"பதினைஞ்சு அடுக்கு மாடி கட்டிடம் சார். கேமராவை மேல வைக்கிறோம். அப்படியே அங்கிருந்து நேரா கீழ இறங்குறோம் சார்"
"கேமராவை மேல வச்சுட்டு எதுக்குய்யா கீழ இறங்கிறோம்? ப்ரொடியூசர் தலையில துண்டு போட்டு போகவேண்டியது தான்"
"இல்ல சார் கேமராவோட தான். கீழ அப்பயே ஸ்லோ மோசன்ல கொண்டு போனா ஹீரோயின் நடந்து வராங்க" அசிஸ்டென்ட் டைரக்டர் விளக்கும் முன் டைரக்டர் நிறுத்த சொல்கிறார்.
"உன்னை அந்த மாடியிலிருந்து தள்ளிவிடனும்ய்யா. கிராமத்து கதையை சொல்றேன்னு சொல்லி பல அடுக்கு மாளிகையா?" சலித்துக்கொண்டு "நீயாவது கிராம்த்து கதையா சொல்லுய்யா" என்று மற்றொரு அஸிஸ்டென்ட்டை பார்க்கிறார்.
"சார் ஒரு அழகான அக்ரஹாரம்.... ஹீரோவும் ஹீரோயினும் சின்ன வயசுலயிலிருந்து காமிக்கிறோம்"
"ஓஹோ.. சூப்பர் அப்புறம்"
"ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடு. ஹீரோயின் பேரு "காயத்ரி" ஹீரோ பேரு "கார்த்திகேயன்". ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸ் சார். சின்ன வயசுல கிண்டலும் கேலியுமா இருக்காங்க. ஹீரோயினுக்கு ஒரு அக்கா சார்"
" அவங்க பேரென்ன கௌரியா?" டைரக்டர்
"சார்ர்ர்ர் ஜூனியஸ் சார் நீங்க. எப்படி சார் என் மனுசுல இருக்குறது அப்படியே தெரியுது உங்களுக்கு?"
"அடிங்க... பண்றது திருட்டு வேலை. அட்லீஸ் பேராவது மாத்தலாம்ல... இது
நம்ம அப்பாவி தங்கமணி "ப்ரியமானவளே " கதை தானே? டேய் அருமையான கதைடா அது. அதை இப்படி திருட்டுத்தனமா எடுத்து கொலை பண்ணாத.. அப்புறம் நான் உன்னை கொலை பண்ணிடுவேன்"
"ஹி ஹி ஸாரி சார்..." அஸிஸ்டென்ட் 1
"அவன் அப்படி தான் சார். என்கிட்ட ஒரு கதை இருக்கு கேளுங்களேன்." அஸிஸ்டென்ட் 2
"மறுபடி மாடியில இருந்து விழ போறயா?" டைரக்டர்
"இல்ல சார் இந்த கதையை கேளுங்க.. ஒரு வெளியூர் பையன் சார். இன்னொரு ஊருக்கு வரான். இங்க உள்ளூர் ரவுடி..அப்ப என்ன ஆகுதுன்னா"
"நிறுத்து. விஷால் இப்போதைக்கு கால்ஷீட் கிடைக்காதுன்னு சொல்லிட்டார். அதுனால வேற கதை சொல்லு" டைரக்டர்.
"விஜயகாந்துக்கு ஒரு கதை வச்சிருக்கேன் சார். கிராபிக்ஸ் அனிமேசன் எல்லாம் நிறைய இருக்கும் சார்"
"அடடே இதெல்லாம் நீ எங்கய்யா கத்துகிட்ட?" டைரக்டர்
"இப்ப தான் சார் கத்துகிட்டு வரேன்.
எஸ்.கேன்னு ஒரு பதிவர் இதெல்லாம் எளிய தமிழ்ல சொல்லி தரார் சார். இந்த கதையில அனிமேசனோட அருமையான ஆக்சன் இருக்கு சார். ஹாலிவுட்டே மூக்கு மேல விரலை வைக்கும்" அஸிஸ்டென்ட்
"அவ்ளோ நாத்தம்பிடிச்ச கதையா? எங்க சொல்லு பார்ப்போம்" டைரக்டர் குஷியானார்.
"முதல் சீனே ப்ளைட்ல தான் சார்"
"ஆஹா"
"ப்ளைட்ல ஒரு சண்டை... வில்லன் ப்ளைட்டையே ரெண்டா அறுத்திடுறான்.. அப்ப"
"அப்ப கேப்டன் பாதி ப்ளைட்டோட வண்டிய ஓட்டுறார். அது கடல்ல விழுகுது..அங்கிருந்து ட்ரைன்ல போறாங்க..இதானே கதை?
இது நான் ஆதவன் எழுதின கதையாச்சே? அவரே கேப்டனை கலாய்கிறதுக்காக எழுதினா நீ அதை சீரியஸா எடுத்து சுட்டு உன்னோட சொந்த கதை மாதிரி சொல்றயே? ஓடிப்போயிடு.. இல்ல என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" டைரக்டர் டென்சனானார்.
"எங்க நம்ம இன்னொரு அஸிஸ்டென்ட் தாடிக்கார கவிஞரை காணோம்? எங்கய்யா அவன்?" டைரக்டர்
"இதோ வரான் சார்" தாடிக்கார அஸிஸ்டென்ட் வந்து கொண்டிருந்தார்.
"என்னய்யா எங்க போன? ஆளையே காணோம்?"
"யாருமில்லாத வீதியில்
நீ நடக்கிறாய்
எனை நினைத்து
நீ இல்லாத கவிதையை
நான் கடக்கிறேன்
உன் நினைவை
துணைக்கழைத்து" எப்படி சார் இருக்கு கவிதை? நானே எழுதியது" தாடிக்கார அஸிஸ்டென்ட் .
"என்னது உன் கவிதையா?
டேய் இந்த கவிதை ராஜா சந்திரசேகர்ன்ற ஒரு கவிஞரோடது. அவர் புத்தகமெல்லாம் போட்டிருக்காரேடா. அவர் கவிதையையே சுட்டுருக்கையா? ஏன்டா இப்படி இருக்கீங்க.. பதிவுலகத்தை எல்லாரும் கவனிச்சுட்டு வராங்க. இப்படி எல்லாம் சுடாதீங்கடா" டைரக்டர் கவலையுடன் கூறினார்.
"சார் சும்மா திட்டாதீங்க சார். ஒரு படக்குழுவோட டைரக்டர்ன்றவரு ஒரு கம்பெனியோட மேனேஜர் மாதிரி. மேனேஜர் எப்படி இருக்கனும்னு அப்துல் கலாமே சொல்லியிருக்கார்" அஸிஸ்டென்ட் கோபப்பட்டார்.
"அடடே உனக்கு இவ்வளவு தெரியுமா? என்ன சொல்லியிருக்கார்?"
"ஒரு முறை ஏவுகணை கடலில் விழுந்த போது APJ ஐயா வேலை செய்த நிறுவனத்தின் தலைவர் சொன்னாராம், இன்று பத்திரிக்கையாளர்களை நான் எதிர்கொள்கிறேன் -
I will take the responsibility for this failure என்று. அதே ப்ராஜக்ட் வெற்றி அடைந்த போது, அதே தலைவர் APJ விடம் சொன்னாராம் -
Go and take the press meet, it is your success என்று. அப்படி இருக்கனும் சார். அதுவுமில்லாம இந்த மாதிரி தலைமை பொறுப்புல இருக்குறவங்க எப்படி நடந்துக்கனும்னா..."
"டேய் நிறுத்து நிறுத்து இதெல்லாம் எந்த பதிவுல இருக்குதுன்னு சொல்லு நானே படிச்சுக்கிறேன்."
"சார் இதெல்லாம் நானே யோசிச்சது." அஸிஸ்டென்ட்
"அடி வாங்குவ. மரியாதையா சொல்லு" டைரக்டர்
"ஹிஹி நம்ம
பாஸ்டன் ஸ்ரீராம்ன்னு ஒருத்தர் ஸ்போக்கன் இங்கிலீஷ், அப்புறம் மேனேஜ்மென்ட், இன்டர்வியூக்கு போறப்ப கவனிக்க வேண்டியதுன்னு நிறைய எழுதுறார் சார்..அங்க தான் படிச்சேன்"
அப்படி வா வழிக்கு. ஏன்டா இப்படி நல்ல நல்ல பதிவெல்லாம் திருடி படைப்பாளிக்கு கிடைக்குற பெருமைய கெடுக்குறீங்க. உங்களுக்கு தோன்றதை முதல்ல படமா எடுங்க அஸிஸ்டென்ட்ஸ். இங்கிலீஷ் படத்துல இருந்து கதையை சுடுறது.. பாட்டை சுடுறதுன்னு போய் இப்ப பதிவர்கள் கதைகளையே சுட ஆரம்பிச்சுட்டீங்க. சொந்தமா யோசிச்சு ஒரு நல்ல கதையோட வாங்க நானே அதை தயாரிக்கிறேன். நீங்க டைரக்டராகிடலாம். இப்ப எல்லாரும் கிளம்புங்க" டைரக்டர். இருந்தடென்சனில் சிகரெட்டை பற்ற வைத்தார் .
ஏதோ தெளிவு பிறந்தது போல் அஸிஸ்டென்ட் அங்கிருந்து சென்றனர். ஒரே ஒரு அஸிஸ்டென்ட் மட்டும் தனியாக வந்தான்.
"சார் நீங்க சொன்னது இப்ப தான் என் மரமண்டைக்கு ஏறுச்சு. இனி எதுவா இருந்தாலும் நானே யோசிக்கிறேன். ஆனா இப்ப எடுக்குறதுக்கு கணேஷ்னு ஒரு பதிவர்
சியாமளான்னு ஒரு அருமையான கதை எழுதியிருக்கார். பாரின் லொக்கேஷனெல்லாம் இருக்கு. ம்'னு ஒரு வார்த்தை சொல்லுங்க. ஆட்டைய போட்டுறலாம்" என்று காதில் கிசுகிசுக்க
"கெட் அவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்" என கத்த ஆரம்பினார் டைரக்டர்