இந்த அறிமுகமும் அவசியம் என்றே கருதுகிறேன்.
➦➠ by:
எஸ்.ராமன்
வலைச்சரத்தில்
எழுதத் தொடங்கிய நாள் முதற்கொண்டு எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்
சங்கத்தைப் பற்றி அவ்வப்போது எழுதிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் ஒரு முழுமையான
அறிமுகம் தேவை என்று நினைக்கிறேன்.
எங்கள்
வெள்ளிவிழா மாநாட்டை முன்னிட்டு ஒரு மலர்
வெளியிட்டோம். அந்த மலரில் கொடுக்கப்பட்ட அறிமுகம் இதே இங்கே அளிக்கிறேன்.
அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் – ஒரு அறிமுகம்
இந்தியா
முழுதும் பரவியிருக்கிற எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொதுக் காப்பீட்டு
நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுடைய வாழ்விலும் வளத்திலும் வசந்த காலமாய்
கலந்திருக்கிற மாபெரும் அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.
இருநூறுக்கும்
மேற்பட்ட தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்திய மக்களின் உழைப்பையும் சேமிப்பையும்
சூறையாடிக் கொண்டிருந்த காலத்தில் ‘ இன்சூரன்ஸ்துறையை தேசியமயமாக்கு “ என்ற
கோரிக்கையோடு 1951 ல் உதயமானது அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கம். எங்களின் தொடர் போராட்டம் தனியார் கம்பெனிகளின் கொள்ளையை தடுத்து
நிறுத்தியது. எல்.ஐ.சி ஆப் இந்தியா எனும் மகத்தான நிறுவனம் 1956 ல் உருவாக காரணமாக
இருந்தது.
1994 ல் உலகமயமாக்கல் கொள்கைகளின் தாக்கத்தில்
மத்தியரசு நியமித்த மல்கோத்ரா குழு, லாபகரமாக இயங்கும் எல்.ஐ.சி நிறுவனத்தை
தனியார்மயமாக்க வேண்டும் என்று பரிந்துரை
அளித்தது. ஒன்றரை கோடி மக்களின் கையெழுத்துக்களை திரட்டிய கையெழுத்து இயக்கம்
உட்பட தொடர்ச்சியான போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், பிரச்சார இயக்கங்கள் மூலமாக
அந்த முயற்சியை முறியடித்து இந்தியாவின் முதன்மையான நிதி நிறுவனமான எல்.ஐ.சி
நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாத்து வரும் பெருமை எங்களது அமைப்பையே
சாரும்.
பாலிஸிதாரர்களின்
சேவையில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருவது எங்கள் சங்கம். புதிய பணி நியமனம்
இல்லாத போதும், கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும் பாலிஸிதாரர்களுக்கான பலன்கள் குறித்த காலத்தில் சென்றடையும் அளவிற்கு சிறந்த
பணிக் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ள மரபு
எங்களது சங்கத்திற்கு உண்டு. எல்.ஐ.சி சட்ட திருத்த சட்டம் மூலம் பாலிஸிதாரருக்கான
போனஸ் தொகையை குறைக்க மத்தியரசு செய்த
சதியை எங்களது போராட்டங்கள் முறியடித்தது.
இன்சூரன்ஸ்துறையில்
பத்தாண்டுகளுக்கு மேலாக தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டுக் கம்பெனிகளோடு கூட்டாக
செயல்பட்டு வந்தாலும் எந்த ஒரு நிறுவனமும் இன்னமும் லாபமீட்டும் நிலையை
அடையவில்லை. பாலிஸிதாரர்களுக்கான கேட்புரிமங்களை வழங்குவது தொடங்கி ஏராளமான சிக்கல்களை தனியார் கம்பெனிகளின்
வாடிக்கையாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்த
நிலைமையில்தான் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்த அனுமதிப்பது
என்று மத்தியரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய மக்களின் சேமிப்பு சர்வதேச
நிதி மூலதனத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அபாயம் நேரிட்டுள்ளது. இந்தியப்
பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் இந்த முடிவை முறியடிக்க உறுதி பூண்டுள்ளோம்.
அதற்கான போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.
இன்சூரன்ஸ்துறையோடு
எங்களது நடவடிக்கைகள் என்றும் சுருங்கிப் போனதில்லை. இத்தேசத்து மக்களை பாதிக்கும்
விலைவாசி உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிப்பது போன்ற பிரச்சினைகளுக்காக சுயேட்சையாகவும் மற்ற
அமைப்புக்களோடும் இணைந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றோம்.
இந்தியா
சுதந்திரம் பெற்று அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் மிகப் பெரிய சமூக அவலமாக
தீண்டாமைக் கொடுமை நீடிக்கிறது. தீண்டாமைக் கொடுமைகளை வேரறுக்க உருவாக்கப்பட்டுள்ள
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒரு அங்கமாக எங்கள் சங்கம் உள்ளது.
தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு இயக்கங்களில் தமிழகம்
முழுவதும் உள்ள எங்கள் உறுப்பினர்கள்
தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.
வங்கிக்ள்,
காப்பீட்டு நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர்வதற்காக நடக்கும்
நுழைவுத் தேர்வுகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றி பெற, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு
முன்னணியோடு இணைந்து டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி
மையம், தமிழகத்தில் இருபது மையங்களில் எங்கள் சங்கம் நடத்தி வருகிறது. வேலூர்
கோட்டப் பகுதியில் வேலூரிலும் கடலூரிலும் டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையத்தை
எங்களது வேலூர் கோட்டச்சங்கம் பொறுப்பேற்று பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்து
வருகின்றது.
இந்தியாவின்
எந்த ஒரு பகுதியிலும் எதிர்பாராத இயற்கை சீற்றம் நிகழ்கிற போது உடனடியாக உதவிக்கரம் நீட்டும் அமைப்பாக அகில
இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உள்ளது. நேரடியாக எங்கள் சங்க உறுப்பினர்களே
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உதவிகள் வழங்குவது என்பதுதான் எங்கள் மரபு.
அனைத்து
பணிகளையும் பட்டியல் போடுவது இயலாத ஒன்று. அதனால் சிலவற்றை மட்டும் குறிப்பிட
விரும்புகிறோம். நில நடுக்கத்தால் பாதிக்கப் பட்ட குஜராத் மாநிலம் பூஜ்
மாவட்டத்தில் எங்கள் சங்கத்து உறுப்பினர்கள் அளித்த நிதி கொண்டு ஒரு கோடி ரூபாய்
செலவில் கட்டப்பட்ட மருத்துவமனை ஏழை மக்களுக்கு சேவை செய்து கொண்டு இருக்கிறது.
தென் தமிழகக்
கடற்கரை ஆழிப் பேரலை சுனாமியால் தாக்குண்ட போது களத்திற்கு உடனடியாய் விரைந்த
அமைப்பு எங்களுடையது. உடனடித் தேவையான உணவு, உடைகள் தொடங்கி குடும்பத்திற்குத்
தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள், அரிசி என்று
தமிழகம் முழுதும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரணப் பணி வழங்கப்பட்டது.
சடலங்களை அகற்றி நல்லடக்கம் செய்யும் பணியிலும் கூட எங்கள் உறுப்பினர்கள்
ஈடுபட்டனர். வேலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் பத்து லட்சம்
ரூபாய்க்கு நிவாரண உதவிகள்
வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள்
இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மூன்று மீனவர் கிராமங்களில் இன்னிசை நிகழ்ச்சியும்
நடத்தினோம்.
இது
மட்டுமல்லாமல் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிரந்தர நிவாரணப் பணியாக, நாடு
முழுதுமுள்ள எங்கள் உறுப்பினர்கள் அளித்த நிதி கொண்டு திருவனந்தபுரம் அருகில்
அட்டிங்கல் என்ற இடத்தில் பள்ளிக் கட்டிடம், நாகை மாவட்டத்தில் புதுப் பட்டிணம்
என்ற கிராமத்திலும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் கிள்ளையிலும் சமுதாயக் கூடம்
கட்டித்தரப் பட்டுள்ளது. இந்தப் பணிகள் அறுபத்தி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில்
செய்யப்பட்டது.
கடந்தாண்டு
‘தானே’ புயல் கடலூர் மற்றும் புதுவையை தாக்கிய போதும் தமிழகம் முழுதுமுள்ள எங்கள்
உறுப்பினர்கள் அளித்த நிதி கொண்டு ரூபாய் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரணப்
பொருட்கள் வழங்கப்பட்டன.
எங்களுடைய
வேலூர் கோட்ட மகளிர் துணைக்குழு சர்வதேச மகளிர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் சமூக நல
உதவிகள் செய்வதன் மூலம் சிறப்பாக அனுசரிக்கிறது. முதியோர் இல்லம், ஆதரவற்றோர்
இல்லம், மாற்றுத் திறனாளிகள் இல்லம் என ஆதரவு தேவைப்படும் அமைப்புக்களுக்கு
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் அளவில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
எங்களது
அமைப்பிற்கு தாங்கள் அளித்துள்ள ஒத்துழைப்பு எங்கள் பணிகளை மேலும் வேகமாய், விரிவாய் தொடர உற்சாகமளித்துள்ளது. உங்களது ஒத்துழைப்பு
என்றென்றும் தொடர வேண்டும் எனவும் எங்களது இயக்கங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்
என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
எங்கள் தென்
மண்டலக் கூட்டமைப்பின் வலைப்பக்கத்தையும் கொஞ்சம் சென்று பாருங்களேன்.
எங்களது
முக்கியமான மறைந்த இரண்டு தலைவர்கள் பற்றியும் கண்டிப்பாக சொல்ல வேண்டும். அந்த
விபரங்களோடும் சில சுவாரஸ்யமான சந்திப்புக்கள், அறிமுகங்களோடு மாலை சந்திக்கிறேன்.
அதுவரையில் சிங்கப்பூரில்
உள்ள இந்த ஸ்கை பார்க்கிற்கு சென்று வாருங்கள்.
|
|
ReplyDeleteபாராட்டுக்கள்.
ஓய்வூதியம் பெற்றுத்தந்த ஏ.ஐ.ஐ.இ.ஏ வின் மகத்தான பணியினால் தான்
என்னைப்போன்று எப்பொழுதோ ஓய்வு பெற்றவர்கள் இன்னமும் மதிப்புடனும் மன நிம்மதியுடனும்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
42 ஆண்டுகள் நான் தொடர்ந்து பணி செய்த நிறுவனத்தின் மிகப்பொறுப்பு வாய்ந்த தொழிலாளர் சங்கத்தை நினைக்கும்பொழுதெல்லாம் எங்கள் காலத்தைய தலைவர் சரோஜ் சவுத்ரி, என்.எம்.சுந்தரம், மற்றும் எங்கள்
கோட்ட தலைவர் ஆர்.கோவிந்தராஜன் அவர்கள் செயல்பாடுகளையெல்லாம் நினைந்து நினைந்து நன்றி சொல்லாது
இருக்க இயலாது.
வாழ்க நுமது பணி.
சுப்பு ரத்தினம்.
எல்.ஐ.சி. ஓய்வு பெற்ற ஊழியர்.