07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label விஜய்கோபால்சாமி. Show all posts
Showing posts with label விஜய்கோபால்சாமி. Show all posts

Sunday, January 25, 2009

உயிரினும் மேலான அன்பு வலை மக்களே...

தம்பி விக்னேஸ்வரன் பங்கேற்புடன் மலேசியாவில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது. வலைப்பதிவு எழுதுவதை ஊக்குவிப்பதையும், புதிய பதிவர்களை உருவாக்குவதையும் பதிவர் சந்திப்பின் தலையாய நோக்கமாகக் கொண்டு இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே முயற்சி தமிழகப் பதிவர்களாலும் எடுக்கப்படவேண்டும். பதிவு தொடங்குவது தொடர்பான பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கி ஒரு மென்னூல் தயாரித்தால் புதியவர்கள் எளிதாக புரிந்துகொள்ள வசதியாயிருக்கும் என்று கருதுகிறேன். மென்னூல் தயாரிப்புக்கான உள்ளடக்கங்களை வரவேற்கிறேன். உள்ளடக்கங்கள் அனைத்தையும் ஒருவரே எழுதுவது எளிதல்ல. எனவே விருப்பமுள்ளோர், மின்னஞ்சலில் (vijayagiri2882008@gmail.com, "பதிவர் மென்னூல்” என்று சப்ஜெக்டில் கொடுக்கவும்) தொடர்புகொண்டால், பணிகளைத் தீர்மாணிக்கவும், பகிர்ந்துகொள்ளவும் தோதாக இருக்கும்.

மருத்துவர் புரூனோ அவர்கள் அனைவருக்கும் பயன்படும் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். சிரமம் பாராமல் அனைவரும் படித்துப் பின்பற்றவும். அது உங்களுக்கு நன்மை பயக்குமா தெரியாது, உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பது மட்டும் உறுதி.

image

இந்தியாவில் தடை செய்யப்பட்ட “புத்தரின் பெயரால்” (இன் த நேம் ஆஃப் புத்தா) ஆங்கிலப் படம் குறித்த விமர்சனமும் சில காட்சிகளும், இங்கே காணக்கிடைக்கிறது. எப்போது தடை நீங்குவது, படத்தை எப்போது காண்பது?

இந்தப் பதிவைப் படித்த உடன் “மெரினா பீச்சும், மொளகா பஜ்ஜியும் மறந்து போகுமா, டுவல் B பஸ்சும், லஸ் கார்னர் ஆழ்வாரையும் மறக்க முடியுமா” என்று ரீமிக்ஸ் எழுதத் தோன்றுகிறது. சென்னையை நேசிப்போர் தவறாமல் படிக்கலாம். நான் படித்துவிட்டேன்.

வென்னைக்குத் தொன்னையா? தொன்னைக்கு வென்னையா? என்பதற்கு இணையான தர்க்கத்துடன் தொடங்குகிறது பதிவு. மூஞ்சிப்புத்தகம் (ஃபேஸ் புக்கை இப்படித்தான் விளிக்கிறார் இந்தப் பதிவர்) குறித்த சில தகவல்களும் எச்சரிக்கைகளும்.

“வாழ்க்கை சில பாடங்களை கற்று தரும்போது தவறுகளை திருத்துவதற்கு சந்தர்ப்பங்களை தரமறுத்துவிடுகிறது”. இதை நான் சொல்லவில்லை, இங்கே ஒருவர் சொல்லுகிறார். நல்லா இருக்குல்ல... படிசிட்டு வாங்க.

மருத்துவர் ஷாலினியின் வலைப்பூ. அவருடைய நூல்களுக்கான அறிமுகமும் இந்தத் தளத்தில் காணக்கிடைக்கின்றன. அவரை நான் அறிமுகம் செய்வது என்பது பகலில் டார்ச் அடிப்பது போல.

ஆதிகாலம் தொட்டு தமிழ்க் குறுக்கெழுத்துப் போட்டிகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இங்கேயும் ஒருவர் மாதந்தவறாமல் கு.எ.போ நடத்துகிறார். முடியும்னு நெனச்சா போய் முயற்சி செய்யுங்க.

உலகத்தில் அனைவருக்கும் முதல் அதிசயம் அம்மா. சில அம்மாக்கள் ஒன்று சேர்ந்து வலைப் பதிவு எழுதுகிறார்கள். இங்கே இரு குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் அமுதா அவர்கள். அதே வலைத்தளத்தில் பங்கேற்கும் அமிர்தவர்ஷினி அம்மாவின் கவிதை ஒன்று உங்களுக்காக.

அடுத்து ஒரு முக்கியமான விஷயம். அதையும் படிச்சிட்டுப் போயிடுங்க.

 

image

(இனிமே படிக்கப் போற விஷயத்த gap10 குரல்ல கற்பனைபண்ணிக்குங்க. இது இன்று மதியம் 12:30 வரை வந்த கணக்கு)

இந்த ஒரு வாரத்துல எனக்கு வந்த பின்னூட்டம் 32. அதுல எனக்கு நானே போட்டுக்கிட்டது ஒன்னு. ஸ்மைலி மட்டும் இருந்தது ஒன்னே ஒன்னு. ஸ்மைலியோட கருத்தும் கருத்தும் இருந்தது ஐஞ்சு. வெறும் கருத்து மட்டும் இருந்தது இருபத்திநாலு.

நட்புடன் ஜமால் போட்ட பின்னூட்டம் ஏழு. வெயிலான் போட்டது மூணு. கார்க்கி மூணு. புதுகைத் தென்றல் ரெண்டு. சீனா அண்ணன் ரெண்டு. விக்னேஸ்வரன் ரெண்டு. கேபிள் ஷங்கர் ரெண்டு. வித்யா ஒன்னு. ராமலக்‌ஷ்மி ஒன்னு. மஹேஷ் ஒன்னு. பாஸ்டன் பாலா ஒன்னு. தேனீ ஒன்னு. திகழ்மிளிர் ஒன்னு. சிவமுருகன் ஒன்னு. சதங்கா ஒன்னு. கணிணி தேசம் ஒன்னு. ரிஷான் ஷெரிப் ஒன்னு. ஈர வெங்காயம் ஒன்னு. ஆத்தா... ஆங்... (gap 10 குரல இத்தோட நிறுத்திக்குங்க. இனி வேற குரல்)

 

image

மறுபடியும் பாப்பையாவான்னு குழம்பாதிங்க. விஷயம் இருக்கு. (இது பாப்பையா குரல்ல...) “நாளைலேந்து வேற ஆசிரியர். நாளைக்கு நம்ம வீட்டுக்கும் வாங்க. ரெண்டு ப்ளாகு வச்சிருக்கேன். பிடிச்சிருந்தா உங்க ப்ளாகுல லிங்க்கு குடுங்க. பிடிக்கலியா, பின்னூட்டம் மட்டும் போடுங்க. வரட்டா...”

 

20072007431-001

வேற யாருமில்ல, நாந்தான்.

 

பல நண்பர்களுடைய பதிவுகளை அறிமுகப்படுத்தினாலும், சில நண்பர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தாமல் விட்டிருக்கலாம். பலருடைய பதிவுகளை மறதி காரணமாக குறிப்பிடாமல் விட்டிருந்தாலும், சிலருடைய பதிவுகளை வேண்டுமென்றே தான் குறிப்பிடவில்லை. அவர்களைப் பற்றி குறிப்பிட்டு, அதை மற்றவர்கள், அவர்களுக்கும் எனக்குமான பரஸ்பர புரிதல் என்பதை விட “பரஸ்பர சொறிதல்” என்று அர்த்தப்படுத்திக் கொள்வார்களேயானால் அதை எண்ணி மிகவும் வருந்தியிருப்பேன். அந்த வருத்தம் துளியும் இல்லாமல் நிறைவுடன் விடைபெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றிகளும் கூட. அடுத்து வரும் ஆசிரியரை அறிய உங்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 

கடைசி நேரத் திருத்தம் & வருத்தம்: இரு குழந்தைகள் உள்ள பெற்றோர் செய்ய வேண்டியவை என்ற பதிவை அமிர்தவர்ஷினி அம்மா அவர்கள் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவை எழுதியவர் அமுதா அவர்கள். இதனை மின்னஞ்சல் வாயிலாக சுட்டிக்காட்டினார். மேலே அதற்கான திருத்தம் செய்யப்பட்டுவிட்டது. பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டாமல் தனிமடலில் சுட்டிக்காட்டிய அவருடைய பண்பட்ட அணுகுமுறைக்கு கோடி வந்தனங்கள். நிகழ்ந்த தவறுக்கு உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் வாசிக்க...

Saturday, January 24, 2009

வலைச்சரத்தில் வாலி

வலைச்சரத்தில் சிறப்புப் பதிவுக்காகக் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய* கவிதை.

 

11.kavinjar vali

சாளரம் திறந்து வைத்தாய் பவனந்தி கார்க்கி

பல நேரம் பலருக்கு நீதானே ஊக்கி (2)

உனக்குப் போட்டியாய் மலேசியாவில் விக்கி

வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா ஜக்கி (2)

சறுக்கல் வருவதுண்டு ஊட்டிமலைச் சரிவில்

சிறு விரிசல் வரலாமா பரிசல்காரன் பதிவில் (2)

கடல் நடுவே நிற்கின்றார் குறள் தந்த அய்யன்

பகிரங்கக் கடித மன்னன் நம்ம வால்பையன் (2)

மந்தைவெளி தி.நகர் 5-பி பஸ்சு

பதிவுன்னா என்னைக்கும் கே.ஆர்.எஸ்சு.... (2)

திருவல்லிக்கேணின்னா பார்த்தசாரதி - சுவையா

விடுபட்டவை சொல்ல பாலபாரதி (2)

கதையெல்லாம் நிதர்சனம் கேபிள் சங்கர்

உண்மை தான் ஒத்துக்குறேன் மாபெரும் திங்க்கர் (2)

பதிவுலகில் கிச்சன் குயின் எப்போதும் நீயா...

உன்னைத்தான் கேக்குறேன் பதில் சொல்லு தூயா (2)

ஏழும் மூணுந்தான் எப்போதும் பத்தா?

அடிக்கடி எழுதய்யா லதானந்த சித்தா (2)

அபியும் நானும், டி. ஃபார் திரிஷா

இன்பக்கதை இன்ஃபினிட்டி ஏ. ஃபார் அதிஷா

சாமியே ஐயப்பா சிவஹரி பாலா...

பல வருஷம் எழுதப்பா வடகரை வேலா (2)

கிறிஸ்துவின் கவலையெல்லாம் பாவியரைக் குறித்து

என் விருப்பம் எப்போதும் சேவியரின் எழுத்து (2)

மார்கழியில் திருப்பூரில் எப்போதும் வெயிலாம் - அது

எரிக்கின்ற வெயிலல்ல விருதுநகர் வெயிலான்

 

 

எல்லாருக்கும் சொன்னேன், உன்னைச் சொல்ல மறப்பேனா?

பதிவா உன்னை நான் வாழ்த்தாம இருப்பேனா? (2)

கலைஞர் காவியமாய், எழுதிவைத்த ஓவியமாய் (2)

சென்னை சங்கமமாய், மாங்காட்டுக் குங்குமமாய் (2)

வாழ்க நீ எந்நாளும் விஜயகோபால் சாமி

என் மணையாளைப் பெற்றவளே என்னோட மாமி

 

*தாகக் கற்பனை செய்துகொண்டு நானே எழுதிய... என்ன பாக்குறீங்க நட்சத்திரத்த நட்சதிரத்தோட பொருத்துங்க... எனக்கு வேண்டியதெல்லாம் நீங்க சொல்லும் கருத்துங்க...

மேலும் வாசிக்க...

Wednesday, January 21, 2009

ஜிகு ஜிக்காங் ஜிகு ஜிக்காங் ஜிக்காங்...

இன்று ஒரு நாளைக்கு பதிவர் அறிமுகம் கிடையாது. விருதுகளுக்கான அறிவிப்பு தான் இன்றைய ஸ்பெஷல். நான் கீழே குறிப்பிடுகிற விருதுகளுக்குப் பொருத்தமான பதிவர்களை வாசகர்கள் முன்மொழிந்தால், எங்களது தேர்வுக்குழு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும். நிபந்தனைக்கு உட்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

 

clip_image002

வெள்ளிச் சுத்தி விருது: அலுவலகத்தில் ஆணி அதிகமாகி, அதன் காரணமாகப் பதிவு எழுத முடியாதவர்களுக்கான விருது இது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது திடிரென பதிவு எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது சுத்தமாக நிறுத்திவிட்டாலோ அவர்களை இந்த விருதுக்கு முன்மொழியலாம்.

 

image

பகிரங்கக் கடித மன்னர்: வலைப்பதிவு தொடங்கிய நாளிலிருந்து ஒருவருக்காவது பகிரங்கக் கடிதம் எழுதியிருக்க வேண்டும். கவனச் சிதறல்களுக்கு இடங்கொடாத வகையில் எழுதப்பட்ட கடிதமாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்களை எழுதியிருந்தாலும் ஒரு பதிவருக்கு ஒரு கடிதம் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

 

image

இதயம் முரளி விருது: மிட்-நைட்ல (எந்த நாட்ல இருக்காரோ அந்த நாட்டோட மிட்நைட்) காதல் கவிதை எழுதி பதிவேற்றம் பண்ணுகிற ஆண் பதிவராக இருக்க வேண்டும். உருகி உருகிக் கவிதை எழுதியும் ஒரு ஃபிகரும் மாட்டாத ஏக்கத்தோடு அலைகிறவராக இருக்க வேண்டும். இந்தப் பிரிவில் சகட்டு மேனிக்கு முன்மொழிவுகள் இருக்கும் என்பதால் முதலில் வருகிற பத்து முன்மொழிவுகள் மட்டுமே ஏற்கப்படும். பத்தைத் தாண்டி பதினொன்றாக இருந்தால் அது எவ்வளவு பெரிய பதிவராக இருந்தாலும் நிராகரிப்புதான்.

 

image

ஒற்றை ரோசா விருது: பதிவுலகக் கவிதாயினிகளுக்கான விருது. அதிர்ச்சி மதிப்புகளுக்காக உடல் உறுப்புகளின் பெயர்களைக் கவிதைகளில் சேர்த்து எழுதுபவராக இருக்க வேண்டும். பெரும் கைகலப்புகளை எதிர்பார்ப்பதால், இவ்விருதுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் அரக்கு முத்திரையிட்ட உரையில் வைத்து அனுப்பப்பட வேண்டும். தங்களுக்குப் பிடித்த யாரை வேண்டுமானாலும் முன்மொழியலாம். ஆனால் நீங்கள் முன்மொழிந்ததை அந்தக் கவிதாயினி உள்பட யாருக்குமே தெரியப்படுத்தக் கூடாது. வீண் கலகங்களைத் தவிர்க்கும் பொருட்டே இத்தனைக் கட்டுப்பாடுகள்.

 

image

பெஸ்ட் போட்டோகிராபி விருது: ஐயா வலைமக்களே, நீங்கள் எதிர்பார்ப்பது போல இது ஒன்றும் நன்றாகப் படம் எடுக்கிறவர்களுக்கான விருது கிடையாது. நன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறவர்களுக்கான விருது. அப்படி யாராவது பதிவுலகப் “பட விரும்பிகள்” இருந்தால் தயங்காமல் இவ்விருதுக்கு முன்மொழியலாம்.

 

image

உலகம் சுற்றும் வாலிபன் விருது: அலுவலகக் காசில் ஆன்-ஷோர் போயிருந்தாலும், ஆணிகளை மறந்துவிட்டு பயணக் கட்டுரைகளைப் பதிவேற்றிய பதிவராக இருக்க வேண்டும். முன்மொழியப்படும் பதிவர் குறைந்தது இரண்டு முறையாவது வெளிநாடுகளுக்குப் பறந்திருக்க வேண்டும்.

 

மேற்கண்ட விருதுகளுக்கான முன்மொழிவுகளை வருகிற 23ம் தேதிக்குப் பிறகு எப்போ வேணுமானாலும் அனுப்புங்க. ஏன்னா, வலைச்சரத்துக்கு அப்போ வேற யாராவது ஆசிரியரா இருப்பாங்க. சைட்ல குப்பத் தொட்டி இருந்தா அதுல காறித் துப்பிட்டு தொடர்ந்து படியுங்க. எனக்கு வாக்குறுதி கொடுக்க மட்டும் தான் தெரியும். உண்மையிலயே யாருக்காவது இந்த மாதிரி விருதுகளக் குடுக்கனும்னு ஆசையா இருந்தா தாராளமா குடுக்கலாம். இத ஒரு கோரிக்கையா இல்லாம கட்டளையா ஏத்துக்கிட்டு வலையுலகச் சிங்கங்கள் யாராவது இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அப்படி யாராவது முயற்சி எடுத்து என் கண்களைப் பனிக்க வைத்து இதயத்தை இனிக்க வைத்தால், சார்மினார் எக்ஸ்பிரஸ்ஸில், டாய்லெட்டிலேயே ஹைதராபாத் “வந்து செல்லும்” அரிய வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.

 

டிஸ்கி: மேற்கண்ட விருதுகள் யாரையும் கேலி செய்வதற்காக எற்படுத்தப்பட்டதல்ல. அப்படி நேர்ந்திருக்குமாயின் அது உள்நோக்கமற்றதே.

 

நாளை சந்திப்போமா...

மேலும் வாசிக்க...

Tuesday, January 20, 2009

விடைபெறும் நேரம்

image

என் இனிய வலையுலகமே...

உன் பாசத்துக்குரிய

விஜய்கோபால்சாமியின்

மொக்கைகளை

பொறுமையாகச்

சகித்துக்கொண்ட

உனது சகிப்புத் தன்மைக்கு

நன்றி சொல்லி

விடை பெறுகிறேன்

 

 

அப்படீன்னு சொல்லி விடை பெற்றுக்க இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. அப்படியெல்லாம் நீங்கள் நிம்மதியாக இருக்குமளவுக்கு கவனக்குறைவாக இருந்துவிடமாட்டேன். என் தூக்கத்தைக் கெடுத்த பல பதிவர்களைக் குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

உஸ்மான் ரோடுல ஜோதி உதயமாகுதுன்னு ஒரு விளம்பரம். பரங்கிமலைலேந்து ஷிஃப்ட் பண்றாங்களோன்னு பயந்துட்டேன். பிறகு தான் தெரிந்சுது இது வேற ஜோதியாம். பீதிய கெளப்பி பேதியில கொண்டு போய் விடப் பாத்தானுங்க. சரி விஷயத்துக்கு வருவோம்.

தம்பி விக்னேஸ்வரன் சில சமயம் என்னுடன் ஜி-டாக்கில் உரையாடியபடியே பதிவுகளை எழுதி முடித்துவிடுவான். பொங்கல் நாளன்றும் அப்படித் தான். பொங்கல் சிறப்புக் கொசுறுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தான். திடீரென்று ஒரு கேள்வி “சித்தப்பு, மாவு பொங்குவதற்கு ஒரு பொடி போடுவார்களே, அதன் பெயர் என்ன?” என்று “மகனே, சோடா உப்பு போட்டால் மாவு பொங்கும். சந்தேகம் என்றால் தூய அக்காவிடம் கேட்டுக்கொள்” (மேட்டரே தூயா அக்காவைக் கலாய்ப்பதுதான் என்பது வேறு விஷயம்) என்று விநாடிக்கும் குறைவான நேரத்தில் பதில் சொன்னேன். ஆமாம், சமையல் கலை என்றாலே வலையுலக மக்களுக்கு விநாடிக்கும் குறைவான நேரத்தில் ஞாபகம் வருவது தூயா அக்காவின் பெயர் தான். அவர்களுடைய சிறுகதைகள் படித்த பல மணிநேரங்களுக்குப் பிறகும் மனதை என்னவோ செய்யக் கூடியவை. பானை சோற்றுக்கு ஒரு சோறாக இந்தக் கதை.

கவிதை, கதை, உலக நடப்புகள் என்று பல துறைகளில் கலக்கினாலும் ரிஷான் ஷெரிப் அவர்களின் படைப்புகளில் நான் பெரிதும் ரசிப்பது சிறுகதைகள்தான். அவருடைய கதைகளில் என்னைப் பதம் பார்த்தவை சில (1, 2, 3).

வருங்கால முதலமைச்சர்களைப் போட்டுத் தாளித்திருக்கிறார் ஒருவர். “நாளைக்கு நீங்கள் ஒரு முதலையமச்சர் ஆகி ஆட்சி நடத்தும்போது உங்கள் பேரனோ பேத்தியோ, நீங்கள் தொப்புளில் பம்பரம் விட்ட காட்சியையோ...டபுள் ட்ரிபுள் மீனிங் பேசும் காட்சிகளையோ பார்க்க நேர்ந்தால்..?” என்று சட்டையைப் பிடித்து கேட்பது போல கேட்டிருக்கிறார். இதற்கு அந்த வருங்கால முதல்வர்கள் சொல்லக்கூடிய ஒரு பதிலை அவரே சொல்லவும் செய்திருக்கிறார். மிகக் குறைவாகவே எழுதுகிறார். கேட்டால் “பேசிக்கலி ஐயாம் எ சோம்பேறி” என்கிறார்.

கேபிள் ஷங்கர் அண்ணன் தற்சமயம் நிதர்சனக் கதைகள் என்ற தலைப்பில் சிறுகதைகள் எழுதிவருகிறார். ஆனாலும் சில மாதங்களுக்கு முன்பு படித்த இந்தக் (இப்போது வந்திருப்பது மீள்பதிவு) கதை இன்னும் மனதிலேயே இருக்கிறது. மறக்காமல் படித்துவிடுங்கள்.

லதானந்த் அங்கிளின் எச்சரிக்கையையும் மீறி செல்வேந்திரன் அவர்களின் இந்தப் பதிவைப் படித்தேன். தலைப்பு வெறும் அதிர்ச்சி மதிப்புகளுக்காக வைக்கப்பட்டதல்ல என்பது முழுவதுமாய்ப் படித்தால் உங்களுக்கே புரியும். இதே போல பல பகீர் ரகப் பதிவுகள் நிறைந்தது அவருடைய தளம்.

இளையராஜா வேலுச்சாமி, என் கல்லூரி சீனியர். தற்சமயம் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார். “உணர்ந்ததைச் சொல்லுகிறேன்” என்ற தன்னுடைய தளத்தில் எழுதிவருகிறார். இவருடைய எழுத்துக்களில் என்னைக் கவர்ந்தவை “காதல் வசனங்கள்” என்ற தலைப்பில் இவர் எழுதும் குறும்(பு)பூக்கள்.

இவரும் எங்க ஊர்தான். போன வாரம் வலைச்சரத்தைத் தொடுத்தவரும் இவர் தான். இவருடைய இந்தப் பதிவு கிலியூட்டும் விதமாக இருந்தது. கிலியான அனுபவங்களை விரும்புகிறவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய பதிவு. நண்பன் சொன்ன தகவல் என்கிறார். அது தான் நம்புவதற்குக் கொஞ்சம் கஸ்டமாக இருக்கிறது.

பதிவர்களை அறிமுகப்படுத்துவதைப் போலவே, பலரும் அறியாத ஒரு திரைக்கலைஞரையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இவர் கலைஞர் கருணாநிதி, ராஜாத்தி அம்மாள் ஆகியோர் நாடகங்களில் நடித்த காலத்தில் அவர்களுடன் நடித்தவர். பல திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், அண்ணாமலை தொடரில் இவர் நடித்ததோடல்லாமல் சொந்தக் குரலில் பாடவும் செய்திருந்தார். அது தான் இவருடைய முதல் குரலிசை முயற்சி. “நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ” என்ற சீர்காழியாரின் பாடலை தன்னுடைய குரலில் பாடியிருப்பார். அதன் பிறகு விருமாண்டி படத்தில், “கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்” என்ற பாடலைப் பாடினார். நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போது பூ படத்தில் “சிவகாசி ரதியே” என்ற பாடலைப் பாடியுள்ளார். நாடக உலகிலிருந்து திரையுலகம், சின்னத்திரை, இசையுலகம் என்று தன் வாழ்நாளில் நீண்ட பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் “பெரியகருப்புத் தேவரை” உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி. கீழே பாடலுக்கான சுட்டியைக் கொடுத்திருக்கிறேன், நேரம் இருந்தால் தவறாமல் கேளுங்கள்.

சிவகாசி ரதியே கேட்கணுமா?

இந்தப் பாடலை இவ்வளவு சிலாகிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இரண்டொரு நாட்களில் அதையும் சொல்லுகிறேன்.

நாளை சந்திப்போமா...

மேலும் வாசிக்க...

Monday, January 19, 2009

வலைச்சரத்தில் முதல் நாள்

வணக்கம். தம்பி விக்னேஸ்வரன் வலைச்சர ஆசிரியராக இருந்த காலத்தில்தான் வலைச்சரம் குறித்து அறிய நேர்ந்தது. அது முதல் அவ்வப்போது வலைச்சரத்தின் வாசத்தை நுகர்ந்து வருகிறேன். ஒரு வார காலம் என்னையும் சரம் தொடுக்க அழைத்திருக்கிறார் சீனா அண்ணன். அவர் தஞ்சாவூரில் பிறந்தவர், நான் தஞ்சாவூரில் வளர்ந்தவன். எங்கள் ஊர் பாசத்துக்காக இந்த இரண்டு பதிவுகள் (1, 2).  நாலாண்டுகளுக்கு மேல் சென்னை வாசி, அதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக ஹைதராபாதில் வசித்து வருகிறேன். எங்கள் ஊர் சிங்கம் கடந்த வாரம் வலைச்சரத்தில் கலக்கியிருக்கிறார். நடந்ததென்னவோ நடந்து போச்சு, அதனால நடக்காதது ஆட்டோல போகட்டும். சரி, நான் வந்த வேலையை ஆரம்பிக்கிறேன்.

image

அது இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டின் பிப்ரவரி இருபத்தி இரண்டாம் நாள். அலுவலகத்தில் பிடுங்க ஆணிகளற்ற ஒரு நாளில் திடீரென்று எழுத்தாளர் பாமரனின் நினைவு வந்தது. அவருடைய எழுத்துக்கள் இணையத்தில் எங்கேயாவது கிடைக்கிறதா என்று தமிழில் “பாமரன்” என்று தட்டச்சித் தேடியபோது அவருடைய தளம் கண்ணில் பட்டது. சரி நாமும் எழுதுவோம் என்று நினைத்தது அன்றுதான். இதோ, எனது விஜய்கோபால்சாமி வலைப்பூ தனது முதல் பிறந்தநாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

என்னுடைய நகைச்சுவையில் மாஸ்டர் காமெடி என்று இன்றளவும் வலை நண்பர்களால் குறிப்பிடப்படுவது இது தான். என்னுடைய கல்லூரிக் காலத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தின் விவரிப்பு. இதல்லாமல் அவ்வப்போது நிகழும் சமூக அரசியல் சம்பவங்கள் குறித்த விமர்சனங்களும் பகடிகளும் எனது பதிவில் பரவலாக இடம்பெறுவன. அவற்றுள் மிக முக்கியமானதாக நான் கருதுவது இந்தப் பதிவு. கொஞ்சம் மூக்கப் பொத்திக்கிட்டாவது படிச்சிட்டு வந்திடுங்க.

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை இவற்றைப் பற்றி ஏதும் தெரியாமல் நானும் ஒரு வெண்பா எழுதினேன். தமிழறிந்த புலவர் பெருமக்கள் யாராவது இதை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து, தளை தட்டுகிறதா, மூச்சு முட்டுகிறதா என்பதையெல்லாம் எனக்கு மின்மடலில் அனுப்பினால் மிகவும் மகிழ்வேன். சர்ச்சைக்குரிய ஒரு பதிவை எழுதி அதன் பலனாக சிலபல அர்ச்சனைகளையும் (1, 2, 3, 4, 5) வாங்கியிருந்த காலத்தில், வேறு எதாவது எழுதுவோம் என்று தோன்றியது. நம்மை நாமே செய்து கொள்ளும் பகடி தான் ஆகச் சிறந்தது, என்று பலரும் சொல்லக் கேட்டு எனக்கு நேர்ந்த அனுபவங்களைக் கொண்டு “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்ற தொடர் பதிவை எழுதத் தொடங்கினேன். இதுவரை மூண்று (1, 2, 3) பகுதிகள் எழுதியுள்ளேன்.

அதன் பிறகு எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த கவிஞன் ஒரு நள்ளிரவில் மூச்சு முட்டியதாலோ, மூச்சா முட்டியதோலோ எழுந்துகொண்டதால் “கொலைவெறிக் கவிதைகள் 1754” என்ற கவிதைப் பதிவுத் தொடரும் ஆரம்பமானது. இதிலும் மூண்று பதிவுகள் (1, 2, 3). இவற்றுள் இரண்டாவது கவிதையின் முதல் இரண்டு வரிகளை மட்டும் “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளரால் மேற்கோள்காட்டப்பட்டது (அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா). இஃதல்லாமல் சில புகைப்படப் பதிவுகளும் உண்டு (1, 2, 3). என்னுடைய புகைப்படப் பதிவு ஒன்று சர்ச்சையைக் கிளப்பியதால், அநாகரிகமாக மற்றும் நாகரிகமாக வந்த வேண்டுகோள்களுக்கு இணங்கி அதற்குப் கடவுச்சொல் பாதுகாப்பு கொடுத்திருக்கிறேன்.

அதென்னவோ ரீமிக்ஸ் எழுதுவதென்றால் ஒரு அலாதி சந்தோஷம். கடைசியாய் எழுதிய ரீமிக்ஸ் இது. யாரைக் கலாய்க்க வேண்டுமே அவரிடமே அனுமதி கேட்டுப் பதிப்பித்தது. எள்ளளவும் சினம் கொள்ளாமல் தன்னைக் கேலி செய்ய மேலும் ஒரு விஷயத்தை அவரே எடுத்துக் கொடுத்தார். இதில் நான் விரும்புகிற பல பதிவர்களின் தளத்துக்கும் இணைப்பு கொடுத்துள்ளேன். இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளையும் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அராஜகம், “திண்டுக்கல் சாரதி” படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சன் டிவி சொல்வதைப் போல. ஆனாலும் எதைப் படித்தாலும் தங்கள் மேலான கருத்துக்களைத் தவறாமல் சொல்லவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

பாப்பையா படம் இங்க எதுக்குன்னு நீங்க எல்லாம் மண்டைய ஒடைச்சிக்கிட்டு யோசிச்சிருப்பீங்க. சரி, “நாளை சந்திப்போமா”.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது