07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஜோசப் பால்ராஜ்.. Show all posts
Showing posts with label ஜோசப் பால்ராஜ்.. Show all posts

Sunday, October 5, 2008

நன்றியோடு விடைபெறுகிறேன்.

கடந்த ஒரு வாரமாக எனக்கு அளிக்கப்பட்ட வலைச்சர ஆசிரியர் பொறுப்பு இன்றோடு முடிவுக்கு வருகின்றது.

ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது இட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் சில தவிர்க்க இயலாத அலுவலக வேலைகளின் காரணத்தால் அவ்வாறு செய்ய இயலவில்லை. மேலும் பல நல்ல பதிவர்களைக் குறித்தும் எழுத வேண்டும் என்ற எனது எண்ணமும் நிறைவேறவில்லை.

வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அய்யா அவர்கள் என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த ஒரு வார ஆசிரியர் பொறுப்பை அளித்தமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்திருப்பேன் என நம்புகிறேன்.
எல்லா பதிவர்களைப் குறித்தும் எழுதியிருந்தேன். எனதுப் பதிவுகளைக் குறித்தும் எழுத வேண்டும் என்ற எண்ணமிருப்பினும், என்னைப் பற்றி நானே எழுத எனக்கு மனம் ஒப்பவில்லையாதலால் அதை தவிர்த்துவிட்டேன். எனது எழுத்துக்கள் யாரையாவது கவர்ந்திருந்து அவர்கள் எழுத வேண்டும் என நினைத்தால் எழுதட்டும் என விட்டுவிடுகிறேன்.

மிக நீண்ட நாட்களாக வலைப்பதிவுகளை எழுதாமல் இருந்த லதானந் அவர்களை மீண்டும் பதிவெழுத நான் மேற்கொண்ட முயற்சி நல்ல பலன் அளித்தது என்ற திருப்தியோடும், என் மனம் கவர்ந்த பலரில் ஒரு சிலரைக் குறித்து எழுதினேன் என்ற திருப்தியோடும் விடை பெறுகிறேன். இந்த ஒரு வாரகாலத்தில் பின்னூட்டங்களின் வாயிலாகவும், தொலைபேசி, மின் மடல், வலையுரையாடல் வாயிலாக பாராட்டியவர்களுக்கு மிக்க நன்றிகள். நாளை முதல் ஆசிரியராகப் பெறுப்பேற்க உள்ள பதிவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மேலும் வாசிக்க...

Friday, October 3, 2008

மனதைக் கவர்ந்த பதிவர்கள்

முன்கூட்டியே சொல்லிடுறேன் இந்தப் பதிவில் சொல்லியிருப்பவர்கள் மட்டுமே என் மனம் கவர்ந்தப் பதிவர்கள் அல்ல. இன்னும் பலர் இருக்கின்றார்கள், எல்லோரையும் பற்றி எழுத வேண்டுமாணால் நானே வலைச்சரத்தின் நிரந்தர ஆசிரியராக அமரவேண்டியிருக்கும். எனவே சிலரை மட்டுமே குறிப்பிட்டாக வேண்டிய நிலை. குறிப்பாக புதிய பதிவர்களை முன்னிலைப் படுத்தலாம் என நினைக்கிறேன்.

இனியவள் புனிதாவின் ஈரமான நினைவுகள்.

இனியவள் புனிதா, பெயரில் இருக்கும் இனிமை பதிவுகளில் அதுவும் குறிப்பாக அவரது கவிதைகளில் நிறைந்து கிடைக்கிறது. ஈரமான நினைவுகள் எனும் பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் இவரது எழுத்துக்களை படித்தால் அதன் நினைவுகள் ஈர நெற்றியில் இடும் குங்குமம் போல் மனதுக்குள் ஒட்டிக்கொள்ளும். தொடர் கதையும் எழுதியுள்ள இவர் யாதுமாகி நின்றாய் எனும் கதையை ஏன் பத்து பாகங்களோடு அப்படியே விட்டுவிட்டார் எனத் தெரியவில்லை.

சின்னதும் பெரிதுமாய் இவர் எழுதியிருக்கும் கவிதைகள் மிக அருமை. என்னைக் கவர்ந்த இருக் கவிதைகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன். மலர்களின் மவுன விரதம் மிக அழகிய கவிதை, இப்படியும் யோசிக்க முடியுமா என வியக்க வைக்கிறது. எனக்குள் இதயம் தனித்திருக்கே... இப்படி ஒரு கவித்துவமான வாழ்த்தை பெறுபவரும், வாழ்த்துபவரும் மிக பாக்கிய சாலிகள் தான்.

துக்ளக் ம‌கேஷ்

இவரு எங்க சிங்கை சிங்கம்ல. இவரு ஒரு மிகப்பெரிய வங்கியில் மிகப்பெரிய பணியில் இருந்தாலும், மிக எளிமையாக பழகுபவர். மிக நீண்ட காலம் தமிழ் மணம் மூலமாக எல்லாத் தமிழ் பதிவுகளையும் வாசித்துக் கொண்டிருந்து விட்டு, சமீபத்தில் துக்ளக் எனும் வலைப்பூவை ஆரம்பித்து எழுதவும் ஆரம்பித்துள்ளார்.

