07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 2, 2008

வெண்பா நுட்பங்கள் மற்றும் இயற்பியல் சந்தேகங்கள்.


வி அன்பர்களுக்கு...

வணக்கம்.

இந்த குழுவைப் பற்றி கொஞ்சம் பேசலாம்.

நிறைய கவிதைகள் எழுதப்பட்டு உள்ளன. எழுதியவை நன்றாக இருப்பினும், குழுவின் அடிப்படைச் சரடு 'மரபுக் கவிதை'. புதுக்கவிதையில் எளிதாக சந்தங்கள் வைத்து எழுதும் நாம், மரபுக் கவிதை பக்கமும் முயன்று பார்ப்போமே!

'கண்டபடி அசைதல் குதித்தல்;
கட்டுப்பாட்டோடு அசைதல் நடனம்'

எது பார்ப்பதற்கு இனிமையாக இருக்கும்..?

நம்மால் புதுக்கவிதை எழுத முடிகின்ற போது, கொஞ்சம் முயன்றால் மரபிலும் விளையாடலாம்.

முதற்படியாக பாக்களில் மிக எளிதான வெண்பா வகையை முயற்சித்துப் பார்க்கலாம். திரு.அகரம் அமுதா அவர்கள் மிக இலகுவாக கற்றுத் தருகிறார்,

நாம் வெண்பா எழுதத் தொடங்கி விட்ட பின், நமக்கே அதில் ஒரு சுவை உருவாகி விடும். வெண்பாவின் கட்டுப்பாடு, இலக்கணம், வரிகள் அதற்குள்ளேயே சொல்ல வேண்டும் என்ற சவால் நமக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

உதாரணத்திற்கு சில:

பண்ணாத ரௌசெல்லாம் பண்ணிவெச்சி இன்னிக்குக்
கண்ணால முன்னா கசக்குதா -அண்ணாத்தே
ஆத்தாவந் தாலுன்னை அடுப்பில் முறிச்சிவெப்பா
போயோன் தொலைஞ்சிபோ யேன்!

-எழுத்தாளர் புதுமைப் பித்தன்.

பாலாடை மேனிகாட்டி நாகரிகம் ஈதென்று
காலாடை யேயணியும் பாவை அறிவாளோ?
கச்சணிந்து நாகரிக வாழ்வறியா ளேயறிவாள்
அச்சமடம் நாணம் பயிற்பு

-இராஜகுரு.

நேர்பிடித்து ‘கீவில்’ நிதமுமே நிண்ணாலும்
நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா
காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும் நீர்க்குமிழி
பூத்துவரும் பாத்துட்டு போ!

-அகரம் அமுதா.

பங்கலா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்
மங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் - அங்கங்கே
சிங்கிய டிக்கின்ற செந்தமிழா! படித்து
சிங்கார சென்னைவந்து சேர்!

-தஞ்சை இனியன்.

காதலியே காலையில்தான் கைப்பிடித்தோம் மேடைதனில்
ஆதலினால் ஆதுரமாய் அன்பிலணை - போதவிலை
இச்சமயம் இன்பத்தில் இச்இச்தா நீமற
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!

-இரா.வசந்த குமார்.

எளிதாகத் தானே இருக்கின்றன?

சில சூத்திரங்கள். சில முயற்சிகள். சில ஆரம்பத் தவறுகள். சில திருத்தல்கள். சில புரிதல்கள்.

போதும். பின் நாமும் வெண்பாச் சாலையில் இராஜநடை போடலாம்.

மரபுக் கவிதைகள் நமக்குப் பிடிக்கும் என்று தானே இந்தக் குழுவில் இணைந்தோம்..? பின் என்ன தயக்கம்...?

வாருங்கள்..! தாருங்கள்...!


ஆர்குட்டில் 'தமிழ் மரபுக் கவிதைகள்' குழுவில் எழுதிய ஒரு மடல்.

ப்போதும் மரபுக் கவிதைகள் எனக்கு விருப்பமான ஒன்று. மனப்பாடச் செய்யுளைப் படித்தாலே போதும் என்றிருந்தாலும், தமிழ்ப் பாடத்தின் அனைத்துச் செய்யுள்களையும் வார்த்தைகள் பிரித்து, பொருள் புரிந்து படித்துச் சுவை கொள்வது ஆனந்தம்.

இப்போதும் மனம் கொஞ்சம் கலங்கி இருக்கும் போதெல்லாம், 'மனமெனும் தோணி பற்றி..' பாடலை மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருப்பது, கொஞ்சம் ஆறுதல் அளிக்கும்.

இன்றைய அவசரக் காலக் கட்ட்த்தில் வார்த்தைகளைப் பிரித்துக் கொண்டிருக்க யாருக்கும் அவகாசம் இல்லை என்பதால், வாக்கியத்தை வெட்டி வெட்டி, அதைப் புதுக்கவிதை என்று சொல்லி விட்டு, 'ஆஹா..! நாமும் கவிஞன் தான்..'..!

மரபு வடிவங்களிலேயே, எளிமையாக இருப்பது வெண்பா. அதனை அகரம் அமுதா எளிமையாக தரை மட்டத்தில் இருந்தே சொல்லித் தருகிறார், இங்கே ::

வெண்பா எழுதலாம் வாங்க!

அகரம் அமுதா இலக்கிய இன்பமும் சொல்கிறார்.

இராமாயணத்தை இரகு வெண்பா என்று எளிமைப்படுத்த முயற்சி செய்யும் முகவைமைந்தனையும் பார்க்கலாம்.

சென்னைக் கல்லூரி ஒன்றில் உயிர்த்த் தொழில்நுட்பம் பயிலும் இராஜகுருவும் வெண்பாக்களாலும், சந்தக் கவிதைகளாலும் தனது பக்கத்தை நிரப்பி வைத்துள்ளார்.

இப்போது அகரம் அமுதா வகுப்பில் கற்று நான் எழுதிய சில வெண்பாக்கள். ( இப்படி பரப்பிக் கொண்டால் தான் ஆயிற்று.! :) )

எதையெழுத யென்றெண்ணி யேதுந்தோன் றாமல்
உதையேதும் வந்துவிழு தற்குமுங்க தையேதும்
நான்குவரி சொல்லிவைப்போம் நையுமன மேவருந்தா
நாளை நமதென்று நம்பு!

ஆதாரம் ஓரில்லம். ஆசையாய்க் கட்டபணம்
போதாமல் யோசிப்போர் தம்மால்மா தாமாதம்
வட்டியோட சற்கட்டும் வாய்ப்பு உறுதியெனில்
கிட்டிடும் வங்கிக் கடன்.

உணவுண்ணத் தோன்றா உடுப்பணிய எண்ணா
கனவிலுங் கூடலின்பங் கவ்வும் - தினமிரா
பாயிற் படுத்திளைக்கப் பற்றும் பசலைநோய்த்
தீயிற் கொடியதோ தீ!

"கலங்காதே வைதேகி! காற்றுமகன் கோபம்
நிலம்முழுதும் ஏற்றும் நெருப்பால், இலங்கையின்
கோஇல் எரிகிறது! கொள்அமைதி சீதைநீ
தீஇல் கொடி!...அதோ தீ...!"

ஆத்துதண்ணி அய்ரமீனு அத்தமவ அள்ளிவந்து
சோத்துமேல சூடாச் செவச்செவன்னு - ஊத்திவிட்டா!
மென்னுதின்னு கிட்டபோயி முத்தம்வைக் கப்பார்த்தா
பொண்ணொதடே துள்ளுதுமீ னாட்டம்!

மாலைகோர்க்க கூடையொடு சோலைதேடிச் சென்றநாட்சில்
மாலைவேளை, கண்ணன் மறைந்து நல் - வேலையென்று
வாயிற்முத் தங்கொடுத்தான். வாட்டுகின்ற என்விரகத்
தீயிற் கொடியதோ தீ!

யமுனைநதித் தீரத்தில் யெளவனப்போ தில்நான்
அமுதெனக்கு ழல்நாதம் கேட்டேன் - குமுதந்தான்
சாயுங்கா லக்குளிர்ச் சந்திர வெண்ணொளித்
தீயிற் கொடியதோ தீ!

ஏரோப்ளேன் ஏர்பஸ் எடுத்துச் சரித்த
பீரோபோன் மின்வண்டி பந்தாவாய்க் காரெனினும்
கைக்கிளைக் காதலியைக் கண்போற் சுமந்தெனது
சைக்கிளை எண்ணுகிறேன் நான்!

குரங்குதான் முன்னோர் குறிப்பிட்டார் டார்வின்
அரங்கை நிறைத்ததுகை தட்டல டங்கியபின்
எல்லாம் அறிவேன் எழுந்தொருவர் சொல்லிய
தில்லாளால் முன்பேயே யான்!

மேலும் ராஜா வருகை என்ற ஒரு சிறுகதைக்கு அற்புதமான கட்டுமானமாக வெண்பாக்களே அமைந்தன என்பதையும் இங்கே நன்றியுடன் கூறிக் கொள்கிறேன்.

இதைப் படித்து விட்டு ஒருவராவது மரபிலக்கியங்கள் மேல் பற்று கொண்டால், மகிழ்வேன்.

ள்ளிக் காலங்களில் இருந்தே பிடித்தமான மற்றொரு பாடம் 'இயற்பியல்'. இயல்பாகவே அதன் எளிமை மற்றும் சிந்தனையைக் குடையும் கருத்து(க்)கள் (கருத் துகள் - ப்ளாக் மேட்டர்:) ), ஈர்த்துக் கொண்டன எனில், வேதியியல் மீதிருந்த பயம், இதன் பக்கம் கொஞ்சம் சொகுசாகச் சாய்ந்து கொள்ள உதவியது. அந்தக் கதை இங்கே!

தமிழ் வலையுலகில் இயற்பியல் தொடர்பாக யாரேனும் எழுதுகிறார்களா என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியது. எளிதாக கதை, கவிதை என்று எழுதும் நம்மவர்கள் அறிவியல் என்று வரும் போது, ஜகா வாங்கி விடுகிறோம். அப்படியும் கொஞ்சம் எழுத வரும் போதும், கொஞ்சம் கதைகளை மிக்ஸ் அடித்து, அறிவியல் கதை என்று திரும்பி விடுகிறோம்.

'எங்கே ஏதேனும் தவறாக எழுதி விட்டால்..?' என்ற சந்தேகம் இதற்கு காரணமாக இருக்கலாம்.

முயற்சி செய்வதில் தவறில்லை. தவறுகளில் இருந்தே கற்றுக் கொள்வோமே..!

கனடாவில் இருந்து எழுதும் ஜெயபாரதன் அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நெடுங்காலமாக அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். தனிப்பட்டு எதையும் சொல்ல வேண்டியதில்லை. எல்லாமே தகவல் கொத்துக்கள்.

கல்வித் துறையில் பணியாற்றும் எஸ்.இராமநாதன் சார் அவர்களும் எளிதாக இயற்பியல் பாடங்களை நடத்துகிறார். எரிமக் கலன் பற்றியும், காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் பற்றியும், பொதுவான இயற்பியல் கான்செப்டுகள் பற்றியும், சிலிக்கான் சிப்பு தயாரிக்கிறார்களே.. அது எப்படி என்றும் தனித்தனியாக அழகாகச் சொல்கிறார்.

தற்போது ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் The History of Time என்ற நூலின் எளிமையான தமிழாக்கத்தை ஒலி வடிவில் சொல்கிறார்.

சென்னையில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) ஆசிரியர் துறையில் பணியாற்றும் அருண் சாரும் எளிமையாக சில உயர் இயற்பியல் பற்றி எழுதியுள்ளார். தற்போது அந்த வலைப்பதிவு பாதுகாப்பில் உள்ளது. எனினும், பிற்காலத்தில் திறக்கப்பட்டால் சென்று பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் பல பதிவுகள் இருந்தாலும் நான் தினமும் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுவது இயற்பியல் மற்றும் இயற்பியலாளர்களில் தான். இந்த வலைப்பதிவில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மற்றும் ஒன்று, பின்னூட்டமே ஒன்று கூட வரா விட்டாலும் எப்படி தொடர்ந்து நம் பணியை நிறுத்தாது செய்வது என்பதை..!

ரு காலத்தில் மளிகைக் கடையின் முன்புறம் கொஞ்சம் சின்னதாகப் பலகைகள் பரப்பி, காய்கறிகளும் விற்பார்கள். கடையில் பெரிய சாமான்கள் வாங்கிய பின், சில்லறைத் தட்டுப்பாடு வந்து விட்டால், காய்கறிக் கடைக்குச் சென்று அந்தச் சில்லறைக்குக் காய்கறிகள் வாங்கிச் செல்வார்கள். கொசுறாக கொஞ்சம் நாலணா, எட்டணாவிற்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி கொத்தாகத் தருவார்கள். இன்னும் சில இடங்களில் அவை சும்மாவே தரப்படும். வாங்கிய மற்ற பெரும் பொருட்களோடு ஒப்பிட்டால், இவை சும்மா ஜுஜுபி தான்..!

அது போல, மேலே சொன்னவர்களோடு ஒப்பிட்டால் கருவேப்பிலை அளவுக்குக் கொஞ்சம் இயற்பியல் பற்றி எழுதியுள்ளேன்.

ஒளியிலே தெரிவது...

அழகிய முரண்.

பிஸிக்ஸ் - பிட்ஸ் ஸிக்ஸ்.

மீண்டும் அடுத்த பதிவில்...!

14 comments:

  1. அருமையான பாக்கள்

    விரைவில் நானும் எழுதுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    ReplyDelete
  2. வசந்த குமார்

    பன்முகம் காட்டுகிறிர்களே !

    வெண்பா - இயற்பியல்

    நன்று நன்று

    அதிகம் அறியாத பல் நல்ல பயனுள்ள வலைப்பூக்களின் அறிமுகம்.

    தொடர்க - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அன்பு திகழ்மிளிர்...

    அருமையாக எழுத வாழ்த்துக்கள்.

    ...

    அன்பு சீனா ஐயா...

    மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துகளுக்கு...!

    ReplyDelete
  4. வசந்த்,

    பிரமாதம். நான் முன்பெல்லாம் அகரம் அமுதாவின் இரு வலைப்பூவிற்கும் வாசகன். அவரும் எவ்வளவோ எளிமைப்படுத்தி, அனைவரையும் ஊக்குவித்தார். ஆனால், என்னால் முடியவில்லை என்பதால் நாட்டம் குறைந்ததா அல்லது நாட்டம் இல்லாததால் முடியாமல் போனதா என்று தெரியவில்லை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    //இன்றைய அவசரக் காலக் கட்ட்த்தில் வார்த்தைகளைப் பிரித்துக் கொண்டிருக்க யாருக்கும் அவகாசம் இல்லை என்பதால், வாக்கியத்தை வெட்டி வெட்டி, அதைப் புதுக்கவிதை என்று சொல்லி விட்டு, 'ஆஹா..! நாமும் கவிஞன் தான்..'..!//

    உண்மைதான். ஆனால், என்னளவில் கருத்துச் செறிவு புதுக் கவிதைகளில் தெரியும் அளவு மரபில் தென்படுவதில்லை. ஆற்றலில் பெரும்பங்கு மரபின் இலக்கண விதிகளுக்குள் இருப்பதிலேயே போய் விடுவதால் இருக்கலாம். அமுதா மற்றும் நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்கள் இது குறித்து சொல்வது பயனுள்ளதாயிருக்கும்.

    அனுஜன்யா

    ReplyDelete
  5. அன்பு அனுஜன்யா...

    நன்றிகள் தங்கள் வாழ்த்திற்கு..!

    /*உண்மைதான். ஆனால், என்னளவில் கருத்துச் செறிவு புதுக் கவிதைகளில் தெரியும் அளவு மரபில் தென்படுவதில்லை.
    */

    இந்தக் கருத்தில் கொஞ்சம் ஒப்புதல் இல்லை எனக்கு. உதாரணமாக ஆலங்குடி வங்கனார் எழுதிய ஒரு குறுந்தொகைப் பாடலைப் பார்க்கலாம்.

    கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
    பழன வாளை கதூஉ மூரன்
    எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
    கையும் காலும் தூக்கத் தூக்கும்
    ஆடிப் பாவை போல
    மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.

    இதன் எளிமையான பொருள் : தோட்டத்தின் மதில் சுவரைத் தாண்டி இருக்கும் கிளையில் இருந்து விழுந்த இனிய பழத்தை குளத்தில் இருக்கும் மீன்கள் உண்ணும் ஊரைச் சேர்ந்தவனான அவன், எம் வீட்டுக்கு வரும் போது என்னைப் பாராட்டி விட்டு, அவனைப் பற்றி பெரிதாகக் கூறி விட்டு, அவன் வீட்டுக்குச் சென்ற உடன், தோல் பாவைக் கூத்து போல் தன் மகனின் தாய் ஆட்டி வைப்பதற்கேற்ப ஆடும் இயல்பினன்.

    இது தலைவி தம்மை இகழ்ந்து பேசியதாகத் தனது தோழி வந்து சொல்ல, கோபம் கொண்ட பரத்தை தலைவனைப் பற்றி அந்தத் தோழிக்குக் கூறியது.

    இப்போது இதன் உள்ளார்ந்த கூறுகளைப் பார்ப்போம்.

    தோட்டத்தின் மதில் சுவரைத் தாண்டி வந்த கிளையில் இருந்து விழுந்த இனிய பழத்தைக் குளத்தில் வாழும் மீன்கள் உண்ணும் ஊரைச் சேர்ந்தவன். கிளை காவலை மீறுகின்ற போது, தோட்டக்காரன் அதனை கவனித்து கட்டுக்குள் வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அது காவலான மதிலை மீறி வளர்ந்து விடும். அப்போது அதில் விளைகின்ற இனிய சுவையுடைய பழம், மதில் சுவரை ஒட்டி அமைந்திருக்கின்ற, ஊர் மக்கள் யாவரும் வந்து குளித்து உபயோகப்படுத்துகின்ற பொதுக் குளத்தில் இருக்கும் மீன்களுக்கு உணவாகுமாறு குளத்தில் விழுந்து விடும்.

    தோட்டம் குடும்பத்திற்கும், காவல்காரன் தலைவிக்கும், கிளை தலைவனுக்கும், இனிய சுவையுடைய பழம் தலைவனது காதலுக்கும், பொதுக் குளமும், மீன்களும் ஊர்ப் பொது பரத்தையருக்கும் உவமையாக வருகின்றன.

    அடுத்தது,

    தலைவி தம்மை இழித்துப் பேசியதை தலைவன் கண்டிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அவனையும் திட்ட வேண்டும் என்பதற்காக, அவனை 'மனைவி சொல் கேட்பவன்' என்ற கேவலப்படுத்துகிறாள், பரத்தை. அக்காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். அது வேறு கதை.

    அதுவும் எப்படி? மனைவி கையில் நூல் இருக்க, அவள் ஆட்டி வைக்கும் பொம்மை போல் ஆடுகிறான். அது மட்டுமா, தலைவன் பரத்தையுடன் இருக்கும் போது, தன்னைப் பற்றி 'நல்லவன், வல்லவன், நாலும் தெரிந்தவன், சூரன், வீரன்' என்றெல்லாம் பெருமையடித்துக் கொண்டு, தனது வீட்டிற்குப் போனவுடன் 'கையது கொண்டு வாயது பொத்தி, மெய்யது குறுகி' மனைவி சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறான்.

    அப்பாடா... தலைவனை வைதாகி ஆயிற்று.

    அடுத்தது... தலைவி..!

    அவளைச் சும்மா விடலாமா..? ஒரே ஒரு வார்த்தையில் அவளை காலி செய்கிறாள். எப்படி..? 'தன் புதல்வன் தாய்க்கே!'.

    அதாவது 'அம்மாடி..! உனக்கு வயசாகிடுச்சு..! ஒரு பையன் பொறந்துட்டான். உன்னோட இளமை எல்லாம் காணாமப் போச்சு. இனிமேல் நீ களியாட்டங்களில் இறங்கும் அளவு அழகும், இளமையும் இல்லாதவள்.. ஹையோ..ஹையோ.. அதனால் தான், உன் புருசன் என்னைத் தேடி வரான்..'

    ஒரு பெண்ணை கோபமூட்டி, எரிச்சல் படுத்தும் ஒரே ஒரு வார்த்தை, 'உனக்கு வயதாகி விட்டது' என்பது தான். இது பெண்ணாகிய பரத்தைக்குத் தெரியாதா..?

    இப்படி ஒரே பாடலில், தலைவியின் இமேஜை காலி செய்து, தலைவனின் காலை வாரி விட்டு, தன் ஆத்திரம் தீர்த்துக் கொள்கிறாள்.

    இப்போது மீண்டும் ஒருமுறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

    ***

    நன்றி : பாடலின் விளக்கம் by புலியூர்க் கேசிகனார்.

    ***

    இவற்றை புதுக்கவிதையில் கொண்டு வாருங்களேன்..?

    ReplyDelete
  6. /*ஆற்றலில் பெரும்பங்கு மரபின் இலக்கண விதிகளுக்குள் இருப்பதிலேயே போய் விடுவதால் இருக்கலாம்.
    */

    இதை நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்.

    சாம்பார் செய்யத் துவங்கினால், பருப்பில் துவங்கி, உப்பு வரை போட்டால் தான் முழுமை அடையும். 'என் சக்தி எல்லாம் பருப்பைக் கழுவிப் போட்டு, எண்ணெயில் கடுகு தாளித்து, மிளகாய் கிள்ளிப் போட்டு தீர்ந்து விட்டது. எனவே உப்பு போட ஆற்றலே இல்லை. இப்படியே சாப்பிடுங்கள்' என்று சாம்பாரைச் சாப்பிட முடியுமா..?

    முழுமையாக முடித்தால் தான் அது Product.

    ஆனால் நீங்கள் சக்தி மசாலா பயன்படுத்துகின்ற ஆள் எனில், ஒன்றும் சொல்வதற்கில்லை. :)

    சூஃபியிசத்தில் ஒரு Quote ::

    NAJRANI said:

    ' If you say that you can "nearly understand", you are talking nonsense.'

    A theologian who liked this phrase asked:

    'Can you give us an equivalent of this in ordinary life?'

    'Certainly,' said Najrani; 'it is equivalent to saying that something is "almost an apple".'

    அதற்காக நான் புதுக்கவிதைக்கு எதிரி என்று புரிந்து கொள்ள வேண்டாம்.

    மரபில் இருக்கும் விதிகள், அதன் கட்டுப்பாடுகளுக்குள் கருத்தைச் சொல்ல வேண்டும் என்ற சவால் எனக்குப் பிடித்திருக்கின்றது. அந்த சவாலை முறியடித்துப் பெறும் இன்பம் தனித்துவம்.

    மறுபடியும் ஒரு முறை சொல்வேன்.

    'கண்டபடி அசைதல் குதித்தல்;
    கட்டுப்பாட்டோடு அசைதல் நடனம்'..!

    ReplyDelete
  7. நன்றி வசந்தகுமார். எனக்கு கண்டபடி அசைத்து குதித்தலும், சக்தி மசாலாவும் பிடித்த விஷயங்கள் என்று இப்போது அறிந்து கொண்டேன். சிரமத்துக்கு மன்னியுங்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  8. அன்பு அனுஜன்யா...

    தங்கள் மனதை என் பதில்கள் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

    நன்றி.

    ReplyDelete
  9. //இதைப் படித்து விட்டு ஒருவராவது மரபிலக்கியங்கள் மேல் பற்று கொண்டால், மகிழ்வேன்.//

    கண்டிப்பாக நீங்கள் மகிழ்ச்சி கொள்ளலாம். எனக்கு சிறிய ஆர்வம் வந்துள்ளது. மரபுக்கவிதை எழுத அல்ல, படிக்க.

    நல்ல அறிமுகம். நன்றிகள் பல.

    ReplyDelete
  10. வெண்பா ? கடவுளே ! ஆறாம்திணையின் "வெண்பா வடிக்கலாம் வா" காலங்களை நினைவில் மீட்டிவிட்டீர்கள் அன்பரே !

    வாஞ்சிநாதன் போன்றவர்கள் தூள் கிளப்பிக்கொண்டிருந்த காலம் அது. மரபுக்கவிஞர் ஹரிகிருஷ்ணனும் பல்வேறு மின்குழுக்களில் கோலோச்சிக்கொண்டிருந்தார்.

    வசந்தகுமார், உங்களது உதாரணம் அருமை. ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் - சங்கக்கவிதைகளுக்கும் புதுக்கவிதைகள் போன்றதொரு வாசிப்பு நிகழ்த்தலாம் (அவற்றின் செறிவு, ஆழ்பொருள் போன்றவற்றிகாக) என்பதற்கு ஒரு உதாரணம்.

    அன்புடன்
    முத்து

    ReplyDelete
  11. அன்பு கபீஷ்...

    நல்லது. முதலில் படிப்பதற்கு ஆர்வம் வருவது மகிழ்ச்சிக்கு உரியது. நிறைய படியுங்கள். பிறகு அதன் எளிமை உங்களுக்குப் பிடிக்கும். பிறகு நீங்களே இன்னும் அற்புதமாக எழுத முடியும்.

    வாழ்த்துக்கள்.

    ***

    அன்பு முத்துகுமார்...

    மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்களுக்கு..! மரபுக் கவிதைகளைத் திறக்கும் சூட்சுமம் பிடிபட்டு விட்டால், தேன் மழை தான்...!

    ReplyDelete
  12. மிக்க நன்றிகள் வசந்த குமார் அவர்களே! தாங்கள் புனைந்துள்ள இக் கட்டுரையில் என் வலையைப் பற்றியும் என் கவிதைகளைப் பற்றியும் குறித்தெழுதியமைக்கு. தங்களுக்கு நான் மிக்க கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் தாங்கள் குறுந்தொகைப் பாடலை விளக்கியிருக்கும் விதம் அருமை அருமை. வாழ்த்துகள்

    ReplyDelete
  13. //அன்பு அனுஜன்யா...

    தங்கள் மனதை என் பதில்கள் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்//

    என்ன வசந்த், நான் சில நாட்கள் இந்த வலைப்பூவுக்கு வரவில்லை. நான் சொல்ல நினைத்தது ஒரு 'சுய எள்ளல்'. உங்கள் வாசிப்பும், பன்முகத் தன்மையும் ஆச்சரியப்பட வைக்கின்றன. உங்கள் மீதும், அமுதா போன்றவர்கள் மீதும் அளவிட முடியாத மரியாதை எனக்குண்டு. உங்கள் பதில்கள் இருண்ட சில பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதில் எனக்கு மகிழ்வே.

    அன்புடன் அனுஜன்யா

    ReplyDelete
  14. அன்பு அனுஜன்யா...

    நன்றிகள்..! கவிதைகளில் இரண்டையும், இன்னும் வேறு முறைகள் ஏதேனும் இருந்தாலும் முயற்சித்துப் பார்ப்பது தவறில்லை அல்லவா..? பாத்திரமா முக்கியம், பலகாரம் அல்லவா..? :)

    நீங்கள் கூட ஹைக்கூகள் எழுதுகிறீர்களே..! படித்திருக்கிறேன்.!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது