நல்ல அபிப்ராயம் இல்லை. ஆனால் நிறைய பேர் அதை விரும்பி விளையாடி கொண்டு தான் இருக்கிறோம். மொபைல் சின்ன திரையில் கீச் கீச் ஆங்கிரி பேர்ட்ஸ் தொடங்கி வீட்டில் கேம் ஸ்டேஷனில் சினிமா மாதிரி அனிமேசன் செய்யபட்ட strategy games வரை நம்மை வீடியோ கேம்ஸ் கவர்ந்துள்ளன.

ஹாலிவுட் ரசிகன்
பேருக்கு ஏற்றார் போல ஹாலிவுட் ரசிகன் தான் என்றாலும் வீடியோ கேம்ஸும் ரசித்து விளையாடும் வலைப்பதிவர். வீடியோ கேம்ஸ் விளையாடும் சிறுவர்களைத் துரத்தி விட்டு கேடிவிக்கு சானல் மாற்றும் பெரியவர்கள், இளைஞனாக இருக்கும் போது ஒரு குழுவாய் நண்பர்கள் கூடி ஒரு விளையாட்டை விளையாடும் சுகம், இப்போது பெரிய ஆள் ஆனதும் அதனை மறக்காமல் தனியே அந்த வீடியோ கேம்ஸை விளையாடுவது இப்படி தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார் FIFA 12 - வீடியோ கேம் பதிவில். கேம்ஸை மிகவும் ரசித்து விளையாடுவதோடு மிக நுணுக்கமாய் அதனை விவரிப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. Elder Scrolls V : Skyrim கேம் பற்றிய பதிவு மிகவும் ரசித்து எழுதபட்டு இருக்கிறது.கேம்ஸ்களுக்கே உரிய சுவாரஸ்யமாய் கதைக்கும் தன்மை, அதனுள் தொழில்நுட்ப அறிவு, நம்முடைய விரல்களின் வேகம், மனம் அதனுள் அமிழ்ந்து போதல், கேம்கள் நமக்கு தரும் சுதந்திரம் இப்படியான விஷயங்கள் ரசிக்கும்விதமாய் பதிவாகி இருக்கின்றன.

வடகரை தாரிக்
பெரும்பாலும் மொபைல் போன்களுக்கான கேம்ஸ் பற்றி சொல்கிறார். அதிகமாய் விவரிப்புகள் இல்லையெனினும் கேம்ஸ் பற்றிய தகவல்கள் வேண்டுவோர் இவரது வலைப்பதிவினை வாசிக்கலாம்.

ராஜ்
ராஜ் ஒரு இன்ஜீனியர். சிறு வயதில் சூப்பர் மரியோ கேம் விளையாடி ஒரு வழியாய் எட்டாவது வகுப்பு முழு பரீட்சை லீவு காலத்தில் முழுமையாய் எல்லா லெவல்களையும் தாண்டியதை சுவாரஸ்யமாய் விவரிக்கிறார். சம்பாதிக்க தொடங்கியவுடன் தனக்காக முதலில் வாங்கியது x-box தான்.  Call of Juarez-(PC/Xbox360) -சபிக்க பட்ட புதையலை தேடி ஒரு பயணம் பதிவில் அந்த கௌ பாய் கேம் பற்றி சுவாரஸ்யமாக சொல்கிறார். The Saboteur- (2009) புரட்சிக்காரன் ஆவது எப்படி.. ??-17+ பதிவில் (இதன் முதல் பாராவை தவிர்த்து விடவும்) உலகப் போர் கேம் பற்றி ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார்.

ராஜேஷ் டா ஸ்கார்ப்
கருந்தேள் என்கிற பெயரில் வலைப்பதிவு நடத்தும் ராஜேஷ் சினிமா, புத்தகம் என நிறைய எழுதுகிறார். வீடியோ கேம்ஸ் குறித்து நிறைய எழுதியிருக்கிறார். முதலில் இவரது தளத்தினைச் சுற்றும் போது ஆங்கில தளம் போல தோன்றும். ஆனாலும் வீடியோ கேம்ஸ் பதிவுகள் தனியாக திறக்கும் போது ஒவ்வொன்றும் விரிவாக தமிழில் ரசித்து எழுதபட்ட பதிவுகள்.
மேலே குறிப்பிட்ட அனைவரும் வீடியோ கேம்ஸ் பற்றி எழுதியிருக்கிறார்கள் தவிர வீடியோ கேம்ஸிற்கான தனி வலைப்பதிவு என்று ஒன்று தமிழில் இது வரை பார்க்கவில்லை. அப்படி எதுவும் இருந்தால் நண்பர்கள் மறுமொழியில் பகிருங்கள்.

...மேலும் பேசுவோம்...
மேலும் வாசிக்க...

Wednesday, May 15, 2013

சங்கப்பாடல்களில் நுணுக்கமாய் வெளிபடும் காதல் உணர்வுகள்

நகரத்தின் பல வீதிகளில் காதலர்களைப் பார்ப்பதுண்டு. எங்கோ ஓடி கொண்டிருக்கும் கூட்டத்தினை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. தங்கள் காதல் உலகில் அவர்கள் மெய்மறந்து நின்றிருப்பார்கள். பெரும்பாலானோர் சண்டையிட்டபடி தான் இருக்கிறார்கள். காதலனிடம் சத்தமாய் எதோ சொல்லிவிட்டு பெருங்குரலெடுத்து அழுதபடி சுற்றி வேடிக்கை பார்ப்போரை உதாசீனப்படுத்தியபடி செல்கிறாள் ஒருத்தி. காதலியை பெருங்கோபத்தோடு திட்டி கொண்டிருக்கிறான் பைக்கை ஓட்டியபடி ஒருவன். பேருந்தில் ஏறுவதற்கு தயாராக இருக்கும் பெண்ணிடம் கெஞ்சலுடன் பேசி கொண்டிருக்கிறான் ஓர் இளைஞன். இப்போது யோசித்து பார்க்கும் போது காதல் என்பது வெறுமனே இன்பம் மட்டுமல்ல துன்பங்களும் கலந்தது தான் என புரிகிறது. ஊடலும் கூடலும் என்பது இது தான் போலிருக்கிறது. நம் சங்கப் பாடல்களை விட காதலினை நுணுக்கமாய் சொல்லுபவை எவை? வலைப்பதிவுலகில் சங்கப்பாடல்கள் மீது காதல் கொண்டிருப்பவர்கள் பலர்.

காயத்ரி சித்தார்த்
பாலைத்திணை என்கிற பெயரில் வலைப்பதிவிடுகிற காயத்ரி சித்தார்த் இலக்கியத்தின் மீது விருப்பம் கொண்டவர். கவிதைகள், திரை விமர்சனம், வாசித்தவை, பயண அனுபவம் என நிறைய எழுதினாலும் பழம்பெரும் இலக்கியங்களை ஆங்காங்கே விவரிப்பதில் தயங்குவதில்லை. வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் பாறை ஒன்றின்மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெயை கைகள் இல்லாத, வாய் பேசவியலாத ஒருவன் காக்க முயல்வதைப் போல நான் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்பது போன்ற உவமைகள் எத்தனை நுட்பமானவை. குறுந்தொகையில் காதலர்களிடையே பிரிவு பற்றி இப்படி எத்தனை அழகான உவமைகள் உள்ளது என்று குறுந்தொகை பற்றிய அறிமுகத்தில் எழுதுகிறார்.

சித்தார்த்
அங்கிங்கெனாதபடி என்கிற பெயரில் வலைப்பதிவிடுகிற சித்தார்த், காயத்ரியின் கணவர். பழந்தமிழ் இலக்கியம் மற்றும் நவீன & பின் நவீன இலக்கியங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். குறுந்தொகையை உரையாடல்களின் தொகுப்பு என்கிறார். சுவாரஸ்யமாய் நடந்து கிளைமாக்ஸை நெருங்கும் நாடகத்தில் ஒரு காட்சி புகைப்படமாய் உறைந்து போதல் போல குறுந்தொகையில் ஒவ்வொரு பாடலும் இருப்பதாக சொல்கிறார். அந்த ஒரு கணத்தின் உக்கிர உணர்வுகள் சொற்களாய் வழிந்தோடுவதாய் குறிப்பிடுகிறார். அழகு!
அணிலாடு முன்றில்
இலக்கியத்தில் விருப்பத்தோடு இருக்கும் மேற்குறிப்பிட்ட கணவன் மனைவி இருவரும் இணைந்து உருவாக்கிய தளம் அணிலாடு முன்றில். இங்கே குவிந்திருப்பவை அனைத்தும் பழப்பெரும் இலக்கிய விருந்து மட்டுமே.
கண்ணபிரான் ரவிசங்கர்
பேரைப் பார்த்து பயப்பட வேண்டாம். மிக எளிமையாக காமெடியாக சுவாரஸ்யமாக சங்க பாடல்களையும் மற்ற இலக்கியங்களையும் சொல்லி இருக்கிறார். காதலா காமமா எப்படி அறிவது என்பதிலும் காமெடியாக சங்க இலக்கியமும் குறளும் எடுத்தாளப்படுகிறது.  கைக்கிளை என்பது காதல் தோல்வியைக் குறிக்கும் என சொல்லப்படுவது உண்மையல்ல, கைக்கிளை என்பது வேறு சில பொருளும் கொண்டது என சொல்கிறார்.
இவர் காமெடியாய் எழுதியதை யார் தவறாக எடுத்து கொண்டு இவர் மனதைப் புண்படுத்தினார்களோ தெரியவில்லை, இனி எழுத மாட்டேன் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து விட்டார். எனினும் இவரது பழைய பதிவுகள் படிப்பதற்குச் சுவாரஸ்யமானவை. இவர் திரும்பவும் எழுத வர வேண்டும்!

...மேலும் பேசுவோம்...
மேலும் வாசிக்க...

Tuesday, May 14, 2013

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

இரவு நேரம். நகரத்தின் பிரதான விளக்குகளின் ஒளி ஆக்கிரமிக்காத கிராமத்து வானம். ஆயிரக்கணக்கில் மினுங்குகின்றன நட்சத்திரங்கள். இப்படியே நேர் பாதையில் பயணித்தால் அந்த நட்சத்திரங்களைத் தொட்டு விட முடியுமென தோன்றுகிறது சில நேரம். நட்சத்திரங்களைத் தொட்டு அப்படியே நேர் பாதையில் இன்னும் தொலைவில் பயணித்தால் எங்கே முடியும்? முடிவு என்பது தான் என்ன? முடிவு என்பதே மாயை தானா? தொடக்கம் என்பதும் மாயையா?

சி. ஜெயபாரதன்
கனடாவில் வசிக்கும் சி. ஜெயபாரதனுக்கு வயது இன்னும் சில ஆண்டுகளில் எண்பதைத் தொட இருக்கிறது. தொடர்ச்சியாக 'நெஞ்சின் அலைகள்' என்கிற தன்னுடைய வலைப்பதிவில் எழுதுகிறார். பெரும்பாலும் பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் குறித்தான சமீப கால அறிவியல் கண்டுப்பிடிப்புகளைப் பற்றி தான் விரிவாக எழுதுகிறார். அறிவியல் பற்றிய தமிழ் கவிதையில் தொடங்கி ஆங்கில விஞ்ஞான மேற்கோள்களைக் குறிப்பிட்டு பல படங்களை எடுத்து காட்டி எளிய நடையில் நுட்பமான விஷயங்களை சுவாரஸ்யமாக அலசுகிறார். பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் என்று அவர் எழுதுகிற தொடர் முக்கியமானதாக இருக்கிறது.
என். ராமதுரை

தினமணி நாளிதழில் முன்பு செய்தி ஆசிரியராக இருந்தவர். இப்போது அறிவியல்புரம் என்று வலைப்பதிவு தொடர்ந்து எழுதி வருகிறார். இதில் சுவாரஸ்யமான அறிவியல் செய்திகள் கொட்டி கிடக்கின்றன. சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது தான் அதிகமான வெயில் என்று சொல்வார்கள். ஆனால் மதியம் இரண்டு மணி தொடங்கி இரண்டரை வரை தான் அந்த நாளின் அதிகமான வெயில் இருப்பதாக சொல்கிறார்.
ராஜா சங்கர்

தமிழில் அறிவியல் தகவல்களைச் சொல்வதற்காகவே வலைப்பதிவு நடத்தி வருகிறார் ராஜா சங்கர். 'குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும்' என்று நீண்ட தொடரினை எழுதி கொண்டு இருக்கிறார். இந்த உலகில் உயிர் எப்படி தோன்றியது? மனிதன் எப்படி தோன்றினான் பற்றி பேசிய டார்வினின் பரிணாமக் கொள்கையை எளிய தமிழில் தொடராக எழுதுகிறார்.

...இன்னும் பேசுவோம்...
மேலும் வாசிக்க...

Monday, May 13, 2013

கொஞ்சம் சீரியஸான பெண் வலைப்பதிவர்கள்

Ladies first...!

வார நாளில் ஒரு முக்கியமான நேரம். டிராபிக் ஜாம் அதிகமாகி எங்கெங்கும் வாகனங்கள். பைக்குகள், கார்கள், சைக்கிள்கள், ஆட்டோகள் என மக்கள் ஆங்காங்கே சிக்னல் விளக்கை எரிச்சலோடு பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் ஏன் இத்தனை ஆண்கள்? பெண்கள் ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறார்கள்? முன்பு எப்போதையும் விட பெண்களுக்கான இடம் இன்று விரிவாகி இருக்கிறது. எனினும் அவர்கள் இன்னும் கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

குட்டி ரேவதி
எந்தக் காலகட்டத்தையும் விட, தற்பொழுது தான் பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான தேவையும் பொருத்தமும் நிறைய இருப்பதாக சொல்கிறார் கவிஞர் குட்டி ரேவதி தன்னுடைய பெண்கள் தினம் பதிவில். இப்போதெல்லாம் பெண்ணியம் பேசும் ஆண்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒருபடி மேலே போய் பெண்களுக்கே பெண்ணியம் கற்று தரும் ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு விண்ணப்பத்தை எழுதியிருக்கிறார். இலக்கிய சூழலில் தனக்கான ஓர் இடத்தை உருவாக்கி விட்ட இவருடைய வலைப்பதிவில் கவிதைகளையும் வாசிக்கலாம்.

மு.வி.நந்தினி
சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையான பதிவுகள் மு.வி.நந்தினியுடையது. பருவமழை தப்பியதால் இடம்மாறிய பூநாரைகள் பற்றி ஒரு பதிவில் விவரிக்கிறார். இயற்கையியலாளர் ச.முகமது அலியோடு நேர்காணல் கண்டு, "குயில் குடும்பத்துல மட்டும் 127 வகைகள் இருக்கு. அன்னப்பறவை இந்தியாவிலேயே இல்லை. வானம்பாடின்னு ஒரு பறவையே கிடையாது. 250 வகை இந்திய பாம்புகள் 3 வகை பாம்புகளுக்கு மட்டுமே விஷம் இருக்கு," போன்ற சுவாரஸ்யமான தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.

சந்திரா
தன்னுடைய கவிதைகளுக்காகவும் சிறுகதைகளுக்காகவும் அறியப்பட்டவர் எழுத்தாளர் சந்திரா. அவருடைய காற்றில் அலையும் சிறகு வலைப்பதிவில் அவருடைய படைப்புகளை வாசிக்கலாம். வழிதவறியது ஆட்டுக்குட்டி அல்ல கடவுள் கவிதையில் இயற்கையும் அதனோடு உள்ள கண்ணிற்குப் புலப்படாத உணர்வலைகளையும் எழுதியிருக்கிறார்.

தமிழ்நதி
தன்னுடைய படைப்புகளால் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் தமிழ்நதி. தனிமையில் இருக்கும் பெண்ணொருத்தியின் உணர்வுகளை ஓவியமாய் தீட்டுகிறது அவருடைய விலகல் கவிதை. அடிமைகளின் குடியிருப்பைக் கடந்து செல்லும் சீமாட்டியின் தோரணை எப்படியோ அப்படி தன்னிடம் நடந்து கொள்ளும் உறவை/நட்பைப் பற்றிய இயலாமை கவிதையாய் வடிவு கொண்டிருக்கிறது.

அனார்
இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அனார் 'இதமி' என்று ஒரு வலைப்பதிவு எழுதி வருகிறார். படைப்புகள் மட்டும் அல்லாது அதில் நிகழ்வுகள் பலவற்றையும் பதிவு செய்கிறார். உள்ளே பாடல் போல் மிதக்கின்ற வண்ணத்துப்பூச்சி, வெளியே பிடித்து வைக்க முடியாத கனா என்று வலைப்பதிவின் விவரிப்பே கவித்துவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் வில்லியம் பிளேக் எழுதிய ஒரு விஷ மரம் கவிதையை போல தொடங்குகிறது நாட்டுப்புறப் பாடகி கவிதை. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ஆன்மாவில் உணர்வதற்குமான வித்தியாசத்தைச் சொல்கிறது ஓவியம் கவிதை.

தமயந்தி
எழுத்தாளர் தமயந்தி 'நிழல்வலை' என்கிற பெயரில் வலைப்பதிவிடுகிறார். அதில் குறிப்பட்டு சொல்ல வேண்டியவை அவருடைய சிறுகதைகள். பெரியவர்களின் உலகத்தைக் குழந்தைகள் எப்படி புரிந்து கொள்கிறார்கள்? தன் சித்தப்பாவின் உலகத்தைப் புரிந்து கொள்ள முயலும் ஒரு சிறுவனின் உலகம் நூலிழை இறகுகள்.

சீரியஸான பெண் வலைப்பதிவர்கள் என்றால் முழுக்க சீரியஸானவர்கள் என்று அர்த்தமல்ல. மற்றவர்கள் எல்லாம் சீரியஸாய் எழுதுவதில்லை என்றும் பொருளில்லை. ஒரு பாகுபாட்டிற்காக எழுதிய தலைப்பு அது. இங்கே குறிப்பிட்ட வலைப்பதிவர்களைத் தவிர இந்த மாதிரி நிறைய வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். தேடி படிக்க நினைப்பவர்களுக்கு பெரிய உலகமே வசமாகும்.

...மேலும் பேசுவோம்...
மேலும் வாசிக்க...

அறிமுகம் - சாய் ராம்

சென்னை டி.நகரில் பண்டிகை கால கூட்ட நெருக்கடியில் திணறும் ரங்கநாதன் தெருவினைக் கற்பனை செய்து பாருங்கள். வாகனங்களுக்கு அங்கு அனுமதியில்லை. கடைகளுக்குப் படையெடுத்து வரும் மக்கள் மட்டுமே வெள்ளமாய் நிரம்பி அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருப்பார்கள். அப்படியான கூட்டத்தில் நானும் ஒருவன். தெருவின் ஒரு மூலையில் நின்று மக்களின் முகங்களை எந்தச் சிந்தனையும் இல்லாமல் வெறித்து பார்த்தபடி நிற்கும் வழிபோக்கன். சந்தோஷமான சிரிப்போடு செல்லும் குடும்பங்கள், நேற்று நடந்த சண்டையின் நினைவுகளை இன்னும் முகத்தில் தாங்கி வெறுமையாய் நகரும் கணவன் மனைவி, உடல் உபாதைகளை சுமந்து செல்லும் வயோதிகர், தன்னை சுற்றி இந்த உலகம் இயங்குவதாய் கற்பனை செய்தபடி செல்லும் சிறுமி, பருவத்தினைப் போர்த்தி இளைஞர்களைத் திரும்பி பார்க்க வைக்கும் யுவதி, கூட்டத்தில் தனக்கான வாடிக்கையாளர் யார் என கண்களால் வேடிக்கையாடும் தெருவோர வியாபாரி இப்படி ஒவ்வொருவரும் அவர்களுடைய உணர்வுகளை என் மீதும் பூசி செல்வதுண்டு. அதை எங்காவது பதிவு செய்ய வேண்டுமே. அதற்குத் தான் என்னுடைய வலைப்பதிவு.
 
விஜய் டிவியில் 'என் தேசம் என் மக்கள்' நிகழ்ச்சியின் இயக்குனர். இதற்கு முன் 'நடந்தது என்ன' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பணிபுரிந்து இருக்கிறேன். சென்னையில் வாசம்.
 
2008-ம் வருடம் ஜனவரி மாதம் பிளாக்கரில் செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்கிற பெயரில் ஆரம்பித்த வலைப்பதிவு ஓரளவு தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் நீடிக்கிறது. நடுவில் தனியாக சாய்ராம்ஸ் என்று அந்த வலைப்பதிவிற்குத் தனிக்குடித்தனம் நடத்தியாயிற்று.
 
என் வலைப்பதிவில் நூற்றிற்கு மேற்பட்ட கவிதைகள் எழுதி விட்டேன். எல்லாமே வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஒரு கவிதை பதிக்க வேண்டும் என்கிற சுயமாய் விதித்து கொண்ட விதிமுறைக்காக நெருக்கடியில் எழுதப்பட்டவை.

நாம் அவசர கதியில் நடந்து கடக்கும் தினசரி வாழ்க்கையில் எதோ ஒரு மின்னல் போல சில உண்மை கதாபாத்திரங்களைச் சந்திக்க நேர்கிறது. அவர்களைப் பற்றிய எதோ ஒரு விஷயம் நம்மை ஈர்க்கிறது. அவர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடிவதில்லை. அப்படி உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி எழுதிய தொடர் தான் மனிதர்கள் தொடர்.

சிறுகதைகள் எழுத வேண்டுமென ஆர்வமிருந்தும் அதிகம் எழுத முடியவில்லை. ஒரு சிறுகதை வலைப்பதிவர் பாலபாரதியின் கதையினை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து சற்று எனது நடையில் மாற்றி எழுதியது. அதன் பெயர் பேய் வீடு. பேய் கதைகளுக்கு அப்படி என்ன இணையத்தில் டிமாண்ட் அதிகம் என புரியவில்லை, இணையத்தில் 'பேய் கதைகள்' 'திகில் கதைகள்' என தேடி தேடி இந்தக் கதையை வாசித்து இது ஒன்றும் திரில்லர் கதையாக இல்லையே என்று திட்டி விட்டு போகிறார்கள் பல பேர். இதற்காகவே அந்தப் பதிவின் தொடக்கத்தில் இது திரில்லர் கதையல்ல என்று குறிப்பு எழுதி வைத்திருக்கிறேன்.

கட்டுரைகள் சில எழுதியிருக்கிறேன். அவை பெரும்பாலும் அந்தந்த காலத்தில் நிகழ்ந்தவைக்கு எதிர்வினையாக அமைந்தவை. வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல & உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை ஆகியவை மட்டும் தொடராக எழதினேன்.

நம்மை பற்றி எழுதும் போது ஏனோ அது நீண்டு கொண்டே போகிறது. இத்தனைக்கும் எழுத தொடங்கும் போது அறிமுகத்தினை சின்னதாக எழுதினால் போதும் என்று நினைத்து தான் எழுதினேன். ஸாரி.

இங்கே இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்த சீனாவிற்கும் இப்படியான தளத்தினை உருவாக்கி தந்த வலைச்சரத்திற்கும் நன்றி. இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது