விடைபெறுமுன்...
➦➠ by:
இமா க்றிஸ்
இது என் இறுதி ஆசிரியர் தினம் இங்கு.
எல்லோரும் நலமோடிருத்தல் அன்றி
வேறொன்றும் வேண்டாத... விஸ்வநாத் கிறுக்கல்களிலிருந்து... என் எதிரில் ஒரு சிங்கம், உறங்க விடு என்கிறது. 'ஆசிரியர் தினம்', சிரிக்க மட்டும். மீதி இரண்டும் கவிதைகள்.
~~~~~~~~~~
மலேஷிய மண்ணிலிருந்து எழுதும் பச்சைபாலன் அவர்களது சுயவிபரம் கண்ணிற் படவில்லை. ஆசிரியராக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒவ்வொரு தடவையும் தாய்நாடு சென்று நான் வாழ்ந்த வீட்டைக் கடக்கும் போது... மெல்லிதாய்... ம்ஹும்! பலமாய் ஒரு வலி தாக்கும் உள்ளே. வீடு திரும்புதல் அந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. கட்டாயம் படித்துப் பாருங்கள். இது... வேறு ஒரு உலகம்.
//புதிய மன்னருக்குத் தமிழ் உச்சரிப்பு தகராறு பண்ணியது. மூன்று நாள்
பயிற்சி
கொடுத்தால் மன்னரைத் தேற்றலாம் என நினைத்தேன். அது அவ்வளவு எளிதில்லை
என்பது புரிந்தது. இன்னும் கொஞ்சம் மிரட்டினால் மன்னர் அழுதுவிடுவார்
போலிருந்தது.// என்னதான் சொல்லுகிறார்!! :-) நீங்களே அரங்கினுள் நுழைந்து
பாருங்கள். நேரம் தாராளமாக இருக்கும்போது படியுங்கள். நிச்சயம்
ரசிப்பீர்கள்.
முகம் பற்றி ரசனையாக ஒரு குட்டி ஆராய்ச்சி செய்திருக்கிறார். இவர் ஆடு மேய்த்த நாட்கள் இங்கே. மலேஷிய மண்ணிலிருந்து வந்து, தமிழ்க் காற்று வெளியில் நிறைந்தவர்
இங்கே கவிதையாக.
வேண்டாத அலங்காரங்களற்ற மிக எளிமையான வலைப்பூ அமைப்பு,
அற்புதமான, தெளிவான, கண்ணுக்கும் மனதிற்கும் இதமான எழுத்து நடை.... அதிக
சிரத்தை எடுத்துப் பதிவிட்டுள்ள இடுகைகள்... நாம் பார்த்துக் கற்க நிறைய
இருக்கிறது பச்சைபாலனிடம்.
~~~~~~~~~~
பென்சில் கொண்டு எழுதும் (எழுதிய) ஆ.சுதா, 'எழுத்துப்பிழை இருக்கும். முடிந்த வரை சொல்லிக் கொடுங்கள் கற்றுக் கொள்கிறேன்.' என்று வேண்டுகோள் வைத்துவிட்டே கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறார். அதனால்... சுதா எழுதியுள்ள கொடிய பகலின் விசும்பல்களிலோ "தொடர்" என்னும் வண்டி கவிதைகளிலோ குற்றம் பாராது அழகை மட்டும் ரசியுங்கள். அலைகளையே கூடக் கொலை செய்தாலும் அவர் கனவுகளை வெளியெறிதல் ஆகாது.
பத்திரிகைகளுக்கு அனுப்பும் ஆக்கம் என்றால், தரமானதாக இருந்தால் போதும். எப்படியும் அங்கு பிழைதிருத்தம் செய்வதற்கு ஆட்கள் இருப்பார்கள். வலையுலகில் அப்படி இல்லை. கணனி தானாகச் செய்யும் தவறுகள் வேறு. ஒவ்வொரு வலைப்பூவுக்கும் சரிபிழை பார்க்க ஒருவரை நியமிக்க இயலுகிறதா என்ன!

இங்கு
எல்லோரும் என்னைவிட அதிகமாக வலை மேய்பவர்களாக இருக்கிறீர்கள்.
வலைச்சரத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட இந்தச் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரேயொரு
வலைப்பூவையாவது அறிமுகம் செய்திருந்தால்... மகிழ்ச்சி.
கிளம்பும் முன் முக்கியமான விடயம் ஒன்று சொல்ல
வேண்டும். நேரம் கிடைக்கும் சமயம் எல்லாம்
வலைச்சரத்திற்காக சுட்டிகள் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு உண்மை புரிந்தது.
அரியது கேட்கின் வலையுலகோரே
அரிது அரிது வலைப்பூ பராமரிப்பு
அதனினும் அரிது படித்துக் கருத்து இடுதல்
அதனினும் அரிது வலைச்சரம் நடாத்தல்
அதனினும் அரிது DD காணாத
வலைப்பூ ஒன்றினைக் காண்பதுதானே!
'தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான்' போல எங்கும் பின்னூட்டம் கொடுத்திருப்பார் சகோதரர் திண்டுக்கல் தனபாலன். வாழ்த்துக்கள் தனபாலன். வலைப்பூவிலுமா! என்னும் இந்த இடுகையை புதிதாக வலைப்பூ ஆரம்பிக்க இருப்பவர்கள், ஆரம்பித்திருப்பவர்களுக்காக இங்கு பகிர்கிறேன்.
~~~~~~~~~~
இரண்டு முறை "அதுதான் எனக்குத் தெரியுமே!" என்பது போல பின்னூட்டம்
பதிவு செய்திருந்தார். நானும் தீயாக வேலை செய்து... கண்டுபிடித்தேன் தனபாலன்
காணாத வலைப்பூவொன்றை. :-) ஒரு கீவி 'யுரேக்கா!' என்று கூ..விற்று.
புனிதாவின்... கீவியின் கூவல்! இதோ. இப்போது தனபாலன் வந்து, "அதுதான் எனக்குத் தெரியுமே!" என்று சொல்ல முடியாதே! :-)
இந்த ஒரு வாரத்தில்... எனக்கும் சிலர் & சில வலைப்பூக்கள் அறிமுகமாகியிருக்கின்றன(ர்). வலைச்சரம், இமாவின் உலகம் தொடர்ந்து சுழல வேண்டும் என்கிற உணர்வைக் கொடுத்திருக்கிறது. ஆமாம், நானே என் உலகை மறந்திருக்கும் போது யாராவது வலைப்பூவில் அறிமுகம் செய்து வைப்பார்கள். ஒருவிதமான குற்ற உணர்வு தோன்றும். இனி பெரிதாக இடைவெளி விடாது எழுதுவேன்... என்று நினைக்கிறேன். :-)
அருமையான இந்தச் சந்தர்ப்பத்தைக் கொடுத்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் வலைச்சர துணை ஆசிரியர்களுக்கும் ஆதரவளித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.
அடுத்து வரும் ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
_()_