07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 4, 2008

குற்றம் - The Wrong Thing.

மூன்று தினங்களாகப் பதிவுகளாகப் பார்த்துக் களைத்துப் போனவர்களுக்காக, எனது முதல் நாடக முயற்சி.

ஒரே ஓர் ஆள் மட்டும் வைத்து ஒரு நாடகம் எழுத முயன்றிருக்கிறேன். எனது தனி வலைப்பதிவில் இட்டால், என்னையும், என் அம்மாவையும் தவிர இன்னும் மூன்று பேர் (மட்டும்) பார்ப்பார்கள். 'வலைச்சரம்' பொது இடத்தில் வைத்தால், பலர் வந்து பார்த்து கருத்து சொல்லுவார்கள் என்று நம்புகிறேன்.

***

(மேடை முழுதிலும் இருள். மையத்தை நோக்கி மெல்ல ஒரு ஒளிக் கற்றை பாய்ச்சப்படுகிறது. அதில் ஒரு முகம் தெரிகின்றது. முகம் மட்டும், மற்றபடி மேடை இருளாக இருக்கின்றது. வயதான முகம். ரிட்டையர்ட் ஏஜ். ஆனாலும் கம்பீரமான முகம். அரங்கத்தைப் பார்த்துப் பேசுகிறார்.)

ஆசாமி : நான் ரங்கராஜன். ரிட்டையர்ட் போலீஸ். பொள்ளாச்சி, நெல்லை, பாபநாசம், அந்தியூர், நாகர்கோவில் என்றெல்லாம் மாறி விட்டு செங்கல்பட்டில் கடைசியாக உதிர்ந்த போது, என்ன போஸ்ட் என்பது முக்கியமில்லாத ஒன்று. பேரன்களோடு விளையாடும் வயதிலும் சில கேஸ்கள் என்னைத் தேடி வரும். கெளரவக் காரணத்தால் வெளியே சொல்லக் கூடாத பிரச்னைகளை நான் தீர்த்து வைப்பேன் என்ற நம்பிக்கையில் தரப்படுபவை. நானும் முடிந்த வரை முயல்வேன்...வெளியே சொல்லாமல் இருக்க! இப்போது சொல்லப் போகும் கேஸ் அப்படி மூடி மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லாத ஒன்று. சம்பந்தப்பட்ட பெயர்கள் மாறி இருக்கும். ஆனால் சம்பவம் நம் தினவாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் மற்றொரு வடிவம்.

போகலாமா..?

(மெல்ல மெல்ல மேடை வெளிச்சம் ஆக்கப்படுகின்றது. முகத்திற்குச் சொந்தக்காரர் பேப்பர் குனிந்து பேப்பர் படிக்கத் தொடங்குகிறார். அவர் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் ஒரு சின்ன மேஜை. அதில் செல்போன். சில பேப்பர்கள். பேப்பர்களின் மேல் வெய்ட்டுக்காக
ஒரு பேனா. வலது பக்கம் ஒரு அறைக்குச் செல்லும் திறப்பு. இடது பக்கம் பின்புறமாக ஓர் அறை. இரண்டு அறைகளின் முகங்களிலும் ஸ்க்ரீன்கள். ஒன்றில் பூக்கள் வரையப்பட்டிருக்கின்றன. மற்றொன்றில் இரண்டு யானைகள், பூத்தூவ, நின்ற கோலத்தில் சரஸ்வதியின் ஓவியம். ஒரு மூலையில் ஒரு மேஜை. அதில் ஒரு ப்ளாஸ்டிக் பூஜாடி. சுவரில் ஒரு காலண்டர். பின்புற அறை சமையலறை போல், குக்கர் விசில் சத்தம் கேட்கின்றது. வலது புற அறையில் இருந்து விதம் விதமான சேனல் சத்தங்கள் வருகின்றன. ஓர் இயல்பான குடும்பச் சூழல். ஆசாமி ஆர்வமாகப் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்.)

ரங்கராஜன் : ஓஹோ..! அடடே..! அப்படியா..? ம்ம்ம்...! (பக்கத்தைப் புரட்டுகிறார்..!) இப்படி வேற நடக்குதா..? கலி காலம் தான்.

(அப்போது பக்கத்தில் வைத்திருக்கும் செல்போன் அடிக்கிறது. பேப்பரை மடித்து வைத்து விட்டு செல்போனை எடுத்து நம்பரைப் பார்க்கிறார்.)

ர : அட, நம்ம விசு..!

(காதருகில் வைத்து பேசத் தொடங்குகிறார். மைக் அவர் காலரில் இருந்தால் நல்லது. பார்வையாளர்களுக்கு அவர் பேசுவது மீத் தெளிவாகக் கேட்க வேண்டும். ஒவ்வொரு வசனத்திற்கும் இடையே மூன்று, நான்கு வினாடிகள் இ டை வெ ளி விட வேண்டும்.)

ர : ஹலோ..! ரங்கராஜன் ஸ்பீக்கிங்..! யாரு, விசுவா..?

...

ர : நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க..? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க..? உன் பிஸ்னெஸ் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு..?

...

ர : சந்தோஷம். கடைசியா எங்க பார்த்தோம்..? பாலனோட பொண்ணு மேரேஜ்ல, இல்லியா..? ஒரு மாசம் முன்னாடி..! ஆமா, இப்ப என்ன விஷயம் சொல்லு..! காரணம் இல்லாம போன் பண்ண மாட்டியே நீ!

...

ர : பின்ன, பிஸ்னெஸ்மேன் ஆச்சே..! ஏதாவது ஒரு காரணம் இருக்கணுமே..! ஒரு நிமிஷம் இரு..!

(இடது பக்கம் திரும்பி, கிச்சனைப் பார்த்து)

சாந்தி, கொஞ்சம் அந்த பால் குக்கரை அடக்கும்மா..! ஒரு முக்கியமான கால் பேசிட்டு இருக்கேன்.

(பால் குக்கர் விசில் நிறுத்தப்பட வேண்டும்.)

இப்ப சொல்லுடா. என்ன விஷயம்..?

...

ர : ஓ..! அப்படியா..? எவ்ளோ பவுன்..?

...

ர : எவ்ளோ நாள் ஆச்சு? போலீஸ்கிட்ட கம்ப்ளெய்ண்ட் கொடுத்தியா...?

...

ர : ஏண்டா... திருட்டுப் போய்... ஸாரி...உன் வார்த்தைகள்ல காணாமப் போய் ஒரு வாரம் ஆகி இருக்கு..? இன்னும் கம்ப்ளிய்ண்ட் பண்ணாம இருக்கறது நல்லதில்ல.

...

ர : சரி. உன் பிரச்னை புரியுது. வெளியே தெரிஞ்சு போனா, பேர் பாதிக்கும்னு சொல்ற. நான் என்ன பண்ணணும்னு எதிர்பாக்கற..?

...

ர : குடும்பத்திலேயே யாரோ எடுத்திருக்கலாம்னு சொல்ற. நீயே எல்லாரையும் கூப்பிட்டு வெளிப்படையா பேசலாமே! 'த பாருங்கப்பா..! எனக்கு நகை போனது முக்கியம் இல்லை. பட், நம்ம ஃபேமிலிக்குள்ளயே ஒரு திருட்டு நடக்குதுனு வெளிய தெரிஞ்சா எல்லார்க்கும் அவமானம். நீங்களே சொல்லிடுங்க. யாரு எதுக்கு செலவு பண்ணிணீங்கனு சொல்லிடுங்க'னு கேட்டுப் பாரு.

...

ர : சரி, விடு! என் கிட்ட குடுத்திட்ட இல்ல, கவலைப்படாத, நான் பாத்துக்கறேன்.

...

ர : அட, தேங்ஸ் எல்லாம் ஃப்ரெண்ட்ஸ்குள்ள எதுக்கு! சரி, என்கொயரியை ஆரம்பிச்சுடறேன். உனக்கு யார் மேல சந்தேகம்?

...

ர : போப்பா..! என்ன இருந்தாலும் பெத்த பையன் மேல போய் யாராச்சும் சந்தேகப்படுவாங்களா..?

...

ர : உனக்கும், அவனுக்கும் ரிலேஷன்ஸ் சரி இல்லைனு நினைக்கறேன். அதான் இவ்ளோ காட்டமா பேசற. நான் முன்னாள் போலீஸ்காரன். எல்லார் மேலயும் எனக்குத் தான் சந்தேகம் வரணும். உன் பையன் விஜய், பொண்ணு அனிதா, வொய்ஃப் லக்ஷ்மி... வீட்டு வேலைக்காரி பேரென்ன...(கொஞ்சம் இடைவெளி விடுகிறார்.) அஞ்சலை... எல்லோரையும் என்கொயரி பண்ணப் போறேன். டோண்ட் வொரி மேன். கண்டுபிடிச்சரலாம்.

...

ரா : எனக்குத் தெரியாதா..? உங்க ரிலேஷன்ஸை கெடுத்திடற மாதிரி என் விசாரணை இருக்காது. ஐ ஏம் ஷ்யூர் எபவுட் திஸ். ஓ.கே..? டன். நீ என்ன செய்ற..? இந்த லிஸ்ட்ல இருக்கற எல்லாரோட மொபைல் நம்பரையும் எனக்கு மெஸேஜ் பண்ணிடு. அஞ்சலைகிட்ட செல் இருக்கா..?

...

ரா : நல்லது. ஏழைக்கேத்த எலிஃபெண்ட். வெச்சிடறேன்.

(மொபைலை வைத்து விடுகிறார். முகவாயைத் தடவிக் கொண்டு யோசிக்கிறார். பேப்பரைப் புரட்டுகிறார்.)

ர : ஓ..! பவுன் இவ்ளோக்கு வந்திடுச்சா...?

(மனதுக்குள் கணக்கு போடும் பாவனையை முகத்தில் காட்டுகிறார். மொபைலை எடுத்து ஒரு கால் செய்கிறார். காத்திருந்து பின்...)

ர : ஹலோ, குமரனா..? நான் தான் ரங்கராஜன் பேசறேன்.

...

ர : குட்மார்னிங்..குட்மார்னிங்..! ஸ்டேஷனுக்குப் போய்ட்டீங்களா..? இல்லை எங்கயாவது ட்யூட்டி போட்டிருக்கா..?

...

ர : ஜாக்கிரதையா இருங்க. அந்த ஏரியால மைன் பாம்ஸ் இருக்கறதா கேள்விப்பட்டிருக்கேன். ஜமுனா எப்படி இருக்கா? பொண்ணு என்ன சொல்றா..?

...

ர : ஓ.கே. எனக்கு ஒரு சின்ன வேலை பண்ணனும் நீங்க..?

...

ர : ஒண்ணும் பெரிசா இல்ல. போன ஒரு வாரத்துக்குள்ள சிட்டிக்குள்ள எந்த நகைக் கடையிலயாவது எழுபத்தஞ்சு பவுன் நகை விற்கப்பட்டிருக்கா இல்ல அடகு வெச்சிருக்காங்களானு ஒரு தகவல் வேணும். ஒரு சின்ன விசாரணைக்கு.

...

ர : இல்ல, அவங்க கம்ப்ளெய்ண்ட் எல்லாம் குடுக்கல. ஃபேமிலிக்குள்ள டவுட் பண்றார். அதனால் போலீஸ் வரைக்கும் போக வேணாம்னு இருக்கார். நான் சைலண்டா இதை டீல் பண்றேன். நீங்க இத மட்டும் கொஞ்சம் விசாரிச்சு சொன்னா சந்தோஷம்.

...

ர : அவ்ளோ நேரம் ஆக வேண்டியதில்லைனு நினைக்கறேன். சிட்டிக்குள்ள இவ்ளோ பெரிய அளவுக்கு நகைகளை டீல் பண்றவங்க ரொம்ப கம்மி. செளகார்பேட் சேட்களை எல்லாம் விடுங்க. என்கொயர் டைரக்ட்லி தி ஜூவல்லரி ஷாப்ஸ். எனக்கு கொஞ்சம் அர்ஜெண்ட்டா இன்ஃபர்மேஷன் வேணும். நம்ம கையை விட்டு ஜூவல்ஸ் போயிடக் கூடாது. அஞ்சு நிமிஷம். அதுக்குள்ள முடியும், பாருங்க.தேங்க்ஸ். வெச்சிடறேன்.

(மொபைலில் மெஸேஜ் டோன் கேட்கிறது. எடுத்துப் பார்த்து, பக்கத்தில் இருக்கும் டேபிளில் இருந்து பேப்பரையும் பேனாவையும் எடுத்து, மொபைலைப் பார்த்து, பேரையும், செல் எண்ணையும் குறிக்கிறார். ஒரு எண்ணை கால் செய்கிறார்.)

ர : ஹலோ விஜய்! ஹவ் ஆர் யூ...?

...

ர : அங்கிள் இஸ் ஃபைன். எவ்ரிஒன் இஸ் ஃபைன். வேர் ஆர் யூ நவ், மை யங் மேன்..?

...

ர : குட். ஷட்டில் இஸ் குட் ஃபார் ஹெல்த். சரி, உனக்கும் அவனுக்கும் டெர்ம்ஸ் சரி இல்லையா..? போன் பண்ணி புலம்பறான்.

...

ர : அது ஜென்ரேஷன் கேப், விஜய். உனக்கே தெரியுமே...? நான் அருண்கிட்ட எவ்ளோ சண்டை போட்டிருக்கேன் தெரியுமா..?

...

ர : இல்ல. நீ வந்து உன் ஃப்ரெண்ட்கிட்ட கேட்டுப் பாரு. அவனும் என்னைப் பத்தி இதே மாதிரி தான் குறை சொல்லுவான்.

...

ர : எல்லாம் உங்க மேல இருக்கற அக்கறையினால தான். ஓ.கே. ஸ்டடிஸ் தவிர மத்தபடி உனக்கும் அவனுக்கும் எதுவும் க்ளாஷ் இல்லையே..? பாக்கெட் மணி எல்லாம் ஒழுங்காத் தர்றானா...?

...

ர : அது போதும். ஓ.கே. பை. அவன் கூட அளவா சண்ட போடு. பி.பி.பேஷண்ட் அவன். ஷுகர் இருக்கு. டேக் கேர். பை.

(குறித்து வைத்த சீட்டில் ஒரு டிக் செய்கிறார். கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, மீண்டும் கால் செய்கிறார்.)

ர : ஹலோ..! அனிதா..! நான் தான்...

...

ர : ஸ்வீட் கேர்ள். எஸ்..! அங்கிள் ரங்கு தான் பேசறேன். எங்கம்மா இருக்க..? சல்ஸா க்ளாஸா..? ஹார்ஸ் ரைடிங்கா..?

...

ர : குட்..! நான் எதுவும் டிஸ்டர்ப் பண்ணிடலையே...?

...

ர : ஓ.கே..! இப்ப எதுக்கு ஃபோன் பண்ணிணேன்னா, உங்க டேடிக்கும், விஜய்க்கும் இடையில பிரச்னைகள் இருக்கா..? சரியாகவே பேச மாட்டேங்கறாங்க ரெண்டு பேரும்..?

...

ர : இவனைக் கேட்டா அவன் மேல குறை சொல்றான். அவன் இவன! நார்மல் ஃபாதர் சன் க்ளாஷ் தான..? வேற எதுவும் சீரியஸா இல்லையே..?

...

ர : ஓ.கே.டா. அங்கிள் அப்புறமா கால் பண்றேன். டேக் கேர்.பை.

(வைத்து விட்டு அடுத்த டிக் செய்கிறார். கால் வருகின்றது.)

ர : சொல்லுங்க குமரன். விவரம் தெரிஞ்சிடுச்சா..?

...

ர : ஓ...! என்னிக்கு...? யார் வந்தாங்களாம்..?

...

ர: ஓஹோ..! அதுவும் அப்படியா..? ஓ.கே. தேங்க்ஸ் ஃபார் தி டைம்லி ஹெல்ப், குமரன்.

...

ர : இல்ல. வேணாம். நானே பாத்துக்கறேன். அவர் தான் கம்ப்ளெய்ண்ட் பண்ணலைன்னு சொல்லிட்டாரே..? அதுக்கப்புறம் நாம எப்படி ஏக்ஷன் எடுக்க முடியும்..? மோர் ஓவர், எனக்கு இன்னும் கொஞ்சம் குழப்பம் இருக்கு. நீங்க சொன்னவங்க அதைத் திருடித் தான் அடகு வெச்சிருக்கணும்னு இல்ல. ஐ வில் டேக் கேர் அபவுட் திஸ். ஓ.கே. வெச்சிடறேன்.

(காலை கட் செய்கிறார். தீவிரமாகக் கொஞ்ச நேரம் யோசிக்கிறார். குறித்து வைத்திருந்த எண்களை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு, மீண்டும் செல்போனில் கால் செய்கிறார்.)

ர : அஞ்சலை..! நான் உன் முதலாளியோட ஃப்ரெண்ட் பேசறேன். ரிட்டையர்ட் போலீஸ் ஆபீஸர். இரு.. பதறாத..! இப்ப எங்க இருக்க..?

...

ர : நல்லது. நான் ஒரே ஒரு கேள்வி கேக்கறேன். உண்மையான பதில் வந்திச்சுனா ஒண்ணும் செய்ய மாட்டேன். பொய்யோட வாசம் கொஞ்சம் அடிச்சாலும், கால்கள்ல முட்டினு ஒரு ஏரியா இருக்காது. என்ன சொல்றியா..?

...

ர : ஒரே கேள்வி..? எழுபத்தஞ்சு பவுன் நகையை ஏன் நீ திருடினே..?

...

ர : இல்ல. இது நடிக்கறதுக்கான நேரம் இல்ல. நீ அடகு வெச்ச டி. நகர் ஷாப்ல அன்னிக்கு என்ன கலர் ரிப்பன் கட்டிட்டுப் போயிருந்தங்கறதுல இருந்து எல்லா தகவலும் தெரிஞ்சிடுச்சு. 'இல்ல.. தெரியாது'னு சொல்றதுல அர்த்தம் இல்ல. எனக்கு ஒரே ஒரு உண்மை தெரிஞ்சா போதும். நீயா இந்த வேலையச் செஞ்சியா இல்லை யாராவது செய்யச் சொன்னதாலா..? ஏன்னா எனக்கு நம்பிக்க இருக்கு. நீயா செய்யல. அப்படி செய்யறவளா இருந்தா நகைகளை அடமானம் வெச்சிருக்க மாட்ட. வித்திட்டு ஊர விட்டே ஓடிப் போயிருப்ப. மறுபடியும் அங்கயே வேலை பாக்கறத வெச்சுப் பார்த்தா, இதுல தெரியாம நீ மாட்டிக்கிட்டனு தான் தோணுது. உஷ்...! அழக் கூடாது. யாரு உங்கிட்ட நகைகளை கொடுத்தா..? அத மட்டும் சொல்லிடு.

...

ர : ஆகாது. அவங்களுக்கு எதுவும் ஆகாது. நான் கேரண்டி.ம்.. சொல்லு..!

...

ரா : ஓ..! எதிர்பார்த்தது தான். சரி. இப்ப ஒண்ணு செய். இனிமேல் அந்த வீட்ல காட்டிக் குடுத்திட்டமேன்னு குற்ற உணர்ச்சியோட நீ வேல செய்ய வேணாம். மனிதர்களைப் பத்தி உனக்குத் தெரியாது. அவங்களுக்கு சாதகமா இருக்கற வரைக்கும் தான் ஒத்துப் போவாங்க. இல்லாட்டி கழிச்சுக் கட்டிடுவாங்க. அவங்களே உனக்கு திருட்டுப் பட்டம் கட்டி அனுப்பினாலும் அனுப்பிடுவாங்க. அதுக்காக கவலப்படாத. அந்த வேலய விட்டுடு. என்னிக்கு உன்னை வீட்டை விட்டு அனுப்பறாங்களோ அன்னிக்கு எனக்கு போன் பண்ணு.. நான் வேற எடத்துல வேல வாங்கித் தரேன். இப்ப மார்க்கெட்ல இருந்து அவங்க வீட்டுக்குப் போய் வழக்கமா வேலையப் பாரு.

(போனை வைக்கிறார். அடுத்து ஓர் எண்ணைக் குறித்துக் கொண்டு கால் செய்கிறார்.)

ர : ஹலோ..! நான் தான் ரங்கராஜன் பேசறேன்.

...

ர : fine. நீங்க நல்லா இருக்கீங்களா..?

...

ர : ஆமா, சும்மா இல்ல. காரணம் இருக்கு. உங்களுக்கு திடீர்னு எழுபத்தஞ்சு பவுன் நகைய அடமானம் வெக்கற அளவுக்கு என்ன தனிப்பட்ட வகை கஷ்டம்..? அவன்கிட்ட கேட்ட குடுக்க மாட்டானா..? வீட்ல யாருக்கும் தெரியாம அப்படி என்ன திரைமறைவு வேலைகள்..?

...

ர : இருங்க. அழாதீங்க. எல்லாம் தெரிஞ்சிடுச்சு. எனக்கு மட்டும் தான் தெரியும். அவனுக்குத் தெரியாது. உங்க வேலைக்காரிகிட்ட குடுத்து விட்டு, ரகசியமா பணம் வாங்கி... எதுக்கு இதெல்லாம்..?

...

ர : என்கிட்ட நீங்க தைரியமா சொல்லலாம். என்னை விட்டு எங்கயும் வெளிய போகாது. எனக்குள்ள மட்டும் இருக்கும். உங்களுக்கு நினைப்பிருக்கானு தெரியல. ஒரு தடவ ரெண்டு ஃபேமிலியும் மூணாறு டூர் போனப்ப, என் கைல ராக்கி கட்டி விட்டீங்க. இருபது வருஷத்துக்கு முன்னாடி. அதுக்கு அர்த்தம் தெரியும் இல்லையா..?

...

ர : சொல்லுங்க. (நீண்ட மெளனம்.) இதை எல்லாம் நீங்க முன்னாடியே போலீஸ்கிட்ட சொல்லி இருக்கலாம். அட்லீஸ்ட் என்கிட்டயாவது..! fine. இப்பயும் ஒண்ணும் காரியம் கெட்டுப் போயிடல. அந்த ஆள, உங்க மாமானு தான சொன்னீங்க... மூணே நாள்ல கண்டுபிடிச்சு, குடுக்கற எனிமால இனிமேல உங்க வழிக்கே வராம பண்ணிடலாம். அவன்ட்ட இருந்து பணத்த மறுபடியும் வாங்கி, நகைய மீட்டிடலாம்.

...

ர : கண்டிப்பா அவனுக்கு டவுட் வரும். காணாம போன நகை எப்படி திடீர்னு திரும்பி எப்படி வந்திச்சுனு அவன் கேட்பான். நான் சொல்ற மாதிரி சொல்லுங்க. உங்க வீட்டு வேலைக்காரி அஞ்சல தான் நகையைத் திருடிட்டு போய் அடமானம் வெச்சிருக்கா. சமயம் பாத்து வேலய விட்டு ஓடிப் போக திட்டம் போட்டிருந்தா. யதேச்சையா கண்டுபிடிச்சுட்டேன். நகை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்திட்டேன்னு அவன்கிட்ட சொல்லுங்க.

...

ர : குதிக்கத் தான் செய்வான். போலீஸ்கிட்ட போறேன். கம்ப்ளெய்ண்ட் குடுக்கறேன்னு கத்துவான். குடும்ப நிலவரம் வெளிய தெரிஞ்சா மீடியாவுக்குத் தான் அவல். அதனால, வேலைக்காரிய, வேலைய விட்டு மட்டும் துரத்திடலாம்னு சொல்லிடுங்க. மீடியான்னா அவனுக்கு கொஞ்சம் பயம். ஒருதடவ போர்ட் மீட்டிங் முடிஞ்சு ஆனுவல் ரிப்போர்ட் டிஸ்ட்ரிப்யூட் பண்ணும் போது, ஒரு ஜர்னலிஸ்ட் கூட தகராறு ஆகி, இப்போ இவன் மேல ப்ரெஸ் ஒரு கண் வெச்சிருக்கு. சின்ன திரி கிடைச்சா போதும். வெடி வெச்சிடுவாங்க. இது அவனுக்கும் தெரியும். சோ ரெண்டு மூணு நாள்ல பணம் கிடைச்ச உடனே, நகைய மீட்டுக் கொண்டு வந்திடுங்க. நான் சொன்ன மாதிரி செஞ்சிடுங்க.

...


ர : இல்ல. நகை எங்கயும் போகாது. ப்ளாக் பண்ணி வெச்சிருக்கோம்.

...

ர : அழாதீங்க. இனிமேலயாவது உஷாரா இருங்க. நானும் அவன் கிட்ட சொல்லி போலீஸ் அளவுக்கு போக வேணாம்னு சொல்றேன். பணத்தை மீட்டப்புறம் உங்களுக்கு மறுபடியும் கால் பண்றேன். சரி, இப்ப வெச்சிடறேன்.

(போனை வைத்து விடுகிறார். சமையலறைச் சத்தங்கள் அமைதியாகின்றன. சேனல் குரல்கள் ஓய்ந்து மெளனமாகின்றன. ரங்கராஜன் முன்னே நிமிர்ந்து பார்க்கிறார். விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு, மீண்டும் ஒற்றைக் கற்றை ஒளி அவர் முகத்திற்கு மட்டும் பாய்ச்சப்படுகிறது. அரங்கத்தைப் பார்த்துப் பேசுகிறார்.)

ர : இது தான் நான் செய்த வேலை. பிறகு லக்ஷ்மியின் மாமாவைப் பிடித்துப் பணத்தை மீட்டு, நகையை மீட்டு, வேலைக்காரி மேல் லக்ஷ்மி திருட்டுக் குற்றம் சுமத்தி, அவளைத் துரத்தி, அவள் என் மூலமாக வேறொரு வீட்டில் வேலை செய்கிறாள்.

இதில் எத்தனை பேரை நான் ஏமாற்றி இருக்கிறேன்? விசு, அவன் மனைவி லக்ஷ்மி, வேலைக்காரி அஞ்சலை.

விசுவைப் பொறுத்தவரை, நகை திருடியவள் வேலைக்காரி. அவள் மூலமாக நகை மீண்டும் கிடைத்து விட்டது. அவளுக்குத் தண்டனை பணிநீக்கம். அவனுக்கு குடும்பத்தின் மேல் இருந்த அவநம்பிக்கை போய், மீண்டும் குடும்பத்தில் இன்பம் வீசுகிறது.

லக்ஷ்மிக்கு அவள் செய்த குற்றம் அவள் கணவனிடம் இருந்து மறைக்கப்பட்டு, நல்லவளாகவே தொடர்கிறாள். அவளுக்கு அவள் மாமன் தொல்லையும் ஒழிந்தது. பணமும், நகையும் கிடைத்தது.

வேலைக்காரி அஞ்சலைக்கு 'இப்படி தன்னை உபயோகப்படுத்தி விட்டு, தன் மேலேயே திருட்டுப் பட்டம் கட்டி, துரத்திய வீட்டிலிருந்து' விடுதலை. வேறொரு நல்ல வீட்டில் வேலை.

மூன்று பேருக்கும் சுகமான முடிவைத் தரும் வகையில் சம்பவங்கள் என்னால் டிசைன் செய்யப்பட்டன. இதில் எதுவும் தவறு நான் செய்து விட்டதாக நினைக்கவில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் நான் செய்தது நல்லது. மொத்தமாகப் பார்த்தால், ஒரு வகைக் குரூரமாகவும் தெரியலாம். ஆனால் தனிப்பட்ட அவர்களது நன்மைகளுக்காக கலெக்டிவான செயல்முறைகள் சில சமயம் இப்படிக் கொடூரமாகத் தெரியலாம். நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா..?

(அந்த ஒற்றை ஒளிக் கற்றையும் அணைகிறது. மேடையைப் பழையபடிக்கு இருள் முழுக்க முழுக்க சூழ்கிறது.)

***

கலைவனாக நாடகம் எழுத, கற்றுத் தந்த துரோணருக்குச் சமர்ப்பணமாக, 'ரங்கராஜனை' நாயகனாக்கி இருக்கிறேன். வாத்தியாருக்கு நன்றிகள்!




நன்றி!

***

13 comments:

  1. நண்பர் வசந்த்துக்கு....
    நல்ல முயற்சி. நன்றாகத்தான் இருந்தது.குறைகள் அவ்வளவாக இல்லை.
    ஆனாலும் வேலைக்காரிக்கு இன்னமும் அஞ்சலை என்றுதான் பெயர் வைக்க வேண்டுமா...?
    என்னதான் சமாதானம் சொன்னாலும் 'லஷ்மி'யின் மானம் காக்க , ஒரு வேலைக்காரியை திருட்டுப் பட்டம் கட்டியது சரியில்லைதான்.
    வலியோர் வலியோர்தான்... மெலியோர் மெலியோர்தான் எனும் பூர்வாசிரமக் கருத்துக்களை மறுபடியும் வலியுறுத்தும் கதை.
    ஆனால் நடைமுறையில் இவ்வாறுதான் நடக்குமென்பதால் வாய் பொத்திக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள் வசந்த்...

    ReplyDelete
  2. அன்பு தமிழ்ப்பறவை...

    வாழ்த்துக்கு நன்றிகள்.

    /*ஆனாலும் வேலைக்காரிக்கு இன்னமும் அஞ்சலை என்றுதான் பெயர் வைக்க வேண்டுமா...?*/

    சட்டென்று வேறு பெயர் தோன்றவில்லை.

    /*பூர்வாசிரமக் கருத்துக்களை மறுபடியும் வலியுறுத்தும் கதை.*/

    அப்படி இல்லை. இப்படித் தான் நடக்கும் என்று சொல்ல வந்தேன். நான் வலியுறுத்தவெல்லாம் இல்லை.

    ReplyDelete
  3. இன்னமும் வேலைக்காரிகள் அஞ்சலைகளாகவே இருக்கிறார்களா!? ஒரு மாறுதலுக்கு ஸ்ரேயா, நமீதா என கதைக்காக மட்டும் பேர் சூட்டினால் என்ன!? :D :D

    வித்தியாசமான கதைக்களம். ஒரு விதத்தில் நிர்வாக மேலாண்மைக் கருத்துடன் ஒத்துப் போகிறது. நிறுவன மேலாளர், பெரிய வேலைகளை தனக்கு கீழே வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சிறிது சிறிதாகப் பிரித்துக் குடுத்து வேலை வாங்குவதைப் போல.

    ReplyDelete
  4. அன்பு சுந்தர்...

    மிக வித்தியாசமான பார்வையாக மேனேஜ்மெண்ட் கான்செப்ட்கள் இதில் இருக்கின்றன என்று சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  5. நாடகம் நல்லா வந்துருக்கு. நம்ம தமிழ்ச் சங்கத்துலேபோட நாடகம் தேடிக்கிட்டு இருக்கேன்.

    இது கொஞ்சம் நீளமா மட்டுமில்லே ஒரே ஆள் என்றதாலே பார்வையாளர்களுக்கு அவ்வளவா சுவாரசியப்படாது.

    முதல் ரெண்டுவரிசையைத் தவிர எல்லாரும் யுகயுகமாப் பிரிஞ்சு இருந்தவங்க, இப்பத்தான் பார்த்த மாதிரி சளசள ன்னு பேசிக்கிட்டு இருப்பாங்க(-:

    வேற நகைச்சுவை நாடகம் எதாவது எழுதியிருக்கீங்களா?

    ReplyDelete
  6. //என்னதான் சமாதானம் சொன்னாலும் 'லஷ்மி'யின் மானம் காக்க , ஒரு வேலைக்காரியை திருட்டுப் பட்டம் கட்டியது சரியில்லைதான்.//

    ஆமா

    ReplyDelete
  7. அன்பு துளசி கோபால் மேடம்...

    வாசக இடைவெளி என்ற ஒன்று நல்ல சிறுகதைகளில் இருக்க வேண்டிய ஒரு கூறு. அந்த இடைவெளியை படிப்பவர்கள் தத்தம் மன உயர்விற்கேற்ப நிரப்பிக் கொள்வார்கள். நம் மனநிலை நாம் வளர்வதேற்கேற்ப பக்குவம் அடைந்து கொண்டே வரும் என்பதால், அந்த சிறுகதைகளை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கும். அதனால் அவை அமரகதைகள் ஆகின்றன.

    அந்த மாதிரியான வாசக இடைவெளி ஒன்றை நாடகத்திலும் கொண்டு வர செய்த சிறு முயற்சியே இது.

    எதிர்முனையில் இருப்பவர் பேசுகின்ற வசனங்கள் அனைத்தும் பார்வையாளர்களின் யூகத்திற்ல்கே விடப்பட்டு, இந்த முனையில் பேசுபவரின் ரிப்ளைகளைக் கொண்டு மட்டுமே, பார்ப்பவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு எழுத விரும்பினேன்.

    இதில் இருக்கின்ற கவனங்கள் தேவைப்படும் இடங்கள்,

    1. இந்த முனையில் இருப்பவர் தான் அதிக வசனங்களைப் பேச வேண்டும். வெறும் ஆங்... ஆங்... சரி... ஒ.கே.. என்றவாறு பேசக் கூடாது.

    2. முக்கியமாக ஒரே ஒருவர் மட்டும் நடிப்பதால், நீங்கள் சொன்ன மாதிரி பார்ப்பவர்கள் சலிப்புற்று விடக் கூடாது என்பதால், கூர்மையான, சுவாரஸ்யமான வசனங்களின் பங்கு மிக முக்கியம். அந்த இடத்தில் ஓரளவு மட்டுமே நன்றாக வந்துள்ளது என்பதை தங்களது பின்னூட்டத்தில் இருந்து புரிந்து கொள்கிறேன். Miles to go. :)

    இது தான் எனது முதல் நாடக முயற்சி என்பதால், இந்தக் குறைகளை மன்னித்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன். வேறு நாடகங்கள் எதுவும் எழுதவில்லை. இன்னும் எவ்வளவு நாட்களில் நகைச்சுவை நாடகம் தேவை என்று சொன்னீர்கள் எனில், முயற்சி செய்து பார்க்கிறேன்.

    நன்றிகள்.

    ***

    அன்பு கபீஷ்...

    தினப்படி வாழ்க்கையில் நடக்கின்ற ஒன்றைத் தான் சொல்லி உள்ளதாக நினைக்கிறேன். ஆனாலும் அதனைப் பற்றிய குற்ற உணர்வு (எனக்கும்) இருப்பதால் தான் நாடக ஆரம்பத்திலும், கடைசியிலும் பார்வையாளர்களிடம் கேட்கிறார், 'நான் செய்தது சரியா?' என..!

    அந்தக் கேள்விக்கான பதிலை பார்ப்பவர்கள் தத்தம் மனதில் தான் தேட வேண்டும். :)

    நன்றிகள்.

    ReplyDelete
  8. வசந்து,

    எப்ப முடியுமோ அப்ப எழுதித்தாங்க. பொங்கலுக்கு இல்லைன்னா புதுவருசத்துக்கு ஆச்சு.

    நாடகத்துலே நடிக்க மக்களை ரவுண்டுகட்டி ரிகர்ஸல் நடத்தறதுக்குள்ளே போதும் போதுமுன்னு போயிரும்.

    மூணு நாடகம் இயக்கி நடிச்ச பெருமை ஒன்னு நமக்கு இருக்கே:-)))

    ReplyDelete
  9. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. புதிய முயற்சின்னு சொன்னாலும் அருமையா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அன்பு துளசி கோபால் மேடம்...

    கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். இன்னுமொரு இலக்கிய முறையில் கை வைக்கலாம் என்று வழி காட்டியிருப்பதற்கு நன்றிகள்.

    ***

    அன்பு சதங்கா...

    மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துற்கு..!


    ***

    அன்பு கிருத்திகா மேடம்...

    வாழ்த்துக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. வசந்த்,

    கன்னி முயற்சிக்கு நிச்சயமாக நல்லாவே இருக்கு. சற்று நெருடிய விஷயங்களை தமிழ்ப்பறவை சொல்லி, நீங்கள் விளக்கமும் கொடுத்து விட்டீர்கள். ஆங்கிலப் பிரயோகத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தலாம். மொத்தத்தில் அதகளம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது