07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சொக்கன். Show all posts
Showing posts with label சொக்கன். Show all posts

Sunday, June 8, 2014

இறைவனுக்கும் தமிழ் அன்னைக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்






(காரைக்குடி கம்பன் கழகத்தில் இருக்கும் தமிழ் அன்னை சிலை)

அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,

இன்று என்னுடைய வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு கடைசித் தினம். இறைவனின் அருளாலும், தமிழ் அன்னையின் ஆசியாலும் தான், என்னால் இந்த பொறுப்பை  நல்லவிதமாக முடிக்க முடிந்தது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இன்றைக்கு ஆன்மிக பதிவர்களில் சிலரையும், நமக்கு கோவில்களை அறிமுகப்படுத்தியவர்களையும், தமிழை சொல்லிக்கொடுப்பவர்களையும் இன்றைக்கு பார்க்கலாம்.

முதலில் ஆன்மிக பதிவர்களை பார்க்கலாம்.

ஆன்மிக பதிவாளர்கள் என்றாலே எனக்கு முக்கியமாக நியாபகத்துக்கு வருவது ராஜராஜேஸ்வரி அம்மாவும், வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களும் தான்.

ராஜராஜேஸ்வரி அம்மா அவர்கள் தினமும் ஒரு ஆன்மிக செய்தியை பதிவிடுவார்கள். அதில் நிறைய தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த பதிவில் அவர் நவக்ரஹ விநாயகரைப் பற்றி சொல்லியிருக்கிறார். நவக்கிரஹ விநாயகர்

கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் வலைப்பூவில் காஞ்சிப் பெரியவர்கள் பற்றி நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடியும் - பக்தியே முக்திக்கு வழி

அடுத்து வெளி நாடுகளில் உள்ள தமிழ் கோவில்களை பற்றி எழுதிய பதிவர்களைப் பார்ப்போம்.


சிங்கப்பூர்
சிங்கப்பூரில் வசிக்கும் திரு. கிருஷ்ணன் என்பவர் தன்னுடைய வலைப்பூவில் சிங்கப்பூரில் உள்ள கோயில்களைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார். - சிங்கப்பூரில் இருக்கும் கோவில்கள் 

அமெரிக்கா
கோமதி அரசு என்பவர் திருமதி பக்கங்கள் என்ற தன்னுடைய வலைப்பூவில் அமெரிக்காவில் இருக்கும் சில கோயில்களைப் பற்றி சொல்லியிருக்கிறார் - அமெரிக்காவில் இருக்கும் சில கோவில்கள்


மற்ற நாடுகளில் உள்ள கோவில்களின் படங்கள்

டாக்டர். சாரதி என்பவர் தன்னுடைய வலைப்பூவான தமிழன் சுவடில், உலகத்திலுள்ள பல கோயில்களின் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதில் “அம்மன் கோவில் (Mother temple of besakih) பாலி, இந்தோனிசியா”  இந்த வரிகளுக்கு மேல் உள்ள படம் ஆஸ்திரேலியாவில் சிட்னி முருகன் கோவில் படமாகும். உலகெங்கும் இருக்கும் கோவிலின் படங்கள்

செந்தில் ராஜா என்பவர் தன்னுடைய வலைப்பூவில் மற்ற நாடுகளில் உள்ள கோவில்களின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் - வெளி நாடுகளில் உள்ள கோவில்களின் படங்கள்


அடுத்து இந்தியாவில் இருக்கும் கோவில்களை நமக்கு அறிமுகப்படுத்திய சிலரை பார்க்கலாம்.

நண்பர் சுரேஷ், தன்னுடைய வலைப்பூவில் திருப்போரூர் முருகனைப் பற்றி சொல்லியிருக்கிறார் - திருப்போரூர் முருகன்

அடுத்து நம் சகோதரி ராஜீ அவர்கள் தன்னுடைய வலைப்பூவில் “சொர்ணாகர்ஷண கிரிவலத்தைப்” பற்றி விளக்கமாக சொல்லியிருக்கிறார் - சொர்ணகர்ஷண கிரிவலம்

அடுத்து சகோதரி புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள், தன்னுடைய வலைப்பூவில் நவத்திருப்பதி திருத்தலங்களை பற்றி சொல்லியிருக்கிறார் - நவத்திருப்பதி தலங்கள்


இனி, தமிழ் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக, தமிழை சொல்லிக்கொடுப்பவர்களில் சிலரை பார்ப்போம்.

எதிர்நீச்சல்க்காரன் என்பவர் தன்னுடைய வலைப்பூவில் இணையத்தில் தமிழ் கற்க வாங்க என்று கூறி, எந்தெந்த இணையத்தளங்களில் தமிழ் கற்க முடியும் என்று கூறியிருக்கிறார். தமிழ் கற்க வாங்க

தமிழ் இலக்கணங்களை இரண்டு பேர் தங்களுடைய வலைப்பூவில் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

நண்பர் சுரேஷ் அவர்கள் உங்களின் தமிழ் அறிவு எப்படி? என்று நமக்கு தமிழ் இலக்கணத்தை சொல்லிக்கொடுத்து வருகிறார் உங்களின் தமிழ் அறிவு எப்படி?

அசோகன் என்பவர் தன்னுடைய வலைப்பூவில் எழுத்து இலக்கணம், அணியிலக்கணம் என்று தமிழ் இலக்கணங்களை சொல்லிக்கொடுக்கிறார்.


புதிர்கள் மூலமாக தமிழை  சொல்லிக்கொடுப்பவர்கள் இவர்கள்.

மணி மு.மணிவண்ணன் என்பவர் தன்னுடிய வலைப்பூவில் சொல்வளம் என்று கேள்விகளைக் கேட்டு பதில்களை வழங்குகிறார்.

தமிழ்புதிர்கள் என்ற வலைப்பூவில் புதிர்கள் மூலமாக தமிழை சொல்லிக்கொடுக்கிறார் - தமிழ் புதிர்கள்

இறுதியாக,

என் மீது அபார நம்பிக்கை வைத்து என்னிடம் இந்த மிகப் பெரிய  பொறுப்பை ஒப்படைத்த சீனு ஐயா அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் என்னுடைய வேலையை சரியாகத்தான் செய்து முடித்துள்ளேன் என்று நம்புகிறேன். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு வேலையை நான் செய்யவில்லை. அது என்னுடைய பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்காதது தான். உண்மையை சொல்லப்போனால் அதை எப்படி இணைப்பது என்று எனக்குத் தெரியாது. நம்ம வலைச்சித்தர் டி‌டி அவர்களின் பதிவை சென்று பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் முடியாமல் போய்விட்டது. எனக்காக அந்த வேலையை செய்தவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இந்த ஒரு வாரமும் என்னுடன் பயணித்து, என்னை ஊக்குவித்த சகோதர சாகாதரிகள் அனைவருக்கும் என்னுடைய உள்ளம் கனிந்த நன்றிகள். இனி வரும் அடுத்த வார வலையாசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.


மேலும் வாசிக்க...

Saturday, June 7, 2014

பொன்னியின் செல்வனை திரும்பிப் பார்ப்போம்





(அமெரிக்காவில் மேடையேற்றப்பட்ட பொன்னியின் செல்வன் நாடகத்தின் ஒரு காட்சி)

அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,

இன்றைக்கு யாரை அறிமுகப்படுத்தலாம்னு யோசித்த பொழுது, பொன்னியின் செல்வன் தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர் ஞாபகத்துக்கு வருவதற்கு காரணம், கடந்த இரண்டு வாரங்களாக நான், பொன்னியின் செல்வனைத்தான் மூன்றாவது முறையாக மிகவும் நிதானமாக புகைவண்டியில் படித்துக்கொண்டு அலுவலகத்துக்கு சென்று வருகிறேன்.

ஏற்கனவே ஒரு குழு பொன்னியின் செல்வன் என்ற பெயரில் யாஹூ குழுமத்தில் (yahoo groups) இயங்கி வருகிறது. அதனால் நிச்சயமாக வலைப்பூவிலும் இந்த புதினத்தைப் பற்றி பேசியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கூகிள் ஆண்டவரை நாடினேன். அவரும்  என்னை கைவிடாமல், அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். இதோ, நானும் அவர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.  

ரவிஷங்கர் என்னும் இவர், "மாதவிப்பந்தல்" என்ற வலைப்பூவில் பொன்னியின் செல்வனைப் பற்றி புதிர் போட்டியே நடத்தியிருக்கிறார். - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு


நம் அன்பிற்கினிய கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்கள் தன்னுடைய வலைப்பூவில், இராஜராஜ சோழனின்  சமாதிக்கு சென்று வந்த அனுபவத்தை விவரிக்கிறார் - பொன்னியின் செல்வன்

கிரிஷ்சந்த்ரு என்பவர் தன்னுடைய அஞ்சறைப் பெட்டி வலைப்பூவில் பொன்னியின் செல்வனில் அவருக்கு ஏற்பட்ட குழப்பங்களை விவரிக்கிறார் - பொன்னியின் செல்வன் - காலத்தை வென்ற புதினம்

முரந்தொடை என்னும் வலைப்பூவில், பொன்னியின் செல்வனைப் பற்றி சில கேள்விகளைக் கேட்டு, அதற்கு தான் அரய்ச்சி செய்து சில பதில்களையும் சொல்லியிருக்கிறார் - பொன்னியின் செல்வன் - சில கேள்விகளும் ஒரு தற்குரியின் பதில்களும்

சுரேஷ் என்பவர் தன்னுடைய கனவுகளே வலைப்பூவில்  குந்தவைத் தான் கொலையாளியா என்று அவருடைய பாணியில் அலசியிருக்கிறார் - குந்தவை தான் கொலையாளியா?

திடங்கொண்டு சீனு அவர்கள் பொன்னியின் செல்வனைப் பற்றி மிக அழகாக தன்னுடைய கருத்துக்களை சொல்லியிருக்கிறார் - பொன்னியின் செல்வன் புதினம் என்னும் பதுமை

தமிழ் பிரியன் என்பவர் இது என்னோட இடம் என்ற வலைப்பூவில் நந்தினிக்கும் வீரபாண்டியனுக்கும் உள்ள உறவை அலசுகிறார் - பொன்னியின் செல்வன் - நந்தினி வீரபாண்டியன் உறவு சர்ச்சை


பொன்னியின் செல்வனை பதிவிறக்கம் செய்வதற்கு இந்த வலைப்பூவிற்குள் செல்லுங்கள் - தமிழ் மின் நூல்கள் - பதிவிறக்கம்


நாம் எல்லோரும் பொன்னியின் செல்வனைப் பற்றி படித்திருப்போம். இந்த தலைமுறையினருக்கு பொன்னியின் செல்வன் எந்த அளவிற்கு அறிமுகம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு பதினோராம் வகுப்பு மாணவி, நான் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் படித்து முடித்து விட்டேன் என்று கூறினார். எப்படி உனக்கு ஈடுபாடு வந்தது என்று கேட்டபோது, நான் சிறியவளாக இருக்கும்போது, என் தாயார் தினமும் அந்த கதையை எனக்கு சொல்லுவார், அப்படி அந்த கதையை கேட்டதிலிருந்தே எனக்கு அந்த புதினத்தின் மீது  நாட்டம் ஏற்பட்டு விட்டது. அதனால் என்னால் அந்த கதையை மிகுந்த ஈடுப்பாட்டோடு இப்போது படிக்க முடிந்தது என்று கூறி என்னை ஆச்சிரியத்துக்குள்ளாக்கினார்.

நாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.


மேலும் வாசிக்க...

Friday, June 6, 2014

வெளிநாட்டிற்கு சுற்றுலா போகலாமா




அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,

இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி விட்டது. இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு சுற்றுலா போவது என்பது மிகவும் பெரிய விஷயம். அதிலும் வெளிநாட்டிற்கு போவது என்பது ரொம்பவே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு இந்தியாவிற்குள்ளேயோ, வெளிநாட்டிற்கோ சுற்றுலா போவது என்பது ஒரு கஷ்டமான காரியமே இல்லை.

வெளிநாட்டைப் பற்றி எழுதிய பதிவர்களைத்தான் இன்றைக்கு நாம சந்திக்கப் போகிறோம்.

இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு, ஏறக்குறைய எல்லா நாட்டிற்கும் விசா எடுத்தாக வேண்டும். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நாடுகளுக்குத்தான் விசா எடுக்க வேண்டாம். எந்தெந்த நாடுகளுக்கு விசா வேண்டும் என்ற விளக்கத்துடன் ஒரு பதிவை குட்லக் அஞ்சனா என்பவர் தன் தளத்தில் சொல்லியிருக்கிறார் - விசா வாங்க வழிகாட்டும் இணையத்தளம் இதில் நீங்கள் www.visamap.net என்ற தளத்திற்கு சென்று பார்த்தால் விசா தொடர்பான செய்திகள் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். (www.visamapper.com இயங்கவில்லை)

விசா எடுத்துட்டீங்க, விமானத்திற்கு டிக்கெட் போட வேண்டியது தானே, நாம் நிறைய வலைப்பூக்களில் வீட்டுக்குத் தேவையான டிப்ஸ் படித்திருப்போம். இங்கு மழைக்காகிதம் என்ற வலைப்பூவில் விமான பயணத்திற்கான டிப்ஸ் வழங்கியிருக்கிறார் - விமான பயண டிப்ஸ்

சரி,நீங்க விமான சீட்டும் எடுத்துட்டீங்க, ஆனா சில பல காரணங்களால் உங்கள் விமான சேவையை ரத்து செய்து இருப்பார்கள்,அடுத்த விமானத்தில் தான் நீங்கள் செல்ல முடியும் என்று நிலமை ஏற்படலாம். இது மாதிரி விஷயங்கள் விமானசேவையில் நடக்கக்கூடியது தான். நம் நண்பர் நாடோடிக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே படியுங்கள் - எமிரேட் ஏர்லைன்ஸ் நீங்க நல்லா வரணும்


கீழே சொல்லியிருக்கிற எந்த நாடுகளுக்காவது உங்கள் விமானம் வந்து இறங்கியிருக்கா?

ஹாங்காங்

ஹாங்காங்கிலிருந்து திரு, ராம் என்பவர் ஹாங்காங்கைப் பற்றிய அவர் முழுமையான கட்டுரையை நமக்காக இங்கே எழுதியிருக்கிறார். ஹாங்காங் ஒரு அறிமுகம். உண்மையிலேயே ஒரு நாட்டைப் பற்றிய கட்டுரையை இந்த அளவிற்கு நான் எங்கேயும் படித்ததே இல்லை. அந்த அளவிற்கு விஷயங்களை எளிய முறையில் விளக்கியிருக்கிறார். நான் முதற்கொண்டு, வெளிநாட்டில் இருக்கும் பதிவர்கள் எல்லாம் அந்த அந்த நாடுகளைப் பற்றி இம்மாதிரியான ஒரு கட்டுரையை எழுதி பகிர்ந்துக்கொண்டால், மற்றவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்,

சிங்கப்பூர்

சுஷிமா என்ற இவர் சிங்கப்பூர் பற்றி சொல்லியிருக்கிறார் - நான் கண்ட சிங்கப்பூர்

துபாய்/ஷார்ஜா

திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் முத்துச்சிதறல்  என்ற வலைப்பூ மூலமாக துபாய்,ஷார்ஜா நாடுகளைப் பற்றி எழுதி வருகிறார். துபாய் அழகு.

ஷார்ஜாவில் இருக்கும் ஒரு சிறிய மிருகக் காட்சிசாலையைப் பற்றி இங்கே பார்க்கலாம் - போஷ் பாவ் 

லண்டன்

மூத்த பதிவாளர் திரு.டுபுக்கு அவர்கள் விடுமுறைக்கு வேல்ஸ் போன அனுபவத்தை இங்கே மூன்று பதிவுகளில் சொல்லியிருக்கிறார்.




ஜெர்மனி

டுபுக்குவைபோல் ஒரு மூத்த பதிவாளர் திருவாட்டி சுபாஷினி டிரெம்மெல் அவர்கள் ஜெர்மனியில் நடக்கும் ஒரு சாலைத் திருவிழாவைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள் - சாலைத் திருவிழா

சகோதரி பிரியசகி அவர்கள் கிறிஸ்துமஸ் மார்க்கெட் பற்றியும் கேவலார் சர்ச் பற்றியும் இங்கே சொல்லியிருக்கிறார்கள் - கிறிஸ்துமஸ் மார்க்கெட் மற்றும் கேவலார் சர்ச்

மற்றுமொரு சகோதரி ஏஞ்சலின் அவர்கள் ஐரோப்பாவிற்கு சுற்றுலா போகிறவர்கள் ஜெர்மனியை மிஸ் பண்ணக்கூடாது என்று கூறுகிறார்கள். ஊரைச் சுற்றி பார்ப்போம்


சுவிட்சர்லாண்ட்  

சக பதிவாளர் கில்லர்கீ அவர்கள் சுவிட்ஸர்லேண்ட்டில் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இங்கே சொல்லியிருக்கிறார் - சுவிட்சர்லாண்ட்

இன்னும் நிறைய நாடுகளுக்கு செல்லலாம் தான், ஆனால் எதுவுமே ஒரு அளவோடு இருந்தால் தான் நன்றாக இருக்கும். “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்னு” சும்மாவா சொல்லியிருக்காங்க. அதனால, நான் இத்தோட இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்.

நாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.


மேலும் வாசிக்க...

Thursday, June 5, 2014

ஆண்களின் பார்வையில் பெண் சுதந்திரம்/பெண்ணியம்


அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,

இன்றைக்கு யாரையெல்லாம் அறிமுகப்படுத்தலாம்னு ஒரே யோசனையாக இருந்தது. ஏற்கனவே என்னுடைய புகுந்த வீட்டின் உறவினர்களையும், வலைப்பூவிற்கு புதியவர்களையும், குழந்தை எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியாச்சு. அடுத்து  பெண்களை அறிமுகப்படுத்தலாம்னு தோணுச்சு. ஆனா பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தாமல், பெண்ணியம்,பெண் சுதந்திரம் போன்ற பதிவுகளை எழுதியவர்களை அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தேன். அதிலும் பெண்ணியத்தை பற்றி பெண்களே சொல்லாமல், ஆண்கள் சொன்னால் எவ்வாறு இருக்கும் என்று ஒரு எண்ணம். என்னுடைய எண்ணத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக, நிறைய ஆண் எழுத்தாளர்கள் பெண் சுதந்திரத்தைப் பற்றியும்,பெண்ணியத்தைப் பற்றியும் தங்கள் வலைப்பூக்களில் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிலிருந்து சிலரை மட்டும் உங்களுக்கு அறிமுகப்படுதுவது தான் இந்த பதிவு. இவர்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகியிருக்கலாம். அதனால் அவர்களுடைய இந்த பதிவை மீண்டும் படிக்கும் வாய்ப்பாக நினைத்துக்கொள்ளுங்கள்.

நான் இந்த தலைப்பை எடுத்துக் கொண்டதற்கு காரணம், நம் தாய் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெறுகிவிட்டது. தினமும் பத்திரிக்கைகளில் இந்த செய்திகள் இடம் பெறாமல் இருக்கிறதில்லை. அந்த அளவிற்கு அந்த குற்றங்கள் பெருகி விட்டது. இப்படியிருக்கின்ற சூழ்நிலையில், ஆண்கள் பெண்ணியத்தைப் பற்றியும் அவர்களின் சுதந்திரத்தைப் பற்றியும் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று பார்க்கலாம். 


தஞ்சாவூரான் ஐயா அவர்கள், பாரதி பயிலகம் வலைப்பூ என்ற இந்த வலைப்பூவில், இளம் பெண்கள் ஆண்களிடம் பழகும்போது ஒரு எல்லைக்கோட்டிற்குள் தான் பழக வேண்டும் என்று கூறுகிறார்.     பெண் சுதந்திரம்

நந்தா என்பவர் பத்தினிப்பெண்கள் என்ற தலைப்பில் திருமணமான பெண்கள் தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு அதனுள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார். பத்தினிப் பெண்கள்

டோண்டு என்று புனைபெயரில் நூறு ஆண்டுகளுக்கு அப்பால் பெண்ணின் திருமண வயது என்னாவாக இருக்கும் என்ற கற்பனை குதிரையை தட்டி விட்டிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு அப்பால் - பெண்ணின் திருமண வயது

ஜாக்கி சேகர் என்ற இவர் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் என்ற வலைப்பூவில் பெண் சுதந்திரத்தைப் பற்றி ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். பெண் சுதந்திரம் உண்மையில் இந்த கவிதையில், நம் நாட்டில் மட்டும் தான் ஆண்கள் இப்படி சுதந்திரமாக இருக்க முடியும். அது தான் இந்தியா...

தான்ஸ் என்கிற இவர் விளைச்சல் என்கிற இந்த வலைப்பூவில், பெண்களை பற்றி நினைத்தாலே, அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் தான் நியாபகத்துக்கு வருகின்றன என்று அவருக்கு தெரிந்த வகையில் புலம்பியிருக்கிறார் . பெண்களைப் பற்றிய என்னுடைய எண்ணம் 

கே.ஆர்.பி. செந்தில், தன்னுடைய வலைப்பூவில் தந்தைப் பெரியார் எழுதிய “பெண் எப்போது அடிமையானாள்” என்ற புத்தகத்திலிருந்து சில கருத்துக்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்.  

இதே மாதிரி பெண் உரிமை பற்றி பெரியாரின் மொழிகள் என்று தன்னுடைய வலைப்பூவில் திரு. என்பவர் எழுதியிருக்கிறார் - பெண் உரிமை பற்றி பெரியார் மொழிகள்

அடுத்து ஜெயதேவ் என்பவர் தன்னுடைய வலைப்பூவில் பெண் விடுதலையைப் பற்றி சொல்லியிருக்கிறார். பெண் விடுதலை

தமிழ்மணி என்பவர் தன்னுடைய வலைப்பூவில் தன் தாய்,சஓக்தரி,தன்னுடன் வேலைப் பார்க்கும் தோழி, உடன்பிறவா சகோதரியின் மகள் என்று நான்கு பேரிடமும் சில கேள்விகளைக் கேட்டு அவர்களின் பதில்களை அலசுகிறார். பெண்கள் மத்தியில் பெண்ணியம்

சுவாமி வித்தியானந்தா என்பவர், இந்தியாவில் பெண்களின் சுதந்திரத்தைப் பற்றி புராணங்களோடும், சாஸ்திரங்களோடும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இந்தியாவில் பெண்களின் சுதந்திரம் 

இறுதியாக, அடியேனும் இன்றைக்கு பெண்களுக்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைத்து விட்டதா என்று கேட்டிருக்கிறேன் - பெண்ணியம் காத்து-உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்

நாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.


மேலும் வாசிக்க...

Wednesday, June 4, 2014

ஒரு வயது குழந்தைகளை வரவேற்போம்


அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,

இன்றைக்கு நான் வலைப்பூ உலகில் பிறந்து ஒரு வயது கூட நிறைவடையாமல் இருக்கும் குழந்தைகளையும் மேலும் ஒரு வயதே ஆன குழந்தைகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன். இதில் சில குழந்தைகள் தங்களின் வயதுக்கு மீறிய வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் (100க்கும் அதிகமான படைப்புகளை படைத்திருக்கிறார்கள்) இருப்பினும் அவர்களை நாம் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோம். அதனால் அவர்களை மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களின் பார்வை அந்த குழந்தைகளின் மீது பட வேண்டும் என்று எண்ணுகிறேன். என்னையும் இப்படித்தான் ஸ்கூல் பையன் அவர்கள் உங்களிடம் அறிமுகப்படுத்தியதால், என்னாலும் இந்த அளவு வளர முடிந்தது. அதுபோல் அவர்களும் வளர வேண்டும்.

சரி இனி அந்த குழந்தைகளைப் பார்ப்போமா.

"உமையாள் காயத்ரி" என்ற வலைப்பூவை 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி இன்று வரை 123 பதிவுகளை திருமதி உமையாள் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த பதிவில் செட்டி நாட்டு வெள்ளைப் பணியாரம் இவர் செட்டிநாட்டு பலகாரமான “வெள்ளைப் பணியாரத்தின்” செய்முறையை விளக்கியிருக்கிறார்.


"சுதாஸ் போயெம்ஸ் (sutha’s poems)" என்ற வலைப்பூவில் சுதா யுவராஜ் என்பவர் 2013ஆம் ஆண்டு நவம்பர் முதல் கவிதைகளை எழுதி வருகறார். இந்த பதிவில் நெஞ்சம் பொறுக்குதில்லையே  என்று நம் தேசத்தை நினைத்து குமறுகிறார்.


சந்தோஷ் குமார் என்னும் இவர் "கவிப்படைப்புகள்" என்ற வலைப்பூவில் 2013ஆம் ஆண்டு ஜூலை முதல் 67 பதிவுகளை எழுதியுள்ளார். இந்த பதிவில் அலைபேசியில் சீரழியும் இளம் சிறார்கள் - அலைபேசியினால் இளம் சிறார்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்று தன்னுடைய ஆதங்கத்தை கவிதையாய் கொட்டியிருக்கிறார்.


திரு.பிச்சையா என்பவர் “அய்யவின் களஞ்சியம்” என்ற வலைப்பூவில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி 46 பதிவுகளை எழுதியுள்ளார். இந்த பதிவில் என்ன இது அநியாயம் -  நம் தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழ் உறவினர்களை எண்ணி மனம் வேதனைபடுகிறார்.


மீரா ப்லாசம் என்பவர் தன் "எண்ணத்துரிகையை" 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 80 பதிவுகளை எழுதியிருக்கிறார். இந்த பதிவில் காகிதத்தில் ஒரு காடு ஒரு தூரிகையைக் கொண்டு ஒரு வானத்தை வரைந்து, அதில் எவ்வாறு அவர் அரசியானார் என்பதை மிக அழகாக கவிதைத்துவமாய் சொல்லியிருக்கிறார்.


பாண்டி பிரியன் என்பவர் "கனவுப்பிரியன்" என்ற பெயரில் வலைப்பூவை 2013ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி 159 பதிவுகளை எழுதியிருக்கிறார். இந்த பதிவில் மனைவி அமைவதெல்லாம் - அவருக்கு எப்படி நல்ல மனைவி அமைந்திருக்கிறார் என்று சொல்கிறார்


நாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.


மேலும் வாசிக்க...

குழந்தை எழுத்தாளர்கள்


 
அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,

இந்த பதிவு மற்ற வலைப்பூ எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் பதிவு இல்லை. மாறாக குழந்தைகளையும் எழுத்து உலகத்திற்குள் பயணிக்க ஊக்குவிக்கும் பதிவாகும்.

என்னைப் பொறுத்தவரை எழுதும் பழக்கம் நம்மோடு முடிந்து விடக்கூடாது. அடுத்த தலைமுறையினருக்கும் அதை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் ஆசை. அதனால் நாம் எல்லோரும் நம்முடைய குழந்தைகளை எழுதுவதற்கு ஊக்குவிப்போம். அவர்களை ஊக்குவிப்பதற்கு குழந்தை எழுத்தாளர்களைப் பற்றி சொல்லி அவர்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கலாம். சரி, முதலில் இரண்டு பிரபலமான குழந்தை எழுத்தாளர்களை பார்க்கலாம்.

மேல உள்ள படத்தில் தோன்றுபவரின் பெயர் - ஹர்ஷிதா மேக்டம் (இவரைப் பற்றிய செய்தியை நான் பத்திரிக்கையில் படித்து மிகவும் வியந்து போனேன்). இவர் 12 வயதில் முதல் நாவலையும் 14 வயதில் மற்றொரு நாவலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்த இரண்டு நாவல்களுமே ஆங்கில நாவல்கள் தான். முதல் நாவலின் பெயர் “ரூபி ரஷ்” இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் நாவலாகும். லண்டனை கதைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலாகும். மற்றொரு நாவல் 'அல்மோஸ்ட்... டெஸ்பெரேட்' என்ற ஃபிக்ஷன் த்ரில்லர் நாவல். இது ஸ்வீடனை கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலாகும். இதில் முக்கியமான விஷயம்,அந்த இரு நாடுகளுக்கும் அவர் சென்றதில்லை என்பது தான். பள்ளிக்கூடம் போய் படிக்கிற வயதில் எப்படி இந்த ஆர்வம் வந்தது என்று கேட்டால், அவருடைய தந்தை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து ‘வாசிப்பு என்பது வரம்’ என்று சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறார். பிறகு அந்த வாசிப்பே அவரை எழுத தூண்டியிருக்கிறது.
 
 
 

மற்றொரு குழந்தை ஸ்காட்லாண்ட்டைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவி மார்த்தா பேய்ன் (‘Martha Payne’) அவர் தன்னுடைய வலைப்பூவான NEVERSECONDSவில் ஆரம்ப நிலை பள்ளிக்கூடத்தில் வழங்கப்படும் மதிய உணவினை பற்றி எழுதி வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட அந்த வலைப்பூ தற்சமயம் பத்து மில்லியன் ஹிட்ஸ்ஸை கடந்து சாதனை புரிந்து வருகிறது. இந்த வலைப்பூவை ஆரம்பிக்கும்போது அவருக்கு ஒன்பது வயது தான். ஆரம்பத்தில் அவருக்கு இந்த வலைப்பூவை தொடரமுடியாதபடி பள்ளியிலிருந்து பிரச்சனை ஏற்பட்டிருக்கு, ஆனால் அவருக்கு ஊடகத்துறையும், மக்களுக்கு ஆதரவளித்ததைத் தொடர்ந்து, அவர் அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.
 

எனக்குத் தெரிந்து நம் வலைப்பூ நண்பர்கள் வட்டத்தில் இருந்து திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் மகளான செல்வி. ரோஷினி வெங்கட் மட்டும் தனியாக வலைப்பூவை ஆரம்பித்து அதில் படங்களை வரைந்து கொண்டு வருகிறார். வெளிச்சக்கீற்றுகள்

பெரியவர்கள் நாம் உற்சாகம் அடைவதற்கு, மற்றவர்களின் பாராட்டுக்கள் தேவையாக இருக்கிறது. அப்படியிருக்க குழந்தைகளின் படைப்புகளை கண்டிப்பாக நாம் பாராட்டினால் தான் அவர்கள் மேன்மேலும் தங்களை வளர்த்துக்கொள்வார்கள். அதனால் வேறு எந்த குழந்தையாவது வலைப்பூவையில் (தமிழிலோ,ஆங்கிலத்திலோ) எழுதிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது வரைந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால் சொல்லுங்கள், நான் அவர்களையும் இந்த பதிவில் சேர்க்கிறேன்.

சென்ற ஆண்டு இங்கு சிட்னியில் ‘உலகத் தமிழ் இலக்கிய மாநாடு” நடைபெற்றது, அதில் தமிழ் பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை மாநாட்டு மலரில் வெளியிட்டார்கள். அதில் எங்கள் பள்ளியிலிருந்து 6 குழந்தைகளின் கட்டுரைகள் வெளிவந்தன. இரண்டு குழந்தைகள் தாமாதமாக கட்டுரைகளை படைத்தமையால் மலரில் வெளியிடப்படவில்லை. இந்த 8 பேரின் கட்டுரைகளையும் நான் என்னுடைய வலைப்பூவில் வெளியிட்டிருந்தேன். அந்த கட்டுரைகள் இதோ:







 
முடிந்தால் இன்று மாலையே மற்றொரு பதிவில் வேறு சில பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.

மற்றொரு குழந்தை எழுத்தாளர் - நம் பதிவுலக சகோதரி ராஜி அவர்களின் மகள் தூயாவின் எழுத்துக்களில் - தேவதையின் கனவுகள் 


மற்றுமொரு குழந்தை எழுத்தாளர் - நம் பதிவுலக சகோதரி ஏஞ்சலின் அவர்களின் மகளின் கைவண்ணத்தில் - Flowers Crafty Room

இப்படி குழந்தைகளின் வலைப்பூக்களை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
மேலும் வாசிக்க...

Tuesday, June 3, 2014

கங்காருவின் மடியில் வளரும் வலைப்பூக்கள்




அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,

இன்றைக்கு தான் என்னுடைய பணியை ஆரம்பிக்கிறேன். முதலில் என்னுடைய புகுந்த வீட்டின் உறவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் உள்ளவர்களை, உயர்வாக  சொல்லும்போது தான், அந்த வீட்டின் சிறப்புகளை காண முடியும். அது போல் நான் இங்கு எனக்குத் தெரிந்த வலைப்பூ எழுத்தாளர்களை பற்றி சொல்கிறேன்.

 
கம்பனின் மீது தீராக் காதல் கொண்டு, அவனுடைய பாடல்களிலிருந்து உவமைகளையெல்லாம் நமக்குத் தந்துக்கொண்டிருப்பவர் தான் திருவாளர். அன்பு ஜெயா அவர்கள் தமிழ்ப் பந்தல்

 ஆஸ்திரேலிய நாட்டின் ஆளும் கட்சியினை திருவாட்டி. சந்திரிகா சுப்ரமணியம் எவ்வாறு விமர்சிக்கிறார் என்று இங்கு பாருங்கள் - சந்திப்போமா? சிந்திப்போமா?

பணத்தைப் பற்றிய ஒரு விரிவான அலசலை, திரு. பக்கிரிசாமி இங்கே தந்திருக்கிறார் ஊக்கமது கைவிடேல்

கானா பிரபாவான இவர், தான் சந்தித்த வலைப்பதிவாளர்களைப் பற்றி அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார். உலா

இவர் தன்னோட  இன்னொரு வலைப்பூவில் தான் வலைப்பூ உலகில் பிறந்து 8 ஆண்டுகளை கடந்து விட்டதை நினைவு கூறுகிறார். மடத்துவாசல் பிள்ளையாரடி

பெண்களை சக மனிதராக பார்க்காமல் நுகர்வுப் பண்டமாய்ப் பார்க்கிறார்களே என்று ஆதஞாப்படுகிறார் ஷ்ரேயா மழை

மகளின் குறும்பை மிக அழகான ஒரு கவிதையின் மூலம் சொல்லியிருக்கிறார் திருவாட்டி. கீதா மஞ்சுரி அவர்கள் - கீதமஞ்சுரி
 

ஆண்களும் பெண்களும் இரண்டு காதுகளை எவ்வாறு பயன்படுத்துக்றார்கள் என்று திருவாட்டி. யசோதா என்கிற மணிமேகலா அவர்கள் ரசிக்கும்படியாக சொல்லியிருக்கிறார்கள். அதாவது ஆண்கள் விஷயங்களை ஒரு காதால் கேட்டு, மறு காதால் வெளியிடுவார்களாம் (நச்சுன்னு சொல்லனும்னா இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடுவாங்களாம்) ஆனால் பெண்கள்...   நீங்கள் படித்துப் பாருங்கள். அக்ஷய பாத்ரம் 

 திரு. ரட்னசீலன் அவர்கள் சிட்னி முருகன் கோவிலைப் பற்றிய  விளக்கங்களை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளார் - yarl puththan
 
சிவஞானதீபம் சதாவதானி நா கதிரவேற்பிள்ளை அவர்களின் சரித்திரத்தை இங்கே வழங்கியிருக்கிறார்கள் திரு. சிறீதரன் அவர்கள் - தமிழ் வலையின் மினி நூலகம்

 சிட்னி முருகன் கோவிலில் வருடாந்திரம் நடக்கும் பங்குனி விழாவைப் பற்றி மிக அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார் கஸ்தூரிபென் நினைவுகள் இலவசம்

நாம எல்லோரும் ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தை மட்டும் தான் சொல்லுவோம். ஆனால் இங்க கோச்சடையான் திரைப்படத்திற்கு விமர்சனம் செய்து, இறுதியில் தன்னோட ஒரு குட்டி கதை மூலமாக இந்த படத்தை சேர்த்த விதம் மிக அருமை. நீங்களும் படித்துப்பாருங்களேன் - படலை

 இறுதியாக, இங்கு ஆஸ்திரேலியாவை இருப்பிடமாகக் கொண்டு மூன்று தளங்கள் இயங்குகின்றன.

 

1.   ஈழத்து முற்றம். அதன் இணைப்பாளர் கானா பிரபா. ஈழத்து முற்றம்


2.   தமிழ் முரசு அவுஸ்திரேலியா - அதன் இணைப்பாளர் பாஸ்கரன் தமிழ் முரசு
 

3. உயர்திணை - அதன் இணைப்பாளராக யசோதா. உயர்திணை

 

உண்மையில் எனக்கு இதில் ஒரு சிலரை மட்டும் தான் தெரியும். அவர்களை மட்டும் எவ்வாறு அறிமுகப்படுத்துவது, கண்டிப்பாக இன்னும் சிலர் இருக்க வேண்டும் என்று எண்ணி, திருவாட்டி, யசோதா அவர்களை தொடர்புகொண்டு கேட்டபொழுது,அவர்கள் அரைமணி நேரத்திற்குள் மற்றவர்களின் வலைப்பூ முகவரிகளை தந்து உதவினார்கள். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

 
மேலும் வாசிக்க...

Monday, June 2, 2014

அனைவருக்கும் வணக்கம்


அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு கலந்த வணக்கங்கள். வலைப்பூ உலகத்தில் இரண்டே வயதான இந்த குழந்தையை நம்பி ஒரு வாரத்திற்கு வலைச்சரத்திற்கு ஆசிரியராகும் பொறுப்பை ஒப்படைத்த அன்புமிக்க சீனா ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஒரு வாரமும் என்னால் இயன்ற அளவு சிறப்பாக இந்த ஆசிரியப்பணியை செய்ய முயல்கிறேன்.

என்னையும் பதிவுலகத்தில் அறிமுகப்படுத்திய ஸ்கூல் பையன் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடியேனின் திருநாமம் சம்பந்தம் ஆகும். கடந்த பதினேழு ஆண்டுகளாக மஸ்கட், யுகே, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஜப்பான் எல்லாம் சுற்றிவிட்டு ஒரு வழியாக ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து சிட்னி மாநகரில் கணினியை மாரடித்துக் கொண்டிருக்கிறேன். வார இறுதி நாட்களில் சனிக்கிழமையன்று சிட்னியில் ஹோல்ஸ்வோர்தி என்னும் இடத்தில் இயங்கும் பாலர் மலர் தமிழ் பள்ளியில் கடந்த ஆறு வருடங்களாக தமிழ் சொல்லிக்கொடுத்து கொண்டு வருகிறேன். உண்மையை சொல்லப்போனால் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கு பதில் தமிழ் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும். (ஏன்னா, அந்த அளவிற்கு நான் தமிழில் ரொம்ப ஸ்ட்ராங்!!!)

2011யில் நாமளும் ஒரு வலைப்பூவை தொடங்கலாம் என்று எண்ணி உண்மையானவன் என்று பெயர் வைத்து ஒரு சுபயோக தினத்தில் தொடங்கினேன். அதற்கு பிறகு என்ன எழுதுவது என்று தெரியாமல் அப்படியே வைத்துவிட்டேன். பிறகு ஒரு வருடம் கழித்து, மீண்டும் அந்த வலைப்பூவை தூசித்தட்டி எழுத ஆரம்பித்தேன்.

நான் சொக்கன் ஆனதற்கு காரணம் இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன்.

சிட்னியில் முதன்முதலில் ஒரு வீட்டை வடகைக்கு எடுப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதை நான் இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன். சிட்னியில் வாடகை வீடு


நான் சிட்னியில் தான் முதன் முதலில் கார் ஓட்டுனர் உரிமத்தை பெற்றேன். அதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இதில் எழுதியிருக்கிறேன். நான் லைசென்ஸ் எடுத்த கதை

எல்லோரும் கவிதை எல்லாம் எழுதுறாங்களேன்னு, நானும் முயற்சி செஞ்சு பார்த்தேன். அப்பத்தான் கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்னு தெரிஞ்சுது. இருந்தாலும் விடாப்பிடியாக உரைநடையில் காதல் கவிதையை இங்கே எழுதியிருக்கிறேன். காதல் தொகுப்பு

தாய்மை என்றொரு சிறிய தொடர்கதையும், காதல் கீதம் என்றொரு சற்று நீண்ட தொடர்கதையும் இங்கே எழுதியிருக்கிறேன். தொடர்கதைகள்

என்னுடைய முதல் அமெரிக்க அனுபவத்தையும், தலைவா திரைப்படத்தில் நடித்த அனுபவத்தையும் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.தொடர் கட்டுரைகள்

சிறு குழந்தைகளின் நாடகமான "தமிழ் பாடம்" நாடகம் இங்கு சிட்னியில் இரு வெவ்வேறு மேடைகளில் மேடையேற்றப்பட்டிருக்கிறது. 

தமிழ் பாடம் - நாடகம்





என்னுடைய சுயபுராணம் சற்றே நீண்டு விட்டது. அதனால் முடித்துக்கொள்கிறேன். நாளை முதல் பதிவர்களை அறிமுகம் செய்யும் வேலையில் இறங்குகிறேன்.


பின்குறிப்பு: சிட்னி நேரமானது இந்திய நேரத்தைக் காட்டிலும் நாலரை மணி நேரம் முன்னதாக இருப்பதால், என்னால் இந்திய நேரப்படி காலை நேரங்களில் பதிவிட இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மாலையில் கண்டிப்பாக பதிவிடுகிறேன். சில நாட்களில், அலுவலகத்தில் கொஞ்சம் வேலை குறைவாக இருந்தால், முன்னதாக பதிவிடுகிறேன்.







மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது