"ஒரு புத்தகம் எனது கனவு
ஒரு புத்தகம் எனது நிஜத்தின் நிழல்
ஒரு புத்தகம் திரியைத் தூண்டும் விரல்
ஒரு புத்தகம் ஆசிரியரின் பிரம்பு
ஒரு புத்தகம் கண்ணாடி
ஒரு புத்தகம் புன்னகை
ஒரு புத்தகம் காணாமல் போன என் தேசம்..!"
புத்தகங்களோடே வாழ்ந்து கொண்டிருக்கும் வெகு சிலரைப் பற்றிய பதிவு இது.
*********
1.
கிருஷ்ண பிரபுவின் "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்"
இப்பதிவை நான் எழுதி முடிக்க தன் முழு உழைப்பையும் பரிசளித்த புத்தகப்பிரியர், சென்னை இலக்கியவாதி
பதிவர் கிருஷ்ண பிரபுவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.கிருஷ்ண பிரபு சென்னை தனியார் நிறுவனமொன்றில் வெப் டிசைனிங் துறையில் பணிபுரிகிறார்.தேடி தேடி புத்தகங்களை வாங்கிப் படிக்கும் இவர்,தன் சக நண்பர்களுக்கும் புத்தகங்களையே பரிசளிக்கிறார்.புத்தக வெளியீட்டு விழாக்கள்,கேணி போன்ற இலக்கிய கூட்டங்கள் என எழுத்து சம்பந்தப்பட்ட எல்லா இடங்களிலும் காணக்கிடைப்பார்.
கேணி இலக்கிய சந்திப்பு குறித்த இவரது கட்டுரைகளை வாசிக்க,
"கதைகள் மற்றும் கட்டுரைகள்" வலைதளம் பாருங்கள்.
****
2.
அழியாச் சுடர்கள்
நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் அரிய படைப்பு பொக்கிஷங்கள் இத்தளம் முழுதும் காணக்கிடைக்கின்றன.புதுமைப்பித்தன்,ஜெயகாந்தன்,கி.ரா போன்ற பழைய ஜாம்பவான்களிலிருந்து தொடங்கி,கந்தர்வன்,மெளனி,சுந்தர ராமசாமி வழியே பயணித்து இன்றைய ஜெயமோகன்,மனுஷ்யபுத்திரன் வரை ஏராளமான எழுத்தாளர்களின் ஆக்கங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அழியாச்சுடரில் காணலாம்.மேலும் தமிழின் முதல் சிறுகதை என்று அரியப்படும்
'குளத்தங்கரை அரச மரம்' உள்ளிட்ட அரிய பல தொகுப்புகள் இத்தளத்தில் புதைந்திருக்கின்றன.
****
3.
வே.சபாநாயகத்தின் "நினைவுத்தடங்கள்"
"சிறுகதையின் உருவம் கொஞ்சம் விசித்திரமானது. அது முதலில் வாலைத்தான் காண்பிக்கும்; கடைசியில் தான் தெரியும் தலை!" கி.ரா.வின் எழுத்துக்கலை பற்றி குறிப்பிடும்
இந்தப் பதிவோடு கடித இலக்கியம், நினைவுத்தடங்கள்,பயணக்கட்டுரைகள் என்று இலக்கியம் குறித்த ஒரு முழுமையான தொகுப்புகளை எழுதி வரும் முதுநிலை விரிவுரையாளரான
திரு.வே.சபாநாயகம் அவர்கள் "அக்கரைப் பச்சை,அன்பின் மகத்துவம் என்று குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
****
4.
சேரலின் "புத்தகம்"
நவீன கவிஞர் என்றறியப்படும்
சேரல் என்கிற சேரலாதன் என்னும் இளைஞரால் நிர்வகித்து,எழுதப்பட்டு வரும் புத்தகங்கள் குறித்த இவ்வலைத்தளத்தில்
ஞானசேகர்,
பீ'மோர்கன் என்று பலர் தான் வாசித்த புத்தகங்கள்,சிறுகதை தொகுப்புகள்,புதினங்கள் குறித்து நேர்த்தியான நடையில் எழுதி வருகின்றனர்.எழுதப்பட்ட 51 பதிவுகள் ஒவ்வொன்றுமே முத்துக்கள் என்றாலும் நான் மிகவும் ரசித்த பதிவுகள்,
வண்ணதாசனின்
"பெய்தலும் ஓய்தலும்" பற்றிய
சேரலின் கட்டுரை
பீமோர்கனின் "மெளனியின் கதைகள்" குறித்த கட்டுரை
****
5.
ராமஸ்வாமி வைத்யநாதன் & பக்ஸின் "கூட்டாஞ்சோறு"
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்த நண்பர்களான ராமஸ்வாமி வைத்யநாதன் மற்றும் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் இருவரும் தங்களுடைய அனுபவங்களையும்,புத்தகம் மற்றும் சினிமா பற்றியும் எழுதுகிறார்கள்.இவர்கள் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் நூவார்க் நகரில் அருகருகே வசிக்கிறார்கள்.பக்ஸ் பற்றி குறிப்பிடும் போது ராமஸ்வாமி இப்படி சொல்கிறார்."இந்த ப்ளாக்குக்கு தான் ஒரு guest author என்று அவன் நினைக்கிறான், co-author என்று நான் நினைக்கிறேன்!".
****
6.
லேகாவின் "யாழிசை ஓர் இலக்கிய பயணம்"
தமிழ் இலக்கிய நாவல்கள்,சிறுகதை தொகுப்புகள் பற்றி வலையுலகில் நான் முதன் முதலாக அறிந்து கொள்ள காரணமாயிருந்தது லேகாவின் இவ்வலைப்பூ.மதுரையை தாயகமாக கொண்ட
லேகா, சென்னையில் பணிபுரிகிறார்.நான் முன்பு வேலை செய்த பழைய மென்பொருள் நிறுவனத்தில் தான் அவர் இப்போது பணிபுரிகிறார் என்ற உண்மை அந்நிறுவனத்தை விட்டு நான் வெளிவந்தவுடன் தான் தெரிய வந்தது.தன் தந்தை வாயிலாக தமிழ் இலக்கியத்தின் மீது தீராக்காதல் கொண்ட லேகா,வாசித்த புதினங்கள்,சிறுகதை தொகுப்புகள்,உலக சினிமா என்று சிலாகித்து எழுதுகிறார்.எஸ்.ரா வின் சிறந்த வலைப்பூக்கள் பட்டியலில்
லேகாவின் "யாழிசையும்" ஒன்று.
****
இன்னும் சில புத்தக வலைப்பூக்கள்
அ)
விருபாவின் வலைப்பக்கம் தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு
ஆ)
வடகரை வேலனின் "நூல்நயம்"
இ)
மா.சிவகுமாரின் புரட்டிப் போட்ட படைப்புகள்"
ஈ)
நிழலின் "தமிழ் புத்தகம்"
*****