07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 10, 2007

கூடல்நகர் கவிஞரின் சரம்

வலைச்சரத்திற்கு யார் வாசகர்கள் என்று யோசித்தேன் என்று குறிப்பிட்டார் தமிழ்நதி ... அப்படி ஒரு குறிப்பிட்ட வாசகர்களால் படிக்கப்படாமல் எல்லாராலும் இன்றுமட்டுமில்லாமல் என்றாவது பதிவு படிக்க வருபவர்களுக்கும் ஒரு நல்ல தொகுப்பாய் கையில் கிடைக்க இங்கே எழுதும் ஒவ்வொருவரின் ரசனையும் எல்லாருக்கும் போய் சேரவேண்டும் என்று தான் இது தொடங்கப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்..
நதியின் கவனம் கவர்ந்த பதிவுகளின் சரம் ஒரு நதியைப்போலவே (அவரே சொல்லிக்கொண்டார் நீளம் நீளம் என்றாலும்) அவருடைய வர்ணனைகளோடான பதிவுகளின் அறிமுகம் அருமையாக அழகாக சலசலத்து ஓடியது . சிரத்தையான தொரு தொகுப்பிற்கு நன்றி தமிழ்நதி .
----------------------******************----------------
அடுத்த இன்றிலிருந்து கூடல் நகரைச்சேர்ந்த கவிஞரும் என்றும் எங்கும் நட்பை விரும்பும் எளியன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் முத்துக்குமரன் குடில் வசிக்கும் முத்துக்குமரன் வருகிறார்.விருந்து போல ரசனையா சமைத்திடலாம் சரத்தை என்று எண்ணமாம் அவருக்கு... அனைவரும் வருக!
மேலும் வாசிக்க...

Thursday, December 6, 2007

மேலும் சிலர் மற்றும் விடைபெறுதல்

'மறதி மறதி' என்பார்களே.... என்றாலும் இந்த அளவு மறதி இருக்கக்கூடாது என்று இன்று நினைத்துக்கொள்ளும்படியாக ஆகிவிட்டது. வேறொரு வேலையில் மூழ்கிக்கிடந்ததில் வலைச்சரத்தை மறந்துபோனேன். நல்லவேளையாக 'தயார்'ப்படுத்தி வைத்திருந்ததால் தப்பித்தேன்.

தமிழ்மணத்தில் எழுத வந்த ஆரம்ப நாட்களில் தமிழில் தட்டச்ச மட்டுமே தெரிந்திருந்தது. அதுவும் பத்திரிகை வேலை வலிந்து திணித்த 'அறிவு'. கணனி தொழில்நுட்பத்தில் நானறியாத சித்துவிளையாட்டுக்களை நிகழ்த்திக் காட்டிய பொன்சை வியப்போடு தொடர்ந்ததில் வாசிக்கக் கிடைத்தது நிறைய. ஆனால், புரிந்தது கொஞ்சம். இருந்தாலும், விட்டேனா பார் என்று இங்கே எல்லாம் போய் வாசித்துப் பார்ப்பேன். என் பெயரில் யாரோ பின்னூட்டமிட பொன்சிடம்தான் போய் ஒப்பாரி வைத்தேன். பொன்சின் சிறப்பம்சம் என்னவென்றால், நாம் பேயைப் பார்ப்பதுபோல (ஒருபோதும் பார்த்ததில்லை, கண்ணாடியில் தவிர) கண்முழி தள்ளிப் பார்க்கும் கடினமான விடயங்களைக் கூட, 'இதுக்குப் போயி அல்ட்டிக்கிறியே'என்பதாக தன் எழுத்து வழியாக எளிதாக்கிவிடுவார்.

நான் கவனித்த ஆட்கள் அதிகமென்றால், ஆரம்ப நாட்களில் என்னைக் 'கவனித்த' ஆட்களும் உண்டு. முன்னரெல்லாம் முத்துலட்சுமியின் பின்னூட்டம் இல்லாத எனது பதிவைக் காண்பது அரிதாக இருந்தது. என்னிடம் யாராவது வந்துபோனால் அவர்களைத் தொடர்ந்துசென்று 'யார்... என்ன..'என்று பார்த்துவிட்டு வரும் வழக்கத்தினால்
சிறு முயற்சி க்குச் சென்று பார்த்தேன். . எல்லோரோடும் தோழமை பாராட்டும் பண்பு அவர் இட்ட பதிவுகளிலும் இருக்கக் கண்டேன். மனிதநேயம் என்ற உயர்ந்த பண்பினால் ஈர்த்த பதிவுகள் சிறுமுயற்சியில் நிறையவே உண்டு.
பெண்களைப் பற்றி, பாரபட்சமுடைய இந்தச் சமுதாய அமைப்பில் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைப் பற்றி தமிழ்மணத்தில் எழுதுகிறவர்களில் பத்மா அர்விந்த் குறிப்பிடத்தக்கவர்.
சக்தி என்ற பெயரிலான வலைப்பூவில் மதி கந்தசாமி, செல்வநாயகி, பத்மா அர்விந்த் ஆகிய மூவரும் இணைந்து எழுதுகிறார்கள். பத்மா அர்விந்த்தின் கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும் என்ற பதிவை உதாரணத்திற்குச் சொல்லிச் செல்கிறேன்.
'மலர்வனம்' லஷ்மியின் பதிவுகளில் உள்ள தார்மீக கோபம் எனக்கு மிகப்பிடித்தது. 'என்னங்க நீங்க இப்படிப் பண்றீங்க'என்று கேட்பது வேறு. 'நீ எப்பிடி இப்பிடில்லாம் பண்ணலாம்... இதுக்கெல்லாம் யார் உனக்கு உரிமை கொடுத்தது?'என்று நியாயமான காரணங்களை முன்வைத்து தர்க்கிப்பது வேறு. நியாயமற்றவர்களால் பதிலளிக்க முடியாத ஆணித்தரமான கேள்விகளைக் கொண்ட நீ எல்லாம் ஒரு பொம்பளையா? என்ற பதிவை வாசித்துப் பாருங்கள். நான் மேற்சொன்னதன் காரணம் புரியும்.
எனக்கென்னவோ பழைய பதிவுகளைப் போய் வாசிக்க வாசிக்க தமிழ்மணத்தில் பெண்கள்தான் அதிக சமூக அக்கறையோடு எழுதிக்கொண்டிருக்கிற மாதிரித் தோன்றுகிறது:) (யாராவது சண்டைக்கு வந்துவிடாதீர்கள். தெம்பிருந்தாலும் எனக்கு நேரமில்லை சாமீ) மங்கையின் வலைப்பூ பக்கம் சென்றதும் அந்த எண்ணம் உறுதிப்பட்டது. ஒரு சமூக ஆர்வலரின், சக மனிதரை நேசிக்கும் கண்ணோட்டமாகவே அனைத்துப் பதிவுகளையும் பார்க்க முடிந்தது. முதுமையில் நீளும் நாட்கள், தில்லி crime capital , தேவைகள் ஆசைகள் போன்ற பதிவுகளை உதாரணத்திற்குச் சொல்லிச் செல்கிறேன்.

மங்கை சொன்ன 'அல்சைமர்ஸ்'எனக்கும் வந்துவிட்டதோ என்னவோ.... நிறையப் பேருடைய பெயர்களின் பின்னால் 'பிஸ்கெட்'டின் பின்னால் வாலாட்டிப் போகும் நாய்க்குட்டியாக தொடர்ந்து போய் வாசிப்பேன். எழுதவென்று அமர்ந்தால் நினைவில் வராதாம். என்ன செய்ய...? 'சொன்னவரைக்கும் போதும் போங்க'என்று யாரோ சொல்வது கேட்கிறது:)


எழுத்தறியாதபோதிலும் எழுதிக்கொண்டிருப்பதுபோல, இசையறியாதபோதிலும் அதில் இழைந்து தொலைந்துபோவது எனது வழக்கம். அவ்வாறான பக்கங்களில் தமிழ்மணத்தின் 'பாட்டுக்காரரான' கானாபிரபாவின் இந்தப் பக்கம் போய்ப் பார்ப்பேன்... மன்னிக்கவும் கேட்பேன். அந்தக் காலத்து பி.யு.சின்னப்பாவிலிருந்து இந்தக் காலத்து பரத் வரைக்கும் 'படங்காட்டும்'பணியைச் சிறப்புறச் செய்துகொண்டிருப்பவர் சின்னக்குட்டி. இவருடைய இந்தப் பக்கத்திற்குப் போனால் திரைப்படங்களைப் பற்றி ஒரு ஆய்வுரை செய்து சமர்ப்பிக்கக்கூடிய அளவு விபரங்களுடன் வெளிவருவீர்கள் என்பது எனது கருத்து.

வலைச்சரத்தைப் பற்றி லக்கிலுக் ஒரு கருத்துச் சொல்லியிருந்தார். அதிலுள்ள உண்மையைப் பற்றி என்னை யோசிக்க வைத்திருக்கிறது இவ்வார வலைச்சரம். யோசித்துத் தெளிந்ததைச் சொன்னால் விவகாரமாகிவிடும் என்பதால் தவிர்க்கிறேன்.

வேறென்ன மக்களே! இதுவரை உங்களுக்கு நான் அளித்துவந்த 'வதை வாரம்' மன்னிக்கவும் 'வலை வாரம்'நிறைவுறுகிறது. சொல்லித் தேய்ந்த சொற்களைச் சொல்லி விடைபெறுகிறேன். ஒருவார காலம் வலைச்சர ஆசிரியராக இருக்கும்படி கேட்டுக்கொண்ட பொன்ஸ் மற்றும் சிந்தாநதிக்கும், வழிகாட்டி அறிவுறுத்தல் வழங்கிய முத்துலட்சுமிக்கும், வாசித்துப் பின்னூட்டமிட்ட - பின்னூட்டமிடாத நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.




மேலும் வாசிக்க...

எழுத்தென்னும் இசைமடியில்...



வலைச்சரத்தின் வாசகர்கள் யார் என்ற சிந்தனை இன்று எழுந்தது. கொஞ்சம் குழப்பமாக இருந்தது. குறிப்பிட்ட சிலர்தானா... அல்லது.... ? ஒன்றும் புரியவில்லை. என்றாலும், தோளில் ஏற்றிய காவடியை ஆடித்தானே இறக்கவேண்டும். இந்தப் பதிவினைத் தவிர்த்து இன்னுமோர் பதிவு இருக்கிறது. அதன்பிறகு 'போய்ட்டு வரேங்க'என்று வேறு வேலை பார்க்கக் கிளம்பிவிடுவேன்.

முன்னரே கூறியிருந்ததுபோல 'இவுங்கள்ளாம் இவுங்க'என்று தனித்தனியாகச் சுட்டிச்செல்வது சிரமமாக இருக்கிறது. எப்படி வகைப்படுத்தலாம் என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருப்பதை விட, ஏதோ எனக்குத் தோன்றுகிற விதத்தில் கதம்பமாகச் சொல்லிச் செல்லலாம் எனத் துணிந்துவிட்டேன். வலைச்சரத்தில் சொற்களின் சித்துவிளையாட்டுகளுக்கு இடமில்லை. கவித்துவ நடையெனப்படுவதெல்லாம் புனைவுகளுக்கே.

தமிழ்மணத்திற்கு வந்த புதிதில், புதிதாகக் கிடைத்த பொம்மையின் தலையில் பற்றி தான் போகுமிடமெல்லாம் இழுத்துச்செல்லும் குழந்தையைப்போல ஒருவருடைய பக்கத்தை ஓடியோடிப் போய் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்நாட்களில் அது பெரிய ஆதர்சமாயும் ஆசுவாசமளிப்பதாயும் இருந்தது. பழைய பதிவுகளைக் கூட கிண்டிக் கிளறி பல மணித்தியாலங்களாக அவர் பக்கங்களில் உலவிக்கொண்டிருந்தேன். இதெல்லாம் யார் அவர் என்று அறியாத காலங்களில். அதனால் முதுகு சொறிகிறேன், மூக்குச் சொறிகிறேன் என்று யாரும் கிளம்பிவிடாதீர்கள். வர வர யாரையும் ஒரு வார்த்தை நல்லதாகச் சொல்லும் முன் பல தடவைகள் யோசிக்கும்படியான நிலைமையாகிப்போனதே என்று வருத்தமாக இருக்கிறது.

அலைஞனின் அலைகள் என்ற பெயரில் வலைப்பூ அமைத்து எழுதிவரும் பெயரிலியின் பக்கங்களில்தான் பகலிரவாகத் திரிந்துகொண்டிருந்தேன். அழுமூஞ்சிப் பதிவுகளாக எழுதிக்கொண்டிருக்கும் என்போன்றவர்களை அங்கதம் தெறிக்கும் அந்த நடை ஈர்த்ததில் வியப்பில்லை. புத்திசாலித்தனமாக மற்றவர்களைக் கலாய்ப்பதென்பதற்கு இயல்பிலேயே நகைச்சுவையுணர்வு அதிகமாக இருக்கவேண்டும். அவருடைய எழுத்துக்கள் புரியமாட்டேனென்கின்றன என்றொரு குற்றச்சாட்டு உண்டு. அந்த மண்ணிலிருந்து வந்ததனாலோ என்னவோ ஒரு அட்சரமும் பிசகாமல் எனக்குப் புரிந்துவிடும். அந்த மண்வாசனைக்காகவும் அவரது பதிவுகளுக்குப் போவதுண்டு. ஒவ்வொரு பதிவுகளாகக் குறிப்பிட்டுச் சொன்னால் தனிப்பதிவாகிவிடும் என்பதனால் இந்தக் கவிதை மற்றும் சிகை சிரைப்பு என்ற இந்தக் கதையை (ஒரு சோறு பதமாக என்பது தவறு-சிலது அவியாமலும் இருக்கும்) சொல்லிச்செல்கிறேன். அலைஞனின் அலைகளுள் பல வலைப்பூக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதனால், சின்னச் சின்ன குச்சொழுங்கைகளுக்குள்ளால் போய்த் திரியத் தெரிந்திருக்கவேண்டும்.


நிறங்கள் என்ற பெயரிலான வலைப்பூவில் செல்வநாயகியின் பதிவுகளைப் படித்துவிட்டு எனது நண்பர்களில் சிலர் 'உங்கள் எழுத்தை வாசிப்பது மாதிரியான உணர்வு வருகிறது'என்று ஆரம்பத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், என் மீதான மிகுதியான அபிமானத்தினால்தான் அவர்கள் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நாட்கள் செல்ல அறிந்துகொண்டேன். சமூக அக்கறையும் தார்மீக கோபமும் செல்வநாயகியின் எழுத்தின் அடிநாதமாக இருக்கின்றன. சிந்தனையைத் தூண்டும் அதேவேளை கவித்துவமும் பொதிந்த எழுத்துக்களுக்கு உதாரணங்களாக நீ நிரப்பிய இடங்கள் மற்றும் ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை ஆகிய பதிவுகளைக் கூறலாம். செல்வநாயகியின் பெயரைக் கண்டதும் அதைப் பின்தொடர்ந்து போவதை என்றைக்குமே என்னால் ஒத்திப்போட முடிந்ததில்லை.

வாசிக்கச் சுவாரசியமற்ற கசப்பான, வரண்ட விடயங்களைக் கூட தனது நடை என்ற தேன்கலந்து அலுப்புத்தட்டாமல் தருவதில் ஆழியூரானை விஞ்ச ஆளில்லை.

நடைவண்டி என்று, தமிழ்மணத்தில் தற்போது நிலவிவரும் சிறப்புப்பண்பான தன்னடக்கப்பாணியில் வலைப்பூவிற்குத் தலைப்பூ வைத்திருக்கும் இவரது எழுத்துக்கள் தலைப்பிற்கியைபுற தத்தி நடக்கவில்லை; தாவியோடுகின்றன. சாதி சூழ் உலகு...! என்ற பதிவும் பெண்ணுரிமை - நாம் அனைவரும் குற்றவாளிகளே என்ற பதிவும் இவர் அண்மையில் எழுதியவற்றில் என்னை மிகவும் பாதித்தவை. எப்போதும் ஏதாவதொரு சமூகப்பிரச்சனை குறித்துப் பேசும் இவர் மொக்கை போடுவது அரிதிலும் அரிது. ஆழியூரானால் 100%மொக்கையென முன்மொழிந்து போடப்பட்ட கேத்தரீன் குண்டலகேசி+ சில்வியா பழனியம்மாள் என்பதே என்வரையில் தரம் வாய்ந்ததாகத்தான் இருந்ததென்பதை எந்தவொரு பதில் மொய்யையும் எதிர்பார்க்காமல் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.(மேடைப்பேச்சு வாடையடிக்கிறது)


தமிழ்மணத்தில் அண்மையில் காணக்கிடைத்த
ஜமாலன் என்ற பெயரை எங்கோ சிற்றிதழ்களில் கண்ட ஞாபகத்தில் அதனைத் தொடர்ந்துபோய்ச் சேர்ந்த இடம் தீவிர வாசிப்பை வேண்டிநின்றது. அவரது ஒரு கட்டுரைக்குள் நுழைந்தால், நிச்சயமாக புதிதாக ஏதாவதொன்றைக் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்று திருப்தியோடுதான் வெளிவருவோம். சில நீண்ட பதிவுகளை பிறகு வாசிக்கலாம் என 'ஆறப்போட்டு'விட்டாலும் கீழ்க்காணும் பதிவுகள் வாசிப்பு அளித்த தாக்கத்தினால் பரிந்துரைக்கத் தூண்டுகின்றன. பெண்களைப் பற்றிய இந்தப் பதிவு , பிறந்தமண்ணை விட்டுப் பிரிந்து சென்று, வரண்ட வளைகுடா நாடுகளில், சிறகு தழைத்தமர்ந்து ஆற மரங்களற்றுப் போன பறவைகளைப்போல கடின உழைப்பினால் தங்களை வருத்திக்கொண்டிருக்கும் இந்தியர்களைக் குறித்த வசந்தம் பாலையாகும் வளைகுடா இந்தியர்கள் ஆகியவை கட்டாயம் வாசிக்கப்படவேண்டியவை.


பெயரிலேயே முரணைக் கொண்டிருக்கும்
இந்த இணையத்தளத்திற்கும் பெண்களின் படைப்புகளை வலையேற்றும் ஊடறுவிற்கும் இடையில் ஆரம்பித்த, ஆண்கள் பெண்களின் பெயரில் எழுதுவது குறித்த சர்ச்சை - பலருடைய கவனத்தையும் ஈர்த்தது நினைவிருக்கலாம். தீவிர இலக்கிய வாசகர்கள் தவறவிட விரும்பாத பதிவுகளைக் கொண்டமைந்த வலைப்பூ முரண்வெளி. அதிகம் பதிவுகள் இடப்படுவதில்லையெனினும் 'நாங்களும் எழுதுறோமாக்கும்' என்றில்லாமல் ஆற அமர ஆக்கபூர்வமான பதிவுகள் போடப்படுகின்றன. 'பெயல் மணக்கும் பொழுது' என்ற பெயரில் அ.மங்கையால் தொகுக்கப்பட்ட ஈழப் பெண் கவிஞர்களுடைய தொகுப்பு பற்றி பெண்கள், அடையாள அரசியல், பிரதியாக்கம் மற்றும் பெண் எழுத்து என்ற தலைப்பில் நிகிதா இம்மானுவல்பிள்ளையால் எழுதப்பட்ட கட்டுரை அவசியம் படிக்கப்பட வேண்டியதொன்று. ஈழத்துப் பெண் எழுத்துக் குறித்த ஒரு சித்திரம் இந்தக் கட்டுரையை வாசித்து முடித்ததும் பதிவாகும். http://muranveli.net/category/jaffna/ என்ற பக்கத்திலுள்ள 'யாழ்ப்பாண நாட்குறிப்புகள்' ஒரு காலம் எழுதிய குறிப்பாயிருக்கிறது. நிம்மதியாகச் சாப்பிடுவதும் உறங்கக் கிடைப்பதும்கூட தமிழராகப் பிறந்தவர்களுக்கு அதிகாரங்களால் வழங்கப்படுகிற அதிகபட்ச சலுகைதான் என்ற எண்ணத்தை அப்பதிவு நினைவூட்டியது.(மறந்தால்தானே நினைப்பதற்கு - பழசுதான்)

வலைச்சரம் என்றால் சும்மா வேலையில்லை. படிப்பை நிறுத்தியபிறகு 'பள்ளிக்கூடம் போ' என்பது மாதிரி கொஞ்சம் பழைய பதிவுகளுக்குள் சுற்றியலைந்து திரும்பவேண்டியிருக்கும். இருந்தாலும், அரைகுறையாகச் செய்யவும் மனசில்லை. அடுத்த பதிவை மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!
மேலும் வாசிக்க...

Wednesday, December 5, 2007

கடந்து செல்லவியலாத பெயர்கள்

வாழ்வின் மீதான அயர்ச்சி பெருகுமொரு நாளில் இந்தப் பதிவினைத் தொடுகிறேன். மூளை செயலற்றுக் கிடக்கவே விளைகிறது. ஆனால், செயலற்றவர்களை உலகம் மறந்துவிடுமென்ற குரூர உண்மை சாட்டையெறிந்து இயங்கவைக்கிறது.

கடந்த பதிவில், கவிதைகளையே பிரதானமாக எழுதிக்கொண்டிருப்பவர்களின் பக்கங்களைப் பட்டியலிட்டிருந்தேன். கவிதையும் உரைநடையும் கலந்து எழுதுபவர்களைப் பற்றி இந்த இடுகையில் எழுதலாமென்றிருக்கிறேன். 'இவர்கள் இன்னார்'என்ற வகைசெய்துகொள்வது ஒரு வசதிக்காகவேயன்றி, உண்மையில் பார்க்கப்போனால் எழுதுபவர்களை அவ்விதம் வரையறைக்குட்படுத்துவது கடினமே. உதாரணமாக கவிதை குறித்த உரைநடையை எதற்குள் அடக்குவது?

'குற்றவுணர்வின் மொழி'என்ற பெயரில், மொழிவசீகரம் மிக்க கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்றை அண்மையில் வெளியிட்ட பாம்பாட்டிச்சித்தன், தமிழ்மணத்தில் குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர். நடைவழிக் குறிப்புகள் என்று பெயரிடப்பட்டிருக்கும் இவரது வலைப்பூவிலிருந்து பிறமொழிக் கவிஞர்களான இர்விங் லேட்டன், ராபர்ட் ஃபிராஸ்ட், ஓர்ஹான் பாமுக், ழாக் ப்ரெவர், விஸ்லவா சிம்ப்போர்க்ஸ்கா (கேள்விப்பட்டதேயில்லை இல்ல? நானுந்தான்:)) ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் மற்றும் அவர்களால் எழுதப்பட்ட சில கவிதைகளின் தமிழாக்கம் என நாமறியாத புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. 'புதுக்கவிதை-2 'எழுத்து'ம் அதன் நீட்சியும், புதுக்கவிதை-3 நவீன விருட்சம் ஆகிய இரு கட்டுரைகளும் தமிழ்க்கவிதை வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு வழிகாட்டத்தக்க தகவல்களைக் கொண்டமைந்த ஆழமான கட்டுரைகளாகும். இவ்விரண்டு கட்டுரைகளுக்கும் முன்னதான பதிவைத் தேடினேன். கிடைக்கவில்லை. தீவிர வாசிப்பு மற்றும் மிகுந்த உழைப்பினால் மட்டுமே இத்தகைய கட்டுரைகள் சாத்தியமாகின்றன. வில்லியம் ஃபாக்னர் நோபல் பரிசு பெற்றபோது அவரால் வழங்கப்பட்ட உரையின் தமிழாக்கமானது(தி.க.சி) நவீனத்துவம் - எழுத்தின் இறைத்துவம் என்ற தலைப்பில் அண்மையில் இடப்பட்டுள்ளது. அவரது உரை, எக்காலத்து எழுத்தாளர்களுக்கும் பொருத்தமாயிருப்பதை வாசித்து வியந்தேன்.

ரேகுப்தி என்ற பெயரில் வலைப்பூவமைத்து எழுதிவரும் 'நிவேதா'வின் பதிவுகள் தீவிர இலக்கிய வாசகர்களுக்குரிய கட்டிறுக்கமான மொழியைக் கொண்டமைந்திருக்கின்றன. இவரது பத்திகள் பொதுவாக ஒரு கவிதையுடன் ஆரம்பிப்பதைக் காணலாம். மொக்கைப் பதிவுகளை எதிர்பார்த்து நீங்கள் இங்கு போனால் நிச்சயம் ஏமாற்றமடைவீர்கள். கவிதைகள், பத்திகள், நூல்நயம் எனப் பன்முகத்தன்மையான பதிவுகளை வழங்கிவரும் நிவேதாவின் கட்டங்கள் மற்றும் வட்டங்களுக்குள் வாழ்தல் என்ற பத்தியும் அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள் என்ற கவிதையும் எனக்குப் பிடித்தவை. சமரசங்களற்ற உன்னதத்தை நோக்கிய பயணமாக இவருடைய நடையைக் கூறலாம்.

தமிழ்மணத்தின் தலையாய கலகக்காரர் யாரென்று கேட்டால் அஞ்சலிப் பாப்பாகூட சரியான பதிலைச் சொல்லிவிடுவாள். சுகுணா திவாகர் என்ற பெயருக்கு 'சீரியஸாக'எழுதும் அனைவரும் தொடுப்புக் கொடுத்து வைத்திருப்பதொன்றே அவரது எழுத்தாளுமையை எடுத்துரைக்கப் போதுமானது. பதிலுக்கு முதுகு சொறிதல், பதில் மொய் என்ற விதத்தில் உங்களில் எவரும் இதை எடுத்துக்கொள்வதைப் பற்றி நான் கவலையுறவில்லை. அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்கும் (அவரால் முதுகு சொறியப்படாத) எவருக்கும் இதே விமர்சனங்களே இருக்கும். மிதக்கும் வெளியை வாசித்து வெளியில் வந்ததும் புதிதாக ஏதாவது கெட்டவார்த்தைகளை நீங்கள் கற்றுக்கொண்டிருப்பீர்கள். (அவரிடம் கேட்டால்... அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு 'கெட்டவார்த்தை'என்றால் என்ன என்பார்) இவரால் எழுதப்பட்ட 'தேவதைகளும் குசு விடும் என்பது உங்களுக்குத் தெரியாதா...?'என்ற கவிதை வரிகளை இன்னமும் எங்கள் வீட்டில் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். புனிதமென சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் எதிர்த்துக் கேள்வி எழுப்பும் இவரது துணிச்சலுக்காகவே இவரை வாசிப்பதுண்டு. பெரியாரியம், சிற்றிதழ் அரசியல் எனப் பரவலான விடயங்கள் குறித்து எழுதிவரும் சுகுணா திவாகரை நீங்கள் http://sugunadiwakar.blogspot.com/, http://suguna2896.blogspot.com/, http://thuroki.blogspot.com/, http://midakkumveli.blogspot.com/ என நான்கு தளங்களில் வாசிக்கலாம். இவருடைய கட்டுரைகள், வாசி்த்தபிற்பாடும் உள்நின்று பேசிக்கொண்டிருப்பவை.

பின்நவீனத்துவகாரர், கவிதைப் புலி என்றெல்லாம் அழைக்கப்படும் அய்யனார் தமிழ்மணத்திற்குள் உறுமிவந்தது... மன்னிக்கவும் உள்நுழைந்தது சற்று பிந்தித்தான். ஆனால் தன் பதிவுகள் வழியாக முந்திச்செல்கிறார். பின்நவீனத்துவம் என்றால், ஒரு மாதிரி குழப்பிக் குழப்பி எழுதி வாசிப்பவர்களை மண்டைகாய வைத்துவிடுவது என்பதே எனது புரிதல். அய்யனாரின் எழுத்துக்கள் எனக்குப் புரிவதால் அவை பின்நவீனத்துவம்தானா என சந்தேகமாக இருக்கிறது. போர்ஹேயின் எழுத்துக்களில் மஞ்சள் நிற புலி உலவுமாம். இவரின் எழுத்துக்களில் பெரும்பாலும் பெண்கள் உலவுகிறார்கள். 'ஏண்டீ! அவனைக் கைவிட்டே....?'என்ற ரீதியில் நிறைய எழுதுவார். இவரும் கெட்டவார்த்தைகளை அநாயாசமாகக் கையாள்வதில் வல்லவர். ஒருவித மாய உலகத்திற்குள் இவருடைய எழுத்துக்கள் எடுத்துப்போய்விடும். உலக சினிமா மற்றும் புத்தகங்களுக்கு எழுதும் மதிப்புரைகள் எனக்குப் பிடிக்கும். நீ என்னைவிட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா என்று என்னை நெகிழ்த்திய இந்தப் பதிவையும், இந்தக் கவிதையில் பேசப்பட்டிருக்கும் உண்மைக்காக அதனையும் சொல்லிச் செல்கிறேன். மிகுதியை நீங்களே வாசித்துக்கொள்ளுங்கள்.

மலின சமரசங்களுக்குட்படாத எழுத்துக்களைக் கொண்ட இன்னொருவர் அதிகம் எழுதுவதில்லை. http://peddai.net/ என்ற இணையப்பக்கத்தில் 'பெட்டை'என்ற பெயரில் பதிவுகளை இடும் இவர், எழுந்தமானத்திற்கு எழுதாமல் எப்போதாவதுதான் எழுதுவார். வாழ்வழிதலின் வலி என்ற பதிவானது எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட கவிஞர் எஸ்போஸின் மரணத்திலிருந்து தொடங்கி இன்றைய அரசியல் நோக்கி விரிந்து செல்கிறது. பாப்லோ நெரூதாவை மகத்தான கவிஞன் என்போர் அவசியம் வாசிக்கவேண்டிய பதிவு இந்தப் பக்கத்தில் இருக்கிறது. வாசித்த பிறகு உங்கள் முகம் மாறுவதைப் பார்க்க எதற்கும் பக்கத்தில் ஒரு கண்ணாடி வைத்துக்கொள்வது நல்லது. http://peddai.blogspot.com/ என்ற வலைப்பூவிலும் நீங்கள் இவரின் படைப்புகளைக் காணலாம்.

பழந்தமிழிலக்கியங்களைப் படிக்கவேண்டும் படிக்க வேண்டும் என்று நினைத்து (யாராச்சும் கேள்வி கேட்டுட்டா என்னா பண்றது..?) அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிற சோம்பேறிகளுக்கென்றே இணையத்தில் சில 'எளிய இலக்கியப்' (பொருட்பிழையோ... நல்ல இலக்கியம் எளிமையாக இருக்காதோ...) பக்கங்கள் இருக்கின்றன. அவ்வாறு தான் வாசித்தவற்றை 'இது நல்லாருக்குங்க'என்று தமிழ்மணத்தில் தருபவராக சித்தார்த் இருக்கிறார். http://angumingum.wordpress.com/ என்ற பக்கத்தில் இவருடைய ஆக்கங்களைக் காணலாம். சங்கத்தமிழின் துளி காண இந்தப் பக்கத்தைப் பாருங்கள்.

சித்தார்த்தைப் போலவே இலக்கிய ஆர்வம் மிக்கவர் மஞ்சூர் ராசா. http://manjoorraja.blogspot.com/ என்ற பக்கத்தில் தனது பதிவுகளை இட்டுவருகிறார். "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." - என்ற பாவேந்தரின் வரிகளை முன்னிறுத்தி, பல வலைப்பதிவாளர்களை இணைத்து நடத்தப்பட்டுவரும் முத்தமிழ் குழுமத்தில் தீவிரமாக இயங்கிவருகிறார். இங்கும் இவரை வாசிக்கலாம்.

தமிழ்மணத்தில் நல்ல சிறுகதைகள் வாசிக்கக் கிடைப்பதில்லை என்று எனக்கொரு குறையுண்டு. அல்லது சில குறிப்பிட்ட பெயர்களையே தொடர்ந்து செல்லும் எனது கண்களுக்கு அவை தட்டுப்படாமலும் இருந்திருக்கலாம். மறுகரையில் யாழ்ப்பாணம் என்ற இந்தக் கதையை வாசித்ததும் மனசிற்குள் என்னவோ கரைபுரண்டது. பழைய காயமொன்றில் ஏதோவொரு திடப்பொருள் இடித்துவிட்டதைப் போல வலியுணர்ந்தேன். அ.இரவியின் கதைகளில் இதே நனவிடை தோயும் பாணி இருக்கும். அதேபோலவே இழந்துபோன நண்பனுக்காக எழுதிய தவறவிடப்பட்ட கையசைப்பு என்ற கவிதையும் வாசித்துமுடித்ததும் வலிதந்தது. சருகு என்ற பெயரில் வலைப்பூவமைத்து எழுதும் நிலவனின் ஞாபக நிழல்கள், வாசிக்கும் எல்லோரையும் பற்றிப் படர்ந்து நீள்வதாக ஒரு பிரமை.
இன்னும் 'சுட்ட' உண்டு. ஆனால், நீ..... ள..... மா.... ன... பதிவுகளிலிருந்து தப்பியோடிவிடுபவர்களில் நானுமொருத்தி என்பதனால் இப்போதைக்கு நிறுத்திக்கொண்டு அடுத்த பதிவில் சந்திக்கிறேன். 'அப்பாடா...!'என்று யாராவது சொன்னீர்களா என்ன...? செவிகளில் விழுந்தமாதிரி இருந்தது.
மேலும் வாசிக்க...

Monday, December 3, 2007

வலைச்சரம்-கவிதைகளால் கவர்ந்தவர்கள்


சொந்தமாய் கொஞ்சம் புலம்பிவிட்டுப் பதிவுக்குள் செல்லலாம் என எண்ணுகிறேன். புதிய வீட்டிற்கு இன்னமும் இணையத்தொடர்பு வரவில்லை. மழைபெய்த நரகத்தின் - மன்னிக்கவும்- நகரத்தின் வீதி வழியாக இணையத்தொடர்பகம் ஒன்றினை வந்தடைந்தே பதிவுகளை வலையேற்ற வேண்டியுள்ளது. அதனால், வலைச்சரம் கொஞ்சம் இழுத்துப் பறித்துக்கொண்டுதான் போகும். (நீங்களும் 'எப்படா போடுவான்னு எதிர்பார்த்துக்கொண்டிருக்கவில்லைத்தான்:) வேற வேலை இல்லையாக்கும்.) வாடிக்கையாளர் சேவை என்பது குறித்த சிறிய விரிவுரையின் பின் நாளை வந்து தொடர்பு கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எருமை மாட்டில் மழை பெய்திருக்கிறது பார்க்கலாம்.

கவிதை என்பதோர் மாயமான். விழியுயர்த்தி அழைக்கும். பின்தொடர்ந்தால் விழிமறைந்து தொலைக்கும். கவிதையோர் கனவின் வடிவம். உறக்கத்தில் உண்மை போலிருக்கும். விழித்தெழுந்தால் நழுவிவிட்டிருக்கும். எஞ்சிய ஞாபகத்துளிகளிலிருந்து திரட்டித் திரட்டி, கொஞ்சம் ஒப்பனை செய்து முழுமை வடிவமாக்கி கனவை ஒரு கதையைப் போல நாங்கள் விபரிப்பதையொத்ததே கவிதையும். அந்தக் கனவை முழுமையாகக் கண்வசமாக்கி கையகப்படுத்தியோர் அரிதிலும் அரிது. தமிழ்மணத்தில், அவ்விதம் கவிதையைக் கையகப்படுத்த விளையும் சிலரை, எனது ஞாபகத்திற்கு எட்டியவரை, இங்கு குறிப்பிட்டுச் சொல்ல முயற்சிக்கிறேன்.



கவிதைக்கேயுரிய கட்டிறுக்க மொழியைக் கொண்டமைந்தவை தூரன் குணாவின் கவிதைகள். அவரது கவிதைகள் காட்சிப்படிமங்களோடமைவது சிறப்பு. கொரங்காடு என்ற பெயரில் வலைப்பூவமைத்து எழுதிவரும் அவருடைய கவிதைகள் எல்லாமே அவற்றின் செறிவினாற் சிறப்புறுகின்றன. உதாரணத்திற்கு ஒன்று: பூத்திருந்த காலம்

மற்றவர்கள் என்ற பக்கத்தில் யசோதர என்ற பெயரில் எழுதப்படுகிற கவிதைகளை கொஞ்சம் மனம்பதைக்க வாசித்திருக்கிறேன். போர் விட்டுச் செல்லும் வடுக்கள், அதிகாரத்திற்கெதிரான குரல்... என பேசுபொருளால் மற்றவர்களின் பார்வையிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கின்றன இந்தப் பக்கத்திலுள்ள கவிதைகள். நீத்தார் பாடல் என்ற இந்த நெடுங்கவிதை வாசிக்குந்தோறும் மனதில் வலிதருவது.

தமிழ்மணத்தைப் பார்க்காவிட்டால் தலைவெடித்துவிடுமளவிற்கு அதனோடு ஊறித்திளைத்திருக்கிறவர்கள் எவரெனினும் காயத்ரியை அறியாதிருக்க முடியாது. பாலைத்திணை என்ற பெயருக்கேற்றபடி பிரிவும் பிரிவின் நிமித்தமுமான கவிதைகளை நிறைய எழுதியிருக்கிறார். (சுமார் 72 கவிதைகள்) காதலின் வலி மற்றும் தனிமை, சுயத்தேடல் என எழுதிவரும் காயத்ரியின் கவிதைகளைப் படிக்கும்போதிருக்கும் கனம், அவருக்கு வரும் 'மியூஜிக் ஸ்ராட்' போன்ற பின்னூட்டங்களினால் குறைந்துவிடுவதாக எனக்கொரு எண்ணம். அவர் சொல்லவரும் உணர்வு கடைசிவரிகளில் உச்சம் பெற்று வலியென நெஞ்சில் தங்கிவிடுவதை இவருடைய சிறப்பம்சம் எனலாம். மல்லிகை வாசம் எல்லோரும் அறிந்ததே... எனினும், தெருவில் ஒரு பெண் சூடிக்கொண்டு நடந்துபோகிறபோது மல்லிகை மேலும் அழகாகிவிடுவதாக ஒரு பிரமை. காதல் அற்புத அனுபவம். அது கவிதையாகிறபோது பேரற்புதமாகிவிடுகிறது. காயத்ரியை இதுவரை வாசிக்கத் தவறியவர்களின் (இருந்தால்) விரல்பிடித்து இக்கவிதைகளைச் சென்றடைய வழிகாட்டலாம்.

கூடு மறந்த பறவையொன்றின் ஒற்றைக் கேவலை ஞாபகப்படுத்துவன தேவ அபிராவின் பிரபஞ்சநதி பக்கத்திலுள்ள கவிதைகள். தோழியொருவரால் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் பக்கத்திலுள்ள கவிதைகளின் அழகியலே முதலில் ஈர்த்தது. பின்னரோவெனில் அதன் உள்ளார்ந்த துயரம் தேடித் தேடிச் சென்று வாசிக்கத் தூண்டியது. இந்த அனுபவத்தை நீங்களும் உணரும் வழி இது. மாயச்சுனையிலிருந்து பீறிடும் காதலின் கையறு நிலைக்காக இந்தக் கவிதையும், தேவ அபிராவின் பக்கத்தில் முதல் வாசிப்பிலேயே ஈர்த்த அரளிப் பூவும் தரங்காவும் எனக்கு மிகப் பிடித்த கவிதைகள்.

எனது எழுத்துக்களில் எப்போதும் எதையாவது 'கண்டுபிடித்து'க் கேள்வி எழுப்பும் வியாபகனின் கவிதைமொழி சிறப்பாக இருக்கும். (உ+ம்:"'எண்ணுவான்' என்று போட்டிருக்கிறீர்கள்.... 'எண்ணுவாள்'என்று ஏன் போடவில்லை...")தேவஅபிராவைப் பரிந்துரைத்த தோழியே இவரது பக்கத்தையும் சுட்டியதாக நினைவு. தனியொருவனின் கலகக்குரலை எப்போதும் அவரது படைப்புகளினூடு கேட்க முடிகிறது. தமிழ்மண முகப்பில் வியாபகனின் பெயரைக் கண்டதும் ஒத்திப்போடமுடியாதவாறு பெயரைத் தொடர்ந்து ஓடிவிடுவதொன்றே அவரது தரமான எழுத்துக்குச் சாட்சியம். ஒப்புதல் என்னும் கவிதையையும் தோற்றம் மற்றும் நிறம் குறித்துப் பேசிய ஒரு கிராதகக் கவியின் கதை என்ற கவிதையையும் இந்தப் பக்கம் பிரவேசிக்கும் வாயிலாக விட்டுச் செல்கிறேன். (ஒரு பானை சோற்றுக்கு... என்று எழுதலாம்தான். பானையில் அவியாததும் பார்த்திருப்பதால் தவிர்க்கிறேன்)

அண்மையில் வலைபதிய வந்து தன் கவிதைகளால் கவனத்தை ஈர்ப்பவர்களில் லஷ்மணராஜா முக்கியமானவர். 'என் கவிதைகள் ரசிப்பு தன்மையை விட உணர்வு தன்மை அதிகம் உள்ளவை' எனக் கூறும் இவரது தொழில் தர்மங்கள் என்ற கவிதையில் வேலை இன்னோரன்ன புற காரணிகளோடு சமரசம் செய்துகொண்டு உயிர்த்திருக்க வேண்டிய வாழ்வின் நிர்ப்பந்தம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. நகைப்புக்குறியையே தலைப்பாகக் கொண்ட இந்தக் கவிதையும் குறிப்பிடத்தக்கது.

கனவுகளின் தொலைவு என்று தனது வலைப்பூவிற்குப் பெயர்சூட்டியுள்ள த.அகிலன் சொற்செறிவான கவிதைகளை வழங்குகிறார். அவரைப் போலவே சின்னச் சின்னச் சொற்களில் பெரிய பெரிய விடயங்களை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லிச்செல்பவர். ஈழத்து மொழிவழக்கு, வாழ்வியல் போன்றவற்றையும் இவரது எழுத்துக்களில் காணலாம். அண்மையில் வாசித்தவற்றில் கையகப்படாத கவிதையைக் குறித்த நிகழாக் கவிதை பிடித்தது. கவிதைகள் மட்டுமென்றில்லாது கட்டுரைகள், சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

அந்தாராவின் அத்துவான வெளி யை நான் பார்க்க ஆரம்பித்தது இந்தக் கவிதை யிலிருந்துதான். யார்க்கும் அஞ்சாத அந்த மொழிப்பிரயோகத்தில் மயங்கி அந்தப் பெயரைக் கண்டாலே பின்னால் போகவாரம்பித்தேன். நீங்களும் போய்ப்பாருங்கள். நீங்கள் மொழி ஆச்சாரப் பூனை இல்லையெனில் உங்களுக்கும் அந்த எழுத்துக்கள் பிடிக்கும்.

'நாடற்றவனின் குறிப்புகள்'என்ற கவிதைத்தொகுப்பை அண்மையில் வெளியிட்டிருக்கும் டி.சே.(இளங்கோ) தமிழ்மணத்தில் கடந்துசெல்ல முடியாத பதிவுகளுக்குரியவர். கவிதைகள், திரைப்பட அலசல், பிறமொழி இலக்கியம், கட்டுரைகள் என பன்முக ஆளுமையுடைய இவருடைய படைப்புகளை இங்கே சென்று வாசிக்கலாம். எதையும் மேலோட்டமாகப் பார்க்காது ஆழ்ந்து ஆராய்வது இவரது சிறப்புப்பண்பெனலாம்.

என்றால் என்ன? என்ற கேள்வியுடன் கார்த்திக் வேலு என்றொருவர் தரமான கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்தார். வேலைப்பளுவோ என்னவோ அண்மைய நாட்களில் அவரைக் காணமுடிவதில்லை.

மேலும் அபிமன்யு... அபிமன்யு (ஒரு அபிமன்யுதான்) என்றொருவர் மிக நன்றாக எழுதிக்கொண்டிருந்தார். சில நாட்களாக அந்தக் கவிஞரைக் காணோம். தொடுப்புக் கொடுக்க முடியவில்லை.

உண்மையில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னும் பல கவிஞர்கள் தமிழ்மணத்தில் நிச்சயமாக எழுதிக்கொண்டிருப்பார்கள். பிரச்சனைகளின் முகம் மறதியாக உருமாறியிருக்கிறது. நிறையப் பேரை நினைவுகூர இயலவில்லை. நான் குறிப்பிடத் தவறியதால் அவர்கள் குறைந்தவர்கள் என்று பொருளல்ல.

இந்த நீளமான பதிவை இட்டு உங்களையெல்லாம் வருத்தியது திட்டமிட்டு நிகழ்ந்ததொன்றல்ல. நான்கைந்து பெயர்களுடன் முடித்துக்கொள்ளவே நானும் நினைத்திருந்தேன். ஆனால், நன்றாக எழுதுபவர்களை எழுதாமல் விடுவது தவறென்று 'யாரோ' சொல்லியிருக்கிறார்கள். (இந்த யாரோவை வைத்து நிறையச் சொல்லலாம் போலிருக்கிறது.) அடுத்த பதிவும் குழந்தைகளுக்கானதல்ல. கொஞ்சம் 'சீரியஸாக'எழுதுகிறவர்கள் பற்றியதுதான். 'இந்தப் பதிவிற்கே முதுகு வலிக்கிறது... இன்னமுமா'என்று நீங்கள் சொல்வது காதில் விழுந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை. எல்லாப் பழியும் சிந்தாநதிக்கே:)
வலைச்சரத்தில் பதிவைப் போட முயல, இளவேனிலுக்குள் போய் விழுந்து 'ஆத்தா ஆள விடு'என்பதாகிவிட்டது என் நிலை. என்னமோ போங்க.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது