சப்தப்ராகாரம் - மனிதர்கள்
➦➠ by:
ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள்
அன்புள்ள வலைச்சரம் நண்பர்களே..
உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்.. என்ற பாடல் நினைவில் ஆடுகிறது இப்போது.
இந்த வாரம் போனதே தெரியவில்லை.! பதிவர்களைத் தேடிப் படிக்கும் ஆனந்தம்.. பின்னூட்டங்களில் கிட்டிய உற்சாகம்.. புதிதாய் அறிமுகமான நண்பர்கள்.. வாழ்க்கை இன்னும் சுவாரசியப் படுத்திக் கொண்டிருக்கிறது இப்போது.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் வரிசையில் மழையைக் கொண்டு வந்தேன்.. நீரில் அதுவும் அடக்கம் என்றாலும். மழை குறித்த காதல் எப்போதும் மனதில் .. சிறுதூறல்.. பெருமழை.. எதுவாயினும்.. நனைத்துப் போகிறது அதன் போக்கில்..
இதோ முடிவாய்.. மனிதர்கள்..
எவராயினும்..எந்தப் படைப்பாயினும்.. மனிதம் பேசாத எழுத்து ஜீவனற்றது.. சொல்லப் போனால் மனிதனா.. எழுத்தா என்றால் முன்னுரிமை மனிதனுக்குத்தான். மனித நேயம் பகிர எழுத்தும் ஒரு வடிகாலாய்..
கை குலுக்கிக் கொள்வோம்.. அன்பாய். சிரிப்புடன். அவரவர் சிந்தனைகளில் இருக்கும் வேறுபாட்டை ஒரு ஓரமாய் உட்காரவைத்துவிட்டு. எதையும் விட மேலானதாய் நம் பிரியம்..
மனித நேயம் என்று சொல்லும் போது ஞாபகம் வரும் இருவர்..
ஸ்ரீரங்கம் கோவிலில் ஐக்கியமான இருவர் .. ஆண்டாள்,.. திருப்பாணாழ்வார்.
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதனைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.
என்று பாடி ரெங்கனோடு கலந்து விட்டவர் திருப்பாணாழ்வார்.
ஆண்டாளோ பிரேமையின் சொரூபம். இந்நாட்களில் நாம் சொல்லும்
143 ( I love you) வைக் கண்டுபிடித்த அந்த நாள் சுட்டிப் பெண்.
143 பாசுரங்களில் அவள் சொன்ன தமிழை இனி யாரும் விஞ்சப் போவதில்லை..
இப்போது இன்றைய பதிவர்கள்..
வேணுவனம் இலக்கிய ஆர்வலர்கள் ரசிக்கக்கூடிய பதிவுகள்.. அப்படியே நம்மை வேறுலகம் கொண்டு போய் விடும்..
மின்மினிப்பூச்சிகள் சக்திப்ரபாவின் இந்த வலைத்தளம் தீவிர எழுத்துக்களுக்கு உறைவிடம். இவரும் அதிகம் எழுதுவதில்லை. எழுதியவை நிச்சயமாய் வித்தியாசமானவை.
துளசிதளம் துளசிகோபாலின் பிரமிக்க வைக்கிற பதிவுகளின் சங்கமம். 5 வலைத்தளங்களுடன்.. புகைப்படங்கள், தகவல்கள், பயணங்கள் என இவர் பதிவுகளில் ஏகத்துக்கு சுவாரசியங்கள்.
கரடி பொம்மை காற்றைக் கொண்டு கவிதை பேசும் ஒரு இலையின் பக்கங்களில் கவிதை கலந்த ரசனை கொட்டிக் கிடக்குது.. கூடவே மனித நேயமும்
சிறகுகள் உலகத்தின் எந்த கோடிக்கும் உடனே பறந்து சென்று, இயற்கை சீற்றங்களினால் கஷ்டப்படும் யாருக்கும் உதவ, இயற்கையை ரசிக்க, நதியோடும், அருவியோடும், காடுகளோடும், பறவைகளோடும் கலந்து ஓடிக்கொண்டே இருக்க சிறகுகள் வேண்டி, என்னை தடுக்கும் மாயச்சுவர்களை எப்போதும் தகர்த்துக்கொண்டே...இருந்த இடத்திலேயே நான்!
-இவங்களை இதற்குப் பிறகும் பிடிக்காமல் போகுமா என்ன.. எழுதுங்க.. முடிஞ்சப்ப..அதைத்தான் சொல்ல முடியும்..
திவ்யா ஹரி இவரும் எப்பவாச்சும் எழுதறார்.. ஆனா ஒரு ஸ்பார்க் இருக்கு..
காவ்யாவின் தமிழ்வனம் மொழியின் ஆளுமை கொண்ட இவரும் ஏன் எழுதுவதில்லை அவ்வப்போதாவது.???
சிதறல்கள் இவரும்தான்.. எழுதலாமே மாசம் ஒண்ணாவது..
சிறு முயற்சி அழகிய பதிவுகளுக்கு சொந்தக்காரர். வாழ்த்துகள் முத்துலெட்சுமி மேடம்.
இந்த ஏழு நாட்களில் நான் ரசித்த.. ரசிக்கிற சிலரை உங்களோடு சேர்ந்து இன்னும் ஒரு முறை ரசித்தேன்.. நேர நெருக்கடியில் இன்னும் பலரை என்னால் குறிப்பிட முடியவில்லை..
எனக்கு வாய்ப்பளித்த திரு. சீனா ஸார்.. வலைச்சர குழு.. ஒவ்வொரு நாளும் வந்து என்னையும் ரசித்த நீங்கள்.. எல்லோருக்கும் இதய ஆழத்திலிருந்து அன்பின் நன்றி.
வாழ்க்கை மகத்தானது.. அது ஒரே அலைவரிசையில் கொண்டு வந்து சேர்த்து விடும் நேசத்துக்குரியவர்களை..
சந்திப்போம் இன்னொரு சமயம்.. இன்னும் உற்சாகமாய்..
பேரன்புடன்
ரிஷபன்.
|
|
//ஆண்டாளோ பிரேமையின் சொரூபம். இந்நாட்களில் நாம் சொல்லும்
ReplyDelete143 ( I love you) வைக் கண்டுபிடித்த அந்த நாள் சுட்டிப் பெண்.
143 பாசுரங்களில் அவள் சொன்ன தமிழை இனி யாரும் விஞ்சப் போவதில்லை..//
இதுபோலக் கேட்கவே சந்தோஷமாக உள்ள்து. ;))))))
>>>>>>>
இன்று வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள்.
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்.
>>>>>>
உங்கள் அன்பையும் யாரும் விஞ்சப் போவதில்லை.. வை கோ. ஸார்.. முதல் வருகைக்கு நன்றி.
ReplyDelete//கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
ReplyDeleteஉண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதனைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.
என்று பாடி ரெங்கனோடு கலந்து விட்டவர் திருப்பாணாழ்வார்.//
ஆஹா, வெகு அருமையான சரித்திரம். பகிர்வுக்கு நன்றிகள்.
கடந்த ஒரு வாரமாக நாங்களும் வலைச்சர ஆசிரியரான தங்களுடன் கலந்து இருந்தோம் என்பதே உண்மை.
தங்களின் இந்தப்பணி வெகு சிறப்பாக அமைந்திருந்தது. மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
>>>>>>>
//இதோ முடிவாய்.. மனிதர்கள்..
ReplyDeleteஎவராயினும்..எந்தப் படைப்பாயினும்.. மனிதம் பேசாத எழுத்து ஜீவனற்றது.. சொல்லப் போனால் மனிதனா.. எழுத்தா என்றால் முன்னுரிமை மனிதனுக்குத்தான். மனித நேயம் பகிர எழுத்தும் ஒரு வடிகாலாய்..
கை குலுக்கிக் கொள்வோம்.. அன்பாய். சிரிப்புடன்.
அவரவர் சிந்தனைகளில் இருக்கும் வேறுபாட்டை ஒரு ஓரமாய் உட்காரவைத்துவிட்டு. எதையும் விட மேலானதாய் நம் பிரியம்..//
மிகவும் அழகான வரிகள்.
ஸ்பெஷல் பாராட்டுக்கள்
மனமார்ந்த அன்பு வாழ்த்துகள்
நன்றியோ நன்றிகள்.
பிரியமுள்ள,
வீ.......ஜீ
[VGK]
// திவ்யா ஹரி எப்பவாச்சும் தான் எழுதாறார்.
ReplyDeleteஆனா ஒரு ஸ்பார்க் இருக்கு. //
அவர்களுடைய இன்னொரு ப்ளாக் குட்டிஸ்
அதுலே சின்ன குட்டிக்க்ருஷ்ணன்
அந்த முகத்திலே ஒரு ஸ்பார்க் மட்டும் இல்ல.
ஸ்டார்ட் அப்படின்னு நம்மை சொல்றா மாதிரிலே இருக்கு. !!!
மனசுலே ஒரு வேகம் வந்து எழுதறர்கள்
மானூஷ்ய க்ஷேமத்துக்காக எழுதறவர்கள்
இவர்கள் எழுத்திலே ஒரு ஸ்பார்க் இருக்கும்.
உண்மைதான்.,
காலக்ஷேபத்துக்காக கதை பண்ணுபவர்கள்
கம்பல்ஷண்ஸுலே பேனா புடிப்பவர்கள்
கஸ்ட் ரோல் செய்பவர்கள்
காசுக்காக எழுதுபவர்கள், காக்கா பிடிப்பவர்கள்
கன்னா பின்னான்னு எழுதுபவர்கள்
இவர்கள்கிட்டே அந்த மாதிரி ஒரு உத்வேகம்
இருக்காது. இருக்கணும் அப்படின்னு எதிர்பார்த்தாலும்
ஏமாந்து தான் போவோம்.
அவர்களுடைய யூஷுவல் எழுத்துகூட
எங்கோ மறைந்து போகும்.
ரிஷபன் ஸார். நீங்க சொன்னது சரி தான்.
அங்க ஸ்பார்க் இருக்கு..
சுப்பு தாத்தா.
இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து உங்களிடம் கலந்து உரையாடியது போல் இருந்தது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்... மறுபடியும் வருகிறேன்... (மின்சாரம் இருக்கும் போது) நன்றி...
tm1
ஆண்டாளின் ப்ரேமை ஜீவாத்மா,பரமாத்மோவோடு இரண்டற கலப்பது போன்றது..அருமையான பதிவு.
ReplyDeleteஒரு வாரம் தங்கள் அன்பு மழையில் ஆனந்தமாய் நனைந்தோம்...
இனி..எந்த ஊரில்..எந்த நாளில் எங்கு காண்போமோ என்கிற ஆவலுடன்,
ஆர்.ஆர்.ஆர்.
ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக நிறைவு செய்து விட்டீர்கள் வாழ்த்துகள் இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete/ மனித நேயம் பகிர எழுத்தும் ஒரு வடிகாலாய்../
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்.
நிறைவான வாரம்.
தங்களால் அறிமுகம் செய்யப்பட்ட அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.
தங்களுக்கு எங்கள் நன்றி.
இந்த வாரம் முழுவதும் தங்களின் பணி சிறப்பாக இருந்தது சார். எங்களுக்கும் இனிமையான வாரமாக அமைந்தது.பாராட்டுகள்.
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.
இந்த வாரம் இனிய வாரம்....
ReplyDeleteவாரம் முழுவதும் சிறப்பான விஷயங்களைச் சொல்லி, அழகிய முறையில் அறிமுகங்கள் செய்தது நன்று.
தொடர்ந்து தங்கள் தளத்தில் சந்திப்போம்.....
சிறப்பான வலைச்சர வாரத்திற்கு பாராட்டுகள்.
வந்தோரையும் மறந்தோரையும் மீண்டும் அழைத்து முடித்தீர்கள் அருமையான முடிவு அத்தனையும் ஆய்வு செய்தவிதம் அருமையானது தரமானது
ReplyDeleteஅன்பின் ரிஷபன் - அருமையான வாரம் - பதிவர்கள் அறிமுகம் அத்தனையும் அருமை. தேடிப் படித்து - தேர்ந்தெடுத்து - அறிமுகப் படுத்தியமை நன்று.
ReplyDeleteஇந்த 143 கலாச்சாரம் நாங்க படிச்ச காலத்துல இல்லையே ...... கொடுத்து வச்சவங்கய்யா நீங்க - வைகோவும் அதப் பத்தி மறுமொழில பேசி இருக்காரு போல.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஸ்ரீரங்கத்து நாயகனின் அழகிய படங்களுடன் மணம் வீசியது இவ்வாரம்.
ReplyDeleteபல தகவல்களையும் அறிமுகங்களையும் சிறப்புடன் தந்திருந்தீர்கள். படிக்கக் கிடைத்ததையிட்டு மகிழ்கின்றேன்.
வாழ்த்துக்கள். நன்றிகள்.
cheena (சீனா) said...
ReplyDelete//இந்த 143 கலாச்சாரம் நாங்க படிச்ச காலத்துல இல்லையே ...... கொடுத்து வச்சவங்கய்யா நீங்க - வைகோவும் அதப் பத்தி மறுமொழில பேசி இருக்காரு போல. //
இந்த 143 கலாச்சாரம் ஆண்டாள் காலத்திலும் இருந்துள்ளது.
இப்போதும் உள்ளது.
நடுவே நம் காலத்தில் மட்டும் அதற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது, ஐயா. இது மிகவும் அநியாயம். அக்கிரமம்.
இந்த அக்கிரமம் + அநியாயத்தைத்தான் நான் என்னுடைய “மறக்க மனம் கூடுதில்லையே” என்ற படைப்பினில், மனம் குமுறிப்போய் எழுதியுள்ளேன். ;)))))
இதோ இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
அன்புடன்
VGK
வாழ்க்கை மகத்தானது.. அது ஒரே அலைவரிசையில் கொண்டு வந்து சேர்த்து விடும் நேசத்துக்குரியவர்களை..//
ReplyDeleteஉண்மை ரிஷபன் நீங்கள் சொல்வது.
ஒருவாரமும் இதமான தென்றல் காற்றை அனுபவித்தோம்.
சிறப்பாக வலைச்சரத்தை தொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.
இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete// ரெங்கனோடு கலந்து விட்டவர் திருப்பாணாழ்வார்.//
மனித நேயம் என்பதை விளக்க ஆண்டாளா !
அரங்கனே என்று இலக்கு கொண்டு அரங்கனையே தியானித்து அரங்கன் வழி கண்டு அரங்கனையே அடைந்தவள்
ஆண்டாள்.
விசிஷ்டாத்வைதத்தின் சாரம் ஆண்டாளின் வரலாறு
விசிஷ்டாத்வைதம் என்ன என்று பார்த்தோமானால்
" The central idea of Visishtadvaita is this: there exists an Ultimate Principle, an Absolute Being that is the source and substratum of all that exists. This immanent spirit is the inner guide and controller of the whole universe with all its diverse animate and inanimate elements. Communion with this gracious, omnipotent Supreme Being constitutes the supreme end of existence. Such communion is attainable exclusively through self-surrender and undivided, loving meditation. " ( ராமானுஜா ஆர்க்)
அது சரி. திருப்பாணாழ்வார் பற்றி பார்ப்போம்.
எண்ணிய முடிதல் வேண்டும் என்னும் வலையில் , ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சைலஜா அவர்கள்
திருப்பாணாழ்வார் கதையையும் பாசுரங்களையும் விளக்கியது அருள் கூர்ந்து பார்க்கவேண்டும்.
பரமனின் பாதங்களையே நினைந்து நினைந்து உருகும் திருப்பாணாழ்வாரின் நிலை குறித்துத் தாயார்
பெருமாளிடம் பரிந்துரைக்க, பெருமாள் சாரங்க முனியின் கனவிலே தோன்றி, நும் தோளிலே தூக்கி எம்
சன்னதிக்குக் கொணரக என்ப்பணிக்க, சாரங்க முனிவரின் தோள்களிலே வீதிதோறும் ஊர்வலமாய்
வந்து அரங்கனின் சரணடைந்த ஆழ்வார் என்ன அனுபவம் கொண்டார் என்பதை திருமதி சைலஜா அவர்கள்
சொற்களிலே
"ஆழ்வார் அரங்கனைதான் கண்ட அனுபவத்தை பத்தே பாசுரங்களில் பாடிக்காட்டுகிறார் சகலவேத சாரமான ஓங்காரத்தில் அடங்கி உள்ள அகாரம் உகாரம் மகாரம் ஆகிய மூன்று எழுத்துக்களைக்கொண்டு முதல்மூன்று பாசுரங்களில் தொடங்குவதால் இப்பிரபந்தம் ஓங்காரத்தின் சாரமானது என்று ஆழ்வாரே உணர்த்துகிறார். நாம் பற்ற வேண்டியது எம் பெருமானின் பாதுகையே என்பதை ஐந்து ஆறு ஏழாவது பாசுரங்களில் முதல் எழுத்துக்களில் உணர்த்துகிறார்
காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்
பாண்பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழமறையின் பொருள் என்று பரவுமின்கள்
என்று சுவாமி தேசிகரும் போற்றுகிறார்."
ஆக, ஆண்டாள்,திருப்பாணாழ்வார் இருவருமே அரங்கனை அன்றி அண்டத்திலே யாரையுமே நினைத்ததில்லை.
அரங்கனுக்காகவே பிறந்தவர்கள். அரங்கன் வழி உணர்ந்து அரங்கன் சரண் அடைந்தவர்கள்.
மற்ற மனிதர்களைப் பற்றி அவர்கள் நினைத்திருப்பரோ ?
அப்படியிருக்க மனித நேயத்திற்கு உதாரணமாக காட்டுவதைப் புரிந்துகொள்வதற்கு
சிரமமாக இருக்கிறது.
தயவு செய்து அருள் கூர்ந்து விளக்கவேண்டும்.
தாசன்,
சுப்பு தாத்தா.
சுப்பு தாத்தாவுக்கே விளக்கம் தரணுமா..
ReplyDeleteஓக்கே இதுவும் அவன் திருவிளையாடல்.
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.. என்று முதலில் சாதித்தவள் ஆண்டாள்.. இது மனிதநேயம்தானே அய்யா..
பாணர் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கப் போய்த்தானே அரங்கன் லோகசாரங்க முனிவரிடம் சொல்லி பாணரைத் தோளில் சுமந்து வரச் செய்தார்.. ரெங்கனின் திருவிளையாடல் அல்லவா அது. யாரும் தாழ்ந்தவர் இல்லை.. அவன் முன் எவரும் சமம் என்று உலகுக்குக் காட்டிய அற்புதம் அல்லவா அது..
சரிதானே அய்யா..
ஸ்ரீரங்கத்துத் திண்ணையில் அமர்ந்து சகபதிவர்கள் பற்றி உரையாடியது போன்ற உணர்வு. சிறப்பாக முடித்தீர்கள் இந்த வாரத்தை.
ReplyDelete
ReplyDeleteஸ்ரீமத் நிகமாந்த மகாதேசிகன் அருளிச்செய்த
கோதாஸ்துதியை ஒரு முறை அருள் கூர்ந்து ஒவ்வொரு பாவையும் பாவில் உள்ள ஒவ்வொரு சொல்லையும் தாங்கள்
அரங்கனருளால் அவசியம் படிக்கவேண்டும். ஆண்டாள் அவனுக்காகவே பிறந்து அவனுக்காகவே வளர்ந்து அவன்
திருவடியை அடைந்த தாயாரின் அம்சமே . ( அம்சம் என்று சொல்வது கூட ஒரு அண்டர்ஸ்டான்டிங்காகத்தான். )
கோதாஸ்துதியை நான் படித்த புரிந்து கொண்ட அளவில், ராமாவதாரத்தில் சீதையாகவும், தத் பஸ்ச்சாத் கோதையாகவும்
அந்த மஹாலக்ஷ்மியே அவதாரம் பண்ணினதாகத்தான் நினைக்கிறேன்.
உங்க கோணத்திலே மனித நேயம் என்பதற்கு அர்த்தம் ஆண்டவனே இந்த லோகத்திலே இருக்கறவாள்லாம் ஜன்மம் எடுத்ததற்கு
காரண கார்யங்களைத் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு வழி நடத்துவது தான் என்றாலும்
அப்படி சொல்றது ராமானுஜர். ஆகவே, நீங்க சொல்லணும் ஒரு உதாரணம் மனித நேயத்துக்குன்னா, அப்படின்னா அந்த ராமானுஜரைச் சொல்லுங்கோ...
திருப்பாணாழ்வார் கதைலே அந்த சாரங்க முனிவரை மனித நேயத்திற்கு உதாரணமா சொல்லுங்கோ...
ஒரு எக்ஸ்டென்டுக்கு புரிஞ்சுக்கரேன். அதிலே கூட அவர் அரங்கனின் கட்டளையை நிறைவேற்றுகிறாரே தவிர அவராவே முன்னின்று
செய்யவில்லை. ஹி வாஸ் ஜஸ்ட் எக்சிக்யூடிங்க் ஹிஸ் ஆர்டர்ஸ்.
இல்ல... நீ தாண்டா அந்த பிரம்மம்.. தத் த்வமஸி. அதைப் புரிஞ்சுக்கோ அப்படின்னு ஆண்டாளோ திருப்பாணாழ்வாரோ சொல்லல்ல. ( அத்வைத வழி சொல்லியிருந்தா ஒரு வேளை மனித நேயமாக இருக்கலாமோ என்னவோ) ஆனா இது விசிஷ்டாத்வைதம். பெருமாளை ஒண்ணு குரங்குக்குட்டி போல இல்ல பூனைக்குட்டி போல புடிச்சுக்கணும்
பரமாத்மாவை சரணடையவேன்டியதற்காகத் தான் இந்த ஆத்மா ஜன்மம் எடுத்திருக்கு. அப்படின்னு புரிஞ்சுண்டவா ஆண்டாளும் திருப்பாணாழ்வாரும். அதுலேயும் ஆண்டாளுக்கு தான் தான் மஹாலக்ஷ்மி என்பது தத் தர்சனமாகத் தெரியும் என்று தான்
தேசிகன் கோதாஸ்துதி சொல்றதுலேந்து புரியுது.
மனித நேயம் ஹ்யூமன் ரிலேஷண்ஸ் ஹெச் . ஆர்.
எல்லாமே மனுசன், மனுசன் கிட்டே, அடேய், நீ மனுசனா வாழ் என்னென்ன செய்யணும், அப்படின்னு எடுத்து சொல்றதும், அதுக்கு ஏத்தபடி தானே வாழ்ந்து காட்டுவதும் தான் . எல்லோர் கிட்டேயும் அன்பாய் இரு. அன்பே சிவம். அந்த சிவ ச்வரூபத்தை புரிஞ்சுக்க, ஜீவ காருண்யம் முக்கியம் அப்படின்னு எடுத்துச் சொல்ற வள்ளலார் மனித நேயத்திற்கு உதாரணம்.
ஐ அம் சோ சாரி. உங்க மனித நேய டெஃபனிஷன் எனக்கு புரியல்ல..,
நான் ஒரு ட்யூப் லைட்.
நான் அம்பேல்.
சுப்பு தாத்தா.
நேரமின்மையால் கொஞ்சநாட்களாக பதிவுகளை படிக்க முடியாமல் போய்விட்டது.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
பேச்சிலர் சமையல் போட்டி கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html
ஸ்ரீரங்கத்திலேயே ஒரு முழு வாரத்தைக் கழித்தது போல ஒரு உணர்வு; நிறைவு.
ReplyDeleteஸ்ரீராம் வெகு அழகாகச் சொல்லிவிட்டார்.
ஒவ்வொரு நாளும் உங்கள் முகவுரையை திரும்பத் திரும்ப படித்தேன்.
எங்க ஊர் என்ற கோணத்திலேயே இத்தனை நாள் பார்த்த ஸ்ரீரங்கம் பல பரிமாணங்களை கொண்டுள்ளதை உணர முடிந்தது.
அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுத்துள்ளீர்கள் ரிஷபன் சார்!
பாராட்டுவதற்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை.
வணக்கம்
ReplyDeleteரிஷபன்(அண்ணா)
7 நாட்களும் சிறப்பான வலைத்தளங்களை அறிமுகமாக்கி அனைவருக்கும் பயன் உள்ளவாறு வழங்கிய உங்களுக்கு எனது நன்றிகள்,
இன்று அறிமுகமான தளங்கள் அனைத்தும் அருமை,தொடருகிறேன் பதிவுகளை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான தொகுப்பு! சிறந்த பதிவர்கள்! அருமையாக தேடித் தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteவாழ்க்கை மகத்தானது.. அது ஒரே அலைவரிசையில் கொண்டு வந்து சேர்த்து விடும் நேசத்துக்குரியவர்களை..
ReplyDeleteமகத்தான வரிகள்...
மனதில் ஸ்ரீரங்கத்தை தரிசனம் செய்யவைத்தமைக்கு நிறைவான நன்றிகள்...
ஸ்ரீரங்க தரிசனமும், பதிவர்களின் தரிசனமும் இனிமையாகப் பூர்த்தியானது.
ReplyDeleteஅருமையான வலைப் பதிவர்களைக் குறிப்பிட்டு
ஆனந்தம் அடையச் செய்தீர்கள். தங்களுடைய நுணுக்கமான வாசிப்புத் திறன் பளிச்சிடுகிறது
சுப்பு சாரின் விளக்கங்களுக்கும் நன்றீ.
நிதமும் கோயிலின் சிறப்புகளோடு பதிவுகள் அறிமுகம் கொடுத்தது வித்தியாசமான முறை. அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteஇந்த வாரம் முழுவதும் கருத்துக்களும் அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...
வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று ,பிருதிவி ( நிலம் ), அப்பு (நீர்), தேயு (நெருப்பு ) , வாயு (காற்று) , ஆகாயம் (வெட்டவெளி) என்று பஞ்சபூதங்களின் பெயரில் தொடங்கி இத்தனை நாட்கள் பதிவுகளையும் வலைப் பதிவர்கள் அறிமுகத்தினையும் தந்த எழுத்தாளர் ரிஷபன் அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி ..
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தின் இறுதிநாளான ஏழாவது நாளும் வந்துவிட்டது… ரிஷபனின் பொறுப்பும் தீர்ந்தது… ரசனையான எழுத்துகளும் இங்கே…. நீர் நிலம் ஆகாயம் நெருப்பு மழை என்று எங்களை ரசனையில் மூழ்கவைத்து ஸ்ரீரங்கத்தைச்சுற்றி காண்பித்து அழகான எழுத்துகளில் மெய்மறக்கவைத்து இதோ வந்தே விட்டது…. பஞ்சபூதம் சொன்ன அத்தனையும் உணர்ந்து ரசித்தோம்..
ReplyDeleteஇன்று மனிதர்களைப்பற்றி… மனிதநேயத்தைப்பற்றி…. மனித உணர்வுகளை பிணைக்கும் அன்பைப்பற்றி…. மனிதர்களை இணைக்கும் எழுத்துகளைப்பற்றி….
அட 143 சுட்டிப்பெண் ஆண்டாள் தான் முதல் பெண்ணா? வெரிகுட் வெரிகுட் அழகிய சிந்தனை தான் ரிஷபா…. ரசித்தேன் நான்…
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே…. எல்லோரும் உங்களுடனே சேர்ந்து பயணித்தோம் ஏழு நாட்களும்… அரங்கன் தரிசனம்… இன்றோ ஆண்டாளின் காதல் அரங்கனுடன்…
நாம் பேசாது இருந்தாலும் நம் எழுத்துகள் எல்லோருடனும் பேசிக்கொண்டு தான்…. அன்பைப்பகிர்ந்துக்கொண்டு தான்.. மனிதம் உரைத்துக்கொண்டு தான்…. உறவை வளர்த்துக்கொண்டு தான்…. நட்பை பெருக்கிக்கொண்டு தான்….
உண்மையே ரிஷபா… மனிதம் பேசாத எழுத்து ஜீவனற்றது… என்ன ஒரு அருமையான சிந்தனைப்பா….. அற்புதமான யோசனை.. நமக்குள் இருக்கும் வேறுபாடு மட்டுமல்ல எல்லாத்தையுமே ஒரு புறம் ஒதுக்கி வெச்சுட்டு அன்பை மட்டுமே பகிர்வோம் எல்லோருடனும்…. உலகம் அன்புமயமாகட்டும்…
அன்பைப்பற்றி சொல்லும்போதே ஸ்ரீரங்கக்கோயிலில் அரங்கனுடன் ஐக்கியமான திருப்பாணாழ்வார் ஆண்டாள் பற்றிய கூடுதல் விவரங்கள் அறிந்தோம்… அதெப்படி ரிஷபா எதைச்சொன்னாலும் ரசனையுடன் பகிர்வது??? ஆண்டாள் தெரியும்… அரங்கனை மனதினில் வைத்து பூஜித்து அரங்கனுடனே ஐக்கியமானதும் தெரியும்… ஆனால் 143 லெவலுக்கு எப்படி யோசிச்சீங்கப்பா??? ஆண்டால் பிரேமையின் ஸ்வரூபம்… ரசனையான வரிகள்….
இன்றைய அறிமுகங்களில் நான் அறிந்தவர் துளசிகோபால் டீச்சர், மின்மினி பூச்சி ஷக்திப்ரபா மட்டுமே.. மீதி தளங்களை சென்று பார்க்கவேண்டும்…
மனிதனில் உண்டு மனிதம்… மனிதம் மறக்காத மனிதனின் எழுத்துகளில் உண்டு உற்சாகம், மனிதநேயம், ஊக்குவிக்கும் அற்புதம், ரசனை….
அற்புதமான ஏழுநாட்களின் உலா இன்று முடிந்தது… அரங்கனும் துயில் கொள்ளச்சென்றுவிட்டார்….
ரிஷபனின் ஏழுநாட்கள் வலைச்சர ஆசிரியர் பணி மிக அற்புதமாக நிறைவேற்றியமைக்கு அன்பு நன்றிகள்பா…
அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு உள்ளங்கள் அனைவருக்குமே அன்புவாழ்த்துகள்பா…
ஆண்டாளோ பிரேமையின் சொரூபம். இந்நாட்களில் நாம் சொல்லும்
ReplyDelete143 ( I love you) வைக் கண்டுபிடித்த அந்த நாள் சுட்டிப் பெண்.
143 பாசுரங்களில் அவள் சொன்ன தமிழை இனி யாரும் விஞ்சப் போவதில்லை..//
தமிழை ஆண்ட பெண்ணைப் பற்றிய வர்ணனை பிரமாதம். அருமையான வாரம். சிறப்பான நிறைவு. வாழ்த்துகள்.
ஒவ்வொரு பதிவும் ஒரு கவிதையைப் போல் மிளிர்ந்தது.
கை குலுக்கிக் கொள்வோம்.. அன்பாய். சிரிப்புடன். அவரவர் சிந்தனைகளில் இருக்கும் வேறுபாட்டை ஒரு ஓரமாய் உட்காரவைத்துவிட்டு. எதையும் விட மேலானதாய் நம் பிரியம்..//
ReplyDeleteவிடை பெறுதலும் விடை தருதலும் ஒரு நிறைவான நிம்மதியுடன்...
அருமையான பல அறிமுகங்களுக்கு நன்றி .
ReplyDeleteரிஷபன்!
ReplyDeleteஉங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுத நிச்சயம் முயல்கிறேன். :-)