ஜோதிஜி 7வது நாள் - விதைகள் மலடா?
வணக்கம் நண்பர்களே
ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும் இந்த உலகில், நாம் வாழும் ஊரில் எத்தனையோ மாறுதல்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. நமக்கு எல்லாமே ஏற்புடையதாக இருக்காது. சிலவற்றுக்கு எதிர்க்க வேண்டும் என்று மனதிற்குள் மட்டும் தோன்றும்.
நம் வாழ்க்கை சூழ்நிலை அதை அனுமதிக்காது. அது சுயநலம், பொதுநலம், அக்கறையின்மை என்று என்ன பெயர் வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம்.
நாம் யாரையும் திருத்த வேண்டிய அவசியத்தில் பிறக்கவில்லை. ஆனால் நாம் நம்மை திருத்திக் கொள்ள முடியும். மாற்றங்கள் என்பது மாறிக் கொண்டேயிருப்பது. மாற்றங்கள் என்பது நம்மிடம் இருந்து உருவாவது. நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டியது. ஆனால் நாம் எல்லோருமே மற்றவர்கள் மாற வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். நம்மை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. ஆனாலும் நாம் மாற்றத்தை எதிர்பார்த்தே காத்துக் கொண்டிருக்கின்றோம்.
நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை நிதர்சனமாக உணர முடியும் என்பதைப் போல நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும்? என்பதையும் யோசிக்க முடியும் தானே?
அரசாங்கம் என்பது மிகப் பெரிய தொழிற்சாலையின் எந்திரம் போல உள்ள நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத ஒரு விசயம். ஆனால் நாம் என்ன உணர்ந்தோம் என்பதைப் பற்றி எழுத முடியும். நம் சந்தில் நடந்த அக்கிரமத்தை அப்படியே எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அதன் பாதிப்புகள் என்ன? அதன் விளைவுகள் என்ன? இப்படி மாறிநடந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று நம்மால் எழுத முடியும் தானே?
நாம் எழுதுவதற்கே திரைப்பட நடிகர் நடிகைகளைப் பற்றி மட்டுமே யோசிக்க விரும்பும் போது ஏன் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும்.
வலை எழுத்துக்கள் சாகாவரம் பெற்றது. உங்கள் தலைமுறைகளை தாண்டி நிற்கப் போவது. உங்களுக்கு எது வேண்டுமானாலும் பிடிக்கலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம். ஆனால் இரண்டையும் பற்றி எழுதி வைத்து விடுங்க.
காரணம் இப்போதைய சூழ்நிலையில் உங்களுக்கு பிடிக்காத காரணிகள் நீங்கள் அடுத்த வருடம் அந்த எழுத்தை நீங்களே வாசிக்கும் போது எந்த அளவுக்கு உங்கள் மாறுதல் அடைந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள உதவும்.
முடிந்தவரைக்கும் எழுதுங்க.
முயற்சிகளோடு எழுதுங்க.
எழுத்தில் உங்கள் வளர்ச்சி என்பது உங்கள் மனம் சார்ந்த வளர்ச்சி.
நிச்சயம் இந்த தளம் போன்ற ஒரு தளத்திற்குள் சென்றால் உங்களுக்குத் தெரிந்தவர் தெரியாதவர், பிடிக்காதவர், பிடிக்காதவர் என்று அத்தனை தளங்களையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியும். குறைவான நேரம் உள்ளவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதம்.
வரைச்சரம் மூலம் தான் உங்களை கண்டு கொள்ள முடிந்தது என்றார் முரளி. அப்படி என்றால் என்ன? 4 வருடங்கள் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு இன்னமும் உழைப்பு தேவைப்படுகின்றது என்று அர்த்தம். இங்கு எவரும் நிச்சயமானவர்கள் இல்லை. வேறு வழியே இல்லை. உழைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். உண்வுக்கு, இருப்பிடத்திற்கு விரும்பும் மற்ற விசயங்களுக்கு என்று நாம் பாடுபட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும்.
உழைப்பும் களைப்பும் அண்ணன் தம்பிகள். ஒற்றுமையாக இருக்க வைப்பதில் தான் நம் மனம் முக்கிய பங்கு வகிக்கின்றது. உண்மையாக உழைத்தால் களைப்பு வரும். இல்லையென்றால் வெறும் கொட்டாவி தான் வரும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டுக் கொண்டு கெட்ட ஆவிகளை சுமந்த ஜீவனமாகத்தான் வாழ முடியும்.
வாசிப்பு அனுபவம் என்பது வளரவேண்டியது. குறுகிய குட்டையாக இருந்தால் அதற்கு பெயர் சாக்கடை என்று சொல்லி விடுவார்கள். இது போன்ற தளங்களுக்கும் நீங்கள் செல்ல வேண்டும்.
எனக்கு பிடித்தது உங்களுக்கு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் எனக்கு பிடிக்காத விசயங்கள், இதுவெல்லாம் நமக்கு தேவைப்படாது என்று கருதிய விசயங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையாய் மாறிய போது அதன் பின்னே சென்றுள்ளேன்.
காரணம் எதையும் ஒதுக்குவதில்லை. தேவைப்படுவதை அப்போது எடுத்துக் கொண்டு மற்றவற்றை தேவைப்படும் சமயங்களில் எடுத்துக் கொள்ள தயாராய் இருந்துள்ளேன். காழ்ப்புணர்ச்சி என்பது வாசிப்பில் வந்து விட்டால் உங்கள் ந்யூரான்களை நீங்கள் முடக்கி வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
கதவை மட்டுமல்ல. ஜன்னலையும் திறந்து வைத்து விடுங்க.
ஜாக்கிரதையோடு நாம் வாழப் பழகிக் கொண்டால் தன்னளவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள்ள முடியும் என்பது உறுதி தான். ஆனால் உங்கள் மகிழ்ச்சி மற்றவர்களுக்கும் கடத்த வேண்டும் என்றால் நீங்கள் திறந்த மனதோடு இருந்தால் தான் முடியும். தவறுகள் நடக்கும் போது, தவறுகள் உங்களை சோதிக்க அருகே வரும் போது தான் உங்களின் உண்மையான பலமும் பலவீனமும் உங்களுக்கே தெரியும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்க.
நம்முடைய தவறுகள் நம்முடைய முதல் ஆசான்.
எது குறித்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நாம் படிக்கலாம். ஆனால் அதை எப்படி எடுத்துக் கொள்கின்றோம் என்பது தான் இங்கே முக்கியம். மனம் என்பது குப்பையை அடைத்து வைக்கும் இடமல்ல. ஆனால் குப்பைகள் சேர்ந்தால்?
நாம் தானே சுத்தமும் செய்ய வேண்டும். முடை நாற்றம் வருவதற்குள் பல சமயம் மூச்சு கூட போய் விடக்கூடிய ஆபத்தை அந்த குப்பைகள் உருவாக்கி விடக்கூடும்.
தமிழ்நாட்டை விட்டு வேறொரு மாநிலத்தில் வேலை நிமித்தமாக உயர் பதவியில் வசிக்கும் இவர் அக்கறைபோடு பகிர்ந்து கொள்வதை படித்துப் பாருங்க. நேரமில்லை என்பது ஒரு பொய்ச் சாக்கு என்பது மனதிற்கு தெரியும் தானே?
இது போன்ற தளங்களை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்க. நாம் இருப்பதை விட்டு விட்டு எத்தனையோ தேவையில்லாத விசயங்களுக்கு அலைந்து கொண்டு இருப்பது புரியும்.
நான் நன்றாக எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும், எனது எழுத்து நடை நன்றாக வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அவசியம் வளர்ந்த எழுத்தாளர்களின் தளங்களை போய்ப் பாருங்க. சுருக்கமாக அவர்களின் வீச்சு எந்த அளவுக்கு நம்மைத் தாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அவர்கள் தான் சிறப்பானவர்கள் என்று அர்த்தமில்லை. ஆனால் கற்றுக் கொள்வதில் ஏன் நமக்கு ஒரவஞசகம்.
எனக்கு படிக்க நேரமில்லை என்பவர்கள் மட்டும் இந்த தளத்திற்குள் சென்றால் உள்ளம் கொள்ளை போகும்.
எழுதுவதை கற்றுக் கொண்ட பின்பு உங்களை நிலைநிறுத்திக் கொள்ள இவர் சொல்லும் விசயங்களை நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பலரின் தள வடிமைப்பு பார்த்து மனதளவில் அதிக ஆச்சரியம் அடைந்துள்ளேன். இப்போது தான் சற்று கற்றுள்ளேன். இவர் பங்கு முக்கியமானது.
நன்றி சீனா அய்யா அவர்களே. எனது வலைச்சரம் ஆசிரியர் பணி இத்துடன் முடிவடைந்தது.
உங்களின் சில விதிகளை உடைத்துள்ளேன் அல்லது மீறியுள்ளேன். உங்களின் அக்கறைக்கு நன்றி. உங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் என் வணக்கம்.
கோடுகள் என்பது நாம் உருவாக்குவது. வானத்தில் இருந்து எவரும் வந்து போட்டு விட்டு போவதில்லை. கோடுகள் உருவாவதற்கு முக்கிய காரணம் நம் எல்லை நமக்குத் தெரிய வேண்டும் என்பதே. ஆனால் நிச்சயம் என் எல்லைக்கோடு என்ன என்பதை உணர்ந்த இந்த வாரத்தில் பயணித்துள்ளேன். காரணம் இது வரைக்கும் பஞ்சாயத்து எதுவும் வரவில்லை என்பதே எனக்கு கிடைத்த அங்கீகாரம்.
நிச்சயம் சிலரை யோசிக்க வைத்துள்ளேன். என்னளவில் சிலரை அறிமுகம் செய்துள்ளேன்.
ஆனால் இது முழுமையானது அல்ல. அங்கீகாரம் என்பது சிறிய குழந்தைகள் முதல் சாவுக்கு அருகில் உள்ளவர்கள் வரைக்கும் தேடிக் கொண்டேயிருப்பது தான். நீங்கள் எதிர்பார்த்த தளங்கள் இங்கே அறிமுகம் இல்லாத பட்சத்தில் அது என் நேரக்குறைவின் காரணமாக உழைக்க முடியாத நிலை என்பதாக எடுத்துக் கொள்ளுங்க.
மறுபடியும் சொல்கின்றேன். எழுதுவது மட்டுமே உங்கள் வேலையாக இருக்க வேண்டும்.
விதைகள் உறங்கினால் நாம் பூமிப்பந்தில் பார்க்கும் எந்த காடுகளும், அதன் மூலம் வளர்ந்த உயிரினங்களும், இதன் மூலம் கிடைத்த பல நல்ல காரியங்களும் நம் வாழ்வில் கிடைத்திருக்காது. இந்த வசதியான சுகமான வாழ்க்கை நாம் வாழ்ந்திருக்க முடியாது.
கிண்டலும் கேலியும், நக்கலும் நையாண்டியும், வெறுப்பும், ஏளனமும், காழ்ப்புணர்ச்சியும் உங்களைச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றது என்றால் நீங்கள் உறுதியாக வளர்ந்து கொண்டு இருக்கீறீர்கள் என்று அர்த்தம்.
நல்வாழ்த்துகள்.
இந்த 2013 வருடம் உங்கள் உண்மையான எண்ணங்கள் அக்கறையான உழைப்பின் மூலம் வெற்றி அடைய
தேவியர் இல்லத்தின் நல்வாழ்த்துகள்.
நன்றி நண்பர்களே.
நன்றி சீனா அய்யா அவர்களே.






















