07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கார்த்திக் சரவணன். Show all posts
Showing posts with label கார்த்திக் சரவணன். Show all posts

Sunday, June 21, 2015

இன்றே இப்படம் கடைசி!

இரண்டு வாரங்கள் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியிருந்தேன். அதனால் தான் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து என குறைவான பதிவர்களை மட்டும் அறிமுகப்படுத்தினேன். நேற்றைக்குத்தான் தமிழ்வாசியிடம் கேட்டேன், இன்னொரு வாரம் எழுத அனுமதிக்க முடியுமா என்று. ஆனால் அடுத்த வாரத்துக்கான பதிவருக்கு அழைப்பு விடுத்தாயிற்றென்று கூறிவிட்டார். அதை விட அருமை அடுத்த ஆசிரியரின் ஏழு பதிவுகள் டிராப்டில் இருக்கின்றன. முதல் பதிவே அட்டகாசம்.

இன்றைய அறிமுகங்கள்:

பதிவர் ஜெய்லானி நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்போது எழுதுவதில்லை. சுவாரஸ்யமாக பதிவுகளை எழுதியவர் இப்போது ஏன் எழுதவில்லையென்று தெரியவில்லை. மீண்டும் எழுதுங்கள் சார்.

கடைசிப் பதிவு - காய்கறி

ஸ்பெஷல் ஜூஸ்


பாண்டியன் பக்கங்கள் என்னும் தளத்தில் எழுதும் நண்பர் பாண்டியராஜ் இலக்கியங்கள் அதிகம் படித்திருக்கவேண்டும். அவருடைய எழுத்து நடையிலேயே தெரிகிறது. பதாகை பக்கிரிகள் என்னும் பதிவு என்னை ஈர்த்தது. பொறியியலில் எந்தப் படிப்பு சிறந்தது? என்னும் பதிவு நம்மையும் யோசிக்க வைக்கிறது. நன்றாக எழுதக்கூடிய இவருடைய தளத்தில் பக்கப் பார்வைகள் குறைவாகவே இருக்கின்றது. நாம் தான் உற்சாகப் படுத்த வேண்டும்.

உங்களுக்கு சேக்காளி என்றொரு பதிவர் இருப்பது தெரியுமா? எனக்குத் தெரியாது. இவருடைய பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். பலருடைய பதிவுகளையும் படிப்பவர். நீங்கள் ஏதாவது தளத்தில் நல்ல பின்னூட்டம் இட்டிருந்தால் அங்கே ஒரு 'டிக்' போட்டுவிட்டுப் போவார். இவருடைய பதிவுகள்:

நொந்த நூடுல்ஸ்

டச் ஸ்கின்



ஜே தா என்னும் பதிவர் இலங்கையைச் சேர்ந்தவர். பள்ளி ஆசிரியர். இவரது மாணவர்கள் சேர்ந்து எடுத்த குறும்படத்தைப் பற்றி சிலாகித்துச் சொல்கிறார்:

இப்பிடி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல

உண்மையாயிருத்தல்

சென்னையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் முகநூலில் எனக்கு நண்பர். ஓரிரு முறை போனில் பேசியிருக்கிறேன். இவர் பதிவர் என்பது இப்போது தான் தெரியும். இவர் எழுதிய பதிவுகள்:

காற்று - புரட்சி

குடும்பத் தலைவிகளின் குமுறல்




ஓரளவுக்கு அதிகம் அறியப்படாத பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மீண்டும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கிடைத்தால் இன்னும் நிறைய பேரை அறிமுகப்படுத்துகிறேன்.

நன்றி.

மேலும் வாசிக்க...

Saturday, June 20, 2015

பின்னூட்டங்களுக்கு கண்டிப்பாக பதிலளிக்க வேண்டுமா?

நண்பர் ஒருவர் நேற்று போன் செய்திருந்தார். வலைச்சரம் எழுதறீங்க, வந்து கருத்து சொல்றவங்களுக்கு ஒரு நன்றி சொல்லலாமே என்றார். சொல்லலாம் தான், நேரமில்லை என்றேன். கஷ்டப்பட்டு நேரம் செலவழிச்சு பதிவர்களை அறிமுகப்படுத்தறீங்க, உங்களை மதிச்சு இங்க வந்து கமென்ட் போடுறவங்களுக்கு என்ன மரியாதை என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவருக்குத் தெரியும், நான் என்ன வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று. இருந்தாலும் அவர் கேட்டது நியாயமான கேள்வி தான். பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் தான், ஆனால் நன்றியையே பலவிதமாகச் சொல்லவேண்டுமே.


இங்கே வரும் பின்னூட்டங்களை கவனிக்காமலில்லை. கைபேசியில் உடனுக்குடன் பார்த்துவிடுகிறேன். எந்தெந்தப் பதிவுக்கு யார் என்ன பின்னூட்டம் எழுதியிருக்கிறார்கள் என்று என்னால் தூக்கத்திலிருந்து எழுந்து கூட சொல்ல முடியும். பின்னூட்டங்களைப் பதிவு செய்யுங்கள். பதில் சொல்லவில்லை என்பதற்காக கோபித்துக்கொள்ள வேண்டாம்.
--------------


தொடர்ந்து எழுதுபவர்களில் மேலும் சில முக்கிய பதிவர்களைப் பார்க்கலாம்.

பதிவர் புதுவை வேலு அவர்கள் குழல் இன்னிசை என்னும் வலைப்பூவில் எழுதிவருகிறார். நிறைய பதிவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட எல்லா வலைப்பூக்களிலும் இவரது பின்னூட்டங்களைக் காணலாம். இவருடைய பதிவுகள் சில:




கூட்டாஞ்சோறு என்னும் வலைப்பூவில் எழுதி வரும் செந்தில் குமார் தெரியாத நிறைய விஷயங்களைத் தொகுத்துத் தருகிறார். சமீபத்தில் தான் அவரது வலைப்பூவைப் பார்த்திருந்தேன். குறுகிய காலத்துக்குள் நூறு பதிவுக்கும் மேல் எழுதிவிட்டார். இன்னதென்றில்லாமல் அனைத்து பதிவுகளையுமே சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறார். 




பரதேசி @ நியூயார்க் என்னும் வலைப்பூவில் எழுதி வரும் ஆல்பி அவர்கள் பதிவை சுவாரஸ்யமாக எழுதுவதில் வல்லவர். கூர்ந்து கவனித்தால் தெரியும் - கொஞ்சம் மெல்லிய நகைச்சுவை இழையோடும் இவரது பதிவுகளில். இசையும் அனுபவப் பதிவுகளும் வெகு சுவாரஸ்யம்.




எண்ணங்கள் என்னும் வலைப்பூவில் எழுதிவரும் கீதா சாம்பசிவம் அவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அனுபவங்களை ரசனையுடன் சொல்வது அவரது இயல்பு. எப்போதுமே உற்சாகமாக எழுதுவது எப்படி என்று இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.




புத்தம் புதிய பதிவர்

வற்றா நதி படித்திருக்கிறீர்களா? அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தான் கார்த்திக் புகழேந்தி. மிகப் பெரிய ஆளெல்லாம் இல்லை, சின்ன வயசு தான். மாதம் இரண்டு மூன்று பதிவுகள் மட்டுமே எழுதினாலும் ஒவ்வொன்றும் மண் மணம் மணக்கும் மணி முத்துக்கள். இவரது தளத்தில் இணைந்திடுங்கள், தொடர்ந்து வாசியுங்கள்.




மீண்டும் நாளை சந்திப்போம்.





மேலும் வாசிக்க...

Friday, June 19, 2015

ஏன் எழுதுவதில்லை?

தொடர்ந்து எழுதாதவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள் இருக்கலாம். உண்மையிலேயே காரணங்கள் தானா அல்லது சப்பைக்கட்டா என்பது அவரவர்க்குத் தெரிந்திருக்கும். எனக்கும் காரணம் இருக்கிறது. தினமும் காலை எட்டு மணி அல்லது எட்டேகால் மணிக்குப் புறப்பட்டு  மகனையும் மகளையும் பள்ளியில் விட்டுவிட்டு வேளச்சேரிக்குச் சென்று வண்டியை நிறுத்திவிட்டு எட்டு ஐம்பது மணி ரயிலைப் பிடித்தால் ஒன்பதரை மணிக்கு மயிலாப்பூர் அலுவலகத்துக்குச் சென்றுவிடலாம். மாலை ஐந்தரை மணிக்கு முடியும் என்றாலும் ஆறு மணிக்குக் குறைந்து வெளியேற முடியாது. ஆறு மணிக்குக் கிளம்பினாலும் வீடு வந்து சேர்வதற்குள் ஏழு மணி ஆகிவிடும்.


இதெல்லாம் ஒரு காரணமா என்கிறீர்களா? இல்லை. நான் ஜப்பானிய மொழி பயில்கிறேன். வரும் ஐந்தாம் தேதி அதற்கான தேர்வும் நடைபெற இருக்கிறது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் வகுப்பு நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரையும் ஞாயிறன்று காலை ஒன்பது மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் வகுப்புகள் இருக்கும். நல்ல வேளையாக சனிக்கிழமை மதியத்துக்குப் பின்னான வகுப்பு என்பதால் பிரச்சனையில்லை. எனக்கு சனிக்கிழமை மதியம் இரண்டு மணி வரை மட்டுமே அலுவலகம். முழு வேலை நாளாக இருந்திருந்தால் ஞாயிறு மட்டும் நடைபெறும் வகுப்பில் சேர்ந்திருக்கவேண்டும். இதில் சேர்ந்திருந்தால் அடுத்த மாதம் தேர்வு எழுத முடியாது. டிசம்பர் மாதத்தில் தான் எழுத முடியும்.


நம்மைப் பொறுத்தவரையில் ஜப்பானிய மொழி கொஞ்சம் கடினமான மொழி. ஆங்கிலேயர்களுக்கு மிக மிகக் கடினமான மொழி. தினம் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரங்கள் செலவழித்தாலேயொழிய புரிந்துகொள்வதும் கற்றுக்கொள்வதும் கடினம். தொடங்கிய புதிதில் கொஞ்சம் விளையாட்டுத்தனமாய் இருந்த நான் சில நாட்களில் இம்மொழியின் கடினத்தை உணர்ந்துகொண்டதும் சீரியசாகப் படிக்கத் தொடங்கிவிட்டேன். மொழி பயில்வதற்காக செலவு செய்யப்படும் நேரமும் என்னை வலைப்பக்கத்திலிருந்து தள்ளிவைத்திருக்கிறது.

இந்த மொழி பயில்வதற்குத் தூண்டியவர் ஒரு வலைப்பதிவர் தான். அபயா அருணா என்ற பெயரில் எழுதிவரும் திருமதி.உமா மகேஸ்வரி அம்மா அவர்கள் தான். சென்னையில் தான் வசிக்கிறார். போனில் பலமுறை பேசியிருக்கிறேன், இருந்தாலும் இது வரை நேரில் சந்தித்ததில்லை. இந்தப் பதிவை பப்ளிஷ் செய்ததும் அழைக்கலாம் என்றிருக்கிறேன். இவரும் எழுதி சரியாக ஒரு வருடம் ஆகிறது. இவருடைய பதிவுகளில் எனக்குப் பிடித்தவை:



இவரது பதிவுகளில் சென்று மீண்டும் எழுத வருமாறு அழையுங்கள்.


தொடர்ந்து உற்சாகமாக எழுதி வருபவர்களில் முக்கியமானவர் தளிர் சுரேஷ் அவர்கள். இவருடைய பாப்பா மலர், ஹைக்கூ கவிதைகள் மற்றும் நகைச்சுவைப் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தவை. பின்னூட்டங்கள் வருகின்றனவோ இல்லையோ - எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறார். இவருடைய வலைப்பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:





எப்போதாவது எழுதி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் பதிவர் சீராளன். அக்கினிச்சுவடுகள் என்னும் வலைப்பூவில் கவிதைகள் மட்டுமே எழுதிவருகிறார். நம்முடைய பின்னூட்டங்கள் இவரைத் தொடர்ந்து எழுதச் செய்யட்டும்.




புத்தம் புதிய பதிவர் ஒருவரைப் பார்க்கலாமா?  நண்பர் ப்ரீத்தம் கிருஷ்ணா முகநூலில் தீவிரமாக இயங்கி வருபவர். அங்கே வெளியிடும் சில பெரிய பதிவுகளை தனது ப்ரீத்தம் கிருஷ்ணா என்னும் வலைத்தளத்திலும் அவ்வப்போது வெளியிடுபவர். சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளே அதிகம் எழுதுகிறார். எல்லா பதிவுகளையும் முகநூலிலேயே படித்துவிடுவதால் நான் அதிகம் இவரது தளத்துக்குச் செல்வதில்லை. இவருடைய பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:




மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.
மேலும் வாசிக்க...

Thursday, June 18, 2015

கொஞ்சம் பேசலாமா?

வணக்கம்

நேற்றைய தினம் படிக்கும் வேலை இருந்ததால் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்திருந்தும் வலைச்சரத்துக்கு எழுத முடியவில்லை. அதில் வருத்தம் இருந்தாலும் நிறைய பாடங்களைப் படித்ததில் திருப்தி ஏற்பட்டுவிட்டது.


நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் - ஒரு பதிவு எழுதினால் அன்றைய தினம் மட்டும் ஐநூறு பேர் வருவார்கள். அடுத்த நாள் இருநூறு பேரும் எழுதாத மற்ற நாட்களில் சராசரியாக நூறு பேரும் வந்துகொண்டிருந்தார்கள். இப்போது ஒரு பதிவு எழுதினால் அன்றைய தினம் முன்னூறு பேர் மட்டுமே வருகிறார்கள். எழுதாத மற்ற நாட்களில் ஐம்பது பேர் வந்தாலே பெரிய விஷயம். சொல்லப்போனால் தொடர்ந்து எழுதாத காரணத்தால் பல வாசகர்களை இழந்துவிட்டேன் என்பது தான் உண்மை. ஏதோ ஒரு ஊரிலிருந்தோ பெயர் தெரியாத நாட்டிலிருந்தோ யாரோ ஒருவர் அலைபேசியில் அழைத்து "உங்க பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று சொல்லும்போது கிடைக்கும் ஆனந்தம் அலாதி.  


தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் பதிவர் துளசி கோபால் அவர்கள். பல வருடங்களாக இவருடைய பதிவுகளைப் படித்து வந்தாலும் நேரில் சந்தித்தது என்னவோ கடந்த ஆண்டு மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் தான்.  இவர் எழுதிய "அக்கா" வாங்கி ஆறு மாதத்துக்கும் மேலாகிறது. இன்னும் படிக்கத் தொடங்கவில்லை. இவரது எழுத்துக்கள் உரைநடையாக இல்லாமல் பேச்சு வழக்கில் இருக்கும். சமீபத்தில் எழுதிய பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:

நியூசிலாந்து நாட்டின் இணைய வேகம் பற்றிய பதிவு.



பதிவர் துளசி கோபால் அவர்கள் எழுதிக்கொண்டிருக்கும் மூன்று மாநிலப் பயணத்தொடர் மிகவும் சுவாரஸ்யம்.




தொடர்ந்து உற்சாகமாக எழுதி வருபவர்களில் அடுத்ததாக விசுAwesomeமின் துணிக்கைகள் என்னும் தளத்தில் எழுதிவரும் RJ விசு அவர்கள். இவர் எழுதிய விசுவாசமின் சகவாசம் புத்தக வெளியீடு கடந்த ஆறாம் தேதி வேலூரில் நடைபெற்றது. அன்றைய தினம் என்னுடைய திருமண நாள் என்பதாலும் வகுப்பு இருந்ததாலும் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. இவரது தளத்தைத் தொடர்ந்து வாசித்து வந்தாலும் கருத்துரை இட்டதில்லை. இவரது பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:




மதுரைத்தமிழன் என்றால் பதிவர்களில் அறியாதவர்களே இருக்கமாட்டார்கள்.  காரணம், ஒவ்வொரு பதிவரையும் அன்பாகக் கலாய்ப்பதும் பதிலுக்கு நாம் கலாய்த்தால் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொள்வதும் இவரது சுபாவம். தவிர, அரசியல் நையாண்டி பதிவுகள் இவரைப்போல் யாராலும் எழுதமுடியாது. போட்டோஷாப்பிலும் பலே ஆள். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இவர் இந்தியாவுக்கு வரும்போது கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளிடமும் அடி வாங்குவது உறுதி என பலரும் பின்னூட்டத்தில் தெரிவிப்பதுண்டு. மிக சமீபத்தில் இவர் தமிழகம் வந்திருந்தார். பதிவர் விசு அவர்களின் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டார். மதுரைத்தமிழனிடம் போனில் உரையாடும் வாய்ப்பு மட்டுமே கிட்டியது. இவரது பதிவுகளில் என்னைக் கவர்ந்தவை:




நல்ல உணவு வகைகளையும் வித்தியாசமான உணவுகளையும் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து ருசி பார்க்கும் பதிவர் ஒருவர் இருக்கிறார். அவர் கடல்பயணங்கள் என்னும் தளத்தில் எழுதிவரும் திரு.சுரேஷ் குமார்.  கடைக்கு தேநீர் அருந்துவதற்காக வெளியே சென்றவர் நல்ல தேநீரை சுவைக்க கொஞ்சம் கொஞ்சமாக கேரளா வரை சென்றுவிட்டவர். விதம் விதமான ஹோட்டல்களையும் சாப்பாடு வகைகளையும் ருசி பார்ப்பவர். ஹோட்டல் மட்டுமின்றி சிறு பிள்ளையாவோம் என்ற தலைப்பில் எழுதும் பதிவுகள் நம்மை இருபது இருபத்தைந்து வருடங்கள் முன்னர் இழுத்துச் செல்லும். இவரது சமீபத்திய பதிவுகளில் எனக்குப் பிடித்த சில






புத்தம் புதிய பதிவர் ஒருவரை அறிமுகப்படுத்தலாமா?


சுந்தரமூர்த்தி என்னும் பெயரில் முகநூலில் இருக்கிறார். செல்லா என்னும் பெயரில் வலைப்பூவில் எழுதிவருகிறார். சுவாரஸ்யமான கவிதைகளும் சில கதைகளும் எழுதியிருக்கிறார். இதுவரை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறாரா தெரியவில்லை. நிறைய பதிவுகள் எழுதியிருந்தாலும் ஏனோ பின்னூட்டங்கள் அதிகம் வந்ததில்லை. இவரது பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:




இன்னும் பேசலாம் - நாளை.

மேலும் வாசிக்க...

Tuesday, June 16, 2015

யார் எழுதுகிறார்கள்?

இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுப் பார்ப்போமே! தொடர்ந்து எழுதுபவர்கள் சிலரே. தொடர்ந்து எழுதுபவர்கள் என்பதில் தினமும் எழுதுபவர்கள் மட்டுமல்ல, வாரம் ஓரிரு பதிவுகள் எழுதுபவர்கள், மாதம் இரண்டு மூன்று பதிவுகள் எழுதுபவர்களும் அடக்கம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வலைப்பதிவுகளில் கோலோச்சிய சில பதிவர்கள் கடந்த சில மாதங்களாக ஒன்றுமே எழுதாமல் இருக்கிறார்கள். வேலைப்பளு, நேரமின்மை எனப் பல காரணங்கள் கூறினாலும் அவர்களுக்கு சோம்பல் மற்றும் எழுதுவதற்கான உற்சாகமான மனநிலை இல்லை என்றே சொல்லலாம்.

இவர்களில் முக்கியமான ஒருவர் வாத்தியார். திரையுலகின் வாத்தியார் எம்.ஜி.ஆர். என்றால் வலையுலகின் வாத்தியார் எங்கள் பாலகணேஷ் அவர்கள் தான். அவரின் மின்னல் வரிகள் தளத்தில் பின்னூட்டம் இடுவதற்குப் பலமுறை போட்டி கூட நடந்திருக்கிறது. அவருடைய தளத்தைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்குத் தெரியும். அவருடைய சரிதா கதைகள், மொறுமொறு மிக்சர் உள்ளிட்ட பதிவுகளுக்கும் ஹாஸ்யமான எழுத்து நடைக்கும் பலர் அடிமை. இப்போது சில மாதங்களாக எழுதுவதே இல்லை. கேட்டால் இந்த வேலை இருக்கிறது, அந்த வேலை முடியட்டும், அதன் பின்னர் ஆரம்பிக்கிறேன் என்று சாக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்.

நான் பலமுறை நேரிலும், தொலைபேசியிலும் தனிப்பதிவில் எழுதியும் அவரை எழுத வருமாறு கேட்டுப் பார்த்துவிட்டேன். இப்போது வலைச்சரம் வாயிலாகவும் கேட்கிறேன். வாருங்கள் வாத்தியாரே! வலைச்சர வாசகர்களும் கேளுங்கள்.

அவருடைய பதிவுகளில் எனக்குப் பிடித்தவை





யார் எழுதுகிறார்கள் என்று தலைப்பிட்டு தற்சமயம் எழுதாதவரை அறிமுகப்படுத்தி விட்டேன். ஆமாம், யார் எழுதுகிறார்கள்? எல்லாருமே உற்சாகமாகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். முகநூலில் சிலர் மூழ்கிவிட்டதால் இங்கே எழுதுவதைக் குறைத்துக்கொண்டுள்ளார்கள். தொடர்ந்து எழுதிவருபவர்கள் சிலரைப் பார்க்கலாமா?


கடவுள் வாழ்த்துப் பாடல்களும் சிறு கவிதைகளும் இன்னும் சமையல் குறிப்புகளும் நிறைந்திருக்கிறது இவரது வலைத்தளத்தில். அவற்றில் என்னைக் கவர்ந்தவை



அடுத்தது எங்கள் ப்ளாக் என்னும் வலைப்பூ. இது தனி நபர் வலைப்பூ இல்லை என்றாலும் ஸ்ரீராம் சார், கௌதமன் சார் ஆகியோர் உற்சாகமாக எழுதிவருகிறார்கள். சில சமயங்களில் ஒரே ஒரு படம் மட்டும் பதிந்து பின்னூட்டங்களை அள்ளிச்செல்பவர்கள். வெள்ளிக்கிழமை வீடியோ மற்றும் அலுவலக டார்ச்சர் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இந்த வலைப்பூவில் சில:




அடுத்தது சும்மா எனும் வலைப்பூவில் எழுதிவரும் தேனம்மை லட்சுமணன் அவர்கள். செட்டிநாட்டு வீடுகளாகட்டும், புத்தக அலசல்களாகட்டும், பயணக் கட்டுரைகளாகட்டும், சமையல் குறிப்பு, கோலங்கள் எல்லாவற்றிலும் வெளுத்துக்கட்டுபவர். இவரது பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:




நம் புலவர் திரு.ராமானுஜம் ஐயா அவர்கள் எழுதிவரும் கவிதைகள் அனைவரும் அறிந்ததே. அவருக்கு இப்போது வயது எண்பதுக்கும் மேல். இந்த வயதிலும் தனது உடல் நலனையும் பொறுத்துக்கொண்டு தவறாது கவிதைகள் எழுதிவருகிறார். பின்னூட்டங்கள் தான் தன்னை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதாக ஒரு நாள் நேரில் பார்த்தபோது சொன்னார். அவரது கவிதைகளில் சில:




புத்தம் புதிய வலைப்பதிவர் ஒருவரைப் பார்க்கலாமா? முகநூல் நண்பர் செல்ல பாண்டியன். பெங்களூருவில் வசித்துவரும் இவரது வலைப்பூ The Tramp Times தற்போது தான் அறிமுகமானது. என்னுடைய பதிவுகளை யார் படிக்கப் போகிறார் என்று அங்கலாய்த்திருந்தார். நாமும் நமது பின்னூட்டங்களை அளித்து அவரை உற்சாகப்படுத்துவோம். இவரது தளத்தில் சிற்சில மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளன. வலைச்சித்தர் உதவுவார் என்று நம்புவோம். இவர் எழுதிய பதிவுகளில் சில:




மீண்டும் நாளை சில பதிவர்களுடன் சந்திக்கலாம். தங்களது பின்னூட்டங்களைப் பதிந்து வையுங்க. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக மறுமொழியையும் பதிவு செய்கிறேன்.


நன்றி


மேலும் வாசிக்க...

Monday, June 15, 2015

ஸ்கூல் பையன் மீண்டும் வலைச்சரத்தில்

அனைவருக்கும் வணக்கம். இரண்டாவது முறையாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்பதில் எனக்கு நிறைய மகிழ்ச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வலைச்சரத்தில் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டேன் என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஏற்கனவே வலையுலகில் நிறைய நண்பர்கள் இருந்தாலும் வலைச்சரம் வாயிலாக இன்னும் பலரையும் காண்பதில் / காணப்போவதில் மிக்க மகிழ்ச்சி.

முதல் நாள் சொந்தப் பதிவுகளை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்பதால் கடந்த வலைச்சரப் பணிக்குப் பின் எழுதிய சில பதிவுகளை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


நம்மில் பலர் தினமும் நடை பயிற்சி மேற்கொள்கிறோம்.  தொப்பையைக் குறைக்க, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க, கொழுப்பைக் குறைக்க, உடல் உறுதி பெற என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.  ஆனால் நாம் இப்படி மாங்கு மாங்கென்று நடக்கிறோமே, நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்?  நாம் நடந்ததற்கு ஒரு அளவு சொல்ல முடியுமா?  முடியும் என்கிறது இந்த ஆண்டிராய்டு அப்ளிகேஷன்.



சென்னையிலேயே மிகப்பெரிய ஹோட்டல் இதுதான். ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற இது கிண்டி ஸ்பிக் வளாகத்துக்கு எதிரே அமைந்துள்ளது.  இனி வரும் காலங்களில் சோழா ஹோட்டலுக்கு எதிரே ஸ்பிக் பில்டிங் அமைந்துள்ளது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் ஒருநாள் மதியம் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றிய பதிவு.


ஒரு அனுபவப் பகிர்வு. இப்போதும் கூட தினம் பத்து பேராவது  படித்துவிடுகிறார்கள். பல்பு வாங்கிய பதிவு என்று கூட சொல்லலாம். படித்துப் பாருங்கள்.


மின்னணு சாதனங்கள் மனிதனை ஆக்கிரமித்திருக்கும் இந்த காலகட்டத்தில் இதனை எதிர்த்து ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். படியுங்கள். கடைசியில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது.



தாத்தா பற்றிய பதிவும் ஆச்சி பற்றிய பதிவும் அதிக வரவேற்பைப் பெற்றன.

என் தாத்தாவை எனக்கு எப்போதிலிருந்து பரிச்சயம் என்று தெரியாது. ஆனால் அம்மா சொல்லுவார், நான் பிறந்ததும் முதல்முறையாக என் தாத்தாவின் கையில் தான் கொடுக்கப்பட்டேன் என்று. என்னைக் கையில் வாங்கியதும், "பேரப்புள்ள" என்று மகிழ்ந்து கொஞ்சியவர். அவருடைய மகிழ்ச்சிக்கு நான் தான் முதல் பேரக்குழந்தை என்பது கூட காரணமாக இருக்கலாம்.


அந்த சனிக்கிழமை இரவு ஒன்பது முப்பது மணிக்கு அம்மாவிடமிருந்து போன். "கோமதி ஆச்சி போய்ட்டாங்க சரவணா" அம்மாவின் கண்களில் கண்ணீர் உகுத்திருப்பது குரலில் தெரிந்தது. "என்னம்மா ஆச்சு?" மீதி விவரங்களைக் கேட்டுக்கொண்டேன்.




சும்மா ஹோட்டல், சினிமா, அனுபவம் என்று எழுதிக் கொண்டிருந்த எனக்கு சிறுகதைகள் எழுதும் ஆசை வந்திருக்கிறது. சிற்சில கதை எழுதியிருக்கிறேன். சிலவற்றுக்குப் பாராட்டும் சிலவற்றுக்குத் திட்டும் வாங்கியிருக்கிறேன்.

பாராட்டு பெற்ற சிறுகதைகள்

அவள் பெயர் நான்சி. அவளுடன் வாக்கிங் வருபவர் அப்படித்தான் அழைப்பார். தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் அவருடைய குரலைக் கேட்கமுடியும். நான்சி எங்காவது நின்றுவிட்டால் "நான்சி கமான்" என்பார். சாலையில் கிடக்கும் தேவையில்லாத வஸ்துக்களை அவள் முகர்ந்தால், "நான்சி டோன்ட்" என்பார். அவளும் அவருடைய சொல்பேச்சைத் தட்டமாட்டாள். அவர்கள் வீடு இருக்கும் தெருவிலிருந்து இரண்டு தெருக்கள் தாண்டித்தான் நான் வசிக்கிறேன். என் இருப்பிடத்தைக் கடந்துசென்று தெருமுனையிலிருக்கும் கடையில் அவர் தினமும் தேநீர் குடிப்பார். நான்சிக்கு பிஸ்கட்.


நான் இப்போது மீனாட்சியைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். தேடி என்றால் காணவில்லை என்று பொருள் கொள்ளவேண்டாம். அவள் இங்கேயே தான் இருக்கிறாள். எனக்காகவே காத்திருக்கிறாள். கொஞ்சமல்ல, பதினேழு வருடங்களாய்.


கொஞ்சம் தவறியிருந்தால் விழுந்திருப்பேன். மூடப்படாத டிரைனேஜ் அது. யாரோ ஒரு பெரியவர், "தம்பி தம்பி, பாத்து" என்று குரல் கொடுத்திருக்கவில்லையென்றால் உள்ளே விழுந்திருப்பேன். போனில் பேசியபடியே நடந்ததால் வந்த வினை. மூடியைக் காணவில்லை. யாரும் அங்கே நடக்காமலிருக்க மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பெரிய கற்களை வைத்து நடுவே ஒரு மரக்கிளையை செருகியிருந்தார்கள்.


திட்டு வாங்கிய சிறுகதைகள்

அலுவலகம் முடிந்து வெளியே வந்தபோது மணி பத்தைக் கடந்திருந்தது. நான் எப்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும் என்று திட்டமிடுகிறேனோ அப்போதெல்லாம் ஏதாவது முக்கியமான வேலையில் மாட்டிக்கொள்கிறேன்.


இந்தக்கதையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரம் நான் இறந்துபோயிருப்பேன். காரணம் - விரக்தி. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன விரக்தி என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.


இயக்குநர் கேபிள் சங்கருடைய தொட்டால் தொடரும் திரைப்படம் வெளியாகவிருந்த சமயத்தில் அவர் ஒரு குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதாவது, "தொட்டால் தொடரும்" என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு நிமிடத்தில் ஒரு நல்ல கருத்துள்ள குறும்படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இதையொட்டி என் மனதில் தோன்றிய ஐடியா ஒன்றை நண்பர் ஒருவரிடம் தெரிவிக்க,அவருக்கும் இது பிடித்துப் போனது. அவ்வகையில் நான் எடுத்த குறும்படம் - தொட்டால் தொடரும்.



சுய அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். நாளை முதல் பதிவர் அறிமுகம் தொடங்குகிறேன். நான் எழுதிய பதிவுகளைப் படித்துப் பாருங்கள். தங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் அந்தந்தப் பதிவிலோ அல்லது இங்கேயே பின்னூட்டத்திலோ சொல்லுங்கள்.

நன்றி...



மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது