தேடித் தரும் தேன்சிட்டு-7
➦➠ by:
கபீரன்பன்,
தேன்சிட்டு
அன்பு வணக்கம் அன்பர்கள் யாவருக்கும்.
தினமும் இந்த கரும்பலகையைக் கண்ட மாத்திரத்திலேயே பலருக்கு வகுப்பறை நினைவுகள் வந்து உள்ளே நுழையாமலே சென்று விட்டனர் போலிருக்கிறது.:))
கவலை வேண்டாம். இன்றோடு இந்த ஆசிரியர் பணி முடிந்தது.
அந்தக் கரும்பலகைக்கும் தினசரி தியானத்திற்கும் என் வாழ்வில் ஒரு பங்கு இருந்தது. அதை நினைவில் கொண்டு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே அதை இட்டு வந்தேன். என் வலைச்சர ஆசிரியப் பணியின் முதல் நாள் பின்னூட்டத்தில் திரு துரை செல்வராஜு என் எழுத்தை கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்வதாகச் சொல்லியிருந்தார். அப்படி என் எழுத்தில் ஏதேனும் ஈர்ப்பு பிறர்க்கும் இருக்குமானால் அதற்குக் காரணம் இந்த தினசரி தியானமும் கரும்பலகையுந்தான்.
செட்டிநாட்டு வாசத்தின் போது எங்கள் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாத ஒரு கரும்பலகை வாயிலில் இருந்தது. 1988 லிருந்து 1993க்கு இடைப்பட்ட காலத்தில் நாள் தவறாது சுவாமி சித்பவானந்தரின் தினசரி தியானம் புத்தகத்திலிருந்து அந்தந்த தேதிக்குண்டான தலைப்புகளையும் கருத்துக்களையும் எழுதி அதை பயன்படுத்தத் துவங்கினேன். நாட்பட நாட்பட என் கையெழுத்துத் திருந்தி அன்றைய செய்தி எந்த அளவில் இருந்தாலும் சரியாக கரும்பலகை அளவிற்குள் எழுதும் திறமை பெற்று விட்டிருந்தேன்.அப்போது என்னளவில் நான் புரிந்து கொண்ட மாறுதல் அவ்வளவுதான்.
1993-ல் வேலை மாறி தில்லிக்கு குடி பெயர்ந்ததால் அவற்றோடு இருந்த தொடர்பு அறுந்து போனது. 2006-ல் வலைப் பூ ஆரம்பித்து எழுதும் போதுதான் புரிந்தது அதற்கான அடித்தளம் இறைவன் சித்தத்தால் 12 வருடங்களுக்கு முன்பே போடப்பட்டிருந்தது. என்னிடம் அந்த புத்தகம் இல்லாதிருந்தாலும் நினைவின் ஆழத்திலிருந்து தேவைக்கேற்றார் போல் எழுதுவதற்கான கருத்துகள் உதித்தன.
இதை ஏன் குறிப்பிடுகிறேனென்றால் நம்மளவில் ஒரு நல்ல செயலை தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்து வந்தால் அது சமயம் வரும் போது பிறருக்கு பயன் தரும் வகையில் ஆக்கம் பெறும். சுவாமி சித்பவானந்தர் வாழ்ந்த காலத்தில் சென்று அவரை தரிசிக்காமல் விட்டேன் என்ற வருத்தம் எப்போதும் உண்டு. அவர், முன்னாள் மத்திய அமைச்சர் பாரத்ரத்னா சி சுப்பிரணியம் அவர்களின் சிறிய தகப்பனார் ஆவார்.
அவரைப் பற்றி தன் நினைவுகளைப் பகிர்கிறார் திரு வ சோமு இன்றும் சுவாமிஜி நிறுவியிருக்கும் ஆசிரமம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல வகையான தொண்டு பணிகளை தமிழ் நாடெங்கிலும் செய்து வருகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் என்னும் அவர்களது வலைத்தளத்தில் மேலும் விவரங்கள் காணலாம். அந்த மானசீக குருவுக்கு என் வந்தனங்கள்’
---------------------------------------------------------------
குருவை நன்றியுடன் நினைவுகூர்தல் யாவரக்கும் நல்லதே செய்யும். பாலகுமார் பள்ளி இறுதித் தேர்வில் தனக்கும் தன் உடன் படித்த மாணவர்களுக்கும் மிகவும் ஊக்கத்துடன் கூடவே விளையாடி, நீச்சலடித்து சினிமா பேசி, பாடம் சொல்லிக் கொடுத்த தம் ஆசிரியரைப் பற்றி அழகாக விரித்துரைக்கிறார் குருகுலம் என்ற இடுகையில்
பின்னர் மாலை முழுவதும் விளையாட்டுதான் பாரதி சொல்லி வைத்தது போல. கிரிக்கெட், குண்டு விளையாடுதல் , கிணற்றில் நீச்சல் அடித்தல் . பின் எப்படி கசக்கும் இந்த டியூஷன்..................... ---------- நாங்கள் படித்தது ஒரு அரசினர் பள்ளியில் (R வெள்ளோடு). எனக்கு தெரிந்து ஒரு வருடம் 10th ரிசல்ட்-ல் வாஷ் அவுட் ஆனது கூட உண்டு. ..................இரண்டு குழுவாக பிரித்து கரும்பலகையில் மதிப்பெண் இடுவார். வெற்றி பெறுபவர்களுக்கு பேனா , பென்சில் என்று எதாவது பரிசளிப்பார். ஒன்று சொல்ல ஆசை படுகிறேன். அவருக்கு கற்றுதருதலில் கண்டிப்பாக ஒரு காதல் இருந்தது..................இதிலென்ன சாதனை இருக்கிறது? உங்கள் கேள்வி நியாயமானதுதான். 30 ஆண்டு கால பள்ளி வரலாற்றில் இது போன்ற ரிசல்ட் அதுவே முதல் முறைநல்ல எழுத்துத் திறன் உள்ள பாலகுமாரின் வானம் வசப்படும் வலைப்பூவில் நினைவுகள், பகுத்தறிவு பற்றிய இடுகைகளும் எளிய நடையில் மனதில் இடம் பிடிக்கின்றன
------------------------------------------------------------------------------------------------------------
இன்றைக்கு ஒரு குட்டிச் சுற்றுலாவுக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார் அனுசூயா. இடம் : தான்சானியாவில் உள்ள ஜான்சிபார் என்ற தீவு
எப்படியோ காடு மேடு ஏறி இறங்கி அந்த இடத்துக்கு போய் சேர்ந்தோம். அங்க பார்த்தா ஒரு கிணறு மட்டும் இருந்துச்சு அதுக்கு 1 டாலர் கட்டணம் வேற. திட்டிக்கிட்டே வாங்கிட்டு பக்கத்துல போனோம். அப்பகூடவே ஒரு பையன் வழிகாட்டி பணி செய்ய டார்ச் எல்லாம் எடுத்துகிட்டு வந்தான். அத பார்த்து நாங்க சிரிச்சோம் சின்ன கிணத்த சுத்தி பார்க்க இவ்ளோ ஆர்பாட்டமானு. அப்புறம் அசட்டையா கிணத்து படில இறங்க ஆரம்பிச்சோம் கொஞ்ச தூரம் போன பிறகு அப்படியே மலைச்சு போயி நின்னுட்டோம்.
அம்மாடி எவ்ளோ பெரிய குகை அசந்து போயிட்டோம். மேல பாக்க வெறும் கிணறு மாதிரி சின்னதா இருக்கு ஆனா உள்ளே பெரிய குகை. ............ஆனா உள்ள ஆயிரக்கணக்கான அடிமைகளை மறைச்சு வெச்சுக்கலாம். அது மட்டும் இல்ல இந்த குகைல இருந்து 3 கிமீ தூரத்துக்கு குகை போகுது அது கடற்கரைல போயி முடியும். இங்க இருந்து அடிமைய நிலத்துக்கே கூட்டி வராம அப்படியே குகை வழியா கடற்கரைக்கு கொண்டு போயி கப்பல்ல ஏத்தி வெளி நாட்டுக்கு அனுப்பிடலாம்.ஏதோ மர்மக் கதையின் தொடர் போல கொண்டு போகிறார். ஆப்பிரிக்க பஸ் பயணம் போட் பயணம் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம், அனு என்கிற பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் அனுசூயா மேடம் பயமறியா பாவையர் சங்கத்திலேயும் மெம்பர். இப்ப அவங்க எல்லோரும் என்ன பண்றாங்கன்னு தெரியல இவருக்கு புகைப்படம் எடுப்பதிலும், திரை விமரிசனம் செய்வதிலும் ஆர்வம் உண்டு.
-----------------------------------------------------------------
என்னால் மறக்கமுடியாத ஒரு இடுகை. எனக்கு மின்னஞ்சல் மூலம் வந்தது. அதன் தலைப்பு ‘ஒரு உளுந்து சாகுபடிக்காரனின் சாபம்’
......இந்தக் கடிதத்தை எழுதத் தோன்றிய காரணத்தையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.உளுந்து விலை உயர்வுக்காக நீங்கள் வருந்தியும் கோபமுற்றும் வருகிறீர்கள். உங்களுக்காக முதல்வரும் பிரதமரும் பதிலளிக்கிறார்கள். காய்கறி விலை, பருப்பு விலை, எண்ணெய் விலை குறித்தும் உங்களுக்குக் கோபம் உண்டு.ஹமாம் சோப்பு விலை வருடம் தோறும் உயர்வது குறித்து நீங்கள் யாரும் ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனிக்கு எதிராகப் போராடியதாக நான் கேள்விப்படவில்லை. பாட்டா செருப்பு விலை உயர்வு குறித்து உங்களில் ஒருவரும் பாட்டா கடை முன் உரக்கப் பேசுவது கூட இல்லை. தேநீர் ஒன்று 5 ரூபாய்க்கும் 4 ரூபாய்க்கும் விற்கப்படுவதை நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை.தண்ணீர் ஒரு லிட்டர் 14 ரூபாய்க்கு விற்கப்படுவதையும் அதை நீங்கள் வாங்குவதையும் பார்க்கும் எங்கள் வயிறு எரிகிறதுதான்.....ம. செந்தமிழன் என்பவர் காட்சி என்னும் வலைப்பூவில் எழுதியிருக்கும் இந்த திறந்த மடல் விவசாயிகளின் பிரச்சனைகளை அடுக்கடுக்காக எடுத்து வைக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை.
காட்சி என்னும் வலைப்பூ எழுத்தார்வம் உள்ளவர்களின் ஒரு கூட்டு முயற்சி. பல்வேறு விஷயங்களைப் பற்றியும் கருத்து சொல்லும் ஒரு வலையிதழ். மேலும் அறிய....
-----------------------------------------------------------------------------------------------------
இதுநாள் வரை நான் அறிமுகப்படுத்த முனைந்ததெல்லாம் எனக்கே முதன்முறையாக படிக்க நேர்ந்த நல்ல எழுத்து வளமை உள்ள ஆசிரியர்களின் வலைப்பூக்களே. கூகிள் ரீடர் மூடப்பட்டுவிட்டதால் பல நல்ல பழைய இடுகைகளைத் தேடுவது முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. வலைச்சரத்தில் என்னால் குறிப்பிடப்பட்ட ஆசிரியர்களுக்கே தகவல் தெரிவிக்க இயலாத அளவு பணிச்சுமை, பின்னூட்டத்திற்கு பதில் அளிப்பதில் தாமதம் என்பதாக பல பிரச்சனைகளுக்கிடையே ஒருவாரம் ஓடிவிட்டது. பதிவர்களையும் இடுகைகளையும் வகைப் படுத்தி ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் வெளியிட ஆசை இருந்தாலும் தற்போதைய என் சூழ்நிலையில் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.
என்னால் முடிந்த அளவுக்கு வலைச்சரத்திற்கு அதிகம் அறிமுகமில்லாப் பதிவர்களை அறிமுகம் செய்துள்ளேன். இங்கே புதுப்புது ஆசிரியர்கள் வந்து இன்னும் பல முத்துக்களைக் சரத்தில் கோர்க்கப் போகிறார்கள். அவர்கள் அனைவரும் சிறப்பாக எழுதி வலைச்சரத்திற்கு புகழ் சேர்க்கட்டும் என வாழ்த்துகிறேன். வாய்ப்பு நல்கிய அன்பின் சீனா சாருக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அடுத்து பொறுப்பேற்க இருக்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துகள்
ஔவைப்பாட்டியின் வழியில் நானெழுதிய வாழ்த்துப் பாடல்
பெரியது கேட்பின் வலைச்சர மேலோய்..என்னுடைய 2009 ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்தும் நினைவுக்கு வந்தது அது எல்லா நாட்களிலும் எல்லா பதிவர்களுக்கும் பொருந்தும் என்பதால் இங்கே மீண்டும் நினைவுகூர்ந்து வாழ்த்துகிறேன்.
பெரிது பெரிது வலைப்பூ பெரிது
வலைப்பூவோ ப்ளாகர்தம் படைப்பு
ப்ளாகரோ கூகிளுக்குப் பிறந்தோன்.
கூகிளோ இணையக் கடல் துயில்வோன்
இணையமோ மென்பொருளில் அடக்கம்
மென்பொருளோ சர்வருள் ஒடுங்கும்
சர்வரோ கணிப்பொறிக் கடிமை
கணிப்பொறியும் எலியதன் தயவில்
எலியதோ வாசகர் விரற் சொடுக்குள்
வாசகர் பெருமை சொல்லவும் பெரிதே ஏஏ :))
நில்லாத நீர் போலே ஓடும் காலம்
உலர்ந்த சருகானது கழிந்த காலம்
எல்லையில்லா மகிழ்வு தரும் புது நீரும்
புலருட்டும் நாளையொரு பொற்காலம்
உலர்ந்த சருகானது கழிந்த காலம்
எல்லையில்லா மகிழ்வு தரும் புது நீரும்
புலருட்டும் நாளையொரு பொற்காலம்
தினம் ஒரு பூ மலரட்டும் தங்கள் பதிவிலே
அன்பின் மணம் பரப்பட்டும் உலகிலே
பின்னூட்டம் பாராது எழுதி குவிப்பீர்
பின்னாலே வருவர் படிப்பவர் கோடி
வற்றாது பெருகும் வாசகர் எண்ணிக்கை பெரும் அணி
போற்றிடும் என்றும் நுமது எழுத்துப் பணி
அன்பிலே வார்ப்பீர் எண்ணங்களின் தொனி
காலத்தால் வாடாது அன்பின் மொழி
- கபீரன்பன்
--------------- நன்றி ; வணக்கம் ---------------------------
|
|
//ஒரு நல்ல செயலை ஈடுபாட்டுடன் செய்து வந்தால்.....//
ReplyDeleteநீங்கள் முழு ஈடுபாட்டுடன் செய்தீர்கள். நிறையப் பயன் விளைந்தது.
இன்று அறிமுகம் செய்துள்ள பதிவர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
வழங்கப்பட்ட பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்.
மனம் நிறைந்த பாராட்டுகள்.
தொடர்ந்து படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி, காமக்கிழத்தன் ஐயா
Deleteஅன்பின் கபீரன்பன் - அருமை அருமை - பதிவு அருமை - இறுதியில் அவ்வையினைத் தொடர்ந்து - அவர் பாணியில் வாழ்த்துப்பா எழுதியமை நன்று - மிக மிக இரசித்தேன் - பதிவர் தம் பெருமை சொல்லவும் பெரிதே - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துப்பா தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி சீனா ஐயா. பாராட்டியதற்கு மிக்க நன்றி
Deleteகபீரன்பன்,
ReplyDeleteஎன் வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு தங்களுக்கு என் நன்றிகள். இது போன்ற அங்கீகாரம் என்னைப்போன்ற புதிய பதிவர்களுக்கு புதிய உத்வேகத்தையும் இன்னும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும்
தரும் என்று நம்புகிறேன்
அன்புடன்
பாலகுமார்
தொடர்ந்து நல்ல முறையில்- மொக்கைகளை தவிர்த்து -நற்சிந்தனைகளுடன் கூடிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் வலைப்பூவாக மலர என் வாழ்த்துகள். நன்றி பாலகுமார் :)
Deleteஅன்புக்குரிய கபீரன்பன்!.. வணக்கம். கொள்வதற்கு குரு நாமம்.. கொடுப்பதற்கு அன்னதானம்!.. லேனே கோ குரு நாம் ஹை!.. தேனே கோ அன்னதான் ஹை!.. என தாங்கள் பதிவிட்ட அமுத குறள் என் நெஞ்சில் ஆழப் பதிந்து விட்டது!.. இன்றும் - இயற்கையிலேயே நல்ல சுபாவங்களுடன் கூடிய மனதில் மங்கல தீபமாக சுடர் விடுகின்றது. அந்த வகையில் தாங்களும் என் குரு நாதர்தான்!. தங்களுக்கு என் வந்தனங்களை இத் தருணத்தில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்!.. இப்போது வெளிநாட்டில் வாசம். வேலை சூழலில் மூன்றாண்டுகளாக இணையம் செல்வது என்பது மிக அரிதாகியது. இப்போது எனக்கும் ஒரு வலைத்தளம். அதில் தங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியான வேளை!.. காலத்தால் வாடாது அன்பின் மொழி!.. மிக்க நன்றி!..
ReplyDeleteBirds of same feather flock together
Deleteஎன்பதை தங்கள் பின்னூட்டம் நினைவூட்டுகிறது. அன்புக்கு நன்றி.
கடந்த ஒருவார காலமாக சிறப்பான அறிமுகங்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே...
நன்றி குமார். தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பிலும் பல சிறப்புகள் சேர்வதாக என்று வாழ்த்துகிறேன்.
Deleteதொடர்ந்து வந்து ஊக்கம் கொடுத்ததற்கு நன்றி
கபீரன்பன், உங்கள் நிறைவு பதிவை படிக்க முடியாமல் வெளியில் சென்று விட்டேன். மகனுக்கு விடுமுறை அதனால் வெளியில் அழைத்து சென்று விட்டான்.
ReplyDeleteதினசரி தியானம் தினம் படிப்பேன் பலவருஷங்களாய். இங்கு கொண்டு வரவில்லையே என நினைத்தேன், உங்கள் பதிவின் மூலம் ஒரு வாரமாய் படித்து மகிழ்ந்தேன். தொகுத்து அளித்த அமுதமொழிகள் அருமை.
சுவாமி சித்பவானந்தர் அவர்களை சிறு வயதில் சந்தித்து ஆசி வாங்கி இருக்கிறேன். அவர் கயிலை பயணம் புத்தகம் படித்து எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து இறைவனை வணங்கி இருக்கிறார். நாம் இப்போது சுற்றுலா செல்வது போல் போகிறோமே என்று நினைத்துக் கொண்டேன். அவர் ஆசி பெற்றதால் தான் எங்கள் கயிலை பயணம் போக வாய்ப்பு இறைவன் அருளினார் என நினைக்கிறேன்.
வலைச்சர பாயல் மிக அருமை.
புதுவருட வாழ்த்து கவியும் அருமை.
இன்று நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மிக அருமையாக செய்து பயனுள்ள பதிவுகளை கொடுத்து இருக்கிறீர்கள் ஒவ்வொன்றையும் படித்து விடுகிறேன்.
பாருங்கள் ! எனக்கும் ஏதேதோ வேலை. நானும் தாமதமாக வந்திருக்கிறேன். மிக்க நன்றி கோமதி மேடம்
Delete''எலியதோ வாசகர் விரற் சொடுக்குள்
ReplyDeleteவாசகர் பெருமை சொல்லவும் பெரிதே ஏஏ''
மிக மிக அருமையாக இருக்கிறது.
நல்வரவு Viya Pathy, வாசகர் விரல் சொடுக்கின் பெருமை உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. பாராட்டியதற்கு நன்றி
Deleteவலைச்சர ஆசிரியராக நீங்கள் இருந்தது கோமதி அரசுவின் பின்னூட்டத்தில் இருந்து அறிந்தேன். ஒரு மடல் தட்டி இருக்கக் கூடாதோ? மற்ற சரங்களையும் படிக்கிறேன். நிச்சயமாய் மகிழம்பூச் சரமாகத் தான் இருக்கும். காய்ந்தாலும் மணம் வீசும்! :)))))
ReplyDelete// ஒரு மடல் தட்டி இருக்கக் கூடாதோ? //
Deleteகுறைந்தது என்னுடைய வலைப்பூக்களிலாவது ஒரு அறிவிப்பு மாதிரி போட்டிருக்கலாம்தான். என்னமோ அப்போது தோன்றவில்லை :(
எல்லா சரங்களையும் படித்து பின்னூட்டம் இட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி கீதா மேடம்.