07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 24, 2012

கனாக்காலம்

2004 ஆம் ஆண்டு படிப்பிற்காக சென்னை வந்திருந்த காலகட்டம். அப்பொழுது சினிமாவும், இலக்கியமும் மட்டுமே தேடலாக இருந்தது. சினிமா என்றால் பாடலாசிரியர் ஆகிவிடலாம் என்று கனவு. எழுதி வைத்திருந்த கவிதைகள் அந்த கனவுத் தீக்கு பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்தன.

 வைரமுத்துவும், மேத்தாவும் மட்டுமே இலக்கிய கர்த்தாக்கள் என்ற நினைப்பு ஆக்கிரமித்திருந்த அந்த நாட்களில் சினிமாக்கவிஞர்களை தேடிப்பிடிப்பது ஞாயிற்றுக்கிழமைகளின் பொழுதுபோக்காக இருந்தது. கங்காரு தன் குட்டியை சுமந்து செல்வது போல எழுதி வைத்திருக்கும் கவிதைகள் அனைத்தையும் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கம். பாடலாசிரியர்களிடம்  என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வாஞ்சையோடு அந்த கவிதைத் தாள்களை நீட்டுவேன். 

அப்படியான ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மாலை வேளையில் தமிழச்சி தங்கப்பாண்டியனின் புத்தக அறிமுக விழா ஒன்று மைலாப்பூரில் நடந்து கொண்டிருந்தது. யுகபாரதியை சந்திக்க செல்லவிருக்கும் திட்டத்தை திசை மாற்றி விழாவில் இரண்டாவது வரிசையில் அமர்ந்து கொண்டேன். முந்தைய வரிசையில் மனுஷ்ய புத்திரன் அமர்ந்திருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடனடியாக நிகழ்ச்சி தொடங்கிவிட்டதால் அவருடன் அதிகம் பேச முடியவில்லை. தன்னைச் சந்திக்க வருமாறு முகவரியைக் கொடுத்தார். 

அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் வழக்கம் போலவே நான் எழுதி வைத்திருந்த கவிதைகளை தூக்கிக் கொண்டு அவரை சந்திக்க சென்றிருந்தேன். ஆனால் அது வழக்கமான சினிமாக் கவிஞர்களுடனான சந்திப்பு போன்றில்லை. என் கவிதைகளை புரட்டி பார்த்தவர் எதுவும் சொல்லவில்லை. பசுவய்யாவின் 107 கவிதைகள், சுகுமாரன், ஆத்மாநாம் ஆகியோரின் கவிதைத் தொகுப்புகளை கொடுத்து வாசித்துவிட்டு வரச் சொன்னார். முதலில் இந்தக் கவிதைகளில் எதுவுமே புரியவில்லை. ஆனால் அந்த புரியாததன்மைதான் வெறியூட்டியது. கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அது ஒரு பித்து நிலை. அந்தக் காலகட்டத்தில் என்னைச் சுற்றி நடந்தவைகளை கிஞ்சித்தும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நவீன கவிதையுலகின் கதவுகள் மெல்லத் திறக்கத் துவங்கின. என் பழைய கவிதைகள் என்னிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டன.  அதற்கு பிறகு அந்தத் கவிதைகள் எழுதப்பட்டிருந்த தாள்களை தேடவே இல்லை.

ஆனால் நவீன கவிதைகளில் நான் புரிந்து கொண்டவை சரிதானா என்ற குழப்பம் அரித்துக் கொண்டிருந்தது. மனுஷ்ய புத்திரனிடமே கேட்டேன். "கவிதை என்ன சொல்ல வருதுங்கிறது முக்கியம் இல்லை. கவிதையில் நீ என்ன புரிஞ்சுக்கிட்டேங்கிறதுதான் முக்கியம். அதனால நீ எப்படி புரிஞ்சுகிட்டாலும் சரிதான்" என்றார். இனி நவீன கவிதைகள் கைகூடிவிடும் என்ற நம்பிக்கை தொற்றிக் கொண்டது.

நவீன கவிதைகளை எனக்கான அடையாளமாக்கிக் கொள்ள விரும்பியதன் விளைவாகவே வலைப்பதிவு தொடங்க விரும்பினேன். 2005 ஆம் ஆண்டு பிப்ரவரியில் "பேசலாம்" என்ற பெயரில் வலைப்பதிவை தொடங்கி கணினித்திரையில் பெயரை பார்க்கும் போது உலகமே என் காலடியில் இருப்பதான ஒரு உற்சாக பிரமை தொற்றிக் கொண்டது. ஆனால் அது உண்மையாக இருக்கவில்லை. அந்தக்காலகட்டத்தில் வலைப்பதிவில் பிரபலமாக எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலரும் மிகுந்த சிரத்தையுடன் எழுதிக் கொண்டிருந்தார்கள். பத்திரிக்கையாளர் மாலன், பத்ரி, மதி கந்தசாமி, காசி, முத்து தமிழினி, பாலபாரதி, குழலி, தமிழ் சசி, ஐகாரஸ் பிரகாஷ் என்ற பெயர்கள் உடனடியாக நினைவில் வருகின்றன. அவர்களோடு போட்டி போட முடியாத அளவிற்குத்தான் என் எழுத்துக்கள் இருந்தன்.

எனது எழுத்துக்கள் பக்குவமற்ற, முதிர்ச்சியில்லாத வகையினதாக இருந்திருக்கின்றன என்பதை ஆரம்பகால பதிவுகளை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தை தொடர்ந்து சீர்படுத்திக் கொள்ள வலைப்பதிவு உதவியிருக்கிறது. தொடர்ந்து எழுதுவதால் மட்டுமே எழுத்து மேன்மையடைகிறது என்பதை நேரடியாக உணர முடிந்தது. பல இலக்கிய இதழ்களில் கவிதைகள், விமர்சனங்கள் எழுதவும், ஆனந்த விகடன் போன்ற வெகுஜன இதழில் சிறுகதைகள் எழுதவும், கல்கியில் 'ரோபோடிக்ஸ்' குறித்தான தொடர் எழுதவும் இந்த வலைப்பதிவுதான் அடிப்படையான காரணம் என நம்புகிறேன். 

இப்பொழுது 'பேசலாம்' என்ற வலைப்பதிவு 'நிசப்தம்' என மாறியிருக்கிறது. மின்னல்கதைகள், கவிதைகள், விமர்சனங்கள், சமூகம், அனுபவங்கள், கவிதைகளை புரிந்து கொள்வது பற்றி என  எழுதிக் கொண்டிருக்கிறேன்.  

நான் வலைப்பதிவை ஆரம்பித்தை காலகட்டத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்பொழுது எழுதுவதில்லை. இடையில் அவ்வப்போது பிரபலமடைந்தவர்கள் பிறகு எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள். சிலர் ஒரே சீராக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வலைப்பதிவு உலகம் ஒரு காட்டாறு. தன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. தனக்குள் விழும் சருகுகள், பூக்கள், இலைகள் என சகலத்தையும் அடித்துச் செல்கிறது. தலையுயர்த்தும் பூக்களைப் போலவே சருகுகளும் தலையுயர்த்துகின்றன. ஆனால் பூக்கள் தனக்கான அடையாளத்தை விட்டுச் செல்கின்றன. சருகுகள் காணாமல் போகின்றன.

வலைப்பதிவை ஏழரை ஆண்டுகளாக வைத்திருப்பதில் கொஞ்சம் அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. கொஞ்சம் நட்புகள் கிடைத்திருக்கின்றன, கொஞ்சம் அடையாளமும் கிடைத்திருக்கிறது. 

(பேசுவோம்)

17 comments:

  1. எங்களுக்கெல்லாம் நீங்கள் மிக மிக மிக சீனியர் சார்... உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. nalla arimukam!

    valaicharam vaayilaaka ungalai pin thodarvathu-
    makizhchi tharukirathu....

    vaazhthukkal

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!
    அறிமுக படலம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. அறிமுக படலம் அருமை

    //வலைப்பதிவை ஏழரை ஆண்டுகளாக வைத்திருப்பதில் கொஞ்சம் அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.//

    உங்களுக்கு கொஞ்சம் அனுபவம் இல்லை நிறையவே கிடைத்திருக்கும்.

    இந்த வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தங்களைப் பற்றிய அறியத் தந்த விதம் அருமை. வலைச்சர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. நன்றி சீனு- சீனியர் ஜூனியரை எல்லாம் ஒதுக்கி வைக்கலாம் :)

    நன்றி சீனி, கோமதி அரசு.

    நன்றி ஜலீலா கமால், ராமலக்ஷ்மி.

    மிகுந்த எதிர்பார்ப்பு நல்லது இல்லை :)
    நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை. முடிந்த அளவு செய்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  7. அறிமுகம் அமைதியாக உள்ளது. ஆவலுடன்
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. அருமையான ஆரம்பம். வலைச்சர ஆசிரியப்பொறுப்பு ஓர் இனிய அனுபவமாக உங்களுக்கும் எங்களுக்கும் அமைய வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  9. அசத்தல். உங்களின் அனுபவம் பலருக்கு வழிகாட்டலாம்.

    ReplyDelete
  10. நன்றி கோவைக்கவி, அமைதிச்சாரல், ஸ்ரீவிஜி.

    பார்க்கலாம் :)

    ReplyDelete
  11. தங்களின் அறிமுகம் அருமை...

    வலைச்சரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. அறிமுகம் நல்லா இருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  13. வாழ்த்துகள் மணி :)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்.... தோழரே

    ReplyDelete
  15. சுவையான அறிமுகப்பதிவு! தொடர்ந்து வீறுநடை போடுங்கள்!

    ReplyDelete
  16. தாங்கள் திரைக்கவிதைகளிலிருந்து நவீன கவிதைக்கு வந்த அனுபவம் அருமை. வாசிப்பு குறித்த தங்கள் அனுபவங்களை இன்னும் நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எல்லாவற்றிலும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  17. அருமையான அறிமுகம்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது