07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கோபி. Show all posts
Showing posts with label கோபி. Show all posts

Sunday, November 13, 2011

பதிவுகள் பலவிதம்

ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை. மறு வாரத்தின் ஆரம்பத்திற்கு வந்துவிட்டோம்!

இணையச் சூறாவளி என்று அறியப்படுபவர் நம் ராம்ஜி. இவரிடம் கமென்ட் வாங்காத பதிவர்களே இல்லை எனலாம். தற்சமயம் கூகிள் பஸ்ஸில் பிசியாக இருப்பதால் பதிவுகளில் அடிக்கடி இவர் கமென்ட் போடுவதில்லை (என்று நினைக்கிறேன்). ஒருசில பதிவுகள் போட்டிருக்கிறார். எழுத்தாளர்களைச் சந்திப்பதில் அளவு கடந்த ஆர்வமுண்டு. நகுலன் வீட்டிற்கு அவர் சென்றிருந்தபோது எடுத்த படங்களை இங்கே பார்க்கலாம்.

எங்க ஊருக்குப் பக்கத்து ஊரான நீடாமங்கலத்துக் காரர். பதிவர்களிடம் கருத்துக் கணிப்பு, எழுத்தாளர்களுடன் சந்திப்பு, பயணம், சட்டம், சுய முன்னேற்றம் என்று ஒன்றையும் விட்டுவைக்காமல் பதிவுகள் எழுதும் ஆல் ரவுண்ட் அய்யாசாமி இவர்.

கெக்கே பிக்கேவென்று பேசுவேன் என்று சொல்கிறாரேயொழிய இவர் சொல்லும் விஷயங்களின் கனம் அதிகம். என்னதான் சொல்றார்னு பாருங்களேன்.

பாஸ்கர் சக்தியின் சிறுகதைத் தொகுப்பிற்கான இந்தப் பதிவைப் பாருங்கள். புத்தக விமர்சனம் செய்வது எப்படி என்கிற இந்தப் பதிவும் மிக முக்கியமான ஒன்று:-)

இணையத்தில் எதையோ தேடியபோது இவருடைய வலைப்பூ கண்ணில் பட்டது. சினிமா சார்ந்த பதிவுகள் சிறப்பாக இருக்கின்றன. எங்கேயும் எப்போதும் படம் பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார். பாப்கார்ன் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகளும் சிறப்பாக இருக்கின்றன.

இந்த வலைப்பூ முழுக்க முழுக்க இலக்கியம் பற்றியது। வோட்டுப் பட்டைகள் கிடையாது. பின்னூட்டம் போடும் வசதி கிடையாது. இது ஒருவிதத்தில் நமக்கு நல்லதே!

உச்சநீதி மன்றத்தின் 141 பக்கத் தீர்ப்பை ஒரே மூச்சில் படித்து, முடிந்தவரை உள்வாங்கிக் கொண்டு நான் எழுதிய ஒரு பதிவு இதோ. மனதிற்கு நெருக்கமான பதிவுகளுள் இதுவுமொன்று. முன்பே பகிர விட்டுப்போய் விட்டது.
*
இந்த வாரம் முழுதும் நான் குறிப்பிட்டிருக்கும் பதிவுகள் என் ரசனை, வாசிப்பெல்லைக்கு உட்பட்டவை. இவற்றைத் தாண்டி இன்னும் நிறைய பதிவுகள இருக்கமுடியும். அடுத்தடுத்த வாரங்களில் வலைச்சரம் வாயிலாக அவை பற்றித் தெரிய வரும்போது அவற்றைப் படிக்கும் முதல் ஆள் நானாக இருக்கவேண்டும்! #பேராசைக்காரன்.
மேலும் வாசிக்க...

Saturday, November 12, 2011

வாங்க கதை பேசுவோம்!

பாட்டி வடை சுட்ட கதையிலிருந்து ஆரம்பித்து நம் எல்லோருக்கும் வெறும் சாதம் மட்டும் ஊட்டாமல் கதையையும் சேர்த்தே ஊட்டிப் பழக்கப்படுத்திவிட்டார்கள்! கதை கேட்காமல் இருக்கவே முடிவதில்லை நம்மால்.

சல்லடை போட்டு சலித்தால் இணையத்தில் சில நல்ல சிறுகதைகள் சிக்கும். நான் தேடியவரை நல்ல கதைகள் என்று எனக்குத் தோன்றியவற்றை இன்று பார்ப்போம்.

அடுக்கடுக்காக சம்பவங்கள், கால ஓட்டத்தில் முன்னும் பின்னும் நகரும் நினைவுகள், நிறைவேறாத காதலின் பௌதிகமான சாட்சியாக இருந்த காபி டம்ளரைத் (மட்டுமாவது) தனதாக்கிக் கொண்டுவிடவேண்டும் என்ற உந்துதல், புறவயச் சூழல் பற்றிய குறிப்புகள் என்று பல விதங்களில் இந்தச் சிறுகதை சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.

முதல் பாராவிலேயே கதை தொடங்கிவிடுகிறது. கதையின் கரு - கத்தி மேல் நடக்கும் வித்தை. சேதமில்லாமல் நடந்திருக்கிறார். இன்னமும் கொஞ்சம் நன்றாக எழுதி இருக்கப்பட வேண்டிய கதை. பத்மாவின் கவிதைகளையும் படித்துப் பாருங்கள்.

அடுத்த கதை பற்றிப் பார்க்குமுன் ரமணி சாரின் இந்தக் கவிதையைப் படித்துவிடுங்கள். படித்துவிட்டீர்களா? நன்று. கடைசிப் பாடலை மட்டும் இன்னொருமுறை படித்துவிடுங்கள். ஆயிற்றா? இப்போது இந்தக் கதையைப் படியுங்கள்.

வித்யா சுப்ரமணியம் மேடத்திற்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் பிடித்த கதைகள் என்று வரும்போது இந்தக் கதையைப் பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும் என்ற உந்துதல் காரணமாக இதைப் பகிர்கிறேன். இந்தக் கதை ஒரு வகையில் என்னை உலுக்கிவிட்டது என்றே சொல்வேன்.

எது சரி எது தவறு என்று யாருமே அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இதை மீண்டும் கதைவடிவில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதோ உங்களுக்கும்.

நகைச்சுவையையும் காதலையும் கலந்து கதம்பமாகக் கொடுத்திருகிறார் எழுத்தாளர். அச்சில் ஏறிய முதல் கதை என்பது கூடுதல் மகிழ்ச்சி.
மேலும் வாசிக்க...

Thursday, November 10, 2011

சூப்பர் ஹிட் வெள்ளி!

இப்போதும் நினைவிருக்கிறது. கருப்பு வெள்ளை, தமிழின் ஆரம்ப காலக் கலர்ப் படங்களை நான் அண்ணலக்ரஹாரம் பேலஸ் தியேட்டரில் உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். ஐம்பது பைசா டிக்கெட். தரையில் ஆற்றுமணலைக் கொட்டி வைத்திருப்பார்கள். அதில்தான் உட்கார்ந்து பார்க்கவேண்டும். பெஞ்சு நாற்காலிகளும் உண்டு. மூட்டைப் பூச்சிகள் பதம் பார்த்துவிடும்!அரசலாற்றில் தண்ணீர் இல்லாதபோது ஆற்றில் நடந்தே சென்று தியேட்டரை அடைந்துவிடுவோம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவே குறுக்கே ஒரு மூங்கில் தட்டி.

டவுன் (down என்று படிக்கவும்!) தியேட்டர்களிலும் படம் பார்த்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் காலையிலேயே அம்மா சமைத்துவிடுவார். அவசர அவசரமாக இட்லி சாப்பிட்டுவிட்டு ஒரு தூக்குவாளியில் ரசஞ்சாதம் எடுத்துக்கொண்டு காலைக் காட்சி சினிமா பார்க்கச் சென்றுவிடுவோம். படம் விட்டதும் உடனே அடுத்த தியேட்டர். டிக்கெட் கொடுக்கும் கவுண்டரில் உட்கார்ந்து சாப்பாட்டை முடித்துவிடுவோம்! We don't believe in wasting time! ஆச்சரியம்,ஊரில் மற்ற அம்மாக்கள் படம் பார்ப்பது தவறு என்று வளர்தபோது நான் மட்டும் ஏகப்பட்ட படங்கள் பார்த்து வளர்ந்தேன்.

வளர்ந்து பெரியவனானதும் வாரத்திற்கு நான்கு படங்கள் வரை பார்த்த நினைவு இருக்கிறது. எந்த ஊருக்குப் போனாலும் அங்கே ஒரு படமாவது பார்க்காமல் திரும்ப வந்ததில்லை. படம் பார்க்கவென்றே ஊர் ஒராகச் சுற்றிய அனுபவமும் உண்டு (Combined study பண்ணப் போறோம்மா). இந்த சினிமா பார்க்கும் ஆர்வம் அம்மாவிடமிருந்து நான் பெற்றுக்கொண்டது.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் பிரசன்னாவும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் (கும்பகோணம்). பதினொன்றாம் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை ஒன்றாகப் படித்தோம். அந்தக் காலக்கட்டத்தில் (கிட்டத்தட்ட பத்து வருடங்கள்) வெளியான எல்லாப் படங்களையும் சேர்ந்தே பார்த்தோம். இதற்காகப் பெற்றோர்களிடம் நாங்கள் வாங்கிய புகழுரைகள் (?!) அநேகம். தீபாவளியன்று யார் எப்படிப் போனாலும் வெளியான அனைத்துப் படங்களையும் பார்த்துவிட்டுத்தான் மற்ற விஷயங்களைப் பற்றியே யோசிப்போம்.
*
ஒரு விஷயத்தைக் காட்சியாகப் பார்க்கும்போது மனதில் நன்றாகப் பதிந்துவிடுகிறது. விமன் ஹார்லிக்ஸ் விளம்பரப் படத்தில் வரும் பெண் அந்த வங்கி அதிகாரியிடம் பேசுவதைக் கவனித்துப் பாருங்கள். அவர் பேசப் பேச, கணவர், வங்கி அதிகாரிகளின் முகங்கள் எப்படி மாறுகின்றன என்று பாருங்கள். எவ்வளவு பக்கங்கள் எழுதினாலும் அந்தக் காட்சிகளை எழுத்தில் கொண்டுவந்து விடமுடியாது.



நந்தனார் படத்தின் ஹைலைட் இந்தக் கட்டம்தான். நெல்லின் கனத்தால் தலைசாய்ந்து நிற்கும் கதிர்கள் நாற்பது வேலி நிலத்தையும் நிறைத்திருக்கும். வேதியருக்குத் தான் செய்தது தவறு என்ற உண்மை உரைக்கும். நந்தனாரைத் தேடி ஓடும் வேகத்தில் அவருடைய துண்டு கீழே வயலில் விழுந்துவிடும். நந்தனாரைப் பார்த்ததும் வேதியர் அவருடைய காலில் விழுவார் (தண்ட சேவை). நந்தனார் பதைபதைத்துப் போய் வேதியரின் காலில் விழுவார். பின்னணியில் (இறைவனின் அருளால் விளைந்த) தலைசாய்ந்து நிற்கும் கதிர்கள். ஓரிரு நிமிடங்கள் நீடிக்கும் இந்தக் காட்சிகள் ஏகப்பட்ட விஷயங்களைச் சொல்லிவிடுகின்றன.



(வேதியரும் நந்தனும் காலில் விழும் காட்சி இந்தக் காணொளியில் இல்லை. பாடல் முடிந்தபிறகு அது வரும்)
*
திரைப்படங்கள் குறித்துப் பதிவர்கள் சுடச் சுட விமர்சனம் எழுதிவிடுகிறார்கள். நல்ல விஷயம். ஆனால் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படங்கள் குறித்த விமர்சனம் எழுதுபவர்கள் மிகக் குறைவே. அதற்காக அப்படியே விட்டுட முடியுமா? எப்படியும் தேடிக் கண்டுபிடித்து அவை பற்றிப் பகிர்ந்துகொண்டு விடமாட்டோமா என்ன!

தோபி காட் என்ற இந்திப் படத்தை அண்மையில் விமானத்தில் லண்டனில் இருந்து பெங்களூர் திரும்பும்போது பார்த்தேன். நல்ல அசதி. இருந்தாலும் இருமுறை பார்த்தேன். மேலும் ஓரிரு முறை பார்த்த நினைவு. பெங்களூர் வந்ததும் அதுகுறித்துப் பதிவுகள் இருக்கின்றனவா என்று தேடினேன். வெகு சில பதிவுகளே கிடைத்தன. அதில் மெத்தச் சிறந்தது விதூஷின் இந்தப் பதிவு. கவிதை, கதை, ஆன்மிகம் சம்பந்தமாக மட்டுமே எழுதுவார் என்றுதான் நான் இவரைப் பற்றி எண்ணியிருந்தேன். சமீபத்தில் நான் படித்ததில் மிகச் சிறந்த சினிமா பற்றிய பதிவு இது. இந்தப் படம் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். விதூஷின் சமீபத்திய பயணம் பற்றிய பதிவுகளையும் பார்த்துவிடுங்கள்.

செ. சரவணக்குமார் நிறைய வாசிப்பவர், தரமான படங்கள் நிறைய பார்ப்பவர். மேலே ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். அங்காடித் தெரு படத்தைப் பற்றி எழுதியுள்ளதைப் பாருங்கள்।

நிலாமுகிலன் உலக சினிமா என்ற லேபலில் மட்டும் இதுவரை 25 பதிவுகள் எழுதியுள்ளார். சமீபத்தில் எழுதிய King’s Speech படம் பற்றிய பதிவு இங்கே. அதிகம் கேள்விப்பட்டிருக்காத படங்கள் பலவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

பிரபு தமிழ்ப் படங்கள் குறித்து நிறைய எழுதினாலும் சில ஆங்கிலப் படங்கள் குறித்தும் எழுதியுள்ளார். Shawshank Redemption படம் பற்றிய கட்டுரை சிறப்பு.

சென்ற வருடம் நீல. பத்மநாபனின் தலைமுறைகள் நாவலைத் தழுவி மகிழ்ச்சி என்று ஒரு படம் வந்தது। என்ன காரணமோ தெரியவில்லை, பதிவர்கள் மத்தியில் அது பலத்த வரவேற்பைப் பெறவில்லை। அந்தப் படம் குறித்த இந்த விரிவான பதிவைப் பார்த்துவிடுங்கள்.

சமீபத்தில் வெளியான ஆதமிண்டே மகன் அபு என்ற மலையாளப் படம் பல பேராலும் சிலாகித்துச் சொல்லப்படுகிறது. இந்தப் படம் பற்றிய பதிவொன்று.
*
உண்மைத்தமிழன், சுரேஷ் கண்ணன் முதலிய பதிவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அவர்கள் எழுதிய சில பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

உண்மைத்தமிழனின் அம்பேத்கர் படம் பற்றிய பதிவு

சுரேஷ் கண்ணின் நாயி நெரலு (நாயின் நிழல்) படம் பற்றிய பதிவு.
*
திரைப்படம் பற்றிய புத்தகங்களுக்கான தேசிய விருது ஓவியர் திரு. ஜீவா அவர்களின் திரைச்சீலை புத்தகத்திற்காகக் கிடைத்தது பற்றி நீங்கள் படித்திருக்கலாம். அந்தப் புத்தகம் பற்றிய பதிவொன்று. இந்தப் பதிவை எழுதிய செல்வாவிற்கு அறிமுகம் தேவையில்லை. வாசிப்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அதைப் பற்றி எழுதுவது லட்டு சாப்பிடுவது மாதிரி!

திரைச்சீலை பற்றிய இன்னொரு பதிவு

ஓவியர் ஜீவா அவர்களின் கட்டுரை ஒன்று.
*
எங்கே கிளம்பிட்டீங்க? தியேட்டருக்கா? வெரி குட். படம் பாத்துட்டு வந்து ஒரு பதிவு போடுங்க !
மேலும் வாசிக்க...

Wednesday, November 9, 2011

வாங்க ஊர் சுத்துவோம்

பயணம் வாழ்வின் மிக முக்கியமான அம்சம். அரசாங்க வேலைகளில் இருப்பவர்கள் மூன்று வருடங்களுக்கொரு முறை இடம் மாறியாக வேண்டும் என்பது எவ்வளவு நல்ல விஷயம். யோசித்துப் பாருங்கள் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன பணிமாற்றத்தில்.

புது இடம்,புது வேலை, புது மனிதர்கள், நாம் நினைத்தாலும் போக முடியாத சில இடங்களுக்குக் கூடப் பணியின் காரணமாகச் செல்ல வேண்டி வரும். இந்த அனுபவங்கள் நமக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தரும்.

I need a break, எனக்கு ஒரு change வேணும் என்று சொல்லாதவர்கள் யார்?

நினைவு தெரிந்த நாளில் இருந்தே எனக்குப் பயணத்தின் மீது அதீத ஆவல் இருந்திருக்கிறது. நடந்தும் ஓடியும் சுவாமிமலை, பட்டீஸ்வரம் கோவில்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டே விளையாட்டாகத் திருவலஞ்சுழி கோவிலுக்குப் போனது நினைவிலுள்ளது. சைக்கிள் நன்றாக ஓட்ட ஆரம்பித்ததும் சொல்லவே வேண்டாம், அருகிலிருக்கும் எல்லா இடங்களுக்கும் சைக்கிளிலேயே போய்வந்துவிட்டேன்.

நிற்க, இனி மனங்கவர் பயணம் பற்றிய பதிவுகள் பற்றி.

பயணக் கட்டுரை என்றால் உடன் நினைவுக்கு வருவது துளசிதளம்தான். ஒரு விவரமும் விட்டுப் போகாமல் பதிவு செய்துவிடுவார் துளசி மேடம்(துளசியின் கண்களிலிருந்து எதுவுமே தப்புவதில்லை - எழுத்தாளர் இரா. முருகன்). வெறும் விவரங்கள் மட்டுமல்லாமல் புகைப்படங்களை எடுத்து எல்லாவற்றையும் பதிவில் ஏற்றிவிடும் அசாத்தியப் பொறுமை உண்டு. பயணக் கட்டுரைகள் எழுத நினைக்கும் அனைவரும் இவருடைய பதிவுகளை ஒன்றுக்கு இருமுறை படிக்கப் பரிந்துரை செய்கிறேன். ஒரு சாம்பிளுக்கு இந்தப் பதிவைப் பாருங்கள்! எழுத்தாளர் சுஜாதாவால் சிலாகிக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய இவருடைய நியூசிலாந்து புத்தகத்தையும் பரிந்துரை செய்கிறேன்। Henry Blofeld என்று ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர் இருக்கிறார் (இப்போது வர்ணனை செய்வதில்லை). தான் பார்ப்பதை அப்படியே நேயர்களுக்கு வழங்கும் கலை கைவரப் பெற்றவர் அவர். எனக்குத் துளசி மேடத்தின் பயணக் கட்டுரைகள் படிக்கும்போது அந்த வர்ணனையாளர்தான் நினைவுக்கு வருவார்.

ராஜராஜேஸ்வரி மேடத்தின் பயணம் பற்றிய பதிவுகள், அவற்றில் வெளியாகும் படங்கள் சுவாரஸ்யம். சக்குளத்தம்மன் கோவில் பற்றிய இந்தப் பதிவு ஒரு பானைக்கு ஒரு சோறு.

கோவைக்கு அருகிலுள்ள பரளிக்காடு என்ற மலைக்கிராமம் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அது குறித்த பதிவு இதோ. வெறும் அனுபவக் குறிப்புகளாக மட்டுமல்லாமல் சுற்றுலா செல்ல இருப்பவர்களுக்கும் வழிகாட்டியாக அமையும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

புதிதாக எழுத ஆரம்பித்தவர் என்பதே தோன்றாத வகையில் தங்குதடையில்லாமல் ராம்வி எழுதுகிறார். மைசூர் சுற்றுலா குறித்த இவருடைய பதிவுகளைப் படித்ததும் எனக்கு மீண்டும் அவ்விடங்களுக்குச் சென்றுவர வேண்டுமென்று தோன்றியது.

ஷங்கரின் இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் பயந்துவிடாதீர்கள். பகீரென்று இருப்பதோடல்லாமல் சுவாரஸ்யமாகவும் உள்ளது.

புவனேஸ்வரி ராமநாதன் மேடம் இப்போதெல்லாம் எழுதுவதே இல்லை. இவருடைய கோவில், சுற்றுலா பற்றிய பதிவுகளை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன். குடுமியான் மலை பற்றிய இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதில் படங்களாக உள்ள சிற்பங்களை நேரில் பார்ப்பதற்காகவே ஒருமுறை குடுமியான்மலை போகவேண்டும்.
*
எங்கே பையும் கையுமாகப் புறப்பட்டுவிட்டீர்கள்? ஓ பயணமா, வாழ்த்துகள்!
*
இதுவரை படித்திராவிடில் சிட்டி-ஜானகிராமனின் நடந்தாய் வாழி காவேரி, தேவனின் ஐந்து நாடுகளில் அறுபது நாள்கள், பரணீதரனின் பயணக் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்கள் படித்துப் பாருங்கள். நன்றி. எனக்குப் பிடித்திருந்தன.

நான் இன்னமும் படித்து முடிக்காத ஆனால் நல்ல புத்தகங்கள் என்று பரிந்துரைக்கப்ப்ட்டதால் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்கள்: வீரேந்திர குமாரின் வெள்ளிப்பனி மலையின் மீது, ஏ கே செட்டியாரின் பயணக் கட்டுரைகள், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் வேங்கடம் முதல் குமரி வரை, வேங்கடத்திற்கு அப்பால்.

நாளை மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Tuesday, November 8, 2011

வாசித்ததைப் பகிர்ந்து கொள்வது ஒரு சுகானுபவம்

அனைவருக்கும் வணக்கம்.

எழுதுவது ஒரு சுகானுபவம். வாசிப்பது அதை விட அதிகம் சுகம் தருகிறது. வாசித்ததைப் பகிர்ந்து கொள்வது அதை விடவும் சுகம்.
*
உங்கள் எழுத்தின் தரம் மேலும் கூடவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

‘நன்றாக எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்’, ‘எழுத்தில் மெருகேறி இருக்கிறது’ என்றெல்லாம் மற்றவர்கள் உங்கள் எழுத்துகள் பற்றிப் பாராட்ட வேண்டும் என்று விருப்பமா?

உங்கள் கட்டுரைகளில் அதிகாரபூர்வமான தகவல்களை எடுத்தாள எண்ணமா?

கதை சொல்லும் பாணியில் புதுமை அல்லது முன்னேற்றம் வேண்டுமென்று எண்ணுகிறீர்களா?

ஒன்றும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை. நல்ல எழுத்துகளைத் தேடிப்படிக்க வேண்டும், அவ்வளவே.

அவ்வளவே என்று சுலபமாகச் சொல்லிவிட்டேன். நடைமுறையில் அது அவ்வளவு எளிதில்லை. எது நல்ல எழுத்து என்று தேடுவது வைக்கோல் போரில் குண்டூசி தேடிய கதைதான்!

இங்கேதான் வாசிப்பனுபவம் பற்றி இணையத்தில் எழுதப்படும் கட்டுரைகள் நமக்கு உதவுகின்றன. எவ்வாறு?

புத்தகம் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது.

அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை வாசிப்பவர் அதில் குறிப்பிடப்படும் புத்தகத்தை ஏற்கனவே வாசித்திருந்தால் அவர் வாசிப்பில் விட்டுப் போன விவரங்கள், நுணுக்கங்கள் பற்றி இப்போது அறிந்துகொண்டு மீண்டுமொருமுறை வாசிக்கலாம்.

பதிவரின் கருத்துகளோடு உடன்பட முடியாத பட்சத்தில் உரையாடல் வளர்ந்து நூலைப் பற்றிய புரிதல் மேலும் அதிகரிக்கும். சண்டை சச்சரவுகளிலும் முடியலாம் சிலவேளைகளில் (பலவேளைகளில் அப்படித்தான் என்று நீங்கள் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை!)

ஒரு புத்தகம் குறித்துப் படிப்பதா வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும்போது அந்தப் புத்தகம் பற்றி மேலும் அறிய வரும்போது ஒரு முடிவெடுக்க உதவுகிறது.

ஆக மொத்தம், புத்தகம் நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்க இந்தக் கட்டுரைகள் உதவுகின்றன.

சரி, புத்தகம் படித்தாகிவிட்டது அல்லது புத்தகம் பற்றிய புரிதல் அதிகமாகிவிட்டது. . அதனால் என்ன நன்மை? முதல் ஐந்து பத்திகளை மறுபடியும் படியுங்கள்!
*
இனி மனம் கவர் வாசிப்பனுவப் பதிவுகள் பற்றி:

நோபல் பரிசு பெற்ற மொழிபெயர்ப்பு நாவலாயிற்றே, புகழ்பெற்ற எழுத்தாளராயிற்றே என்றெல்லாம் தயங்காமல் தான் படித்து உள்வாங்கிக்கொண்டதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் சகோதரி ஆசியா உமர். கிழவனும் கடலும் நாவல் பற்றிய இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். எழுத்தாளர் பற்றிய அறிமுகம், நாவலின் களம், முக்கியமான கட்டங்கள், நாவல் சொல்லும் செய்தி, பின்குறிப்பு என்று நேர்த்தியான வரிசையில் அசத்தி இருக்கிறார்.

அநேகமாக நம்மில் பலர் இந்நாவலைப் படித்திருப்போம். (நடுக்கடலில்) உப்பும் எலுமிச்சையும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இவர் பதிவில் குறிப்பிடும் இடத்தை நான் அவ்வளவாகக் கவனத்துடன் வாசிக்கவில்லை. இந்தப் பதிவு படித்ததும் அந்த வாக்கியம் சொல்லும் செய்தியின் முக்கியத்துவம் உரைக்கிறது. (எந்தச் சூழலிலும்) மனிதன் பெரிதினும் பெரிது கேட்கிறான்!

புத்தகக் கடலில் மூழ்கித் தினமும் முத்தெடுப்பவர் நம் நண்பர் பார்வையாளன். ஜெமோவின் கொற்றவை, விஷ்ணுபுரம் நாவல்கள் பற்றிய இவருடைய பதிவுகளைப் படியுங்கள். சிலாகித்து எழுதி இருக்கிறார். கொற்றவை நாவல் பற்றிய பதிவில் அவர் ரசித்த சில இடங்கள் என்ற பத்தி டாப் கிளாஸ்.

கரமசாவ் சகோதரர்கள் நாவல் பற்றிய பதிவு எனக்குத் தெரிந்து இணையத்தில் இது ஒன்று மட்டுமே. வேறு பதிவுகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். மிக்க நன்றி. ஆதித்த கரிகாலனின் திரை விமர்சனங்களும் தெரியுமா என்ற தலைப்பில் எழுதப்படும் விஷயங்களும் சுவாரஸ்யம்.

பெயர்தான் குட்டிப்பையா, ஆனால் எழுதும் விஷயங்கள் கனமானவை. சமீபத்தில் படித்தவை என்ற பதிவில் குறிப்பிடப்படும் நூல்களைப் பாருங்கள். எனக்கேயான அப்பா என்ற பதிவு நெகிழ்ச்சியின் உச்சம். ஆங், சொல்ல மறந்திட்டேன், இவருடைய எழுத்துகள் எனக்கு சமயத்தில் காதில் புகையை வரவைக்கும்!

He / she makes it look easy என்பார்கள் ஆங்கிலத்தில். வித்யா சந்திரசேகரன் எழுத்து அந்த வகை. எப்போது நாவலைப் படிக்க ஆரம்பிக்கிறார், எப்போது படித்து முடிக்கிறார் எதுவுமே தெரியாது. திடீரென்று பார்த்தால் பதிவு வந்துவிடும். கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை பற்றிய இந்தப் பதிவு நெகிழ்ச்சியின் உச்சம்.

லா.ச.ரா. அவருடைய துளசி சிறுகதை தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் ‘துளசி’ சிறுகதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, “...இந்தக் கதையில் வாசகன் தன் பாட்டியையோ, தாயாரையோ, அல்லது தன் பிள்ளையையோ, பேரனையோ, அல்லது தன்னையோ ஏதோ ஒரு இடத்தில் அல்ல பாராவில், அல்ல ஒரு சொல்லில் அல்ல – அதுவும் வேண்டாம், ஒரு சொல்லின் பதப்பிரிவில் அடையாளம் கண்டுகொண்டுவிட்டால் அதுவே என் இத்தனை நாள் எழுத்தின் தவப்பயனை அடைந்ததுதான். மனிதநேயம் அடிகோல்வதே இப்படித்தான்....” என்று சொல்வார். வித்யாவின் பதிவைப் படித்ததும் எனக்கு இதுதான் நினைவிற்கு வந்தது.

வாசிப்பனுபவம், திரை விமர்சனம், சிறுகதைகள் என்று இந்த வலைப்பூவிற்குள் அநேக விஷயங்கள். தாகம், தூர்வை நாவல்கள் பற்றிய பதிவுகளைப் பார்த்துவிடுங்கள். சிறந்த பத்து நாவல்கள் பட்டியலும் முக்கியமான பதிவு

புத்தகத்திற்கென்றே ஒரு தனி வலைப்பூ நடத்தும் இவர்களின் சேவை போற்றுதலுக்குரியது. சமகால பிரபல எழுத்தாளர் ஜெமோ இந்த வலைப்பூ குறித்து சிலாகித்து எழுதி இருக்கிறார்.

புத்தகம் குறித்த பதிவுகள் நிறைய வரும் இன்னொரு வலைப்பூ இது. ஆனால் சில மாதங்களாகப் புதிதாகப் பதிவுகள் எதுவுமில்லை.

நானும் புத்தகங்கள் குறித்துச் சில பதிவுகள் இட்டிருக்கிறேன். நேரமிருந்தால் தஞ்சை பிரகாஷ் கதைகள், பின்தொடரும் நிழலின் குரல் நாவல் பற்றிய பதிவுகளைப் படித்துப் பாருங்கள். நன்றி.

முத்தாய்ப்பாக ஒரு விஷயம்। சில சமயங்களில் சில கதைகளை வேறு யாரேனும் எடுத்துச் சொன்னால் மட்டுமே புரிகிறது. திரு. விமலாதித்த மாமல்லன் அவர்களின் இந்தக் கட்டுரையைப் பாருங்கள். வாழ்நாளில் இதுபோல, இல்லை இல்லை, இதில் பாதி அளவுத் தரத்துடனும் புரிதலுடனும் ஒரேயொரு கட்டுரை எழுத முடிந்தாலும் போதும், என் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும்.

நாளை சந்திப்போம் நண்பர்களே.
*
குறிப்பு: இதுவரை படித்திராவிடில் ஜெமோவின் கண்ணீரைப் பின்தொடர்தல், நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், எஸ்ராவின் கதாவிலாசம் ஆகிய புத்தகங்கள் பற்றிய புத்தகங்களை வாசித்துப் பாருங்கள். நன்றி.
மேலும் வாசிக்க...

Monday, November 7, 2011

பதிவுகள் பலவிதம்

சரம் என்பதை மாலையாகக் கொண்டால் ஒரு முழுச்சுற்று. ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்துவிடுவோம் .

இந்த ஒரு வாரம் முழுதும் பகிர்ந்துகொள்ளப் போகும் பதிவுகளும் அப்படியே மாலையாக அமையவிருக்கிறது. பல்சுவைப் பதிவுகளில் ஆரம்பித்து, வாசிப்பனுபவப் பதிவுகளினூடாகப் பயணித்து, பயணம் குறித்த பதிவுகளில் மானசீகமாக அந்தந்த இடங்களுக்குச் சென்று, கதைமாந்தர்களுடன் வாழ்ந்து, திரைப்படங்களில் தோன்றும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி மீண்டும் பல்சுவைப் பதிவுகளுக்குத் திரும்புவோம்.
*
ஈகைத் திருநாளான நேற்றே இந்தப் பதிவைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். ஹஜ் பயணம் பற்றிய ஹுசைனம்மாவின் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். இவ்வளவு எளிமையாக அதே நேரம் சொல்ல வந்ததை ஒன்றுவிடாமல் சொல்லி இருக்கிறார். இது ஒரு கலை. இந்தப் பதிவைப் படித்ததும் எழுத்தாளர் நாகூர் ரூமியின் ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்’ என்ற புத்தகம் நினைவுக்கு வந்தது. கூடிய விரைவில் ஹுசைனம்மாவும் அது போல ஒரு புத்தகம் போட வாழ்த்துகள்! டிரங்குப் பெட்டி என்ற தலைப்பில் இவர் எழுதும் பதிவுகள் சுவாரஸ்யம்.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரத்னவேல் ஐயா அவர்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் ஆவணங்கள் போலப் பாதுகாக்கப்பட வேண்டியவை. மருத்துவம், தொழிலாளர் நல வருங்கால வைப்பு நிதி, ஸ்ரீவில்லிபுத்தூரின் கதாநாயகி ஆண்டாள் கொண்டாடும் ஆடிப்பூரம், சதுரகிரி மலை பற்றிய பதிவுகள் என்று ஒவ்வொன்றும் பொக்கிஷம்.

கிரியின் ரசனை பரந்து விரிந்தது. விளையாட்டு, விமர்சனம், வினா, பாடல், படங்கள் என்று நீண்டுகொண்டே போகும் இந்தப் பட்டியல். கதையும் எழுதுவார். இந்தக் கதையைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். விமலாதித்த மாமல்லன் கதைகள் பற்றிய இந்தப் பதிவையும் ஒரு முறை படித்து விடுங்கள்.

சிவகுமாரின் பலம் தங்குதடையற்ற மொழிதான். சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லிவிடுவார். சமீபத்தில் இவர் எழுதிய ஏழாம் அறிவு திரைப்படத்தின் விமர்சனத்தைப் படித்துப் பாருங்கள்.

புத்தகங்களுக்கான முன்னுரை பற்றிய பதிவுகளைப் படித்துக்கொண்டே வந்தபோது நிலாமகளின் இந்தப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. மிகக் குறைவாக ஆனால் மிகச் செறிவாக எழுதுகிறார். சில சமயங்களில் எனக்குக் காதில் புகை வரவைக்கும் பதிவர்களுள் இவரும் ஒருவர்:-)

விஜியின் இந்தப் பதிவைப் படித்ததும் எனக்குக் காதில் புகை வந்தது. ஆணாய்ப் பிறந்ததால் எவ்வளவு இழக்க வேண்டி இருக்கிறது பாருங்கள்:-) Jokes apart, மகளின் பிறந்த நாளன்று அவள் முதன் முதலில் பிறந்த நாளை அசைபோட்டிருக்கிறார். Simply touching! அறுபது நாள் விடுமுறைக் கொண்டாட்டத்தின்போது குழந்தைகள் அடித்த லூட்டியையும், பள்ளி திறந்ததும் வீடு வெறுமையாகக் காட்சி அளித்ததையும் இங்கே பதிவு செய்திருக்கிறார்.
*
கதம்ப மாலை கட்டும்போது பூக்கள் மட்டும் வைத்துக் கட்டாமல் வேரையும் வைத்துக் கட்டுவார்கள். அப்போதுதானே பூக்கள் எடுப்பாகத் தெரியும். மேலும் ராஜி மேடம் என்னுடைய சுவாரஸ்யமான பதிவுகள் மேலும் சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று போன பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். ஆகவே சுவாரஸ்யம் என்று நான் கருதும் என்னுடைய இந்தப் பதிவு.

மீண்டும் நாளை சிந்திப்போம் நண்பர்களே
மேலும் வாசிக்க...

முதல் சுவடுகளும் மனதிற்கு நெருக்கமானவையும்

அனைவருக்கும் வணக்கம்.

பதிவுலகத்திற்குள் எப்படி வந்தேன் என்பது பற்றிப் பார்த்துவிடுவோம். குமுதத்தில் வெளியான முதல் பத்து பதிவர்கள் பட்டியல் பார்த்துப் பதிவுலகத்திற்கு வந்தவன் நான். வந்த புதிதில் பதிவுகளைப் படிக்க மட்டுமே செய்தேன். அதுவும் ஒரே ஒருவரின் (பரிசல்காரன்) பதிவுகள் மட்டுமே. பின்னூட்டமிடத் தோன்றியதே இல்லை.

பரிசலின் நூல் வெளியீடு பற்றிய அறிவிப்பு வந்ததும் மகிழ்வாக இருந்தது. அவரை அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளத் தயக்கமாக இருந்தது. அதை மீறி அவருடன் அலைபேசியில் தொடர்புகொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.

அடுத்தடுத்து இருமுறை பெங்களூர் வந்திருந்தபோது அவரை சந்தித்தேன். ‘நீங்க பதிவுகள் எழுதுங்க’ என்று உற்சாகப்படுத்தினார். எழுதும் ஆசை ஒரு குட்டிப் பூனை போல என்னுள்ளும் எட்டிப் பார்த்தது. அலுவலகத்தில் எளிதில் அனுமதி கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக சம்பந்தப்பட்டவர்களைத் தொல்லை செய்ததன் பயனாக ஏகப்பட்ட நிபந்தனைகளுக்குப் பிறகு அனுமதி கிடைத்தது.

வலைச்சரம் பற்றி எப்படித் தெரிந்துகொண்டேன்? திருமதி. வித்யா சந்திரசேகரன் அவர்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது அவர் அது குறித்து ஒரு இடுகை இட்டிருந்தார். ‘வலைச்சர ஆசிரியர்’ என்பவர் யார் என்று அவரிடமே கேட்டேன். வலைச்சரம் எனக்கு அறிமுகமானது இப்படித்தான்.

மனதிற்கு நெருக்கமான என்னுடைய சில இடுகைகள் இப்போது:

சம்ஸ்காரா நாவல் பற்றிய பதிவு

அம்பேத்கர் திரைப்படம் பற்றிய பதிவு

பாஸ்கர் சக்தி சிறுகதைகள் பற்றிய பதிவு

சில முதல் சுவடுகள்:

முதல் பதிவு பள்ளி ஆண்டு விழா

முதல் சிறுகதை

பிடிவாதம்

முதன் முதலாக எழுதிய சினிமா சார்ந்த பதிவு

இனிது இனிது

மீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே

இந்த வாய்ப்பை அளித்த சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது