07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பழமைபேசி. Show all posts
Showing posts with label பழமைபேசி. Show all posts

Sunday, August 9, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 7

சீரியர் கெட்டாலுஞ் சீரியர் சீரியரே!
அல்லாதார் கெட்டால் அங்கென்னாம்? - சீரிய
பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாரும்; என்னாரும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?



பல ஒளவையார்கள், அதுல எதோ ஒரு ஒளவையார் எழுதி வெச்சதுதாங்க இந்த செய்யுள். சீரியர் துன்பத்துக்கு ஆளாயினும் சீரியரே; அவ்விதம் கெட்டவர் துன்பத்துக்கு ஆளாயினும் அவர் கெட்டவரே! அதாவது, பொன் குடம் உடைந்தாலும் பொன்னாவது போலவும், மண் உடைந்து எதற்கும் உதவாமல் போவது போல.

அது மாதிரி, எழுத்தாளர்கள் பொன் குடங்களைப் படைத்திடல் வேண்டும். அவை அங்கீகரிக்கப் பட்டாலும் சரி, அங்கீகரிக்கப் படாவிட்டாலும் சரி, அவை பொன்னானவையே! காலத்தால் அழியாமல் நிற்பவை எவையோ, அவையே வெற்றிப் படைப்புகள்! எண்ணிக்கையில் நிறைய மண் குடங்கள் இருப்பினும், காலத்தின் சுழற்சியில் சிக்குண்டு அவை உடையும் போது, அவற்றின் நிலை என்னவாகும்?!

எம்மைப் பொறுத்த வரையிலும், பதிவுலகம் என்பது எழுத்தின் முதல்நிலை. அதிலிருந்து மேலே செல்கிற படைப்பாளிக்கு, என்றும் நிலைக்கிற பொன் குடம் முடைவது, வணிகத்திற்கு ஏதுவாக அதிக எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மண் குடம் முடைவது என இரு விபாடங்கள்(options) இருக்கின்றன. அது அவரவர் விருப்பமே ஆயினும், முதல் நிலையிலேயே அதைத் தெரிவு செய்வது நலம் பயக்கும் என்றார் ஒரு நண்பர்.

அந்த நல்ல சிந்தனையோடு, எம்மை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சக பதிவர்களும், நண்பர்களுமான கீழ்க்கண்டவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

cheena (சீனா)






அதிகம் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை; ஆனால் எழுத வேண்டும் என்கிற ஆவல் நிறைய என்னிடம் இருக்கிறது என்று திறந்த மனதோடு சொல்லி, பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் பதிவர்
தமிழ் காதலன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!


இவர் நம்மில் பலருக்கு பரிச்சயம் ஆனவரே. ஆம், அவர்தான் தம்பி மதிபாலா அவர்கள். அரசியல் கட்டுரைகள் எழுதுகிறார். சமூகத்தின்பால் நாட்டம் கொண்டவர். சமீபத்தில் 200 இடுகைகளைக் கடந்திருக்கிறார். வாழ்த்துகள்!

கொங்குநடையில் கோலோச்சும் செல்வநாயகி அவர்கள். 2006ம் ஆண்டிலிருந்து எழுதி வருபவர். சமீபத்தில் இவர் துவங்கி இருக்கும் அய்யன் எனும் தொடர் இடுகைக்கு இரசிகன் நான். அவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள்!

பணிவுடன்,
பழமைபேசி.
உலகின் தலைசிற்ந்த வீரன், தன்னைத்தானே வெல்பவன்!

மேலும் வாசிக்க...

Saturday, August 8, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 6

வணக்கம் மக்களே! கடந்த 2004 - 2005ம் ஆண்டுகள்ல இசுரேல் நாட்டைச் சார்ந்த நிறுவனமான Amdocsங்ற நிறுவனத்துல நாம வேலை செய்துட்டு இருந்தோம். அந்த சூழ்நிலையில இசுரேல் மற்றும் சைப்ரசு நாடுகள்ல ஒரு ரெண்டு மாசம் பொட்டி தட்டப் போயிருந்தேன்.

ஒரு நல்ல நாள் அதுவுமா புராதன தொல்பொருள் ஆராய்ச்சி வளாகங்களைச் (archaeological sites) சுத்தி பார்க்கப் போயிருந்தோம். நிறைய இடங்கள் பார்த்தோம். அதுல ஒரு ஓவியம் என்னை மிகவும் பாதிச்சது.

ஆமாங்க, மொழியியல் அறிஞர்கள் எல்லாரும் உட்கார்ந்து பேசிட்டு இருக்குற மாதிரியான வண்ண ஓவியம் அந்த அரண்மனைக் கூடத்தோட மையப் பகுதியில இருந்தது. கரிய நிறத்துல ஒருத்தர் முழுக்கை சட்டையோட. கூட வந்த வழிகாட்டி தெளிவா சொன்னாரு, ‘He is a representative of Thamizh!.

உடனே எனக்கு, உலகின் ஆதி மொழிகள் சீனம், இலத்தீனம், கிரேக்கம், இப்ரூ, தமிழ், சமசுகிருதம் ஆகியவைன்னு எங்கோ படிச்சதை உறுதிப்படுத்திக்க முடிஞ்சது. இப்ப அதுக்கு என்ன வந்ததுன்னு நீங்க கேட்கலாம். அதுல ஒரு நியமக்கூறு இருக்குது இராசா, இருக்குது!

நேற்றைய இடுகையில உண்மைக்கு எதிர்ப்பதம் இன்மைன்னு சொல்லவே, நண்பர்கள் ஒன்னு ரெண்டு பேர் அதை ஏத்துக்க மூளை ஒத்துழைக்க மாட்டேங்குதுன்னு குறிப்பிட்டு இருந்தாங்க.

நான் என்னோட முந்தைய இடுகைகள்ல சொன்னதுதான், ஆதி மொழிகளில் ஒன்னான தமிழ்ல எந்த உணர்வு, செய்கை மற்றும் பொருளையும் தனித்துக் குறிப்பிடும்படியான சொற்கள் கிட்டத்தட்ட கி.பி 1900ம் ஆண்டு வரையிலும் இருந்தது. அதற்குப் பின்னாடி, தமிழ் மொழிய விஞ்ஞானம் மற்றும் இதர துறைகளின் வளர்ச்சிக்கு இணையாக் கொண்டு போகாம விட்டுட்டாங்க.

அது மட்டுமா? இருந்த மொழியின் பயன்பாடும் குறைஞ்சு போச்சு, அதனோட விளைவுதான் இன்றைக்கு இன்மைங்ற சொல்லை, உண்மைக்கு எதிர்ப்பதமா ஏற்றுக் கொள்ள முடியலை! அந்த பின்னணியில விபரத்தைப் பாக்கலாம் வாங்க!

இன்மை, இல்லை, இன்றி, இல்லாதது இதெல்லாம் non existanceஐ குறிக்கிறது. உண்மை, உள்ளது, உள, உளல் இதெல்லாம் existanceஐ குறிக்கிற சொல். ஆக, உண்மைக்கு எதிர்ப்பதம் இன்மைதான்!

உண்மை: இருப்பதை இருப்பதாகக் குறிப்பிடல்
இன்மை: இல்லாததை இல்லாததாகக் குறிப்பிடல்
பொய்: இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் குறிப்பிடல்

மெய்: இருப்பதை இருப்பதாகவும், இல்லாததை இல்லாததாகவும் குறிப்பிடல்

ஆக, உண்மை X இன்மை, பொய் X மெய் என்பதே பொருத்தமாக இருக்கும். ஆனா, நடைமுறையில இதெல்லாம் சாத்தியமா? ஆனா இதாங்க சரியானது. மெய்யுரை, பொய்யுரை கேள்விப்பட்டு இருப்பீங்க. உண்மையுரை கிடையாது. உண்மை(யை) உரைன்னு வேணுமானா சொல்லலாம்.


சரி, சரி, வாங்க இன்னும் சில பதிவர்களை அறிமுகப்படுத்தலாம்.

என்றென்றும் அன்புடன்ன்னு சொல்லிட்டு, ஆவலோட பதிவுலகத்துக்கு வந்திருக்கிறார் அன்பர் ஆரூரன் விசுவநாதன்.
எத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களைத் திருத்த முடியாது! இது இவரோட சமீபத்திய இடுகை, நல்லா எழுதியிருக்கார். இன்னும் நிறைய இடுகைகள் இட வாழ்த்துகள்!

தஞ்சையி்ல் பிறந்து, குடந்தையில் வளர்ந்து, (சென்னை) தாம்பரத்தில் வாழ்ந்து வருபவன்னு சொல்லிட்டு பதிவுலகத்துக்கு வந்து, இரு வேறு பதிவுகளை வெச்சி நடத்திட்டு வர்றாரு அன்புத் தம்பி அன்பு மணி. அவரோட நிறைய கவிதைகள் இரசிக்கும்படியா இருக்கு. சமீபத்துல வெகுசன மக்கள் இதழில்கூட இடம் பிடிச்சிருக்காரு அன்பு மணி!

தீப்பெட்டி, முனியப்பன் பக்கங்கள், சூரியன் இவங்கெல்லாம் எழுத வந்திருக்காங்க, ஆனாலும் தொடர்ந்து எழுதுறதுக்கு கால அவகாசம் கிடைக்கிறதில்லை போலிருக்கு. இருந்தாலும், அவகாசம் வாய்க்கும் போது தொடர்ந்து எழுத அவங்களை வாழ்த்தலாமுங்க!


பணிவுடன்,
பழமைபேசி.


பல் போனா சொல் போச்சு!
சொல் போனா மொழி போச்சு!!
மொழி போனா இனமே போச்சு!!!

மேலும் வாசிக்க...

Friday, August 7, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 5

ஒரு நாள், பெண்ணைப் பெத்த அந்தம்மா அழுது புலம்பிட்டு இருந்தாங்க. உடனே அந்தப் பெரியவர்,

”இதுக்கு ஏன் இப்ப அழுதுட்டு இருக்கே நீ? சேய் அப்படீன்னா, ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் பிரிஞ்சி எட்டத்தான போகும்? அதனாலத்தான அவுகளை சேய்ன்னு சொல்றது?”

பக்கத்துல இருந்த நாம உடனே அந்த பெருசுகிட்ட, ”அய்யா, என்ன சொல்றீங்க நீங்க?”

“ஆமா சேய்ன்னா தூரம், அண்மைன்னா கிட்டக்கங்றதுதான் தமிழ்?”

“அய்யா, சித்த வெவரமாச் சொல்லுங்க! நீங்க எடக்குமொடக்கா சொல்றீங்க போலிருக்கு?”

“டேய், டேய்... அது எடக்குமொடக்கு அல்லடா! இடக்குமுடக்குன்னு சொல்லணும்!!”

“செரி வுடுங்க. இடக்குன்னா என்ன? முடக்குன்னா என்ன??”

“இடக்குன்னா குதர்க்கம். முடக்குன்னா ஒழுங்கில்லாதது. குதர்க்கமாப் பேசி ஒழுங்கில்லாமச் செய்யுறதுதான் இடக்குமுடக்கு”

“ஓ அப்படியா? அப்ப ஏடாகூடான்னா என்னங்க பெரியவரே?”

”டேய், நீயென்னடா வெவகாரமாவே கேள்வி கேக்குற? இருந்தாலும் வயசுல சின்னவங் கேக்குறதால சொல்றேன், கேட்டுக்க; ஏடன், ஏடான் அப்படின்னா, தோழன் அல்லது நட்பானவன்னு அர்த்தம். கூடான் அப்படின்னா, சேரக் கூடாதவன். ஆக, எதிர்ப்பதமா இருக்குறதைச் சொல்லுறது ஏடாகூடான்னு!”

”பெருசூ.... அப்ப எதிரும் புதிருமாப் பேசுறான்னு சொல்றாங்களே? அது?? இஃகிஃகி!”

“டேய், கேனக்காத்தானாட்டம் இளிக்காத! ஒன்னுக்கொன்னு எதிர்ப்பதமா இருக்குற அர்த்தத்துல பாவிக்கிறது அல்லடா அது! ஆனாக் காலவட்டத்துல நீங்கெல்லாம் இப்படி மாத்திபுட்டீகடா... எதிர் அப்படீன்னா முன்னாடி நிக்கிறது. புதிர் அப்படீன்னா, சுலுவுல புரிஞ்சிக்கும் படியா இல்லாம இருக்கிறது. ஆக யாராவது முன்னாடி வந்து, சொல்லவந்ததை நேரிடையாச் சொல்லாமச் சொல்லுற பழமதாண்டா அந்த எதிரும்புதிருமாங்றது!”

”ஓ இதுல இத்தனை கதை இருக்கா? அப்ப எதிர்ப்பதம்னா என்ன பெருசு?”

“எதிர்ப்பதம்னா, முரணான பதம்ங்றதுதான். இப்ப கொஞ்சம் எதிர்ப்பதங்களை சொல்லுறேன் கேட்டுக்க,

சிறுமை X பெருமை
சேய்மை X அண்மை
தீமை X நன்மை
வெம்மை X தண்மை
புதுமை X பழமை
மென்மை X வன்மை
மேன்மை X கீழ்மை
திண்மை X நொய்மை
உண்மை X இன்மை
நுண்மை X பருமை"

"நல்லா இருங்க பெரியவரே, நான் கழண்டுக்குறேன் இப்போதைக்கு! இஃகி!!”

வாங்க மக்கா, நாம நம்ம சக பதிவர்களைச் சித்த பாக்கலாம். விட்டாப் பெருசு விடிய விடியத் தமிழ்ப் பாடம் எடுக்கும் போல இருக்கு?

பயணங்களின் காதலன், பகற்கனவுகளுடன் சாணி அள்ளுபவன்னு சொல்லிட்டு பதிவுலகத்துல காலடி எடுத்து வெச்சிருக்காரு, எலையமுத்தூர்த் தம்பி நாகா. துபாய்ல பொழப்பு நடத்திட்டு இருக்குற தம்பி இன்னும் நல்லபடியா நிறைய எழுத வாழ்த்துகள்.

இலண்டன் மாநகர்ல இருந்துட்டு, முதலீட்டு வங்கிகளுக்கு வழி சொல்லிப் பொழப்பு நடத்திட்டு இருக்காரு நம்ம முரண்தொடை அண்ணன் அது சரி அண்ணாச்சி. ஆகா, ஆகா, அவரோட நையாண்டி இருக்கே, அதுக்கு ஈடு இணை எதுவும் இல்ல போங்க!

சிங்கப்பூர்ல இருக்குற மேலாண்மைத் திலகம், உடுமலை முதங்கம் அண்ணன் துக்ளக் மகேசு, எதையும் எளிமையா எழுதிப் புரிய வைக்குறதுல பெரிய ஆள். அடிக்கொருக்கா மேல்நாட்டுப் புத்தகங்களைப் பத்தி எழுதுவார். ரொம்ப நல்லா இருக்கும்.

சரிங்க, நாளைக்கு அப்ப இன்னங் கொஞ்ச பேரோட பாக்கலாஞ் சரியா? இஃகிஃகி!!
பணிவுடன்,
பழமைபேசி.

கறக்குற பசுவையும், கைக்குழந்தையையும் கண்ணுல வெக்கணும்ன்னா,
தமிழை இரசிச்சு அனுபவிக்குறதுல வெக்கணும்யா!!

மேலும் வாசிக்க...

Thursday, August 6, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 4

வணக்கம்! விமானப் பயணம் என்பது எமக்கு தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி விமானத்தில் சென்று வருகிற போதெல்லாம், இளம்பிராயத்தை நினைத்து அசை போட்டுக் கொண்டே செல்வதில் கிடைக்கும் பேரின்பம் போல எதுவுமில்லை. அப்படிச் சமீபத்தில் நிகழ்ந்த நினைவசையில் அகப்பட்ட சொல்தான், ‘கவக்கோல்’. எங்கள் ஊர்ப் பக்கம், ‘டேய் மாசாணி, அந்த கவக்கோலை எடுத்தாடா!’ என்பார்கள்.

நுனியில் இரண்டாகப் பிரியும் தடியை கவட்டிக்கோல் என்று சொல்வார்கள். அப்படியானால், இந்த கவக்கோல் என்றால் என்னவென்று மனம் கிடந்து தவித்தது. ஊரில் இருக்கும் என் பெற்றோர்களைக் கேட்டால், அது கவைக் கோல்தானடா என்றார்கள். இறுதியில் பல புத்தகங்களை புரட்டிப் பார்த்ததில் விபரம் தெரிய வந்தது. இதோ அது உங்கள் மேலான கவனத்திற்கு:

அடி மரத்தினின்று பிரிவது கவை.
கவையிலிருந்து பிரிவது கொம்பு.
கொம்பிலிருந்து பிரிவது கிளை.
கிளையிலிருந்து பிரிவது சினை.
சினையிலிருந்து பிரிவது போத்து.
போத்திலிருந்து பிரிவது குச்சு(சி).
குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு.

இதிலிருந்து மரத்தின் பாகங்களை எப்படியெல்லாம் பெரியவர்கள் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்கள் என்று உணர முடிகிறது. அதே போல ஊறு (feeling) என்பது எப்படியெல்லாம் இருக்கிறது என்று பார்ப்போம்.


வெம்மை, தண்மை, வன்மை, மென்மை, நொய்ம்மை (கனமற்றது), சீர்மை(கனமானது), இழுமை (வழுவழுப்பு), சருச்சரை( சுரசுரப்பு) என எட்டு வகையாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியாகத்தான், சீரும் சிறப்புமென்பது, வலுவாகவும் சிறப்பாகவும் என்று பொருள்படுகிறது.

சரி மக்களே, சீரும் சிறப்பாகவும் இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போம் வாருங்கள்!

இவர் இப்போதுதான் பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு தமிழின்பால் நிறையவே ஆவலிருக்கிறது. இன்னும் நிறைய எழுதி, இலக்கிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள அவரை வாழ்த்துவோம். அந்த அன்பர்தான் நமது சிநேகிதன் அக்பர் அவர்கள்!

அடுத்ததாக நாம் பார்க்க இருப்பவர், மட்டக்களப்பு மறுமலர்ச்சி, தமிழை அலசி ஆராயும் நண்பர் சந்துரு அவர்கள். பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல், சமூகத்துக்கு எதையாவது செய்யத் துடிக்கும் இவரது வேட்கையை பாராட்டுவோமாக!

அடுத்து நாம் பார்க்க இருப்பது, நாமனைவரும் அறிந்த சுல்தான் ஐயா அவர்கள். 2006ம் ஆண்டிலிருந்து படைப்புகள் படைத்து வரும் ஐயா அவர்களின் பதிவுக்கு அடிக்கடி சென்று வருபவன் நான். அவரது நிறைய இடுகைகள் எனக்கு பிடிக்கும். ஐயா அவர்கள் மேலும் மேலும் இடுகைகள் இட வேண்டிக் கொள்வோமாக!

பணிவுடன்,
பழமைபேசி.




கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போய்விடுமா?

மேலும் வாசிக்க...

Wednesday, August 5, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 3

வணக்கங் கண்ணுகளா! நம்ம ஊர்ப் பழமையிகளைச் சித்த பாத்துட்டு, வலையில புதுசா எழுத வந்துருக்குற சனங்களைப் பாக்குலாஞ் செரியா?!

பாரு கண்ணூ, நான் ஒரு நாள் பொழுது விடிஞ்சதும் ஏழு மணி வண்டிக்கு நெகமம் போயி உரக் கடையில உரமும், பருத்திக் காட்டுக்கு சிம்புசு மருந்தும் வாங்குலாமுன்னு போயிட்டு இருந்தன். அப்ப வடக்காலூட்டு பாப்பாத்தி அக்கா, அங்க நின்னுட்டு இருந்த பூவாத்தக்கா கிட்டச் சொல்லுது,

பெத்தவ ஒரு
பாவமுஞ் செய்யுல;
ஆனாலும் பெத்த
புள்ளை இந்த
சின்ன வயசுலயே
செமக்குது புத்தக
பாரம்!

அதைக் கேட்டுட்டே ஊர் வாசலுக்குப் போயிச் சேரவுமு, கல்யாணி வண்டி வரவுமு செரியா இருந்தது. செஞ்சேரி மலையில இருந்தே வண்டி நெறய சனங்க தொங்கிகிட்டுத்தேன் வந்தாங்கலாமா கண்ணூ. நானுஞ் சேரின்ட்டு ஏறி கம்பியப் புடிச்சுட்டு நின்னுட்டேன். பக்கத்துல இருந்த சுண்ணாம்புக் காளவாய் கோயிந்தன் சொன்னான்,

எந்தத் தப்புஞ்
செய்யாம
நிக்கற தண்டனை
இந்த பேருந்துல!


என்றா கோயிந்தா, நெம்பத்தான் சலிச்சுக்குறன்னு அவனை ஒரு கேள்வி கேட்டுப் போட்டு, உள்ள நகுந்து போயி நின்னுட்டேன் நானு. வீதம்பட்டி மாரியாத்தா கோயில்ல வண்டி நிக்கவுமு, சனங்க உள்ள ஏறி வந்தாங்க. உள்ள ஏறி வந்ததுல இருந்த அந்த களையா இருக்குற அம்மணியப் பாத்துக் கோயிந்தன் சொன்னான், காஞ்ச கருவாட்டுக்கு ருசின்னா, கறுத்த கட்டைக்கு அழகு கழுத்துமணி! இதைக் கேட்ட அந்த அம்மணி சொல்லுச்சு, கழுத்துல இருக்குற மணி என்னவோ கறுப்புத்தான்! ஆனாக் கால்ல இருக்குறது வாகான பழைய செருப்பு!!

அதுக்கு மேலயும் கோயிந்தன் பேசுவான்னு நீங்க நினைக்குறீங்க?! இழுத்துச் சாத்திட்டு வந்தவன், சின்ன நெகமத்துலயே மொதல் ஆளா இறங்கி கண்ணு மூடி முழிக்கிறதுக்குள்ள மாயமாப் போயிட்டான்! இந்த மாதர நெறைய பழமைக; சொன்னாச் சொல்லிட்டே இருக்கலாம். வாங்க, இப்ப நாம நம்ம பதிவருகளைப் பத்திச் சித்த பேசுலாம்!

ஆமாங்க, நம்ம திலுப்பூருல இருந்து எழுதுற அண்ணந்தான் இவங்க, நிகழ்காலத்தில்... (அறிவே தெய்வம்) நாலுங்கலந்து நெம்பக் கெட்டியா எழுதுறவரு இவரு.

கோயமுத்தூர் அக்காவிங்க, பொன்னாத்தா [எ] சண்டைக்கோழி நம்மூர் நடையில வெச்சு வெளுத்து வாங்கறவிங்க இவங்க. நிலா எழுதும் கடுதாசிங்ற வலைப்பூவுலயும் எழுதுறவங்க இவங்க!

அடுத்து பாத்தீங்கன்னா, நான் பித்தனா சித்தனான்னு கேள்வி கேட்டுட்டே எழுத வந்திருக்குறவருதாங்க, சிவலோகத்துல இருக்குற வீடே உலகம்ங்ற இடத்துல எழுதுற கிறுக்கன். முதல் முத்தத்தை நெம்பவும் சிலாகிக்கறாரு இவரு.


"அழுதிட்டு இருந்தாலும் உழுதிட்டு இரு!"

அடச்சீ... சும்மா இரு; மாத்திச் சொல்லாத! அதை இப்படிச் சொல்லோணும், "அழுதிட்டு இருந்தாலும் எழுதிட்டு இரு!
"

பணிவுடன்,
பழமைபேசி.

மேலும் வாசிக்க...

Tuesday, August 4, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 2

பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்
குரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப வெனின்!



பெரியோர்க்குப் பெருமை பணிந்து சிறுத்தலும், கல்வியிற்ச் சிறந்தவர்க்கு உண்டானது அடக்கமும், செல்வம் படைத்தவர்களுக்கு ஈகையும் பெருமை தரக்கூடியன என முனிவர் அருளிச் செய்த நாலடியாரில் கூறப்பட்டதை நினைவுகூற விரும்புகிறேன். Yes, the greatness of the great is the quality of littleness(humulity); the real acquisition of those who have acquired one is modest self-restraint. If we rightly understand things, those possessors of wealth only are really wealthy who relieve the wants of those that them.


நேற்றைய இடுகையிலே இளைய சமுதாயத்தைக் கண்டு காழ்ப்புக் கொள்கிறார்கள் மூத்தவர்கள். அவர்கள் மத்தியிலே புதிதாக எழுதவரும் பதிவர்களை ஊக்குவித்துப் பாராட்டுமுகமாய் வலைச்சரம் நடாத்தி வருகிற ஐயா அவர்களைப் பாராட்டும் பேறு பெறுகிறேன் எனக் குறிப்பிட்டு இருந்தேன். அதை எழுதும்போதே இப்படிச் சாடி எழுதுவது தேவைதானா எனும் கேள்வி நம் முன் எழுந்தது. பலமுறை யோசித்துவிட்டே அதை மேற்கொண்டு எழுத விழைந்தேன். அதுவே விவாதமாகவும் ஆகிவிட்டது, எனவே மேலதிகமாக எழுதும் நிலைக்கு ஆட்பட்டிருக்கிறேன்.

காரணம் யாதெனின், சமூகத்திலே இருக்கிற பல பெரியவர்கள் எழுத்திலும் சரி, லெளகீக வாழ்விலும் சரி, இளைஞர்களையும் மேன்மைமிகு மாற்றங்களையும் வெளிவர விடுவதில்லை. தமிழிலே எழுத விழையும் இளைஞர்களிடத்தே குறை காண்கிறார்கள். குறையாகவே இருப்பினும் அதைச் சுட்டி மேலும் அதை மேம்படுத்துவது மட்டுமே நலம் பயக்கும்.

இன்றைக்கு இளைஞர்கள் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் கோலோச்சும் நிலைமை! காரணம் என்ன? மூத்தோரின் குறுக்கீடுகள் அவற்றில் இல்லை என்பதும், அவர்களுக்கு புதிதாய்ப் பிறந்த தொழில் நுட்பத்தில் தேர்ச்சி இல்லை என்பதும்தானே நிதர்சனம்?! அதனால்தான் இளைஞர்களால் அவற்றில் மேலே வர முடிந்தது. அரசியல், இலக்கியம், எழுத்து, நிதி, நிர்வாகம் முதலானவற்றிலே இன்னமும் அடக்கியாளும் பாங்கு இருக்கிறது என்பதும் உண்மை. இப்படிச் சொல்வது என்பது, பெரியோரை மதியாது நடப்பதை ஊக்குவித்தல் என்றாகிவிடாது.

நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களை இனங்கண்டு, அவற்றைத் தீட்டி ஒளிரவிடுவதுதானே பெரியவர்களின் தலையாய வேலையாக இருக்க முடியும்? அதைவிடுத்து காலாகாலமாக ஒளிரும் கதிரவன்களின் பெயரையும் புகழையும் பிரபலத்தையுமே சொல்லிச் சொல்லிக் காலம் கழிதல் வேண்டுமோ? இதே எண்ணம் மற்றவர்க்கும் வந்திருக்கிறது என்பதை, இளைஞர்களுடன் இணைக்கு இணையாய் இருந்து, மாற்றங்களைச் செவ்வனே கற்றுத் தேர்ந்து கோலோச்சும் டோண்டு ஐயா அவர்கள் கொடுத்திருந்த சுட்டி பறை சாற்றியது.

இலக்கியத்தில், எழுத்தில் கோலோச்சும் பெரியோரே, எம்மை மன்னியுங்கள்! ஆனால் அடுத்தவரை வளர விடுங்கள்!! எங்கெல்லாம் அடுத்தவரை வளர்த்துவிட வாய்ப்புக் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் மனமொத்துச் செயலாற்றுங்கள்!!!

அந்த பணிவான வேண்டுகோளோடு சில புதிய பதிவர்களைக் காண்போம் வாருங்கள் வாசகர்களே!

செருப்பில்லாதவன் ந‌ட‌க்கும்
பாதையிலே உமிழ்ந்த எச்சில்
காலணிக்குள் உறுத்துகிறது
சிறு கல்லாய்...

புகைவண்டியில் சீப்பு
விற்கும் குருடனிடம்
பேசிய பேரம் எரிகிறது
கண்ணுக்குள் நெருப்பாய்..

அழுகையோடு உறங்கிய‌
என் குழந்தையின் கண்ணீர்
இரவு முழுவதும் மழைநீராய்
சொட்டுகிறது கனவில்.................


இந்தக் கவிதையைப் படித்த பிறகு என் மனம் தவித்தது. இந்தப் படைப்பாளியின் எண்ண வெளிப்பாடுகள் இருக்கிறதே, அவை விண்ணையே முட்டக் கூடியவை. எளிமையாய் எழுதி, சாமான்யனின் நினைவு எச்சங்களை எகிறச் செய்வதில் விற்பன்னர். அவர்தான் கதிர் ஈரோடு!

தமிழ்க் கடவுள், அந்த முருகப் பெருமானே பதிவுலகத்துக்குள் நுழைந்து தமிழ் கற்பிக்க வந்துவிட்டாரோ என வியந்தேன். இயல்பான முறையில், நமது பயன்பாட்டில் தமிழ் எனும் தலைப்பில் அவர் எழுதும் பாங்கு வெகு சிறப்பாக இருக்கிறது. தம்பி செந்தில்வேலனே, உம்மைப் போன்ற இளையோர் இருக்கும் வரையிலும்,

தமிழ் பட்டுவிடப் போவதும் இல்லை!
அந்தப் பற்று விட்டுவிடப் போவதுமில்லை!!


மாப்பிள்ளையை அறிமுகப்படுத்தினேன், தம்பியை அறிமுகப்படுத்தினேன். அண்ணனை அறிமுகப்படுத்தாமல் சென்றுவிடுதல் நியாயமாகுமா?
பாலா அண்ணன் அவர்கள், செய்திகளைச் சேகரித்து அதற்கு நறுக்குத் தெறித்தாற்போல் மறுமொழிவதில் நிபுணர் என்றே சொல்ல வேண்டும். மிகவும் சுவாரசியமாக இருக்கும்!

நன்றி மக்களே! மேலதிக அறிமுகங்களோடு மீண்டும் உங்களை எல்லாம் நாளை சந்திக்கிறேன்!


பணிவுடன்,
பழமைபேசி.


மேலும் வாசிக்க...

Monday, August 3, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 1

நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச
மனையாளைப் பஞ்சணையில், மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்!
--ஒளவையார்

வணக்கம்! பல எழுத்தாளர்கள் பணி புரிந்துவிட்டுச் சென்ற இடத்தில் இந்த சொற்பனுக்கும் இரு இடம் வாய்த்ததில் உள்ளபடியே பெரு மகிழ்வு கொள்கிறேன். நேற்றைக்குத்தான் நல்லதொரு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு, எனது சலிப்பை வெகுவாகவே வெளிப்படுத்தி இருந்தேன்.

ஆம், இன்றைய சூழலின் பொதுவாழ்வில் 1980களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கும், அந்த காலகட்டத்திற்கு முன் பிறந்தவர்களுக்கும் மிகப் பெரிய வேறுபாடு காணப்படுகிறது. மூத்தவர்களின் எண்ணங்கள் கிடந்த கிடப்பிலேயே இருக்கிறது. நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை; ஆனால் பெரும்பாலானோர் அப்படியே இருக்கிறார்கள் என்பது திண்ணம்.

இளையவர்களை அடக்கி ஆள்வது, எல்லை வகுப்பது, மட்டம் தட்டுவது இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அடுத்த தலைமுறையினரின் ஆற்றல் குறித்து சஞ்சலம் அடைகிறார்கள், காழ்ப்புக் கொள்கிறார்கள். ஆனால் 1980களுக்குப் பிறகு பிறந்தவர்கள் மிகவும் அகன்ற பார்வையில், தீர்க்கமாக இருக்கிறார்கள் என்பதே நான அவர்களது எழுத்தின் வாயிலாக உணர்ந்தது.

எனது நிலைப்பாடு இப்படி இருக்கையில், வளரும் பதிவர்களை இனங்கண்டு அடையாளம் காண்பிக்கும் முகமாக வலைச்சரத்தை உண்டுபண்ணி, அதை செவ்வனே பராமரித்து வரும் மேன்மைமிகு சீனா ஐயா அவர்கள் மற்றும் கயல்விழி முத்துலட்சுமி, பொன்ஸ் பூர்ணா ஆகியோருக்கு எமது உளங்கனிந்த நன்றியினைக் காணிக்கை ஆக்குகிறேன். மேலும் சிந்தாநதி அவர்களின் புகழும் நினைவும் என்றும் நம்முடன் இருக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.

அதன் பொருட்டே அவ்வையாரின் பாடல் முகப்பிலே இடம் பெற்றிருக்கிறது. நாம் பாராட்டும் குணத்தை வெகுவாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லி, மேலும் யாரை எப்படிப் பாராட்டுவது என்பதே அப்பாடல்.

நண்பனை அவன் இல்லாதவிடத்திலே பாராட்ட வேண்டும். ஆசான் சீனா போன்றோரை அவ்வப்போதே நெஞ்சாரப் பாராட்டுதல் வேண்டும். அகத்தாளை அவளிடத்தே பாராட்ட வேண்டும். பெற்ற மக்களை தம் நெஞ்சில் மட்டுமே, வேலையாளை வேலை முடிந்த பின் பாராட்ட வேண்டுமென்கிறார் அவ்வை. ஆகவேதான் இத்தளத்தை உருவாக்கி, நடத்திவரும் குழுமத்தாரை பாராட்டும் பேறு பெறுகிறேன்.


நேற்றைய இளைஞனுக்கு மூத்தோரே எல்லை!
இன்றைய இளைஞனுக்கு வானமே எல்லை!!
நாளைய இளைஞனுக்கு எல்லையே இல்லை!!!

என்கிற சிந்தனையோடு, எல்லையற்று செறிவான படைப்புகள் படைத்து வரும் படைப்பாளிகள் சிலரின் அறிமுகத்தோடு நாளை மீண்டும் உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன்.

பணிவுடன்,
பழமைபேசி.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது