எழுத்தின் மீதான வேட்கை பள்ளி முடிக்கும் பருவம் முதலே மனதின் ஏதோ ஒரு மூலையில் குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது. ரகசியமாய் பழைய நோட்டுகளில் கிறுக்கி பதுக்குவதும், கல்வியாண்டின் இறுதிகளின் ஆட்டோகிராப் புத்தகங்களில் வித்தியாசமாய் எதையாவது எழுதுவதையும் வடிகாலாய் பயன்படுத்தி தாகம் தணித்துக் கொண்டிருந்த நிலையில் எழுத்தையும் பேச்சையும் அடிப்படையாகக் கொண்டு ஆட்கொண்டது ஜேஸிஸ் மற்றும் அரிமா சங்கங்கள். ஜேஸிஸ் இயக்கத்தின் பயிற்சி வகுப்புகளும் சில வருடங்கள் ஆக்கிரமித்துக்கொண்டது. அதன் மூலம் காவல் துறை உட்பட்ட பல துறைகளைச் சார்ந்தவர்களிடம் பயிற்சிகளை நடத்த இயல்பிலேயே இருந்த எழுத்து ஆர்வம் பெரிதும் துணை நின்றது.
மாற்றம் நிலையானது என்பதற்கிணங்க, தேடலின் ஒரு ஆச்சரியமாய் 2008ஆம் ஆண்டின் இறுதிப் பருவத்தில் தமிழில் தட்டச்ச முடியும், கூடவே நம் மனதில் இருப்பதை வலைப்பூக்களில் பதிய முடியும் என்பதுவும் தெரியவந்தது.
தட்டுத்தடுமாறி வலைப்பூவை உருவாக்கி முதல் இடுகையாய் கண்தானம் குறித்து சின்னதாய் எழுதிய போது, எதையோ சாதித்த திருப்தி மனதை நிறைத்தது. அதே வேகத்தில் ஒரு சில இடுகைகள் வந்த போதும், அடுத்த சில நாட்களில் ஒரு வெற்றிடம் கனமாய் எழுத்தைக் கவ்விப் பிடிக்க, அடர்த்தியாய் எனக்கும் எழுத்துக்கும் இடையே ஒரு மௌனம் கிடந்தது.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள், ஒன்றும் எழுத முடியாமல் அந்த வெற்றிடம் ஆட்கொண்ட நிலையில், வெறும் வாசிப்பு மட்டுமே தொடர்ந்து என்னை வலைப்பூக்களோடு சுவாசிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு கட்டத்தில் என்னை எழுத்து துரத்த கொஞ்சம் கொஞ்சமாய் என்னைச் சுற்றியுள்ள விடயங்களை பகிர ஆரம்பித்தேன்.
அதற்குப் பின்னர் தான் திரட்டிகள் என்று ஒன்று இருக்கிறதென்பதைக் கண்டுபிடித்து, அதில் இணைக்க பல நாட்கள் வேர்த்து விறுவிறுக்க போராடி, அடுத்து வாக்கு என்றிருப்பதை பாலாசியும் நானும் கண்டுபிடித்த கதையை ஒரு தொடராகவே எழுதும் அளவிற்கு சுவாரசியமானது.
நாட்கள் நகர நகர திரட்டிகள் மற்றும் சக பதிவர்களின் உதவியோடு எழுத்து பரவலாக பலரைச் சென்றடைந்த நேரத்தில், சக பதிவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாக ஈரோட்டில் நடத்திய பதிவர் சங்கமம் எதிர்பாராத வெற்றியை ஈட்டித் தந்தது. அதே நிகழ்வில் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களை ஒன்றிணைக்க ஈரோடு தமிழ் வலைப் பதிவர்கள் குழுமத்தை துவக்கினோம். அருமையான பதிவுலக நண்பர்களை கொண்டுள்ள ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில் நானும் இருக்கின்றேன் என்பது பெருமிதமான ஒன்றாகவே தோன்றுகிறது.
அடுத்து, தமிழ்மணம் திரட்டி நட்சத்திரமாக அங்கீகரித்து ஒரு வாரம் இடுகையிட அளித்த வாய்ப்பு இன்னும் பல நண்பர்களிடம் என் எழுத்தைக் கொண்டு சேர்த்தது. வலைப்பக்கத்தில் எனக்கு அது ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும்.
விவசாயம் சார்ந்த வாழ்க்கையை கால் நூற்றாண்டுகாலம் சுவாசித்த எனக்கு, வளரும் பொருளாதார மாற்றங்களும், அறிவியல் மாயையும், தொழில் வளர்ச்சியும் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத்தை கபளீகரம் செய்வதை பொறுக்க முடியாமல் எழுதிய
மற்றும்
சினிமாவைக் கொண்டாடும் சமூகமும், அரசும் உயிர்வாழ, தன்னை இழந்து உணவு கொடுக்கும் விவசாயி குறித்து இல்லையே என்று ஆதங்கப்பட்ட
வர்ணம் பூசி கண்கள் வழியே மூளையை கவர்ந்திழுத்து விற்கப்படும் கோழிக்குஞ்சுகளைப் போல் நாம் வளர்க்கும் நம் குழந்தைகள் குறித்து எழுதிய
மற்றும்
இடுகைகள் இன்று வாசிக்கும் போதும் என் அடுத்த தலைமுறைக்கு நாம் விடுத்துச் செல்லும் உலகத்தைப் பற்றிய பயத்தை சற்றேனும் கூட்டுவதாகத்தான் இருக்கின்றது.
நம்மைச் சுற்றி நடக்கும் நல்ல விசயங்களை எடுத்துச் செல்லும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் தங்கள் வாழ்க்கையை அர்பணித்து, சுற்றுச் சூழல் காக்க எந்த வொரு சுயநலமும் இன்றி பல்லாயிரக்கனக்கான மரங்களை நட்டு வளர்த்தெடுத்த வாழும் கடவுள்களான திரு. நாகராஜன், திரு அய்யாசாமி குறித்து எழுதிய
ஒரு கிராமத்திற்கு கண் தானம் பெற சென்ற போது நடந்த விசயங்களை சுவாரசியமாக பகிர்ந்த
இடுகைக்கு கிடைத்த வரவேற்பு வலையுலக வாசகர்கள் மேல் மிகுந்த மரியாதையைக் கொண்டு வந்தது.
காதலும், சமூகம் சரி விகிதமாய் கலந்து எழுதிய நிறைய கவிதைகளில்...
இன்றும் வலியாய் கிடக்கும் கனமான கவிதையான
இன்னும் மனதுக்குள் வாசனையாய் வீசும்
ஆகியவை நான் என்னிடம் ரசித்தவைகள்
முதல் நாளில் என்னைப்பற்றிய பகிர்வை….
மேகக் கூடலில் பிறந்த மழைத்துளிபோல்
தொப்புள் கொடி அறுந்த நாள் முதல்
வாழ்க்கையில் வளைந்துநெளிந்து ஓடுகிறேன்
நானும் ஒரு மனிதத் துளியாய்....
தொண்டைக்குழிக்குச் சற்றுக்கீழே தொங்கும்
துலாக்கோல் இடவலமாய் ஊசலாடுகிறது
ஒருபக்கம் நல்லதும் மறுபக்கம் கெட்டதும்
துகள்களாகப் தொடர்ந்து படிகிறது....
அன்பு, கோபம், கனிவு, குரோதம், காதல்,
செருக்கு, பணிவு, காமம், கர்வம், துரோகம்
என ஏதேதோ இயல்பாய் திணிக்கப்படுகிறது
இன்னும் சில தேடித் தேடிப் பற்றுகிறேன்
விதவிதமாய் வர்ணங்களைப் பூசுகிறேன்...
நித்தமும் மாற்றி மாற்றி வேடம் பூணுகிறேன்
மிகக் கவனமாக முடிந்தவரை நல்லவனாக
ஆனாலும் மிதக்கிறது நல்லவன் தட்டு மேற்பக்கமாய்
என்று என்னைப் பிரதிபலிக்கும் என் கவிதையோடு அறிமுகத்தை நிறைவு செய்யும் நேரத்தில் வலைச்சரத்தில் இந்த வாரம் பணியாற்ற வாய்ப்பளித்த அருமை நண்பர் பதிவர் சீனா மற்றும் வலைச்சரம் குழுவிற்கு நன்றிகளை சமர்பித்து மகிழ்கின்றேன்.
நன்றி
பிரியங்களுடன்
- ஈரோடு கதிர்