மிக எளிய நடையில், சரியாக சொல்வதுன்னா, ஒரு கிராமத்து மரத்தடி டீக்கடையில் இருக்க பெஞ்ச்ல பக்கத்துல உக்காந்துகிட்டு பேசிகிட்டு இருக்க மாதிரி மிக எளிமையா சுவாரசியமா எழுதறது தான் இவரோட பதிவுகள். எல்லாத்துக்கும் மேலா நமக்கு நெம்ப புடிச்ச கொங்கு வட்டாரத் தமிழ்லயே எழுதுறது இவரோட சிறப்பு. அவனோடெ இராவுக‌ள் எனும் த‌லைப்பில் இவ‌ர் எழுதிவ‌ரும் புத்த‌க‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் இவ‌ர‌து ஆழ்ந்த‌ வாசிப்ப‌னுவ‌த்தைக் காட்டும் ப‌திவுக‌ள். தலைப்ப பார்த்து தப்பா நினைச்சுராதீங்க, இரவுகளில் இவர் படிக்கும் புத்தகங்களைப் குறித்து எழுதும் பதிவுகள் என்பதால் இப்படி ஒரு தலைப்பை வைத்திருக்கிறார்.

மொள‌ச்சு வ‌ரும்போது எனும் த‌லைப்பில் இவ‌ர் எழுதியுள்ள‌ இவ‌ர‌து இளமைக்கால‌ குறும்புக‌ள் ப‌டிக்க‌ மிக‌ சுவையாய் இருக்கும் ப‌திவுக‌ள். இதுவரை இவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை பலமுறை தெலைபேசியில் உரையாடியுள்ளோம். ச‌மீப‌த்தில் ப‌ரிச‌ல்கார‌ரின் ப‌திவில் இவ‌ர‌து புகைப்ப‌ட‌த்தை பார்த்துவிட்டு இந்த‌ குழ‌ந்தை முக‌த்துக்கார‌ரா இத்த‌னை குறும்புக‌ளுக்குச் சொந்த‌க்கார‌ர் என‌ ஆச்ச‌ரிய‌மாய் இருக்கிற‌து.

கையேடு

1999 ஆண்டு தஞ்சை மாவட்டம் பூண்டிக் கல்லூரி இளங்கலை இயற்பியல் (B.Sc, Physics) இறுதியாண்டு மாணவர்கள் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திற்கு (Indian Institute of Science, IISc) கல்விச் சுற்றுலா சென்றனர். அங்குள்ள எல்லா துறைகளையும் சுற்றிப்பார்க்க ஒரு முழுநாளை செலவழித்த மாணவர்கள் அன்று மாலை அங்கிருந்து புறப்படும் போது, அவர்களுள் மிக அருமையாக படிப்பவரும் மிக அமைதியானவருமான ஒரு மாணவர் மிக மெல்லியக் குரலில் சொன்னார் " கட்டாயம் நான் இங்கு படிப்பேன்" என்று. பூண்டி கல்லூரியில் இளங்கலை முடித்துவிட்டு சென்னை அண்ணா பல்கலையில் மேறபடிப்பும் முடித்துவிட்டு சொன்னது போல் இந்திய அறிவியல் கழகத்தில் முனைவர் படிப்புக்கு சேர்ந்தார் அந்த மாணவர். அந்த அமைதியான, சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டிய மாணவர் தான் இந்த கையேடு ரஞ்சித். ( அதே சுற்றுலால ஒரு உருப்புடாதவனும் கலந்துகிட்டான், அவன் வேறு யாரும் இல்ல, நான் தான்.)

இவரது பதிவுகள் ஒரு கலவையான உணர்வுகள். மன்னிப்புக் கடிதம் ஒரு குழந்தையை அது பிறந்தது முதல் படிப்பு, வெற்றி என்று அதை பெற்றோர் படுத்தும்பாடுகளை சொல்லும் கடிதம் படிப்பவர் மனதில் சுரீர் என தைப்பது உறுதி. இந்தியா - அமெரிக்க அணு உடன்படிக்கை மற்றும் இந்திய அணு ஆற்றல்..!!?? என்ற இவரது பதிவு அணு ஒப்பந்தத்தைப் குறித்த சொல்லப்படாத தகவல்கள் இதில் இருக்கின்றது. இந்தியாவில் எவ்வளவுதான் விலைவாசி உயர்ந்தாலும் மனித உயிரின் விலைமட்டும் மிகவும் மலிவுதான். பாதுகாப்பு என்பதை ஒரு பொருட்டாகவே யாரும் மதிப்பதில்லை. அதிலும் அணு உலைகள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அங்கு நடந்த பாதுகாப்புக் குறைபாடுகள் பலவற்றை இவர் தெளிவாக எழுதியுள்ளார்.

இவரது பதிவுகளில் சிறந்தப் பதிவுகளைக் குறித்து சிறுகுறிப்பு வரைய வேண்டுமாணால் எல்லாப் பதிவுகளையும் குறித்தும் சொல்ல வேண்டி வரும். நான் சொல்வதை விட நீங்களேப் படிப்பதுதான் சிறப்பாக இருக்கும்.

இன்னும் பல நல்லப் பதிவர்களைக் குறித்து எழுத வேண்டும் என்ற ஆவல் என்னுள் இருப்பினும், நேற்று காலை முதல் இடையிடையே என் அலுவலகத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளால் சில சிக்கல்களைத் தீர்க்க வேலை செய்ய வேண்டியிருந்ததால் அதிலும் நேற்று இரவிலிருந்து அதிகாலை 4 மணி வரை வேலை செய்தமையாலும் நேரமில்லாமல் போய்விட்டது.
மேலும் வாசிக்க...

Thursday, October 2, 2008

தி கோல் கட்டாய வெற்றிக்கு வழிகாட்டி

எனக்கு மிகவும் பிடித்த நான் பலமுறை படித்த இந்த புத்தகம் The Goal - A Process of Ongoing Improvement. By Eliyahu M. Goldratt, Jeff Cox.

மருந்து சாப்பிட குழந்தைகள் மறுக்கும் போது அதே மருந்தை தேனில் கலந்து தருவார்கள் அல்லவா? அது போலத்தான் இந்த புத்தகமும். இலியாஹூ.எம்.கோல்ட்ராட் எனும் ஒரு சிறந்த தொழில் மேலாண்மை ஆலோசகரின் அருமையான கண்டுபிடிப்பான தியரி ஆஃப் கன்ஸ்ட்ரைன்ஸ் Theory of Constraints சுருக்கமாக TOC ஜெஃப் காக்ஸ் எனும் நாவலசிரியரின் கைவண்ணத்தில் அழகிய நாவலாக உருபெற்றதுதான் இந்த புத்தகம்.

இந்தக் கதையின் கதாநாயகன் அலெக்ஸ் ரோகோ ஒரு பெரிய உற்பத்தி நிறுவனத்தில் உள்ள மெட்டல் ப்ராஸஸிங் ப்ளாண்டின் மேலாளர். இவரது ப்ளான்ட்டில் எந்த வேலையும் நேரத்துக்கு முடிவதேயில்லை. இதனால் வாடிக்கையாளர்களிடம் கெட்ட பெயரும், நிறுவனத்துக்கு பொருள் இழப்பும் ஏற்படுகிறது. இதனால் இவரது உயர் அதிகாரி இவருக்கு 3 மாத கெடு விதிக்கிறார். இந்த மூன்று மாதத்திற்குள் இழப்பை சரிகட்டி, லாபம் சம்பாதிக்கவில்லையென்றால் உன் ப்ளான்ட்டை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என உயர் அதிகாரி சொல்லிவிடுகிறார்.

ஜோனா எனும் தொழில் மேலாண்மை ஆலோசகரின் உதவியுடன் நம்ம கதாநாயகன் அலெக் ரோகோ எப்படி தனது ப்ளான்டை நஷ்டத்தில் இருந்து மீட்டு, லாபப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார் என்பதுதான் முக்கியக் கதை. அதோடு வேலை வேலை என எல்லா நேரமும் வேலையையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தன் மனைவியுடன் நேரம் செலவழிக்காமல் இருப்பதால் இவரது மனைவி கோபித்துக் கொண்டு செல்வதும், அவரை சமாதானப்படுத்துவதும் முக்கிய கதையின் ஓட்டத்தைப் பாதிக்காத வண்ணம் அழகாக சொல்லப்பட்டுள்ளது.

ரோகோவின் பிரச்சனைகள் அனைத்திற்கும் ஜோனா தீர்வு அளிக்கும் முறை மிக அருமையாய் இருக்கும். ரோகோ ஒரு கடினமான கேள்வி கேட்டால் ஜோனா பத்து சுலபமான கேள்விகள் கேட்டு, இவை அனைத்திற்கும் நீயே விடை கண்டுபிடி, அப்போது உனது கேள்விக்கு பதில் கிடைத்துவிடும் என்றுச் சொல்வார்.

இது தான் நான் இந்தப் புத்தகத்தில் இருந்து கற்றுக்கொண்ட முக்கிய பாடம், இதை நான் எனது வேலையிலும் உபயோகித்து வெற்றியடைந்திருக்கிறேன். ஒரு பிரச்சனையை ரொம்ப சுலபமாக அணுக அதை முழுவதுமாய் அணுகுவதைவிட முதலில் அதை சுக்கு நூறாய் உடைக்க வேண்டும். பின் ஒரு ஒரு துகளையும் மிக எளிதாக சமாளித்து விடலாம்.

இப்படி செய்வதில் உள்ள மிகப்பெரிய பலன் என்னவென்றால், நான் நமது பிரச்சனைகளைத் தீர்க்க யார் உதவியையும் நாட வேண்டியதில்லை. நாமே தீர்த்துவிடலாம். அதைத்தான் ஜோனா, அலெக்ஸ் ரோகோவிற்கு கற்றுத் தருவார். எல்லாவற்றிற்கும் ஜோனாவையே தேடும் அலெக்ஸ் ஒரு கட்டத்தில் தானே இனி என்னென்ன பிரச்சனைகள் வரும், அவற்றை எப்படி அணுகுவது என மிக அருமையாகத் திட்டமிட்டுவார்.

சரி, இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் TOC ஐ கொஞ்சம் என்னான்னு பார்போமா? நாம் எதை இலக்கு என்று நினைக்கிறோமோ அது உண்மையான இலக்காக பல நேரங்களில் இருப்பதில்லை. வெற்றியடைய முதல் தேவை இலக்கு எது அல்லது என்ன என்பதை சரியாக தீர்மானிப்பது தான். இலக்கை அடைய பல நிலைகளை (Stages) தாண்டி வரவேண்டியிருக்கும், பல செயல்களை ( Processes) செய்ய வேண்டியிருக்கும். அதில் ஏதாவது ஒரு நிலை/செயல் சிக்கலான நிலையாக/செயலாக‌ (Bottle Neck Process or Bottle Neck Stage. This is called as Constraint) இருக்கும் அதை கண்டறிந்து, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சரிசெய்ய வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டியது என்ன என்றால் ஒரு சிக்கலான நிலையை கண்டறிந்து அதை சரிசெய்ய முயலும் போது சாதாரணமாக இருந்த ஒரு நிலை அல்லது செயல் பாட்டில்நெக்காக மாறிவிடும் அபாயமாமுள்ளது. இந்தக் கதையில் கூட நம் கதாநாயகனின் தொழிற்சாலையில் அவர்கள் மிகவும் சாதகமான விசயமாகக் கருதும் ரோபோ இயந்திரம் ஒன்றே அவர்களுக்கு மிகப்பெரிய பாட்டில்நெக்காக இருப்பதை கண்டறிந்து அதிர்வார்கள். இது போல நாமும் பல நேரங்களில் மிக நல்லது என்று கருதும் ஒன்றே, நம் வளர்ச்சியை தடுக்கும் காரணியாக இருக்கக்கூடும்.இதையெல்லாம் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்கள் இந்த புத்தகத்தில்.

Theory of Constraints குறித்து அறிய விரும்புபவர்கள் கீழ்கண்ட சுட்டிக்களை கிளிக்குங்கள்.

விக்கிப்பீடியாவில் TOC

TOC வெவ்வேறு துறைகளில் எப்படி செயல்படுத்துவது எப்படி என விளக்கும் தளம்.

TOC கண்டறிந்த கோல்ட்ராட்டின் இணைய தளம்.

கோல் புத்தகத்தின் எளிமையான தமிழாக்கம் ஆனந்த விகடனில் வெளிவந்து, விகடன் பதிப்பகத்தால் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. விகடனில் படிக்க ஆரம்பித்துவிட்டு, அடுத்த வாரத்திற்காக காத்திருக்க முடியாமல் சிங்கையின் நூலகங்களில் அதன் மூலமான ஆங்கிலப்பிரதியை தேடி எடுத்துப் படிக்க வைத்த புத்தகம் இது. மிக நல்ல கதையின் வாயிலாக ஒரு அருமையான கொள்கையை அறிந்துக் கொள்வது சுகமான அனுபவம். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.
மேலும் வாசிக்க...

Tuesday, September 30, 2008

மாமனிதர் புதுகை.அப்துல்லா

ரமலான் பெருநாளை கொண்டாடும் என் அன்பு உறவுகளுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் ஒரு மாமனிதரைப் பற்றி எழுதுவது மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


இந்தப் புன்னகை பூ புதுக்கோட்டை அப்துல்லாவை நான் அறிமுகப்படுத்தித் தான் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று இல்லை. இவர் ஏற்கனவே எல்லோருக்கும் மிகவும் தெரிந்த, பலருக்கும் நெருங்கிய நண்பராய் இருக்கும் ஒரு பிரபலம் தான்.

இவரைப் பற்றி நமக்கெல்லாம் தெரிந்தது கொஞ்சம் தான். இவர் குறித்தப் பல தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

மிக உயர்ந்தப் பதவியில் இருந்தாலும், எந்த வித பந்தாவும் இல்லாமல் எல்லோருடனும் மிக எளிமையாய் பழகுபவர். தனது படிப்பாலும், திறமையாலும் முன்னேறியிருந்தாலும் எளிமையை விரும்பும் இவரது பதிவுகளில் கொஞ்ச நஞ்ச மொக்கையல்ல, மெகா மொக்கைகளை காணலாம். அகில உலக நாயகன் ஜே.கே.ரித்தீஷ் வலையுலக‌ ரசிகர் மன்றத்தின் பொருளாளராக பெறுப்பேற்றுத் தன் பணியை திறம்பட செய்கின்றார் என்றால் அதற்கு மேல் இவரது மொக்கைகளைப் பற்றி நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன?

இடதுகை கொடுப்பது வலதுகைக்கு தெரியக்கூடாது என பைபிளில் ஒரு வசனம் உண்டு. அதை முழுமையாகக் கடைபிடிப்பவர் இந்த மாமனிதர். சமீபத்தில் ( சமீபத்தில்னா,போன மாசம்தான்) பரிசல்காரரின் வலைப்பூவில் வளரும் இளம் சதுரங்க வீராங்கனை செல்வி. மோகனப்பிரியாவுக்கு, பயிற்சிக்கும், வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் நிதியுதவி வேண்டி ஒரு வேண்டுகோள் அறிவிப்பு காணப்பட்டது. பிறர் யோசிக்கும் முன்னர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தனது நிறுவனத்தாருடன் பேசி அந்தப் பெண்ணிற்கு அனைத்து உதவிகளையும் செய்து முடித்துவிட்டார் அண்ணண் அப்துல்லா. இனி செல்வி.மோகனப்பிரியாவிற்கு சர்வேதச பயிற்சியாளர் அமைத்து பயிற்சியளிப்பதில் இருந்து, அவரது போட்டிக்கான அனைத்து செலவுகளையும் அண்ணண் வேலைபார்க்கும் நிறுவனமே பார்த்துக்கொள்ளும். இத்தனை நாட்கள் மோகனப்பிரியாவின் தந்தையார் பட்ட சிரமங்களுக்கு ஒரு விடுதலை. திறமையுள்ள அப்பெண் தனது விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேற வேண்டியதுதான்.

இதுவரை எந்த பயிற்சியாளரும் இல்லாமல் தனது சொந்த முயற்சியாலேயே பல வெற்றிகளை குவித்த மோகனப்பிரியா, இனி அப்துல்லா அவர்களின் மூலமாக கிடைத்த உதவிகளால் முறையான பயிற்சியும் பெற்று வெற்றி பெறுவார் என்பது திண்ணம். இது குறித்து பரிசல்காரர் எழுதிய பதிவு. இந்த செய்தி கூட பரிசல்காரரின் பதிவின் மூலம் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் யாருக்கும் தெரியாமல் இவர் செய்த உதவிகள் மிக ஏராளம்.

ஒரு சக பதிவருக்கு அவரது உடல்நிலையைக் கருதி ஒரு சில வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அய்யா அவர்கள் முயற்சி மேற்கொண்ட போது, சிங்கைப் பதிவர்களாகிய நாங்கள் எல்லோரும் சேர்ந்து உதவலாம் என பேசி முடிவு செய்தோம். அதை செயல்படுத்தும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. நான் சீனா அய்யாவுடன் பேசிய போது தேவைக்கு அதிகமாகவே உதவிகள் வந்து குவிந்துவிட்டன. எனவே இனி யாரிடமும் பணம் பெற எங்களால் இயலாது என்று அய்யா சொல்லிவிட்டார். பின்னர் தான் தெரிந்தது, எவ்வளவு குறைகிறது என்று கேட்டுவிட்டு, உடனே 20 நிமிடத்தில் பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டுமோ அங்கு கொண்டுபோய் கொடுத்தவர் நம் அப்துல்லா என்று. இப்படி இவர் செய்யும் உதவிகள் ஏராளம்.

அப்துல்லாவால் பிறருக்கு உதவ முடியும், மொக்கையாய் பல பதிவுகளை எழுத முடியும் வேறு என்ன இருக்கு அவரைப்பற்றி சொல்ல என்று நினைப்பவர்கள் கட்டாயம் மோகன் கந்தசாமியின் வலைப்பூவை படிக்காதவர்கள் என்றுதான் அர்த்தம். மோகனின் வலைப்பூவில் இவர் எழுதிய திராவிடமும், கம்யூனிசமும் என்ற ஆராய்சிக் கட்டுரை இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. அதைப் படித்தால் இவரது வாசிப்பின் ஆழமும், எளிய நடையில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் கருத்துக்களை தொகுத்து எழுதிய இவரது திறனும் புரிபடும்.

அக்கட்டுரையில் எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் கம்யூனிசம் என்பது பொருளாதார சமநிலையை வேண்டுவது, திராவிடம் என்பது சமூக அல்லது சாதிய சமநிலையை வேண்டுவது என்ற ஒரு வரி விளக்கம். எனக்கு இந்த வரிகளைப் படித்த போது மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. இதைவிட எளிதாய் கம்யூனிசத்தையும், திராவிடத்தையும் விளக்க இயலாது.

இத்தனை ஆழமான வாசித்தலும், எழுதும் திறனும் கொண்ட இவர் இனி மொக்கையாக மட்டுமே எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இடையிடையே பல நல்லப் பதிவுகளையும் தர வேண்டும் என்று உரிமையோடு அவரை கேட்டுக்கொள்கிறேன்.

அறுவடையோ அதிகம் வேலையாட்களோ மிகக் குறைவு என்ற பைபிள் வசனத்தைப் போல நம் நாட்டில் உதவித் தேவைபடுவோர் எண்ணிக்கை மிக அதிகம். உதவுபவர்களின் எண்ணிக்கை குறைவு. அப்துல்லாக்கள் இன்னும் அதிகமாக வேண்டும். இவரைப் போல பலரும் இருக்கின்றார்கள். வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அய்யாவும் அந்த நல்ல உள்ளங்களில் ஒருவர் தான். எனக்கு நன்கு தெரிந்தவற்றை மட்டும் எழுதியுள்ளேன். மேலும் பலர் இருப்பார்கள். உங்களுக்கு தெரிந்த நல்ல உள்ளங்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

மீண்டும் ஒரு முறை எல்லோருக்கும் ரமலான் வாழ்த்துக்கள். அப்துல்லாவை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்த வாருங்கள். ஒரு வாரம் விடுமுறையில் சென்றிருக்கும் அப்துல்லா திங்கட்கிழமை தான் திரும்புவார் என்றாலும் உங்கள் பின்னூட்டங்களின் மூலம் வாழ்த்த வாருங்கள்.
மேலும் வாசிக்க...

Monday, September 29, 2008

மனசுக்குள் மத்தாப்பும், பொடிப் பொண்ணும்.

என் மனம் கவர்ந்த இருபதிவர்களை குறித்த பதிவு இது.
இவர்களை உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். ஆனாலும் இவர்களைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.

மனசுக்குள் மத்தாப்பு

மென்பொருள் துறையில் இருப்பதாலோ என்னவோ மிக மென்மையான காதல் கதைகளை எழுதி குவிக்கிறார் இந்த பதிவர். மிக எளிய நடையில், சரளமான ஓட்டத்தில் கதை எழுதும் இவரது தனிச்சிறப்பே கதையின் இடையே வரும் கவிதைகளும் அந்த கதைக்கும், கவிதைக்கும் ஏற்றப் படங்களும் தான்.

இவரது கதாப்பாத்திரங்கள் எல்லாம் மிக சரளமான எளிய நடையில் உரையாடுவது போல் கதையை அமைத்திருப்பது இவரது தனிச் சிறப்பு. அத்தோடு இவரது கதைகளில் எல்லாம் முடிவுகளும் எப்போதும் இனிமையான முடிவுகளாகத்தான் இருக்கும். தன் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்தைக் கூட கதைக்குள் ஒரு அழகிய கவிதையை பொதிந்து வைத்து அதற்கும் சில அழகிய படங்களை சேர்த்து அழகாய் வாழ்த்துச் சொல்லும் பாசக்கார அக்கா இவர்.

தந்தையின் நினைவில் இவர் வடித்துள்ள இந்தக் கவிதை அனைவரின் உள்ளங்களையும் கட்டாயம் உருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மனைவியின் மனதைக் கவர்வது எப்படி, பெண்களின் மனதைக் கவர்வது எப்படி என்றும் பல நல்ல பதிவுகளையும் இட்டு ரங்கமணிகளுக்கும், ரங்கமணியாக முயற்சிப்பவர்களுக்கும் பல பயனுள்ள ஆலோசனைகளையும் அள்ளித்தெளித்துள்ளார். இந்தப் பதிவுகளில் கூட உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் அழகிய படங்களின் அணிவரிசை உண்டு.

அழகிய பாடல் வரிகளை தலைப்பாக கொண்ட பல தொடர்கதைகளை எழுதியுள்ள இவரது, அத்தனை கதைகளிலும் கதையின் ஓட்டத்திற்கு தகுந்த அழகிய கவிதைகளும், படங்களும் இருக்கும் என்று நான் தனியே சொல்லவும் வேண்டுமோ? எனக்கென ஏற்கெனவே ...பிறந்தவள் இவளோ??? என்ற‌ த‌லைப்பில் இவ‌ர் எழுதிய‌ அழ‌கிய‌ தொட‌ர்க‌தையும், அந்த‌க் க‌தையில் அவ‌ர் எடுத்துக் கொண்ட‌ க‌தைத் த‌ள‌மும், கதையை கொஞ்சம் கூட தொய்வில்லாமல் நகர்த்திய விதமும், கவித்துமான‌ முடிவும் மிக‌வும் இனிமையாய் இருக்கும். படிக்காதவர்கள் படித்து இன்புறுங்களேன்.


கவிதை எழுதுபவர்களுக்கு கவிதாயினி எனப் பட்டமளிக்கின்றார்களே, நல்ல கதையும், கவிதையும் அதற்கு ஏற்ற படங்களையும் சேர்த்துத் தருபவர்களுக்கு என்ன பட்டம் அளிக்கலாம் என்று பின்னூட்டமிடுங்கள் , கட்டாயம் இந்த கதாசிரியருக்கு ஒரு சிறந்த பட்டம் அளிக்க வேண்டும்.


இத்தனைச் சிறந்த படைப்புகளுக்கு சொந்தக்காரரான இவர் சமீபகாலமாய் பணிச்சுமையின் காரணமாக எழுத இயலாமல் இருப்பது வருத்தமளிக்கும் செய்தி, பணிச்சுமையிலிருந்து விடுபட்டு, விரைவில் மீண்டும் சிறந்த படைப்புகளை அளிக்க வாழ்த்துவோம்.

பொடிப் பொண்ணு

நம்ம பக்கத்து வீட்டுல வாலுத்தனம் செஞ்சுகிட்டு இருக்க ஒரு சின்னப் பெண்ணைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துவது தான் இந்த பொடிப் பொண்ணோட பதிவுகள். போதாத குறைக்கு இந்த பொடிப் பொண்ணுகிட்ட ஒரு கேமரா வேற மாட்டிகிடுச்சு. அத வைச்சுக்கிட்டு பறக்கிற பட்டாம்பூச்சி, தும்பி எல்லாத்தையும் படுத்துற பாடு இருக்கே, அத ஒரு பதிவ போட்டு வைச்சுருக்கு இந்த பொண்ணு. அதையும் பாருங்களேன்.

சொந்த ஊருக்கு பயணம் செய்யிறது சுகமான ஒன்னுதான், ஆனா தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்துல பயணம் செஞ்ச, எப்ப எங்க பேருந்து நிக்கும்னு தெரியாது, அப்டி ஒரு சோதனை பயணம் போனத கூட இந்த பொடிப் பொண்ணு எவ்வளவு சுவையா சொல்லியிருக்குன்னு பாருங்களேன்.

என்ன அந்த டண்டணக்க கவிதைகளும் , அந்த கவிதைகளுக்கு போட்ருக்க டி.ஆர் படமும்தான் கொஞ்சம் பயமா இருக்கு. என்னை போல் இளகிய மனம் படைத்தவர்கள் பொடிப் பொண்ணிண் டண்டணக்கா கவிதைகளை பார்க்காமல் விட்டுவிடுவது நலம்

இந்த வாலுப் பொண்ணு, இப்டி ஒரு ஆராய்சியா என ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த பொண்ணு எழுதியிருக்க ஒரு ஆராய்சி கட்டுரையப் பாருங்களேன். பழையப் பாடல்களிலும், புதியப் பாடல்களிலும் காட்சியமைப்பிலும், எடிட்டிங்கிலும் இருக்கும் துல்லியமான வேறுபாடுகளை அலசி ஆராயும் இந்த கட்டுரை, உங்களையும் கட்டாயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
எல்லாத்துக்கும் மேல இந்தப் பொடிப் பொண்ணு எங்க ஊரு பொண்ணுங்க.

மனசுக்குள் மத்தாப்பு திவ்யா, பொடிப் பொண்ணு இருவரையும் அறிமுகப்படுத்தும் பதிவல்ல இது. அவர்கள் ஏற்கனவே எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள் தான். இது அவர்களின் படைப்புகளில் எனக்குப் பிடித்தவைகளை சொல்லும் ஒரு பதிவு மட்டுமே. வாருங்கள் என்னோடு சேர்ந்து இவர்களை நீங்களும் பாராட்டுங்கள், அதற்கு முன் அவர்களின் படைப்புகளை படித்துவிடுங்கள்.
மேலும் வாசிக்க...

Sunday, September 28, 2008

லதானந்த் அவர்களுக்கு பகிரங்க கடிதம்.

பகிரங்க கடிதம் என்பதை தமிழ் வலையுலகிற்கு அறிமுகம் செய்த உங்களுக்கே நான் ஒரு பகிரங்க கடிதம் எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

பரிசல்காரருக்கு நீங்கள் எழுதிய பகிரங்க கடிதம் பின்னர் பலருக்கும் பலரால் எழுதப்பட்டு சில வார காலங்களுக்கு தமிழ் மணத்தின் சூடாண இடுகைகளை நிரப்பியிருந்ததை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.

கோயம்புத்தூர் என்றதும் என் நினைவுக்கு வருபவை குடிப்பதற்கிணிய சிறுவானி ஆற்று நீரும், கேட்பதற்கிணிய கொங்குத் தமிழும் தான். பார்ப்பதற்கு இனிய பல விசயங்கள் அங்கு இருப்பதாலும், பார்வை ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால் அதை நான் குறிப்பிடவில்லை. அந்த இனிய கொங்கு தமிழை எழுத்து வடிவில் வடித்து நீங்கள் எழுதும் போது அதன் சுவையில் மயங்காதோர் யாரும் இருப்பர் என எனக்குத் தோன்றவில்லை. அத்தனை சுவைபட எழுதிவந்த நீங்கள் சில காலங்களாய் எழுதுவதில்லை.

வ‌ட்டார‌ பேச்சு வ‌ழ‌க்கில் எழுதுவ‌தில் என் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌வ‌ர்க‌ள் இருவ‌ர். ஒன்று நெல்லை வ‌ட்டார‌ வ‌ழ‌க்கில் எழுதி த‌ள்ளும் ஆசிப் மீரான் அண்ணாச்சி அவ‌ர்க‌ள், அடுத்து கொங்கு வ‌ழ‌க்கில் எழுதும் நீங்க‌ள். உங்க‌ள‌து ப‌திவுக‌ள் எல்லாம் மிக‌ எளிய‌ ந‌டையில் ச‌ர்வ‌ சாதார‌ண‌மாய் போகிற‌ போக்கில் ப‌ல‌ செய்திக‌ளை அள்ளித் தெளித்துச் செல்லும் ப‌திவுக‌ள்.

உங்கள் பதிவுகளில் இருந்து தெரிந்து கொண்ட‌ கொங்குத் தமிழின் வார்த்தைகள் பலவற்றின் மேல் பலரும் விருப்பம் கொண்டு அவற்றை அவர்களும் உபயோகிக்கும் அளவுக்கு உங்களது எழுத்தின் வீச்சு வீரியம் கொண்டது. எடுத்துக்காட்டாக இப்ப எல்லாம் நெம்ப பேரு, ரொம்ப என்பதை நெம்ப என்றுதான் சொல்கிறார்கள் (நான் உட்பட).

உங்களுக்கு இருக்கும் தீவிரமான வாசிப்பு அனுபவங்களைக் உங்கள் பதிவுகளில் நீங்கள் காட்டும் மேற்கோள்கள் எடுத்துரைக்கும். ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரான உங்களது படைப்புகள் வராத தமிழ் பத்திரிக்கைகளே இல்லை எனும் அளவுக்கு எழுதும் உங்களது கதைகளின் கடைசி வரியில் வரும் அந்த "லதானந்த் டச்" பல வாசகர்களை உங்களுக்கு பெற்றுத் தந்திருக்கும். இந்த கடைசி வரி டச் உங்கள் சிறுகதைகளில் மட்டுமல்ல, உங்கள் பதிவுகளிலும் உண்டு. உதாரணம் எழுத்தாளர் ஜெயமோகனுடன் உங்களது பயணத்தை நீங்கள் விவரித்த பதிவு.

நகைச்சுவை என்பது ஒரு மிகப் பெரிய வரம். எத்தனையோ சுவைகள் இருப்பினும், எல்லோராலும், எல்லா வயதிலும் அனுபவிக்க முடிந்த சுவை நகைச்சுவைத் தான். அந்த சுவை படைக்கும் திறன் உங்களுக்கு சர்வசாதாரணமாய் வருகிறது.என் அலுவலகத்தில் ஒரு நாள் நீங்கள் எழுதிய நான் கடவுள் திரைப்பட விமர்சனம் படித்துவிட்டு நான் குலுங்கி குலுங்கிச் சிரித்தது கண்டு என் மேலாளரும், மற்றவர்களும் வந்து என்ன எனக் கேட்டதை ஒரு தனிப் பதிவாகவே எழுதலாம். அந்த அளவுக்கு உங்கள் நகைச்சுவை மிகச் சிறப்பு வாய்ந்தது.

புதுமாப்பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுத்த ஐடியாவாகட்டும், இங்கிதம் எனும் தலைப்பில் நீங்கள் எழுதிய தொடராகட்டும், அனைத்துமே ஒரு நல்ல செய்தியை நகைச்சுவைக்கும் பொதிந்து தரப்பட்ட பதிவுகள். இப்படி ஒரு அருமையான எழுத்தாளாரை வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பு வகிக்கும் இவ் வேளையில் மீண்டும் எழுத வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வசனம் இது,"Heard melodies are sweet but those of unheard are sweeter" அதையே உங்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எழுதிய பதிவுகள் எல்லாம் ஸ்வீட் என்றால் இன்னும் எழுதாத பதிவுகள் அனைத்தும் ஸ்வீட்டர் தான். எனவே அன்புக்குறிய லதானந்த் மாமா அவர்களே, உங்கள் ஓய்வுக்கு ஓய்வளித்துவிட்டு வீறு கொண்டொழுந்து வந்து மீண்டும் உங்களின் இனிய பதிவுகளின் வாயிலாக எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

எனது இந்த கடிதத்திற்கு நீங்கள் பதில் கடிதம் எழுத விரும்பினால் கூட அதை உங்கள் பதிவின் வாயிலாக எழுதுவீர்களேயானால் அதுவே எனக்கு கிடைத்த வெற்றியாக எண்ணிப் பெருமிதம் கொள்வேன். இனியும் இந்த http://lathananthpakkam.blogspot.com வலைப்பூ புதிய பதிவுகளின்றி ஓய்ந்திருக்க கூடாது. இன்றே உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

அன்புடன்,
ஜோசப் பால்ராஜ்.
மேலும் வாசிக்க...

அனைவருக்கும் வணக்கம்.

திறமைமிக்க பலரும் வகித்த இப்பொறுப்பிற்கு அடியேன் என்னையும் தேர்ந்தெடுத்த வலைச்சர குழுவினருக்கும், சீனா அய்யாவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு என் பணியை ஆரம்பிக்கிறேன்.

என‌க்கு முன் இப் பொறுப்பை வ‌கித்த‌ க‌விதைச் சாலையின் உரிமையாள‌ர் அன்புக்குறிய‌ சேவிய‌ர் அவ‌ர்க‌ள்,ப‌ணிச் சுமையின் கார‌ண‌மாக‌ இடையில் திடீர் என‌ விடை பெற்றுவிட்டாலும், இடைப‌ட்ட‌ குறுகிய‌ கால‌த்திலும் த‌ன‌து முத்திரையை அழுத்த‌மாக‌ ப‌திவிட்டுத் தான் சென்றிருக்கின்றார்.

என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகே வெண்ணாற்றின் கரையில் அமைந்துள்ள மாரநேரி எனும் கிராமம் தான் எனது சொந்த ஊர். எங்கள் குலத் தொழில் விவசாயம். பிறக்க ஒரு ஊர், படிக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர் என்ற தமிழனின் தலை எழுத்திற்கிணங்க, மாரநேரியில் பிறந்து தஞ்சையில் படித்து தற்போது சிங்கப்பூரில் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருகிறேன்.

எனது வலைப்பூவை http://maraneri.blogspot.com நான் 2007 டிசம்பரிலேயே தொடங்கியிருப்பினும், முழு வீச்சுடன் வலைப்பூ எழுத ஆரம்பித்தது 2008 ஜீன் மாதக் கடைசியில் இருந்து தான். இயல்பாகவே எனக்கு இருக்கும் கோபம் சில சமூகப் பிரச்சனைகளைப் பற்றி படிக்கும் போதும் எனக்கு எழும் எண்ணங்களைத்தான் பெரும்பாலும் எனது பதிவுகளாக எழுதியிருக்கிறேன்.

என்னைப் பொருத்தவரை நாம் எழுதுவது ஏதாவது ஒரு வகையில் பிறருக்கு உபயோகமாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். இப்படி நினைப்பதாலோ என்னவோ அன்பு அண்ணண் புதுகை அப்துல்லா என்னை ஜே கே ரித்தீஷ் மன்றத்தில் சேர்க்க மறுக்கிறார். அதோடு நான் மொக்கை பதிவுகள் எழுதினால் கல்லெடுத்து அடிக்க ஒரு கூட்டமே தயாராகிவிடுகின்றது.

இன்னும் ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தின் வண்ண மலர்களில் என்னுடைய பங்கையும் கோர்க்க இருக்கிறேன். உங்கள் அன்பையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது