என்னுயிர் தோழர்களே,
கவிஞர் மதுமிதா அவர்கள், தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகி காந்திஅரங்கசாமி ராஜாவின் பெயர்த்தியாவார். தந்தை ரகுபதி ராஜா; தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரெங்கனாதராஜா.
எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும் சம்ஸ்க்ருதத்தில் பட்டயப் படிப்பும் படித்துள்ளார்.
1. மஹாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகள் இவருடைய முதல் நூல். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அது, 'நீதி சதகம்' என்ற நூலாக வெளிவந்தது (2000)
2. 'மௌனமாய் உன்முன்னே' என்ற கவிதை நூலைப் படைத்துள்ளார் (2003)
3. 'பர்த்ருஹரி சுபாஷிதம் ' சமஸ்கி்ருதத்திலிருந்து முந்நூறு பாடல்களின் தமிழாக்க நூல் செப்டம்பர் 2005 இல் வெளிவந்தது.
4. 'நான்காவது தூண்' 'பதினெட்டு பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்'களின் தொகுப்பு (2006)
5. 'தைவான் நாடோடிக் கதைகள்' (2007)
6. நிலாச்சாரல் மின்னூலாக இவரின் 'பாயுமொளி நீ எனக்கு' கவிதை நூலை வெளியிட்டுள்ளது.
கல்கி, அமுதசுரபி, மங்கையர் மலர், அமீரக ஆண்டு மலர், படித்துறை, யுகமாயினி, வார்த்தை ... மற்றும் சில சிற்றிதழ்களில் (கலை, உங்கள் பாரதி,களம், நம்பிக்கை...) கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் எனப் பல படைப்புகள் வெளிவந்துள்ளன.
படைப்புகள் வெளியான இணைய இதழ்கள், இணைய தளங்கள்:
மரத்தடி, தமிழ் உலகம், உயிரெழுத்து, சந்தவசந்தம், அன்புடன், ஈ.சுவடி, தமிழாயம், எழுத்தும் எண்ணமும் ஆகிய மடலாடற்குழுக்களிலும் சிஃபி தமிழ், திசைகள், நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம், பதிவுகள், கீற்று, தட்ஸ் தமிழ், தமிழ்நெஞ்சம் ஆகிய இணைய இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
மதுரை வானொலியில் இவரின் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன.
பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகளில் கவிதை வாசித்துள்ளார்.
தமிழில் காற்றுவெளி, நீங்கா இன்பம் என்ற வலைப்பூவையும் ஆங்கிலத்தில் Truth Wins என்ற வலைப்பூவையும் நடத்தி வருகிறார்.
இவரின் பர்த்ருஹரி சுபாஷிதம் நூல் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நான்கு காட்சிகளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
http://www.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2006/sep/10/14
http://www.dinakaran.com/dncgibin/kungumam.asp?imge=2006/sep/10/15
இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர். இரத்த தானம், கவுன்சிலிங், விழியிழந்தோருக்கு வாசித்தல், சிறுவர்களுக்கு கல்விஎன இயங்கி வருகிறார். இராஜபாளையத்தில் 'இராஜபாளையம் தமிழ்நாடு அரசு பெண்கள், சிறுவர் நூலகம்' அமைய முக்கியகாரணியாய் இருந்தவர்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் தமிழுலகில் கலக்கோகலக்கு என்று கலக்கிக்கொண்டிருப்பவர்!
"இனி ஒரு விதி செய்வோம்" என்ற தலைப்பில் கவிஞர் மதுமிதாவின் இந்த கவிதையை வாசித்துப் பாருங்கள். இன்னமும், ஏழ்மையில் தவிக்கும் பலருக்கும், "விடியல்" என்றால் என்னவென்று தெரியவில்லை. பலம், பணம் இருப்பவன் இல்லாதவனை ஏளனம் செய்து அடிமையாக்கி கேவலப்படுத்தும் கொடுமை இன்னமும் தீர்ந்த நிலை இல்லாத உணமையை உணர்ந்த கவிஞர், தனது கவலைகளை எப்படி எழுதி இருக்கிறார் என்று பாருங்கள்! இந்த கவிதையை எழுதும்போது ஒரு வேளை கவிஞரின் பேனாவால் கவிதை எழுதின காகிதம் கிழிந்திருக்கலாம். பேனாவின் நுனி உடைந்திருக்கலாம். இவர்களின் கண்ணீர் ஏட்டில் எழுதின எழுத்துக்களைக் கூட நனைத்திருக்கலாம். இந்த கவிதையை உற்றுப்பார்த்தால், இவரின் அன்பான உள்ளத்தையும், சமூகம் மேல் இவர் கொண்ட நேசத்தையும் காணலாம். வலைப்பு யான் ஆரம்பிக்க எனக்கு உபதேசம் செய்து உதவின இந்த கவிஞர் மதுமிதா அவர்களுடைய ஒரு கவிதையை முதன் முதலாக ஆசிரியர் தகுதி கிடைத்ததும் வெளியிடுவதில் என் மனம் நன்றியால மகிழ்கிறது!!! வாருங்கள் தோழர்களே! கவிஞர் மதுமிதா அவர்கள், "ஒரு விதி செய்வோம்" என்ற தலைப்பில் என்ன சொல்ல வருகிறார் என்று பாருங்கள். அதற்கு பிறகு அவருடைய "மழையும் மனதும்" என்ற கட்டுரையை வாசித்துப்பாருங்க்கள். அன்புள்ளம் கொண்டு பின்னூட்டங்களால் இந்த கவிஞரை போற்றுங்கள்!!!
ததும்பும் தோழமையுடன்
என் சுரேஷ்
இனி ஒரு விதி செய்வோம் - கவிஞர் மதுமிதா
ஒரே ஒருமணிநேரம் மலம் அள்ளட்டும்
ஒரே ஒருமணிநேரம் மனிதரை லிப்டில் ஏற்றி இறக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் சிக்னலில் ஒழுங்கு செய்யட்டும்
ஒரே ஒருமணிநேரம் ரேஷன்கடை வரிசையில் நிற்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் செருப்பில்லாமல் நடுப்பகலில் தார்சாலை இடட்டும்
ஒரே ஒருமணிநேரம் ஹோட்டலில் பாத்திரம் கழுவட்டும்
ஒரே ஒருமணிநேரம் மண்ணை உழுது விதைக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் அசையவியலா குழியில் இறங்கி துணி நெய்யட்டும்
ஒரே ஒருமணிநேரம் பனி இரவில் முழுக்க முழுக்க மழையில் நனையட்டும்
ஒரே ஒருமணிநேரம் புயல்காற்றில் கட்டுமரமேறி மீன்பிடிக்கச் செல்லட்டும்
ஒரே ஒருமணிநேரம் தங்கம் உருக்கி வடிவமைக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் எங்கேனும் ஏதேனுமொரு சேவை செய்யட்டும்
ஒரே ஒருமணிநேரம் அரசியல் மேடைக்குகீழே பார்வையாளனாய் கவனிக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் அணுக்கதிர் உலையில் பணிபுரியட்டும்
ஒரே ஒருமணிநேரம் சேல்ஸ் ரெப்ரஸண்டாகட்டும்
ஒரே ஒருமணிநேரம் மக்கும் மக்காத குப்பையைப் பிரிக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் தலையில் செங்கல் சுமக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் எஸ்டேட்டில் கூலிபணிக்காய் ஏறி இறங்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் கடற்கரையில் சுண்டல் விற்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் வாகனங்கள் கடக்கும் நடைபாதையில் உறங்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் குளிர்மலையில் தேசம் காக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் சாதிமத வன்முறை கிளப்பாதிருக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் செய்யாத வாக்குறுதி கூறாதிருக்கட்டும்
ஒரே ஒருமணிநேரம் உண்மையை மட்டும் பேசட்டும்
பிறகுதேர்ந்தெடுக்கலாம் தலைமைக்கான ஒரு அரசியல்வாதியை
- மதுமிதா
கவிஞர் மதுமிதாவின் இந்த கட்டுரையை வாசித்தால் நமது மனமும் மழையால் நனையும்!!!
மழையும் மனசும்...
திடீரென்று வானம் கருமை போர்த்தி மூடிக்கொண்டு, காற்றடிக்க காற்றடிக்க, மண்வாசனை எழுப்பியபடி மழை பொழிய ஆரம்பித்த கணம் மனசு முழுக்க சிறகடிக்க ஆரம்பித்துவிடும். கட்டிப்போட முடியாது பின்னே.
மழை பெய்யும் ஒருநாளில் எதேனும் ஒரு சிறுமி எங்கோ ஒரு இடத்தில் அரிசி எடுத்துத் தின்றால் பெரியவர்கள் சொல்வதுண்டு 'அரிசி சாப்பிடாதே. கல்யாண நாளில் மழை வரும்.' எத்தனை பேரின் திருமணநாளில் மழை பெய்திருக்கிறது என்பதற்கான கணக்கு கைவசமில்லை.
வெயிலுக்கும், மழைக்கும் கல்யாணம் என்று சிறுவர்கள் பாடுவதுண்டு.
வெயிலும் தூறலும் இணைய கதிரவனுக்கு எதிர் வானில் வானவில் அமைவது அழகிலும் அழகு.
வெண்ணிறஒளி முப்பட்டகத்தில் பட்டு, நிறப்பிரிகையாய் சிதறும் ஏழு வண்ணங்களாய். அதுபோல் சூரியனின் வெண்ணிற ஒளி மழையின் துளியில் பட்டு பிரிகையில் வெளிப்படும் ஏழுவண்ணமே வானவில் என்று படிக்காதவர் கிடையாது. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு. என்னும் வானவில்லின் நிறங்களை நினைவில் கொள்ள 'vibgyor' என்று சொல்வது போன்று 'ஊகநீபமஆசி' என்றும் சொல்வதும் உண்டு.
'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை'என்ற குறளை மனப்பாடம் செய்து சொல்லி ஆசிரியரிடம் பாராட்டு பெற்ற மகிழ்வும், வகுப்பில் செல்வாக்கு அதிகரித்த விதமும் மழையை இன்னும் நேசிக்கச் செய்தது.
'காயப்போட்ட துணியை நனையாமல் எடுத்து வா', 'வத்தல், கோதுமை வாரி வை', 'இரைசல் உள்ளே வருது. ஜன்னல் மூடு' இப்படி மழை வந்தால் எவையெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும் என்ற அறிவும் வளர ஆரம்பித்தது.
ஆனால், எல்லாவற்றையும் மீறி, மழை எழுப்பும் ஒலி ஆடுகள் நடை பயிலும் ஒலியை ஒத்திருப்பதாக எழுதிய கவிஞன் முதலில் நினைவுக்கு வர, கவிதை வரிகள் தறிகெட்டு ஓட ஆரம்பிக்கும். அடக்கி வைப்பதற்குள் பெரும் பாடாகிவிடும்.
'A Flock of Sheep that leisurely pass by one after oneThe Sound of Rain.....'
தொடர்ந்து பாரதியின் 'தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்' உணர்வலைகளை எழுப்பி விட்டுவிடும்.
உடன் கைகள் கவிதை எழுத பரபரக்கும். பலநூறு கவிதைகள் இப்படியரு மழைப்பொழுதில் எழுதப்பட்டவையே.
ஒரு முறை குழந்தைகளுக்காக உடை எடுக்க வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் மழை வலுத்து விட்டது. கடையில் வாங்கிய ஜவுளியை, கடைப்பையனிடம் வீட்டில் கொண்டு வந்து தந்து விடுகிறோம் என்று சொன்னதாலும், மாலை 6.30க்கு மேல் ஆகிவிட்டதாலும் நடந்தே வீட்டுக்குச் சென்றுவிடலாம் என முடிவெடுத்து இறங்கிய கணம் மழை தூறல் ஆரம்பித்தது. விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று மழையில் நனைந்தபடி கடையிலிருந்து இறங்கி விட்டோம். உடன் வந்தது எனது நாத்தனார்.
மழை அதிகமாகக் கொட்ட ஆரம்பித்து விட்டது. கடைகளைக் கடந்து, ஒரு தெருவுக்குள் நுழைகையில் மின்சாரமும் நின்றுவிட இருள் இருள் இருளைத்தவிர வேறு எதுவும் கண்களுக்குப் புலப்படவில்லை. 'வான் மேகம், பூப்பூவாய் தூவும்' என்று என்னையறியாமல் பாடல் வெளிப்பட்டது. 'நல்லா மாட்டிக்கிட்டோம். இப்போ உனக்கு பாட்டுதான் கேட்குதா' என்றார் அவர். 'அண்ணி. நம்மைப் பார்ப்பதற்கு ஆளில்லை. இப்போதான் பாடவோ ஆடவோ முடியும்' என்று நான் சொன்னதும் அமைதியாகிவிட்டார் அவர். பாதி தெரு கடப்பதற்குள் மழையின் நீர் முழங்கால் அளவில் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. பாடலும், ஆடலும் அந்த தெருவின் அந்தக் கோடி வரையில் மட்டுமே. அதற்குள் மின்சாரம் வந்துவிட நனைந்தும், ரசித்தும், நடந்தும் வந்து சேர்ந்தோம். வீட்டில் நனைந்து வந்ததற்கு மண்டகப்படி கிடைத்தது வேறு விஷயம்.
ஒரே ஒருமுறை ஆலங்கட்டி மழை பொழிவதை, வயது வித்தியாசமின்றி அனைவரும் வீதியில் நின்று பார்த்தது அதிசய காட்சி. பெரிய பெரிய கட்டிகளாக விழுந்தன. மேலே பட்டால் கட்டாயம் வலிக்கும் அளவில் பெரிய கட்டிகள் விழுந்தன.
மழையில் நனையும் ஆசையை கட்டுப்படுத்தும் கலை இப்போதெல்லாம் கைவந்து விட்டது.
பிறகு வந்த நாட்களில் மழை என்றவுடன் சாப்பிடுவதற்கு ருசியாக சூடாக வடையோ, அடையோ ..... சமைப்பது பழக்கமாகிவிட்டது.
எல்லாவற்றையும்விட காதலர்களுக்கே (கல்யாணமான காதலர்களுக்கும் பொருந்தும்) மழையினால் கொண்டாட்டம். வார்த்தைகளால் எழுதி முடித்துவிட இயலாது அந்த ரசத்தை. ஆனால் பிரிந்திருக்கையில் மழை கொட்டினால் போச்சு. சோகம் பிழிந்தெடுத்துவிடும், உயிரையே.
நடக்காத ஒன்று நடந்தால், இன்றைக்கு மழை கண்டிப்பா வரும் என்று சொல்வது எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. நம்புவது போல் இல்லாமல் ஒன்றை யாரேனும் கூறினால், அருகில் இருப்பவர் வாய்திறவாது மேலே ஆகாயத்தைப் பார்ப்போரும் உண்டு. 2020 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றதால்கூட இன்றைய இந்த மழை வந்திருக்கலாம்.
வானம் பார்த்த பூமிக்கு எஜமானனான விவசாயிக்கு மழை தேவை. ஆனால், மழையின் அத்தியாவசிய தேவை பலருக்கும் இருந்தாலும், விழாக் காலத்திற்கும், வியாபாரத்திற்கும் மழை சிரமம் கொடுப்பதாகவே இருக்கிறது.
சில விழாக்களிலும், சில நல்ல நாள் என்று சொல்லப்படும் நாட்களிலும், இந்த நாளில் ஒவ்வொரு வருடமும் மழை வரும் என்று சொல்வதுமுண்டு. அந்த நாட்களில் மழை பெய்வதும் உண்டு. மாற்றி மறுநாள் பெய்வதும் உண்டு.
'மாதம் மும்மாரி பொழிகிறதா' என்று அன்றைய அரசர்கள் அமைச்சர்களைக் கேட்பதாகச் சொல்வதுண்டு. இன்றைய நிலை எப்படியோ?
மழை என்ற கொடை இல்லையென்றால் உலகம் செழிக்க முடியவே முடியாது. ஒண்ணுமில்லை பாருங்க. மழை பட்டவுடன் பக்கத்தில் இருக்கிற செடியையோ, மரத்தையோ பாருங்க எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து தண்ணீர் ஊற்றியிருந்தாலும், இந்த அளவு செழிப்பு தெரியாது. அதன் அந்த நிறமே ஒளிவட்டம் போட்டாற்போல் ஜொலிக்கும்.
என்னதான் வெயில் அடித்தாலும் சலிக்காது வெளியில் தலை காட்ட முடியும் மக்களால், தர்மத்துக்குப் பெய்யும் மழையில் வெளியே தலைகாட்ட முடியாது போய்விடும். இது எப்போதும் வியப்பான விஷயம்.
அறிவியலோ, புவியியலோ பாடத்தில் படிப்பதை விட படம் வரைவது மிகவும் பிடிக்கும். அதிலும் இந்த மழையின் சுழற்சியினை வரைவது எனக்குப் பிடித்தமான ஒன்று. மழை மேகம், அதிலிருந்து தூறல், அது பொழிந்து இணைந்து நதியாகி, கடலில் சேரும் படம். பிறகு அம்புக்குறியிட்டு கடலிலிருந்து மேகத்துக்கு செல்வதுபோல் வரைவது. அதேபோல் மேப்பில் மழை பொழியும் பிரதேசங்களைக் குறிப்பது, கடல் நிறத்தினை நீலமாய் வரைவது பிடிக்கும். ஆனால் ஏன் பிடிக்கும் என்று அதற்கான காரணம் தெரியாது.
இது மாதிரி ஒரு பதிவு ஏதோ ஒரு நாளில் எழுதின நினைவு இன்றைக்கு மழையின் வேகத்தில் திடீரென்று நினைவுக்கு வர தேடிப்பார்த்தேன். தலைகீழாய்க் கணினியைத் தட்டிப்பார்த்துத் தேடியும் காணோம். உண்மைதாங்க. சொல்றதுல என்ன வெட்கம். கோ. கணேஷ் தமிழ்மணத்துல நட்சத்திர பதிவு ஆரம்பிச்ச உடனே, ஒரு ஒரு மாதத்திற்குள்ளே ஏழு பதிவு எழுதி சேர்த்து வைத்திருந்தேன். எவ்வளவு சின்சியர் பாருங்க. தமிழ்மண நட்சத்திரமாக திடீரென்று அழைத்து விட்டால் எப்படி எழுதி உடனே போட முடியும். அதுக்கு முன்னேற்பாடாதான். இந்த இடத்தில யாரும் சிரிக்கக்கூடாது ஆமா. ஒரு மனுஷிக்கு தன்னம்பிக்கை இருக்கக்கூடாதா என்ன. எழுதி பத்திரப்படுத்திய அதையே மறந்திருக்கிறேன். ஆனாலும் இவ்வளவு மறதி ஆகாது. ஆனா பாருங்க இந்த மூணு வருஷத்தில இதுவரைக்கும் நம்ம கணினில வைரஸ் சுனாமி வந்து நான்கு முறை தாக்கினதில மொத்தமும் அழிஞ்சே போச்சு போலிருக்குது. திரும்ப அதையே எழுதி வைக்கவும் முடியாம போகட்டுமென்று விட்டு விட்டேன்.
இந்த மழையில் உடனே எழுதி பதிவு செய்யும் ஆவல் எழும்ப எழுத ஆரம்பித்தாகி விட்டது.
சென்ற வாரம் வெங்கட்நாராயணா சாலை வழியே வந்தபோது, கோவிலின் எதிர்புற ப்ளாட்பாரத்தில் கம்பியைப் பிடித்து நின்று கொண்டு ஒரு குழந்தை 'அம்மா அம்மா' என அழுது கொண்டிருந்தது.
'என்னம்மா. அம்மா எங்கே போயிருக்கிறாங்க'. என்று கேட்டால் திரும்பிப் பார்க்கணுமே அந்தக் குழந்தை. 'அம்மா' என்று மட்டும்தான் சொல்லிக் கொண்டேயிருந்தது. அந்தக் குழந்தையின் பார்வை எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஐந்து நிமிஷம் நாங்கள் மூவர் சேர்ந்து எவ்வளவோ போராடியும் எங்களை நோக்கி அக்குழந்தையின் பார்வையைத் திருப்ப இயலவில்லை. அதற்குள் அரவம் கேட்டுத்திரும்பினால் ஒரு குழந்தை தவழ்ந்து வந்து கொண்டிருக்கிறது இந்தப் பக்கம்.
'திக்' கென்றாகிவிட்டது எங்களுக்கு. கொஞ்சம் தவறினால் குழந்தை சாலையில் விழுந்துவிடும். அந்த சாலையோ நெரிசலான சாலை.
அருகே ஸ்டாப்பில் அம்மாவும், மகளுமாக நின்ற இருவர் இக்குழந்தைகளைப் பார்த்து எதுவோ பேசிக்கொண்டிருந்தனர். நாங்கள் மூவர், இன்னும் இரு பெண்கள் சாலை வழியே நடந்தவர்கள் நின்று விட்டனர்.
நின்று அழுதுகொண்டிருந்த அக்குழந்தையின் அருகே மூன்று பைகள். தவழ்ந்து வந்த குழந்தை அப்படியே அங்கே அமர்ந்து கொண்டது. இன்னும் ஒரு அடியில் அங்கே ஒரு துணி விரிக்கப்பட்டு அதில் ஒரு குழந்தை அசந்த தூக்கத்தில்.
தவழும் குழந்தையை தூக்கி அந்தப் பக்கம் வைத்துவிடலாம் என்றால் அக்குழந்தை, தனது அக்காவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. வீட்டிற்கு அவசரமாய் திரும்ப வேண்டும். ஆனால், அக்குழந்தைகளை அப்படியே விடமுடியாது. என்ன செய்வது என நிற்கிறோம்.
எனது மகள், தங்கை, நான் மூவரும் அந்தக் குழந்தையிடம் 'அம்மா வேணுமா. எங்கே போயிருக்கிறாங்க. ஏதாவது சாப்பிடுகிறாயா. அம்மா இப்ப வந்துடுவாங்க. அழாதம்மா..................................' என்ன சொல்லியும் எங்களால் சமாதானம் செய்ய இயலவில்லை.
அதற்குள் அந்த அம்மாவும், பெண்ணும் அருகில் வந்தனர். 'அம்மா எங்கேயோ போயிருக்கிறார்கள் போலிருக்கிறது. எப்படி போவது இந்தக் குழந்தைகளை இப்படியே விட்டு...' என்று சொல்வதற்குமுன் 'அம்மா இல்லீங்க, குழந்தையோட அப்பா இப்படி போனாரு, குழந்தைட்ட அந்த மூணு பைய பாக்கச் சொல்லிவிட்டு' என்று குழந்தை பார்த்துக் கொண்டிருந்த திசையில் கைகாட்டினார்.
ஏழு பேர் இருக்கிறோம். என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்படி மூன்று குழந்தைகளை தனியே விட்டுப் போனார்கள் பெற்றோர் தெரியவில்லையே என்று செயலிழந்து நின்று கொண்டிருக்கையில் குழந்தையின் அழுகை நின்றது. பார்த்தால் ஒரு ஆள் (தகப்பன் போலும்) கையில் ஏதோ கொண்டு வந்து அந்த இரண்டு குழந்தைகளையும் கண் இமைக்கும் நொடியில் படுத்திருக்கும் குழந்தை அருகில் அழைத்து வந்துவிட்டார். அழுகை சத்தமே இல்லை.
மற்ற ஐந்து பேரும் ஆசுவாச பெருமூச்சு விட்டு போய்விட்டார்கள்.
சரி குழந்தைகளுக்குப் பசி என்று ஏதேனும் வாங்கப்போயிருப்பார் போலிருக்கிறது. நல்லவேளை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார் என்று வாய் திறக்கவியலாமல் நாங்கள் மூவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
என் மகள் கேட்கிறாள் 'என்னங்க இப்படி குழந்தைங்களை விட்டுட்டுப் போயிட்டீங்க. அம்மா அம்மான்னு அந்தக் குழந்தை அழுகிறது. கொஞ்சம் பாத்துக்கக் கூடாதா?'
அப்போதுதான் பார்க்கிறேன் அவரின் கையில் உள்ள பாத்திரத்தில் ஒரே ஒரு டீயின் அளவில் ஒரு திரவம். இதை எப்படி மூன்று குழந்தைகளுக்குத் தருவார்.
'குழந்தையோட அம்மா கோயம்பேடுலே வேலைக்குப் போயிருக்கு. நான் கோவில்ல செருப்பு பாத்துக்கறேன். என்ன பண்றதும்மா. இடையிலே வந்து வந்து குழந்தைங்களை பாத்துட்டுதான் போவேன். என்ன பண்றது' என்றார்.
'அம்மா எதாவது அவங்களுக்கு சாப்பிட வாங்கிக்கொடுக்கலாம்' என்றாள் மகள்.
அந்த மனிதன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.'கஷ்டம்தாம்மா' என்று சொல்லியபடி. பர்ஸ்ஸைத் திறந்து கையில் கிடைத்த பணம் எடுத்துக் கொடுத்து வந்தேன்.
இரண்டாவது அடி எடுத்து வைக்கையில் தங்கையும், மகளும் ஒன்று போல் கூறியது. 'சாப்பிட ஏதேனும் வாங்கித் தந்திருக்கலாம். ஏன் நூறு ரூபாய் கொடுக்கணும். அந்த ஆள் அருகில் குடிவாசனை இருந்தது.'
இப்போது மழை பெய்கையில் இந்தப் பாவியால், அந்தக் குழந்தைகளை நினைத்துக் கொண்டு, மழையில் சிறிதும் நனையாது, சரியாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு வேறு எதுவும் செய்ய இயலா நிலையில், தட்டச்ச மட்டுமே முடிகிறது.
இன்னும், நடேசன் பூங்காவில் சுண்டல் விற்கும் சிறுமி இன்று என்ன செய்வாள் என்னும் கேள்வி குடைவதையும் தவிர்க்க இயலவில்லை.
இதுபோல் எத்தனை தவிக்கும் உயிர்களோ.
மழை இன்ப நினைவுகள் மட்டுமே கொண்டுவருவதில்லை.
கவிஞர் மதுமிதா
கவிஞர் மதுமிதாவின் படைப்புகள் குறித்து இணையத்தில் வெளிவந்த சில இணைய லிங்க்குகள் இணைத்துள்ளேன், பாருங்கள் அன்பர்களே!
மௌனமாய் உன்முன்னே
http://tamilnenjam.com/04_2006/intro_1.htm
பர்த்ருஹரி சுபாஷிதம்
http://jeyanthisankar.blogspot.com/2005/11/blog-post_30.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60709202&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60803202&format=html
நான்காவது தூண்
http://vizhiyan.wordpress.com/2007/08/28/fourth-pillar-review/
http://www.tamiloviam.com/unicode/02280814.asp
http://muthukamalam.com/muthukamalam_puthakaparvai4.htm
பாயுமொளி நீ எனக்கு
http://tamil.sify.com/art/pks/fullstory.php?id=14336868
Kavidhai Blog நீங்கா இன்பம்
http://madhumithas.blogspot.com/
அன்புடன்
என் சுரேஷ்