மாமனிதர் புதுகை.அப்துல்லா
இந்தப் புன்னகை பூ புதுக்கோட்டை அப்துல்லாவை நான் அறிமுகப்படுத்தித் தான் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று இல்லை. இவர் ஏற்கனவே எல்லோருக்கும் மிகவும் தெரிந்த, பலருக்கும் நெருங்கிய நண்பராய் இருக்கும் ஒரு பிரபலம் தான்.
இவரைப் பற்றி நமக்கெல்லாம் தெரிந்தது கொஞ்சம் தான். இவர் குறித்தப் பல தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.
மிக உயர்ந்தப் பதவியில் இருந்தாலும், எந்த வித பந்தாவும் இல்லாமல் எல்லோருடனும் மிக எளிமையாய் பழகுபவர். தனது படிப்பாலும், திறமையாலும் முன்னேறியிருந்தாலும் எளிமையை விரும்பும் இவரது பதிவுகளில் கொஞ்ச நஞ்ச மொக்கையல்ல, மெகா மொக்கைகளை காணலாம். அகில உலக நாயகன் ஜே.கே.ரித்தீஷ் வலையுலக ரசிகர் மன்றத்தின் பொருளாளராக பெறுப்பேற்றுத் தன் பணியை திறம்பட செய்கின்றார் என்றால் அதற்கு மேல் இவரது மொக்கைகளைப் பற்றி நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன?
இடதுகை கொடுப்பது வலதுகைக்கு தெரியக்கூடாது என பைபிளில் ஒரு வசனம் உண்டு. அதை முழுமையாகக் கடைபிடிப்பவர் இந்த மாமனிதர். சமீபத்தில் ( சமீபத்தில்னா,போன மாசம்தான்) பரிசல்காரரின் வலைப்பூவில் வளரும் இளம் சதுரங்க வீராங்கனை செல்வி. மோகனப்பிரியாவுக்கு, பயிற்சிக்கும், வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் நிதியுதவி வேண்டி ஒரு வேண்டுகோள் அறிவிப்பு காணப்பட்டது. பிறர் யோசிக்கும் முன்னர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தனது நிறுவனத்தாருடன் பேசி அந்தப் பெண்ணிற்கு அனைத்து உதவிகளையும் செய்து முடித்துவிட்டார் அண்ணண் அப்துல்லா. இனி செல்வி.மோகனப்பிரியாவிற்கு சர்வேதச பயிற்சியாளர் அமைத்து பயிற்சியளிப்பதில் இருந்து, அவரது போட்டிக்கான அனைத்து செலவுகளையும் அண்ணண் வேலைபார்க்கும் நிறுவனமே பார்த்துக்கொள்ளும். இத்தனை நாட்கள் மோகனப்பிரியாவின் தந்தையார் பட்ட சிரமங்களுக்கு ஒரு விடுதலை. திறமையுள்ள அப்பெண் தனது விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேற வேண்டியதுதான்.
இதுவரை எந்த பயிற்சியாளரும் இல்லாமல் தனது சொந்த முயற்சியாலேயே பல வெற்றிகளை குவித்த மோகனப்பிரியா, இனி அப்துல்லா அவர்களின் மூலமாக கிடைத்த உதவிகளால் முறையான பயிற்சியும் பெற்று வெற்றி பெறுவார் என்பது திண்ணம். இது குறித்து பரிசல்காரர் எழுதிய பதிவு. இந்த செய்தி கூட பரிசல்காரரின் பதிவின் மூலம் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் யாருக்கும் தெரியாமல் இவர் செய்த உதவிகள் மிக ஏராளம்.
ஒரு சக பதிவருக்கு அவரது உடல்நிலையைக் கருதி ஒரு சில வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அய்யா அவர்கள் முயற்சி மேற்கொண்ட போது, சிங்கைப் பதிவர்களாகிய நாங்கள் எல்லோரும் சேர்ந்து உதவலாம் என பேசி முடிவு செய்தோம். அதை செயல்படுத்தும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. நான் சீனா அய்யாவுடன் பேசிய போது தேவைக்கு அதிகமாகவே உதவிகள் வந்து குவிந்துவிட்டன. எனவே இனி யாரிடமும் பணம் பெற எங்களால் இயலாது என்று அய்யா சொல்லிவிட்டார். பின்னர் தான் தெரிந்தது, எவ்வளவு குறைகிறது என்று கேட்டுவிட்டு, உடனே 20 நிமிடத்தில் பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டுமோ அங்கு கொண்டுபோய் கொடுத்தவர் நம் அப்துல்லா என்று. இப்படி இவர் செய்யும் உதவிகள் ஏராளம்.
அப்துல்லாவால் பிறருக்கு உதவ முடியும், மொக்கையாய் பல பதிவுகளை எழுத முடியும் வேறு என்ன இருக்கு அவரைப்பற்றி சொல்ல என்று நினைப்பவர்கள் கட்டாயம் மோகன் கந்தசாமியின் வலைப்பூவை படிக்காதவர்கள் என்றுதான் அர்த்தம். மோகனின் வலைப்பூவில் இவர் எழுதிய திராவிடமும், கம்யூனிசமும் என்ற ஆராய்சிக் கட்டுரை இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. அதைப் படித்தால் இவரது வாசிப்பின் ஆழமும், எளிய நடையில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் கருத்துக்களை தொகுத்து எழுதிய இவரது திறனும் புரிபடும்.
அக்கட்டுரையில் எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் கம்யூனிசம் என்பது பொருளாதார சமநிலையை வேண்டுவது, திராவிடம் என்பது சமூக அல்லது சாதிய சமநிலையை வேண்டுவது என்ற ஒரு வரி விளக்கம். எனக்கு இந்த வரிகளைப் படித்த போது மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. இதைவிட எளிதாய் கம்யூனிசத்தையும், திராவிடத்தையும் விளக்க இயலாது.
இத்தனை ஆழமான வாசித்தலும், எழுதும் திறனும் கொண்ட இவர் இனி மொக்கையாக மட்டுமே எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இடையிடையே பல நல்லப் பதிவுகளையும் தர வேண்டும் என்று உரிமையோடு அவரை கேட்டுக்கொள்கிறேன்.
அறுவடையோ அதிகம் வேலையாட்களோ மிகக் குறைவு என்ற பைபிள் வசனத்தைப் போல நம் நாட்டில் உதவித் தேவைபடுவோர் எண்ணிக்கை மிக அதிகம். உதவுபவர்களின் எண்ணிக்கை குறைவு. அப்துல்லாக்கள் இன்னும் அதிகமாக வேண்டும். இவரைப் போல பலரும் இருக்கின்றார்கள். வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அய்யாவும் அந்த நல்ல உள்ளங்களில் ஒருவர் தான். எனக்கு நன்கு தெரிந்தவற்றை மட்டும் எழுதியுள்ளேன். மேலும் பலர் இருப்பார்கள். உங்களுக்கு தெரிந்த நல்ல உள்ளங்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
மீண்டும் ஒரு முறை எல்லோருக்கும் ரமலான் வாழ்த்துக்கள். அப்துல்லாவை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்த வாருங்கள். ஒரு வாரம் விடுமுறையில் சென்றிருக்கும் அப்துல்லா திங்கட்கிழமை தான் திரும்புவார் என்றாலும் உங்கள் பின்னூட்டங்களின் மூலம் வாழ்த்த வாருங்கள்.