07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label Riyas-SL. Show all posts
Showing posts with label Riyas-SL. Show all posts

Friday, January 25, 2013

எனக்கு ஐம்பது ரூபாய் கடன் தர முடியுமா?

இன்று முதலில் ஒரு குட்டிக்கதை படித்துவிட்டு பின்பு அறிமுகங்களுக்கு செல்வோமா..

அப்பா, எனக்கு ஐம்பது ரூபாய் கடன் தர முடியுமா?



ஒரு மனிதர் வேலை செய்துவிட்டு மிகுந்த களைப்புடன் தாமதமாக வீட்டிற்கு வந்தார். அவரை எதிர்பார்த்து அவரது மகன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தான்.

மகன்: அப்பா, எனக்கு உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க முடியுமா?

தந்தை: ஓ, நிச்சயமாக. என்ன கேள்வி அது?

மகன்: அப்பா, நீங்கள் ஒரு மணித்தியாலத்திற்கு எவ்வளவு உழைக்கின்றீர்கள்?

தந்தை: அது உனக்குத் தேவையில்லாத விடயம். நீ ஏன் இது போன்ற விடயங்களை கேட்கின்றாய்?

மகன்: எனக்கு அதனை அறிந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது. தயவு செய்து நீங்கள் ஒரு மணித்தியாலத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள் என்று கூறுங்கள்.

தந்தை: நீ அறிந்துகொள்ள வேண்டுமானால், நான் ஒரு மணித்தியாலத்திற்கு நூறு ரூபாய் சம்பாதிக்கின்றேன்.

மகன்: ஓ (தலையை சாய்த்தவாறு)

மகன்: அப்பா, எனக்கு ஐம்பது ரூபாய் கடன் தர முடியுமா?

தந்தை கோபமடைந்தார்.

தந்தை: நீ பணம் கேட்பதற்கான காரணம் அதன் மூலம் அற்பமான விளையாட்டுப் பொருட்களை அல்லது வேறு ஏதேனும் வாங்குவதற்கே ஆகும். நீ நேராக உன்  அறைக்கு சென்று. படுக் கையிலிருந்து நீ ஏன் இவ்வாறு சுயநலவாதியாக இருக்கின்றாய் என்று சிந்தித்து பாரு. நான் ஒவ்வொரு நாளும் மிகவும் கஷ்டப்பட்டு உழைப்பது உங்க ளுடைய இந்த சிறுபிள்ளைத்தனமான செயல்களுக்காகவா?

அந்த சிறுவன் மெதுவாக அவனுடைய அறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டான். அந்த மனிதர் உட்கார்ந்து சற்று முன்னர் அந்த சிறுவன் கேட்ட கேள்விகளுக்கு தான் கோபப்பட்டது பற்றி சிந்திக்கலானார். அவன் என்ன வாங்குவதற்கு பணத்தைப் பெறுவதற்காக இத்தகைய கேள்விகளைக் கேட்கத் துணிந்தான்?

ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் அந்த மனிதர் அமைதியடைந்து சிந்திக்க லானார்.

சிலவேளை அவனுக்கு ஏதாவது சில முக்கியமான பொருட்கள் (ஐம்பது ரூபாய்க்கு) வாங்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். அவன் இவ்வாறு அடிக்கடி பணம் கேட்பவன் அல்ல. அந்த மனிதர் சிறுவனின் அறைக்குச் சென்று கதவைத் திறந்தார்.

தந்தை: மகன், நீ தூங்குகின்றாயா?

மகன்: அப்பா, நான் தூங்கவில்லை. விழித்தே இருக்கின்றேன்.

தந்தை: நான் சற்று முன்னர் உன்னோடு கடுமையாக நடந்துகொண்டேனோ என்று சிந்திக்கின்றேன். இந்த நீண்ட நாளில் எனது சிக்கல்களை உன் மீது பிரயோகித்துவிட்டேன். இதோ நீ கேட்ட ஐம்பது ரூபாய்.

அந்த சிறுவன் எழுந்து நேராக உட்கார்ந்து புன்னகைத்தான்.

மகன்: நன்றி அப்பா

பிறகு அவன் அவனுடைய தலையணைக்குக் கீழால் கையைவிட்டு சுருங்கியி ருந்த சில பணத் தாள்களை எடுத்தான். தந்தை சிறுவனிடம் ஏற்கனவே பணம் இருப்பதைக் கண்டார். மீண்டும் அவருக்கு கோபம் ஏற்பட ஆரம்பித்தது. அந்தச் சிறுவன் மெதுவாக அவனுடைய பணத்தை எண்ண ஆரம்பித்தான். பின்னர் அவனுடைய தந்தையைப் பார்த்தான்.

தந்தை: உன்னிடம் பணம் இருக்கும்போது இன்னும் எதற்குப் பணம்?

மகன்: ஏனென்றால் எனக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. இப்போது போதும்.

அப்பா, இப்போது என்னிடம் நூறு ரூபாய்கள் இருக்கின்றன. இப்போது எனக்கு உங்களுடைய நேரத்திலிருந்து ஒரு மணித்தியாலத்தை வாங்க முடியுமா? தயவு செய்து நாளைக்கு நேரத்துடன் வீட்டுக்கு வாருங்கள். நான் உங்களுடன் இரவுணவை சாப்பிடுவதற்கு விரும்புகின்றேன்...!!

படித்ததில் பிடித்தது சில மாற்றங்களுடன்..


இனி இன்றைய வலைச்சர அறிமுக பதிவுகள்.



Cheers with Jana என்ற தளத்தில் தன் சகலகலா தேடல்களை ரசனைகளை அழகாக எழுதி வருகிறார் ஜனா அண்ணா. பதிவெழுத தொடங்கிய காலத்திலிருந்து இவரின் நிறைய பதிவுகளை தேடித்தேடி படித்திருக்கிறேன். அவ்வளவு ஈர்க்கும் வசன நடை. அன்மைக்காலமாக வேலைப்பளுவால் பதிவெழுதுவதை குறைத்துக்கொண்டுள்ளார். The color of paradise, Children of haven, The father என்ற மஜித் மஜிதியின் அற்புதமான மூன்று ஈரானிய படங்களைப்பற்றி ஓரே பதிவில் சொல்லிருந்தார்.. அப்பதிவை படித்தது முதல் ஈரானிய திரைப்படங்கள் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு பல படங்களை தேடி பார்த்திருக்கிறேன். அந்தப்பதிவு. 

நிஜாம் பக்கம் நகைச்சுவை,அனுபவம்,கதைகள்,பத்திரிகை செய்திகள் என இது ஒரு பல்சுவைத்தளம். பத்திரிகைகளில் இடம்பெறும் கேள்வி பதிள் பக்கங்களில் இவருடைய ஆக்கங்களும் நிறைய வந்திருக்கிறது அவற்றையும் நிறைய பதிவாக இட்டிருக்கிறார்.சுஜாதாவிடம் சில கேள்விகள் படித்து ரசித்த நகைச்சுவைகளும் பகிர்ந்திருக்கிறார்.

நீரோடை தளத்தில். அன்புடன் மலிக்கா, இறைவனை நேசி இன்பம் பெறுவாய், எண்ணங்கள் தெளிந்த நீராய் ஓடட்டும் அது நம் ஆன்மாவை அழ்காக்கட்டும் என்ற அழகிய வார்த்தைகளோடு அழகழகான கவிதைகள் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

இவர், சைக்கிள்காரன் என்ற தளத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் எந்த திரட்டியிலும் இணைக்காமல் கவிதை கட்டுரை சினிமா இசை என தன் ரசனைகளை அழகாக பதிந்து வருகிறார். இவரின் பதிவுகளில் எல்லாமே என்னைக்கவர்ந்ததுதான் அதிலும் ஆதாமிண்டே மகன் அபுl என்ற மலயாள படத்துக்கான இவரின் பார்வை மிகச்சிறப்பு. இரவு வேலை செய்பவர்களின் மன உணர்வை இந்த குட்டிக்கவிதையில் நச் என சொல்கிறார்.

தனிமரம் தளத்தில் சிவநேசன் அண்ணன் உருகும் பிரெஞ்சுக்காதலியோடு தொடர் கதை பேசி இப்போதுதான் முடித்திருக்கிறார். தொடர் கதைகள், அனுபவம் என சிறப்பாக எழுதக்கூடியவர். இவரின் மலையகத்தில் முகம் தொலைத்தவன் தொடரும் நிறைய பேரால் பாராட்டப்பட்டது.

சிறுவர் உலகம் என்ற தளத்தில் காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்கள் மிக அருமையான சிறுவர் கதைகள் நீதிக்கதைகள் எழுதி வருகிறார். எல்லாமுமே குழந்தைகள் படிக்கவேண்டிய கதைகள்தான். 

 
மேலும் வாசிக்க...

Wednesday, January 23, 2013

உடைத்தெறியப்படும் மௌனங்கள்!


புதிய கட்டடங்கள், அழகு பாதைகள்
புதிய சட்டங்கள்..
எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன
உனது வீடு மட்டும்
அப்படியே இருக்கிறது 
ஓலைக் கூரையோடு -
நிறைவேறாத உனது கனவு போல


-அஷ்ரப் சிஹாப்தீன்

இனி இன்றைய எனது அறிமுக பதிவுகளை பார்ப்போம்!

சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு என்ற பக்கத்தில் நண்பர் சமுத்ரா எழுதி வருகிறார். நிறைய பதிவர்களைப்போல் சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று எழுதாமல் நிறைய அறிவியல் கட்டுரைகள் அணு அண்டம் அறிவியல்! எழுதுகிறார் இது போக வாராவாரம் பல விடயங்களை தொகுத்து  கலைடாஸ்கோப்  எனும் பல்சுவை தொகுப்பையும் எழுதுகிறார். அவ்வப்போது கவிதையும் எழுதுகிறார்

சே.குமார் மனசு என்ற தளத்தில் அனுபவம்,ரசித்தது,பிடித்தது,கவிதைகள் என நிறைய விட்யங்களை பகிர்ந்து வருகிறார். மற்றவர்களின் பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் போட்டு ஆதரவும் தெரிவிக்கிறார்.அன்மையில் வட்டியும் முதலும் ராஜு முருகனின் கட்டுரையொன்றை பகிர்ந்திருந்தார் படிப்பதற்கு இதமாக இருந்தது. இவ்வளவு பேரும் எங்க போறாங்க?

பாலா அவர்கள் பாலாவின் பக்கங்கள் என்ற தளத்தில் அருமையான பல பதிவுகளை எழுதியிருக்கிறார் சினிமா,அரசியல்,அனுபவம் என அதிலும் கிரிக்கெட் மீது கொண்ட காதலால் நிறைய விளையாட்டு பதிவுகளும் எழுதியிருக்கிறார் அவை யாவும் என்னை மிக கவர்ந்தவை. எப்படியிருந்தவங்க இப்புடி ஆயிட்டாங்களே என தற்போதைய சில தமிழ்சினிமா இயக்குனர்கள் பற்றியும் சுவையாக எழுதியிருக்கிறார்.கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. 

நிசப்தம் என்ற தளத்தில் அரசியல்,அனுபவம் மற்றும் வாழ்க்கையில் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்களை பற்றியும் மிகச்சிறப்பாக பதிந்து வருகிறார் நண்பர் வா.மணிகண்டன் இவர் எழுதியதில் மிகப்பிடித்த இரண்டு பதிவுகள்   முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க  முஸ்லீம்ஸ் ஏமாத்தமாட்டாங்க.

பட்டிக்காட்டான் பட்டணத்தில்   இது நண்பர் ஜெய்யின் தளத்தின் பெயர். அனுபவம், நகைச்சுவை காமெடி கும்மி என நகைச்சுவை மழை பொழிந்து கொண்டிருக்கிறார்.. தனது சின்ன வயது பாடசாலை அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய பதிவு விழுந்து விழுந்து சிரிக்க வைக்ககூடியது எனக்கு மிகப்பிடித்த பதிவுகளில் ஒன்று நான் நாலாப்பு பெயிலு.

கசியும் மௌனம் ஈரோடு கதிர் நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். இவரின் அழகிய தமிழுக்கும் கவிதைக்கும் நச் என்றிருக்கும் கீச்சுகளுக்கும் நான் ரசிகன். ஒரு விமான விபத்தில் சிக்கி யாருமற்ற தீவொன்றில் தனியாளாய் நான்கு வருடங்கள் தனிமையில் வாழ்க்கையை நகர்த்தியவனின் உண்மையை கதை சொல்லும் cast away என்ற திரைப்படத்தை எவ்வளவு அழகாக விபரிக்கிறார் இங்கே. தனிமையின் மொழி-CAST AWAY!


மேலும் வாசிக்க...

Tuesday, January 22, 2013

நனைந்துவிட்டேன்,சற்றென்று பெய்த மழையில்!


சற்றென்று என்னை
கடந்து சென்று விடுகிறாய்
அங்கேயே சுற்றித்திரிகிறது மனசு
உன்னை ரசித்தபடியே
முன்னறிவிப்பில்லாமல்
வந்த மழையில்
ரசித்துக்கொண்டே நனையும்
விவசாயி போல!!

இது நான் கிறுக்கினது! இது போன்ற அபாயங்கள் இன்னும் ஒரு வாரகாலத்திற்கு உங்களை எதிர்பாராமல் தாக்கலாம் எதற்கும் தயாராக இருந்து கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையோடு இன்றைய வலைச்சரத்தினை ஆரம்பிக்கிறேன். இன்று நான் படித்து ரசித்த/பிடித்த சில பதிவுகளை இங்கே அறிமுகம் செய்ய இருக்கிறேன். இவற்றை ஏற்கனவே நீங்கள் படித்திருக்கலாம். எல்லோரும் பிரபலமானவர்கள்தான்.

வானம் வெளித்த பின்னும் என்ற தளத்தில் கவிதைகளால் கதை பேசுபவர் ஹேமா அக்கா. யாழ்ப்பாணத்தில் பிறந்து யுத்தம் எனும் ராட்சசனால் துறத்தப்பட்டு தற்பொழுது சுவிசில் வசித்து வருகிறார். அவருடைய கவிதைகள் ஒவ்வொன்றும் உணர்வுக்குவியல்கள். அவரின் இன்னுமொரு தளமான உப்புமட் சந்தியில் 1970 களில் இலங்கையில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் போதான மக்களின் நிலைமைகளை அழகாக விபரித்திருந்தார் பாணும் பஞ்சமும் ஸ்ரீமா அம்மாவும். கனத்த மனதுடனேயே படிக்க வேண்டியிருந்தது.

மாணவன் என்ற வலைப்பதிவை நீங்கள் பலர் அறிந்திருக்கலாம. அதில் மாணவன் என்ற பெயரில் எழுதி வரும் நண்பர் வரலாற்றில் சாதனைப்படைத்த பல வரலாற்று நாயகர்களை  பற்றியும் சிறப்பாக பதிந்து வருகிறார். படிக்கும் மாணவர்களுக்கும் வரலாற்றை தெரிந்துகொள்ள முற்படுபவர்களுக்கும் இது பயனுள்ள நிறைய தகவல்களை சொல்லும் தளமாகும். இது இது தான் சிறந்தது என குறிப்பிட்டு சொல்ல முடியாது எல்லாம் சேமித்து வைக்க வேண்டிய முத்துக்கள்தான்.

சிறந்த எழுத்து என்பது படிக்கும் போதே மனதில் பதிந்து உண்ர்வுகளில் நுழைந்து விட வேண்டும்.Warrior என்ற பக்கத்தில் தன் சிறப்பான எழுத்தாற்றலால் அற்புதமான பல பதிவுகளை எழுதிவரும் தேவா அவர்களை சிறந்த எழுத்தாளர் என்ச்சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை! அவர் எழுதியதில் எல்லாமே பிடித்தது என்றாலும் மிகப்பிடித்ததில் சில.
விடுமுறை நாளொன்றில்.
வாய்மை
 வானமகள் நாணுகிறாள்

இன்று உலகில் ஒவ்வொருநாளும் பல தற்கொலைகள் நடந்தவண்ணமே இருக்கின்றன. அவற்றுக்கான காரணங்கள் வெவ்வேறு விதமானவை! இவற்றில் பெரிய அழுத்தங்களால் அவமானங்களால் தற்கொலை செய்வோரை விட்டுவிடுவோம்! சின்ன சின்ன காரணங்களுக்காக அப்பா அம்மாவுடன் கோபித்துக்கொண்டெல்லாம் தற்கொலை செய்வோரின் மனநிலையைத்தான் புரிந்து கொள்ளமுடியவில்லை.அப்படி தன் உயிரை மாய்த்துக்கொண்டுதான் அவர்கள் பக்க நியாயங்களை புரிய வைக்க வேண்டுமா? அதன் பின் சம்பந்தப்பட்டவர்கள் மனதில் இவர்கள் விட்டுச்செல்வது அழிக்க முடியாத வேதனை அல்லவா? என்னைச்சுற்றியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. என் மாமா ஒருவர் (அம்மாவின் தம்பி) தந்தை அடித்துவிட்டார் என்ற ஓரே காரணத்துக்காக தன்னுடைய 16 வயதில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாராம்!, ஊரில் என்னுடன் கூடபடித்த மாணவியொருத்தி சிறிய காதல் பிரச்சினைக்காக தற்கொலை செய்துகொண்டால் அதுவும் 16 வயதில்! என் நண்பனொருவனும். தன் மனைவியும், அம்மாவும் எப்போதும் சண்டைபிடித்துக்கொள்கிறார்களே என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டான் 6 மாத குழந்தை இருக்கையில்! ஏன் இப்படி? இதெல்லாம் தீர்க்க முடியாத பிரச்சினைகளா? இதெற்கெல்லாம் தற்கொலைதான் தீர்வா? என்று பல முறை நான் சிந்தித்ததுண்டு. இதே மனநிலையில் மயிலிறகு என்ற பக்கத்தில் எழுதும் மயிலன் அவர்களும் ஒரு பதிவெழுதியிருக்கிறார்.கவனத்திற்குரிய இரங்கற்செய்தி. அவர் ஒரு டாக்டர் என்பதால் அவர்களின் மனநிலையையும் அவற்றுக்கான காரணங்களையும் அருமையாக விபரிக்கிறார்.

ஹுசஸனம்மா அவருடைய தளத்தில் மிக சிறந்த கருத்துக்கள் கொண்ட அருமையான பதிவுகள் எழுதி வருகிறார். அவரின் டிரங்குப்பொட்டி   பல உலக நடப்புகளையும் சொல்லக்கூடியது. சுவாரஷ்யமான சிறுகதைகளும்   எழுதுகிறார். இன்னும் பலன் தரக்கூடிய பதிவுகள் பலவும் அங்கே கானக்கிடைக்கும். சின்ன  சின்ன வலிகளுக்கெல்லாம் வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்துவதால் ஏற்பாடும் தீங்குகளை பற்றியும் சொல்கிறார். வலியெனும் வரம்.

கோமாளி என்னும் தளத்தில் எழுதிவரும் நண்பர் செல்வாவின் நகைச்சுவை கதைகள் எனக்கு மிகப்பிடித்தமானது. இப்போது அதிகமாக எழுதக்கானோம்! அவர் எழுதிய மீண்டும் ஒரு எலி என்ற சிறுகதை நான் இதுவரை படித்த நகைச்சுவை சிறுகதைகளில் மிகச்சிறந்தது என்பேன். நகைச்சுவை மற்றும் சிறுகதை விரும்பிகள் சென்றுவாருங்கள். இன்னும் ஒரு எலி.
மேலும் வாசிக்க...

Monday, January 21, 2013

மழை தருமோ இந்த மேகம்!


பல பிரபல பதிவர்கள் ஆசிரியராய் பொறுப்பேற்று மிகச்சிறப்பாய் நடத்திவரும் வலைச்சர உலகிறது இந்த சின்னவனையும் தேர்ந்தெடுத்த ஐயா சீனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஏதோ விளையாட்டுத்தனமா கிறுக்க ஆரம்பிச்சி இன்றைக்கு இங்கே வந்து நிற்குது. இதுவரை 250 பதிவுகள் வரை எழுதியிருந்தாலும் சிறப்பாக எந்த பதிவும் எழுதிடாத உணர்வு! படிக்கும் காலங்களிலிருந்தே நிறைய வாசிக்க பிடிக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களோ,நாவல்களோ வாங்குவதற்கு வசதியில்லாததால் தினசரி பத்திரிகைகள்தான் படிக்க முடிந்தது. அதில் வரும் ஆக்கங்களை படிக்கும் போது நாமும் இது போல் கட்டுரை,கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல். அவ்வாறு ஆசையிருந்தாலும் நாம் எழுதுவதை மற்றவரைக்கொண்டு எப்படி படிக்க வைப்பது என்ற கேள்வி. இதனால் எழுதிய நிறைய ஆக்கங்கள் டயரிகளிலும்,பாடப்புத்தகங்களிலும் மட்டுமே யார் கண்ணிலும் படாமல்.

இன்றைய இணைய உலகின் வளர்ச்சியாலும் கூகுல் தந்த இலவச பிளாக்கர் வசதியாலும் நம் எண்ணங்களையும்,ஆசைகளையும் எழுத்தின் மீதான ஆர்வத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள ஏதுவாகயிருக்கிறது. இனி நான் எழுதியதில் எனக்குப்பிடித்த சில பதிவுகளை இங்கே அறிமுகம் செய்கிறேன். உங்களுக்கும் பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில்!

பதிவெழுத தொடங்கிய காலத்தில் அதிகமாக கவிதை  என்ற பெயரில் கிறுக்கியிருக்கிறேன். இப்போது அந்த இலக்கிய சேவையை குறைத்துக்கொண்டுள்ளேன். காரணம் தமிழ் இலக்கிய உலகிற்கு என் கவிதைகளால் ஏதும் கெட்ட பெயர் வந்துவிடக்கூடாதென்ற எண்ணத்தில்!
ஆனாலும் விடுவதில்லை அவ்வப்போது கிறுக்குகிறேன்.

சின்ன வயதில் நடக்கும் சில சம்பவங்கள் என்றைக்கும் மறக்காமல் நம் மனதோடே பயணிக்கும் அப்படியொரு ஒரு சம்பவம்தான் இது  நான் ஒரு கொலை செய்திட்டேன்! நான் ஒரு கொலை பண்ணிட்டேன். பயப்படாதீங்க! உள்ள போய்த்தான் பாருங்களேன்.

நிறைய பேர் சிறுகதை எழுதுகிறார்கள். நாங்களும் சிறுகதை எழுதுவம்ல என்று கிளம்பியதன் விளைவு இது. விடியல்-சிறுகதை  ஆனாலும் நிறைய பேர் நல்லாருக்குன்னு சொன்னாங்க.

விவசாயிகள் உலகிற்கே உணவுற்பத்தி செய்பவர்கள் ஆனால் அவர்கள் வாழ்க்கை என்றும் வறுமையில்தான்.! விவசாய பூமியில் பிறந்து வளர்ந்ததால் அவர்களின் கஷ்ட நஷ்டங்களில் எனக்கும் பங்குண்டு அவர்களின் வாழ்க்கையை பற்றியும் எழுதிட ஆவலில் எழுதியது. மழை தருமோ இந்த மேகம்.

இரவையும் இருளையும் ரசிப்பவன் நான். அது சம்பந்தமாக இரவு-இருள்-உறக்கம்-அலாரம்!

அதிஷாவின் "தெருநாய்கள்" சிறுகதையை படித்துவிட்டு புலியைப்பார்த்து சூடுபோட்டுக்கொண்ட எலியாக தெருநாய்கள்! என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக ஈழப்போராட்டமும் இனப்படுகொலைகளும்.

நான் பார்க்கும் நல்ல திரைப்படங்களைப்பற்றிய என் அனுபவங்களை பகிர்ந்திடும் ஆசையில் சில திரைப்படங்களை பற்றியும் எழுதியுள்ளேன்.

The Gods Must Be Crazy.html

Hotel Rwanda

Baran உணர்வுகளை வருடிய ஓர் ஈரான் சினிமா.

ரேணிகுண்டா- வன்முறையும் கவிதையாக.

தாரே சமீன் பர்

இத்தோடு எனது சுயபுராணத்தை முடிக்கிறேன். நாளை முதல் எனக்குப்பிடித்த சில பதிவுகளை அறிமுகம் செய்ய இருக்கிறேன். எல்லாரும் பதிவுலகில் அறிமுகமானவர்கள்தான். அவர்களின் எழுத்தில் என்னைக்கவர்ந்த விடயங்களை சொல்லவிருக்கிறேன். உங்கள் ஆதரவை வேண்டியவனாய் விடைபெறுகிறேன் நன்றி.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது