07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 7, 2012

தில்லியிலிருந்து....



மதுரையிலிருந்து தில்லி வந்தபோது ஏதோ புலம் பெயர்ந்து வந்தது போன்ற தவிப்பெனக்கு. வெயிலைக்கூடச் சமாளித்து விடலாம்.காரணம் மதுரை மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் கூட அசாதாரணமாகக் கடந்து போகிறவர்கள். ஆனால்..நடுக்கும் குளிர்....! இதோ இந்தப்பதிவையும் கூட இப்போது உறைய வைக்கும் குளிருக்குள் இருந்தபடிதான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால்....இங்குள்ள மக்களோ குளிர்காலத்தைக் கொண்டாடுகிறார்கள்.வியாபாரிகளுக்கு விதம் விதமான கம்பளி ஆடைகளின் விற்பனை சூடு பிடிக்கிறது.வெயிலில் சருகாய் வற்றி உலர்ந்த காய் பழங்களையே பார்த்துப்பழகிய மக்கள் செழிப்பான புதுமையோடு வீற்றிருக்கும் காய் கனிகளைக் கண்டும் உண்டும் மகிழ்கிறார்கள்.

சிற்றுண்டிக் கடைகளில் சுடச்சுடத் தயாரிக்கப்படும் பல வகையான'சாட்'வகைகளும் நொடிநேரத்துக்குள் மாயமாகிப்போகின்றன.சிறுகுழந்தைகள்‍‍‍--- --, ஏன் - பெரியவர்களும் கூடத்தான்... ஐஸ்கிரீமில் எத்தனை வகை உண்டோ அத்தனையையும் விதம் விதமாய் ருசிக்கிறார்கள். தயிரைக் கோப்பை கோப்பையாய் வாங்கிக் குடிக்கிறார்கள்.குளிருக்கு அவையெல்லாம் சூடேற்றக்கூடியவை என்கிறார்கள்....!

இங்கே பெரும்பாலும் குளிர்காலத் திருமணங்கள்தான்..!அதுவும் நடுங்க வைக்கும் நள்ளிரவுப்பொழுதுகளில் ஆடல்பாடல்களுடன்....

வேனல்காலத்து நோய்கள் போல - வெயிலுக்கும்,மழைக்கும் இடைப்பட்ட காலத்து வியாதிகள் போலக் கடும் குளிர்காலத்தில் நோய்கள் அதிகமாகத் தாக்குவதில்லை என்பது வரவேற்கத்தக்க அம்சம்தான்....! ஆனாலும் கவச உடை அணிவது போல...முகமூடிக்கொள்ளையர்களைப்போல உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்ற ஆடைகளால் நாம் நம்மைப் பாதுகாப்புச் செய்து கொண்டால் மட்டுமே அது பொருந்தும்.

அகன்ற வீதிகளும் ஆடம்பர மாளிகைகளும் மட்டுமல்ல தில்லியின் அடையாளங்கள். உயிரையே உருக்குலைத்துப் போடும் பனிப்பொழிவில் தெருவோரங்களில்..பாலத்தடிகளில் ’’கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவிக்’’குளிரிலிருந்து தங்களைக்காத்துக்கொள்ளப்போராடும் சாமானியர்களின் கூட்டமும்,சிக்னல்களில் ஊதுபத்தி உறைகளையும்,செய்தித்தாள்களையும் கையில் பிடித்தபடி அவற்றை வாங்கிக்கொள்ள இறைஞ்சும் சிறுவர் பட்டாளமும் கூட தில்லியின் ’மறு’வான அடையாளங்கள்தான்.

தில்லியின் குளிர் ஒரு புறம் இருக்க, இங்குள்ள நல்லவற்றையும் சொல்லியே ஆக வேண்டும்.ஒன்று...மூத்த குடிமக்களுக்கு சிறுகுழந்தைகள் முதல் சகல வயதினரும் செலுத்தும் இயல்பான மரியாதை,மதிப்பு...!'பெருசு என்ன சொல்லுது..'என்ற குரலையே கேட்டுப்பழகிய நம் செவிகளில் 'மாதாஜி'என்ற விளி காதில் தேன் பாய்ச்சும். நெடுந்தூரப்பயணங்களையும் இலகுவாக்கி விரைவாக்கும் மெட்ரோ ரயில் தடங்கள் தில்லியின் தொப்பியில்  சூட்டப்படும் இறகுகள்.இங்குள்ள ஆட்டோக்கள் தமிழகத்தில் இருப்பதைப் போன்ற சுத்தத்துடன் பராமரிக்கப்படாவிட்டாலும் பெரும்பாலான ஆட்டோவாலாக்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள்.இரவு பத்து மணிக்கு மேலும் கூட அவர்களை நம்பித் தனியே வர முடியும். ஆட்டோக்களின் கட்டணமும் கூட மிக மிக நியாயமானதுதான்...

தமிழ‌கத்தின் பலதுறைப்பிரபலங்களையும் அவர்களின் தில்லி வருகையின்போது இங்கே தமிழ்ச்சங்கத்தில் மிகச்சுலபமாகப் பார்த்து விடவும், அணுகி விடவும் முடியும் என்பது இங்கு வாழும் தமிழர்களுக்கு வாய்த்த ஒரு வரம்.

தமிழ் நாட்டை விட்டு விலகியிருந்தாலும் தமிழ் மீதான காதலை விட முடியாத தமிழர்கள் இங்கே ஏராளம். இணைய வழி தமிழோடு ஊடாடும் 
தில்லியின் தமிழ்ப்பதிவு வட்டத்திலிருந்து சில தளங்களும் பதிவுகளும் இன்றைய அறிமுகமாக....

தில்லியில் எனக்கு முதலில் அறிமுகமான இலக்கிய‌ நண்பர் வடக்கு வாசல் இதழ் மற்றும் தளத்தின் ஆசிரியர் யதார்த்தா பென்னேஸ்வரன் அவர்கள்.
சனிமூலை என்னும் தனது வலைப்பக்கத்தில்

ராகவன் தம்பி என்னும் புனைபெயரில் சமூகம் சார்ந்த கட்டுரைகள்,சிறுகதைகள்,மொழிபெயர்ப்புக்கள்,தனது நாடக வாழ்க்கை அனுபவங்கள் எனப்பலவற்றையும் எழுதி வரும் இவரது தனிச் சிறப்பு அங்கதம்.ஒரு சிலருக்கே எளிதாகக் கை வரக்கூடிய மெல்லிதான‍கிண்டலும் நையாண்டியும் இவரிடம் நயம்படக்கூடி வந்திருப்பதை இவரது சனிமூலைக்கட்டுரைகள்  வழியாகப்புரிந்து கொள்ள முடியும். தற்போது திண்ணை இணைய இதழில் இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் பலவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இஸ்மத் சுக்தாயின் மச்சம் என்னும் சிறுகதையை மிகச்சரளமான நடையில் உருதுவிலிருந்து நேரடியாக மொழியாக்கி வழங்கியிருக்கிறார் இவர்.

தில்லி வலைப்பதிவர்களைக் குழுவாக ஒருங்கிணைக்கும் பணியைத் திறம்பட ஆற்றி வரும் நண்பர் வெங்கட் நாகராஜின் தனித் தன்மை சிறப்பாக மிளிர்வது அவரது பயணப்பதிவுகளிலும்,அவர் இடும் அற்புதமான புகைப்படங்களிலும்.காசி‍ ‍ அலகாபாத் பயணம் குறித்து அண்மையில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகள் சுவையானவை.

வெங்கட்டின் மனைவி ஆதி வெங்கட்டும் தில்லியின் வலைப்பதிவர்களில் ஒருவர்.கோவையில் வளர்ந்து தில்லியில் குடியேறியதால் தன் வலைப்பூவை கோவை 2 தில்லி ஆக்கி விட்ட இவரது கை வண்ணத்தை வெறும் சமையல் குறிப்புக்களுக்குள் மட்டும் அடக்கி விட முடியாது. தான் ரசித்த பாடல்களின் இணைப்பை அவ்வப்போது வழங்கியபடி - நம் மனப்பதட்டத்தையும், அவசர வேகத்தின் அலைக்கழிவையும் நீக்கி இளைப்பாற்றல் கொள்ள இசையென்னும் மாமருந்திடுபவை இவரது பதிவுகள்.

புதியவன் பக்கங்களை எழுதி வரும் திரு ஷாஜகான் ஒரு புத்தகக்காதலர்.சிறந்த கவிஞர்.


தில்லியில் நிகழ்ந்த புத்தகக்கண்காட்சி போன்ற  பல நிகழ்வுகளையும் பதிவுகளாக்கி வெளியிட்டிருக்கும் இவர் அறச் சீற்றத்தோடு கூடிய பல சமூகப் பதிவுகளையும்  கூட எழுதி வருகிறார். அவற்றுள் நான் பரிந்துரைக்கும் பதிவுகள், கூடங்குளம் பிரச்சினையை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கும் படித்தவர் சூதும் பாவங்களும்..., மற்றும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு பற்றிய விமரிசனங்களை வைக்கும் பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ...ஆகியவை.

என்னிடம் மகன் போன்ற நேசம் கொண்டிருக்கும் தில்லிப்பதிவர் தேவராஜ் விட்டலன் இராணுவத்தில் பணியாற்றுபவர்; அவரது படைப்பார்வமும் வாசிப்பில் அவர் காட்டும் தீவிரமும் பிரமிக்க வைப்பவை.கவிதையில் தொடங்கிச் சிறுகதை நோக்கி நகர்ந்து செல்லும் அவர் ஏற்கனவே கைக்குட்டைக் கனவுகள் என்னும் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.

விருதுநகர்ப்பகுதியிலிருந்து வெளியாகும் பயணம் இதழுக்கும் பொறுப்பேற்றிருக்கும் விட்டலனின் கவிதைகள் பலவும் வடக்கு வாசல் இதழில் வெளிவந்திருக்கின்றன. கோடுகள்,ஒரு கனவின் எச்சம் ஆகிய அவரது கவிதைப்பதிவுகளை வலைச்சர வாசகர்களுக்கு என் அறிமுகங்களாக அளிக்கிறேன்.

கையளவு மண்என்று தன் வலைப்பூவுக்குப் பெயர் சூட்டிக் கொண்டாலும் கடலளவு செய்திகளை அள்ளித் தர முனைபவர் தில்லிப்பதிவரான வேங்கட சீனிவாசன்.இந்திய சீனப்போர் பற்றி இவர் எழுதி வரும் தொடர் கட்டுரைகள் சிறந்த வரலாற்றுத் தகவல்களை அளிப்பவை.


கவிதை வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமான உயிரோடை லாவண்யா சுந்தரராஜன்,சோமாயணம் என்ற பெயரில் தன் படைப்புக்களை வழங்கும் கலாநேசன், வார்த்தைச்சித்திரங்களை வடிக்கும் ஜீஜி, கவிஞர் ஜோதிப்பெருமாள் ஆகிய தில்லி வாழ் தமிழ்ப்பதிவர்களும் கவனம் பெறத் தக்கவர்களே.


பி.கு;
தில்லியின் பிற பதிவர்களான சிறுமுயற்சி முத்துலட்சுமி,சந்திரமோகன்,கணேஷ் ஆகியோர் குறித்த அறிமுகமும் அவர்களது பதிவுகள் குறித்த செய்திகளும் வெவ்வேறு  தலைப்புக்களிலான என் வலைச்சரக்கட்டுரைகளில் முன்னரே இடம்பெற்றிருக்கின்றன. இவர்களைத் தவிர விடுபட்டுப்போயிருக்கும் தில்லிப்பதிவர்கள் எவரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் நினைவுபடுத்தினால் நலமாக இருக்கும்.

17 comments:

  1. நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.நன்றி.ஒவ்வொன்றாய் படிக்கணும். டில்லி குளிர்,வெயில் இரண்டும் எக்ஸ்ட்ரீம்.

    ReplyDelete
  2. அருமையான பதிவும், நண்பர்களின் அறிமுகமும் மிகவும் பிடித்திருந்தது, ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  3. அன்பின் சுசீலா - அருமையான பதிவு - அருமையான அறிமுகங்கள் - தேவராஜ் விட்டலன், வெங்கட் நாகராஜ், அவரது துணவி ஆதி வெங்கட், முத்துலெட்சுமி ஆகியோரை விசாரித்ததாகக் கூறவும். தேவராஜ் விட்டலனுக்கும் மணமாகி விட்டதா ?

    அறிமுகங்கள் சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. பென்ஜி, வெங்கட்,ஆதி போன்ற ஏற்கனவே தெரிந்தவர்களுடன் கூடுதலாய்ப் புதிதாய்த் தெரிந்து கொண்டவர்களின் அறிமுகமும் அருமை.

    ReplyDelete
  5. அனைவருக்கும் நன்றி.தில்லிப்பதிவர்கள் பலரும் ஏற்கனவே பலருக்கும் அறிமுகமானவர்களே.

    ReplyDelete
  6. அறிமுகமும் பதிவும் மிகவும் அருமை!

    ReplyDelete
  7. என்னையும் என் துணைவியையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றிம்மா.....

    நாளை தில்லிகை இலக்கிய கூட்டத்தில் சந்திக்கிறேன்...

    நட்புடன்

    வெங்கட்.

    ReplyDelete
  8. //மிகச்சரளமான நடையில் உருதுவிலிருந்து நேரடியாக மொழியாக்கி வழங்கியிருக்கிறார் இவர்.//

    உருது மொழியும் திரு பென்னேசுவரனுக்குத் தெரியுமா? உருதிலிருந்தே நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்த்தாரா? ஆங்கில வழியென்றல்லவா திண்ணை போட்டிருந்தது என்பது நினைவு.

    ReplyDelete
  9. திரு குலசேகரன்,உங்களுக்காக அது வெளிவந்த திண்ணை இணைப்பையும் சரிபார்த்து விட்டேன்.
    உருது மூலம் – இஸ்மத் சுக்தாய்
    தமிழில் – ராகவன் தம்பி
    என்றுதான் இருக்கிறது.ஆங்கில வழி என்ற குறிப்பு இல்லை.திண்ணை இணைப்பு உங்கள் பார்வைக்கு...
    http://puthu.thinnai.com/?p=15925
    தனக்கு உருது தெரியும் என்று பென்னேஸ்வரன் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete
  10. A non-muslim knowing Urdu is quite a surprise, isn't?

    Mr Penneshwaran is the right person to clarify.

    ReplyDelete
  11. அன்றாடம் பதிவெழுதி அசத்திக் கொண்டிருப்பவர்களுடன் அமாசைக்கு அமாசை பதிவெழுதும் என்னையும் சேர்த்து அறிமுகம் செய்திருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  12. தில்லியில் இருந்து வரும் வடக்கு வாசல் இதழை அண்ணன் வாங்குவார். அதை அவ்வப்போது படிப்பதுண்டு. மற்ற தில்லி இணையதள வலைப்பதிவுகளை அதிகம் வாசித்ததில்லை. இனி அவைகளையும் வாசிக்கிறேன். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  13. என்னையும், என் கணவரையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிம்மா.

    இரண்டு நாட்களாக இணையம் பக்கம் வரவேயில்லை.

    ReplyDelete
  14. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  15. எல்லாரளவு புதிதே. வெங்கட் பழக்கம்.
    அதே போல குளிரிலே தான் நாமும் டென்மார்க்கில் வாழ்கிறோம் அம்மா.
    அனைவருக்கும் இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. எனக்குத் தெரிந்த தகவல்களைச் சரி பார்க்கும் முயற்சியாக (தவறுகள் இருந்தால் தங்களைப் போன்ற மூத்த பதிவர்களும் சரியான விவரம் அறிந்த மற்றவர் சுட்டிகாட்டுவர் என்பதால்) எழுதத் துவங்கினேன். என் வலைப்பதிவை ’வலைச்சரத்தில்’ அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  17. ஒரு சிறு விளக்கம். தாமதமாகத் தருவதற்கு மன்னிக்க வேண்டும்.

    இஸ்மத் சுக்தாய், மாண்ட்டோ ஆகியோரின் படைப்புக்களை நேரடியாக உருதுவில் இருந்து மொழிபெயர்க்க வில்லை. ஏதோ தகவல் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

    கிருஷ்ணகிரியில் பிறந்து இருபத்து இரண்டு ஆண்டுகளும் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக டெல்லியில் வளர்ந்ததாலும் உருது நன்றாகப் புரியும்.

    இங்கு டெல்லி பஞ்சாபிகளுக்கு உருது பள்ளியிலும் கல்லூரியிலும் இரண்டாவது மொழி. டெல்லி வந்த புதிதில் காவல் நிலையங்களில் ஆவணங்கள் உருதுவில் இருந்தது கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். காவலர்கள் முதல் தகவல் அறிக்கையை உருதுவில் எழுதிக் கொள்வதையும் பார்த்து இருக்கிறேன்.

    எனக்கு நிறைய பஞ்சாபி நண்பர்கள் இருக்கிறார்கள். உள்துறை அமைச்சகத்தில் என்னுடன் பணிபுரிந்தவர்களில் பலர் மிகவும் சரளமாக உருது படிப்பார்கள்.

    முதலில் மொழிபெயர்ப்புக்காக எடுத்துக் கொள்ளும்போது உருதுமூலத்தை அவர்களைப் படிக்கச் சொல்லிக் கேட்பேன். அவர்கள் படித்துக் காண்பிக்கும் போதே என்னுடைய கணிணியில் மொழிபெயர்ப்பு துவங்கி விடுவேன். பிறகு ஆங்கில மொழிபெயர்ப்புக்களின் துணையுடன் சீர் செய்து கொள்வேன். நான் மொழிபெயர்த்த லிஹாஃப் போன்ற கதைகள் அப்படி செய்தவைதான்.

    கன்னடம் என் தாய்மொழி என்றாலும் கன்னடம் எனக்குப் படிக்கத் தெரியாது. என் நண்பர் ஷிவ் பட் அவர்கள் படித்துக் காண்பிக்க சந்திரசேகர கம்பாரின் ‘சாம்பசிவ பிரஹஸ்ன’ நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்தேன். அதுவும் அவர் படித்துக் காண்பிக்க வரிவரியாக மொழிபெயர்த்தது.

    அதுபோலவே, மலையாள நாடக ஆசிரியர் ஓம்சேரி என்.என்.பிள்ளை அவர்கள் தன்னுடைய கள்ளன் கேறிய வீடு என்னும் நாடகத்தை மலையாளத்தில் வாசிக்க நேரடியாக தமிழில் அவருடனே உட்கார்ந்துமொழி பெயர்ப்பு செய்தேன்.

    எனக்கு உருது வாசிக்கத் தெரியாது. உருது வாசிக்கத் தெரிந்த நண்பர்களின் துணையுடனும் ஆங்கில மொழிபெயர்ப்பின் துணையுடனும் மொழிபெயர்த்தவை என்னுடைய உருது - தமிழ் மொழிபெயர்ப்புக்கள்.

    குழப்பத்துக்கு அனைவரும் மன்னிக்க வேண்டும்.

    அன்புடன்
    யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது