”இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞன் நெரூதாதான்” -காப்ரியேல் கார்சியா.
நெஃப்தாலி 1904 ஜூலை12ல் பிறந்தான்.தனது 13வது வயதில் நெஃப்தாலி உள்ளூர் நாளிதழான “லா மனானா”வில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தான். நெஃப்தாலியின் முதல் கவிதையும், அதில்தான் வெளியாகியது. 1920களில் “செல்வா ஆஸ்த்ரால்” எனும் இலக்கிய ஏட்டில் தொடர்ந்து கவிதைகளை எழுத ஆரம்பித்தான். இதைத் தொடர்ந்து “அந்தி வெளிச்சம்” என்ற தனது முதல் கவிதைத்தொகுப்பை நெஃப்தாலி வெளியிட்டான். இதற்கு அவன் தனது அப்பா வாங்கிக் கொடுத்திருந்த கடிகாரத்தையும், அச்சுக்கூலிக்காக கொடுத்திருந்த வீட்டுச் சாமான்கள் சிலவற்றையும், கவிஞன் என்று பொது அரங்கில் அறிமுகப்படுத்தப் படும் போது போட வைத்திருந்த தனது ஒரே ஒரு கோட்டையும் விற்க வேண்டியிருந்தது.
செக்கோஸ்லோவியக் கவிஞரான யான் நெரூதாவின் நினைவாக நெப்தாலி தனக்கு 'பாப்லோ நெரூதா” என்ற புனை பெயரை வரித்துக் கொண்டான். 1924ல் வெளியான “இருபது காதல் கவிதைகளும், ஒரு நிராசைப் பாடலும்”என்ற தொகுப்பு நெரூதா என்ற கவிஞனை உலகுக்கு அறிமுகப் படுத்தியது. அவரை மாபெரும் புகழுக்குள்ளாகியது. இன்றும் அதிகம் சிலாகிக்கப்படுவதும், அதிகப் பதிப்புகளில் வெளியானதும், அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதுமான நூல் அவரது இந்த இருபது வயது படைப்புதான்.
1927 முதல் 35 வரையிலான எட்டாண்டுகள் இவர் பல நாடுகளில் பணியாற்றினார். “தனிமைத் துயரங்களின் காலம்” என்று நெரூதா கசந்து கொள்ளும் இந்தக் கட்டத்தில்தான் “பூமியின் வசிப்பிடம்” கவிதைகள் உருவாயின. 1936ல் ஸ்பானிய உள்நாட்டுப் போர் வெடித்தது. லோர்க்கா படுகொலை செய்யப்பட்டார். தன்னுணர்வும், சர்ரியலிச அணுகுமுறையும் மையமாயிருந்த நெரூதாவின் படைப்பு மெல்ல அரசியல் சார்ந்து இயங்க ஆரம்பித்தது. “என் இதயத்தில் ஸ்பெயின்” என்ற கவிதைத் தொகுப்பும் வெளியானது. யுத்தத்தால் அடைக்கப்பட்டிருந்த குடிமக்களின் நாவில் நெரூதாவின் கவிதைகள் மொழியாயின.
”காண்டோ ஜெனரல் ஆஃப் சிலி” என்ற அவரது நீண்ட கால முயற்சி 1950ல் அப்போது வெளியிடப்பட்டது. மெக்ஸிகோ உள்ளிட்ட பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் வரவேற்புப் பெற்ற இந்த நூல் நெரூதாவின் தனது சொந்த நாடான சிலியில் தடை செய்யப் பட்டது. தனது அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாய் சொந்த நாட்டிலேயே இரண்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை நடத்தினார்.1954ல் வெளியான “திராட்சையும் காற்றும்” தொகுப்பு அவரது தலை மறைவுக்கால நாட்குறிப்பு என்றே குறிப்பிடப்படுகிறது.
1958ல் வெளியான “எக்ஸ்ட்ராவகாரியோ” நெரூதாவின் இன்னொரு பரிமாணத்தை முன்வைத்தது. சார்புநிலை அரசியலால் மனங்கசந்து போன போன கவிஞனின் துக்கச்சாயலை வெளிப்படுத்தியது.இதைத் தொடர்ந்து இவர் மேற்கொண்ட பயணங்களும், அரசியல் நிலைப்பாடு சார்ந்த செயல்களும் பலத்த முக்கியத்துவம் பெற்றது.
1971ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு”ஒரு கண்டத்தின் விதியையும், மக்களின் கனவுகளையும்” கவிதைகளில் நிரந்தரமாக்கிய பாப்லோவுக்கு வழங்கப்பட்டது.
1973 செப்டபர் 23 ஆம் தேதி ஞாயிறு இரவு பத்தரை மணி, மருத்துவமனைப் படுக்கையில் ”நான் போகிறேன்” என்ற வாசகத்துடன் அவரது உடல் சலனமற்று அடங்கியது. நெரூதாவின் இறுதி ஊர்வலம் சிலியின் சர்வாதிகாரி அகஸ்டோ பினோஷோவுக்கு எதிரான மக்கள் எழுச்சியுடன் தொடங்கியது.
பாப்லோ நெரூதாவின் கவிதைப்பரப்பை பொருளடிப்படையில் ஆறு பகுதிகளாகப் பிரித்து விடலாம். காதல், தனிமை, இயற்கை, மரணம், அரசியல், வரலாறு என்ற பெரும் பகுப்புகளுக்குள் அடக்கி விடலாம்.இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் நெரூதாவின் கவிதை சாட்சியாக இருந்திருக்கிறது. ரஷ்யப் புரட்சி, ஸ்பானிய உள்நாட்டுப் போர், நாஜிசம், ஸ்லாலினிசம், இரண்டாம் உலகப் போர், கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள், ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், மறைமுகப் போர்கள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல், பொருளாதார நெருக்கடிகள், ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி, வியட்நாம் போர், மாணவர் கொந்தளிப்பு, சொந்த மண்ணில் சோஷலிச வருகை, அதற்கெதிரான ராணுவக் கலவரம் - சம காலச் சரித்திரத்தை நெரூதா தனது கவிதைகளில் பதிந்தது போல நவீனக் கவிஞர் வேறு எவராவது செய்திருக்கக் கூடுமென்பது சந்தேகமே.
-------------------------------------
கவிதையுலகில் நெரூதா அறிமுகமானதும், இடத்தை நிறுவிக் கொண்டதும் ஓர் இளங்காதலனாக.பெண் மீதும், பெண்ணுடல் மீதுமான அவரது குதூகலம், இயற்கை மேலுள்ள மோகத்தின் இன்னொரு சாயல். அவரது அந்தரங்கம் பெண்களால் நிரம்பியது. மூன்று மனைவியர், அநேக தோழியர், கணக்கிலடங்கா படுக்கையறைப் பங்காளிகள். அவர் துய்த்து வீசிய பெண்கள் பலர். ஜோஸி ப்ளீஸ் அவர்களில் ஒருவர். பர்மியப் பெண்ணான அவர் நெரூதாவை விரட்டி விரட்டிக் காதலித்தவர். தன்னை மணந்து கொள்ளும் படி வற்புருத்தியவர்.
வெறி கொண்ட ஜோஸியின் காதல் வதைக்குப் பயந்து அவர் பர்மாவை விட்டே வெளியேறியனார். நெரூதாவின் உணர்ச்சிக் கொந்தளிப்பான காதல் கவிதைகளில் அந்த அசட்டு காதலியை முன்னிறுத்தி எழுதிய “மனைவி இழந்தவனின் டாங்கோ” தனியிடம் பெறும்.வெவ்வேறு காலகட்டத்தில் பாப்லோ உறவு கொண்டு விலகிய பெண்கள் ஏராளம்.
எப்போதும் விவாதங்களின் மையமாகவும், விமர்சனங்களின், இலக்காகவும் இருந்தவர் நெரூதா.காப்ரியேலைப் பொறுத்தவரை அவர் “நூற்றாண்டின் மகத்தான கவிஞர்”. நோபல் பரிசு பெற்ற யுவான் ரமோன் ஜிமனேஸைப் பொறுத்தவரை “மகத்தான மட்ட ரகக் கவிஞர்”. போர்ஹே அவரை “முதல் தரக் கவிஞர், ஆனால் மனிதர் என்ற முறையில் அவ்ர் மீது மதிப்பில்லை” என்றார்.
நெரூதா தனது விமர்சகர்களோட் உதாசீன மனப்போக்கையும், அருவருப்பும் காட்டியவர். இலக்கியவாது செயல்பாட்டாளனாவதில் மிரட்சியடையும் மத்திய தர வர்க்கத்தின் சக்கிப்பின்மைதான் இந்த விமர்சனக்கள் என்று புறம் தள்ளியவர் அவர்.
இந்த விமர்சன்ங்கள் இன்றும், இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்துக் கொண்டுதன் இருக்கின்றன. இவற்றில் உண்மைகள் இல்லாமலும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு, வீக்லி ஸ்டாண்டர்டு இதழில் வெளிவந்த ஸ்டீபன் ஸ்வார்ட்சின் கட்டுரையே இதற்கு உதாரணம். அதன் தலைப்பு, “மோசமான கவிஞன், மோசமான மனிதன்”.
---------------------------------------------------------------------
தமிழிலும் பாப்லோவை ஆய்வுக்குட்படுத்தி பல கட்டுரைகள் பல்வேறு தளங்களில் அவ்வப்போது வந்துக் கொண்டுதான் இருக்கிறது. உயிர்மையிலும், திண்ணை இணையத் தளத்திலும், யமுனாராஜேந்திரனாலும், இன்னும் பலராலும் பாப்லோவை ஆதரித்தும், எதிர்த்தும், கடுமையாய் விமர்சித்தும் பல கட்டுரைகள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
பொடிச்சியின் பாப்லோவைப் பற்றிய
பாப்லோ நெரூதா மற்றும்
பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டு காலத் துரோகம் எனும் கட்டுரைகள்தான் அவரது தளத்தில் முதன் முதலில் படித்தவை. அதற்குப் பிறகு மாய்ந்து மய்ந்து பொடிச்சியின் எல்லா எழுத்துக்களையும் படித்து வருகிறேன். இவரது எழுத்துக்கள் படு தீவிரத்தன்மை கொண்டவை. கவிஞர்கள், தீவிர விமர்சகர்கள் இவரது பாப்லோவைப் பற்றிய இந்த கட்டுரைகளை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது. என்னைப் பொறுத்த வரை கண்டிப்பாகப் படிக்கப் பட வேண்டியவை இவை.
இதைத் தொடர்ந்து இவரது சிறந்த கட்டுரைகளில் ஒரு சில:
எழுத்து வன்முறைநான் நீ நினைக்கும் பெண்ணல்லஇரு ஆளுமைகளைச் சந்தித்தல் - 1இரு ஆளுமைகளைச் சந்தித்தல் - 2--------------------------------------------------
பாப்லோ தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை எளிமையாக இப்படிச் சொல்லி இருக்கிறார் மீனாக்ஸ் இங்கே
பாப்லோ நெரூதா என்ற பதிவில்.
---------------------------------------
கவிதைகளைப் பற்றிப் பேசுகையில் எப்போதும் என் நினைவில் வந்து நிற்கும் பதிவாய் இருந்திருக்கிறது வா.மணிகண்டனின் இந்த
பலருக்கும் பிடிக்காத ஒன்று!!! பதிவு.
கவிதைகளை அடுத்த தளத்திற்கு கொண்டு போகும் முயற்சியாய்,மறு வாசிப்புக்குட்படுத்தவும், வெங்கட் சாமிநாதன், போன்ற சில விமர்சகர்களும், மொழிபெயர்ப்புக் கவிஞர்கள் சிலரும் பல காலமாகவே முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிற்றிதழ்களிலும், இலக்கிய பத்திரிக்கைகளிலும் பரவலாய் காணப்படும் கவிதைகளுக்கும், விமர்சனக் கட்டுரைகளுக்கும் சற்றும் குறைவில்லாது, நல்ல கவிதைகளும், விமர்சனங்களும் இணைய உலகிலும் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
அய்யனார், சுகுணா, வா.மணிகண்டன்,கென்,அனிதா,ஜ்யோவ்ராம், தமிழ்நதி,காயத்ரி, நிவேதா இவர்களில் எவர் வேண்டுமானாலும் தமிழ்க் கவிதையுலகில் ஒரு அசைக்க முடியா ஆளுமையாய் இனி வரும் காலங்களில் உருவெடுக்கலாம்.
-----------------------------
பி.கு: பாப்லோவைப் பற்றிய விவரங்கள் சுகுமாரன் அவர்களின் பாப்லோ மொழிபெயர்ப்பு தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
கவிதைகளைப் பற்றியோ, கவிஞர்களைப் பற்றியோ கருத்து சொல்லுமளவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எவரேனும் கேட்கலாம்.இதை எனது தனிப்பட்ட கருத்துக்கள் என்று நான் ஒரு சேஃப்டிக்கு என்று டிஸ்க்ளெய்மர் போட்டுக்கொள்ளலாமா அல்லது இவை என் உணர்வுகள் இதை எங்கு வேண்டுமானலும் நான் சொல்வேன, அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்று மல்லுக்கு நிற்கலாமா என்ற குழப்பத்துடனேயே முடிக்கிறேன்.