07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அ.அப்துல் காதர். Show all posts
Showing posts with label அ.அப்துல் காதர். Show all posts

Sunday, September 16, 2012

முடிகிறது ஒரு பயணம்!


வணக்கம் தோழர்களே!

வலைச்சரத்தில் எனது இறுதி நாள். ஆனாலும் முதல் நாளில் இருந்த அதே மகிழ்ச்சியோடு உங்களைச் சந்திக்கிறேன். 

எனக்கு இடப்பட்ட பணியைச் செவ்வனே செய்ய முடியாவிட்டாலும் இந்த நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கி என்னைக் கௌரவித்த சீனி அய்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாரம் முழுவதும் எனது பதிவுகளைப் பொறுமையாகப் பார்வையிட்டும் பின்னூட்டமிட்டும் என்னை உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் திருவாளர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றிகளையும் மரியாதைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் நான் வலைச்சரத்தில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே எனது வலைப்பூவில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தி வருபவர் அவர்.

பொதுவாக நான் பின்னூட்டங்களை எதிர்பார்ப்பதில்லை. காரணம், நானும் பெரும்பாலும் மற்றவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டமிடுவதில்லை. இணையத்தில் நான் செலவிடும் நேரம் மிகக்குறைவு என்பதைத் தவிர அதற்கு வேறு உள்நோக்கங்கள் எதுவுமில்லை. அந்தக் குறைந்த நேரத்தையும் பொதுத் தளமாகிய முத்தமிழ் மன்றத்தில் செலவிடுவதால் சில குறிப்பிட்ட வலைப்பூக்களைத் தவிர்த்து பிறவற்றைப் பார்வையிட என்னால் நேரம் ஒதுக்க முடிவதில்லை.

இனிமேல் மற்ற வலைப்பதிவர்களின் தளங்களையும் பார்வையிட முயற்சி செய்கிறேன். அதுபோல நானும் எனது வலைப்பூக்களில் தொடர்ச்சியாகப் பதிவுகளை இட முயற்சி செய்கிறேன்.

"துரத்துகிறேன்
தொலைவில் ஓடிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை"

"ஓய்வைத் தேடும் கால்கள்
சோராதிருக்கிறது மனம்
இன்னும் முடியாத பயணம்"

என்ற எனது குறுங்கவிதைகளோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். அனைவருக்கும் எனது நன்றிகளும் வணக்கங்களும்!



அன்புடன், 
அப்துல் காதர்.


மேலும் வாசிக்க...

சிந்தனைக்குச் சில வரிகளும் சில தளங்களும்..

வணக்கம் தோழர்களே!

வலைச்சரப் பொறுப்பின் இறுதிக்கட்டத்திற்கு வந்திருக்கிறேன். இன்று கொஞ்சம் சிந்தனைகளையும் சில தளங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.

சிந்தனைகள் குறித்து ஒரு சிந்தனை
பெரும்பாலும் அறிதல் மற்றும் சிந்தனை ஆகியன ஏதாவதொன்றின் தொடக்கமாக இருப்பதில்லை. மாறாக, அவை முன்பிருந்த ஒன்றின்  தொடர்ச்சியாகவே இருக்கின்றன. இதனால், வேறு வேறு மனிதர்களின் அறிதல் மற்றும் சிந்தனை முறைகள் வேறுவேறாக இருந்தாலும், அவை தங்களுக்கே உரித்தானவை என அவர்களால் உரிமை கோர இயலாது. அதாவது முன்பிருந்த அறிதல் மற்றும் சிந்தனை முறைகளின் தொகுப்பு மற்றும் தொடர்ச்சிகளையே  நாம் நமது அறிதல் மற்றும் சிந்தனை  முறையாகக் கைகொள்கிறோம். எவ்வாறு தனித்த அல்லது முழுமுற்றான உண்மை என்பது சாத்தியமில்லையோ அவ்வாறே தனித்த சிந்தனையும் சாத்தியமற்றது. ஏனெனில்,உண்மை என்பது எப்போதும் ஒரு தனிநபரையோ, ஒரு சமூகத்தையோ, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளையோ பொருத்து சார்புத் தன்மை கொண்டதாகவே அமைகிறது. அவ்வாறே சிந்தனையும். நீங்கள் முன்புள்ள சிந்தனை முறைகளுக்கு மாறான, முற்றிலும் எதிரான ஒரு சிந்தனை முறையைத் தோற்றுவிக்க முடியும் என்றாலும், அது முன்பிருந்த சிந்தனை முறைகளின் தாக்கத்தினால் மட்டுமே நிகழ முடியும். அதாவது, அதன் தொடர்ச்சியாக மட்டுமே இருக்க முடியும்.


ஒரு தனிமனிதன், வாழ்தல் குறித்த தனது அல்லது தனது சமூகத்தின் சிந்தனைகளை, கோட்பாட்டை எல்லா சமயங்களிலும் நடைமுறைப்படுத்த முடிவதில்லை. ஆனாலும், சிந்தனை என்பது எல்லா நேரங்களிலும் செயல்படுத்தப்பட  வேண்டுமென்பதில்லை. காரணம் சிந்தனை என்பது தேடலுக்கானது; செயல் என்பது வாழ்தலுக்கானது. சிந்திக்காமல் உங்களால் உயிர் வாழ முடியும். ஆனால், செயல்படாமல் அவ்வாறு முடியாது. மேலும், உயிர்வாழ்தல் என்பது ஒரு நோக்கமல்ல. மனிதன் உட்பட எல்லா உயிர்களுக்கும் உயிர்வாழ்தல் என்பது அவற்றின் இயல்பு. நோக்கம், கோட்பாடு என்பதெல்லாம் சிந்தனையின் விளைவு; சிந்தனை மொழியின் உற்பத்தி; மொழியோ மனிதப் பரிணாமத்தில் ஒரு விபத்து.

மேற்கண்ட கருத்துகளின் மீதான உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தலாம்.

இன்றைய தளங்கள்
திருவாளர் சி.ஜெயபாரதன் நெஞ்சின் அலைகள்  என்ற தனது தளத்தில் தொடர்ந்து அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். குறிப்பாக விண்வெளி ஆய்வுகளில் அவ்வப்போது ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமாக எழுதி வருகிறார். கவிதை நடையில் தொடங்கும் இவரது கட்டுரைகள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

திருவாளர் நாகார்ஜூனன் உலக இலக்கியங்கள், மொழி, கலாச்சாரம் மற்றும் இன்னபிற துறைகள் குறித்து மிகவும் ஆழமாக எழுதி வருகிறார். திணை இசை சமிக்ஞை என்ற இவரது தளம் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு களஞ்சியம். கொஞ்ச காலமாக இவரது தளத்தில் புதிய பதிவுகள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. அனைவரும் காண வேண்டிய அருமையானதொரு தளம்.

திருவாளர் ஜமாலன் ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர். பல்வேறு பொருள் தொடர்பான இவரது கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றன. மொழியும் நிலமும் என்ற இவரது தளம் நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்று.

திருவாளர் ருத்ரன் அவர்கள் அனைவரும் அறிந்த ஒரு பிரபலம். இவரது ருத்ரனின் பார்வை என்ற தளத்தில் தத்துவம் முதலான பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். இதுவும் நீங்கள் பார்வையிடத் தகுந்த தளம்.

திருவாளர் அண்ணா.நாகரத்தினம் மார்க்சியம் உள்ளிட்ட தத்துவங்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். இவரது தளமான தத்துவப் போராட்டம்  பொதுவுடைமைச் சிந்தனையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு ஒரு அமுதசுரபி.

திருவாளர் இராம.கி என்பவர் தனது தளத்தில் தமிழ்மொழி குறித்தும் அது சார்ந்த விஷயங்கள் குறித்தும் சுவாரஸ்யமான பதிவுகள் பலவற்றை இட்டுள்ளார். இவரது வளவு என்ற தளத்தையும் உங்கள் பார்வைக்குப் பரிந்துரைக்கிறேன்.

சரி தோழர்களே! இறுதிப் பதிவோடு மீண்டும் மாலையில் உங்களைச் சந்திக்கிறேன்.

அன்புடன்,
அப்துல் காதர்.


மேலும் வாசிக்க...

Saturday, September 15, 2012

உங்கள் பார்வைக்கு சில வலைப்பூக்கள்

வணக்கம் தோழர்களே!

இது ஆறாவது நாள்.  மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி!

முதன்முதலில் சீனா அய்யா அவர்களிடமிருந்து வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கக் கேட்டு மின்னஞ்சல் வந்தபோது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த இன்ப அதிர்ச்சியோடே நானும் எனது இசைவைத் தெரிவித்தேன். நிறைய அவகாசம் இருந்ததால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தொடக்கத்தில் இருந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்த நிகழ்வுகள் எனது எண்ணம் நிறைவேறாமல் போவதற்குக் காரணமாகிவிட்டன. ஆம் நண்பர்களே! எதிர்பாராத வகையில் எனக்குக் கிடைத்த பதவி உயர்வும் பணியிட மாற்றமும் வலைச்சரத்தில் எனது பங்களிப்பை எதிர்பார்ப்புகளுக்கேற்றவாறு செய்ய இயலாமல் போனதற்குக் காரணமாகிவிட்டன. 

மிகக் குறுகிய காலத்தில் எதிர்பாராத இரு மகிழ்ச்சியான நிகழ்வுகள்!  ஆச்சர்யங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை இல்லையா? அதுவும் எதிர்பாராமல் நடக்கும் நல்ல விஷயங்கள் மகிழ்ச்சியைப் பன்மடங்காக்க வல்லவை. இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே மனநிலையில் இருப்பது குறித்து நிறைய கருத்துகள் இருந்தாலும் நாமும் அதனைப் பின்பற்றவே முயற்சிகள் செய்தாலும், உணர்வுகளால் கட்டுண்ட எளிய மனித மனம் அதன் விருப்பு வெறுப்புகளைக் காட்டவே செய்கிறது. நானும் அதற்கு விதிவிலக்கானவன் அல்லன். ஆர்ப்பாட்டமாக இல்லாவிட்டாலும் அடக்கமாகவேனும் மனம் கொண்டாட்டத்தில் துள்ளவே செய்கிறது.

இரண்டு வாய்ப்புகள் ஒரே நேரத்தில் கிட்டியபோது ஒரு வாய்ப்பை இறுகப் பற்றிக் கொண்ட நான் மற்றொரு வாய்ப்பை முற்றிலுமாகத் தவறவிடவில்லை என்றாலும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாததில் சிறுவருத்தம் உண்டு. ஆனாலும் பெரிய மகிழ்ச்சி சிறிய வருத்தத்தை நேர் செய்துவிட்டது.

சரி தோழர்களே! எனது எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொண்ட நான் இப்போது சில தளங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.








தளங்களைப் பார்வையிட்டு அவர்களையும் உற்சாகப்படுத்துங்கள்! மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அன்புடன்,
அப்துல் காதர்.


மேலும் வாசிக்க...

Friday, September 14, 2012

தொடர்கிறேன்..

வணக்கம் தோழர்களே!

இந்த இனிய ஐந்தாம்  நாளில் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! முன்பே குறிப்பிட்டது போல பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் நேற்று என்னால் பதிவிட முடியவில்லை. அதற்காக எனது வருத்தங்களைப் பதிவு செய்கிறேன். சீனா அய்யா அவர்களும் பொறுத்தருள வேண்டுகிறேன்.

இனி..

இன்று கவிதை தவிர்த்த வேறு களங்களைக் கொஞ்சம் அலசுவோம்.

வன்முறையும் போரும் நிறைந்துவிட்ட இன்றைய உலகில் அவை எந்த நேரத்திலும் எங்கும் வெடித்துவிடக் கூடிய ஒரு அச்சமூட்டும் சூழலில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். கற்களை ஆயுதமாகக் கொண்டு தன் வன்முறை வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் இன்று அணு ஆயுதம் வரை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். இன்றைய ஆயுதங்களின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு நாம் பதற்றப்படாமல் இருக்க முடியாது. இத்தகையதொரு சூழலில், நாளைய ஆயுதங்கள் குறித்து டிஸ்கவரி சேனல் நடத்தி வரும்  நிகழ்ச்சியின் மீதான அதிர்ச்சி தரும் இந்த மாற்றுப்பார்வையை உங்கள் முன் வைக்கிறேன்.

அணு உலைகள் தேவையா இல்லையா என்ற விவாதங்களுக்கு நடுவே இந்திய அணு உலைகள் தொடர்பாக ஒரு விரிவான பார்வையை முன்வைக்கிறார் அ.முத்துக்கிருஷ்ணன்.

பேரரசர் அசோகர் பற்றிப் பாடப்புத்தகங்களில் படித்திருப்போம். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, நீர்நிலைகளைப் பேணல், காட்டுயிர்ப் பாதுகாப்பு மற்றும் பல விஷயங்களில் அப்பேரரசர் குறித்து  நாம் அறியாத பல சுவையான தகவல்களைத் தருகிறது இக்கட்டுரை.

தொல்காப்பியத்தையும் அதன் ஆசிரியர் தொல்காப்பியரையும் நாம் அறிந்திருப்போம்.  அவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்பது குறித்து ஒருமித்த கருத்து இல்லை. ஆனால், அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதை அழகாக நிறுவுகிறார் இரா.பானுகுமார்.

வாழ்க்கை மிகவும் எளியது. நாம்தான் நமது அதீத நடவடிக்கைகளால் அதை மிகவும் சிக்கலாக்கிக் கொள்கிறோம். பின் அதிலிருந்து விடுபட எதை எதையோ தேடி ஓடுகிறோம். இந்தக் கணத்தில் வாழ்வது குறித்து நாம் எந்த சிந்தனையுமில்லாமல் எதிர்காலம் என்ற இல்லாத ஒன்றைக் கட்டமைத்து அதன் மாய உலகில் நம்மைத் தொலைக்கிறோம். ஜென் எப்போதும் இந்தக் கணத்தைக் குறித்தே பேசுகிறது. அதன் அழகியலும் அறவியலும் மிக எளிமையானவை. ஜென்னைக் குறித்து ஜென் கவிதையைக் குறித்து விளக்குகிறார் நண்பர் ஆதி

ஜென் குறித்து இன்னும் சுவாரஸ்யமாய் சொல்கிறார் ருத்ரா; வாசியுங்கள்!
ஜென்

ஜென் சிந்தனைகளை அசைபோட்டுக் கொண்டிருங்கள்! வேறு பதிவுகளோடு மீண்டும் உங்களை நாளை சந்திக்கிறேன் தோழர்களே!

அன்புடன்,
அப்துல் காதர்.


மேலும் வாசிக்க...

Wednesday, September 12, 2012

மேலும் கவிதைகள்!


வணக்கம் தோழர்களே!

இன்றும் சில கவிதைகளோடு உங்களைச் சந்திக்கிறேன். மீண்டும் கவிதையா என முகம் சுளிக்க வேண்டாம். கவிதைகளோடு பழகிப் பாருங்கள்; நீங்களும் கவிதையின் காதலராகிப் போவீர்கள்!

போர்க்களமாகிப் போன மண்ணிலிருந்து எழும் கவிதைகள் எப்போதும் வலி நிறைந்தவை; குறைந்த பட்சம் உங்கள் கண்ணீரையாவது யாசித்து நிற்பவை.

இவரது கேவலமான பிரார்த்தனையும் துயரவியாபாரமும் அத்தனை கேவலமா இல்லை வியாபாரமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா கூட அத்தகைய துயரம் நிறைந்த ஒரு கவிதைதான்.

அகதியாதலின் வலியைச் சொல்லும் இந்தப் படகில் நுழையாக் கடல் நம் கண்களில் நுழைந்து பெருக்கெடுக்கிறது

மன்னிப்பு எப்போதும் மகத்தானது; முடிந்தால் நீங்களும் மன்னியுங்கள்!

இளையராஜா என்னும் இசைப் பேரரசனின் ஒற்றை வயலின் உங்கள் நாடி நரம்புகளில் எல்லாம் சுரம் மீட்டுவதைக் கேளுங்கள்!

நூலகத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்? உங்கள் வாசிப்பு எத்தகையது? இந்த அனுபவம் உங்களுக்குமிருக்கிறதா எனப் பாருங்கள்!

உங்களைத் தொடரும் நிழலை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? நிழல் நம்மில் உருவாக்கும் சலனங்கள் விசித்திரமானவை!

இந்த மழைப்பாடல் கேட்பதற்கினியது; கொஞ்சம் கேளுங்கள்! கொஞ்சம் நனையுங்கள்!

இறந்து போகாமல் கவிதை எழுதுவது எப்படி என்று இவர் கற்றுத் தருகிறார்; கற்றுக் கொள்ளுங்கள்!

கவிதைகள் போதும் என்று நினைக்கிறேன் தோழர்களே! நாளை வேறு களங்களோடு மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்.

அன்புடன்,
அப்துல் காதர்.


மேலும் வாசிக்க...

Tuesday, September 11, 2012

கவிதையின் காதலன்!


ஆம் தோழர்களே! நான் கவிதையின் காதலன் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். 

கவிதை, மொழியின் உச்சபட்சம்; அது ஒரு பேரனுபவம்!

நம் தமிழே நெடிய காலத்திற்குக் கவிதையின் மொழியாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழில் உரைநடை வடிவம் என்பது மிகவும் பிற்காலத்தில்தான் புழக்கத்திற்கு வந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கவிதையில் புரிந்த கவிதை, புரியாத கவிதை என்றெல்லாம் இல்லை. அது வாசிப்பாளரின் அனுபவத்தைப் பொருத்தது. 

இன்று என்னை மிகவும் பாதித்த சில கவிதைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

1.ஆதி
அற்புதமான கவிஞரான இவர் அன்பென்னும் ஜீவநீருக்கு சொந்தக்காரர். இருண்மை மிக்க நவீனக் கவிதைகளைப் புனைவதில் வல்லவரான இவர் மரபுக் கவிதைகளிலும் பாண்டித்தியம் மிக்கவர். ஒரு பெருங்குறை என்னவெனில் பொதுத்தளங்களில் நிறையப் பங்களிப்புகளைச் செய்திருக்கும் இவர் இவரது வலைப்பூவில் அவற்றை இற்றைப்படுத்துவதில்லை. அது இவரது வலைப்பூவைத் தேடி வரும் வண்டுகளுக்குப் பேரிழப்பு. இனி இவரது கவிதைகள் சிலவற்றைக் காண்போம்.

பேனாவையும் பெண்விழியையும் பற்றி, அடர்குழலையும் ஆற்றையும் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாருங்கள் இவர் எப்படிச் சிலேடையில் புகுந்து விளையாடுகிறார் என்று.

புற இன்பம் விடுத்துப் பேரின்பம் தேடும் சித்தர் பாடலையொத்த இக்கவிதையின் சந்தத்தில் சற்றே மனதைப் பறிகொடுங்கள்!

நதியைக் குறியீடாக்கி எல்லோரையும் அந்நதியில் மூழ்கித் திளைக்கச் செய்கிறார் திடீரென முளைத்து விடும் நதியில்

நெஞ்சைப் பிசையும் இவ்வண்ணத்துப் பூச்சியின் தேடலில் நீங்கள் தொலைந்து போவீர்கள்!

சொல்லப்படாத ஒரு காதலைச் சொல்கிறார் இக்கவிதையில்; கேளுங்கள்!

நெகிழியை அறிந்திருப்பீர்கள்; காணுங்கள் இந்தக் காதல் நெகிழியை

இறந்தவர்களின் அபயக்குரல் உங்களுக்காவது கேட்கிறதா பாருங்கள்!

சிறுவயதில் சில்லு விளையாடியிருப்பீர்கள்; இந்தச் சில்லுகள் உங்களோடு விளையாடும்!

தனிமைக்கும் சுவை உண்டென்கிறார்; சுவைத்துப் பாருங்கள்!

புரியாத கவிதையைப் போல நீயும் இருக்கிறாய் என்கிறார்; உங்களுக்குப் புரிகிறதா பாருங்கள்!

2.கமலேஷ்
சுயம் தேடும் பறவையான இவரின் கவிதைகள் வாசிப்பதற்கு அலாதியானவை. இவரின் கவிதைகளில் பறவைகள் ஒரு படிமமாய்ப் பறந்து கொண்டேயிருக்கும். ஒரு வருத்தம் என்னவென்றால் நீண்ட காலமாய் இவரது வலைப்பூவில் பதிவுகள் எதுவுமில்லை. இனி கவிதைகளுக்கு வருவோம்.

இந்த மஞ்சள் தடவிய மரணப் பத்திரிகையை வாசித்தபின் உங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்!

உங்கள் வேட்டைக்கேற்ற பறவை இதுவென நீங்கள் முடிவு செய்தால் அது தோற்றப்பிழை

இவரின் வலியோடு கலையும் கனவு உங்களுக்கும் வலியேற்படுத்தும்

ஒருபோதும் பிறருக்கான உங்கள் கதவுகளை அடைத்து விடாதீர்கள். கதவாயுதம் கர்த்தரின் நடுநெஞ்சில் இறங்கும் கடைசி ஆணி என்கிறார் இவர்.

இக்கவிதையை உறங்கும் குழந்தையின் சிரிக்கும் உதடுகள் என்கிறார் சித்தார்த்தன் கனவில்

3.ராஜா சந்திரசேகர்
ராஜா சந்திரசேகரின் கவிதைகள் அறியாதவர் யாரும் வலையுலகில் இருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். எளிய சொற்களில் குறைந்த வரிகளில் மொழியின் சகல பரிமாணங்களையும் காட்டும் இவரது கவிதைகள் ஆச்சர்யத்துக்குரியவை. இதோ இவரது கவிதைகள் சில.

மழையை வரைதல் யார்க்கும் எளிதன்று; அதுசரி, மழையை வரைய என்ன வேண்டும்?

தொலைந்த கடவுளைக் கண்டெடுக்கிறார் இவர்

பறவையின் சிறகசைப்பில் இசையைத் தேடுகிறார்

இவரது வனம் அதற்குள் நம்மைத் தொலைந்து போகச் செய்யும்

4.சாய்ராம்
இவரது தளம் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எனப் பரந்து கிடக்கிறது. அவற்றில் சில கவிதைகளைக் காண்போம்.

இவரது கண்ணீரில் மிதந்து செல்லும் ரயிலில் நீங்களும் பயணம் செய்யலாம்.

காகிதத்தை மை தொடும் கணம் இந்தக் கவிதை உருவாகிறது

ஒரு சிலையிலிருந்து எத்தனை பிரதிகள் எடுக்க முடியும்? பாருங்கள்!

சரி தோழர்களே! மீண்டும் புதிய பதிவுகளோடு நாளை உங்களைச் சந்திக்கிறேன்.

நன்றியும் வணக்கமும்!


மேலும் வாசிக்க...

Monday, September 10, 2012

வணக்கம் தோழர்களே!


வணக்கம் தோழர்களே!

மதிப்பிற்குரிய சீனா அய்யா அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்பேற்றிருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இதோ எனது வலைப்பூக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

கீற்று முதலிய பொதுத்தளங்கள் மற்றும் சில பிரபல எழுத்தாளர்களின் வலைத்தளங்கள் ஆகியவற்றின் பார்வையாளனாகத் தொடக்கத்தில் இருந்த நான் முதன்முதலாகப் பங்கெடுத்தது முத்தமிழ் மன்றம் என்ற பொதுத் தளத்தில்தான். அதன் பின்னர் ஓர் ஆர்வக் கோளாறில்தான் நானும் என் சமூகமும் என்ற எனது வலைப்பூவைத் தொடங்கினேன். பணியிடையே கிடைக்கும் சொற்ப நேரத்தில் எனது கவிதைகளை அதில் பதிவிட்டும் வந்தேன். சரளமாகக் கவிதையெழுதும் திறமில்லாததால் தொடர்ச்சியாக என்னால் பதிவுகளை இடமுடியவில்லை. தொடர்ந்து கவிதைகளையே பதிவிட்டு வந்த எனக்கு எனது சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியபோது தொடங்கியதுதான் சொல்வதற்கும் கொஞ்சம் இருக்கிறது என்ற எனது மற்றொரு வலைப்பூ. இப்போது இவ்விரு வலைப்பூக்களிலும் உள்ள சில பதிவுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

சமூகக் கவிதைகள்
1.பூமியின் எல்லா வாசங்களையும் பரப்பிக் கொண்டிருந்த காற்று, இப்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கருகிக் கொண்டிருக்கும் பூமியின் கருகல் வாசத்தைப் பரப்பிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலையுறுகிறது இக்கவிதை

2.மனிதர்களின் துன்புறுத்தலுக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகும் தெருநாய்களைப் பற்றிய கவிதை

3.போபால் நச்சுவாயு விபத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போது மனம் வெம்பி எழுதிய கவிதை

4.குழந்தைத் தொழிலாளர் முறைக்கெதிரான கவிதை

5.போர்களே வரலாறான இப்புவியில் அவற்றுக்கெதிரான கவிதைகள்

அழகியல் கவிதைகள்
நான் ரசித்த இயற்கையின் அழகு உங்களுக்கும் இதோ!

தனிமை
தனிமை குறித்த எனது கவிதைகள்

பிற கவிதைகள்
நமக்குள்ளே இருக்கும் நமது இன்னொரு முகத்தோடான உரையாடல்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை. அந்த உரையாடலைச் சற்று கேளுங்கள்!
நான்களின் உரையாடல்

எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருப்பதாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஒரு பிரளயம் நிகழ்ந்து விட்டால்?
பிரளய நாளொன்றில்..

கவிதை எழுதும் மனநிலையில் இல்லாதபோது தோழன்/தோழி/காதலன்/காதலி கவிதை கேட்டால்?
இது நிலவுக் கவிதையன்று

ஞானம் போதி மரத்தடியில் மட்டுமன்று; எல்லா மரத்தடியிலும் கிட்டும்; தேடல் இருந்தால்!
எல்லா மரத்தடியிலும் புத்தன்

காதலி வந்துபோன அறைக்கென சில குறிப்புகள் இருக்கின்றன; பாருங்கள்!
நீயும் எனது அறையும்: சில காதல் குறிப்புகள்

சுடுசொற்கள் ஏற்படுத்தும் வேதனையைச் சொல்லி மாள சொற்கள் இல்லை
ஆறுவதில்லை நெஞ்சம்!

அடையாளங்களின் அரசியலால் நிரம்பி வழியும் இவ்வுலகில் அடையாளமற்று வாழ்வதன் சாத்தியம் குறித்துக் கேள்வி எழுப்புகிறது இக்கவிதை
பெயரற்றவன்

எறியப்படும் கற்களுக்குப் பதிலாகப் பூக்களைத் திருப்பியளிக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள்!
கற்களும் பூக்களும்

திசைகளைத் தொலைத்தவனின் பயணம் எப்படியிருக்கும்?
திசைகளைத் தொலைத்தவன்

சரி, கவிதைகளைப் படித்துக் களைத்தது போதும்; மாற்றுச் சிந்தனைகள் குறித்த எனது இந்தப் பதிவுகளைப் படித்துச் சற்றே இளைப்பாறுங்கள்!
கட்டுடைத்தல்
எது நல்லது? எது கெட்டது?

தோழர்களே! இதில் குறிப்பிடப்படாத மற்ற பதிவுகளையும் வாசித்தீர்களேயானால் இன்னும் மகிழ்வேன்! சரி தோழர்களே! என்னைக் கவர்ந்த மற்ற பதிவர்களின் பதிவுகளோடு மீண்டும் உங்களை நாளை சந்திக்கிறேன்.

அன்புடன்,
அப்துல் காதர்.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது