07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வானம்பாடிகள். Show all posts
Showing posts with label வானம்பாடிகள். Show all posts

Sunday, January 10, 2010

மீண்டும் சந்திப்போம்..

வந்துட்டான்யாஆஆ!வந்துட்டான்யாங்கறது கேக்குது. அதெல்லாம் சரியா வந்துருவம்ல. இன்னைக்கும் நம்ம ஆட்சிதான! ச்ச்ச்ச்ச்சேரி. வெட்டிக்கத போதும். வந்த வேலைய பார்ப்பம் வாங்க.

நம்ம வீட்ல ஒரு விசேஷம்னு வைங்க. ரொம்ப நெருக்கமானவங்களுக்கு அப்புறம் பத்திரிகை வைக்கலாம்னு நினைப்போம். அது அப்படியே அலைஞ்சி திரிஞ்சி விசேஷத்துக்கு முதல் நாள்தான் கவனம் வரும். அட கடவுளே இவருக்குச் சொல்லலையேன்னு.

ஓடிப்போய் கை புடிச்சிகிட்டு அய்யா சாமி! மன்னிச்சிடுய்யா. நம்மாளுதானன்னு இருந்துட்டேன். நல்லகாலம் கவனம் வந்திச்சின்னா, அட போய்யா! நம்ம வீட்டு விசேஷத்துக்கு நீ வந்து கூப்புடணுமாம்பாரு. அப்புடித்தான் ஆகிப்போச்சி நம்ம நிலமை. ஜெரி அய்யா அப்புடிதான் சொல்லுவாரோ? இல்ல முட்டி போடுன்னு திட்டுவாரோ. அது நாம பட்டுக்குவம். மனிதம் கொன்ற மனதில் இசை ரசிக்குமா? இந்தக் கேள்வியை எழுப்பும் கவிதை இதோ!

என்னமா குப்பத்தொட்டின்னு பேரு வெச்சி ஏமாத்துறாருங்க நான் ஆதவன். இதுவும் ஒரு பள்ளிக்கூடம். அமைதியான எழுத்தோட்டத்துக்கு உதாரணம் இவரின் மாட்டு கொட்டா வீடு.

இதோ ஓர் ஈழத்துக் கவி. எம்.ரிஷான் ஷெரிஃபின் கவிதைப் பூக்களை இன்றுதான் காணக் கிடைத்தது. விகடனில் படித்த தொடர் இவருடையது என்பது இன்னும் மகிழ்ச்சி. குழந்தைகள்..கோப்பைகள் என்ற இவரின் கவிதை உங்களுக்காக.

என்ன நினைக்கிறாரோ அதை யோசிச்சி சொல்ற ஷஃபி உங்களில் ஒருவன் சொல்றதெல்லாம் பயனுள்ளவை. info@பதில்சொல்லுங்க.com எவ்வளவு பயனுள்ள விஷயம் சொல்லுது பாருங்க.

”மறக்க மாட்டேனென நினைக்கிறேன்..மறந்திருந்தால் ஒரு வேளை இறந்திருப்பேன்”..என்ன? கவிதை மாதிரி இருக்கா. ஒரு முத்தம் வலைப்பூவுக்கு கட்டியம் கூறும் சையதின் வரிகள் இவை. ஒரு தருணம் என்ற இவரின் கவிதை சொல்லும் மீதியை.

இன்னொரு புதுக் கவிஞன் கார்த்தியின் கவிதைகள் வலைப்பூவும் கவிதைப் பூங்கா. இருப்பும் இல்லாமையும் என்ற இவரின் கவிதை இன்றைய சமுதாய ஏற்றத் தாழ்வை அழகாய்ச் சொல்கிறது.

கவிதைக்காரன் டைரி இளங்கோவின் கல் யானை உயிர் பெறுகிறது பாருங்கள். நிறைய நல்ல கவிதைகள் கொட்டியிருக்கிறது இங்கே.

சொல்லத் துடிக்குது மனசின் சொந்தக்காரி மதார். சுற்றி நடப்பவற்றை நம் கண்முன் நிறுத்தும் எழுத்து இவருடையது. பஸ் பயணிகளுக்கு டிக்கட் செக்கிங் ஒரு சாபக்கேடு. சிரிக்க சிரிக்க எளிய நடையில் இதோ.

இரண்டு வாரங்கள் ஓடி விட்டது. ஒரு வாரம் கூடுதலாகக் கிடைத்தும் எத்தனையோ சிறந்த வலைமனைகளைத் தவற விட்டிருக்கும் சாத்தியம் அதிகம். ஓரளவு நிறைவாயும் உணர்கிறேன். இந்த மிகப் பெரும் வாய்ப்பைத் தந்த சீனா அய்யாவுக்கு என் வணக்கங்களும் நன்றியும். 

 ஹி ஹி. சிங்கம்னு சிங்கிளா விடாம தொடர்ந்து பின்னூட்டம் மூலம் ஊக்குவித்த அன்புள்ளங்களுக்கு நன்றி.

அழகான தலைப்புக்களை செதுக்கித் தந்த ப்ரியாவுக்கு நன்றில்லாம் சொன்னா போதாது.

பாமரன் பக்கங்களில் தொடர்ந்து சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Saturday, January 9, 2010

மின்னுவதெல்லாம் பொன்னல்ல..

வணக்கம் நண்பர்களே!

பழகப் பழகப் பாலும் புளிக்கும்னு சொலவட இருக்கில்ல. பத்து நாளுக்கு மேல நானும் புளிக்காம இருக்க ரொம்பவே முயற்சிக்கிறேன். புதியவர்கள் அறிமுகம் பண்ணலாம்னு தேடி வரப்ப, எனக்குப் புதியவர்களா பிரமிக்க வைக்கும் பதிவர்களும் கிடைக்கிறாங்க. புதியவர்களும் நிறைய கிடைக்கிறாங்க.

ரொம்பவே வருத்தப் பட வைக்கும் ஒரு விடயம், ரொம்ப அழகான எழுத்துக்குச் சொந்தக்காரர்களான பல புதியவர்கள் சென்ற வருடம் முழுதும் 3 அல்லது 4 படைப்புகள் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். சிலரின் வலைமனை எழுத்தை நெருங்க முடியாமல் செய்கிறது. அலறும் பாடல்கள், தேவையில்லாத விட்ஜெட்கள், செயலறச் செய்யும் லிங்குகள் என்று.

ஒரு வேண்டுகோள் புதியவர்களுக்கு. உங்கள் எழுத்தும், படுத்தாத வலைமனையும் தான் அவசியம். கொஞ்சம் முயன்றால் நிறைய எழுதலாம். இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போமா?

சின்னச் சின்னக் கதைகள், பக்திப் பாடல்கள், ஆன்மீகக் கட்டுரைகள் கொண்ட வலைப்பூ அடியாரின் இந்து முரசு. மதங்களுக்கப்பாற்பட்டு நன்னெறி சொல்வதே ஆன்மீகம். அதிலும் சின்னச் சின்னக் கதைகள் மதம் கடந்து இறையுணர்த்துமாயின் அதை விட சிறந்த வழியென்ன இருக்க முடியும். அப்படி ஒரு கதை எந்நாளும் ஏகனோடிரு.

இன்றைக்கு கிடைத்த என் புதையல் மகேஷின் துக்ளக். இத்தனை நாள் எப்படி பார்க்காமல் போனேன் தெரியவில்லை. டிஜம்பர் மீஜிக் ஜீஜன் இன் சென்னை என்ற தலைப்பே சிரிக்க வைக்கிறதெனில் அந்த இயல்பான நையாண்டி அருமை. புதியவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் இவர் எழுத்தை (என்னையும் சேர்த்துதான் சொன்னேன்).

ஒலி வங்கியும் ஊமை நிழல்களும். தலைப்பே சொல்கிறதல்லவா? இது வித்தியாசமானதென. ஆம். இரவுப் பறவை என்ற வலைப்பூ முழுதும் வித விதமான வித்தியாசமான கவிதைப் பறவைகள்.

மந்திரனின் மந்திர ஆசைகள் என்னை மிகவும் கவர்ந்தது. நியாயமான கோபம் வெளிப்படுத்தும் இடுகைகள் வாழ்க்கையில் சுற்றியிருப்பனவற்றை பார்க்கும் பார்வை புதியது. வக்கிரம் யாருக்கு என்ற இந்த ஒரு இடுகை போதும் அவரின் திறமை சொல்ல.

சரணின் இளையபாரதம் ஒரு வித்தியாசமான வலைப்பூ. சமூக அக்கறையுடனான இடுகைகள், தொலைக்காட்சி அனுபவங்கள் என பலதரப்பட்ட தேர்ந்த எழுத்துகள் படிக்க கொட்டிக் கிடக்கிறதிங்கே. பர்ஸ் தொலைவது குறித்த அட்டகாசமான இடுகை இது.

அக்பரின் சிநேகிதன் சிநேகமான ஒரு வலைப்பூ. கலகலவென இருக்கும் இவர் வலைப்பூவின் ஒரு பூ, சின்னப்பூ சொல்லும் அழகாய் ஒரு கவிதை, அம்மாவை நினைவுறுத்தி.

சதீஷ் கவிதைகளின் கண்ணீர் தருணங்கள் இந்தப் புதிய பதிவரிடம் நிறைய எதிர் பார்ப்பைத் தருகிறது. எழுதுங்கள் நண்பரே.

டயானாவின் அறிந்ததும் அனுபவமும்
ஒரு அனுபவம். அழகான ஈழத்தமிழில் அருமையான ஓர் கருத்துள்ள இடுகை. மின்னஞ்சலில் வலம் வந்தது என்றாலும் இந்தத் தமிழ் ஈர்க்கும்.

நல்லது நண்பர்களே! நாளை சந்திப்போமா?

மேலும் வாசிக்க...

Friday, January 8, 2010

ஏக்கமும் தாக்கமும்

வணக்கம் நண்பர்களே!

வலைமனை.இதுவும் நமக்கொரு வீடு. நம் சிந்தனைக் குழந்தைகள் பிறந்து தவழ்கிற வீடு. நட்புக்கள் வருகிற வீடு. ஏதோ காரணத்தால் ஒரு நாள் நம் வலை மனைக்கு வர முடியாவிட்டால் என்னமோ தொலைச்சா மாதிரி இருக்கில்ல.

பரம்பரையா வாழ்ந்து, நாம விளையாடி, வளர்ந்து நம் விருப்பத்தில் எங்கயோ பிழைப்புன்னு போனாலே வீடு கவனம் வந்திச்சோ எல்லாத்தையும் கடாசிட்டு வந்து ஒரு ஒரு செங்கல்லா தொட்டுத் தடவி, ஒரு ஒரு செடியா பார்த்து பேசி கொஞ்சி, நம் மண்ணின் சில்லிப்பில் கால் பதிய நிக்கமாட்டமான்னு ஏங்கிப் போகுமில்லையா?

அது மறுக்கப்பட்ட ஒரு இதயத்தின் வலி. ஆறுதல் சொல்ல முடியாத வலி. அதை விட ஆயிரம் வீடு வாங்கினாலும் அத்தனையும் கொடுத்து விடுகிறேன். இடிந்து சிதிலமானாலும் பரவாயில்லை. அந்த மண் எனக்கு வேண்டும் என என்றும் வலிக்கும் வலி. ஜீவ நதியில் ஜீவராஜ் வீடு என்ற இடுகையில் அந்த வலியை நாம் உணர வைக்கிறார். வலைச்சரத்துக்காக நான் தேடியதில் கிடைத்த இன்னோரு வைரம் இவர் எழுத்து.

மனசு ரொம்ப கவலையா, விரக்தியா எதும் செய்யத் தோணாம இருக்கும் போது குழந்தையாவே இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு ஏங்கிப் போகும். அதும் வீட்டில பாட்டி, தாத்தா,அப்பா, அம்மான்னு மடியில் அமர்ந்து கேட்ட கதைகள், தூங்குறப்ப சொன்ன கதைகள்ளாம் அடுத்த தலைமுறைக்கு குடுக்க முடியாம தொலைச்சிட்டு நிக்கிறோம். திருமதி ருக்மணி சேஷசாயி சுட்டிக் கதை  வலைப்பூவில் இந்த ஒரு இடுகையில் அந்தக் குறை தெரியாமல் செய்து விடுகிறார். படிக்கையில் குழந்தையாகிப் போனேன். நன்றி அம்மா உங்கள் பணிக்கு.

வடலூரான் கலையரசன்
கழுகுப்பார்வை பார்த்து கலவரமாக்குற கூத்து இங்கே. லொள்ளுக்குண்டோ அடைக்கும் தாழாம்? குசும்பன், இராகவன் நைஜீரியா இவங்களோடு சேர்ந்து அடிச்ச லூட்டி இங்கே. ஏன் கலை. இராகவனுக்கு காமிரா வாங்கிக் குடுத்த கலையரசன் நீங்கதானே?

எங்கே போனாலும் நட்புடன் நீளும் ஒரு கை. மனசார பாராட்டு. பின்னூட்ட முடியாவிடில் திரட்டிகளில் பின்னூட்டு. பிரச்சினையிருக்கிறதா பாருங்கள் என்று முடிந்தால் மின்னஞ்சல் இப்படி ஒரு நட்புக்கரம் வலையுலகின் வரம். ஆமாங்க நட்புடன் ஜமால்தான். ஏணிப்படிகள் என்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புச் செய்திகள், சின்னதாய்க் கவிதைகள். கொஞ்சம் எழுதலாமே ஜமால்.

இன்றைய தேடலின் பலன் இந்தக் கவிஞன். கமலேஷ். சுயம் தேடும் பறவை என்ற பெயரே கவிதையாய் வலைமனை இவருடையது. நெஞ்சை ஆக்கிரமித்துக் கொள்ளும் எழுத்து. வித்தியாசமான கவிதைகள். நீரியல் சுழற்சி என்ற இவரின் கவிதை ஒன்று போதும் சாட்சி கூற. இனித் தொடர்வேன்.

மோகனின் மோகனச் சாரல் அழகான பூங்கொத்தோடு வரவேற்கிறது. கலகலப்பான எழுத்து. படிக்க சிரிக்க இதோ இவரின் எஸ்.எம்.எஸ்.கலாட்டா.

ரிஷபன்.  அசத்தும் எழுத்துக்கு சொந்தக்காரர். மண்ணில் சொர்க்கம் என்ற அவரின் இடுகையை அறிமுகப்படுத்த வாய்த்ததில் மகிழ்ச்சி.

வெற்றிக் கதிரவனின் தேடல் ஒன்றே வாழ்க்கை ஒரு வித்தியாசமான அனுபவம் தரும். அவரின் சுயபுராணம் அதற்கோர் எடுத்துக் காட்டு.


நாளை சந்திப்போம். வர்ட்ட்ட்டா:)
மேலும் வாசிக்க...

Thursday, January 7, 2010

ரத்தின(ங்கள்) சுருக்கம்...

வணக்கம் நண்பர்களே!

பதிவுன்னு எழுத ஆரம்பிக்கும் போதே என்னிய மாதிரி பலரும் எது தோணுதோ எழுதுவோம்னு பரந்த நோக்கில்(யாருப்பா அது எத விட்டு வச்ச கெடுக்காமன்னு குரல் விடுறது) ஆரம்பிக்கிறோம். தீர்மானமா, சமையல், சினிமா, மொழி, வரலாறு இப்படி ஏதொ ஒரு தனிப்பாதை போட்டு அதில் நம்மை இழுத்துச் செல்பவர்கள் சிலரே.

தமிழ்மொழி, அதன் வளர்ச்சி, ஈழம் என தமிழ் சார்ந்த விஷயங்களை புள்ளி விபரங்கள், சரித்திர மேற்கோள்கள் காட்டி உணர்வு பூர்வமாக எழுதுபவர் தேவியர் இல்லம் தேவிஜி. அகதிகள் குறித்த அவலம் சொல்லும் அவரின் ஓர் இடுகை ஒரு ஊரிலே.

ரவிப்ரகாஷின் என் டைரி ஒரு புதையல். மென்மையான உணர்வுகளின் வெளிப்பாடு, நனவோடைகள் என்று பலவும் கிடைக்கும் இங்கே. உள்ளம் உலுக்கும் அவரின் எழுத்துக்கு ஒரு சாம்பிள் இது. இவரின் இன்னோரு வலைப்பூ உங்கள் ரசிகன். இங்கும் இவரின் எழுத்தை அனுபவிக்கலாம். பத்திரிகையாளரின் எழுத்துக்கு கட்டியம் கூற எனக்கு வாய்த்தற்கு நன்றி.

கலகலப்புக்கு ஒரு வலைமனை நாஞ்சில் எக்ஸ்ப்ரஸ். பெயருக்கேற்றார்போல் ஒரு ரயில் வண்டியின் அத்தனை பரபரப்பும் பிரதாபின் இடுகைகளில் இருக்கும். மூக்குக் கண்ணாடி குறித்த அவரின் பதிவு இந்த எக்ஸ்ப்ரஸின் வேகம் சொல்லும்.

மூச்சுத் திணற ஈழத் தமிழ் சுவைக்க ஓர் முற்றமிருக்கிறது. ஈழத்து முற்றம். ஒரு குழுவாக இந்த வலைப்பூவை பராமரிக்கிறார்கள். அழகான எழுத்துக்களின் நந்தவனம் இது. மனமள்ளும் மொழியழகுக்கு இதோ.

லஞ்சம் - ஊழல் - மோசடி
யென்ற இந்த வலைப்பூவை இன்று கண்டெடுத்தேன். சமுதாயத்தில் புரையோடிய இந்த நோயை துகிலுரிக்கும் வலைப்பூ இது. பிச்சைக்காரரிடம் திருடிய ஒரு போலீஸ் காவலரின் முகத்திரை கிழிக்கும் இடுகை இது.

படிக்காதவன் என்ற பெயர் ஈ.ரா.வின் வலைப்பூவுக்கு. நம்மை படிக்க வைக்கும் எழுத்து இவருடையது. வரவில்லை என்ற இவரின் கவிதை இதோ.

இரசிகையின் கவிதைக்கு ரசிகனாகாமல் இருக்க முடியாதுங்க. நிமிடங்களில் சில என்ற இவரின் கவிதை அட சொல்ல வைக்கும் ரகம்.

இன்றைக்கு இவ்வளவு போதும். நாளை சந்திப்போமா?


மேலும் வாசிக்க...

Wednesday, January 6, 2010

தூண்டும் இன்பம் ....

வணக்கம் நண்பர்களே!

கொஞ்சம் வேலை அதிகமா இருந்திச்சிங்க. அதான் நேற்றைய இடுகை வரவில்லை. அடுத்த இடுகைகள்ள கூடுதலா அறிமுகம் செய்துட்டா போச்சி. வேலைன்னா வேலை அப்படி ஒரு வேலை. களைச்சுட்டேன். அட ஃபிலிமெல்லாம் காட்டலைங்க. நிசமாத்தான்.

ஃபிலிமெல்லாம் நமக்கு காட்றதுக்கு கூட பதிவர்கள் இருக்காங்க. தேடி தேடி திரட்டி, பார்த்து, விமரிசனம் பண்ணி, தேவைப்பட்டத பாருங்க சாமின்னு கொடுக்கிற விஷயம் ரொம்ப பெருசு.ஒரு காலத்துல நாங்களும் ரவுடிதான்னு மவுண்ட்ரோட் தியேட்டர்ல புது ஆங்கிலப் படம் ரிலீஸ் ஆனா முதல் வாரம், ப்ளாக்ல டிக்கட் விக்கிற அண்ணாச்சிங்க மூணு டிக்கட் நியூஸ் ரீல் முடியற வரைக்கும் நமக்காக வச்சிருக்கிற அளவுக்கு இருந்திச்சி.

சினிமா போறது அறவே நின்னு போனாலும், ஆடின காலும் பாடின வாயும் மாதிரி படம் பார்த்து பழகின மனசும் சினிமாவ தேடும்போது அலுங்காம குலுங்காம நேர நாம போற திரையரங்கு பட்டர்ஃப்ளை. டெண்டு கொட்டாய் படல்ல விரல விட்டு ஓட்ட பண்ணி இடுக்கால திருட்டுத்தனமா பார்க்கிறா மாதிரி விமரிசனம் படிச்சிட்டு பின்னூட்டம் கூட போடாம வந்துடுவேன். சாரி சூர்யா.:)).



படத்தோட கதையை பார்க்கத் தூண்டும் விதமா சொல்லி, படம், நடிகர்கள் பற்றிய குறிப்பும் அழகான நடையில் சொல்லி படம் பார்க்க இயலாவிடினும் அந்த நிறைவைத் தரும் எழுத்து சூர்யாவினுடையது. அருணா மேம் பூங்கொத்துனு சொல்றா மாதிரி நான் சொல்றது ஒரு சோறு பதத்துக்கு, இதோ! இது தவிர பட்டர்ஃப்ளை சிறகடிக்க நந்தவனமும் வைத்திருக்கிறார். புத்தகக் கண்காட்சி பற்றிய இடுகை பாருங்கள்.

இன்னோரு மனம் கவர்ந்த ஃபிலிம் காட்டி ஹாலிவுட் பாலா. அக்கரைச் சீமை என்ற இவர் வலைப்பூவில் சினிமாவும் சினிமா மட்டும் என்றாலும், டிக்கட் கட்டணத்துக்கு பதில் மனதைப் பறித்துக் கொள்கிறார். படக்கதையை விட இவர் சொல்லும் விதமும் தகவலும் வித்தியாசம். இதோ ஒரு சோறு பதத்துக்கு.


சோறு சோறுன்னு பறக்கறேன்னு பார்க்கறீங்களா. இதை எழுதும்போது பசி.   சரி இதுக்கும் வலைப்பூ இருக்குமே பார்க்காலாம்னு தேடினா அம்முவின் சமையல் அழைத்தது. சமையலைப் பாராட்டுமுன் இவங்க பெண்ணாதிக்கத்துக்கு கண்டனம் சொல்லியே ஆகணும். அதென்னங்க உங்க தளத்துக்கு பெண்கள்தான் வருவாங்கன்னு தீர்மானம் பண்ணிட்டீங்களா? அவங்கள மட்டும் வாங்க வாங்கங்கறீங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ். பார்க்கப் போனா ஆம்பிளைங்கதான் நீங்க சொல்றத கவனமா பார்த்து சரியா செய்வாங்க. கவுரவப் பிரச்சினை பாருங்க அதான். ஹி ஹி. சமையல் எப்படி இருக்குமுங்கறத அந்த ஃபோட்டோல பார்க்கும்போதே தெரியுது. நீங்களே பாருங்கப்பா.


போன இடுகையிலயே சொல்லி இருக்க வேண்டியவர் ஒருத்தர் இருக்காருங்க. கணினி மென்பொருள்ள பல மென்பொருள் பயன்பாடு, தரவிறக்கம் போன்ற விளக்கங்களோட வேறு சில பொது அம்சங்களும் அழகா தருவாரு. அதாங்க நம்ம வேலன். நகைச்சுவையா புகைப்படத்துக்கு கமெண்ட், புகைப்படத்தில் ஒட்டு வேலைன்னு அசத்தலான ஒரு இடுகை உங்களுக்கு.

நிலா அது வானத்து மேலேன்னா அந்த வலைப்பூவின் பதிவரும் அங்கதான். ஸ்டார்ஜன். கவிதை, கட்டுரை, நகைச்சுவைன்னு எல்லாம் எழுதி இருக்கார். தமிழ்மணம் போட்டியில் இவரின் படைப்பு முதல் சுற்றில் தேர்வாகி இருப்பது ஒன்றே இவரின் எழுத்தின் அங்கீகாரம் சொல்லும். ரெஃபரன்ஸ் புஸ்தகம் புதுப் பதிவர்களுக்கு.

விஜய் கவிதைகள் வலைப்பூவும் சரி, கவிதைகளும் சரி மிக மிக வித்தியாசமான ஒரு அனுபவம். படிக்கப் பிடிக்கும். பாருங்கள் ஒன்றை.

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமாரின் எளிமையான கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. கதையும் கூட. அடிக்கடி எழுதலாமே சரவணக்குமார்:). திருக்கல்யாணம் என்ற அவரின் கவிதை இதோ.

கேசவனின் ஞானமேதவம் என்ற வலைப்பூ ஒரு இன்ப அதிர்ச்சி. ஆன்மீகமும் தமிழும் படிக்க படிக்க ஒரு இனம்புரியா அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக்கும் எழுத்து. ஔவையின் சிலேடை என்ற இவரின் இடுகை படிக்கவே எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது பாருங்கள்.

சேலம் வசந்த் இன்னோரு புது அறிமுகம் வலையுலகுக்கு. நல்ல நடையோடு சுவாரசியமாக எழுதுகிறார். கிதார் கற்றுக் கொண்ட கதையில் இவரின் அலப்பறையை அனுபவியுங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

மேலும் வாசிக்க...

Monday, January 4, 2010

சீனா வான்னா வ(ர்)ரம்...

வணக்கங்க.

என்ன பாக்கறீங்க? நாந்தேன். போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடன்னு நக்கலா ஒரு சொலவட சொல்லுவாய்ங்க. இது அப்படி இல்ல.

ஆண்டாள் கோர்த்த அழகு மாலையை அணிந்து கொடுத்ததால் புறந்தள்ளி வேற மாலை போடப் போனாலும் மறுத்து அதே மாலை வேண்டுமென்ற பரந்தாமன் வரம் மாதிரி மீண்டும் சரம் கோர்க்க, வலைச்சரம் கோர்க்கப் பணித்தார் அய்யா சீனா.


போன வாரம் ஆரம்பத்துல சொன்னேன்ல. தட்றதோட கொட்றதும் தாயுமானவள்னு. கொட்டீட்டா ப்ரியா. அழகா ஒரு நந்தவனம் கட்டி, அதில வகை வகையா பூவெடுத்து சரம் கோக்க வழி செஞ்ச சீனா அய்யாவை சொல்லத் தெரியாதான்னு கொட்டினப்ப உறைச்சது எந்தப்பு.

அதுக்குன்னே வரம் கிடைச்சா மாதிரி இந்த வாரமும் தொடர வாய்ப்பு கிடைச்சது. அதுவும் வலைப்பூவின் வளர்ச்சியும் அதில் பங்காற்றும் பதிவர்களையும் பாராட்டி தினமணியில் வந்த செய்தியை உடனே பகிர்ந்த சீனாவுக்கு நன்றி. அத்தனை பேரும் வலைச்சரத்தால் அறிமுகமானவர்கள். அவர் அழைக்கும்போது....

வரப் போறது பொங்கல். கரும்பு தின்னக் கூலியா? மௌனம் சம்மதம். ஆமாங்க. மிகப் புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் யெஹுதி மெனுஹின். அவரை ஒரு பேட்டில கேட்டாங்களாம். உலகத்தில மிக உயர்ந்த இசை எதுன்னு. அவரு சொன்னாராம், ஒரு ஸ்வரம்(நோட்ஸ்) முடிஞ்சி மறு ஸ்வரம் ஆரம்பிக்கறதுக்கு முன்ன ரெண்டுக்கும் நடுவில இருக்குமே ஒரு அமைதி. அது யாராலையும் கொண்டு வர முடியாது. அதனால அதான் உயர்ந்த இசைன்னு.

மௌனம் இசை. மௌனம் வலி. மௌனம் சந்தோஷம். மௌனம் துக்கம். மௌனம் சக்தி. மௌனம் இயலாமை. மௌனம் காதல். மௌனம் ஊடல். மௌனம் கண்ணீர். மௌனம் களிப்பு. மௌனம் சூன்யம். மௌனம் நிறைவு. எல்லாமுமான அந்த மௌனம் மெல்லக் கசிகையில் இத்தனையும் உணராமல் போக நாம் மரத்துப் போனவர்களா? கசியும் இம் மௌனமுணர்ந்து கசிவோம் கதிருக்கு நன்றி சொல்லி.

ஆ’சிரி’யர்கள் என்ற அறிமுகத்தோடு கேஜி, காசு சோபனா, ராமன், ஸ்ரீராம்,கேஜி.கௌதமன் ஆகியோரின் குழு எங்கள் Blog. நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படியுங்க! படியுங்க!!ன்னு இவங்க வலைப்பூ கூப்பிடும் போது போகாம முடியுமாங்க. சினிமாக் கொட்டகைகள் பற்றிய இவர்களின் கலக்கல் இதோ.

சிங்கக்குட்டி. மாற்ற முடியாது என்ற வார்த்தையைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையூட்டும் எண்ணத்துக்கு சொந்தக்காரர். திருநங்கைகள் குறித்து சார்பற்ற விமரிசனங்கள் வெகு குறைவே. இவரின் இந்த இடுகை இவரின் புரிதலுக்கு சான்றென்பதை விட நமக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை.

மாங்காய் திருடுவது பெரிய கலை. திருடும் வயதில் திருடினால்தான் அழகு. நினைவைக் கிளரும் இந்த இடுகைக்கு சொந்தக்காரன் பவன். ஈழத் தமிழில் மாங்காய் திருடும் கலை நன்றாகவே இருக்கிறது. வலைப்பூக்கு எரியாத சுவடிகள் என்ற பொருத்தமான பெயருக்கே இவனைப் பாராட்டலாம்.

சத்ரியன் குணம் போரிடுதல் மட்டுமல்லவே. காதலும் கூட. இரண்டிலும் மன்னனாக இவரின் படைப்புகள் அட ரகம். ஒன்று இங்கே.

சோலை அழகுபுரம். இதைவிட அழகுப் பெயர் தேடினாலும் கிடைக்காது. வி.பாலகுமாரின் இடுகைகளைத் தேடினால் கிடைக்குது அழகு. அப்படித் தேடியதில் கிடைத்தது இது.
மேலும் வாசிக்க...

Sunday, January 3, 2010

த லாஸ்ட் ஆனா நாட் த லீஸ்ட்...

வணக்கம் நண்பர்களே!

ஆமாமுங்க. திரும்ப துண்டு இடுப்புல கட்டியாச்சிங்க. அதான் மருவாதியா கொஞ்ச பேத்த காட்டி விட்டு போட்டு கும்புடு போட்டு கிளம்பணுமுங்க.

அதென்ன எப்பப்பாரு எங்களை கடைசியாத்தான் சுட்டுவீங்களான்னு புதிய வரவுகள் நினைச்சிடப்படாதே. அதனால அவங்களுக்கு முன்னுரிமை இன்னைக்கு.

சிவாஜி சங்கர்: வித்தியாசமான கவிதைகளின் படைப்பாளி. அதுவரை பொறு என்ற இவரின் கவிதை இவர் கவிதைக் கடலில் நான் ரசித்த ஒரு முத்து.

அவனி அரவிந்தன்
: இன்றைய தேடலின் பரிசு இவரின் வலைப்பூ. பழைய வீடு  என்ற இவரின் கவிதை அசத்தலாய் இருக்கிறது.

ரெத்தின சபாபதி: பலவும் எழுதுகிறார். இயல்பான நகைச்சுவையுணர்வோடு. வாங்க பஜ்ஜி சாப்பிடலாம்  என்றழைத்து இவர் செய்யும் லந்து அபாரம்.

மகேஸ்: இவரைத் தெரியுமுன் இவர் எழுத்து எனக்கு அறிமுகம். மிகச் சிறந்த படைப்பாளி. நல்ல எழுத்தோட்டம். அதிக வேலைப் பளு காரணமாக ஒரு தேக்கம். இந்த வருடம் முற்றுகையிட்டாவது எழுத வைக்க எண்ணம். ஈழம் குறித்த இவரின் ஒரு கனவு என்ற கவிதை சொல்லும் எழுத்தாண்மையை.

ஓரளவுக்கு எனக்களித்த பொறுப்பைச் சரியாகச் செய்திருக்கிறேன் என்ற திருப்தியிருப்பினும் நல்ல தமிழ் எங்கெல்லாமோ படித்து அட என வியந்திருப்பினும் இலக்கியத் தமிழ் கொஞ்சம் மிரட்டியே வைத்திருந்தது.



நட்பாய் கை நீட்டி நான் இருக்கிறேன் வா. இனிமை இனிமை கொட்டிக் கிடக்கிறதிங்கே. தேன் இனிப்பு என்றுச் சொன்னாலும் ஒவ்வொரு பூவின் தேனிலும் இனிப்பிலும் வித்தியாசமிருக்கிறது. நான் காட்டித் தருகிறேன் என்று வந்தவரைக் கட்டிப் போடும் தமிழாசான் முனைவர் இரா.குணசீலன். இவரை அறிமுகப் படுத்துவதில் தமிழ்த் தாய்க்கு என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

சங்கப் பாடல்களை இவர்  நம்மை அக்காலத்துக்கு கடத்திப் போய் எளிய தமிழில் விளக்கி காட்சியை கண்முன் காட்டிவிடுவதால், மனம் லயித்துப் போகிறது. சிறு பிள்ளையும் பெருங்களிரும் என்ற அவரின் இடுகை ஒன்று போதும். ஈரோடு பதிவர் சந்திப்பில் இவரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். கடந்த 10 நாட்களாய் படிக்காதது நிறைய. நாளை முடித்துவிடுவேன் ஐயா.

தமிழை வணங்கியாச்சி. இனிமே கலகலன்னு களம் திரும்பலாம். ஆமாங்க. கடைசியா சொல்லல இதை. முதல் இடுகையிலேயே சொன்னேன்ல. அந்த என் தாய்க்கு சமர்ப்பணம்னு. அப்படித்தான். இதோ வலைச்சரப் பணி முடியுமுன் என்னை எழுத வைத்தவளை, பெருமையாய்க் காட்டுகிறேன். இதோ என் அம்மா, என் ஆசான் என்று.

சிரிக்க சிரிக்க நகபுராணம், தவிக்கத் தவிக்க பயணங்கள் முடிவதில்லை இந்த இரண்டு போதும் இவளின் எழுத்துக்கு கட்டியம் கூற. கலகலப்ரியாவுக்கு முன் ஈழப்ரியாவில் நாங்கள் பகிர்ந்து கொண்ட வலிகள் அதிகம்.

சீனா அய்யா தந்த இந்த வாய்ப்பு எனக்கு இவளுக்கு நன்றி கூறும் வாய்ப்பாகவே கருதுகிறேன்.

இந்த ஒரு வாரகாலத்தில் நான் படித்துப் பிரமித்த பதிவர்களுக்கு நன்றி கூறும் வாய்ப்பாகவும் அமைந்தது மிக்க மகிழ்ச்சி. சொல்லாமல் விட்டது ஏராளம். அந்த படைப்புகள் என்னை மன்னிக்கும்.


விடை பெறுகிறேன் நண்பர்களே.

நன்றி சீனா அய்யா.

அன்புடன்

பாமரன்..(எ)பாலா..(எ) வானம்பாடிகள்.  

(பொறுப்பி: தலைப்பு இங்கிலிபிசுல இருக்கு வரிச் சலுகை கிடையாதுன்னா பரவால்ல. இப்புடித்தான் சொல்லத் தோணுது)
மேலும் வாசிக்க...

Saturday, January 2, 2010

வித விதக் கதம்பம்...

வணக்கங்ணா.

இந்த ஆனை, ரயிலு, ஏரோப்ளேனு, கடலு இதெல்லாம் 2 வயசு குழந்தைன்னாலும் 92 வயசு யூத்துன்னாலும் ஹானு வாய் பொளந்து பாக்காம இருக்க முடியுமாங்ணா. இந்த வலையுலகத்துல சிலது அரிசி மண்டி மாதிரி, பருப்பு மண்டி மாதிரி பெசலிஸ்ட் வலைப்பூ. என்னைய மாதிரி வத்திபொட்டில இருந்து வெங்காயம் வரைக்கும் ஏதோ கொஞ்சம் பலசரக்கு கடை மாதிரி கொஞ்சம் இருக்கு.

பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மாதிரி எல்லாம் கிடைக்கும், எல்லாருக்கும் கிடைக்கும் மாதிரியான வலைப்பூ ரொம்பக் கொஞ்சம். போனா முதல்ல ஒரு பிரமிப்பு. கட்டி வைக்கிற எழுத்து. இப்படி ஒரு ரசனையான பதிவர் டாக்டர் SUREஷ்(பழனியிலிருந்து). சிறிய வயதில் இவர் அடித்த கூத்தைப் பற்றிய பதிவு இது.

அக்த்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதற்கு உதாரண புருஷன் செந்தில்வேலன். இளமைவிகடனில் ஆசிரியர் போல் இவரின் கட்டுரைகள் வராத இதழ்கள் மிகக் குறைவு. சினேகமான இவரைப் போலவே இவர் எழுத்தும். பழனிக்குப் போய் வந்த அனுபவம் சொல்கிறார் படியுங்கள். கடைசி வரி படித்தவுடன் தெரியும் நான் சொன்னது சரிதான் என்று.

இன்றைய தேடலில் நான் கண்டெடுத்த இன்னொரு பிரமிப்பு ஈழப் பதிவர் சந்ருவின் பக்கம். புது வருட வாழ்த்தும் கூட நம்மைச் சுற்றியுள்ள சமூக ப்ரக்ஞையுடன் கூறிய பாங்கு கட்டிப் போட்டது.

எழுத்து மட்டுமேவா பதிவுலகில்? கணினிக்குத்தான் எத்தனை உப கருவிகள் தேவைப் படுகிறது. மருந்தும் கூட. பிரச்சனையில் பயன் படுத்தக் கூடிய இலவச மென்பொருட்கள், ஆலோசனைகள் கிடைக்கும் பதிவும் கூட முக்கிய பதிவே. வடிவேலனின் கணினி மென்பொருள் கூடமும் அத்தகையதே. இந்தச் சுட்டி ஒன்றே போதும் இதன் பின் இருக்கும் இவரின் உழைப்பைக் கூற.

இன்றைய புதியவர்கள் அறிமுகத்தில் சிலர்:

திசைகாட்டியென்ற பெயரில் எழுதும் ரோஸ்விக். எல்லாம் எழுதுகிறார். உறவுகள் குறித்த இவரின் இடுகை ஒரு சாம்பிள்.

ஊடகன் சமுதாயச் சிந்தனையுடைய இளைஞன். பொறுப்பான எழுத்து. தொலைநோக்குப் பார்வை. சமூகத்துக்கு உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்ற அவா. இதுதானே அடுத்த தலைமுறைக்குத் தேவை. கருவறை முதல் கல்லறை வரை என்ற இவரின் இடுகையைப் பாருங்கள்.

இன்றைக்குத்தான் தேனம்மையின் வலைப்பூ பார்த்தேன். கவிதைப் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. நல்ல எழுத்து.

கயல்விழி சண்முகம்
கொங்கு தமிழில் கவிதை, கட்டுரை என்று எல்லாம் எழுதுகிறார். ஏனோ அதிகம் எழுதுவதில்லை. எழுத வைப்போமே. அழகான ஒரு கவிதையைப் படிப்போமா?

நினைவுகளுடன் நிகே என்ற வலைப்பூவின் ஆசிரியர் நிகேதா. வலையுலகுக்கு புது வரவு. தாய்மை என்ற ஒரு கவிதை திறனுக்கு சான்று.

நாளை விடைபெறுமுன் சந்திப்போம் நண்பர்களே.
மேலும் வாசிக்க...

Friday, January 1, 2010

ஆரவாரமற்ற நீரோடைகள்...

வணக்கம். அன்பு நெஞ்சங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.



அண்ணே எவ்வளவு கஷ்டம், சலிப்பு, இயலாமை, ஏமாற்றம், கோபம்னு வலிக்க வலிக்க இருந்தாலும் கடவுளோ இயற்கையோ மனுசப்பயலோ இதையும் தாண்டி மருந்திருக்குன்னு நம்மள சுத்தி மறைச்சி வெச்சிருக்காங்க. சிலது தானே வந்து சேரும் ஆறுதலா. சிலத தேடி நாம போய் அடையணும் தேறுதலா.

நடுராத்திரி அமைதியில் ஓ.எஸ். அருண் கஜல், அதிகாலையில் பிஸ்மில்லா கான் ஷெனாய்ல வைஷ்ணவ ஜனதோ, டி.என்.கிருஷ்ணன் வயலின்ல சங்கராபரணம், ரமணியோட புல்லாங்குழல்ல ஹமீர்கல்யாணி, மாமரத்து குயிலின் குக்கூ, கரையோயரம் வளைஞ்சி ஆத்துக்குள்ள நீண்ட கிளை வளைவில சாய்ஞ்சி உட்கார்ந்து ஆற்றின் சலசலப்புக்கு எதிரா காற்றின் சலசலப்பில் ஆல மரத்து இலையோசை இப்படி நிறைய இறைஞ்சி கிடக்கும்.

எல்லாத்தையும் மறக்கடிச்சி மனசு துடைச்சி விட்டா மாதிரி, ரொம்ப சுத்தமா ஒரு உணர்வு வரும் அனுபவிக்கிறப்ப. சில எழுத்துக்கள் அப்படிப்பட்டது. ஆரவாரம் இல்லாம, வலிக்க வைக்கிற விஷயம் கூட ஒரு டாக்டர் மாதிரி அளவான வலியோட இருக்கும். படிச்சிட்டு மனசார ஒரு புன்னகையோட கை குலுக்கி நன்றி சொல்ல வைக்கிற எழுத்து.

ஒண்ணுமில்லை...ச்சும்மான்னு ரெண்டு கை விரிச்சி அழைக்கிற அண்ணன் அப்துல்லா வலைமனைக்குப் போனா இப்படி கை குலுக்கிட்டு எல்லாம் இருக்குன்னு மனசு லேசாகி வரலாம். தமிழ்மணம் நட்சத்திர பதிவர் ஆனதைப் பத்தி ஒரு இடுகை போட்டிருக்காரு. சிரிப்போட என்னை மாதிரி பல பேருக்கு இவங்கல்லாம் படிக்கறாங்கன்னு ஊக்கம் தர விஷயம் சொல்லியிருக்கார். இது ஒன்னுமில்லையா? இதுதான் எல்லாம். இதுக்குதான் எல்லாம்.

அப்துல்லா  மாதிரியே எழுத்துக்கள் ஒரு மனிதனை சரியாக உருவகப் படுத்தும் பதிவர் முரளிகுமார் பத்மநாபன். மனிதம் தோய்ந்த எழுத்தின் படைப்பாளி போலியற்ற மனிதனாய். ஈரோட்டில் அறிமுகப்படுத்திக் கொண்டபோது என் மனதில் கரம்கூப்ப வேண்டுமெனத் தோன்றியது. அமைதியான பேச்சு. கூட இருப்பது கண்ணியம் என்ற உணர்வு. கட்டிப் பிடி வைத்தியம் என்ற இவரின் இடுகை ஒன்று போதும் இவரை வெளிக்காட்ட.

பதிவுலக தென்றல் இவர். இன்னும் சொல்லப் போனால் பல பதிவருக்கு ஏற்றிவிட்ட ஏணி. ஏனோ எல்லோரும் பின்னூட்ட மன்னர் என்றே அடையாளம் காண்கின்றனர். பின்னூட்டமோ, இடுகையோ அந்தக் கண்ணியம், பிரபலம் கத்துக்குட்டி என்ற பாகுபாடு அற்றவர், பொங்கிவரும் நகைச்சுவை, அண்ணே என்ற ஒற்றை வார்த்தையில் பதிவுலகைக் கட்டிப்போட்டவர். ஜலதோஷத்துக்கு வைத்தியரிடம் போய் வந்த வினையும் நவாஸுடன் அடித்த லூட்டியும் புத்தாண்டு கொண்டாட்டமாய் இதோ. இதற்கப்புறமும் நைஜீரியா இராகவன் என்று பேர் சொல்லுவது ஒட்டுமொத்த பதிவுலகின் சார்பில் நன்றி கூறத்தான். அண்ணே! இனிமேலாவது சும்மா வலைப்பூ வெச்சிருக்கேன்னு சொல்லாதீங்க.

My thoughts da machchi. சிங்கப்பூர் மாணவர் தமிழ்மாங்கனியின் அழகான வலைப்பூ. இடக்கையோர வகைகளைப் பார்த்தால் போதும். இவரின் காதல் கவிதைகள் ஒரு விஷுவல் ட்ரீட். விழி மூடி யோசித்தால் என்ற இவரின் இடுகை ஒரு சாம்பிள்.

புதிய பதிவர்கள் அறிமுகத்துக்காக தேடவேண்டிய அவசியமின்றி ‘பூப்பூக்கும் ஓசை’ என்ற வரி நிஜமாகிவிட்டது வலையுலகில். எப்படியோ ஈர்க்கிறார்கள் இவர்கள்.

பேநா மூடி என்ற பெயரில் எழுதுகிறார் ஆனந்த். திறமை இருக்கிறது. சீரியசாக எழுத முயற்சியிருக்கிறது. நன்றாக எழுதுவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. டிஸ்கி மன்னன். 2009ம் வருடத்தை வழியனுப்பும் ஒரு வாலிபனின் உள்ளம்.

கவிதைக் காதலன் மணிகண்டவேல். நல்ல எழுத்தோட்டம். இயல்பான நகைச்சுவை. என் கேள்விக்கென்ன பொருள் என்ற இவரின் இடுகை ஓர் உதாரணம்.

சிதறல்கள் என்ற வலைப்பூவின் தோட்டக்காரன் றமேஸ் என்ற வித்தியாசமான இந்த புதுசு. புதுவருட வாழ்த்து சொல்லும் இவரை வாழ்த்துவோமே.

இப்போது தான் வலையுலகுக்கு வந்திருக்கும் இன்னொரு நம்பிக்கையூட்டும் கவிஞன். ருத்ரவீணை. மரக்கட்டில் என்ற சின்ன ஒரு கவிதை சொல்லும் அழகு இங்கே.

மீண்டும் ஒரு முறை இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துகளுடன்..

சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Thursday, December 31, 2009

பசி தூண்டும் ருசி...

வணக்கம்ணா. இந்த திருவாதிரை களி புளிக்கூட்டு, அடை அவியல், ஐஸ்க்ரீம் பழ சாலட்னு சில கூட்டணியிருக்கே, அடிச்சிக்க முடியாது இந்தக் கூட்டணியை. இனிப்புக் களிக்கு புளிப்பும் காரமுமா கூட்டு, கார அடைக்கு காரமே இல்லாம அவியல், ஐஸ் குளுத்திக்கு சமனமா பழங்கள்னு ஒரு பக்கம் ஆரோக்கியம், இன்னொரு பக்கம் ருசியும் பசியும் தூண்டும், மற்றொரு பக்கம் மிஞ்சினத விரயம் பண்ணாம சிக்கனம்னு பல நன்மைகள் இருக்கு.

அறிவுப் பசிக்கும் இப்படி தீனி போடுற பதிவர்கள் இருக்காங்க. நாட்டு நடப்பு, சினிமா கதை, பதிவர் உலகம், கலியாணம் காதுகுத்துக்கு வாழ்த்துன்னு ஒரு இடுகையப் படிக்கிறப்ப மனசு நிறைஞ்சி போகும்.தோ! நீங்கள்ளாம் எதுன்னு சொல்றதில்ல. நாந்தான் சொல்லுவேன். சரியா?

முதல்ல தமிழா தமிழா ராதாகிருஷ்ணன் கவனம் வந்திருக்குமே. காலையில ஆஃபீஸ் போற அவசரத்திலகூட  தமிழா தமிழால அருணாசலக் கவிராயர், கம்பராமாயணம்ல ஒரு காட்சின்னு கண்ணுல பட்டிச்சோ அன்னைக்கு பொழுது தமிழாப் போகும். தமிழ்னா அழகுதானே. ஒரு காட்சி இங்க பாருங்க. அய்யாவோட தேங்கா, மாங்கா, பட்டாணிசுண்டல் படிச்சிருப்பீங்களே. படிக்கலைன்னா லீவ் போட்டுட்டு ஒன்னு விடாம படிங்க. வாய்விட்டு சிரிங்க, கவிதைன்னு எது எழுதினாலும் அலப்பறையில்லாத அழகு தமிழ் எழுத்து.

ஒரு விஷயம் சொல்றது பத்திரிகையோ, மனுசனோ யார்னாலும் பளிச்சுன்னு யாரு பக்கமும் சாயாம, நடுனிலையா இருந்திச்சின்னா அது பெரிய விஷயம். கண்ணுமூடிக்கிட்டு இதான் நிஜம்னு சொல்ல முடியும். இருப்பா இருப்பா அதுக்குள்ள நிஜாம்னு திருத்த வேண்டாம். நிஜம்னா இப்படிக்கு நிஜாம் சொல்றதுன்னு சொல்லுவேன். யாராவது  இல்லன்னு சொல்லுங்க பார்க்கலாம். இவரோட ஸ்வீட் காரம் காபி ரொம்ப ஸ்பெஷல். இக்கு புடிச்ச விஷயம் எழுதினாலும் நிஜாம் வார்த்தைக்கு எதிர் வார்த்த ஒன்னு வரமுடியாது.

அண்ணாந்து பார்த்தங்க ஈரோட்டுல ஒருத்தர. அழகான குழந்தை முகம். வெள்ளந்தியா நட்போட ஒரு சிரிப்பு. ப்ரொஃபசராம். என்னைய மாதிரியே பசங்களுக்கும் பளிச்சுன்னு நட்பூ பூத்திருக்கும். அழகான கவிதை, ச‌முதாய  நிகழ்வுகள்ள பொறுப்பான விமரிசனம், சினிமா பத்தி விவரமான தகவல்கள் (விசிலெல்லாம் அடிக்கப்படாது மதுரக்கார தம்பிகளா! ஹெ சொல்லுவோம்ல) அதவிட பத்திக்கிட்டு எரியிற பின்னூட்டங்கள்ள நட்பா கண்டிப்புன்னு ஒரு முதிர்ச்சி. அட உக்காந்து யோசிக்கிற கார்த்திகைப் பாண்டியந்தான்.ப‌டிங்க‌.

ஐந்தரைப்பெட்டி சுபாங்கன். ஈழத்து அழகு தமிழில் இளவட்டங்களை ஈர்க்கும் பதிவர்(இப்பயாச்சும் நானும் யூத்துன்னு ஒத்துக்குங்கப்பா). இவரின் சரக்கு வித் சைடிஸ்  படிச்சாஓ இதத்தான் கிக்கும்பாய்ங்களோன்னு தோணும்.

புதிய‌வ‌ர் அறிமுக‌ம்னு சொல்ல‌ இன்னைக்கு த‌ய‌க்க‌மாதான் இருக்கு. எழுத்து மிர‌ட்டுது.

ப‌லா ப‌ட்ட‌றை: வித்தியாச‌மான‌ பேர். வித்தியாச‌மான‌ சிந்த‌னை. அழ‌கான‌ எழுத்து. சின்னச் சின்னக் க‌விதைக‌ள் ப‌டிச்சிப்பாருங்க‌ சின்ன‌தா அழ‌கா. க‌ட்டுரையெல்லாம் ரொம்ப‌ அழ‌கான‌ ந‌டையில‌ இருக்கும். பெரிய‌ வாச‌க‌க் கூட்ட‌ம் சேர்க்கும் எழுத்து.கூட‌வே ப‌ட்ட‌றைக் க‌வின்னு இவ‌ரோட‌ வ‌லைப் பூவையும் ப‌டிங்க‌.

ஆரூரன்:என்றென்றும் அன்புடன் இவருடைய வலைப்பூ. கொங்கு நாட்டு குசும்பு பேச்சிலும் எழுத்திலும் மிளிரும். சிறுமை கண்டு பொங்குவது கூட சிரிப்பாய் பொங்குவார். ஈரோட்டில் பாரதி என்ற பெயரில் வைத்த ஒரு பொம்மைக்கு ஆசாமி பண்ண அழிம்பைப் பாருங்க. சரளமாக கம்பராமாயணம், திருவாசகம் என்று மேற்கோள் காட்டிப் பேசும் தமிழறிவுக்கு சொந்தக்காரர். இதையெல்லாம் மீறி  நேயமிக்க மனிதன். தன் பள்ளியில் படிக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு பால் பரிந்தூட்டும் தாய்.


ஜிகர்தண்டா கார்த்திக்: அமெரிக்கால படிச்சிட்டிருக்கிற சில்வண்டு. கலியாணத்துக்கு இருக்கிற பய புள்ளைங்கள கிரிக்கெட் வீரரா ஒப்பிட்டு இது பண்ணுற அலப்பறைய பாருங்க. சரியான காமெடி பீசு. நல்ல எழுத்து வளம். விளையாட்டுப் பிள்ளை. ச்ச்ச்செரியாயிடும்.

பின்னோக்கி: ”பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி நடக்கும் போது தவறு களைய உதவும்.” இப்படி ஓர் அறிமுகத்தோடு தொடங்கும் இவர் வலைப்பூ. மனுசன் எதைத்தான் எழுதலை? எல்லாம் எழுதுறாரு. நல்லா எழுதுறாரு. பதிவர்களின் பரிணாம வளர்ச்சின்னு சீரியல் கவிதை ஒண்ணு சாம்பிளுக்கு.


சரிங்ணா. இவங்கள பார்த்து வைங்க. நாளை சந்திப்போம்.

மேலும் வாசிக்க...

Wednesday, December 30, 2009

கவித்துவ அகமுகங்கள்...

பச்சைப் புல் நுனியில் பனி, பால் குடிச்ச குழந்தை வாய் வாசம்,  வரக்கு வரக்குன்னு பசு புல்லு மேயுறப்ப வருமே ஒரு வாசம், சட சடன்னு மண்ணில மழையெழுப்பும் வாசம், பட படன்னு மழையில நனைஞ்ச பறவை றெக்கைய உதறும் சத்தம், ஒதுங்கி நின்ன மரம் மழை முடியவும் இலை உதிர்க்கும் மழைத்துளி, அதிகாலையில் மெல்லக் கசியும் பாட்டு, குளிரில் சுடச்சுட பெருமாள் கோவில் பொங்கல் இதெல்லாம் யாருக்குன்னாலும் படிக்கிறப்பவே ஒரு சில்லிப்பு உண்டாக்குதில்லையா?

எழுத்துல இதுக்கிணையா ஒன்ன சொல்லணும்னா கவிதையத்தான் சொல்ல முடியும். முக்கி, முனகி, யோசிச்சி, சொறிஞ்செல்லாம் இல்லாம மூச்சு மாதிரி அதுவா வரத எழுத்தாக்குற வித்தகர்கள் சிலர பார்ப்பமா?


ஒரு நா இந்த மனுசன் கவிதை கூப்டுச்சு. வலை மனை பேரே அன்புடன் புகாரி.  மனுசன் சுவாசிக்கிறதே கவிதையில போல. அதும் காதல் கவிதை. இவரு வலைப்பூக்கு போய்ட்டு வந்துற முடியாது. பளிச் பளிச்சுன்னு பூத்துட்டே இருக்கும். பாருங்க ஒன்னு ரெண்டு. அப்புறம் இங்கனக்குள்ளயேதான் கெடப்பீங்க.

பசு மாடு இருக்கே கடவுள் படைப்புல ஆகச் சிறந்தது அது. வைக்கோல தேச்சி குளுப்பாட்டி, மஞ்சள் குங்குமம் வெச்சி, மினு மினுன்னு இளம் வெயில்ல நிக்கிறப்ப பக்கத்துல இருந்து பார்த்திருக்கீங்களா? களைச்சி உழைச்சி வந்து அம்மா மடியில முகமழுந்த்த மூச்சு இழுத்திருக்கீங்களா? உயிர்ல உறைக்கும் அந்த வாசனை. சித்தப்பு, மகாப்பா, பா.ரா. இப்புடி எந்த பேர்ல கூப்டாலும் மக்காங்கர சொல்லுல அந்த நேசத்தையும் எழுத்துல தெரியிற அந்த வாசத்தையும் என்ன சொல்ல. பசு மாதிரி மனசு, தானே இவர் கவிதை தேடி அடையுதா இல்லையா?

வானவில் சூரியன் மாதிரி, நட்சத்திரம் மாதிரி எப்பவுமே இருக்கறதில்ல. ஆனா இருக்கிறப்ப என்ன வேலைன்னாலும் விட்டுட்டு அதுல சொக்காத மனுசப்பய உண்டுமா? வலையுலக வானவில் நவாஸூதீன். அவர் எழுத்தின் பதத்துக்கு இந்த ஒரு சோறு  போதாதா?


சுஜாதா கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லுன்னு எழுதினார். ஒரு கவிதை சொல்லுன்னா அது சொல்லும் சூர்யாகண்ணன்னு. கணினில ஒரு பிரச்சனைன்னா சூர்யாகண்ணன்ல தேடினா வழியிருக்கும்னு எல்லாருக்கும் தெரியும். இவருக்குள்ள இருக்கிற கவிஞரை துறுத்தல் ஒண்ணில பாருங்களேன்.

கரிசல்காரன்: அதேதான்! கி.ரா.வ தந்த கோவில்பட்டிக்காரரு. புதுசா எழுத வந்திருக்கார்னா நம்ப முடியல. வலைப்பூக்கு புதுசு. கவிதையா, கட்டுரையா எதுன்னாலும் படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுட்டு கிளம்பறப்ப புகுந்த வீட்டுக்கு போற பொண்ணு மாதிரி மனச அங்க விட்டுத்தான் வரவேண்டியிருக்கு.

அகல்விளக்கு ராஜா: வேலைப் பளு காரணமா அதிகம் எழுத முடியறதில்ல போல. எழுதின வரைக்கும் அட போட வைக்கும் எழுத்து. முயற்சி இருக்கு. திறமை இருக்கு. நல்லா வரும் இந்த புள்ள.


செ.சரவணக்குமார்: செ.சரவணக்குமார் பக்கங்கள் என்ற வலைப்பூவுக்குச் சொந்தக்காரர். பல எழுத்தாளர்களின் அறிமுகத்தை பார்க்கலாம் இவர் பக்கத்தில். என் ராசா கி.ராவை அறிமுகம் செய்த அழகுக் கட்டுரை இதோ.


மேலும் வாசிக்க...

Tuesday, December 29, 2009

அட..மற்றும் அடடே..

வணக்கம்ணே. என்னாடா நேத்து இடுகையில தமிழ் கட்டுரை மாதிரி எழுதிட்டானே வானம்பாடின்னு பாக்கறீங்களா. கோவிலுக்கு போனா மேல் வேட்டிய போர்த்தி ஒரு பயபக்தி வேணுமா இல்லையா? சாமி கும்பிட்டாச்சி. நம்ம பேருக்கு அர்ச்சனைய பண்ணியாச்சி. இனிமே வேல வெட்டிய பார்க்கலாம் வாங்க.

மேல் வேட்டிய மடிச்சி களுத்த சுத்தி போட்டா பந்தாவா அங்கவஸ்திரம், தோள்ள போட்டா நாட்டாமை, இடுப்புல கட்டினா மருவாதி, தலையில சுத்தினா வேலைன்னு ஒரு துண்ட வெச்சே பில்டப்பு குடுக்கறவன் தமிளந்தானண்ணே. அதும் டருக்கி டவல்ல தலப்பா கட்டத் தெரிஞ்சவிய்ங்க நம்மாளுதான? என்ன நான் சொல்லுறது.

தோ! இந்த சிங்கம் களமிறங்கிருச்சேய்னு உசுப்பேத்துற வேலையெல்லாம் வேணாம். வலைச்சரங்கரது ஒரு லைப்ரரி மாதிரி. வலையுலகத்துக்கு புதுசா வந்தவங்கள அறிமுகப் படுத்தறது மட்டுமே நம்ம வேலையில்ல. நாம தேடி கண்டெடுத்த முத்துக்கள இங்க பாருங்கப்பா. இங்க கொட்டி கெடக்கு. படிச்சி பழகு. எழுதி பழகுன்னு காட்டணுமா இல்லையா?

நமக்கு பாருங்கண்ணே கட்டம் சரியா இருந்திருக்கு. பின்ன என்னண்ணே தமிழே தேடி வந்து தட்டி குடுத்துச்சு. பழமை பேசலாம் வாடான்னு வழிகாட்டிச்சி. மண்ண மறக்காம நல்ல தமிழ் எழுத, தமிழ்ச் சுரங்கத்துல தங்கம் தேடி எடுக்கன்னு தம்பி 500 பேழைக்கு மேல சேர்த்து வச்சிருக்கு. ஏண்ணே! மனசு ஓய்ஞ்சிருக்கறப்ப சின்னபய புள்ளைல பண்ண சேட்ட கவனம் வந்த்திச்சின்னு வைங்க, களுத கவலையெல்லாம் கெடாசிட்டு சித்த நேரம் எங்கயோ போயிருவம்லண்ணே! அந்த நனவச் சொன்ன அழகு இருக்கே. நினைச்சாலே தேனுண்ணே. படிக்காதவங்க படிங்க. பளார்னு அர டவுசருக்கு மாறி, டயர தட்டிகிட்டு பழமை கூடவும் பேச்சி கூடவும் ஊர சுத்தி வராட்டி ஏன்னு கேளுங்க.

நம்ம வீட்ல இருக்குற விசுக்கான கூப்டு, ஏ தம்பி இங்கவாடா, திருக்குறள் படிப்போம்னு சொல்லி பாருங்க. வகுத்த வலிக்குதுன்னு சீனு போடும். செல்ல கூப்டு கைல குடுத்து, ஏப்பு, இதில ஒரு திருக்குறள் அனுப்பணும்டான்னு சொல்லி பாருங்க, வெடுக்குன்னு பறிச்சிகிட்டு பர பரன்னு பட்டன தட்டுவான்ல. இந்த டெக்கினுக்குல சங்கப்பாட்டு சொல்ற அழகரு, நர்சிம். எத படிச்சாலும் இப்புடி எழுதமாட்டமான்னு ஏங்க வைக்கிற எழுத்துண்ணே, என்ன சொல்றீங்க?

"எனக்கு எழுத பிடிக்காது. பள்ளியில், தினம் தோறும் ஹோம் வொர்க் செய்யாமல், அடி வாங்கும் கும்பலில் நானும் ஒருவன்.ஆனா இப்ப பல பேரு ப்ளாக் எழுதுவதால், நமக்கும் ஒரு ஆசை."  இப்புடியுமா டரியலா ஒரு முதல் இடுகை போடுவாங்க?  சின்ன வயசு விக்கிரமாதித்தன் கதையில காதல் சொல்ல முடியும்னு இங்கதான் படிச்சேன். எழுத்துல ஒரு ஆசிரியரோட கண்ணியம் தெரியணுமா, மாற்றுக் கருத்தை பக்குவமா சொல்லத் தெரியணுமா இவரைப் படிக்கணும். அது சரின்னு பேர்ல எழுதுனாலும் எது சரியோ அதுதான் சரின்னு சொல்லுற பக்குவம் படிக்க இவரைப் படிச்சே ஆகணும்ணே.

எந்த பந்த போட்டாலும் விளாசுவேன்னு விளாசிட்டு வீசுனேன், மட்டையில பட்டு சிக்சராயிடிச்சின்னு சொன்னா எப்படி இருக்கும். பிதற்றல்கள்னு சொன்னா மட்டும் அப்படி இருக்குமா என்ன. முகிலனின் பிதற்றல்கள் அப்படித்தான். இவரோட க்ரைம் தொடர்கதையை படிச்சிப் பாருங்க. சுஜாதாவோ, பெரிமேசனோ மனசுக்கு புடிச்ச எழுத்தாளர் கவனம் வருவாரு. எந்த இடுகை சொடக்கினாலும் அங்க முகிலன் அப்பா இருப்பாரு.

க‌.பாலாசி: என் சமகால பதிவர். கொங்குநாட்டு குசும்பு மொத்தத்தையும் காண்ட்ராக்ட் எடுத்துட்டாருண்ணே. 25வயசுல  75 வயது பெருசு மாதிரி உலகத்த பார்க்குற பார்வை எங்க படிச்ச பாலாசி. சொல்லிக் கொடேன்! பதிவுலகத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டி பரிசுன்னு ஒரு மெடல் படம் குடுக்குறோமே. அந்த ஒரு நிகழ்வை இவ்வளவு நேர்த்தியா எங்கனயாச்சும் படிச்சிங்களா சொல்லுங்க!

புதுசா எழுத வந்து 'அட' போட வச்ச ரெண்டு மூணு பேர சொல்லியாகணும்.

பிரபாகர்: வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வலைப்பூ தொடங்கி மிகக் குறைந்த காலத்தில் நூற்றுக்கும் அதிகமான இடுகைகள், கவிதைகள்னு அசத்தினவரு . அண்ணன் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டதாக சரித்திரமில்லை. ஒரு கிராமத்து வாலிபனின் அலப்பறைகளை படிப்பவர் சிரிக்காமல் இருக்க முடியாது.

பாலவாசகன்:மருத்துவக் கல்லூரி மாணவன். யாழ்ப்பாணத் தமிழில் உணர்வு சொல்லக் கற்றவர். சிறகுகள் என்ற வலைப்பூவில எழுதுறாருண்ணே. படிக்கையிலயே அந்த மண் வாசனை, கடல் காற்று, அழகு தமிழ் மனச அள்ளிக்கிட்டு போயிருதுண்ணே. சிரிப்போடு வலியும் சொல்லத் தெரிஞ்சவருண்ணே.  இதப் படிச்சி பாருங்கண்ணே. மனசு எங்கிட்டோ ஒரு பக்கம் பிச்சி கொண்டு போயிட்டா மாதிரி வலிக்கும்.

சித்ரா: கொஞ்சம் வெட்டி பேச்சுன்னு ஒரு வலைப்பூ வச்சிருக்காய்ங்க.  எண்ட்ரீயே அசத்தலா ஆரம்பிச்சி அசத்துறவங்க. ஒருக்கா பாருங்க உங்களுக்கே புரியும்.

சரிண்ணே! பொழப்பப் பார்க்கலாம் வாங்க. நாளை சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Sunday, December 27, 2009

தத்தித் தவழ்ந்து முத்தாய்...

அன்னை மொழியே
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!... பெருஞ்சித்திரனார்
.


தமிழ்த்தாயே உன் பாதம் தொழுது இப் பணியேற்கிறேன்.

தத்தித் தவழ்ந்து
தள்ளாடி நடந்து
முத்தாய் முதல் வார்த்தை
சொல்லுங்கால் துள்ளுமனம்

என்பதாக பதிவுலகில் நுழைந்து முதல் இடுகையை பதிப்பித்து முதல் வாசகனாய் படிக்கையில் ஏற்படும் பரவசம் சொல்லத் திறமன்று. மெதுவே மெதுமெதுவே வாசகர்கள் பாராட்டி, திருத்தி, ஆரோக்கியமான ஆலோசனை கூறி நம்மைச் செம்மைப் படுத்துகையில் தேன்கூடாய் ஒரு நண்பர் குழாம் உண்டாகிறது. தேடித் தேடி தேன் சேகரிக்கும் கூடு இப்பதிவுலகம்.

தானும் ஒரு தேனீயாய் அன்பர் சீனா அய்யா அவர்கள் ஒவ்வொரு வலைப்பூவாய் அமர்ந்து தேனுண்டு பாராட்டித் தேர்ந்தெடுத்து வலைச்சரத்தில் பூக்கோர்க்க அழைக்கையில் ஒவ்வொரு பதிவரும் தன் எழுத்துக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக கருதுவதில் வியப்பில்லையல்லவா?

பதிவுலகில் தடம் பதித்து பத்து மாதங்களில் பாமரனாய், பாலாவாய் தற்போது வானம்பாடிகளாய்ச் சிறகடிக்கும் எனக்கு இப்பெரிய அங்கீகாரமளித்த சீனாவின் அன்பு பாலாவும், என் எழுத்தைச் சிலாகித்து, என்பால் அன்போடு பாலாண்ணனாய், தந்தையாய், நண்பனாய், சிலர் ஆசானுமாய் என்னை அழைக்கையில் கண் பனிக்கிறது.

தயங்கித் தயங்கி நான்கு வரி கிறுக்கித் தாயிடம் நீட்டும் குழந்தையிடம் மனம் நோகாமல் உச்சி முகர்பவள் தாய். தலை கோதி, தவறு சுட்டி, ஊக்கமளித்து சில நேரம் குட்டி ஒரு சிறுபுன்னகையுடன், ம்ம் என்னும் நேரம் ஆசானுமாய் ஆகிறாள். அந்த என் தாயுமானவளுக்கு என் அங்கீகாரம் சமர்ப்பணம்.

பதிவுலகம் நுழைந்த போது, என் மன அழுத்தத்தின் வடிகாலாய் பாமரன் பக்கங்கள்... என்ற வலைப்பூ தொடங்கி எழுதத் தொடங்கிய போது ஈழத்துச் சொந்தங்களின் துயரமே தினசரி வலியாகிப் போனது. செய்திகள் தேடித் தேடி அழுது, சிரித்து, துடித்த போது என்னையறியாமல் சிறுவயதில், பத்திரிகை படிப்பவர்கள் தலைப்பு படித்தவுடன் பளிச்சென்று கூறும் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கம் நறுக்குன்னு நாலு வார்த்தையாய் தொடரானது.

வெகு விரைவிலேயே எனக்கொரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்து இந்த ஒரு தலைப்பிலேயே நூறு இடுகைகளைப் படைத்திட ஊக்கமானது மட்டுமின்றி, இப்போதும் ஏன் இதைத் தொடர்வதில்லை எனச் சிலர் சிலாகிக்கும் அளவுக்கு தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

இடையிடையே கவிதை என முயல்கையில் காசி ஆனந்தனின் கவிதையோடு ஒப்பிட்டு தம்பி பழமைபேசி நறுக்கவி பாலாண்ணே என்றழைத்தபோதும், வலைச்சரத்தில் பலமுறை சுட்டப்பட்ட போதும் இதையும் தாண்டி எழுத முயற்சிக்க ஊக்கமானது.

என் படைப்புக்கள் எல்லாமே என் குழந்தைகள்தாம் எனினும், சான்றோனெனக் கேட்ட தாயாய்ச் சிலிர்க்க வைத்த சிலவற்றைச் சுட்ட விழைகிறேன்.

1.ஈழப் போரின் உச்சத்தில் கேட்பாரற்று தனியே கையில் கட்டுடன் கண்ணால் துளைத்த இந்த குழந்தையிடம் பாவ மன்னிப்பு கேட்ட என் கவிதை.
2.பதிவர் கூடலில் வடிவேலு என்ற என் தொடர் இடுகை
3.யூத்ஃபுல் விகடனிலும் வெளியான என் கதை பசி
4.விதிகள் என்ற பெயரில் நீதி மறுக்கப்படும் அலுவலக நடைமுறை அவலம் குறித்த என் வருத்தத்தின் வெளிப்பாடு.
5.ஒரு காதல் முயக்கம்

சுய அறிமுகம் போதுமே! நாளை சந்திப்போம் நண்பர்களே.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது