07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 7, 2008

பதிவுலகத் தமிழ்க்கவிதைகளும் நானும் - மௌனத்தின் அரசியலும் அரசியல் மௌனமும்

dali-metamorpasisதமிழில் கவிதை எழுதுதல் என்பது ஒரு குடிசைத்தொழில் என்று யாரோ சொன்னது நினைவிற்கு வருகிறது. எழுத்தாளர்கள் பெரும்பாலும் கவிதையில்தான் எழுத்தை துவங்குகின்றனர். கவிதை என்பது எழுத்திற்கான நுழைவு வாயிலாக உள்ளது. தொடர்ந்து பயணிப்பதும், அதைவிட்டு விலகுவதும் அவரவர் சூழலைப் பொறுத்து நடப்பதே. தமிழ் கவிதைகளில் என்னைக் கவர்ந்த கவிஞர்களுல் முக்கியமானவர்  கலாப்ரியா. காரணம் நான் கவிதை எழுதத் துவங்கிய காலங்களில் என்னை ஆகர்சித்த கவிஞர்களில் ஒருவர். அவரிடம் மூன்றாம் உலக கதைசொல் மரபிலான கவிதைகளும் ஆழ்-மனப்படிமங்களும் உண்டு. தொல்மனப்  (archetype) படிமங்களை கவிதையாக்கிய முக்கிய கவிஞர். ஆனால், பதிவுலகில் ஏனோ கவிதையைவிட மற்றவகை எழுத்துக்களே அதிகம். அதனால் பதிவுலகில் உள்ள கவிஞர்களுக்கான ஒரு அறிமுகமே இச்சரம்.

பதிவுலகில் பாலைத் திணையைப் பேசும் காயத்ரி நுன்னுணர்வுகளை சிக்கனமாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகிறார் தனது கவிதைகளில். “பிரிதலும் பிரிதல் நிமித்தமுமாக“ உள்ளன பெரும்பாலான கவிதைகள் என்றாலும் காதலின் துயர் நிரம்பிய பொழுதுகளை நுன்னுணர்வுடன் சொல்கிறது இக்கவிதைகள். இழந்த மழை.. என்ற இக்கவிதையில்தான் எனக்கு இவர் பதிவில் அறிமுகமானார். அக்கவிதையின் எளிய நடையின் உள்ளார்ந்து ஆழமாக நான் உணர்ந்த பொருளை பின்னோட்டமாக இட்டேன். கவிதை எளிய நடையில் பாலியல் பற்றி பேசுவதாக எனது இடையீடு இருந்தது. அந்த இடையீட்டை அப்படியே தருகிறேன்.

இரவோடிரவாய்

வந்து போய் விட்டிருக்கிறது

மழை.

முன்வாசல் மரங்களின்

இலைகளிருந்து

துளித்துளியாய்ச் சிந்தும்

நீர்த்துளிகள்

நினைவூட்டியபடி விழுகின்றன

நான் தவறவிட்ட தருணங்களை!

இந்த கவிதையை நான் வேறுவிதமாக வாசிக்கிறேன்.

இரவு பேய்த மழையும்
இழந்துவிட்ட தருணங்களும்..

இந்த இரண்டுவரிகளை ரொமாண்டிசைஸ் பண்ணாமல் யதார்த்ததில் பொறுத்தினால்.. இதற்குள் ஒடுங்கி கிடக்கும் ஒரு அமைப்பு பாலியல் குறித்த அவதானிப்பைக் கோருகிறது. பெண்ணிய வாசிப்பில் பெண் இழந்த தருணங்களா? அல்லது அவளுக்கு மறுக்கப்பட்ட தருணங்களா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. கவிதை ஆசிரியை அல்லது கவிதைக்குள் பேசும் குரல் தன்னை பெண் அடையாளமாக உணராமல் சமூகம் கட்டமைத்துள்ள பெண்ணாக உணர்கிறது. மறுக்கப்பட்ட தருணங்களை இழந்த தருணங்களாக இக்கூற்ற இங்கு வடிவமைகிறது.
பொதுவாக புதுக்கவிதைகளில் மழை என்பது பாலியல் குறியீடாகத்தான் வருகிறது. கலாப்ரியாவின் கவிதைகளை வாசித்தால் மழையின் பண்முக அர்த்த சாத்தியங்களை புரிந்து கோள்ள முடியும். விமர்சனம் தலையைச் சுற்றினால்.. ஒரே ஒரு keyword மழை என்பதை பாலியில் கலவியுடன் பொறுத்திப் பாருங்கள். இது கவிதைக்குள் இயங்கும் அமைப்பு.. அல்லது கவிதையின் நினைவிலப் புலம் புலப்படும்

இதற்கு காயத்ரியின் பதில் ”ஜமாலன்.. எதுக்கு இப்பிடி என்னைத் திட்டிருக்கீங்க? ஒன்னுமே புரியல.. :(”” எனது வாசிப்பு எனக்கான பிரதியை உருவாக்கிவிட்டது போலும். :)

சிறகதைக்கான நுட்பம் இவரது கவிதைகளின் இறுதிவரிகளில் தெறிப்பதைக் காணமுடிகிறது. கோபித்த காதல்! இக்கவிதையில் காதலின் கோபம் அழகியது என்பதை ஊடல் குறித்த சங்கத் தமிழ் இவரிடம் சொல்லியுள்ளது. வனம் மனதின் ஒரு குறியீடாக மாறும் கவிதை இது.  புள்ளிகளால் ஆன கோவமே மனதின் தத்துவச் சிக்கலாக மாறும் கவிதை இது. தப்பித்தலின் சாத்தியங்கள்... பெண்மீது நிர்பந்திக்கப்பட்ட துயர் நிரம்பிய வாழ்வை ஒரு தொட்டிச் செடியாக முன்வைக்கிறது இக்கவிதை. தனிமையை சொற்களால் நிரப்பமுடியாது என்கிறது இந்த தனித்திருத்தல். சொல் என்பது ஒரு சொல்தான் என்பதாக உள்ளது இக்கவிதை. காதலின் வாசத்தை மென்மையாக பரவவிடம் கவிதைகள் இவருடையவை.

முடிவற்ற அன்பைத் தேடிக்கொண்டிருக்கும் முபாரக் தனது பதிவை கவிதைக்கு மட்டுமே அர்ப்பணித்து விட்டார் என நினைக்கிறேன். கவிதைகளால் அவர்தேடிய அன்பில் மிஞ்சியிருப்பது பெருந்தனிமையே. தனிமையை கவிதையாக்கியிருப்பவர்களில் குறிபிடத்தக்க இடம் உண்டு இவருக்கு. அவரது கவிதைகளை நான் எனக்கு நெருக்கமாக உணரக் காரணம், நானும் அந்த கொடுந் தனிமையில் இருந்தவன்தான். ஒருவகையில் கவிஞர்கள் எல்லாம் நீர்த் தாவரங்களைப் போன்றவர்களே. ஈரம் இல்லாவிட்டால் உலர்ந்து போய்விடக் கூடியவர்களாக உள்ளனர். இந்த ஈரம் பெண் எனும் உடல்-வெளிச் சுரக்கும் ஈரம்தான். சொற்களோடுதான் வாழ்வென்றாகிவிட்ட பிறகு... என்ற இக்கவிதையின் வரிகள்..

தனிமை நிரம்பியிருக்கும்
அறைகளில்
சொற்களைத்தான்
புணர வேண்டியிருக்கிறது

இக்கவிதைதான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது. உண்மையில் எனது முதல்நூல் அந்த தனிமையில் எழுதப்பட்டதுதான். ஒருவேளை நானும் அந்த புணர்ச்சியில் ஈடுப்பட்டவனொ? 

உனக்கென என்ற கவிதை வரிகள்....

எனக்கென நான்
என்ன வேண்டிக்கொள்ள முடியும்?
நான் தேடிவரும்
நீ எனக்கென மட்டும் இல்லை
மேலும்

உனக்கெனவும் இருக்கிறது
சில துயரங்கள்
எனினும் அது
உனக்காக காத்திருத்தலைப் போல
கடினமானதல்ல

இக்கவிதைக்கான எனது பின்னோட்டம் ” பன்முக வாசிப்பைக்கொண்ட கவிதை இது. கவிதையின் மையம் அல்லது கவிதை 'நீ எனக்கென மட்டும் இல்லை' என்கிற வரியிலிருந்துதான் வளர்ந்து இந்த வடிவத்தை அடைந்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த வரிதான் கவிதையின் மையம் அல்லது உயிர் எனது வாசிப்பில். இதில் கேட்பவனாக உள்ளவன் அல்லது உள்ளவள்-களைப் பொறுத்தினால் பல அர்த்தங்கங்கள் வரும்.  1. உள்ளவள் - ஒரு தாசி (பரத்தையோ அல்லது விபச்சாரி அல்லது பாலியல் தொழிலாளி). 2. காதலி 3. நண்பி 4. காதலன்  5. நண்பன். மேலும் காத்திருக்கும் எல்லா அனுக்கமான உறவுகளுக்கும் இது பொறுந்தும். தன்பால் புணர்ச்சிக்கூட. காதல் கவிதைகளை ஏன் பெண் ஆண் என்கிற எதிர்வுக்குள் வைத்து வாசிக்க வேண்டும். ஆண்-ஆண் பெண்-பெண் என்கிற இணைக்குள் வைத்து வாசித்துப் பார்க்கலாம். 'வேண்டிக்கொள்ள முடியும்" என்கிற வார்த்தையை பிரார்த்தனை என்கிற இறையியல் தளத்திலான ஒன்றாக வைத்தும் வாசிக்கலாம். அல்லது இறைவனிடம் ஒரு வேண்டுகோளாக கொண்டும் வாசிக்கலாம். இறைவனுக்கு ஏது துயரங்கள் என்கிற கேள்வி வரும். இதற்கு ஒரு உளவியல் விளக்கம் உள்ளது.

வேட்கை என்பது ஒரு குறை. அதாவது குறை இருந்தால்தான் அதை நிறைவு செய்ய வேண்டிய விருப்பம் ஏற்படும். அந்த விருப்பமே வேட்கையாக மாறுகிறது. இறைவன் மனித குலத்தை படைத்து தன்னை சரணடையவோ அல்லது தன்னை வணங்குவதையோ அடிப்படை நிலைப்பாடக வைப்பது என்பதே இறைனின் ஒரு வேட்கைதான். ஏனென்றால் அது அவனிடம் உள்ள குறை. இந்த குறை நிறைவேற்றத்திற்கு தடையானவனே சாத்தானாக கற்பிதம் செய்யப்படுகிறது. இந்த குறை குறித்த உரையாடல்களே திருமறைகள் மற்றும் தேவதூதர்களின் தூதுத்துவம் எல்லாம். குறை அல்லது வேட்கையே துயரத்திற்கான மூலகாரணம் என்கிறது பெளத்தம். ஆக, இறைவனின் துயரம் தனது படைப்புகள் தன்னை முழுமையாக சரணடைவதற்காக சாத்தானுக்கு எதிரான போராட்டமும். அதன் வெற்றியுமாகும். எதிர்மறையாகப் பார்த்தால் மற்றொருவருக்கு உரிமையான பொருளுடன் ஆன உறவு எனவும் விரிக்கலாம். அல்லது காதல் மட்டுமல்ல கள்ளக்காதல் பற்றியதும் இந்த கவிதை. மற்றொருவருக்கு உரிமையான பொருளுக்கு காத்திருத்தல் பற்றியதாக வாசிக்கலாம். கடவுள் துவங்கி கள்ளக் காதல்வரை இக்கவிதைக்கு பொறுந்தகிறது. 'குருவித் தலையில் பனங்காய்' என்று எண்ண வேண்டாம். குருவிக்கு அதை தாங்கும் சக்தியை கவிதை மொழி் தந்திருப்பதே இதன் சிறப்பு.

கிளிஜோசியம்  என்கிற கவிதையில் வெளிப்படும் சமூகக் கோபமும், சலிப்புகளின் வனம் கவிதையில் காமம் ஒரு கார்டூன் படம்போல பல மிருகங்களாக வளர்ந்து நிற்பதும், வாழ்வின் சிக்கலான முரண்கள் முடிவற்ற கேள்விகளாக தொடருவதும், தனிமையின் சிலுவைப்பாடுகள் பற்றிய எண்ணற்ற கவிதைகள் எழுதப்பட்டுள்ளது இவரால். நான் மிகவும் அனுக்கமானது இவரது வெறுமையின் கண்கள், வேறொன்றும் இல்லை என்ற இந்த இரண்டு கவிதைகளில்தான். தனிமையின் விரகம்தாபம் எப்படி வலி நிறைந்த மௌனத்தின் எழுத்தியக்கமாக மாறுகிறது என்கிற வித்தையை படிக்க இவரது கவிதைப் பதிவுகள் சரியான ஒரு புகழிடம்தான். பிரச்சனை நுழைந்தவுடன் நமது விரகமும் காமமும் ஒரு படிகமாக நமக்குள் மாறி உருளத் துவங்குவதை தவிர்க்க முடியாது. கடவுள் குறித்த இவரது விசாரணை தனியாகப் பேசப்பட வேண்டிய பல கேள்விகளைக் கொண்டது.

எழுத்தை, கவிதையை ஒரு மொழிவிளையாட்டாக மாற்ற முனையும் பின்நவீனத்துவத்தின் பாதிப்புகளொடு ஒரு நவீனத் தன்மைக் கொண்ட கவிதைகளை எழுதிச் செல்பவர் ஜ்யோவ்ராம் சுந்தர். இவரது அ-கவிதைகள் பதிவுலகில் ஒரு புதிய வரவு. இவரது கவிதைகளில் சொல் அலங்காரங்கள் “ரொமாண்டிஸிஸம்“ எனப்படும் கற்பனை சார்ந்த கனவுகள் இல்லை. நேரடிச்சொல்லில் எழுதப்படும் கவிதைகள். ஆத்மநாம் கவிதைகளில் உள்ள இந்த தன்மை இவரின் முக்கிய போக்காகும். மழை பற்றிய இக்கவிதையில் மழைக்கான எந்த கற்பனையும், காதலும், புனைவும், குறியீடும் இல்லை. இங்கு உடல்களின் அரவையாக நிற்கும் மனிதர்களின் ஒதுங்கலும் அது தரும் உணர்வும்தான் இக்கவிதை.  அப்பாவும் அம்மாவும் காணாமல் போக்கியவை என்ற இக்கவிதையில் நவீனக் கவிதையின் குணாம்சங்களில் ஒன்றான உயிர் உள்ள உயிரற்ற (சேதன அசேதன) பொருட்களை சமதளத்தில் வைப்பதன் மூலம் ஒரு மனித இழப்பை சொல்வது. மகனை ஒரு உயிரற்ற பொருளாக மாற்றும் அந்த இறுதி வரிகள் அருமை. மனிதன் தனது மையத்தை இழந்து ஒரு மறந்து வைத்தவிட்ட “பொருளாக“ மாறும் நவீன காலத்தின் அவலம்தான் இக்கவிதை.

சீறிச் சீறி
சுழன்றடிக்கிறது காற்று
நாற்புறமும்
விழுந்த ஒன்றிரண்டு மழைத்தூறல்கள்
மண் வாசனையைக் கூடக் கிளப்பவில்லை
மரங்கள் பேயாட்டம் போடுகின்றன
மனதின் விகார உருவங்களாய்
தனிமை பயமுறுத்த
காற்றைப் பார்த்தபடி
கழிகிறதென் பொழுது

தனிமை பற்றிய இக்கவிதையை முபாரக் மற்றும் காயத்ரி முன்வைக்கும் தனிமையுடன் ஒப்பிடும்போது இது மற்றொரு பரிமாணத்தை சொல்வதை உணரமுடியும். அக்கவிதைகள் விரகத்தின் வேட்கையையும், காதலின் வேட்கையுயும் அடிப்படையாகக் கொண்டவை என்றால் இத்தனிமை வேட்கையற்ற நிலையில் உருவாகம் ஒருவகை விட்டேத்தியான தனிமை. இது கிராம நகர உடல்பாடுகளின் உள்ளுணர்வின் வெளிப்பாட்டை நமக்குச் சொல்கிறது. நகர மனிதனுக்குள் அடர்ந்திருக்கும் வெறுமையைச் சொல்வது இவை. காண்கிரீட் வனத்திற்குள் தனிமையாக உணரும் நிலை இது.

வாழ்வை ஒத்திப் போடுதல் என்பது மதங்களின் சொர்க்க, நரக பெரும்பனைவுகளை கேள்விக்கு உட்படுத்துகிறது இக்கவிதை.  விரும்பியதும் வாய்த்ததும் வாழ்வின் யதார்த்த முகத்தை சொல்லும் நமது பெரும்பான்மையினரின் அனுபவமே. சுந்தரின் மொழிநடை இயல்பானது. கவிதைக்காக தேர்ந்தெடுக்கும் சூழலும்கூட மிகவும் எளிமையான அன்றாட அனுபவங்களே. இது குறித்து எழுத நிறையவே உண்டு இவரது கவிதைகளில்.

தனிமையில் இருந்து தனிமையின் இசையை இசைக்கும் அய்யனார் தற்சமயம் கூட்டிசையில் ஈடுபட்டுள்ளார் என்றாலும், அவரது தனிமையின் வாசத்தை பேசும் நுட்பமான கவிதைகள் அவருடையவை. வளைகுடா நாடுகளின் தனிமையில் உள்ள பிரத்யேகக் குணம் அந்த தனிமைக்குள் பாலுணர்வம், விரகமும், காமமும் இருப்பது. காரணம் இங்கு தடை செய்ய்ப்பட்ட அந்த வெளிப்பாட்டு உணர்வுகளின் விளைவு அது.   திரையிடப்பட்ட கண்களே ஒரு பெரும் திரைக்காட்சியின்பமாக மாறும் நிலை அது. திரவ போதையும், திடமான  முலைகளும் (குறிப்பாக பெருமுலைகள். பெருமுலை வேட்கை என்பதை ஓடிபல் உணர்வு என்கிறது பிராய்டியம்) அடிப்படை உந்து சக்தியாக உள்ள கவிதைகள் இவருடையவை. உயிர்த்திருத்தல் என்பது என்ன? இயல்பாக இருத்தல் என்பதுதான். எதிர்மறையாக இன்றைய வாழ்வு இயல்பற்றதாக உள்ளதின் துயரத்தை சொல்கிறது இக்கவிதை.  வனங்களில் அலையும் நீலி ஒரு புராதனத் தாயின் கானக அலைச்சலை சொல்வதாகிறது. ஆதியின் மூல வடிவத்தை மீட்டெடுத்தல் இங்கு புணிதமும் வன்மும் இணைந்தே செயல்படும் தன்மை கவிதையாகி உள்ளது. இருத்தலின் சுயவதையே இவரது கவிதைகள் என்றாலும்... சொற்சிக்கனமற்றவை என்பது சற்றே நிரடலாக உள்ளது.

பதிவுலகின் கலக எழுத்தாளராக அறியப்படும் சுகுணா திவாகர் நுட்பமான கவிதைகளையும் எழுதக் கூடியவர் என்பதை சொல்லுகிறது அவரது இப்பதிவு. தலையூழி என்கிற இகக்விதை ஏற்படுத்தும் படிமம் அதீதமானது. யோனியில் முளைத்த குறுவாள் புணர்ச்சியின் வன்முறை சார்ந்த நிகழ்வை சொல்லும் இக்கவிதை சிறுமிகளின் மீதான வன்புணர்ச்சியை சொல்வதாகிறது. ஆண்விடாய் இக்கவிதை முற்றிலும் புதிய தளத்தில் ஒரு ஆணின் தன்பால்-புணர்ச்சி வேட்கையை வெளிப்படுத்தும் கவிதை. பாலியல் அதீதங்கள் பற்றிய ஒரு கலகக்குரலாக உள்ளன இவரது பெரும்பாலான கவிதைகள். சற்று உரத்த குரலில் ஒழிக்கக் கூடியவை.

பேசலாம் என பதிவுலகை அழைக்கம் கவிஞர் வ. மணிகண்டன் தமிழ் சிறுபத்திரிக்கை உலகில் ஒரு குறிப்பிடத்தக்க கவிஞராக உள்ளார். பதிவுகளில் இவரது கவிதைகள் காணக்கிடைக்கவில்லை என்றாலும் இவரை அறிந்து கொள்ள இங்கு உள்ள கவிதைகள் உதவும். தனது பேச்சினை எதிர்கொள்ள முனையும் சூழலின் வலியை உணர்த்தும் உடைந்து நொறுங்கும் மீன் தொட்டிகள் பற்றிய கவிதை. காதுகளை மட்டும் விரும்பும் எதிராளிகளிடம், நமது மௌனத்தை கலைத்தால் நம்மையே உடைக்கிறார்கள். மொழி என்பது ஒரு போராட்டக் களம்தான் (battlefield). தனது “தானை“ நிறுவிக் கொள்வதற்கான போராட்டக்களம் என்பதை நுட்பமாக சொல்கிறது இக்கவிதை. உடல் வாசமே கதையாக மாறும் நினைவின்பத்தை சொல்லும் கவிதை கதை சுமந்து திரியும் வாசம்”.  

தமிழின் தற்காலத்தில் சிறுபத்திரிக்கையில் எழுதிவரும் மற்றொரு குறிப்பிடத்தகுந்த கவிஞர் கடற்கரய். இவரும் பதிவுகளில் கவிதைகளை வெளியிடவில்லை என்றாலும் இவரது கருப்பு மனிதன் என்கிற இப்பதிவில் கவிதைகள் வெளியாகியள்ளன. இங்கும் இவரது சில கவிதைகளை படிக்க முடியும். அக்கவிதைகளில் ஒன்றான ”கடவுளின் தற்காலப் பிரச்னை” என்கிற இந்த நெடுங்கவிதை புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் கதையைப்போல தற்காலத்தில் சென்னைக்கு வரும் கடவுள் படும்பாடும் மாறும் விதமும் என ஒரு நவீன கதையாக விரிகிறது. கடவுளின் குழப்பநிலையை சொல்கிறது கவிதையின் இந்த இறுதி வரிகள்....

படைத்தல் ரட்சித்தல் காத்தல் அழித்தல் என்று பல வருடம்
ஊதாரிதனமாய் வாழ்க்கை நடத்திட்ட கடவுளுக்கு
சட்டம் ஒழுங்கு பாஷைகள் புரிபடாமல் போனதால் இப்போதெல்லாம்

கையாலாகாதவனாய் காலத்தை கழித்து கொண்டே வருகிறார் கடவுள்.

இங்கு மாதிரியாகச் சொல்லப்பட்ட கவிதைகள் மட்டுமே இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்திவிடாது. இது ஒரு வழிதான். பயணம் உங்களிடம்தான் உள்ளது. கவிதை என்பது என்ன? என்ற கேள்வியுடன் இதனை முடிக்கலாம். கவிதை என்பது ஒரு உணர்வுநிலை. அதன் உடனடி விளைவு அது ஏற்படு்த்தும் ஆழ்ந்த மௌனமும் அது உருவாக்கும் மனப்படிமும்.  மௌனம் இரண்டுவகையானது. ஒன்று செயலூக்கமுள்ள மௌனம் (active silence) மற்றது செயலற்ற மௌனம் (passive silence). படைப்புகள் ஒருவருக்கு ஏற்படுத்தும் ஆழ்மன பாதிப்பு என்பது உருவாக்கும் மௌனம் செயலைத் தூண்டுவதாக சமூகக் கோபத்தை கொண்டதாக மாறினால் அந்த மௌனம் செயலூக்கமுள்ள மௌனம் எனலாம். அக்கவிதைகளையே சமூக மாற்றத்திற்கான ஆயதமாக ஆக்கிய கவிதைகள் எனலாம். பாலஸ்தீனக் கவிஞரான மகமுத் தார்வீஸ் துவங்கி வசந்தத்தின் இடிமுழக்கம் என நக்சல் எழச்சியை முழங்கிய செரபண்டராஜ் மற்றும் இன்குலாப் வரை அத்தகைய கவிஞர்களாக அடையாளம் காணலாம்.  சில பாதிப்புகள் ஏற்படுத்தும் மௌனம் செயலற்ற நிலையை உருவாக்கலாம். அந்நிலை அகநிலை பதிப்பாக மனதை மனிதாயப்படுத்துவதாக இருக்கிறதா? அல்லது மனதில் வக்ரத்தை, நோயுணர்வை உருவாக்குகிறதா? என்பதை பொறுத்து அம்மௌனத்தின் அரசியல் இயங்குகிறது.  இங்கு காட்டிய கவிஞர்கள் அத்தகைய மனதின் அரசியலைப் பேசுபவர்கள். இவர்களது குரல் உரத்தக் குரல் அல்ல. மனதை மனிதாயப்படுத்தும் அகநிலை சார்ந்த கவிதைகள்.  இதைத்தவிர, எண்ணற்ற கவிஞர்களும், கவிதைகளும் நமது வாசிப்பின் பரப்பிற்கு வெளியே இயங்கிய படித்தான் இருக்கிறார்கள். அதைநோக்கி நகர இப்பதிவு உங்களுக்கு உதவக் கூடமெனில், அதுவே இந்த உழைப்பிற்கான பலனாக இருக்கும்.  

நன்றி.

அன்புடன்

ஜமாலன். 

image courtesy: Salvador Dali's Metamorphosis of Narcissus

15 comments:

  1. நீங்க அவங்களுக்கு புரிகின்ற மாதிரி சொல்லவில்லை என்றுத் தோணுகிறது ஜமாலன் ஐயா.

    இப்ப பாருங்க..நான் சொல்லுற மாதிரி சொல்லியிருந்தா அவங்களுக்கு கப்பென்று புரியும்..


    ////இந்த (கோழிக்கால்)இரண்டுவரிகளை (கோழிக்கால்)ரொமாண்டிசைஸ் (கோழிக்கால்)பண்ணாமல் (கோழிக்கால்)யதார்த்ததில் (கோழிக்கால்)பொறுத்தினால்..

    இதற்குள் (கோழிக்கால்)ஒடுங்கி கிடக்கும்(கோழிக்கால்) ஒரு (கோழிக்கால்)அமைப்பு (கோழிக்கால்)பாலியல் (கோழிக்கால்)குறித்த(கோழிக்கால்) அவதானிப்பைக் கோருகிறது. (கோழிக்கால்)
    ////

    இப்படிப் போட்டிங்கன்னா தெளிவா படிச்சி புரிஞ்சியிருப்பாங்க...

    ReplyDelete
  2. உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவருவதால் தொடர்ந்து எனக்கு பெருமூச்சே வருகிறது.

    "சிறந்த எழுத்தாளர் ஒருவர் வெகு ஜன ஊடகத்தால், வாசிப்பாளர்களால் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்"

    ReplyDelete
  3. பெரிய தம்பி டிபிசீடிக்கு..

    எனனவச்சி காமெடி கீமெடி எதுவம் பன்னலையே..)))

    நிங்க என்ன சொல்ல வர்ரீங்க.. புதசெவி....

    ReplyDelete
  4. கோவி.கண்ணன் said...

    //உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவருவதால் தொடர்ந்து எனக்கு பெருமூச்சே வருகிறது.

    "சிறந்த எழுத்தாளர் ஒருவர் வெகு ஜன ஊடகத்தால், வாசிப்பாளர்களால் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்//

    வெகுசன ஊடகம் என்பது இருப்பதால்தான் நாம் இப்படி சீரியஸ் பேசி காலத்தை ஓட்டுறோம். அதனால் அது கண்டுகொள்ளாமல் இருப்பதே நம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வழி.

    உங்கள் ஊக்கத்திற்கும் புரிதலுக்கும் நன்றி...

    ReplyDelete
  5. ஜமாலன், கவிதைகளுக்கான விமர்சனங்கள் செய்வதற்கான காலம் போய்விட்டட்தென குரல்கள் எழுப்பப்படும் நேரம் ஈழக்கவிதைகள், தமிழகக்கவிதைகள் என்ற இரண்டு பதிவுகளை நீங்கள் எழுதியிருப்பது மனதுக்கு உவப்பாக இருக்கின்றது. நீங்கள் - காயத்ரியின் கவிதையை முன்வைத்து - உங்களுக்கான வாசிப்பை உருவாக்கியது போலத்தான் கவிதைகளை அணுகி நாம் அவற்றின் மீதான எமது பார்வைகளை முன்வைக்கவேண்டியிருக்கிறது. ஆசிரியர் இறந்துவிட்டார் என்று கூறிவிட்டு நாம் நமது வாசிப்பைக் கோரும் பிரதிகளை முன்வைக்கின்ற காலகட்டத்திலிருக்கிறோம் போலும். மற்றது, மற்ற ஊடகங்களில் ஒரே மாதிரியான, ஒரே குறிப்பிட்ட கவிஞர்களின் (சிற்றிதழ்களில் கூட) கவிதைகள் வெளிவந்து, கவிதை வாசித்தல் மீது சலிப்பு கவிழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் வலைப்பதிவுகளில் வந்த சிலரது கவிதைகள் அந்தச் சோர்வை நீக்கியிருந்தன என்பதையும் குறிப்பிடவிரும்புகிறேன். நன்றி.

    ReplyDelete
  6. டிசே தமிழன் said...

    //ஜமாலன், கவிதைகளுக்கான விமர்சனங்கள் செய்வதற்கான காலம் போய்விட்டட்தென குரல்கள் எழுப்பப்படும் நேரம் ஈழக்கவிதைகள், தமிழகக்கவிதைகள் என்ற இரண்டு பதிவுகளை நீங்கள் எழுதியிருப்பது மனதுக்கு உவப்பாக இருக்கின்றது. //

    கவிதைகளே செத்துவிட்டது என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்படாததற்கு மகிழச்சியடைய வேண்டும் முதலில். காரணம் கவிதைகள் ஒழுங்கமைக்கப்பட்ட மொழியால் எழுதப்படுவதாகவும் அவை மத உணர்விற்கு நெருக்கமானவையாகவும் உள்ளது. மத உணர்வே இன்றைக்கான கலை உணர்வாக உள்ளது என்பதான சில கற்பிதங்கள் எனக்கும் உண்டு. இது குறித்து கவிதையும் சிதைவாக்கமும் என்று ஒரு கட்டுரை எழுதி உள்ளேன் 90-களில். அவற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதை இக்கட்டுரைகள் எழுதும்போது உணர்ந்தேன்.

    //நீங்கள் - காயத்ரியின் கவிதையை முன்வைத்து - உங்களுக்கான வாசிப்பை உருவாக்கியது போலத்தான் கவிதைகளை அணுகி நாம் அவற்றின் மீதான எமது பார்வைகளை முன்வைக்கவேண்டியிருக்கிறது. ஆசிரியர் இறந்துவிட்டார் என்று கூறிவிட்டு நாம் நமது வாசிப்பைக் கோரும் பிரதிகளை முன்வைக்கின்ற காலகட்டத்திலிருக்கிறோம் போலும்.//

    உங்கள் கருத்து சரியானதே. ஆசிரியன் இறந்துவிட்டான் என்பதை ஆசிரியனாக தன்னை நிறுவிக் கொள்ளும் எழுத்து இயந்திரத்தின் “தானை“ குறித்ததாகவே நான் கருதுகிறேன். நான் ரோலான் பர்த் அதிகம் வாசித்ததில்லை. தனிமனிதனாக கருதி எழுதும் ஆசிரியன் தன்னை எழுத்தின் மையமாக கருதிக்ககொள்ளும் ஆசிரிய முதன்மைவாதத்திற்கு எதிரானதாகவே அக்கூற்றை நான் கருதிக்கொள்கிறேன். அவனது படைப்பிற்குப் பிறகு அந்த ஆசிரியனே ஒரு வாசகனாக மாறிவிடுகிறான் என்பதே. (இதுகுறித்து எனது ”யதார்த்தவாதம் எனும் பாசிச வேர்களில்” என்ற கட்டுரையில் விவாதித்துள்ளேன்.அது எனது பதிவில் மீள்பதிவும் செய்ய்ப்பட்டுள்ளது. வாய்ப்பிருப்பின் பாருங்கள்.http://jamalantamil.blogspot.com/2008/02/blog-post_25.html )

    //மற்றது, மற்ற ஊடகங்களில் ஒரே மாதிரியான, ஒரே குறிப்பிட்ட கவிஞர்களின் (சிற்றிதழ்களில் கூட) கவிதைகள் வெளிவந்து, கவிதை வாசித்தல் மீது சலிப்பு கவிழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் வலைப்பதிவுகளில் வந்த சிலரது கவிதைகள் அந்தச் சோர்வை நீக்கியிருந்தன என்பதையும் குறிப்பிடவிரும்புகிறேன். நன்றி.//

    உண்மைதான். நான் கவிதைகள் வாசித்து பல வருடங்கள் ஆகிறது. வலைப்பதிவிற்கு வந்தப்பிறகே கவிதைகள் வாசிக்கிறேன். அந்தவகையில் என்னை பாதித்த கவிஞர்கள் அறிமுகமே அது.

    நன்றி.

    ReplyDelete
  7. அன்புடன் ஜமாலன் அவர்களுக்கு,

    நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவை முழுமையாக உட்கார்ந்து வாசித்த மனநிறைவு.

    தேர்ந்திருக்கும் கவிதைகளை வைத்து உங்களது வாசிப்பில் ஒரு பிரதியை முன்மொழிந்திருக்கிறீர்கள் என்பதில் மாறுபாடில்லை :)

    பல மாறுபாடுகள் இருப்பினும் விரிவாக உரையாடவும் தற்சமயம் நேரம் வாய்க்கவில்லை.

    மன்னிக்க வேண்டுகிறேன்.

    எனினும் தாங்களும் வாசகர்களும் அசைபோட இரண்டு குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ள விருப்பம்.

    முதலாவது காயத்ரி அவர்களின் கவிதையை முன்வைத்து:

    தங்களுடைய வாசிப்பில் கவிதை பாலியல் அமைவு குறித்ததாக உருவெடுக்கிறது.

    இங்கு இன்னொரு வாசிப்பை முன்மொழிய விழைகிறேன்.

    கவிதை மழை குறித்தது.

    ஓரிரவு பொழிந்து சிறிது நேரத்திற்கு முன்னர் கடந்துவிட்ட மழை

    [போய்விட்டிருக்கிறது
    மழை ...

    (இன்னமும்)

    இலைகளிலிருந்து

    துளித்துளியாய்ச் சிந்தும்

    நீர்த் துளிகள்]

    கிளறிவிடும் நினைவுகள் குறித்தது.

    அந்த நீர்த்துளிகள் "நான் தவறவிட்ட தருணங்களை" நினைவூட்டுபவை.

    காயத்ரி என்ற கவிஞரின் அனுபவமாக வாசித்தால், அவர் ஒரு பெண் கவிஞர் என்ற உடல் சார்ந்த பாலியல் அடையாளம் வாசிப்பில் குறுக்கிட்டு, அன்றிரவு பெய்துவிட்டுச் சென்ற மழை, அவரிடம் கிளர்த்திவிட்டுச் சென்ற, "தவறவிட்ட தருணங்கள்" குறித்த நினைவுகள் காதல் குறித்தவை என்று உடனடியாக வாசிப்பர் ஒரு கற்பனை உலகில் மிதக்கத் தொடங்குவார்.

    [அவர் திருமணமாகாதவர் என்பதாக ஒரு தகவல் சேர்ந்தால், ஒரு பெண்ணின் - தலைமகள் - காதல் வெளிப்பாடு எனவும், சங்க மரபின் தொடர்ச்சியான கவிதை எனவும் வாசிப்பு நீளலாம்.

    திருமணமானவர் என்பதாக ஒரு தகவல் சேர்ந்தால், பெண்கள் தற்போது தமது பாலியல் வேட்கைகள் {அதாவது திருமணம், குடும்பம் போன்ற கட்டுக்களுக்குள் அடங்கிவிடாமல்} குறித்து துணிச்சலாக எழுதத் தொடங்கிவிட்டார்கள் என்றும், இதுபோன்ற பொன்ற பெண்களும் அவர்தம் கவிதைகளும் சங்க காலம் தொட்டே இருப்பவை எனவும் {பாணிணிகள், விரலியர், ஒளவை} வாசிப்பு நீளலாம்.]

    ஆசிரியன் இறந்துவிட்டான் என்ற கருதுகோளை அதன் செறிவுகளோடு ஒப்புக்கொண்டு இக்கவிதையை அணுகமுற்படுவோர், முதற்படியாக காயத்ரி என்ற கவிஞரின் தனிப்பட்ட அனுபவமாக இதை வாசிக்க முனையமாட்டார்கள் என்பதில் தங்களுக்கு மறுப்பிருக்காது என்று எடுத்துக் கொள்கிறேன்.

    காயத்ரி என்ற கவிஞரின் தனிப்பட்ட அனுபவமாக அல்லாமல் அணுகி வாசித்தால் என்ன நிகழலாம்?

    எளிமையான ஒரு வாசிப்பில், மழை குறித்த சாதரணமான ஒரு கவிதை என்று அணுகுவது ஒரு சாத்தியம்.

    மற்ற சாத்தியம் ஒன்றை கவனத்திற்குக் கொண்டுவருவதாக இருந்தால் இப்படியான ஒரு வாசிப்பை நிகழ்த்திக் காட்டலாம்.

    "வந்து போய்விட்டிருக்கிறது மழை" என்பதில் மழை "கிறது" என்ற படர்க்கை நிலையில் சுட்டுப்பட்டிருக்கிறது.

    இந்த படர்க்கை நிலை அஃறிணையைக் குறிப்பதாகுமா?

    தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களில், ஆண்பால், பெண்பால், பலவின்பால் ஆகிய முப்பால் நிலைகளில் உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைகளுக்கும் தெளிவான குறிப்புகள் தமிழில் உண்டு என்பதில் எவருக்கும் மறுப்பிருக்காது என்றே கருதுகிறேன் (எனது மிக மேலோட்டமான இலக்கண அறிதலை ஒப்புக்கொண்டு மேற்செல்ல விழைகிறேன்.)

    இவற்றில் மழை எந்த இடத்தில், பால் நிலையில், திணையில் பொருத்துவது?

    மழை ஒரு நிகழ்வு என்பதால் சாத்தியமாகாது என்று ஒப்புக் கொள்ளலாம்.

    அப்படியிருப்பின் மழை போய்விட்டிருக் "கிறது" என்ற படர்க்கை நிலை எதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்?

    இத்தகைய நிகழ்வுகளைக் குறிக்கும் படர்க்கை நிலைகளை "Fourth It" எனலாம்.

    இந்நிகழ்வுகள் "நமது" கட்டுக்குள் அடங்குபவை அல்ல ('நமது' கட்டுக்குள் என்னதான் இருக்கிறது).

    வெறும் இயற்கை சார்ந்த நிகழ்வுகள் மட்டுமே இத்தகைய நிகழ்வுகள் என்று சுருக்கி விடவும் முடியாது.

    They can be some unforseen "event" that is a sign of the coming times.

    கவிதைக்குள் வரும் மழையை (புற உலகில் வரும் மழை அல்ல) இத்தகைய ஒரு "நிகழ்வு" எனக் கொண்டால், அது எதற்குரிய குறித்தலாக (sign) வருகிறது?

    கவிதைக்குள் வரும் மழை என்கிற "நிகழ்வு" "நான் தவறவிட்ட தருணங்களை" நினைவூட்டுவதாக அமைகிறது.

    கவிதைக்குள் வரும் மழையும், "நான் தவறவிட்ட தருணங்களும்" நிகழில் (present)அமைந்திருக்கின்றன.

    "நிகழின்" (present) ஒரு "நிகழ்வு" (event) கடந்த காலங்கள் (past) குறித்த நினைவுக் கிளர்த்தலாக அமைகிறது.

    ஆனால், அந்தக் கடந்த கால நினைவுகள் எவை என்ற குறிப்பு கவிதைக்குள் இல்லை.

    சில குறிப்பிட்ட நினைவுகளைக் கவிதை குறிக்கவில்லை (ரசனைவாத வாசிப்பு இந்த நினைவுகளை காதல் நினைவுகள் என்று கற்பனை செய்து கொள்கிறது.)

    "நிகழுக்குள்" (present) பொதிந்து கிடக்கும் "பொதுவான அல்லது ஒட்டுமொத்த கடந்த காலங்களைப்" பற்றிய, அதாவது, "மெய்மையான ஒரு கடந்த காலத்தைப்" (virtual past) பற்றிய குறிப்பாக கவிதைக்குள் வரும் "தருணங்களை" கொள்ள இடமிருக்கிறது.

    இந்த "மெய்மையான கடந்த காலத்திலிருந்து" (virtual past) ஒவ்வொரு தனிப்பட்ட தருணங்களைக் கிளர்த்துவையாக அமைபவை ஒவ்வொரு சொட்டு நீர்த்துளியும் (ஒவ்வொன்றும் ஒரு நிகழ்வு).

    "முன்வாசல் மரங்களின்

    இலைகளிருந்து

    துளித்துளியாய்ச் சிந்தும்

    நீர்த்துளிகள்"

    ஆக, கவிதையை மழை எனும் ஒரு நிகழ்கால நிகழ்வு கிளர்த்தும் மெய்மையான கடந்த காலமும், அதோடு இயைந்து, மழை பொழிந்து முடிந்து, இலைகளிலிருந்து சொட்டும் சிறு சிறு நீர்த்துளியான மற்றொரு நிகழ்வும் கிளர்த்தும் தனிப்பட்ட கடந்த கால நிகழ்வுகள் குறித்த சுட்டுதலாகவும் வாசித்துப் பார்க்கலாம்.

    சுருங்கக் கூறினால், கவிதை காலம் குறித்தது. காலத்தின் அடுக்குகள் குறித்து உணர்வுத் தளத்தில் சிந்திக்கத் தூண்டுவது.

    ஆகக் கடைசியில், ரசனாவாத விமர்சனம் வந்து சேரக்கூடிய அதே முடிவிற்கு வந்து சேரும் வாசிப்பு :)

    கவிதையை எழுதிய காயத்ரியோ அல்லது வேறு வாசகர் ஒருவரோ இதையே,

    "நினைவுகளை அசை போடுவதை, ஒரு இரவுப் பொழுது மழையை வைத்து எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்"

    என்று எளிதாகச் சொல்லிப் போய்விடலாம்தான்.

    ஆகையால், மெலுள்ள வாசிப்பை நிகழ்த்தும் ஒரு வாசகருக்குக் கிடைக்கும் அனுபவம் இதைவிடவும் ஆழமானதாக இருக்குமா என்ற கேள்வியை வாசகர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுவதே நல்லதெனப் படுகிறது.

    இந்த வாசிப்பை முன்வைத்து, எழுப்ப முனையும் கேள்விகள்:

    1) கவிதைக்குள் உள்ள மொழி, அது கட்டமைக்கும் நிகழ்வுகள் சில வாசிப்புகளைக் கோருகின்றனவா இல்லையா?

    2)ஆசிரியன் இறந்து விட்டான் என்ற கருத்துகோளால், வாசகர் (ideal reader/critic) எத்தகைய வாசிப்பை வேண்டுமானால் தந்து கொண்டிருக்கலாமா?

    3) வேறு வகையில் கேட்பதென்றால் unlimited semiosis என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறோமா அல்லது அதற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை உண்டு என்பதை அங்கீகரிக்க போகிறோமா?

    4) வாசகர் தம் விருப்பத்திற்கு ஏற்றவாரு பிரதிக்கு அர்த்தம் தந்து கொண்டே போகலாமா அல்லது பிரதிக்குள் அது சாத்தியப்படுத்தும் அர்த்தங்களுக்கு, இடம் - காலம் - வாசிப்பு சூழல் சார்ந்து சில எல்லைகள் இருக்கின்றனவா?

    மன்னியுங்கள் ஜமாலன், எழுந்த சில கேள்விகளைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்து இவ்வளவு நீண்டுவிட்டது :) இரண்டாவது கேள்வியைச் சுருக்கமாக கேட்டுவிடுகிறேன்.


    பதிவில் ஒரு இடத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறீர்கள்:

    "வேட்கை என்பது ஒரு குறை. அதாவது குறை இருந்தால்தான் அதை நிறைவு செய்ய வேண்டிய விருப்பம் ஏற்படும். அந்த விருப்பமே வேட்கையாக மாறுகிறது."

    இது குறித்த எனது புரிதல் வேறு விதமானது.

    வேட்கை என்பது குறையிலிருந்து எழுவது என்ற கருத்தமைவு, நான் அறிந்தவரையில் உளவியல் சார்ந்து லக்கான் - லிருந்தும் தத்துவம் சார்ந்து Hegel - லிலிருந்தும் எழுந்தவை.

    இதற்கு மாற்றாக, நீட்ஷே, தெல்யூஸ் போன்றவர்கள் வேட்கை என்பதை "over flowing fullness", என்பதன் வெளிப்பாடாக கருத்தமைவு செய்திருக்கிறார்கள்.

    அவை குறித்த தங்களது பார்வைகள் என்ன?

    அறிய ஆவலாக இருக்கிறேன்.

    என்றாலும் மீண்டும் மன்னியுங்கள் ...

    திரும்பவும் இதே போன்ற நீண்ட பகிர்தலொன்றை இங்கு செய்வது தற்சமயம் எனக்கு சாத்தியமில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன்.

    தங்களுடைய செறிவான எழுத்துக்கள் வலையுலகில் தொடர வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    வளர் ...

    ReplyDelete
  8. காயத்ரி எனக்குப் பிடித்த கவிஞர்களுள் ஒருவர். அவரது மழை கவிதை பிடித்திருக்கிறது. ஆனால் அதற்கு நீங்களும் வளர்மதியும் கொடுத்திருக்கும் விளக்கங்கள்... எப்பா..:)

    அந்தக் கவிதையை நான் புரிந்து கொண்ட விதம் : இரவில் மழை பெய்து முடிந்து விட்டது, காலையில் விழும் நீர்த்துளிகள் பார்க்காமல் விட்ட (மழைத்) தருணங்களை ஞாபகப் படுத்துகிறது. மழையைத் தவற விட்டதற்காக வருத்தப் படும் ஒரு கவிதையாக இதைப் படித்தேன்.
    simple.

    இப்பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டக் கவிதை :

    இன்று வேகவேகமாய்
    வந்து போய் விட்டிருக்கிறது
    பிகர்கள்.
    வந்து போன பின்னும்
    அங்கிருந்து வரும்
    சென்ட் வாசனைகள்
    நினைவூட்டியபடி எரிச்சலூட்டுகின்றன
    நான் தவறவிட்ட பிகர்களை!

    ஆசிரியன் இறந்து விட்டானா அல்லது வாசகன் இறந்து விட்டானா :)

    ReplyDelete
  9. நணபர் வளர்மதிக்கு நீண்ட பின்னோட்டத்திற்கு நன்றி. மேலதிகமான புரிதலை கொண்டு செல்லும் உங்கள் கேள்விகள் மற்றும் கருத்தக்கள் பற்றிய விரிவான எனது பகிர்தலை நேரமின்மையால் உடனடியாக எழுத வாய்க்கவில்லை. உரையாடலை மேற்கொண்டு செல்ல முயல்கிறேன் சீக்கிரத்தில்.

    அன்புடன்
    ஜமாலன்

    ReplyDelete
  10. நண்பர் சுந்தருக்கு..

    காயத்ரி கவிதையை முன்வைத்து ஆரிய-வாசகப் பிரதிகள் பறறிய ஒரு காத்திரமான உரையாடலைச் சாத்தியப்படுத்திய வகையில் அக்கவிதை சற்று அடுத்த தளத்திலானதே. இருப்பினும் உங்கள் புரிதல் குறித்து முன்னமேயே வளர் தனது கருத்தில் எழுதியுள்ளார். கவிதை என்பது உணர்வின் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்றவகையில் வெவ்வேறான உணர்வுகளுக்கும் பொறுந்தும் தன்மை கொண்டதுதானே?

    அன்புடன்
    ஜமாலன்.

    ReplyDelete
  11. //ஆரிய-வாசகப் பிரதிகள்//

    ”ஆசிரிய-வாசகப் பிரதிகள்”
    என திருத்தி வாசிக்கவும். சுட்டிக்காட்டிய டிபிசீடி ஐயாவிற்கு நன்றி.

    ReplyDelete
  12. நண்பர் வளருக்கு..

    விரிவான பிறிதொரு வசிப்பையும் வாசிப்பின் பன்முக சாத்தியங்களையும் அலசி எடுத்துள்ளீர்கள். நன்றி.

    //இந்த வாசிப்பை முன்வைத்து, எழுப்ப முனையும் கேள்விகள்://

    எனக்கு தெரிந்தவரை பதில சொல்ல முனைகிறேன்.

    //1) கவிதைக்குள் உள்ள மொழி, அது கட்டமைக்கும் நிகழ்வுகள் சில வாசிப்புகளைக் கோருகின்றனவா இல்லையா?//

    நிச்சயமாக. கவிதை என்பது பிற பிரதிகளைவிட குறுக்கும் மறுக்குமாக நெய்யப்படுவதும், மொழியில் அரூபத்தன்மையும் கொண்டது. கவிதையின் தோற்றம்தான் இலக்கியப் பிரதிகளில் முன்னதாக இருப்பதற்கான ஊகமே இதனை மெய்ப்பிப்பது. அதனால் கவிதைமொழி என்பது மற்றப் பிரதிகளைவிட அதற்கான வாசிப்புகளை அதிகதிமாக கோரும் ஒன்று. சங்க கவிதைகள் துவங்கி நமது உரைகூறும் மரபு இதற்கான சான்றாகும்.

    //2)ஆசிரியன் இறந்து விட்டான் என்ற கருத்துகோளால், வாசகர் (ideal reader/critic) எத்தகைய வாசிப்பை வேண்டுமானால் தந்து கொண்டிருக்கலாமா?//

    இதில் எனக்கு உள்ள ஒரு சின்ன விலகல் என்னவென்றால், ஆசிரியன் இறந்து விட்டான் என்பதனால் பிரதி பல வாசிப்புகளை தருவதில்லை. பிரதி என்பதே நுழைவதற்கான பல வாசல்களைக் கொண்டதுதான். ஆசிரியன் என்கிற கருத்து இல்லாமல்தான் நமது உரைகூறும் மரபு காலங்காலமாக பல வாசிப்புகளை நிகழ்த்தி வந்துள்ளது. சான்றாக, வாசகன் பிரதியை மீறி அல்லது பிரதியிலிருந்து விலகி ஒரு வாசிப்பு நிகழ்த்துவதாகக் கொள்வோம் அதுவும் வாசிப்பு என்கிற வகையில் அதற்கான அடிப்படைகளைக் கொண்டதே. ஒன்றை முன்வைத்து பேசுகிறான் அவ்வளவே. அந்த ஒன்றைப் பற்றியே அவன் பேசவேண்டும் என்பதில்லை. பிரதியை தனது சாத்தியப்பாட்டுக்குள் மீள்கட்டமைப்பு செய்வதே அது. ஒற்றை அல்லது மையமான அர்த்தம் ஒன்றை கற்பிதம் செய்தால்தான் இந்த கேள்வியே வரும். அந்த அர்த்தத்தை ஏன் அவன் சொல்லவில்லை என்று? அப்படி ஒனறு புதிய விமர்சன முறையில் சாத்தியமில்லை என்பது நீங்கள் புரிந்துக் கொள்ளக் கூடியதே.
    இங்கு காயத்ரி கவிதையில் அவரது கருத்து என்பதுகூட அதை எழுதிய காயத்ரி என்கிற ஆசிரியரின் கருத்து அல்ல. காயத்ரி என்கிற வாசிப்பாளரின் கருத்துதான் அது. வியாசன் சொல்ல விரும்பிய இராமயணத்தையா நாம் சொல்லிக் கொண்டுள்ளோம். நாம் விரும்பிய ராமயணத்தைதான் இன்று சொல்லிக் கொண்டுள்ளோம். பிரதியின் கருத்து அப்பிரதிக்குள் சொல்வோனாக உள்ளவனின் கூற்று கேட்போனின் கூற்றாக மாறும்போது உருவாகும் இணைப்பில்தான் பொருள் உருவாக்கம் நிகழ்கிறது. காயத்ரி எனன சொல்ல வருகிறார்? என்கிற துப்பறியும் சாம்பு வேலை புதிய விமர்சனமாகாதுதானே? ரசனைவாத விமர்சனம்கூட கருத்தயில் சார்ந்த பிறிதொரு வாசிப்புத்தானே?

    //3) வேறு வகையில் கேட்பதென்றால் unlimited semiosis என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறோமா அல்லது அதற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை உண்டு என்பதை அங்கீகரிக்க போகிறோமா?//

    இதனை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன். ஒரு சொல் குறிகளாக உள்ளது என்பதில் குறிப்பீடு என்பது சொல்லை ஒரு சூழலில் நிறுத்துவதுதான். அதாவது ஒரு பொருளை தரும் வண்ணம் அச்சொல்லின் இயக்கத்தை தனது வாசக-பிரதிக்குள் கட்டுப்படுத்தி நிறுத்துவது. ஆனால் குறிப்பான் என்பது இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அக்குறிப்பான் பிறிதொரு சூழலால் வேற குறிப்பீட்டுக்கு ஆளாகலாம். அதனால்தான் ”பொருட்குத் பொருட் தெரியின் அது வரம்பற்றது“ என்கிறார் தொல்காப்பியர். ஒரு பொருளை குறிப்பீடு செய்வதும் பிறதொரு சொல்லால்தான். அச்சொல்லும் ஒரு குறிப்பானே. இந்த குறிப்பான் சங்கிலியை விளக்க வேண்டியதில்லை. அதனால் எல்லை என்பது நமது அங்கீகாரம் மட்டுமே தவிர, அதற்கு ஒரு எல்லை இருப்பதற்கான சாத்தியமில்லை என்பதே எனது புரிதல்.

    //4) வாசகர் தம் விருப்பத்திற்கு ஏற்றவாரு பிரதிக்கு அர்த்தம் தந்து கொண்டே போகலாமா அல்லது பிரதிக்குள் அது சாத்தியப்படுத்தும் அர்த்தங்களுக்கு, இடம் - காலம் - வாசிப்பு சூழல் சார்ந்து சில எல்லைகள் இருக்கின்றனவா?//

    பிரதி என்பது இயக்கத்தில் இருப்பது அல்லது இணைப்பின்வழி உருவாகுவது. நமது விருப்பம் என்பது நமது சூழல் சமூகம் அரசியல் புரிதல் சார்ந்தது. ஒரு பிரதிக்கு முற்று முடிவான அர்த்தம் சாத்தியமில்லை. இல்லாவிட்டால் இன்று நாம் ராமாயணத்தை வாசிக்க முடியாது. அர்த்தம் என்பது வழங்கப்படுவது அல்ல. புரியப்படுவது. அதனால் பிரதிக்கான அர்த்தம் பிரதி இணையும் பல இணைப்பு புள்ளிகளால் ஆனாது. இணைப்புகள்வழிதான் அர்ததம் உருவாகுமே தவிர ஒரு வாசிப்பின் வழியாக “தரப்படுவதால்“ அல்ல. அதனால் பிரதிக்கு எல்லை இல்லை. பிரதியை அதன் வாசிப்பின்ப அடிப்படையில் வகைப்படுத்தி அறியலாமே தவிர.. அதற்கான அர்த்தம் இதுதான் என்று எல்லைப்படுத்த முடியுமா? ஒரு பிரதியின் வாழ்வை அதன் பன்முக அர்த்த சாத்தியங்களே தீர்மானிக்கிறது.

    வேட்கைகள் குறித்த இரண்டாவது பகுதியை தனிப் பின்னொட்டமாகத் தருகிறேன்.

    நன்றி
    அன்புடன்
    ஜமாலன்.

    ReplyDelete
  13. என்னை முன்வைத்து நிகழ்த்தப்பட்டிருக்கும் இத்த்த்த்னை விவாதங்களின் முன்பாய் வெகு தாமதமாய் வந்து சேர்ந்த ஒரு பார்வையாளராய் மட்டுமே என் பங்களிப்பு இருக்கிறது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்! :)

    ReplyDelete
  14. டிபிசிடி... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஏனிந்த கொலைவெறி அண்ணா? :(

    ஜமாலன் அவர் சொல்வது உங்களுக்குப் புரிய வேண்டுமானால் இந்தச் சுட்டியிலிருக்கும் படு மொக்கைப் பதிவொன்றை நீங்கள் படிக்க வேண்டியிருக்கும்.

    http://papaasangam.blogspot.com/2007/06/5.html

    இந்த சோதனை தேவையா உங்களுக்குன்னு யோசிச்சுக்கோங்க.. அப்புறம் உங்க இஷ்டம். :)

    ReplyDelete
  15. வாங்க காயத்ரி...

    அது என்ன கோழிக்கால்னு பெரியதம்பி டிபிசிடி அண்ணாகிட்ட சாட்டிட்டேன். அப்பறம் அந்த கோழிக்கால் கதை சொன்னார். சுட்டியையும் படித்தேன். இங்க கோழி கால்களை மட்டும் பிரித்து தனியாக விற்கிறார்கள். உங்களுக்கு வசதிதான்.

    ஹாஸ்டலில் எனது நிலை எதிர்மறையானது. நான் சுத்த-வெஜ்ஜாக இருந்து எனது ஹாஸ்டல் என்னை நான்-வெஜ்ஜாக மாற்றிவிட்டது. இன்றும்கூட.. நான்-வெஜ்தான் விரும்பி சாப்பிடுவேன். என்ன செய்வது? சரியான மாமிசப் பட்சினிகளிடம் வந்து மாட்டிக் கொண்டுவிட்டேன். மகன் கோழி, மனைவி மீன், மகள் நண்டை வைத்து வெளுத்து வாங்குகிறார்கள். “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது