07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 21, 2011

ரமேஷுக்கு என்ன ஆச்சு....


பொலியும் மழை




ரமேஷுக்கு அன்னிக்கு இருப்பே கொள்ளல. இருகாதா பின்ன! எல்லாருக்கும் ஜோடியா திரியறச்ச நமக்கு ஒண்ணுமே மாட்ட மாட்டேங்குதேங்கற கவலையில கொஞ்சம் இளைச்சு கூட போய்ட்டான். போன வாரம் சிரிச்சு பேசின நீலா கூட காரணமே இல்லாம ரெண்டு நாளா பேசல.

அன்னைக்கு காண்டீனில மோட்டு வளைய பார்த்துகிட்டு, பரிதாபமா டீயும் பன்னும் சாப்பிடற போது, உலுக்கி குலுக்கி கூப்பிட்டப்புறமும் பிரமை பிடிச்ச மாதிரி உக்காந்திருந்ததால கூட வேலை பாக்குற உமேஷுக்கு ரொம்ப கவலையா போய்டுச்சு.

'ஏண்டா ரமேஷ் உன்கிட்ட கொஞ்சம் பேசணம்ன்னு இருந்தேன், நீ எந்த கோட்டைய புடிக்க காண்டீன் சுவத்த பார்த்துட்டு இருக்க...என்ன ஆச்சு உனக்கு? ராத்திரி மோஹினி பேய் வந்து புடிச்சிடுச்சா'ன்னு கெட்டான்.

"ஹ்ம்ம்...மோஹினியெல்லாம் எனக்கு வேணாம். நம்ம நீலா வந்து புடிச்சுகிட்டா நல்லா இருக்கும்" சோகமா பதில்  சொன்ன ரமேஷோட மனசு டபால்-ன்னு புரிஞ்சு போச்சு உமேஷுக்கு.

என்ன விஷ்யம். எனிதிங் இம்பார்டண்ட்?

இம்பார்டண்ட் அண்ட் யூஸ்ஃபுல். நம்ம முத்துச்சரம் ராமலக்ஷ்மி ப்ளாக் படிச்சியா?

இப்பொ ரீசண்டா நட்சத்திர பதிவரா கூட இருந்தாங்களே அவங்க தானே..நான் அவங்க சமூக சிந்தனை தூண்டற கட்டுரை, புகைப்படக்கலை, கவிதைக்கெல்லாம் ரசிகன் தெரியுமா. லால்பாக் ஃபளவர் ஷோ, ஆப்ரிக பறவைகள் புகைப்படமெல்லாம் நேர்ல பார்க்குற நேர்த்தி!

அவங்களே தான். அவங்க நட்சத்திர பதிவுல நம்ம மாதிரி இளைஞர்கள் ஜனக்ரஹா அமைப்புல எப்படி உபயோகமா நேரத்தை செலவிட்டு பலவகையிலும் மக்களுக்கு பயனுள்ள தீர்வு கண்டிருகாங்கன்னு எழுதி அவங்களுக்கு பூங்கொத்தெல்லாம் குடுத்திருக்காங்க. நாமும் அங்க போய் சேர்ந்த்து நம்மாலானதை செஞ்சா என்னன்னு தோணிச்சு. நான், நீ ன்னு வாழாம 'நாம்' ன்னு வாழறதுல கிடைக்கற நிம்மதி வேற எங்க. ராமலக்ஷ்மி குறுங்கவிதையும் இதைத் தான் சொல்லுது.

'நல்ல யோசனை தான்.  நான் கூட 'நாம்' ஆகத்தான் ட்ரை  பண்றேன்..நீலா மனசு வெக்க மாட்டேங்கறாளே' அப்டீன்னு சொல்ல நினைச்சதை ரமேஷ் சொல்லலை.

முதல்ல ஊழலை ஒழிக்க பெரிய திட்டம் கொண்டு வரணம். அதுக்கு ஒவ்வொரு மனுஷனும் தன்னாலானதை செய்யணும். நம்ம வேலை முடியுறதுக்கு நூறு ரூபாய் அதிகமா கேட்டாலும் குடுக்க கூடாது. சாலை விதிகள மதிக்கணும், அப்படியே தடம் மாறி தவறுதலா மாட்டினா ரூபா  நோட்டைத் தள்ளி தப்பிக்க கூடாது.


நம்ம நாடெல்லாம் எங்க உருப்புட போகுது..என்னக் கேட்டா பேசாம நாடு இனம் மொழி  கடந்த ஒரு உலகத்துக்கு போயிடலாம்ன்னு தோணுது. நான் கூட பாகிஸ்தான் எல்லை கிட்ட போயி பார்த்திருக்கேன். எந்தபபக்கம் பொனாலும் இந்திய நாட்டை சுத்தி அன்னிய நாடுகளின் பார்டர் டெஷன். இதெல்லாம் இல்லாம சில யூரோப் நாடுகள்ல மனித சுதந்திரம் இருக்குன்னு ப்ரெஞ்சுக்காரன் எழுதிருக்கற மாதிரியான நாட்டுல வாழணம். நூத்தியெட்டு ஜாதி சண்டை கலவரம் நடக்கற நம்ம இந்தியாவுல எங்க இதெல்லாம்! வெறும் கனவு.!! எல்லைகள் இல்லாத உலகத்துல, கால் ஒரு நாட்டுலையும் தலையை இன்னொரு நாட்டுலையும் வெச்சு படுத்துக்கணும். அங்கேயும் இங்கேயும் தாண்டி குதிக்கணும். கிட்டத் தட்ட என்னை மாதிரியே பிரெஞ்சுகாரரும் சந்தோஷப்பட்டிருகார். "எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அது போல் விளங்கும்" அன்னிக்கே தலைவர் சொல்லிட்டார். என்னவோ போ நம்ம நாடு நம்ம தேசம் ன்னு பற்று வெக்கறோம். எந்த தேசத்துக்கு பொனாலும் நம்ம கலை, நம்ம நாடு ன்னு நினைச்சு பெருமை படுறோம்.  நாம வெக்கற பற்றுக்கு அரசியல்வாதிங்க  ஆப்பு வெக்கறாங்க!

நிறுத்துடா நிறுத்து, நீ பேசுறது சரியே இல்லை. இதை பத்தி தான் கௌசல்யா சொல்லிருக்காங்க. மனதோடு மட்டும் ன்னு இவங்க பதிவை படிக்கவே ஒரு நாள் ஆபீஸ் லீவ் போடணம். சமூகம் குடும்பநலம் விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்த தொகுப்பு கட்டுரைகள எழுதறாங்க. எழுதுறதோட விடாம, இவங்க அமைப்பு மூலமா மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வராங்க . நாடு நமக்கென்ன் செஞ்சுதுன்னு கேக்காம நாம நாட்டுக்கு என்ன செய்ய போறோம் ன்னு யோசிக்கணும். பேசிட்டா போதாது.  செயல்படுத்தணம். நீ நாட்டுக்கு என்ன செஞ்ச...?

ஹ்ம்ம்..சரி கிளம்பு...நாளைக்கே இந்திய எல்லைக் கோடுகளை சுத்தி இருக்கற பாதுகாப்பை எப்படி மாத்தி அமைக்கறதுன்னு சட்டசபை கூட்டலாம்.

நக்கல் பேச்சை நிறுத்தி உபயோகமா பேசேன். எப்பொ பாரு வராது, முடியாது. இல்லைன்னு நொட்ட சொல்லிகிட்டு.  

உனக்கென்னப்பா சிக்குனு ஒரு பொண்ணு கிடைச்சு லைஃப் ல செட்டில் ஆகிட்ட. என்னைப் பாரு "என்னவள் என்பவள் யார்" ன்னு நானும் கூவி கூவி ஹரீஷ் ராகவேந்த்ரா மாதிரி பாட முயற்சி பண்றேன், என் குரல் சரியில்லைன்னு கழுதை கூட பதிலுக்கு கத்த மாட்டேங்குது. தொ பாரு......ஒரு குருவி.......ஒரு குருவி கூட ஃபீலிங்க்ஸோட தன் பெட்டைகுருவிக்கு வெய்ட் பண்ணுறத கவிதையாக்கி தமிழ்விரும்பி கிட்ட சொல்லிருக்கு. அவரும் பதிலுக்கு குருவிகிட்ட அவருடைய ஆதங்கத்தை கவிதையா சிந்தியிருக்கிறார்.  'மயில், குயில், குருவி, கிளி'  எந்த ரேஞ்சுக்கும் எனக்குத் தான் கிடைக்க மாட்டெங்குது. "கடவுள் என்பவர் யார்" ன்னு தேடி போயிடலாமான்னு யோசிக்கறேன்.  எனக்கு தமிழ்விரும்பி தான் guide. ஹ்ம்ம்ம்...

என்னது குருவி பாடிச்சா? இப்ப நம்ம உலகத்தை சீரழிச்சிட்டு இருக்கறதுக்கு குருவிங்க ஒண்ணு ரெண்டு கண்ணுல பட்டா பாதுகாத்து rare species வகைன்னு சொல்லி அரசாங்கத்துல தெரிவிக்கணும். நீ பாடி கிழிச்சாச்சு, இனிமே கவிதை எழுதறது தான் மிச்சம். முதல்ல ஹைக்கூ கவிதை முயற்சி பண்ணேன். ஹைக்கூவை பத்தி சுவாரஸ்யமான light hearted  விஷயங்கள் சமுத்ரா. இதுல எழுதிருக்கார். அணு முதல் அண்டம் வரை எல்லாத்தை பத்தியும் எழுதறார். எந்த கோட்டையோ புடிக்க யோசனை பண்ணுறதை நிறுத்தி இதை மாதிரி ஆரோக்யமான பொழுது போக்கை வளர்த்துக்கலாம்.


தாங்க்ஸ்டாப்பா பெரிய மனுஷா.... நான் கதை எழுத நினைச்சதை சொல்லவே இல்லையே. சர்வேசன் நச் பொட்டின்னு சொன்னாலும் சொன்னார், நானும் ஒரே கதைல ரெண்டு தடவை நச்சு நச்சு ன்னு புடுங்கற பொண்டாட்டியோட கதையை எழுதி போட நினைச்சு, அப்புறம் எங்க எனக்கு முதல் பரிசு கொடுத்துட்டா மிச்சவங்களுக்கு இல்லாம போயிடுமேன்னு  கடசீ நேரத்துல பதிவை போடல. பரந்த மனசு பாரு.

அட மட சாம்பிராணி அது வேற நச். அந்த போட்டில வந்த கதைல சதங்கா வோட நெல்லிமரம் கதை ரொம்பவே புடிச்சுது. பெரியவங்களா பாத்து நிச்சயம் பண்ணி பதவிசான பொண்ணா தேடி திருமணம் செய்யறாங்க. வாழ்கைல சரியான துணை அமைஞ்சா அப்புறம் ஒரே இனிமை தான். கதையில செம்ம நச் திருப்பம். இவங்க இப்பொவெல்லாம் எழுதறதாவே தெரியலை :(

அடுத்த பௌர்ணமிக்கு ஊர்ல திருவிழா உமேஷ். நான் கூட ரெண்டு நாள் லீவ்ல போய்ட்டு  வரலாம் ன்னு இருக்கேன்.

நல்ல விஷயம் தான். செய். எல்லார் வாழ்கைலையும் ஒரு திருப்பம் வரும். உனக்கு வரும் பாரு. டேக் இட் ஈஸி மை பாய்.. ஒவ்வொருத்தன் எதையெல்லாமோ சாதிக்க நினைக்கறான். அப்படிபட்டவங்களுக்கே சில நேரம்  தலையெழுத்து சரியா அமையலைன்னா அதோட வலி, என்னன்னு பட்டவனுக்கு தான் தெரியும். உமாஜீ சொல்ற மாதிரி இதெல்லாம் நிராகரிப்போட ஆறாத வலி எத்தனை வயசுலையும் தழும்பா நிக்கும். அவனவன் தலைழுத்து மின்ன வேண்டிய நேரத்துல முடியாம போய் நொடிச்சு போயிடறாங்க.  நீ இல்லாத ஒரு சோகத்துகாக ஏண்டா எல்லார் ப்ராணனையும் வாங்கற!?

ஹி ஹி உமாஜீயோட ரீசண்ட் பதிவை படிச்சேன். ஒஸ்தி படம் பார்க்க காசு குடுத்தா கூட போகக் கூடாதுன்னு நினைச்சுகிட்டேன்.  சும்மா சொல்ல கூடாது உமாஜீ ஒரு ஞானி! நான் என்னனென்ன கூகிள் சர்ச் போடுவேன்னு அவருக்கே தெரிஞ்சிருக்கு.

சரியா அதே நேரம் நீல சல்வார் பறக்க, கட்டாத கருங்கூந்தலோட, ஷாம்பூ விளம்பரத்துக்கு தலை கோதியபடி வந்தா நீலா.

"ஹல்லோ உங்க conversationல நானும் ஜாயின் பண்ணிக்கலாமா"

"வாங்க நீலா சும்மாத் தான் வெட்டியா.... கொஞ்சம்   யூஸ்ஃபுலா... பேசிட்டு இருந்தோம்  ஹி ஹி"

என்ன ஹாட் டாபிக்?

"டாபிக்கென்ன...வழக்கம் போல தேவதை மாதிரி இருக்கற பொண்ணுங்க கல்யாணம் ஆனதும் எப்பிடி ராட்சசிகளா மாறுறாங்கன்னு ஒரு ஆராய்ச்சி. சுதந்திரமா சிரிச்சி கிரிச்சு பேசிட்டு இருந்தவங்கள ஓபாமா ரேஞ்சுக்கு கவலை பட வெச்சு சோர்வாக்கிடறாங்க. கல்யாணம் எல்லாம் பெரியவங்க செய்யற சாடிஸ்டிக் சதி"

"ஹல்லோ...இதெல்லாம் ரொம்ப ஓவர். உண்மையிலயே  சுதந்திரம் இழக்கறது நாங்க தான்...வீட்டுலையும் அடக்க ஒடுக்கமா இருந்துகிட்டு, வெளியவும் போய் குப்ப கொட்டி பேரு சம்பாதிக்க வேண்டிருக்கு."

என்னை மாதிரி ஒரு இளைஞர் பிரபுராம் தன்னோட கதைல எப்படி இந்த கால யூத் கல்யாணத்தைக் கண்டு மிரண்டு போயிருக்காங்கன்னு எழுதிருக்கார்.

ஓ பிரபுராமா! அவரொட வலைதளத்துக்கு நான் அடிக்கடி போவேனே. சின்ன வயசா இருந்தாலும் கம்பராமயாணம் இலக்கியம்ன்னு ஆழமா பேசுறார். ஆங்கில பதிவுகளிலும் அவரோட சொல்லாட்சி அசர வைக்குது. சில கம்பர் பாடல்களை பத்தியெல்லாம் ரசிச்சு எழுதிருக்கார்.  ஒலிநாடா வடிவில கூட வித்தியாசமான பதிவெல்லாம் போட்டிருகாரே! அவரோட "கடும் நகை" கதை ரொம்பவே creativeஆக கையாளாபட்டிருக்கு. நேரத்தை பயனுள்ளதா நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தறது  ரொம்ப அருமையான விஷயம் இல்லையா. அடிக்கடி எழுதினா...I am sure he would go places."

தன் வயதொத்த இன்னொருவனை ஒரு பெண், அதுவும் நீலா புகழ்ந்து பேசுவது ரமேஷுக்கு  கடுப்பேற்றியது.

இதே போலத்தான் நர்சிம் கூட நிறைய சங்க காலத்து பாடல்களை சொல்லி அதுக்கு விளக்கமும் எழுதறார். காதலன் காதலி ரெண்டு நிமிஷம் பிரிஞ்சாலே நாலு எஸ்.எம்.எஸ் அனுப்பி அம்பானியை பணக்காரனாக்கிட்டு இருக்குது இந்தக் காலம். அந்த காலத்துல  அன்னபறவை ஒண்ணு தான் தூது போகும் போஸ்ட்மேன். மிச்சத்துக்கு போஸ்டல் அறிவு  போதல.

ரமேஷின் ஹுயூமருக்கு வாய் விட்டு சிரிச்சா நீலா. இவர்கள் நடுவில் தேமே என்று எதை பேசுவது என்று தெரியாமல் பூஜை நேரத்து கரடியா இருக்கோமோன்னு ஒரு சந்தேகத்துல  உமேஷ் நெளிஞ்சிட்டு இருந்தான்.

அப்புறம் ... சொல்லுங்க ரெண்டு நாளா ஒரே பிசி போல இருக்கே

அதெல்லாம் ஒண்ணும் இல்ல. வீட்ல பொண்ணு பாக்க வந்திருந்தாங்க. அதான் கொஞ்சம் பிசி.

மடார் என்று இதயம் வெடித்த சத்தம் ரமேஷுக்கும் உமேஷுக்கும் மட்டும் கேட்டுச்சு.

யாருக்கு...உங்களுக்கா?

சீச்சி என் தங்கச்சிக்கு. அவ யாரையோ வேத்து மதத்துகாரனை லவ் பண்ணிட்டா. தமிழன் கூட இல்ல. அம்மா அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தம். அப்புறமா இப்போ சமாதானம் ஆகிடுச்சு.

மறுபடி ரமேஷின் இதயம் பறக்க துவங்கிடுச்சு.

நம்ம அன்பு எழுதின கதை மாதிரியில்ல இருக்கு! இப்படி சுபமா காதல் முடிஞ்சிடுச்சுன்னா நண்பர்கள் பாடு  ஜாலி. இல்லாட்டி அன்னபட்சி இல்லாத இந்த காலத்துல நண்பர்களை ராத்திரி நேரத்துல தொல்ல படுத்தி தனுஷ் மாதிரி காதல் தொல்வி பாட்டெல்லாம் பாட வேண்டியிருக்கும்.

இந்த மாதிரி சிறந்த மொக்கையை  இதுக்கு முன்ன கேட்டு பழக்கமில்லாத நீலா வாய் விட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டா. 'நம்ம மொக்கைக்கு இப்படி ஒரு ரியாக்ஷனா'ங்குற சந்தோஷ்த்துல ரமேஷும் சிரிக்க, ஒரு மணிநேர மின்வெட்டையும் தாண்டி அங்கே மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி உமேஷுக்கு தோணிச்சு. டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு நைசா டாட்டா சொல்லி நழுவிட்டான். சாப்பாடு நேரம் முடிஞ்சதால நாமளும் எஸ்கேப் ஆகிடலாம்.

என்னது?! ரமேஷ் நீலா பேச்சு எதுல முடிஞ்சுது...காதலா கனிஞ்சுதான்னு கவலை படறீங்களா?  "எல்லார் வாழ்கையிலையும் நல்ல திருப்பம் வரும்" ன்னு உமேஷ் தான் முன்னமே சொல்லிட்டாரே. அதுக்காக பஸ்ல போறப்ப வர திருப்பத்தை எல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க.

சுபம்.

******************************************

 
உபரி தகவல்: கதை கவிதை இதெல்லாம் தான் வரல. மொக்க பதிவுகள் எழுதினா என்னன்னு ரமேஷ் தீவிரமா யோசிக்கறதா கேள்வி.

*****************************************
பொலியும் பருவம் என்றாலே எல்லோருக்கும் இளமைப் பருவம் தான் நினைவுக்கும் வரும். வானவில் பருவம் என்று  சொல்லலாம்.  எல்லாமே ஜாலியா கலர்ஃபுலா இருக்கும்.  சரியான தீர்வு எடுத்து ஆரோக்யமா இந்த பருவத்தை அமைச்சுகிட்டா பாதி கிணறு சிறப்பா தாண்டின மாதிரி. மகிழ்ச்சியும் மழையா நம்ம வாழ்கைல பொழியும்.

"நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்..." எவ்வளவு அழகான பாடல். உதாரணமாய் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கைச் சரித்திரத்தை தழுவிய படம். அதிலிருந்து நமக்குத் தேவையான ஒரே ஒரு பாடலுடன் விடை பெறுகிறேன்.


வாழும் வலைச்சரத்துடன் நாளை வருவேன்.

மேலும் வாசிக்க...

Tuesday, December 20, 2011

அறிவும் வளரணும் அன்பும் வளரணும்

வளரும் தூரல்





திரு. ராதாமோகன் அவர்கள் "அபியும் நானும்" என்ற திரைப்படத்தின் மூலம் பல அப்பாக்களின் வயிற்றில்(மகளின் வயிற்றிலும் தான்) பால் வார்த்திருக்கிறார்.  இப்படத்தை என் அப்பாவுடன்  பார்த்து முடித்த பின் பகிர்ந்து கொண்ட  புன்னகைக்கு விலை மதிப்பே இல்லை. ஒவ்வொரு அப்பாவும் சொல்ல நினைப்பதை ராதாமோகன் சொல்லிவிட்டார்.

இரண்டு தலைமுறைக்கு முன்னர் அப்பாக்கள் பெரும்பாலானோர் தம் அன்பை வெளிகாட்ட  தெரியாதவர்களாகவும் நேரமில்லாதவர்களாகவும் இருந்திருக்கின்றனர். இன்றைக்கு அப்படி இல்லை. ராதா மோகனுக்கு தம் அனுபவத்தை பதிப்பித்து நன்றி சொல்லியிருக்கிறார் விசரன்.   குழந்தைகளின் சிறு அசைவில் தொடங்கி, அவர்கள் வளரும் ஒவ்வொரு கணமும் ஒரு தந்தையும் கற்று தெளிவதை மிருதுவாய் இசைத்திருக்கிறார். நம்மாலும் உணர முடிகிறது.   "ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போது ஒரு தகப்பனும் பிறக்கிறான்"  எனும் வசனம் குறுங்கவிதை.  விசரன் எழுதிய "புறம் பேசுபவர்கள்" "பால்வீதிப் பயணங்கள்" போன்ற பதிவுகள் மொழியில் அவரிருக்கிருக்கும் தேர்ந்த நடையழகை தனித்து காட்டுகிறது.

வளர்ச்சியின் பெரும்பங்கு நல்வழிப்படுத்துதல். பெற்றோரின் பங்கு இதில் இன்றியமையாதது. எனக்கெல்லாம் நீதிக்கதைகள் சொல்லி வளர்த்ததாக நினைவில்லை.  நம்மை சுற்றி நடைபெறும் நல்லது கெட்டது புரிந்த பின்னரே இது போன்ற கதைகளின்  முழு அர்த்தம் புரிந்து கொள்கிறோம்.

இக்கால பெற்றோர்கள் கணினியில் வேலைபார்த்துக்கொண்டே  தினம் ஒரு கதை படித்து இரவு பிள்ளைகளுக்கு கதையாடலாம். சிறுவர் உலகம் என்ற வலைதளத்தில் காஞ்சனா ராதாக்ருஷ்ணன் நீதிக்கதைகள் தற்கால குழந்தைகளின் சூழல் மற்றும் பேச்சு வழக்கு மொழிகளுக்கு ஏற்ப மாற்றி வழங்கி வருகிறார்.  மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். இவரின் கதைகளை தொகுத்து புத்தகமாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி.

சின்ன வய்தில் அம்மா சொன்ன கதைகளில் நிறைய தேவதைகளும்  இளவர்சர்களும் மான் மயில் கிளிகளும் வரும். ஒவ்வொரு கதையை கேட்கும் பொழுதும் அதில் பிடித்தமான  பாத்திரத்தை நான் ஏற்றுக்கொண்ட பின்னரே கதையை மேலும் ரசிக்கத் துவங்குவேன். கதையின் பாத்திரமாய் மாறுவது இன்னொரு கனவுலகத்தில்  நாம் பறப்பதற்கு இணை. 'Alice in wonderland' கதைகளில் வரும் ஆலிஸாக நம்மில் பலரும் இருப்போம். எத்தனை வயதானாலும் இன்னமும் 'டிங்கிள்' கைக்கு வந்தால் பெரியவர்களும் ஒரு முறை படித்து விடுவர்.இப்புத்தகங்களையும் கதைகளையும் நினைவுகூர்ந்தாலே மனம் லேசாகி பிள்ளைகளாகி விடுவோம்.

சந்தனமுல்லை தமது பதிவில் சிறுவர் கதைகளின் நினவுகளில் பயணித்து,  படிக்கும் ஒவ்வொருவரையும் தம்முடன் இட்டுச்செல்கிறார். இவரின் மற்ற பதிவுகள் பலதும் சிறுவர்களின் உலகைச் சார்ந்தைவைகளாக இருக்கிறது. அம்மா-பிள்ளைகளுக்குள் நடக்கும் பேச்சு பரிமாற்றங்களை 'சிறார் கதைகளாக', 'குழந்தை வளர்ப்பின்' சுவையான சம்பவங்களாக எழுதியிருக்கிறார். மழலை கொஞ்சும் தம் மகளுடன் குதூகலிக்கும் பட்டாம்பூச்சி அம்மா.


இருவரும் சம்பாதிப்பது அவசியத் தேவையாகவே மாறிவிட்டது. எல்லாம் சரி தான். காலத்திற்கு ஈடு கொடுக்கும் இந்த வேக ஓட்டத்தில் தொலைத்து விட்டது நம்மவர்களுக்காக ஒதுக்கும் நேரம். குட்டி அம்மு வுக்குத் தான் எத்தனை மகிழ்ச்சி. எப்படியெல்லாம் பேசிக் களிக்கிறாள் பாருங்களேன். குட்டி அம்முவின் கதை மனதை நெருடுகிறது. ஒரு குறும்படத்திற்கான கதைக் கருவை அழகாக கையாண்டிருக்கிறார் கதாசிரியர். ஒளியவன் சிறுகதைகள் எழுதுவதை பல வருடம் முன்னரே நிறுத்திவிட்டாரா?  அல்லது இணையத்தில் எழுதுவதில்லையா? இன்னும் சிறிது முயன்றால், எழுத்து நடையும் கதை சொல்லும் பாங்கும் மேலும் மிளிரும். "சத்தமின்றி பூக்கும் பூ" என்ற கதையில், கதை சொன்ன விதமும், எழுத்தின் அடர்த்தியும் மிகவும் பிடித்திருந்தது.

பாலகுமாரன் பெசுகிறார் என்ற வலைச்சரம் அவரது நண்பர்கள் சிலரால் உருவாக்கப்பட்டிருக்கிறது.  பெருமபாலும் ஆன்மிகத்தில் அவர் சென்ற தூரங்களைப் பற்றியதான பதிவுகள் இருக்கும்.  எத்தனை தான் வளர்ந்துவிட்டால் என்ன. பெற்றவர்களின் இழப்பு ஆழமான பிளவை கீறிவிடும்.  ஒவ்வொரு கட்டத்திலும் நம்முடன் தோழியாய், ஆசிரியையாய், ஆதரவாய் கூட இருப்பவள் தாய். பாலகுமாரன் அவர்கள் தன் தாயைப் பற்றி வாஞ்சையுடன் நினைவு கூர்ந்து அவளது இழப்பை எழுத்தில் வடித்திருக்கிறார். அம்மா பற்றி பாலகுமாரன் நினைவுகள். பணிவு உட்பட,  ரஜினியிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய  என்று இந்தப் பதிவு  சொல்கிறது. பாலகுமாரன் அவர்களுடன் சில சுவாரஸ்ய கேள்வி பதில் பகுதி  .  மொத்ததில் எழுத்துச் சித்தரின் ரசிகர்களுக்கு இவ்வலைதளம் விருந்து.


பெண்ணுக்கும் அம்மாவுக்குமான உறவு வருடங்கள் உருண்டோட மேலும் கெட்டியாய் பிணைத்துக்கொள்ளும். அப்பாவின் செல்ல மகளும் கூட அம்மாவின் ஆருயிர் தோழியாகிப் போவாள். மென்மையான புரிதலை நற்கவிதையாக்கி தந்தியிருக்கிறார் கீதமஞ்சரி. கரைபார் கரைத்தால், போன்ற சிறுகதைகள் மூலமும் குழந்தை வளர்ப்பை பற்றியும் சொல்லியிருக்கிறார்.  எனக்கு மிகவும் பிடித்த சிவப்பி  கதை சமூகத்தின் குன்றிய வளர்ச்சிக்கு சாட்சி.

சிறுவயது நினைவுகளில் பல இனிக்கும். சில துவர்க்கும், புளிக்கும், ஒன்றிரண்டு கசக்கும். என்ன சுவை என்ற பெயரிடமுடியாமல்  தவிக்கும் நினைவுகளும் உண்டு. மண்ணின் வாசம், பழைய காலத்து மனிதர்களில் குரல், அவர்களைப் பற்றி நாம் கொண்டிருந்த பயம், மரியாதை, இனம்புரிக்க முடியாத மங்கலான அபிப்ராயங்கள் இவையெல்லாம்  வளர்ந்த பிறகும் சரி, மனதின் கடைசி அறையில் பூட்டி வைத்திருப்போம். என்றாவது ஒரு நாள் ஏதேனும் ஒரு  சொல், நிகழ்ச்சி, சின்ன வாசனை கூட அதை திறந்து விடும். மடை திறந்த வெள்ளமாய் பொங்கும்  நினைவுக்கு மகிழம்பூச்சரம்  தொடுத்து அணைகட்டியிருக்கிறார் சாகம்பரி.  விசாக்கா  என்னை மிகவும் பாதித்த கதை.   சாகம்பரி எழுதும் மனவளம் தொடர்பான தொடர்கள் படித்து தெளிந்து கொள்ளக் கூடியவை என்றால், ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்  தொடர்பான விஷயங்கள் படித்து உணர்ந்து கொள்ள வேண்டியவை.

கேள்விகள் கெட்டுச் சலித்தும் விடை வராமல் போவதும் தீர்வு காணாமல் இருப்பதும் எங்கே போய் முடியும்? பெற்றோர்களின் அலட்சியப் போக்கா? பள்ளி நிர்வாகிகள் தலையிடுவதில்லையா? தொலைகாட்சி பல்சுவை விருந்துகளில், பள்ளிகளில் கல்லூரிகளில் சிறுவர்கள் சகிக்க முடியாத சில அசைவுகளுடன் நடனம் ஆடுவதும், வயதுக்கு மீறிய பேச்சு, செய்கை, பாட்டு என திறமை தேடல் ஒரு புறமிருக்க, அதற்கு ரசிக மன்றங்களும் வளர்ந்து வருகையில் எங்களைப் போன்றவர்களுக்காக  கரூர் கிறுக்கன் (உங்களை வேற எப்படித்தான் அழைக்கிறதாம்!!) குரல் கொடுத்திருக்கிறார்.  செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியும் என்று அறிஞர்கள் சொல்லும் ஆராய்ச்சி முதல் அரசியல் வரை எல்லாமும் பல்சுவையாய் இவரது தளத்தில் கிடைக்கிறது.


சரியான வழிகாட்டல் இல்லாமல் வளர்ந்து வரும் இளம் பிராயத்தினர் வன்முறைகளில் ஈடு படுவதும், செய்யத் தகாத விசயங்களைச் செய்து சின்னதிலேயே வெம்பி விடுவதும் ஆற்றொணா துயரைத் தருகிறது. மேலை நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் மிகுந்துவிட்டாலும் நம் நாட்டில் இந்த அபாய நிலை இல்லை என்ற எண்ணம் தூர ஓடிக்கொண்டிருக்கிறது. புகைபிடித்தல், மதுஅருந்துதல், ஒழுக்கக்கேடான சிந்தனைகள் அதிகரித்துவிட்டது. அறியாப்பருவத்திலேயே குழந்தைத்தனத்தை  தொலைத்து பொருளால் வாங்கக்கூடிய  எல்லாம் பெற்ற பிறகும்  பெறாத ஒன்றுக்காக நாளை ஏங்கும் பொழுது அவர்களுக்கு யார் துணை!

அடுத்த தலைமுறையினருக்கு ஒழுக்கமும், பண்பும் நாம் விட்டுச் செல்லவில்லையென்றால் எதிர்கால உலகம் கேள்விக்குறியாகிவிடும். இந்தத் தலைமுறையை புரிந்து கொள்ளவே முடியவில்லையே என்று அன்புடன் வருந்துகிறார் அருணா. இவரது அன்பை வழிகாட்டியாக இருந்து அடுத்த தலைமுறையினருக்கு பங்கிட்டு கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

பயமாய்த் தான் இருக்கிறது. எங்கு சென்று கொண்டிருக்கிறோம்? வளர்தலுக்குறிய அனைத்து வளமும் இழந்த குன்றிய வளர்ச்சியை அடுத்த தலைமுறையினருக்கு பரிசளித்து செல்லவிருக்கிறோமா?

வளரும் அவர்களை விட, வளர்க்கும் பொறுப்பிலிருக்கும் நாமும் சிரத்தையுடன் இப்பணியை செய்யவேண்டும். உலகிற்கும் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்ல குடிமக்களை விட்டுச் செல்வதே மேலான பணி. வளரும் தளிர்களுக்கு புத்துணர்வூட்டுவோம்.

(நாளை பொலிவோமா!......)


மேலும் வாசிக்க...

Monday, December 19, 2011

போட்டது முளைச்சதடி (gigo theory)

துவங்கும் துளி



துவக்கம் எனும் சொல் அனைத்தையும் அடக்கியது. செடியின் வளர்ச்சிக்குறிய அத்தனையும் விதையில் இருப்பது போல், எந்த ஒன்றின் துவக்கமும் சூல் கொண்டு நிற்கும் சூழ்நிலைகளிலிருந்து தான் ஆரம்பமாகிறது.  ஒற்றைச் சொல் உதிரும் வரை அதனை சுமந்து நிற்கும் மனமும் கருவறை தான்.

அனைத்தையும் உள்ளே அடக்கியிருக்கும் பிரமாண்ட ரகசியம். பிரபஞ்சத்தின் துவக்கமே சூன்யத்தின் நிலைத்திருக்கதென்றால் சூன்யம் என்பது எப்பேர்பட்ட கனமான கருவறை!

பஞ்ச பூதங்களில், ஆகாயம்,  பல அதிசயங்கள் ரகசியங்கள் நிறைந்த புரியப்படாத ஒன்றாக பிடிபடாமல் வழுக்கிக் கொண்டிருக்கிறது. நம் பிறப்பின் துவக்கமும் கூட வானில் புதைந்திருக்கும் ரகசியங்களில் ஒன்றாமோ என்ற நினைப்பை விதைத்து தன்னுள் நம்மை புதைய செய்யும் வானம்... தாயாகி, தந்தையுமாகிய வானம்...

"வானம் எனக்கொரு போதி மரம்" என்கிறான் கவிஞன். அனைத்தும் தன்னுள்  அடக்கி நமக்கு பாடம் புகட்டும் ஆசானாகவும் பரிமாணம் கொள்கிறது.  அடங்காமல் விரிந்திருக்கும் வானின் பெருமைக்கு தலை வணங்கி, வாழ்த்தி நாமும் அதன் தாய்மையை shriprajna வுடன் கொண்டாடுவோம்.  Shriprajna அண்மையில் தான் வலையுலகிற்கு வருகை தந்திருக்கிறார். "நிறப்பிரிகை" "சிதைவுகள்", "நினைவுகளில்" போன்ற கவிதைகள் நன்கு துவங்கியிருப்பதை பறைசாற்றுகிறது.

நல்லதொரு ஆரம்பத்திற்கு சரியான வித்து அவசியம். குப்பைகளையும் கழிவுகளையும் சேமித்தால் அதையே சுமக்கவும் நேரிடும். கர்பம் தரித்திருக்கும் வானுக்கு மரங்களும், இயற்கை வளமும் உரமாவது போல்,  பிறக்கும் உயிர்க்கு நல்ல உரமாவது சீரிய எண்ணங்கள், சிந்தனைகள், இதமான இனிமையான பேச்சு, அதே போல் நல்ல சங்கீதம். இசையின் அருமை பெருமையை எளிய நடையில் சுவையா சொல்லிருகார் கோகுல்.

நம் ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் சப்தத்திலும்...ஏன், நிசப்தத்திலும் கூட இசை ரீங்கரிக்கிறது என்பது பலரும் உணர்ந்த உண்மை. இசையை நாம் தேடிப்போக வேண்டாம்.  அன்றாட நொடிப்பொழுதின் அசைவுகளில் உணர்ந்தாலே போதும்.  மிருதுவான பேச்சும் சிந்தனையும் கூட நல்லிசை.  ரசிக்கும் பரிமாணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறு படும். எழுத்தை தன்  வசம் வைத்திருக்கும் பிரபல எழுத்தாளர் எஸ். ராமக்ருஷ்ணன் வரிகளில் இன்னிசைப் பயணம் அற்புதமாக இருக்கிறது. எப்போதாவது இசையை கேட்கும்  இவர் சில மேல்நாட்டு கலைஞர்கள் தன்னுள்  ஏற்படுத்திய தாக்கத்தையும் விவரித்திருக்கிறார்.  தனது ஆர்வத்தை ஒட்டகத்துடன் ஒப்பிடும் உவமையில்  இசையோடு சேர்ந்த எழுத்தும் மிளிர்கிறது.

கலையின் ஒவ்வொரு அம்சமும் அதனுள்ளே புதைத்திருக்கும் கனமாதொரு துவக்கத்தின் வெளிப்பாடு. கவிதையின் பிறப்பும் அப்படித் தான். குழந்தை பிரசவிப்பது போலவே  கவிதையின் பிரசவம் என்றால் பல கவிஞர்கள் ஒப்புக்கொள்வார்கள்.  பிறந்த குழந்தையிடம் தாயின் வாஞ்சையை ஒத்திருக்கும் ஒவ்வொரு கவிதையின் பிறப்பிற்கு பிறகும் கவிஞனின் மனம். பல ஆண்டுகளுக்கு முன் புதுக்கவிதையைப் பற்றி கா.நா.சு. அவர்களின் விளக்கம் மிக அருமையாய் இருக்கிறது. ஒவ்வொரு முறை வாசிக்கப்படும் கவிதை புதுசாய் பிறக்கிறது, அப்பொழுது பழங்கவிதையும் புதுக்கவிதை ஆகிறது என்கிறார்:) கவிதைக்குறிய லட்சணங்களையும் விளக்கும் அருமையான பகிர்வு.

பிறப்பிற்குறிய மூலத்தை தாங்கி வருவது  மரபணு. அதனின் கூறாக விளங்கும் DNA பற்றிய எளிய தமிழாக்கத்தை தந்துள்ளார் ANALYST. இவரின் முயற்சிக்கு பெரிதும் பாராட்டி, பூங்கொத்து வழங்குவோம். ஒரே ஒரு நிமிட காணொளி தான்! வாருங்கள் அடிப்படையைத் தெரிந்து  கொண்டு வருவோம். மென்மேலும் பல அறிவியல் ரீதியான எளிய தமிழாக்க காணொளிகளையும் விளக்கங்களையும் தமிழில் வழங்கி வருகிறார்.

கேட்டு பேசி சிந்திக்கும் சப்தங்களிலும் நல்ல கர்பபம் தாங்க வேண்டும். தீயதை கேட்காதே, பேசாதே, சொல்லாதே என்றனர் முன்னோர். இதற்கெல்லாம் முலமாக விளங்கும் 'கெடுதலை சிந்தியாதே'  நம் சிந்தைனைக்கேற்றவாறு நம் உடல் மனம் ஆன்மா மாற்றமடைகிறது.
"As u thinketh so u are" 

விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்றாய் இணையும் இந்த தகவலைப் பாருங்கள். குறிப்பிட்ட ஒலி உச்சரிப்புகள் மூலம் மரபணுக்களை மாற்ற அமைக்க முடியும்  என்கிற விஞ்ஞான உண்மையை என்றோ கண்டுள்ளனர் நம் முன்னோர்கள் என்கிறார் சுபானு.

ஒரு பிரசவம் பல துவக்கத்திற்கு காரணமாகிறது. மனிதனின் துவக்கம். பாச பந்தங்களின் துவக்கம். உணர்ச்சிகளின் துவக்கம். தாயின் துவக்கம் மட்டும் மனிதனின் துவக்கத்திற்கு முன்னமே நிகழ்ந்துவிடுவதால்  மேலும் சிறப்பு.  பிரசவிக்கும் தருணமானது விஞ்ஞான முன்னேற்றத்தை தாண்டியும்  அடி மனதில் அச்சத்தை ஏற்படுத்த வல்லது. வெறும் நாற்பத்தேழு செக்கெண்டில் அந்த உணர்வை தட்டி எழச்செய்து குழந்தை பிறப்பை கண்முன் கொணர்கிறது   இந்தக் காணொளி.  தமிழில் மருத்துவ தகவல்கள் அளித்து வருகின்றது தமிழ்மருத்துவம் வலைதளத்திற்கு நன்றி.

சதையோடு பின்னிப்பிணைந்த உறவு. தன் உதிரத்தை பங்கீன்று பிறப்பெனும் பரிசளித்தவள். நாம் துடித்தால் அவளும் துடிக்க இதுவே பெரியதொரு காரணம். இவ்வளவு தான் தாய்மையா?  இவ்வரிகளில் கட்டிப்போட்டு விட முடியுமா சிந்தும் கருணையை? 

இதுவும் தாய்மை. இதனைத் தாண்டிய வானத்தின்  வள்ளல்தன்மையில், பூமியில் பொறுமையிலும் கூட அன்னையின் பரிவைக் காண்கிறோம்.  அன்பு வைக்கும் எல்லா இடத்திலும் கிளைத்து நிற்பது. ஒவ்வொரு முறையும் தாயுணர்வு தாங்கி அதன் முழுமையை எதிர்நோக்கும் இவர்களை விட சிறந்த இலக்கணம் தாய்மைக்கு உண்டா எனக் கேட்கிறார் அப்பாவி தங்கமணி. மிக மெல்லிய உணர்வுகளை அழகாய் சொல்லிய சிறுகதை. நிச்சயம் படித்துப் பாருங்கள். பிடிக்கும்.

எங்கெல்லாம் தவறுகள் உணர்ந்து திருத்தப்படுகிறது. அங்கே மனிதம் பிறக்கிறது. ஒரு முழு மனிதன் பிரசவிக்கப்படுகிறான். அழகானதொரு துவக்கம் ஆரம்பிக்கிறது.  ஹைதர் அலி வலையுகத்தில் கூறும் இச்சிறு நெகிழ்கதையுடன் நம் துவக்கமும் இனிதே நிறைவுடன் விடைபெறுகிறது.

*******

ஒரு வழியா துவங்கியாச்சு...இனி, அடுத்த பதிவில் வளர்வோம்... :)






மேலும் வாசிக்க...

வணக்கம்!...பல முறை சொன்னேன்...சபையினர் முன்னே!


வணக்கம் நண்பர்களே!

இவ்வார ஆசிரியர் பொறுப்புக்கு அழைப்பு விடுத்த சீனா ஐயாவுக்கும் வலைக்குழுவிற்கும் மிக்க நன்றி.

சமீபத்தில் எனக்கு அறிமுகமானவர் வை.கோ சார் அவர்கள். என் மேல் நம்பிக்கை வைத்து, அல்லது என் சிந்தனை / ரசனை / எழுத்து என எதோ ஒன்றின் மேல் நம்பிக்கை வைத்து என்னை பரிந்துரை செய்திருக்கிறார்.

அதனை ஏற்று அழைப்பு விடுத்த சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சரக் குழுவிற்கும்  ஊக்குவித்த வை.கோ சாருக்கும் மீண்டும்  மனமார்ந்த  நன்றி தெரிவித்து தொடர்கிறேன்.

*************





"நான் யார் தெரியுமா? எடுத்துச் சொன்னால் புரியுமா!" அப்டீங்கற பாடல் தான் நினைவுக்கு வருது.  ஏன்னா எடுத்து சொல்லுற அளவு நான் பெரிய ஆளில்லை. என்னை அதிகம் வலையுலகில் பலருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. பின்ன! அடிக்கடி எழுதினாத் தானே தெரியும்!!

பத்து வயதில் முதல் எனிட்-பிளிடன் கோகுலம் என்று புத்தகத்தில் மூழ்கிப்போனவள். புத்தகத்தில மூழ்கி போயிட்டேனா, மனுஷங்க இருப்பது கூட மறந்து போய்டுவேன். இந்த பயம் என் கணவருக்கு அதிகம் உண்டுங்கறதால, புத்தகக் கண்காட்சிக்கு அழைச்சுட்டு போகவே பயப்புடுவாங்கன்னா பாத்துகுங்க!


சத்தியமா நானும் கோர்வையா வாக்கியமெல்லாம் எழுதுவென்னு பத்து வருஷம் முன்ன வரை கூட நினைச்சதில்ல. சுமார் பத்து வருடம் முன்ன 'மன்றமய்யத்தில்'  கவிதைகளுக்கு "கருத்து" சொல்லி "ஆஹா! சூப்பர், இதாங்க கவிதை"ன்னு சொல்ல போனவள "நீயும் எழுது"ன்னு ஊக்கு எல்லாம் வித்தவர் நம்ம 'ஜீவ்ஸ்'   என்கிற ஐய்யப்பன் மற்றும் 'லலிதாராம்'. மரத்தடி குழுமத்தில் சேர்ந்த போது பல நண்பர்களின் எழுத்துக்கு நான் விசிறி. நிறைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் நான் சொல்லும் 'தத்தக்கா பித்தக்கா' கருத்துத்தை ரசிச்சு நட்பு கொண்டாங்க. இப்படி ஆரம்பிச்சது 'நானும் கொஞ்சமானும் எழுதணும்' ங்கற ஆசைல கொண்டு போய் விட்டுடுச்சு. அதன் விளைவா சில கதைகள் கவிதைகள்(!!) கூட எழுதியிருக்கேன். அதில எனக்குப் பிடிச்ச சிலதை உங்களோட பகிர்ந்துக்குறதுல ரொம்ப மகிழ்ச்சி.


சின்ன வயசு நினைவுகளையெல்லாம் அப்படியே வாசம் புடிச்ச பதிவு இது. சின்ன பொண்ணா நான் வளர்த்த/பார்த்த செடி, கொடி, பூ எல்லாம்  எனக்கு ரொம்ப ப்ரியமானவை, என்னோடு வளர்ந்த சகோதரிகள். வண்ணப்பூக்களை  நீங்களும் நுகருங்கள்.

நம்ம மேல சில பேர் அபரீமிதமா பாசம் அன்பு வைப்பாங்க. அன்பைத் திரும்ப எதிர்பார்க்காத selfless love ன்னு சோல்லலாம்.  பிரதிபலன் பார்க்காத அதே அன்பை / காதலை அவங்களுக்கு பரிசா குடுக்க முடியலைன்னா,  அதை குடுக்கமுடியாம நாம படுகிற வலியை என்னன்னு சொல்லுற இந்தக் கவிதை என் படைப்புக்களில் எனக்கு மிகவும் ப்ரியமானது.

மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சு போன சில கவிதை அல்லது கதை உண்டு. pablo neruda வின் saddest poem எனக்குள்ள அந்த தாக்கத்த உண்டு பண்ணிச்சு. அந்தக் கவிதையில மூழ்கிப் போய்
உருகி அதோட தமிழாக்கத்தை என்னால் இயன்றவரை செதுக்கினேன். எனக்கு ரொம்ப திருப்தி தந்த தமிழாக்கம் நான் பொக்கிஷமா கருதற ஒரு படைப்பு.

பிடிக்காமல் போன நவராத்திரி என்னோட சின்ன வயசு அனுபவத்தை நான் அசை போட்ட பதிவு. இந்த பதிவு போட்டவுடன் ஏற்பட்ட திருப்தில நவராத்திரியும் ரொம்ப புடிச்சு போச்சு.

சிறு வெற்றிக்கான  அங்கீகாரம் "சர்வேசன் நச் சிறுகதை" போட்டில எனக்கு கிடைச்சுது. என்னோட பள்ளிக்கூடம் போகமாட்டேன்’ சிறுகதை முதல் இருபது இடங்களில் ஒண்ணை பிடிச்சுது.  எனக்கு சூட்டப்பட்ட குட்டி மகுடம். அதனால ரொம்ப ஸ்பெஷல்.

மிச்சப்படி, நான் தொகுத்து வழங்கியிருக்கிற சோவின் எங்கே பிராமணன் ஆன்மீக விளக்கங்கள்/கதைகள், என் ஆன்மாவில ஒட்டி உறவாடுற பதிவுகள். இன்னதென சுட்டிக் காட்ட முடியவில்லை.

இவ்வளவு தானா நான்....?

*****************

'நான்' யார்? மறுபடியும் கேட்டுப் பார்க்கிறேன். என்னுடைய வலைதளத்தின் வரிகள் இதற்கான சரியான விடையை சொல்ல முற்பட்டிருக்கிறது.

" 'நான் யார்' என்று ஆராய முற்படும் போதே, அங்கு 'நான்' என்பது இருப்பதில்லை"

******************


எனக்குப் பிடித்த சில பதிவுகளை ஏழு பாகங்களாக பிரித்துப் பகிர எண்ணியிருக்கிறேன். பிரபஞ்சத்தில் தோன்றி மறையும் எதுவும் (you name it)


"துவங்கி,... 
வளர்ந்து,... 
பொலிந்து,... 
வாழ்ந்து,... 
முதிர்ந்து,... 
தளர்ந்து,... 
அமைதி.....  பெறுகிறது.


இக்கருத்துக்களைக் கொண்ட பிரிவுகளாய் வலைச்சரத்தை கோர்க்க எத்தனித்திருக்கிறேன். சரத்தின் துவக்கத்துடன் அடுத்து வருகிறேன். 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது